கதாநாயகி – குறுநாவல் : 7

முந்தைய நாளிரவு நான் அஞ்சி அந்தப் புத்தகத்தை எடுத்து டிராயருக்குள் வீசி, காலால் ஓங்கி அதை மிதித்து மூடிவிட்டு, எழுந்து சென்று கதவைத் திறந்து வெளியே கொட்டும் மழையைப் பார்த்தபடி நின்றது நினைவிருக்கிறது. மழைச்சாரல் என் உடலை நனைக்கத் தொடங்கியதும் கதவை மூடி உள்ளே வந்தேன். ஈர உடையுடன் அறைக்குள் நடந்தேன். பின்னர் வேறு உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் வந்தமர்ந்தேன்.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்கு சரியாக புரியவில்லை. ஒவ்வொரு நாளும் மிகக்கொஞ்சமாக எல்லைகள் தாண்டப்படுவதை உணர்ந்தேன். சமையலறைக்குச் சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்துக் கொண்டேன். குப்புறப்படுத்து கம்பளிப் போர்வையை என்மேல் போட்டுக் கொண்டு தலையணையில் முகத்தை அழுத்தி கண்களை மூடி என்ன நிகழ்ந்ததென்று ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப் பார்த்தேன்.

இந்த மனச்சிக்கல்கள் மிகச்சிறிய அளவில் அந்தப் புத்தகத்தை நான் கண்ணால் பார்த்தது முதலே தொடங்கியிருக்கின்றன. அதுவரைக்கும் ஒன்றுமில்லை. இல்லை அதற்கு முன்னரே என்னைப் பார்க்க வைப்பதற்காக ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. எங்கிருந்தோ எனக்குள் அந்தப் புத்தகத்தை எடுக்கும் விழைவு ரகசியமாகச் செலுத்தப்பட்டிருக்கிறது.

இல்லை, அதை வேறு பாதையில் யோசிக்கவேண்டும். இப்படி இருக்கும், அந்த மேஜையைப் போல் ஒரு மேஜையை எங்கோ ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். அதில் ஒரு ரகசிய அறை உண்டு என்பது அப்போதும் என் மனதில் பதிந்திருக்கிறது. இந்த மேஜையை பார்த்ததுமே அந்த நினைவு வந்து அதற்குள் இணைந்துவிட்டது. ஆனால் மிக ஆழமான நினைவாகையால் அது ஒரு சின்னக்கனவு வழியாகத்தான் எனக்குள் அது நிகழமுடிந்தது.

உண்மையிலேயே அங்கு ஒரு அறை இருந்து, அதற்குள் ஒரு பழைய புத்தகமும் இருந்தபோது என்னுடைய கற்பனைகள் பெருக ஆரம்பித்தன. ஒவ்வொன்றாக நானே உருவாக்கிக் கொண்டேன். இது என்னுடைய மனப்பிறழ்வன்றி வேறல்ல ஒவ்வொன்றும் ஆரம்பகட்ட மனப்பிறழ்வின் எல்லா இலக்கணங்களுக்குள்ளும் முழுமையாக ஒத்துப்போகிறது. பொருட்களின் மேல் கற்பனைகளை ஏற்றிக்கொள்ளுதல், கற்பனைகளை வளர்த்து பின்னர் அக்கற்பனை வழியாக பொருளை வந்து அடைதல் மனச்சிக்கல் உள்ளவர்களுக்கு எப்போதும் நிகழ்வது. அதுதான் இங்கே நிகழ்ந்திருக்கிறது. இப்போது என்னுடைய ஒவ்வொரு அன்றாட நிகழ்வுகளும் அந்தப் புத்தகத்திலிருந்து வரத் தொடங்கியிருக்கின்றன்.

நான் புரண்டு படுத்தேன். ஒவ்வொரு அன்றாட நிகழ்வும் என்று எப்படி சொல்ல முடியும்? இன்று வாசித்தது முற்றிலும் தற்செயலாக இருக்கலாம். எந்த வகையிலும் இன்றைய நாளுடன் தொடர்பற்றது இந்த இடத்துடன் தொடர்பற்றதும் கூட. இல்லை ஆனால் அந்த வரிகள் மிக உண்மையானவை. அந்த வர்ணனை தெளிவாகவே திருவிதாங்கூர் சமஸ்தானத்தைத்தான் குறிக்கின்றது. திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் ரெசிடெண்ட் ராணுவத்தில் இருந்த காப்டன் ஒருவன் இங்கு வந்து இதே பங்களாவில் தங்கி இதே இடத்தில் புலியைப் பார்த்திருக்கிறான். நான் பார்த்த அதே இடத்தில் அதே கோணத்தில் அதே மழையில்.

அந்தக்கோணம் எப்படி அந்த நூலுக்குள் வரமுடியும்? அது எனக்குள்ளிருந்து மட்டுமே அங்கே செல்கிறது. நான் இன்று முழுப்புலியையும் பார்த்திருந்தால் அந்தப் புத்தகத்திலும் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கும். இப்பொழுது எழுந்து சென்று அதைப் பார்த்தால் ஈவ்லினாவின் அந்தக் குறிப்புகள் இருக்காது. மெக்கன்சி என்ற காப்டனே இருக்க வாய்ப்பில்லை. இல்லை என்றே எண்ணிக் கொண்டு சென்று பார்ப்போம். எழுந்து பார்த்துவிடுவோம்.

ஆனால் நான் எழவில்லை. எழுந்து மீண்டும் அந்தப் புத்தகத்தை பிரித்து பார்த்து என்னை சோதனை செய்து கொள்ள எனக்கு தைரியம் வரவில்லை. ஏதோ ஒன்று தவறாக ஆகும். ஆகாமலும் இருக்கலாம். ஆனால் தவறாக ஆகுமென்றால் அதை நான் எப்படி எதிர்கொள்ள முடியும்? நான் நம்ப ஏதுமிருக்காது. எஞ்சியிருக்கும் இந்த தர்க்கமே என் கடைசிப் பிடிமானம்.

அப்போது தான் ஒன்று தோன்றியது. மனிதன் முற்றிலும் தனியாக எவருடைய எந்த உதவியும் இல்லாமல் கைவிடப்படுவது சித்தப்பிரமைகளின்போது மட்டும்தான் என்று. வேறு எந்த நோய்க்கும் மருத்துவரோ செவிலியரோ உறவினரோ உதவ முடியும். மனச்சிக்கல்களுக்கு வெளியிலிருந்து ஒருவர் எந்த உதவியும் செய்ய முடியாது. வெளியிலிருந்து எவருமே அது நிகழும் இடத்திற்கு வந்து சேரவே முடியாது. தனக்குத்தானே ஒருவர் தன்னைச் சீரமைத்துக் கொள்ளவேண்டும்.

மெய்யும் பொய்யும் எல்லை அழிவது போல அனைத்தையும் சிதறடிப்பது வேறில்லை. அது ஒரு பூகம்ப அதிர்வு. அதில் தன்னைச் மீட்டுச் சீரமைத்துக்கொள்ள உதவும் சீரான ஒரு மூலை ஒருவனிடம் எஞ்சுமென்றால் அதைக்கொண்டு அவன் பிற மீறல்கள், சிதைவுகள், சிக்கல்கள் அனைத்தையும் எதிர்கொள்ளலாம். ஆனால் அது ஆற்றுவெள்ளத்தில் கரைந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய மணல் திட்டு. கண்கூடாகவே காலடியில் நிலமில்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறது. தர்க்கத்தின் அந்த சின்ன பகுதியும் கரைந்து போய்விட்டதென்றால் அதன்பிறகு மீளவே முடியாது.

உள்ளத்தின் எல்லாப் பகுதிகளும் சிதைவடைந்தால் உள்ளமென்றே ஒன்று இருக்காது. அஞ்சிப் பதறி, ஒன்றையொன்று கொத்தி, வானத்தில் சுழலும் பறவைக் கூட்டம் போலாகிவிடும் மனம். மனம் சிதைந்தவர்கள் ஒவ்வொரு முறையும் நமக்கு அளிக்கும் பயம் அதனால்தான், ஒரு கணத்துக்கு மேல் நாம் அவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சிலகணங்களுக்கு மேல் அவர்களுடன் உரையாடவும் முடிவதில்லை. மிக நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்கள் உயிர் துறந்தால் நாம் துயருறுவதில்லை. அவர்கள் ஏன் உயிர் வாழவேண்டும் என்றே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

ஏனெனில் மனம் சிதைந்தவர்கள் நம்முடைய உள்ளத்தின் ஒரு பகுதியும் சிதைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறார்கள். நாம் அதைக்கொண்டே அவர்களை புரிந்து கொள்கிறோம். அத்தனை உள்ளங்களிலும் ஒரு பகுதி சிதைந்திருக்கிறது. எஞ்சும் பெரும்பகுதி சிதைய வாய்ப்பு கொண்டதாக இருக்கிறது. மெல்லிய கோடு ஒன்றின் மேல்நடந்து செல்வது போல ஒவ்வொரு கணமும் சமநிலையை தேடியபடி சென்று கொண்டிருக்கிறோம். அந்த தரிசனம் திகிலூட்டுவது.

நான் எழுந்து பார்த்தேன். என் தலைக்குள் என்ன நிகழ்கிறது. இப்போது நான் என்ன செய்யவேண்டும். எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டும், இது தேவையில்லை என்று .இவற்றை நான் ஒன்றாகக் கலந்து கொள்ளக் கூடாது என்று. இரும்பு அச்சு போல என்னுடைய பிரக்ஞையை வகுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த அச்சில் என்னுடைய உணர்ச்சிகளை. கனவுகளை. உள்ளத்தின் ஆழத்தில் எல்லாம் போட்டு அழுத்தி செறிவாக்கி அதன் நகல்களாக்கிக் கொள்ளவேண்டும். முற்றிலும் சமநிலை உள்ளவன் பிரக்ஞையும் கனவும் ஆழுள்ளமும் ஒன்றேயானவன்.

அது சாத்தியம் தானா? ஆனால் அவனே அலைக்கழிப்பில்லாதவன். அவன் முட்டாளாக இருக்கலாம் கொடியவனாக இருக்கலாம். கஞ்சனாகவும் அற்பனாகவும் இருக்கலாம். ஆனாலும் அவன் அலைவற்றவன். அவனுக்கு எத்தனை பெரிய துயரமும் வரலாம். இந்த கொப்பளிப்பும் வெறுமையும் இருக்காது இதைவிடப்பெரிய நரகம் ஒன்றில்லை.

ஆனால் நான் எண்ணியது போல முழுஇரவும் துயிலின்றி புரண்டு கொண்டிருக்கவில்லை. சீக்கிரத்திலேயே தூங்கிவிட்டேன். காலையில் கோரன் எழுப்பியபோது புத்துணர்வுடன் எழுந்தேன். உடல் உழைப்பைப் போலவே உள்ளத்தின் அலுப்பும் நன்றாகத் தூக்கத்தைத் தருகிறதா? என் கண்கள் நன்கு தெளிந்திருந்தன. அதற்கேற்ப காலை துல்லியமான கண்ணாடியில் வரையப்பட்ட ஒளியும் தெளிவும் கொண்டிருந்தது.

கையில் டீக்கோப்பையுடன் வெளியே வந்து நின்றபோது காட்டிலிருந்து வந்த காற்று இதமாக இருந்தது. காடு ஆழ்ந்த பசுமையுடன் ஒளியுடன் இருந்தது. மரகதக்காடு என்று இதை வெள்ளையர்கள் சொல்கிறார்கள். திரும்பத் திரும்ப அந்த உவமையை பயன்படுத்துகிறார்கள். அதைப்போல மழைக்காட்டை சொல்வதற்கு இன்னொரு சரியான உவமை கிடையாது. ஆனால் நாம் சொல்வதில்லை, ஏனென்றால் நம்மில் மரகதத்தைப் பார்த்தவர்கள் குறைவு.

மரகதம் பச்சை நிறமானதல்ல. அரை வெளிச்சத்தில் அது கருப்பு நிறமாகவே இருக்கும். பச்சை என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் பச்சை போலவும் இருக்கும். வெயிலில் கொண்டு வைத்தால் மெல்ல ஒளிகொண்டு பச்சை நிறமாகும். நல்ல ஒளியில் வைத்தால் இளந்தளிரின் நிறத்தை அடைந்து சுற்றியிருக்கும் அனைத்தையும் பசுமையாக்கும். ஒளி ஊடுருவும்தோறும் தெளிந்து கிளிப்பச்சை நிறத்தை அடையும்.

அந்தக் காலையில் அத்தனை தளிர்களும் பச்சை நிறமான சுடர்கள் போலிருந்தன. காட்டுக்குள்ளிருந்து காட்டு ஆடுகளும் மான்களும் எழுப்பும் ஓசைகள் கேட்டுக் கொண்டிருந்தன. நான் நடந்து காட்டின் விளிம்பு வரைக்கும் சென்றேன். சரிவில் ஒரு மான்கூட்டம் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். ஒரு மான் திரும்பி என்னைப் பார்த்தது. அத்தனை மான் தலைகளும் திரும்பி என்னைப் பார்த்தன. அத்தனை காதுகளும் என்னை நோக்கி மடிந்தன. கண்கள் என்மேல் நிலைத்திருந்தன. நான் பார்த்துக்கொண்டே நின்றேன். கைகளை சொடக்கு விட்டு ஒலியெழுப்பினேன் அவற்றின் காதுகள் அனைத்தும் அவ்வொலிக்கு திடுக்கிட்டு அசைந்தன. காலால் ஒரு தட்டு தட்டினேன். அம்புகள் போல எழுந்து காற்றில் வளைந்து இறங்கி மறைந்தன.

நான் அன்று பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது உற்சாகமான மனநிலையில் இருந்தேன். காலையில் இருந்தே எனக்குள் நிறைந்த அந்த மகிழ்ச்சி எதனால் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் முந்தைய நாள் இரவில் எந்த தீர்வும் இல்லாத கேள்விகளோடு, ஆழமான நெருக்கடிகளுடன்தான் தூங்கியிருக்கிறேன். காலையில் எழுந்தவுடன் இரவு முறுகி முறுகி உச்சத்தை அடைந்த அந்தச் சுருள்வில்லின் இறுதித் தெறிப்பில் தான் விழித்திருக்கவேண்டும். சோர்வும் கசப்பும் அடைந்திருக்கவேண்டும். அப்படியே எழுந்து ஓடி ஊரைவிட்டே அகன்றிருந்தாலும் கூட இயல்புதான்.

ஆனால் முழுமையாக அதெல்லாம் மறந்துவிட்டது. எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது போல. எண்ணவோ குழம்பவோ ஏதுமில்லாதது போல. அத்தனை உள அழுத்தம் தீவிரமான தூக்கத்தைத் தந்தது. தூக்கம் தலையைத் தெளிய வைத்துவிட்டது. தலை தெளிந்தவுடன் எல்லா சிக்கல்களும் இல்லாமல் ஆகிவிட்டன. உண்மையில் அவ்வளவுதான். உடல் அல்லாமல் மனிதனுக்கு இருப்பென்று ஒன்றில்லை. பசியை உணவன்றி வேறேதும் தீர்க்க முடியாது என்பது போல, இந்த பருவடிவ விடைகளன்றி எதுவும் உண்மையில் தீர்வுகளே அல்ல.

ஏனென்றால் நாம் வாழ்வது பருவடிவ உலகில்தான். பருவடிவு கொள்ளாத சிக்கல்கள் எதுவும் சிக்கல்களும் அல்ல. புறவுலகத்திலிருந்து வராத எந்த சிக்கலும் உண்மையில் நாமே நமக்கு வரவழைத்துக் கொள்வதுதான். நாமே விரும்பி அவற்றை நிகழ்த்திக் கொள்கிறோம். நமது அன்றாடச் சலிப்பிலிருந்து கடந்து செல்வதற்காக. நமது வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தமுண்டு என்று நாமே நிறுவிக் கொள்வதற்காக. ஆனால் நம்மை கைவிடபோகும் அளவுக்கு அவற்றை நாம் உருவாக்கிக் கொள்வதுண்டு.

நாம் உருவாக்கிய பூதங்கள் நம்மை துரத்தி வந்து கவ்விக்கொள்வதுண்டு பிடித்து வாயிலிட்டு மென்று தின்றுவிடுவதுண்டு. தெருக்களில் அலையும் பைத்தியங்களில் பெருவாரியானவர்கள் தங்கள் ஆடைகளை தாங்களே தீக்கொளுத்திக் கொள்வது போல தங்கள் உள்ளங்களை அழித்துக் கொண்டவர்கள். பைத்தியம் என்பது ஓர் உளவியல் தற்கொலை அதை நான் செய்யக்கூடாது.

இங்கே இந்தக்காடு இத்தனை பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது ஒவ்வொரு உயிர்த்துளியிலும் இங்கே வாழ்வின் விசைதான் இருக்கிறது. செழிப்புறாத ஒரு செடி கூட இங்கில்லை. இன்னொரு தாவரத்தை உந்தி விலக்கி மேலெழும் திமிறல் கொண்டிராத ஒரு தளிர் கூட இங்கில்லை. திகழ்வதும் இருப்பதும் வளர்வதும் ஒன்றேயான இந்த வெளியில் அருவமான ஏதோ சிலவற்றுக்காக நான் என்னைக் கொடுத்துக்கொண்டு சோர்வும் சலிப்பும் அடைவேன் என்றால் அது போல அறிவின்மை வேறில்லை. அதை செய்யக்கூடாது.

சொல்லிச் சொல்லி என்னை நானே உறுதிப்படுத்திக் கொண்டேன். அது என்னை நிலைநிறுத்தியது. மண்ணில், உறுதியான காலடிகளுடன், தெளிந்த புலன்களுடன்.

நானும் கோரனும் அந்த இரட்டைப்பாறையை அடைந்தபோது நின்று “அங்கே புலியிருக்கா பாரு” என்றேன்.

அவன் உடலை வளைத்து மூக்கை கூர்ந்து மணம் பிடித்து “இல்லை” என்றான்.

“அது தினமும் அங்கு வந்து படுக்கிறதில்லையா?” என்று கேட்டேன்.

“அதினு நிறைய இடம் உண்டு ஏமானே. ஒரு புலிக்கு ஒரு மலை. ஒரு மலையில் நூறு இடம்!” என்று அவன் நான்கு விரல்களைக் காட்டினான். பிறகு குனிந்தபடியே மெதுவாகச் சென்று அந்த மாடன்கல்லுக்குப் பின்னால் எட்டிப் பார்த்தான். திரும்பிப் பார்த்து “நெலத்தில் முடி இல்ல” என்றான்.

“அதனாலே என்ன?” என்று நான் கேட்டேன்.

“முடி இல்லெங்கில் அது ராத்திரி கிடக்கிணில்லா” என்றான்.

”ஓ” என்று நான் சொன்னேன்.

அவன் அந்த பொந்துக்குள் கைவிட்டு புலி படுத்த இடத்திலிருந்து மண்ணை மேலோட்டமாக அள்ளிக்கொண்டான். ”பள்ளிக்கூடத்தில் அரி குழிச்சிட்ட இடத்தில் இது இடணும்” என்றான்.

“ஆமாம்” என்று நான் சொன்னேன். அங்கு ஏற்கனவே புலியின் சிறுநீர்கலந்த மண் விரிக்கப்பட்டிருக்கிறது.

நாங்கள் மலைச்சரிவில் இறங்கினோம். கோரன் என்னிடம் பற்கள் தெரிய சிரித்து, “வல்ய பள்ளிக்கூடம்” என்று சுட்டிக்காட்டினான்.

ஒவ்வொரு முறையும் அந்தப்பள்ளிக்கூடத்தை பார்க்கும்போது அவன் அவ்வாறு சொல்லாமல் இருப்பதில்லை. அவனுக்கு அந்தப் பள்ளிக்கூடத்தின் மேல் அத்தனை பெருமிதம் எழுந்தது நான் அவனைப் பார்த்து புன்னகைத்தேன்.

அவன் மீண்டும் கையை விரித்து “வல்ய பள்ளிக்கூடம்!” என்றான்.

“ஆமா” என்றேன்.

நாங்கள் அங்கு சென்றபோது இருபது குழந்தைகளும் வந்திருப்பதை பார்த்தேன். ஒன்றிரண்டு கூடுமோ என்று கூடத்தோன்றியது. எண்ணிப் பார்த்தேன் நான்கு குழந்தைகள் கூடுதலாக இருந்தன.

கைக்குழந்தைகளை அவர்கள் யாரும் கொண்டுவரவில்லை. அங்கே அதை நான் கவனித்திருக்கிறேன். காணிக்காரர்கள் நடக்க ஆரம்பிப்பது வரை குழந்தையை அன்னையின் கையிலேயே வைத்திருக்கிறார்கள். மூத்த பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்புவதில்லை. வயதானவர்களிடம்கூட ஒப்படைப்பதில்லை. அது தாயின் உடலின் மேல் ஒரு உண்ணி போல எப்போதும் ஒட்டியிருக்கும். அங்கேயே சாப்பிட்டு அங்கேயே தூங்கும். அதன் கால்கள் கூட அதற்கேற்ப நண்டுக்கால்கள் போல வளைந்திருக்கும். இவர்கள் வளர்ந்தபின் மரங்களுக்குமேலேயே பெரும்பாலான நேரம் இருக்கிறார்கள். அந்த குழந்தைக்காலம் அவர்களுக்குள் அவ்வாறு நீடிக்கிறதுபோல.

அங்கு வந்திருந்த எல்லாக் குழந்தைகளுமே பேசவும் நடக்கவும் கற்றவைதான். நான் போய் நின்றவுடன் “மானிட்டர் எங்கே?” என்றேன்.

உச்சன் வந்து நின்றான். அவன் தயங்கி திரும்பி மற்றவர்களைப் பார்த்தான். உடல் காற்றில் செடிபோல வளைந்தது.

“நான் கூப்பிட்டதும் இப்படி வரக்கூடாது. இப்படி வரணும்” என்று நான் மிடுக்கான நேர்நடை நடந்து காட்டினேன். “வந்து என் முன்னால் இப்படி நிக்கணும். நில்லு பாப்போம்” என்றேன்.

அவன் நான் சொல்வது போலவே வந்து நின்றான். பின்பக்கமாக வில்போல் உடலை வளைத்திருந்தான்.

“யெஸ் ஸார் என்று சொல்லு” என்றேன்.

அவன் திரும்பி மற்ற குழந்தைகளைப் பார்த்தபின் ”யெஸ் ஸார்” என்றான்.

மற்ற குழந்தைகளெல்லாம் அதே போன்று சேர்ந்து ”யெஸ் ஸார்” என்றன.

“எல்லாரும் சொல்லக்கூடாது. யெஸ் ஸார் என்று மானிட்டர் மட்டும் தான் சொல்லணும்” என்றேன். அவனிடம் “நீ மட்டும் தான் சொல்லணும் என்ன?” என்றேன்.

அக்கணமே அவனில் பொறுப்பும் அதிகாரமும் குடியேறுவதைக் கண்டேன். ”நான் மட்டும் யெஸ்ஸு” என்றான். திரும்பி பக்கம் நின்ற குழந்தைகளிடம் “சத்தம் இடருது…நானாக்கும் யெஸ்ஸு” என்றான்.

“சரி போ. திரும்பி வந்து எஸ் சொல்லு” என்றேன்.

அவன் பழைய இடத்திலிருந்து மிடுக்காக நடந்து வந்து என் அருகே வந்து நின்று நிமிர்ந்து “யெஸ் ஸார்” என்றான்.

“சரி, பிள்ளைங்களை பிரிச்சு உக்கார வை. சின்னக்குழந்தைகள் தனியா பெரிய குழந்தைகள் தனியா” என்றேன்.

மூன்றாகப் பிரிக்க வேண்டிய தேவை இல்லை என்று தெரிந்தது. அங்கு எந்தக் குழந்தைக்குமே எழுத்தும் படிப்பும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவனிடம் அவனுடைய நெஞ்சுக்குழியைக் காட்டி ”இதுக்கு கீழே உள்ள குழந்தைங்க அங்க. இதுக்கு மேலுள்ள குழந்தைக்க இங்கே” என்றேன்.

அவன் தன்னுடைய மார்பில் கையை வைத்து அளவைப் பார்த்துக்கொண்டான். ஒவ்வொரு குழந்தை பக்கத்திலும் சென்றுநின்று அதன் உயரத்தை அளந்து சில நேரங்களில் அதை இரண்டு அணியாகப் பிரித்துவிட்டான்.

“ஒரு கூட்டம் அங்கே இருக்கணும், இன்னொரு கூட்டம் இங்கே இருக்கணும்” என்றேன்.

இரண்டு வகுப்புகள் உடனே உருவாகிவிட்டன. கரும்பலகை வேண்டும். நாற்காலி வேண்டும். ஒரு பள்ளியாக இதை மாற்றுவதற்கு இன்னும் என்னென்னவோ பொருட்கள் வேண்டும். ஆனால் எளிதில் உருவாக்கிவிடலாம். கரும்பலகைக்கு பதிலாக நாகர்கோயில் செல்லும்போது சுருட்டக்கூடிய தாள்பலகையைக் கொண்டு வருவது நல்லது. கரும்பலகையை இங்கே வைத்தால் அது பழுதடைந்துவிடும். ஆனால் இங்குள்ள மழையில் தாள் நீண்டநாள் இருக்காது. நல்லது எது என்று கேட்டுப் பார்க்கவேண்டும்.

நான் “சின்னக் குழந்தைங்க எல்லாம் அமைதியாக இருக்கணும்” என்றேன். வாயில் கைவைத்து “உஸ்” என்றேன். சில குழந்தைகள் அவர்களும் வாயில் கைவைத்து “உஸ்ஸ்” என்றன. ஆனால் அமைதியடைந்தன. கண்கள் மட்டும் வெள்ளைக்கல் போல மின்னி மின்னி தெரிந்தன.

அவர்களுக்கு அந்த விளையாட்டு பிடித்திருந்தது. இந்தப்பிள்ளைகளிடம் நாம் சொல்வதை மீறிச் செல்லும் வழக்கமே இல்லை. அதட்டி சொல்லும்போது அவர்கள் அஞ்சுகிறார்கள். நட்பாக சொல்லும்போது எதையுமே உடனடியாக செய்கிறார்கள் என்பதை கண்டு கொண்டேன். ஏனென்றால் அவர்களுடைய பெற்றவர்களோ பெரியவர்களோ அவர்களை அதட்டுவதில்லை. குழந்தைகளை அதட்டும் வழக்கமே அங்கே இல்லை.

அவர்கள் குழந்தைகளிடம் செயற்கையான குரலில் பேசுவதில்லை. பெரியவர்களிடம் பேசும் அதே குரல்தான். கொஞ்சலும் இல்லை, அதட்டலுமில்லை. அவர்கள் அக்குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் தான் சொல்கிறார்கள். அவற்றை மீறவேண்டும் என்ற எண்ணமே குழந்தைகளுக்கு வருவதில்லை. தாங்கள் அவற்றை செய்வதற்காகவே இருப்பதாகத்தான் எண்ணிக் கொள்கிறார்கள். ஒருபோதும் குரலை உயர்த்தி அவர்களை அதட்டவோ தண்டிக்க முற்படவோ கூடாதென்று தெரிந்து கொண்டேன்.

பெரிய குழந்தைகளுக்கு தமிழில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ ஆகிய ஆறு எழுத்துக்களையும் ஈரத் தரையில் ஒரு குச்சியால் எழுதி அவர்கள் அந்த எழுத்துக்களின் முன்னால் அமரச்சொன்னேன். உச்சனிடம் குச்சியை கொடுத்து ஒவ்வொரு எழுத்தை சுட்டி அந்த ஒலியை உரக்க கூவவேண்டும் என்று சொன்னேன்.

அ, ஆ, இ, ஈ என்று அவன் சுட்டிக்காட்ட அவர்கள் அதை கூவத்தொடங்கினார்கள். ஒருசிலர் கூர்ந்து பார்க்கும் பொருட்டு எழுந்து அருகே வர உச்சன் அவர்களை அப்பால் போகும்படிச் சொன்னான். அவர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டனர்.

அதன் பிறகு நான் சிறு குழந்தைகளிடம் சென்றேன். அவர்கள் மீண்டும் ஆவலுடன் என்னைப் பார்த்தார்கள். நான் வந்து நின்றதும் அவர்களும் ஆ என்று கூச்சலிட ஆரம்பித்தார்கள். ஓரிரு குழந்தைகள் எழுந்து நின்று கூச்சலிட்டன.

“இல்லல்ல…உங்களுக்கு ஆ கிடையாது” என்றேன்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஒரு பெண் “ஆ இல்ல” என்று கைவிரித்தாள். அவர்களுக்கு ஆ என்றால் சாப்பாடு என்று அர்த்தம் என்று எனக்குத் தெரிந்தது.

“சோறு உண்டு… தரையில் ஆ இல்லை” என்றேன்.

“சோறு உண்டு” என்று அந்தப் பெண்குழந்தை சொன்னாள். “ஆ இல்லை…”

“ஆ இல்லை” என்று எல்லா குழந்தைகளும் சேர்ந்து சொல்லின. அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்ததன் மகிழ்ச்சி அது. அவர்கள் ஒன்றை புரிந்துகொண்டால் அதைத் திருப்பிச் சொல்வார்கள்.

“உங்களுக்கு கதை தான் சொல்லப்போறேன்” என்று சொன்னேன். இம்முறை நானே ஒரு கதையைப் புனைந்து சொன்னேன். ஒரு யானைக்குட்டி எப்படி குழியில் விழுந்தது. அதனால் ஏறிவரமுடியவில்லை. அதை ஊர்க்காரர்கள் எப்படி வெளியே எடுத்தார்கள் என்று சொன்னேன்.

நாலு பக்கம் இருந்தும் மண்ணை கொட்டி குழியை நிரப்பி அவர்கள் யானையை வெளியே எடுத்த கதையை சொல்லி முடித்ததுமே எல்லாக் குழந்தைகளும் உற்சாகத்துடன் கூச்சலிட்டபடி எழுந்து விட்டனர். ஒவ்வொருவரும் அவர்கள் யானைக்குட்டியை பார்த்த கதையை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரையாக நிறுத்தி “நீ சொல்லு ..நீ சொல்லு” என்று எல்லாரையுமே பேசவிட்டேன். பேசும்போது அவர்கள் உடலையே வளைத்து ஊசலாட்டி நெளித்தனர். கைகள் அலைபாய்ந்தன. கண்கள் உருண்டன. அந்த ஆர்வம் என்னை புன்னகைக்கச் செய்தது.

அவர்களிடம் இருந்த கற்பனைத் திறன் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. அவர்கள் பொய்யை உருவாக்கவில்லை. யானைக்கு மனித குணத்தை கொடுக்கவில்லை. எந்த நீதியையும் அந்தக் கதைக்குள் கொண்டு வரவில்லை. ஆனால் யானையின் உடல்மொழியையும் அறிவையும் செயல்பாடுகளையும் மிகக்கூர்ந்து கவனித்திருந்தார்கள். யானையின் துதிக்கையை பாம்பு என்று ஒருவன் சொன்னான். யானைக்குட்டியை பெரிய பனங்கொட்டை என்று ஒருவன் சொன்னான். இன்னொருவன் அதை வண்டு என்று சொன்னான்.

சற்று நேரத்திலேயே அவர்கள் உருவாக்கிய அந்த உலகிற்குள் நான் சென்றுவிட்டேன். அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதை பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த மேதமையை பள்ளிக்கூடம் அழித்துவிடுமா என்று சந்தேகப்பட்டேன். அன்று நான் கற்ற பாடத்தை என்றுமே மறந்ததில்லை.

அவர்கள் பேசிமுடிந்தபின் என்னைச் சுற்றி கூடிக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் என்னைத் தொட விரும்பினார்கள். நான் அவர்கள் ஒவ்வொருவரையும் தழுவி முத்தம் கொடுத்தேன். காணிக்காரர்கள் குழந்தைகளை குரங்குகள் போல கொஞ்சிக் கொண்டே இருப்பவர்கள் என்பதை பார்த்திருக்கிறேன். அவர்களை தொட்டு வருடியபோது அவர்களின் உடல்கள் நாய்க்குட்டிகள் போல அதை ஏற்றுக்கொண்டன.

அதன் பிறகு “நீங்க எல்லாரும் போய் விளையாடுங்க” என்று சொல்லி அனுப்பிவிட்டு மீண்டும் பெரிய குழந்தைகள் வகுப்புக்கு வந்தேன். ஒவ்வொருவராக எழுந்து வந்து அந்த எழுத்துக்களை சுட்டி அது என்ன ஒலி என்று சொல்லவேண்டும் என்று சொன்னேன். அதன்பின் நானே குச்சியால் அந்த எழுத்துக்களை மாற்றி மாற்றி சுட்டிக்காட்டினேன். ஓரு சிலர் தவறுகள் செய்தாலும் கூட அத்தனை பேருமே ஆறு எழுத்துக்களையும் அடையாளம் கண்டுகொண்டார்கள்.

“இன்னைக்கு இது போதும்” என்றேன். எனக்கே நிறைவாக இருந்தது.

கோரன் அவனே அரிசி மூட்டையை எடுத்து சோறு பொங்கியிருந்தான். நாங்கள் வெளியே வந்தபோது என்னிடம் “முயல் கிட்டி! நாலு முயல்!” என்றான்.

“எங்கேருந்து?” என்றேன்.

அப்பால் நின்றிருந்த ஒருவன் எழுந்து வந்து “குட்டிகளுக்கு முயல்… குட்டிகளுக்கு முயல் துப்பன் தந்நு” என்றான்.

“இவன் யார்?” என்று அவனிடம் கேட்டேன்.

“துப்பன்!” என்று அவன் சொன்னான்.

குழந்தைகள் சாப்பிடுவதற்காக அவன் முந்தைய நாள் பொறிவைத்துப் பிடித்த நான்கு முயல்களை கொண்டு வந்திருந்தான். கோரன் அதன் இறைச்சியை துண்டு போட்டு கஞ்சியுடன் சேர்த்து சமைத்திருந்தான். உண்மையாகவே கறிக்கஞ்சியின் மணம் பசியை எழுப்புவதாக இருந்தது.

நான் அனைவரும் வட்டமாக அமர்ந்து இங்கேயே சாப்பிடவேண்டும் என்று சொன்னேன். வீட்டுக்கு கொண்டு போகக்கூடாது.

“ஏன்?” என்று உச்சன் கேட்டான்.

“இது ஸ்கூல் கஞ்சி, ஸ்கூலில் தான் குடிக்கணும்” என்றேன்.

“ஸ்கூல் கஞ்சி” என்று அவன் சொன்னான்.

குழந்தைகள் அனைவரும் வட்டமாக அமர கோரனும் நானும் துப்பனும் அமர்ந்துகொண்டோம். கஞ்சி குடிப்பதற்கு முன் ஒரு சிறு பிரார்த்தனையை செய்தேன். “வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று! விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பது அரிது. நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.”

அவர்கள் என்னை திகைப்புடன் பார்த்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மந்திரவாதிதான் தெய்வ வடிவம். மந்திரமே தெய்வம். அவர்கள் என்னை வணங்க வேண்டுமென்றால் மந்திரம் தேவை என அங்கு வந்த அன்றே கோரனிடம் பேசி கண்டுபிடித்திருந்தேன்.

அதன் பிறகு கஞ்சியை சாப்பிட ஆரம்பித்தோம். தொன்னைகளை வீசிவிட்டு அனைவரும் ஓடையில் இறங்கி கைகழுவினார்கள். உச்சன் என்னிடம் “சாரு நாளைக்கு வருமோ?” என்றான்.

“நான் தினமும் வருவேன்” என்று நான் சொன்னேன்.

“எந்நுமா?” என்று அவன் கேட்டான்.

“ஆமாம்” என்று நான் சொன்னேன்.

அத்தனை குழந்தைகளும் உற்சாகத்துடன் குரலெழுப்பி என்னை சூழ்ந்துகொண்டன. ஒருவன் “நான் நாளைக்கு வரும்! நாளைக்கு வரும்!” என்றான்.

அவர்கள் “நாளைக்கு வரும் நாளைக்கு வரும்” என்று கூச்சலிட்டனர்

“எல்லாரும் நாளைக்கு வரணும்” என்றேன்.

துப்பன் என்னிடம் “நான் நாளைக்கு வரும்” என்றான்.

நான் “முயல் கொண்டு வா” என்று சொன்னேன்.

“நாலு முயல்” என்று அவன் விரல்களைக் காட்டினான்.

“சரி நாலு முயல்” என்று நான் சொன்னேன்.

“நான் அ ஆ படிக்கும்” என்று அவன் ஆவலுடன் சொன்னான்.

“சரி நீ மட்டும் நாளைக்கு வந்து படிச்சுக்கோ” என்றேன்

கோரன் சீற்றத்துடன் “போடா! மூத்தோர் அ, ஆ படிக்க பாடில்ல” என்றான். அவனுக்கு அதில் ஏதோ ஒவ்வாமை தோன்றியது.

நான் அவனிடம் “அது வேற அ ஆ. மூத்த அ ஆ” என்றேன்.

கோரன் குழப்பத்துடன் தலை அசைத்தான்.

“அதை தனியாக சொல்லிக் கொடுக்கலாம். அவன் முயல் கொண்டு வாறானே?” என்று நான் உச்சனை மேலும் சமாதானப்படுத்தினேன்.

நாங்கள் கிளம்பியபோது இருபது குழந்தைகள் எனக்குப் பின்னால் வந்தார்கள். “யாரும் ஒப்பம் வரக்கூடாது. எல்லாரும் இங்க இருங்க” என்றேன்.

“நாளையும் வரும்! நாளையும் வரும்!” என்று எல்லாக் குழந்தைகளும் கூச்சலிட்டன

நான் அவர்களைப் பார்த்து “நாளை வருகிறேன்” என்று சொல்லிவிட்டு திரும்பி மெல்ல நடக்கும்போது அத்தனை மகிழ்வாக அத்தனை நிறைவாக உணர்ந்தேன்.

மீண்டும் பங்களாவை நோக்கி நடக்கும்போது நான் எண்ணிக் கொண்டேன், ஒன்றையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கிறோம் என்று. எத்தனை முறை இப்படி இந்த பங்களாவிலிருந்து பள்ளிக்கும் ஊருக்கும் கிளம்பிச் சென்றேன், எத்தனை முறை திரும்பி வந்தேன். இருபக்கங்களிலிருந்தும் பங்களாவை நோக்கி வந்திருக்கிறேன். ஆனால் ஒரே போல அது நிகழ்வதாக தோன்றியது.

அப்போது ஒன்று தோன்றியது. எப்போதுமே இனிமையானவை இப்படி திரும்பத் திரும்ப நிகழ்பவைதான். புதிய நிகழ்வுகளில் ஒரு களியாட்டம் இருக்கிறது, திகைப்பு இருக்கிறது, நிலைகுலைவு இருக்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் நாம் செய்பவற்றில்தான் மென்மையான, நீடிக்ககூடிய, உறுதியான இன்பம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் முதல் டீ, துவைத்து மடித்த சட்டையை எடுத்து போட்டுக் கொள்ளுதல், நன்றாக விரிப்பு பரப்பிய படுக்கை மேல் களைப்புடன் படுத்துக் கொள்ளுதல், குளித்தபின் ஈரத்துடன் தலை சீவ வருதல்… இன்பமான அனைத்துமே நான் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பவைதான்.

இன்று இந்த பங்களாவை அணுகும்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்விலிருக்கிறேன். ஆனால் மெல்ல மெல்ல இது பழகும். நான் இங்கிருக்கும் காலம் முழுக்க இப்படி வந்துகொண்டே தான் இருப்பேன். என் மனதில் இந்த வருகையின் சித்திரம் இனி என்றுமே அழியாது.

தொலைவிலிருந்து பங்களாவை அணுகியபோது அதன் முற்றத்தில் யாரோ நிற்பதைப் பார்த்தேன். யாரென்று திடுக்கிட்டபின் கூர்ந்து பார்த்தபோது ஒரு சிறிய அசைவு போலத் தெரிந்தது. யாரோ முற்றம் வழியாக வீட்டுக்குள் நுழைந்தது போல.

காட்சி மயங்குவதற்கான எந்தக் காரணமும் இல்லை. பளிச்செனும் வெயில் இருந்தது. பார்வையை எதுவும் மறைக்கவில்லை. ஆனாலும் அந்த உருவத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அது விரைந்து உள்ளே செல்வது கரைந்து கரைந்து புகை செல்வது போலத்தான் இருந்தது.

நான் கோரனைப் பார்த்தேன். கோரன் என்னிடம் ”அவிடே” என்றான். திருத்திக்கொண்டு “அங்கே” என்றான்.

“என்ன?” என்று நான் அவனிடம் கேட்டேன்.

“அங்கே ஆரோ நிக்குணு எந்நு தோந்நி” என்றான்.

“யார் நிக்கிறா?” என்றேன்.

“அதாணு கோரன் நோக்கியது…” என்றபின் அவன் சுட்டிக்காட்டினான் “கதவு சிரிக்குந்ந வெளிச்சம்.”

”ஓ” என்று நான் நினைத்துக் கொண்டேன். கதவு காற்றில் திறந்து கிடந்தது. அதன் வழியாக செங்குத்தான ஒளி முற்றத்தில் விழுந்திருந்தது. அதைத்தான் நான் அசைவாக பார்த்திருக்கிறேன்.

கதவு சிரிப்பது. கோரன் மட்டுமல்ல அவர்கள் அனைவருமே எளிதாக ஒரு சொல்லாட்சியை கண்டடைந்து விடுகிறார்கள். அந்த வரி என்னை மீண்டும் இயல்பான புன்னகைக்குக் கொண்டு சென்றது.

வீட்டை நெருங்கியபோது தெரிந்தது, காலையில் அரிக்கேன் விளக்கை அணைக்காமல் சென்றுவிட்டிருந்தோம். அந்த வெளிச்சம்தான் கதவு வழியாக வெளியே விழுந்திருந்தது.

நான் வீட்டுக்குள் நுழைந்தபின் எதற்கும் இருக்கட்டும் என்று அந்த அறையை நன்கு பார்த்தேன். பொருள் வைக்கும் அறையையும் சமையலறையையும் இயல்பாகச் சென்று பார்த்துவிட்டு வந்தேன். யாருமில்லை.

கோரன் டீ வைக்க தொடங்கிவிட்டான். நான் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தேன். டிராயரை திறந்து அந்தப் புத்தகத்தை வெளியே எடுத்தேன். உடனே அந்த எண்ணம் வந்தது. அன்று முழுக்க எனக்கு வந்த உல்லாசம் ஏன் என்று. நான் நேற்று அவ்வளவு அஞ்சி விட்டிருந்தேன். அந்த அச்சம் நீடித்திருந்தால் அந்த புத்தகத்தை கையிலேயே எடுத்திருக்க மாட்டேன். அதை நான் எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மகிழ்ச்சி. இப்போது இதோ எந்த தயக்கமும் இல்லாமல் அதை எடுக்கிறேன். மீண்டும் வாசிப்பு. இந்தப்புத்தகம் இதிலிருந்து எவரையும் தப்ப விடாது. இது என்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. சிலந்தி தன் இரையை தேர்ந்தெடுப்பது போல.

நான் புன்னகைத்தேன். அப்படி ஒரு விதி எனக்கிருந்தால் அதையும் பார்த்துவிடுவோம் என்றுதான் முடிவெடுக்கவேண்டும். எதையும் அஞ்சி இனி ஒதுக்கிவிடப் போவதில்லை. அதனால் பயனே இல்லை. இந்த பங்களாவில் நான் இருக்கவேண்டும் என்றால், இந்த வேலையில் நீடிக்கவேண்டும் என்றால் வேறுவழியில்லை

புத்தகத்தை பிரித்து அதன் தாள்களை புரட்டி பார்த்தேன். நான் எண்ணியது போலவே நான் படித்திருந்ததாக நினைவில் வைத்திருந்த எந்தப்பகுதியும் அதில் இல்லை. முற்றிலும் வேறொன்றாக இருந்தது.

அப்போது எண்ணிக்கொண்டேன். அது என்னுடைய கற்பனை என்றால் கூட எத்தனை தீவிரமாக இருக்கிறது. உண்மையில் ஆங்கிலத்தில் புகழ்பெற்றிருந்த அந்தப் புத்தகத்தை விட பல மடங்கு தீவிரமும் நுட்பமும் கொண்டதாக இருந்தது நான் வாசித்தது. அது எனக்குள்ளிருந்து வந்திருக்கிறது அப்படியென்றால் நான் ஒரு மகத்தான் எழுத்தாளனாக ஆகமுடியும். அல்லது ஒவ்வொருவரும் அவர்கள் கனவில் எழுத்தாளர்களும் ஓவியர்களும் இசைக்கலைஞர்களும்தான். அதை வெளியே கொண்டுவந்து மொழியிலோ வேறேதோ வடிவிலோ வெளிப்படுத்துபவர்கள்தான் கலைஞர்களோ எழுத்தாளர்களோ ஆகிறார்கள் போல.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மார்பில் கையைக் கட்டிக்கொண்டு நான் காத்திருந்தேன். ஏதோ ஒன்று நிகழவேண்டும் என்பது போல. எதுவும் நிகழவில்லை என்று கண்டபின் மீண்டும் புத்தகத்தை புரட்டி படிக்கத் தொடங்கினேன்.

ஈவ்லினா எழுதிய கடிதம். அவள் அந்த விர்ஜினியா நாடகத்தை பற்றி மீண்டும் தனது எள்ளலை சொல்லியிருந்தாள். கசப்பும் நஞ்சும் நிறைந்த விமர்சனம் அது.

சில படைப்புகள் ஒருவரின் வாக்குமூலம் போல ஆகிவிடுகின்றன. நிறைய எழுதுபவர்கள் மாறுவேடம் போடக் கற்றுக்கொண்டவர்கள். ஒற்றைப் படைப்பை மட்டுமே எழுதுபவரைப் பொறுத்தவரை அது எழுதுபவருடைய அகமேதான். அவருடைய உண்மை அது. அவர் எத்தனை பாவனை செய்தாலும் அது அவருடைய ஆழம்தான். அவரால் அதற்குள் நடிக்க முடியாது. அவர் தன் மொழியை அடைய முயன்று கொண்டிருப்பார். அதற்காக சொல்கூட்டி, சொற்றொடர்களைச் சேர்த்து தாவிக் கொண்டிருக்கையில் அவர் பைக்குள் மறைத்து வைத்தவை எல்லாம் உதிர்ந்து அவரை வெளிக்காட்டுகின்றன. திருடிய பொருட்கள், வேவுபார்த்த செய்திகள், காதல் கடிதங்கள், ரத்தம் படிந்த கைக்குட்டைகள்…

இந்த நாடகம் அப்படிப்பட்டது, விர்ஜீனியா. என்ன ஒரு பாவனையான தலைப்பு. இந்நாடகத்தில் கொஞ்சம்கூட முக்கியத்துவமே இல்லாத கதாபாத்திரமென்றால் விர்ஜீனியாதான். இதை எழுதியவருக்கு பெண்களைப் பற்றிய இறுக்கமான் எண்ணம் ஒன்று இருந்தது என்று நினைக்கிறேன். பெண்கள் ஆண்களால் ஆட்சி செய்யப்பட வேண்டியவர்கள் என்று. அதை மன்னிக்கலாம் பழைமைவாதிகளான அத்தனை ஆண்களும் அதைத்தான் நினைத்திருந்தார்கள்.

ஆனால் அவர் பெண்கள் அறுதியாக அழிவைக் கொண்டு வருபவர்கள் என்று நினைத்தார். ஆண்கள் பெண்களுடன் விளையாடலாம் என எண்ணினார். அது வீரம். ஆனால் உண்மையில் பெண்கள்தான் ஆண்களுடன் விளையாடுகிறார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவருடைய கதாபாத்திரமான லூசியஸ் இப்படிச் சொல்கிறான்.

பெண் என்றால் தீ. தீயில்லாமல் உணவில்லை, கதகதப்பான வீடு இல்லை. இங்கிருந்த மாபெரும் காடுகளை அழித்து நகரமாக ஆக்கிய சக்தி தீ தான். அதுதான் இரும்பை உருக்கி வாளாக்கியது. தங்கத்தை நகையாக ஆக்கியது. தெய்வங்களுக்குரிய பலிகளை விண்ணுக்குக் கொண்டு செல்கிறது. தான் தொட்ட அனைத்தையும் தீயென்றே ஆக்குவது தீயின் இயல்பு. அதில் இருந்த சாரத்தை உண்டு தான் எழுந்து வளர்கிறது. வளராமல் இருந்தால் அணைய ஆரம்பிப்பது தீ. பெருகியே ஆகவேண்டும் என்ற தெய்வ ஆணையை கொண்டுள்ளது.

எத்தனை அழகானது. மலரிதழ்களின் மென்மையை, வைரங்களின் ஒளியை, மென்தளிர்களின் குழைவை, பட்டாம்பூச்சிகளின் துள்ளலை கொண்டது. என்றும் இளமையானது. எந்நிலையிலும் தூய்மை அழியாதது. ஆனால் பலிகொள்வது. ஒவ்வொரு கணமும் பலி கோருவது. பலி இல்லாமல் வாழவே முடியாதது. தீயின் அணைப்பு நமக்கு தேவை, இங்கே குளிரில் நாம் உறையாமலிருக்க. ஆனால் அது நம்மை எரிக்காமலிருக்கவேண்டும். தீமூட்டுவோம், பலியளிப்போம், அது நம்மை பலிகொள்ளாமலும் பார்த்துக் கொள்வோம்”

அதுதான் ஆசிரியனின் குரல். தீயுடன் விளையாட விரும்பாதவர் எவர். தீயருகே அமர்ந்திருக்கையில் முதிர்ந்த மதபோதகர்கள், சோகமான அன்னையர்கூட அதனுடன் விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தீயை வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் முகத்திலும் தீ எரிவதுபோலிருக்கும்.

இந்த கிழவர், இவர் ஏன் இந்தக்கதையை தேர்ந்தெடுத்தார்? விர்ஜீனியாவும் ஆப்பியஸும் மிகப்பழைய கதை. சாஸர், மெக்காலே, வெப்ஸ்டர், தாமஸ் ஹேவுட் என்று பலர் எழுதியது. எளிமையான மதப்பிரச்சாரகர் முதல் சொற்களில் திளைத்த அறிஞர்கள் வரை அதை எடுத்து எழுதிவிட்டார்கள். அதன்பிறகும் அவர் ஏன் அதை எழுதினார்?

ஏனெனில் அவர் ஒரு பெண்ணைக் கொல்ல விரும்பினார். ஓர் இளம் பெண்ணை. அதாவது அவர் தந்தையாக நின்று ஒரு பெண்ணைக் கொல்ல விரும்பியிருக்கிறார். இந்நாடகத்தில் விர்ஜினியாவை அவள் தந்தை விர்ஜினியஸ் கொல்லும் இடத்தை எழுதும்போது மட்டும் தான் அவருக்குள்ளிருந்து தீவிரமான ஒன்று வெளிப்பட்டிருக்கிறது. அந்த ஒரு சந்தர்ப்பத்தை எழுதும்பொருட்டு மட்டும்தான் இந்த நாடத்தை அவர் எழுதியிருக்கிறார்.

அற்பமான மனிதர். ஆனால் கொடூரமானவர். அத்தனை ஆண்களையும்போல அற்பத்தனமும் கொடூரமும் நிறைந்தவர் அந்தப்பெண் அதை அறிந்திருந்தார். அந்த நாடத்தைப் படிக்கும் அத்தனை பெண்களுக்கும் அது தெரியும் விர்ஜினியா இறக்கும் காட்சி அந்நாடத்திற்கு அத்தனை முக்கியமல்ல. அதாவது அது ஒரு திடுக்கிடும் திருப்பம், ஒரு மின்னல்நேர உச்சம். படிப்படியாக அடையவேண்டிய ஒன்று அல்ல.

விர்ஜீனியாவும் ஆப்பியஸும், என்ன ஒரு அபத்தமான கதை. ஆனால் அன்றைய ரோம் அப்படித்தான் இருந்தது. அழகான கன்னிப்பெண்ணை ஒருவன் காதலிக்கிறான். இன்னொருவனுக்கு நிச்சயம் செய்கிறார்கள். அவளை கடத்திக்கொண்டு செல்கிறார்கள். கடத்தல் பொதுவிசாரணைக்கு வருகிறது. அவள் தங்கள் அடிமை என்று சொல்லி அவளை இழிவுசெய்து வாதிடுகிறார்கள். பொதுச்சபை அவள் அடிமைதான் என்று சொல்லிவிட வாய்ப்பு இருக்கிறது. விசாரணைக்கு முன் அவளுடன் தனியாகப் பேசவேண்டும் என்று அவளுடைய தந்தை கோருகிறான். அப்போது அவளுடைய கௌரவத்தை காக்கும்பொருட்டு அவள் தந்தையே அவளை வாளால் குத்திக்கொல்கிறான்.

ரோமின் சூழலில் அது ஒரு பண்பாட்டு நடவடிக்கை. ஆணின் கௌரவம் பெண்ணைச் சார்ந்தது. அதைச் சொல்பவன் ஆண். அந்த கௌரவத்தை காக்கும் பொருட்டு பெண் சாகவும் வேண்டும். அதுதான் அவளுக்கு கௌரவம். சாகவில்லை என்றால் அவள் கௌரவத்தை காக்க முன்வராதவள். ஆண் அவளை கொல்லும்போது அவன் கௌரவம் காக்கப்படுகிறது. கொல்லப்படும்போது அவளும் கௌரவமானவளாக ஆகிறாள். அதைப் பற்றி விர்ஜீனியா என்ற நாடகத்தில் எந்தப் பேச்சும் இல்லை.

ஆனால் இந்நாடகத்தில் விர்ஜினியாவைப்பற்றி விர்ஜினியஸ் நாலைந்து பக்கங்களுக்கு நீண்ட தன்னுரை ஒன்றை ஆற்றுகிறார். “குழி முயலின் தந்திரமும், பதுங்கும் புலியின் கவனமும், உறையிலிடப்பட்ட வாளின் பொறுமையும் கொண்டவள் அவள்” என்று அவர் யாரை சொல்கிறார்?. கதாநாயகி விர்ஜினியா இந்த நாடகத்தில் அப்படிப்பட்ட பெண்ணே இல்லை.

புட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் நஞ்சின் சாத்தியக்கூறுகள் அஞ்சவைக்கின்றன. அது பச்சைக்குழந்தையைக் கொல்ல முடியும். ஒரு நகரத்தைக்கூட அழிக்க முடியும் .அந்த சாத்தியக்கூறுடன் ஊழி ஊழிக்காலம் காத்திருக்கவும் முடியும்.” ஆசிரியர் இந்த வரிகளை யாரை எண்ணி எழுதினார்?

கொலையின் வழியாக விர்ஜினியஸ் அடையும் ஒரு விடுதலை அந்த நாடகத்தில் இருந்தது. வீனஸ் ஆலயத்தின் முன் நிகழும் விசாரணையில் கைது செய்து கொண்டு வரப்பட்ட ஆப்பியஸையும் மார்க்கசையும் விர்ஜீனியஸின் முன் நிறுத்துகிறார்கள். ஆனால் தன் கைகளால் மகளை கொலைசெய்தபின் ஆன்மிகமாக சோர்வுற்று, உடலால் தளர்ந்து இருக்கும் விர்ஜீனியஸ் அவர்களை தண்டிக்கும் நிலையில் இல்லை.

நான் உங்களை மன்னிக்கிறேன். ஏனெனில் நான் என்னை மன்னிக்க வேண்டியிருக்கிறது. உங்களை தண்டிக்க வேண்டும் என்றால் நான் என்னை தண்டித்துக் கொள்ளவேண்டும். நாம் எளிய பகடைகள். எவராலோ ஆட்டுவிக்கப்படுபவர்கள். நாம் சிறியவர்கள் என்பதை ஒத்துக்கொள்வோம். நமக்கு வேறு வழியில்லை என்பதை நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம். இந்த அவல நாடகத்தை இங்கே முடிப்போம்” என்று விர்ஜினியஸ் சொல்கிறான்.

ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. விர்ஜினியஸ் அந்த இடத்தில் அவர்களிடம் மன்றாடுவது ஒன்றைத்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து விர்ஜினியாவை பழிக்கவேண்டும். அத்தனை பிழையையும் செய்தவள் விர்ஜினியா. அவர்கள் இருவரையும் எப்படியோ அந்த முடிவுக்கு இட்டுச் சென்றார் என்றால் அவர் விடுதலை பெறுவார்.

அவர் மீண்டும் மீண்டும் பேசுவதெல்லாம் ஒன்றுதான். விதி என்கிறார், தெய்வங்கள் என்கிறார், நிகழ்ச்சிகளின் அறியமுடியாத விளையாட்டு என்கிறார். ஆனால் விர்ஜினியாவின் கொலைக்கு விர்ஜினியாவே காரணம் என்று கொண்டு செல்ல முயல்கிறார். அப்படித்தான் நிகழவேண்டும். காலம் முழுக்க இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

நாம் பெண்களுக்கு கடன்பட்டிருக்கிறோம் அவர்களுக்காகத்தான் இப்பேரரசுகளை உருவாக்குகிறோம். பெரும்படைகளைக் கொண்டு சென்று எதிரிகளை வெல்கிறோம். பொன்னையும் வைரங்களையும் கருவூலத்தின் நிரப்பிக் கொள்கிறோம் கொலைகாரர்களும் பாவிகளும் ஆகிறோம். சிறையில் வாடுகிறோம். சிலுவையில் தொங்குகிறோம். மதங்களை உருவாக்குகிறோம். அத்தனைக்கும் அப்பால் அவர்கள் நம்மால் முழுக்கத் தொடப்படாமல் எஞ்சியிருக்கவே செய்கிறார்கள். அந்த இடைவெளியை நிரப்பவே ஒவ்வொரு தருணத்திலும் நாம் முயன்று கொண்டிருக்கிறோம்” என்று விர்ஜீனியஸ் சொல்கிறார் “எங்கோ நமது கணக்குகள் தவறுகின்றன. மேலும் மேலும் வெளிச்சம் வேண்டும் என்று தூண்டித்தூண்டி சுடரை அணைத்துவிடுகிறோம்”

ஆனால் அவனுடைய பசப்பு வார்த்தைகளை மற்ற ஆப்பியஸ் மார்க்கஸ் இருவரும் ஏற்றுக்கொள்ள சித்தமாக இருக்கவில்லை. ஆப்பியஸ் சொல்கிறான் “எங்கள் இருட்டை நாங்கள் பார்க்கிறோம். காமம் எத்தனை கொடியது என்று காண்கிறோம். எங்களால் செய்ய முடிந்தது ஒன்றே. அந்த வாளை எங்களுக்கு கொடுங்கள். நாங்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்கிறோம்” என்கிறான்.

விர்ஜினியஸ் “என்னால் இயலாது. என்னால் இனிமேல் எந்த வாளையும் ஏந்திக்கொள்ள முடியாது” என்கிறார்.

ஆனால் அவையில் இருக்கும் படைவீரர்கள் வாட்களை எடுத்து அவர்கள் இருவரிடமும் கொடுக்கிறார்கள். அவர்கள் போரிட்டுச் சாகவேண்டும் என அவை ஆணையிடுகிறது.

நச்சுப்புன்னகையுடன் ஆப்பியஸ் திரும்பி விர்ஜினியஸிடம் சொல்கிறான். “நீ எதிர்பார்ப்பது எனக்குத்தெரியும். இங்கு என் வடிவில் வந்திருப்பது கொடியவனாகிய சாத்தான் என்று தெரிந்துகொள். நீ என்னிடம் கோரும் அந்த ஆறுதலை உனக்கு அளிக்க மாட்டேன். உன்னை இறுதியாக தண்டித்துவிட்டு செல்வதற்கு இது ஒன்றே வழி. விர்ஜினியா கள்ளமற்றவள், இனியவள், எந்தப் பழிபாவத்திற்கும் அப்பாற்பட்டவள், முழுப்பிழையும் என்னுடையது, நாம் அனைவரும் சேர்ந்து ஒரு தேவதையை கொன்றுவிட்டோம்!” என்று சொல்லி வாளை ஓங்கி தன் நெஞ்சுக்குழியில் பாய்ச்சிக்கொண்டு குப்புற விழுந்து துடித்து உயிர் விடுகிறான்.

மார்க்கஸ் வாளைக்கையில் வைத்தபடி நடுங்கிக் கொண்டிருந்த விர்ஜினியஸை பார்த்து நிற்கிறான். “அதைத்தான் நானும் செய்யவேண்டும். ஆனால் அவன் இறந்துவிட்டான். இறந்துவிட்டவர்களை மறப்பதற்கு மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழகியிருக்கிறார்கள். இனி நீயும் அவனை மறந்து விடுவாய். நீ விர்ஜீனியாவையும் மறந்துவிடுவாய். ஆகவே நீ உயிருடன் இருக்கும் வரை நானும் உயிருடன் இருப்பேன். அற்பப் பதராக குடிகாரனாக பைத்தியமாக இங்கே இருப்பேன். உன் வழிகளில் தட்டுப்பட்டுக்கொண்டே இருப்பேன். உன் துயிலில் என் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்” என்கிறான்.

விர்ஜீனியஸ் கைகளால் முகம் பொத்தி அழுகிறான். மார்க்கஸ் “விர்ஜினியா இனியவள். தூய காலைமலர் போல் நம் முன் நின்றிருந்தவள். நமது கீழ்மையால் அவளை அழித்தோம். என் பழிக்காக நான் இங்கே கீழ்மகனாக வீணனாக மாறுகிறேன்” என்று சொல்லி வாளைத்தூக்கி தன் முகத்தின் ஒரு பகுதி மயிரை சிரைத்துக் கொள்கிறான். கோமாளியைப்போல சிரித்து நடனமிட்டு அரங்கைவிட்டு வெளியேறுகிறான்.

விர்ஜினியஸ் “தெய்வங்களே! தெய்வங்களே!” என்று கூவியபடி கால் தளர்ந்து இருக்கையில் அமர்கிறான்.

அதுதான் உச்சம். அந்தக் காட்சியை எழுதி முடிக்கும்போது அவர் என்ன நினைத்தார்? அவள் என்ன அந்தக் காட்சியைப் பற்றி என்ன சொன்னாள்?

அவள் அதைப் படித்தாள். அவள் அதைப் படிப்பதை நான் மிக அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கைப்பிரதியில் அவளுடைய அழகிய இளம் விழிகள் ஓடிக்கொண்டிருந்தன. அவள் படிப்பதை சற்றுத் தாழ்வான தோலுறையிடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தபடி கிழவர் பார்த்துக்கொண்டிருந்தார்.

செக்கச் சிவப்பான மொராக்கோ தோல் உறைபோட்ட நாற்காலி. அவர் ஒரு மிகப்பெரிய ரத்தத்துளியின் மேல் அமர்ந்திருப்பது போல் இருந்தது. அவருடைய கண்கள் பொறியில் அகப்பட்ட விலங்கின் கண்கள் போல் நிலையற்று அசைந்து கொண்டிருந்தன. இருகைகளையும் நாற்காலியின் பிடியில் அழுத்திப்பிடித்திருந்தார்.

விர்ஜினியாதான் அந்தக் கைப்பிரதியை படித்துக்கொண்டிருந்தாள். ரோமின் கள்ளமற்ற இளஞ்சிறுமி. பனிமலர்போல் தூய்மையானவள். வீனஸின் ஆலயமுகப்பில் தந்தையால் பலிகொடுக்கப்பட்டவள். ஒருகையால் தன்னுடைய பொன்னிறத் தலைமுடியைப் பிடித்துச் சுழற்றி விரலில் சுற்றி இழுத்து விட்டுக்கொண்டு தொடையை மெல்ல அசைத்துக்கொண்டு சிறுமித்தனமான உடல் மொழியுடன் அவள் அதைப் படித்தாள்.

அவள் தாள்களைப் புரட்டும் ஒலி அந்த அறை முழுக்க ஒலித்தது. அறையின் ஒரு மூலையில் கணப்பு எரிந்து கொண்டிருந்தது. கங்குகள் பொசுங்கும், பொரிந்து உடையும், தழல் உதறிக் கொள்ளும் ஓசை மட்டுமே அங்கு நிறைந்திருந்தது. வெளியே டிசம்பரின் பனி அந்த மாளிகையைச் சுற்றி இறுக்கியிருந்தது. மம்மியைச் சுற்றிய வெள்ளைத்துணி நாடா போல. உள்ளே இந்நகரின் மாபெரும் மாளிகைகள் செத்து ஆனால் மட்காமல் இருந்தன. கண்கள், வாய், செவிகள் கொண்டிருந்தன. ஆனால் புலன்கள் அற்றிருந்தன. காலாதீதமாக அப்படியே வெறித்தபடி அமைந்திருந்தன. சாவைக் கடப்பதாக எண்ணி சாவில் உறைந்திருந்தன.

அவள் படித்து முடித்து அதை மடித்து அருகிலிருந்த சிறிய மூங்கில் மேடை மேல் வைத்தபின் மார்பில் கைகளைக் கட்டிக்கொண்டு கண்களைத் தழைத்து அமர்ந்திருந்தாள். உதடுகளில் இனிய புன்னகை இருந்தது.

கிழவர் அவளிடம் “என்ன சொல்கிறாய்?” என்றார்.

அவள் நிமிர்ந்து அவரைப்பார்த்து ”எதை?” என்றாள்.

கிழவர் சீற்றத்துடன், “இந்த நாடகத்தைப் பற்றி? வேறெதைப்பற்றி சொல்கிறேன்?” என்றார்.

சிறப்பாக வந்திருக்கிறது” என்று அவள் சொன்னாள்.

நான் உன்னிடம் கேட்பது அதையல்ல.ஓர் இலக்கிய படைப்பைப் பற்றி சொல்லவேண்டிய வரி அது அல்ல.”

பிறகு எது?” என்று அவள் கேட்டாள். அவள் தன் கள்ளமற்ற பாவனையால் அவளுடன் விளையாடினாள். தன் கூரிய நகங்களால் அந்த முதிய எலியைத் தூக்கிப்போட்டு ஆடியது மென்மையான தோலும், அழகான கண்களும் சிவந்த வாயும், இனிய குரலும் கொண்ட பூனை.

தெரியவில்லை. ஆனால் வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் அல்ல. நான் கேட்க விரும்புவது அதற்கப்பால் ஆழமான ஒன்று. உன் ஆத்மாவிலிருந்து வரும் ஒன்று. அது உன் சொற்களில் வெளிவரவேண்டும். அதைத்தான் நீ இங்கே சொல்லியிருக்கவேண்டும்” என்றார்.

அவள் “மெய்யாக சொல்லப் போனால் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை” என்றாள்.

அவர் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே பழைய கதையில் உள்ளதைத்தான் எழுதியிருக்கிறீர்கள். வெறும் குடும்ப கௌரவத்திற்காக விர்ஜினியஸ் தன் மகளைக் கொன்றார்” என்று அவள் சொன்னாள்.

ஆமாம், ஆனால் இதிலுள்ள இத்தனை உரையாடல் அதில் இல்லை.”

அதைத்தான் நான் நினைத்தேன். நாம் பிரிட்டிஷ் நாடகங்களில் ஏன் இத்தனை நீண்ட தன்னுரைகள்? ஷேக்ஸ்பியரிலிருந்து நாம் விடுபடவே இல்லையா?”

ஏன் விடுபடவேண்டும்? ஏன் விடுபடவேண்டும்?” என்று உரக்க கேட்டார். ”ஷேக்ஸ்பியர் நம்முடைய வெற்றிப்பதாகை. உலகம் முழுக்க நாம் கொண்டு போகக்கூடிய செல்வம். ஷேக்ஸ்பியரைத்தான் நாம் திரும்ப எழுதவேண்டும். எழுதி எழுதி ஷேக்ஸ்பியரை விட்டு ஒருகணம் தாண்டிவிட்டோம் என்றால் அதுதான் நமது வெற்றி.”

ஆமாம்” என்று அவள் சொன்னாள்.

பிறகு என்ன?” என்று அவர் கேட்டார்.

ஷேக்ஸ்பியர் போலவே இருக்கிறது” என்று அவள் சொன்னாள்.

அது ஒரு பொதுவான பேச்சு. நான் அதற்கப்பால் எதையாவது எதிர்பார்க்கிறேன் உன்னிடம்” என்று அவர் சொன்னார். “நான் ஷேக்ஸ்பியரர் அல்லதான். ஆனால்… அதல்ல” என்று தடுமாறினார்.

அதற்கப்பால்…” என்றபின் அவள் எழுந்து “நான் விர்ஜினியாவாக உணர்ந்தேன் என்று சொல்வேன் என்று நினைக்கிறீர்களா அப்பா கிறிஸ்ப்?” என் கேட்டாள்.

அவர் நடுங்கும் கைகளைக் கோர்த்தபடி “அதெப்படி?” என்றார்.

அப்படித்தான் நினைக்கிறேன்” என்று அவள் சொன்னாள்.

ஏன்?” என்று கேட்டபோது அவர் முகம் அத்தனை கோணலாக வலிப்பு கொண்டிருந்தது. கீழ்பற்கள் வெளித்தெரிந்தன. சுருட்டுப் புகையால் கருமை படிந்த உதடுகள்.

ஆனால் அத்தனை இளம்பெண்களும் அப்படித்தான் உணர்வார்கள். அதனாலென்ன?” என்று சொன்னபின் அவள் அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

கிழவர் அவள் செல்வதை தன் பழுத்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் தன் தலையை கைகளால் தாங்கிக்கொண்டு நாற்காலியில் குனிந்து அமர்ந்தார். கணப்பு அங்கே வெடித்து எரிந்து கொண்டிருந்தது. அறை அதன் செவ்வொளியால் நிறைந்திருந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇன்று- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமிகுபுனைவுகள், கனவுகள்