மறுநாள் நான் காலையில் சற்றுப் பிந்தித்தான் எழுந்தேன். முந்தைய நாளிரவு நல்ல தூக்கமில்லை என்பதுபோல் எனக்குக் கண்கள் உளைந்தன. வாய் கசந்தது. எழுந்து நின்றபோது தலை சுற்றுவது போல் இருந்தது. மெதுவாக நடந்து படிகளில் வந்தமர்ந்து முற்றத்தில் பெய்து கொண்டிருந்த வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மழை, வெயில் இரண்டும் மாறி மாறி அங்கே மண்ணை அறைந்துகொண்டே இருந்தன. அவற்றுக்கு இடையே ஒரு போட்டி நிகழ்வதுபோல.
கோரன் என்னை வந்து பார்த்துவிட்டு சென்று டீ கொண்டு வந்து தந்தான். பாலில்லாத டீயின் மணத்துக்கு நான் பழகி விட்டிருந்தேன். அந்த மணமே என்னை இனிய மனநிலைக்குக் கொண்டு சென்றது. கோரன் டீ போட நன்றாகவே கற்றிருந்தான். மிகக்குறைவாகவே அவன் டீத்தூள் போடுவான். வெளியே டீக்கடைகளில் பாலில்லாத டீ கேட்டால் கஷாயத்தைத்தான் தருவார்கள். காணிக்காரர்கள் துளசி முதலிய பல இலைகளைப் போட்டு வெந்நீர் போடுவதுண்டு, அந்தப் பக்குவம்தான் சரியாகப் பாலில்லாத டீயின் முறையும்.
டீ குடித்து சற்று நேரம் கழிந்தபோது ஓரளவு ஊக்கம் கொண்டவனானேன். அதன்பிறகுதான் எழுந்து பின்னால் சென்று முகத்தை கழுவிக்கொண்டேன். ஊக்கத்தை வரவழைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். உடல் ஓய்ச்சலும் குடைச்சலும் கொண்டிருந்தது. காய்ச்சல் வந்து சென்ற உடல்போல தோலில் அதீதமான மென்மையுணர்வு, குளிர்போல ஒரு கூச்சம்.
உடற்பயிற்சி போல் ஏதாவது செய்தால் மீண்டுவிடுவேன். ஆனால் இன்னும் சற்று நேரத்திற்குள் நான் பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் அங்கு சென்று சேர. அந்த நடை போல இன்னொரு உடற்பயிற்சி கிடையாது. மதியத்திற்கு மேல் மீண்டும் இரண்டு மணி நேரம் நடந்து திரும்பி வரவேண்டும். நடக்கும்போது தூக்கம் விலகிவிடும் என்று தோன்றியது.
கோரன் காலை உணவாக கஞ்சி சமைத்திருந்தான். அவனுக்குத் தெரிந்த ஒரே சமையல் அது. எதைக்கொடுத்தாலும் வேக வைத்து உப்பும் மிளகாய்ப்பொடியும் தூவவும் தெரியும். பூசணிக்காய், கிழங்குகள், இறைச்சி அனைத்தையுமே அவன் அவ்வாறு தான் சமைத்தான். ஆதிவாசிகள் புளியையும் மிளகாயையும் பயன்படுத்துவதில்லை. அவர்களின் உணவென்பது காய்கறிகள், தானியங்கள், இறைச்சி ஆகியவற்றின் இயல்பான சுவையுடன் கொஞ்சம் உப்பு கலப்பது மட்டும்தான். பெரும்பாலும் சுட்டார்கள், அரிதாக வேகவைத்தார்கள். அவர்கள் உணவில் எண்ணைக்கும் இடமில்லை.
ஆனால் அந்தக்காட்டில் எல்லாமே சுவையாகத்தான் இருந்தன. அவையனைத்துமே புத்தம் புதியவை என்பது ஒரு காரணம். அத்தனை தூரம் நடந்து கொல்லும் பசியுடன் இருக்கையில் வெறும் சோறும் மணமும் சுவையும் நிறைந்ததாகத்தான் இருக்கும். நான் பசியையும் ருசியையும் அங்கே உணர்ந்ததுபோல் எங்கும் உணர்ந்ததில்லை.
ஊரில் என் வீட்டில் எப்போதுமே பழையசோறோ கஞ்சியோ மரவள்ளிக்கிழங்கோதான். எப்போதாவது கல்யாணங்களில் விருந்து உணவு உண்டு. அதை எண்ணி எண்ணி காத்திருப்பேன். ஆனால் இலைமுன் அமர்ந்து அத்தனை உணவுகளையும் அவற்றின் கலவை மணத்துடன் நேரில் பார்த்ததுமே பசியும் சுவையுணர்வும் அடங்கிவிடும். பின்னர் கலைத்துப் போட்டுவிட்டு எழுவதுதான் நடக்கும்.
நான் குளித்து ஆடைமாற்றிக் கொண்டேன். ஒரு வாரத்திற்கு ஒருமுறைதான் சவரம் செய்வது வழக்கம். முந்தையநாள் மழித்திருந்தாலும் அன்றும் முகத்தை நன்றாக மழித்தேன். தலையை திரும்பத் திரும்ப சீவியபடி கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். என் கண்கள் கீழிமைகள் வீங்கி தூக்கமின்மை தெரிய இருந்தன. உதடுகள் கூட சற்று உலர்ந்தவை போல் தெரிந்தன.
மெய்யாகவே நான் இரவில் நன்கு தூங்கவில்லையா? தூங்கியிருந்தேன். இரவு இரண்டு மணிவரை தூங்கினதாக எடுத்துக்கொண்டாலும் கூட ஏழு மணி நேரத்திற்கு மேலாகவே தூங்கியிருக்கிறேன். எத்தனை மணிநேரம் படுத்துக் கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. எப்படியும் மூன்று நான்கு மணிநேரம் படுத்திருப்பேன். விடியற்காலையில் காகங்களின் குரல் கேட்ட நினைவிருக்கிறது.
இரவில் எழுந்து அந்த புத்தகத்தை படித்துக் கொண்டே மேசைமேல் குப்புற விழுந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அசைந்து அமர்ந்த போது விழிப்படைந்து மேஜை மேல் விழுந்திருப்பதை உணர்ந்து எழுந்து சென்று படுக்கையில் படுத்துக் கொண்டேன். அப்போது மழை நின்றுவிட்டிருந்தது. காற்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலின் கண்ணாடிக் கதவுகள் விம்மி விம்மி அதிர்ந்து கொண்டிருந்தன.
அப்போது நான் பேசிக்கொண்டிருந்தேன் என்பதை நினைவுகூர்ந்தேன். யாரிடம்? என் அருகே வேறெவரோ இருந்தார்கள். பேசிக்கொண்டே படுக்கைக்கு செல்லும் என்னை நானே தொலைவிலிருந்து பார்க்கையில் மெல்லிய நிழலுரு ஒன்று என்னைத் தொடர்வதை என்னால் காண முடிந்தது. ஆனால் வெறும் நிழல்தான். கரைந்து உருவழிந்த நிழல். மனித உருவம் கூட அல்ல.
நான் படுத்த பிறகு அந்நிழல் என் காலடியில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. அது என் கனவுகளுக்குள் வந்திருக்கவேண்டும். கனவுகளுக்குள் நான் ஈவ்லினாவைப் பார்த்தேன். பதினேழாம் நூற்றாண்டு உடையணிந்தவள். மிகப்பெரிய வட்ட விளிம்பு கொண்ட தொப்பி. அதன்மேல் மலர்கள். மென்பட்டாலும் மஸ்லினாலும் செய்யப்பட்ட துணிமலர் முடிச்சுக்கள். தோள்கள் விரிந்து அகன்ற கவுன். மெல்லிய கழுத்தும் முதிரா மார்புகளும் கழுத்து வெட்டினூடாக வெளியே தெரிந்தன. மெலிந்த கைகள், நீண்ட விரல்கள். சுருண்ட பொன்னிறக்கூந்தல் அலைநுரை போல இருந்தது.
அவள் ஒரு மேஜைமேல் கையை ஊன்றி தலையை கையில் சாய்த்து சரிந்த விழிகளுடன் எதையோ நினைத்து அசையாது அமர்ந்திருந்தாள். இடக்கையால் அந்த மேஜைமேல் மெல்லத் தாளமிட்டுக் கொண்டிருந்தாள். எண்ணங்கள் தீவிரமடையும்போது தாளம் நின்றது. பின்னர் மீண்டும் தொடங்கியது. அவள் முகம் துயரத்திலிருப்பது போல எதையோ எண்ணி ஏங்குவது போல இருந்தது.
அந்த அறைக்குள் எவரோ வந்தார்கள். கதவு திறந்து மூடும் ஓசை அவள் எழுந்து தன் கவுனின் கழுத்தை இழுத்துவிட்டு அதன் இடைமடிப்புகளை சீரமைத்தபடி சுவரோரமாக சென்று நின்றாள். அந்த அறைக்குள் வந்தவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவள் அவரைப் பார்த்த பார்வையிலிருந்து அவர் முதியவர் மதிப்புக்குரியவர் என்று தெரிந்தது. அவர் அவளிடம் கண்டிப்பான குரலில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
உண்மையில் அந்தக் குரலைக்கூட என்னால் கேட்க முடியவில்லை. ஈவ்லினாவின் விழியசைவுகள் முக மாறுதல்களிலிருந்தே அவர் கண்டிப்பாக ஏதோ சொல்கிறார் என்று தெரிந்தது. அவள் அவருக்கு அளித்த முகபாவனைகளையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஈவ்லினா பணிவும் பதவிசும் கொண்ட ஒரு பெண்ணாகத் தெரிந்தாள் உலகம் தெரியாத, ஆனால் முழுநம்பிக்கையுடன் உலகத்தை எதிர்கொள்ளகூடிய, எங்கும் இயல்பாகவே பணியக்கூடிய, எவருக்கும் பணிவிடை செய்யத்தயாராக இருக்ககூடிய, அத்தகைய சிறுமிகளை நாம் எங்கும் பார்த்திருப்போம். நம்முடைய வீடுகளிலெல்லாம் உள்ளறைகள் முழுக்க அத்தகைய பெண்கள்தான். குழிமுயல்கள் போல அஞ்சுபவர்கள், ஓசையில்லாமல் நடமாடுபவர்கள், இருளில் ஒளிரும் கண்கள் கொண்டவர்கள்.
அந்தப் புத்தகத்தில் நான் வாசித்த கடிதங்களையும் டைரிக் குறிப்புகளையும் அவள் தான் எழுதினாள் என்றால் எவராலும் நம்ப முடியாது. ஆனால் அவள் உண்மையானவளல்ல. அவள் ஒரு கதாபாத்திரம் அவளே எழுதியது ஃபேன்னி. ஃபேன்னி என்பதுகூட புனைபெயர்தான். ஃபேன்னி ஹில் என்ற காமக்கதாநாயகியின் பெயருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இன்னொரு பெண். ஃப்ரான்ஸிஸ் பர்னி. விந்தைதான் ஃப்ரான்ஸிஸ் பர்னிக்குப் பின்னால் வேறெவரோ ஒளிந்திருக்கலாம். அவளுக்குப் பின்னால் இன்னும் பூடகமான யாரோ.
நான் அப்படி உதிரியாக யோசித்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. நெடுநேரம் அரைத்தூக்கத்திலேயே இருந்திருப்பேன். நன்றாக வெயில் வந்து கண்ணாடி சன்னலினூடாக அந்த பெரிய கூடத்தில் ஒளிச்சட்டங்களாக விழுந்து கிடப்பதை கண்டு கொண்டுதான் காலையில் எழுந்தேன். ஆனாலும் தூக்கக்கலக்கம்.
கோரன் வீட்டைச் சாத்திக்கொண்டு வந்தான். நாங்கள் இருவரும் மலைப்பாதையில் ஏறிச்சென்றோம்.
நான் கோரனிடம் “கப்ரியேல் அங்கு அரிசிகொண்டு சேர்த்திருப்பாரா?” என்று கேட்டேன்.
“சேர்த்திரிக்கும்… நாடார் அரி கொண்டுவரும்” என்று அவன் சொன்னான்.
இருபது கிலோ அரிசியும் அதைப் பொங்குவதற்கான அலுமினியப் பானைக்கும் சொல்லியிருந்தேன். ஆனால் கோரனால் அவ்வளவு சமைக்க முடியுமா என்று தெரியவில்லை.
“நீ சோறு வைப்பியா? நெறைய பேருக்கு?” என்று கேட்டேன்.
“சோறு வைக்கும் நான். நிறைய சோறு வைப்பேன்” என்று அவன் சொன்னான்.
“சமைத்தால் உனக்கு ஒரு ரூபாய் தருகிறேன்” என்று நான் சொன்னேன்.
அவன் சந்தேகத்துடன் “ஒரு ரூபாயா?” என்று அவன் ஒரு விரலைக் காட்டினான். மேலும் சந்தேகம் கொண்டு “சோறு! வயிறு நிறைய சோறு” என்றான்.
“ஆமா, ஒரு ரூபா தரேன். அது சம்பளம் வயிறு நிறையச் சோறு வேற.”
அவன் முகம் மலர்ந்து “நிறைய சோறு” என்றான். அங்கேயே அமர்ந்து தரையில் வட்டம் வரைந்து குவியல் போலக்காட்டி “இவ்வளவு சோறு” என்றான்.
“ஆமாம் அவ்ளவு சோறு” என்று நான் சொன்னேன்.
நாங்கள் பள்ளிக்கூடத்தை அணுகியபோது அங்கே ஏற்கனவே இரண்டு பையன்கள் நின்றிருந்தார்கள். முந்தைய நாள் வந்தவர்கள் அல்ல. வேறு இருவர். என்னைப் பார்த்து அவர்கள் ஓடவில்லை.
அவர்களில் பெரிய பையன் என்னிடம் “நீங்ங வாத்யாரா?” என்றான்.
“ஆமாம்” என்றேன். அவனுடைய துணிவு ஆச்சரியம் அளித்தது.
“நான் இந்தப்பள்ளிக்கூடத்தில் படிச்சேன்” என்று அவன் சொன்னான்.
“என்ன படிச்சே?” என்றேன்.
“ஒண்ணு ரெண்டு மூணு” என்றான். அதன்பின் யோசித்து ”அ, ஆவும் படிச்சேன்” என்றான்.
“உன்னால் காகிதம் படிக்க முடியுமா?” என்று கேட்டேன்.
“அ, ஆ படிப்பேன்” என்று அவன் சொன்னான். அதன்பிறகு “இவிடே வாத்தியார் ஆரும் வரல்ல, அதனால் நான் காட்டுக்குப்போனேன். எனக்கு அ , ஆ எல்லாம் சொல்லிக் குடுக்குமோ?”
நான் “சொல்லிக் குடுப்பேன். அதுக்குத்தான் வந்திருக்கேன். படிக்க வார பிள்ளங்களுக்கெல்லாம் சோறு உண்டு” என்று நான் சொன்னேன்.
அவன் “சோறா?” என்றபின் கைசுட்டி “அதுவா?” என்றான்.
சற்று அப்பால் காலையில் கப்ரியேல் நாடாரின் கழுதைகள் கொண்டு வந்து இறக்கிய இரண்டு மூட்டை அரிசியும் ஒரு பெரிய அலுமினிய அண்டாவும் இருந்தன. நான் அருகே சென்று பார்த்து “இதுதான். இது பள்ளிக்கூடத்து அரிசி” என்றேன்.
”பள்ளிக்கூடத்து அரிசி” என்று அவன் சொன்னான். அவர்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள அந்த வார்த்தையை அப்படியே திருப்பிச் சொல்கிறார்கள்.
நான் கோரனிடம் “இதை எங்கே வைக்க?” என்று கேட்டேன்.
கோரன் “மழைத்தாள் உண்டு” என்றான்.
என்ன சொல்கிறான் என்று தெரியவில்லை. அவன் அந்த மூட்டைகளுக்கு அடியிலிருந்து இரண்டு பெரிய பாலீதீன் பைகளை எடுத்தான்.
“மண்ணில் குழிச்சிடும், பள்ளிக்கூடத்தில் குழிச்சிடும்” என்று அவன் சொன்னான். என்ன சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை.
“அரி அளந்து தா” என்று அவன் கேட்டான்.
நான் முதல் மூட்டையைப் பிரித்து அதிலிருந்து பத்து பிள்ளைகளுக்கு சாப்பிடத் தேவையான் அளவுக்கு அரிசியை என் வெறும் கையாலேயே அள்ளி அந்தக் குண்டாவில் போட்டேன். பிறகு இன்னும் கொஞ்சம் இருக்கட்டுமே என்று மீண்டும் மூன்று முறை அள்ளிப்போட்டேன்.
எஞ்சியதை அவன் அந்த பாலிதீன் பைகளுக்குள் போட்டு அதன் விளிம்புகளை சேர்த்து நன்றாகக் கட்டினான். பள்ளிக்கூடத்திற்குள் சென்று சுற்றுமுற்றும் பார்த்தான்.
“என்ன செய்றே?” என்றேன்.
“குழிக்கணும்” என்றான். “ஏடா தூம்பா கொண்டுவா.”
ஒரு பையன் ஓடி சிறிய மண்வெட்டி ஒன்றை கொண்டு வந்தான் கோரன் பள்ளிக்கூடத்திற்குள்ளேயே வேகமாக குழி பறிக்கத் தொடங்கினான். விரைவிலேயே இடுப்பளவு ஆழத்திற்கு குழி எடுத்துவிட்டான் அதற்குள் இரு மூட்டைகளையும் வைத்து மேலே மண்ணை மூடி இறுக்கினான். அதன்பின் புலி சிறுநீர் கழித்திருந்த மர இடுக்கிலிருந்து மண்ணை கையால் அள்ளிக்கொண்டு வந்தான் அதைப்புதைத்த இடத்திற்கு மேலே வீசி காலால் அழுத்தினான்.
“புலி மூத்திரம் நாறினா தோண்டான் நாய் வரில்லா” என்றான்.
எனக்கு புன்னகை வந்தது. உண்மைதான். புலி தவிர எந்த மிருகமும் இனி அங்கே தோண்டிப் பார்க்கப் போவதில்லை. புலிக்கு அரிசி தேவையும் இருக்காது.
நான் வெளியே வந்து அந்த பெரிய பையனிடம் மாணவர்களைக் கூட்டிவரச் சொன்னேன்.
“பிள்ளையளையோ?” என்று அவன் கேட்டான்.
“எல்லாப் பிள்ளைகளையும் கூட்டிவா எல்லாருக்கும் சோறு உண்டு” என்றேன்.
அவன் “சரி” என்று சொல்லி ஓடிப்போனான்.
கோரன் மூன்று பெரிய கற்களை உருட்டிக்கொண்டு வந்து அடுப்பு செய்தான். அதன்மேல் அந்த அண்டாவை வைத்து அதில் அரிசியைக் கொட்டி வைத்தான். தண்ணீர் மொண்டு வருவதற்கு அருகிலேயே மரத்தின்மேல் இருந்து கமுகுப்பாளையில் கோட்டி உருவாக்கிய பெரிய தோண்டி ஒன்றை எடுத்துக் கொண்டான்.
கீழே ஓடிய ஓடையிலிருந்து தண்ணீரை மொண்டு கொண்டு வந்து அண்டாவில் கொட்டி அந்தப்பகுதியில் இருந்தே காய்ந்த விறகுகளை சேகரித்து தீப்பொருத்தினான். பெரும்பாலும் காய்ந்த மூங்கில். அது மழையில் ஊறாமலிருந்தது. விரைவிலேயே எரிந்து வெடித்து தெறிக்க ஆரம்பித்தது.
சோறு வேகத்தொடங்கியது. அது ஒரு நல்ல அறிவிப்புதான் என்று எனக்குத் தோன்றியது. மெய்யாகவே சோறு போடப்போகிறார்கள் என்ற செய்தி மாணவர்களை அங்கு வரவழைக்கும்.
புதர்களுக்குள் ஓசைகள் கேட்டன. ஆங்காங்கே குழந்தைகள் தோன்றி என்னை நோக்கி வரத்தொடங்கின. அத்தனை குழந்தைகள் அங்கிருப்பதே ஆச்சரியமாக இருந்தது. கோரன் சென்று கூப்பிட்டால் அவர்கள் வந்திருக்க மாட்டார்கள். அவர்களில் ஒருவனான அந்த பெரிய பையன் சென்று அழைத்தபோது அவர்கள் வந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்து இன்னும் நிறைய பேர் வந்தார்கள்.
சற்று நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து சேர்ந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து புன்னகைத்து ”எல்லாரும் வரியாய் இருங்க” என்றேன்.
அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு ஒரு ததும்பும் பரப்பாக அசைந்தபடி ஒற்றைத்திரளாக அங்கே நின்றார்கள்.
”ஸ்கூலுக்கு வாங்க” என்று நான் கூப்பிட்டேன். அவர்கள் எவரும் வரவில்லை.
அந்த மூத்த பையனிடம் “உன் பெயரென்ன?” என்று நான் கேட்டேன்.
“உச்சன்” என்று அவன் சொன்னான்.
“உச்சன் நீதான் மானிட்டர்” என்றேன்.
அவன் என்னைத் திகைப்புடன் பார்த்தான்.
“மானிட்டர்! மானிட்டர்னா மூப்பன் மாதிரி. பிள்ளைகளுக்கு நீதான் மானிட்டர்” என்றேன். ”சர்க்கார் உன்னை மானிட்டரா வெச்சிருக்கு.”
அவன் தன் நெஞ்சைத் தொட்டு “மானிட்டர்” என்றான்.
“ஆமாம்” நான் அவனை அழைத்து “நீ மானிட்டர் நீதான் இவங்களுக்கு எல்லாம் சொல்லணும். நீ சொல்றத இவங்கள்ளாம் கேக்கணும். தெரியுதா?” என்றேன். அவன் தலையசைத்தான்.
எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது என் பையிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து அவனுக்குக் கொடுத்தேன். ”இது மானிட்டருக்குக் கூலி” என்று சொன்னேன்.
“கூலி” என்று அவன் புரியாமல் சொன்னான்.
“இதை நீ வெச்சுக்கோ மானிட்டருக்கு ஒரு ரூபா கூலி சர்க்கார் கூலி” என்றேன்.
அவன் புன்னகையுடன் அந்த நாணயத்தை புரட்டிப் புரட்டி பார்த்தான். மற்ற பிள்ளைகளெல்லாம் ஆவலுடன் அதைப் பார்க்க அவன் அவர்களையெல்லாம் அதட்டி துரத்தி அதை தன்னுடைய கமுகுப்பாளைக் கோமணத்துக்குள்ளே வைத்தான்.
“எல்லாரையும் உள்ளே கூட்டி வா” என்று சொல்லி நான் உள்ளே சென்றேன்.
“நா இப்பக் கூட்டி வாரேன்” என்று அவன் சொன்னான்.
அவன் அவர்களை ”ஒச்செண்டாக்காண்டே, ஒச்செண்டாக்காண்டே, வரீ, வரீ, வரீனேய்…” என்று ஆணையிடுவது கேட்டது. அந்த மொழியே வேறு. அவர்கள் நம்மிடம் நமது மொழியைத்தான் பேசுகிறார்கள்.
அதன்பிறகு குழந்தைகள் வரிசையாக முயல்கள் போல பள்ளிக்கூடத்திற்குள் வந்தன. ”எல்லாரும் உக்காருங்க” என்று நான் சொன்னேன்.
“இரீயின், இரீயின்” என்று அவன் அவர்களை நோக்கி சொன்னான். அவர்கள் கூட்டமாக அமர்ந்துகொண்டனர்.
எனக்கு அங்கே அமர்வதற்கு நாற்காலியில்லை. ஒன்று செய்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். அங்கே நிறைய மூங்கில் இருந்தது. அவர்களிடமே சொன்னால் சேர்த்துக்கட்டி ஒரு நாற்காலி செய்துகொடுப்பார்கள்.
நான் நின்றபடி அவர்களிடம் சொன்னேன். “இது பள்ளிக்கூடம். இங்கே எல்லாருக்கும் உச்சைக்கு சோறு உண்டு. இங்க வந்தா எழுத்து படிப்பு சொல்லித்தருவேன். எழுத்து படிப்பு படிச்சா பெரிய ஆளாயி சட்ட போடலாம். சட்ட போட்டா சர்க்கார் ரூபா தரும்.”
உச்சன் கை தூக்கி “ஒரு ரூபா” என்றான்.
“ஆமா ஒரு ரூபா!” என்றேன்.
“கோரனுக்கு ஒரு ரூபாய்” என்று அவன் சொன்னான்.
“ஆமாம் கோரனுக்கு ஒரு ரூபாய். அத்தன பேருக்கும் ஒரு ரூபா” என்றதும் அவர்களெல்லாம் கலைந்து பேசத்தொடங்கினார்கள்.
“இப்ப இல்ல, நாளைக்கு” என்று நான் சொன்னேன். ”நீங்கள்ளாம் எழுத்து படிப்பெல்லாம் படிச்ச பிறகு! சரியா?” .
அவர்களில் ஒரு சிறுவன் “கதை சொல்லு” என்றான்.
ஆச்சரியமாக இருந்தது “கதையா?” என்று நான் கேட்டேன்.
“பெரிய கதை ஆனை கதை” என்று அவன் கேட்டான்.
அவர்கள் தந்தையரிடமிருந்து கதைகளைக் கேட்டுக்கேட்டு வாழ்பவர்கள் என்பதை பின்னர்தான் தெரிந்துகொண்டேன். அவர்களுக்கு இருக்கும் ஒரே கல்வி என்பது தந்தையும் தாயும் சொல்லும் கதைதான். பெரும்பாலும் அவர்களுக்கு அம்மாக்கள் தான் கதை சொல்கிறார்கள்.
நான் அவர்களுக்கு தந்திரக்கார நரியின் கதையைச் சொன்னேன். ’காக்கா நீ நன்றாகப் பாடுகிறாய்’ என்று சொல்லி வடையை அது கொண்டுபோய் விடுகிறது. ஆனால் அவர்கள் எந்த எதிர்வினையையும் காட்டவில்லை. விழித்துப் பார்த்துக் கொண்டு வெறுமே அமர்ந்திருந்தார்கள்.
நான் இன்னொரு கதை சொல்லலாம் என்று எண்ணி நினைவில் துழாவி தேடி தந்திரக்கார நரியின் வாயில் இருந்து சிக்கிக்கொண்ட முள்ளை எடுத்த கொக்கின் கதையைச் சொன்னேன். அதற்கும் அவர்கள் விழித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
“என்ன கதை புரிஞ்சுதா?” என்று நான் கேட்டேன்.
“நரி ஆரு?” என்று ஒருவன் கேட்டான்.
”நரி எவிடே?” என்றான் இன்னொருவன்.
ஒரு பெண்குழந்தை “நரி இல்ல” என்றது.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. அவர்களால் பேசும் நரியையும் காகத்தையும் கொக்கையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
நான் காகம் கல்லைப் பொறுக்கிப் போட்டு கூஜாவில் தண்ணீர் குடித்த கதையைச் சொன்னேன். அவர்கள் சேர்ந்து ஓசையிட்டார்கள். சிலர் உத்வேகம் தாளாமல் எழுந்துவிட்டார்கள்.
ஒருவன் “காக்கா இலையிலே வெள்ளம் குடிக்கும். வேற கொம்பில் இருந்நு குடிக்கும்” என்றான்.
அவன் சொன்னதென்ன என்று எனக்கு புரிந்தது. இலையில் தேங்கிய நீரை சிந்தாமல் குடிக்கும்பொருட்டு காகம் இன்னொரு கிளையில் அமர்ந்து எட்டி அலகை நீட்டி குடிக்கிறது என்கிறான்.
“காக்கா கல்லு கொண்டுபோகும்!”
“காக்கா வெள்ளாரங்கல்லு கொண்டு வந்நு இடும்.”
அவர்கள் காகங்களைப் பற்றி மாறி மாறிச் சொன்னார்கள். ஒவ்வொருவரும் காகங்களைப் பற்றி ஏராளமாக அறிந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக பேசட்டும் என்று விட்டேன்.
கடைசியாக ஒரு பெண் குழந்தை திக்கித் திக்கி “காக்கா! காக்கா! காக்கா!” என்றது.
அனைவரும் சிரித்தனர். வகுப்பு உயிர்த்துடிப்புடன் தொடங்கிவிட்டது. அரிசி வெந்த சோற்றின் மணமும் வந்துவிட்டது.
ஆனால் எவரிடமும் பாத்திரங்கள் இல்லை. அனைவருக்கும் அலுமினியப் பாத்திரங்கள் கொடுக்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
நான் அறிவிக்காமலேயே கோரன் வந்து “சோறு தின்னான் வரீ புள்ளா” என்று அவர்களை அழைத்தான். அத்தனை பேரும் “ஓ…!” என இரைந்தபடி வெளியே ஓடினார்கள்.
அவர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தேன். கோரன் கமுகுப்பாளைகளை பொறுக்கிக் கொண்டு வந்து வைத்திருந்தான். கத்தியால் அவற்றை வெட்டித் திருத்தினான். அவர்களில் வளர்ந்த பையன்கள் அவர்களே தொன்னை கோட்டிக் கொண்டார்கள். சிறு குழந்தைகளுக்கு கோரன் தொன்னை கோட்டிக் கொடுத்தான்.
வெறும் கஞ்சிதான். அதைத்தான் சோறு என்கிறான். ஆனால் தண்ணீர் ஓரளவு வற்றியிருந்தது. அவன் அதை அள்ளி குழந்தைகளின் தொன்னைகளில் ஊற்றினான்.
நான் திகைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றேன். எந்தக்குழந்தையும் முண்டியடிக்கவில்லை. தனக்கு மேலும் வேண்டும் என்றுகூட கேட்கவில்லை. சின்னக்குழந்தைகளுக்கு கொடுக்கும்படி பெரிய குழந்தைகள் கேட்டன. “அவிடே கொடு, அவிடே” என்றுதான் மாறிமாறி சுட்டிக்காட்டின.
கஞ்சி கிடைத்ததுமே அவை தொன்னைகளை சுமந்தபடி காட்டுக்குள் சென்றன.
”எங்க போறாங்க?” என்றேன்.
“மற்றுள்ளோருக்கு கொடுக்கானாக்கும்” என்றான் கோரன்.
அங்கே வராத பிறருக்கு கொடுக்க கொண்டு செல்கின்றன. அவர்கள் பகிர்ந்து தான் உண்பார்கள். ஒருவர் உண்ண ஒருவர் பட்டினி கிடக்கும் வழக்கமே அவர்களிடமில்லை. பின்னர் அதை பலமுறை கண்டேன், ஆனால் முதல்முறை கண்டபோது சட்டென்று நான் கண்ணீர் மல்கிவிட்டேன்.
கோரன் தனக்கான கஞ்சியை எடுத்து தொன்னையில் வைத்தான். எனக்கும் கொஞ்சம் தந்தான். நான் அதை ஒரு சரிந்த மரத்தில் அமர்ந்து குடித்தேன். அவன் அந்த அண்டாவை ஓடைக்கு கொண்டு சென்று கழுவினான்.
அவன் திரும்ப வருவதற்குள் நான்கு குரங்குகள் வந்து கஞ்சியை அள்ளி குடிக்க ஆரம்பித்தன. ஒரு குரங்கு சூடுக்கு கை பொறுக்காமல் அருகே நின்ற மரத்தில் இருந்து இலையை பறித்து அதைவைத்து சோற்றை அள்ளியது. அதன் முகபாவனை என்னை புன்னகை புரிய வைத்தது. என்ன செய்ய, எப்படியாவது சாப்பிட வேண்டியதுதான் என்னும் பாவனை.
நான் “போ போ” என விரட்டினேன். அது என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டியது. அது மனிதர்களை பயப்படுவதில்லை. அங்கே எவரும் குரங்கை வேட்டையாடுவதில்லை.
கோரன் திரும்பிவந்து சோற்றை உண்ணும் குரங்குகளைப் பார்த்துக் கொண்டு நின்றான். மண்நிறமான பற்கள் தெரிய சிரித்து என்னைப் பார்த்து “குரங்கு…சோறு தின்னுணு” என்றான்.
“ஆமா” என்றேன். “உனக்கு இல்லியே.”
“குரங்கு சோறு தின்னும்… குரங்குக்கு சோறு இஷ்டம்” என்றான் கோரன்.
குரங்குகள் வாய் நிறைய அதக்கி கையிலும் அள்ளிக்கொண்டு சென்றன. அவன் அருகே சென்று எஞ்சிய கஞ்சியை கையில் எடுத்துக்கொண்டான்.
“அய்யே, அதையா சாப்பிடுறே?” என்றேன்.
அவன் என்னை வியப்புடன் பார்த்தான். நான் அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை.
நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். கோரன் என்னிடம் மகிழ்ச்சியுடன் “பள்ளிக்கூடம் நல்லது” என்றான். “பள்ளிக்கூடம் கொள்ளாம்” என்று சொல்லி கைவிரித்து “பெரிய பள்ளிக்கூடம்” என்றான்.
நாங்கள் மேலேறி வந்தபோது ஒவ்வொரு கணமும் என இருட்டிக்கொண்டே வந்தது. கோரன் “மழை வருணு” என்றான்.
“ஆமாம், மழைக்கு முன்னாடி போயிரமுடியும்ல?” என்றேன்.
“மழை இப்ப வரும்” என்று அவன் சொன்னான்.
நான் சுற்றிலும் இருண்டு இருண்டு வந்து கரிய நிழற்குவைகளாக ஆகிவிட்டிருந்த காட்டை பார்த்துக் கொண்டு நடந்தேன். காடு முழக்கமிடத் தொடங்கியது. அதற்குமுன் நான் அந்த ஓசையை கேட்டதில்லை. மொத்தமாக ஒரே மழையோசையாகவே உணர்ந்திருந்தேன். அது காட்டிலுள்ள பல்லாயிரம் கோடி பூச்சிகளும் தவளைகளும் சேர்ந்து எழுப்பிய ஓசை.
நான் அதைக்கேட்டபடி நின்றுவிட்டேன். தொலைவில் மழை மண்ணை அறையும் ஓசை எழுந்தது. பெரிய படை ஒன்று அணுகுவதுபோல வந்தது.
நான் திரும்பி அங்கிருந்த இரட்டைப் பாறையை பார்த்து ஓடினேன்.
கோரன் எனக்குப் பின்னால் ஓடிவந்தபடி “ஏமானே, அவ்விடம் போகாதே… அவ்விடம் வேண்டா!” என்றான்.
நான் அந்தப் பாறை வெடிப்பை அடைந்து மூச்சிரைக்க நின்றேன். அங்கே மலைமாடன் சாமியின் உருளைக்கல் அமைந்திருந்த இருபாறை இடுக்குக்குப் பின்னால் இருவர் ஒண்டிக்கொள்ள குகைபோல இடமிருப்பதைக் கண்டிருந்தேன். சரியான நேரத்தில் அது நினைவுக்கும் வந்தது.
கோரன் பின்னால் வந்து நின்று “அது மலைமாடன் சாமிக்க மடை… ஏமானே அங்கே போகப்பிடாதே” என்றான்.
”என்ன?” என்றேன்.
அதற்குள் மழை பொத்திக்கொண்டு பெய்து அவனை நீர்த்திரையால் மூடியது. அதற்கு அப்பால் அவன் கைகளை ஆட்டி உடலை அலைபாயச் செய்து என்னிடம் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதை கண்டேன்.
இன்னொரு உணர்வு ஏற்பட்டு நான் திரும்பிப் பார்த்தேன். முதலில் நான் என்ன பார்த்தேன் என்றே எனக்குப் புரியவில்லை. என் கைகால்கள் நடுங்கின, என் மனம் திமிறித் துடித்தது. நான் எதை அஞ்சினேன் என்று நான் அப்போதும் பார்த்திருக்கவில்லை. சூழ்ந்த மழையின் ஓசை, நீர்த்திரை, அத்தருணத்தில் என் உள்ளம் இரண்டாகப் பிரிந்து பாதி பின்னால் கோரன் மேல் இருந்தமை எல்லாம் சேர்த்து என்னைச் சிதறடித்திருந்தன.
அதன்பின் என் தன்னுணர்வின் கூர்முனையால் நான் அதைச் சென்று தொட்டேன். மலைமாடன் கல்லுக்குப் பின்னால் இரு கூர்ந்த காதுகள் தெரிந்தன. இரு மஞ்சள் மலரிதழ்கள் போல. அந்த காட்சியின் வசீகரத்தால் மெய்மறந்தவன் போல நான் பார்த்துக் கொண்டே நின்றேன். மழையினூடாக நான் வேறெதையோ பார்க்கிறேனோ என்னும் ஐயம் அதற்கிடையே ஊடாடியது. அல்ல, அதுதான், அதுவன்றி வேறல்ல என்று இன்னொரு உள்ளம் கூவியது.
பின்னர் உடல் தாறுமாறாக உதறிக்கொள்ள நான் பாய்ந்து சரிவில் இறங்கி ஓடினேன். கோரனும் என்னுடன் ஓடினான். நான் அவன் வருகிறானா என்றுகூட பார்க்கவில்லை. மழையின் எனக்குப் பாதையும் தெரியவில்லை. காலில் இருந்த பாதையின் நினைவாலேயே ஓடினேன்.
நெடுந்தொலைவு ஓடியிருப்பேன். என் நெஞ்சுக்குள் மூச்சு கல்லென்றாகி இறுகி நின்றபோது தள்ளாடி முன்னால் சரிந்து சேற்றில் முகம்பொத்தி விழுந்தேன். புரண்டு எழுந்து அமர்ந்தபோது மழைத்தாரை என் மேல் அறைந்து அக்கணமே முழுக்க கழுவிவிட்டது.
கோரன் என்னருகே வந்து அமர்ந்தான். அவனும் மூச்சிரைத்துக் கொண்டிருந்தான்.
நான் கைவீசி “புலி…அங்கே, அது புலிக்குகை” என்றேன்.
அவன் “புலி!” என்றான்.
சட்டென்று அவனை ஓங்கி அறையவேண்டும் போலிருந்தது. காட்டிலேயே இருக்கிறார்கள். ஆனால் எங்கே புலி இருக்குமென்றுகூட தெரியாமல் இருக்கிறார்கள். மடையர்கள். ஆனால் என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.
பின்னர் மெல்ல நடந்தோம். மழையையே தோளில் சுமந்தபடி நடப்பது போலிருந்தது. குனிந்துகொண்டால் முகத்துக்கு கீழே மழையில்லாத ஒரு இடம் உருவாகிறது. அது மூச்சுவிட உகந்தது என்று தெரிந்தது.
காடு நன்றாக இருட்டியிருந்தாலும் கண் பழகியிருந்தது. நீர்த்தாரைகளின் வழியாக ஒருவகை ரகசிய ஒளி கீழே இறங்கி எல்லாவற்றையும் வடிவம் துலங்கச் செய்திருந்தது. நீர் நிரம்பிச்சென்ற தரை ஒளிகொண்டு அனைத்துக்கும் பகைப்புலமாக அமைந்து நிழலுருவை தெளிய வைத்தது.
எவ்வளவு நேரம் நடந்தோம் என்று தெரியாது. நாங்கள் பங்களாவை வந்தடைந்தபோது ஒவ்வொரு காலடியையும் உயிரின் கடைசி விசையால் தூக்கி வைப்பவர்கள் போலிருந்தோம்.
உள்ளே நுழைந்ததுமே நான் அப்படியே ஈர உடையுடன் வெறுந்தரையில் படுத்துவிட்டேன். கோரன் அப்படியே உள்ளே சென்றான். சற்று நேரத்தில் அவன் சூடான டீயுடன் வந்தான். அதுவரை நான் எனக்குள் ரத்தம் கொப்பளித்து ஓடி, மெல்ல அடங்கி, குமிழிகளாகி, அவை பறந்து அலைந்து ஒவ்வொன்றாக மறைவதை கண்களுக்குள் பார்த்துக் கொண்டிருந்தேன்.
டீயை குடிப்பதற்கு முன் எழுந்து ஆடைமாற்றிக் கொண்டேன். தலை துவட்ட வேண்டியிருக்கவில்லை, காயத் தொடங்கியிருந்தது. டீயை குடித்தபின் மேஜைக்கு அருகே நாற்காலியில் அமர்ந்தேன். வெளியே வெட்டிய மின்னலில் கண்ணாடிச் சன்னல்களின் ஒளிவடிவம் அறைக்குள் தரையில் விழுந்து துடித்துச் சென்றது. கூரை இடியோசையால் அதிர்ந்தது.
நான் அந்தப் புத்தகத்தை பார்த்தேன். அது முந்தைய நாள் இரவு நான் வைத்த இடத்திலேயே இருந்தது. சட்டென்று எனக்கு புன்னகை எழுந்தது. இருவேறு உலகங்கள். ஒன்றுடன் ஒன்று தொடர்பே அற்றவை. அந்தப்புத்தகம் உலகின் வேறேதோ மூலையை இந்த காட்டுமூலையுடன் இணைத்துக் கொண்டு அங்கிருந்தது.
நான் புத்தகத்தை எடுத்தேன். விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன். OH, Sir, Lord Orville is still himself! still what, from the moment I beheld, I believed him to be-all that is amiable in man! and your happy Evelina, restored at once to spirits and tranquillity, is no longer sunk in her own opinion, nor discontented with the world;-no longer, with dejected eyes, sees the prospect of passing her future days in sadness, doubt, and suspicion!-with revived courage she now looks forward, and expects to meet with goodness, even among mankind:-though still she feels, as strongly as ever, the folly of hoping, in any second instance, to meet with perfection.
என்ன மொழி இது என்ற சலிப்பு ஏற்பட்டது. இப்படித்தான் பேசினார்கள் என்றால் எத்தனை பொய் அது. இப்படித்தான் எண்ணங்களும் ஓடின என்றால் அந்த மொழி ஒரு பெரிய வண்ணத்த்திரை. அதைக் கிழித்துக்கொண்டு வரும் அவர்களின் கனவுகள் மிக மூர்க்கமாக இருக்கவேண்டும். அவற்றை அஞ்சி மீண்டும் மீண்டும் அவர்கள் இந்த மொழியில் அடைக்கலம் தேடியிருப்பார்கள்.
ஈவ்லினா அந்த மொழிநடையை நன்றாகக் கற்றுத் தேர்ந்திருந்தாள். அவளால் ஒரு சரிகைநூலை சுழற்றுவதுபோல அதைக் கையாள முடிந்தது. ஒரு பட்டுத்துவாலையை போல அதை பிறர்மேல் போட்டு இழுக்க முடிந்தது. ஒரு தங்கக் கம்பியைப்போல அதை எப்படிச் வளைத்து மடித்தாலும் அது ஓர் ஆபரணமாக மாறியது.
ஆங்கிலப்பேரரசின் மொழி. உலகமெங்கும் அவர்கள் அதைக் கொண்டு சென்றனர். அரசுமொழியாக, வரலாற்றின் மொழியாக, வரவேற்பறை மொழியாக அதை உருமாற்றிக் கொண்டே இருந்தனர். உலகை அந்த மொழி இணைத்தது. உலகை ஆட்சி செய்தது. அதட்டும்போதும் அவைமரியாதையை பேணியது. தூக்குமேடைக்கு அனுப்பும்போதும் பெருந்தன்மையின் தோரணை கொண்டிருந்தது. ஒவ்வொன்றையும் முடிவிலா எதிர்காலம் நோக்கிப் பேசும் பாவனை கொண்டிருந்தது.
ஆர்வில் பிரபு என் மேல் காதல் கொண்டிருக்கிறார். அதை நான் அறிவேன். ஆனால் அவர் தயங்கிக் கொண்டிருக்கிறார். தயங்கும் ஆண்கள் பெண்களுக்குப் பெரிய அறைகூவலை விடுக்கிறார்கள். அவர்கள் பெண் அம்சம் கொண்ட ஆண்கள். அந்தப் பெண் அம்சத்தால் அவர்கள் பெண்களை மேலும் அணுக்கமாகப் புரிந்து கொள்கிறார்கள். அவ்வாறு புரிந்து கொள்ளப்படுந்தோறும் பெண்கள் பதற்றமடைகிறார்கள். நிர்வாணமாக உணர்கிறார்கள்.
நிர்வாணம் என்றேன், பெண்கள் உடல்நிர்வாணத்துக்கு அஞ்சுவதில்லை. நிர்வாண உடல் தனக்கு ஒரு மறைப்பு, அதுவும் ஒருவகை ஆடை என அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அஞ்சுவது உள்ளம் நிர்வாணமடையும்போது மட்டும்தான். பெண்கள் சீற்றமடைவது, கண்ணீர்மல்கக் கூச்சலிடுவது, உச்சகட்ட வெறியுடன் எவரையாவது தாக்குவதெல்லாம் அவர்களின் உள்ளம் அப்படி நிர்வாணமாக்கப்படும்போதுதான். இந்த பெண் அம்சம் கொண்ட ஆண்களை பெண்கள் அஞ்சி விலக்குகிறார்கள். ஆனால் அந்த அச்சத்தாலேயே அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் ஒருவரை மிகுதியாக நினைத்தாலே அவர் மேல் ஈர்க்கப்படுகிறோம். எதன்பொருட்டு நினைத்தாலும். வீட்டுக்கு குழாய் சீரமைக்க வரும் நடுவயது தொழிலாளியின் மீசை ஏன் நமக்கு நினைவில் இருக்கிறது என்றால் அதனால்தான். அந்த ஈர்ப்பு மெல்ல காதலாகலாம். ஆனால் அதற்கு முன் அது அறைகூவல் விடுக்கிறது. தன் ஈர்ப்புவிசையால் கவரப்படாத ஒருவன்மேல் பெண் கொள்ளும் தீவிரம் அவளை சதிகாரியாக்குகிறது, வெட்கமற்றவளாக்குகிறது, விழைவு மிகுந்தவளாக்குகிறது.
நான் படித்துக்கொண்டே சென்றேன். எங்கிருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். அது படிப்பதல்ல, வேகமாக நினைத்துக் கொள்வது. நினைப்பின் உச்சம் என்பது அது மெய்யென்றே ஆவது. என்னிடம் ஈவ்லின் பேசிக்கொண்டிருந்தாள். விசையுடன், உணர்ச்சிக் கொந்தளிப்புடன், நையாண்டியும் சீற்றமும் அவ்வப்போது நெகிழ்வும் கண்டடைதலின் ஊக்கமுமாக.
இன்று ஆர்வில் பிரபுவுடன் காப்டன் மக்கின்சி என்பவர் வந்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் தென்பகுதியில் எங்கோ அவர் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். “அது மிகப்பிரம்மாண்டமான நிலம். பிரிட்டனைப்போல இருபது மடங்கு பெரியது… முப்பது மடங்குகூட இருக்கலாம்…” என்று அவர் சொன்னார். “அதன் வடக்கு பகுதி பனிமலைகள். தெற்கு முழுக்க கடல். அங்கே நிலத்தின் பெரும்பகுதி பிரிட்டிஷ் ஆதிக்கத்தில்தான் இருக்கிறது. சில இடங்களில் தனியாக அரசர்கள் இருக்கிறார்கள். நம் டியூக்குகளைப் போல. அவர்களும் நமக்குக் கட்டுப்பட்டவர்கள்தான்.”
“நம் டியூக்குகள் நிறைய உரிமைகள் உள்ளவர்கள்” என்று ஆர்வில் பிரபு சொன்னார்.
“ஆமாம். அங்கே அவர்களுக்கும் நாம் மதவுரிமைகள் அளிக்கிறோம். அவர்களின் நம்பிக்கைகளிலும் ஆசாரங்களிலும் தலையிடுவதில்லை” என்று காப்டன் மக்கின்ஸி சொன்னார். “ஆனால் அவர்கள் சொந்தமாக ராணுவம் வைத்துக்கொள்ள நாம் அனுமதிப்பதில்லை. அங்கே நம் ராணுவம்தான் இருக்கும். அது அவர்களின் பாதுகாவலுக்கு என்பது ஒப்பந்தம். ஆகவே அவர்கள்தான் அதற்கான செலவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.”
“அவர்களை நாம் தாக்கினால்கூட அச்செலவையும் அவர்கள்தான் ஏற்றுக்கொள்ளவேண்டுமா?”என்று நான் நையாண்டியாகக் கேட்டேன்.
“ஆமாம், அதுதானே இயல்பானது”என்று அவர் யதார்த்தமாகச் சொன்னார். ”எல்லா போர்களுக்கும் செலவை அவர்கள்தான் அளிக்கிறார்கள்.”
“அங்கே நம் படைகள் நிறைய உள்ளனவா?”என்றார் ஆர்வில் பிரபு கேட்டார்.
“மிகக்குறைவு. நாம் அங்கே படைத்தலைவர்கள் மட்டும்தான். பெரும்பாலான படைவீரர்கள் அங்குள்ள மக்கள். நம்மவர்கள் அங்கே ஆட்சியர்களாகவும் நீதிபதிகளாகவும் இருக்கிறார்கள். மதப்பணி செய்பவர்களும் நிறையபேர் உண்டு. சிலர் மலைப்பகுதிகளில் தோட்டங்கள் கூட அமைக்கிறார்கள். தோட்டத்தொழில் லாபகரமானது”
“அப்படியா? என்ன பயிரிடுகிறார்கள்?”
“தேயிலை, காபி, தென்னை எல்லாமே…” என்றார் காப்டன் மக்கின்ஸி. “நான் அடிக்கடி என் பிராந்தியத்திலுள்ள ஒரு மலைக்காட்டுக்குப் போவதுண்டு. அங்கே என் நண்பரான ஜெரால்ட் அட்கின்ஸன் ஒரு நல்ல தோட்டம் வைத்திருக்கிறார். அங்கே சென்று தங்கி சுற்றியிருக்கும் அடர்காடுகளில் வேட்டையாடுவேன்… அங்கே எனக்கு மிகப்பெரிய இன்பம் என்பது வேட்டைதான். இங்குள்ள காடுகள் போல அல்ல. அது மழைக்காடு. ஆண்டு முழுக்க மழைபெய்யும். ஆகவே பச்சை செறிந்திருக்கும். மான்கள், பன்றிகள், காட்டெருதுகள் என ஏராளமான மிருகங்கள். யானைகளும் புலிகளும் உண்டு.”
“புலிகளா? நீங்கள் புலிகளைப் பார்த்ததுண்டா?”என்று நான் கேட்டேன்.
“மிக அருகே பார்த்தேன்” என்றார் மக்கின்ஸி.
“எப்படி?”
”அட்கின்ஸனின் பங்களா ஒரு காட்டுக்குள் இருக்கிறது. வேட்டைக்கு போகும்போது இரவு தங்குவதற்காகவே அவர் அதைக் கட்டியிருந்தார். நான் அவருடன் அங்கே சென்று தங்குவேன். அன்று தனியாகவே வேட்டைக்குச் சென்றேன். பெரிதாக ஏதும் தென்படவில்லை. கடுமையான வெக்கை இருந்ததனால் தண்ணீரையும் குடித்துத் தீர்த்துவிட்டேன். திரும்பும்போது சட்டென்று மழை வந்துவிட்டது. மழை வருமென நினைக்கவே இல்லை. ஆகவே அதற்கான உடைகளை எடுத்துக் கொண்டு செல்லவில்லை. மழை கொஞ்சமேனும் ஓயாமல் அந்தக் காட்டில் வழிகண்டுபிடிக்க முடியாது . அங்குள்ள மழை என்பது நேர்ச்செங்குத்தாக ஓர் அருவி கொட்டிக்கொண்டே இருப்பதுதான்.”
“நான் அருகே இருந்த பாறை நோக்கி ஓடினேன். அது தொலைவில் இருந்து பார்த்தபோது ஒரு பாறை போலிருந்தது. பக்கத்தில் சென்றால் இரண்டுபாறைகள் ஒன்றையொன்று தாங்கியதுபோல ஒட்டி நின்றிருந்தன. அதன் நடுவே சிறிய இடைவெளி. குகைபோல. உள்ளே சென்று உட்கார்ந்துகொள்ள முடியும். நான் அதை நோக்கிச் சென்றபோது என்ன என்று தெரியாமலேயே என் உடம்பு சிலிர்த்தது. என் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அதன்பிறகுதான் நான் அந்த குகைக்குள் ஒரு சிறிய பாறையின் மறைவில் இரு காதுகளைக் கண்டேன்.”
“காதுகளா?”என்றேன்
“ஆமாம், கைவிரல்களை குவித்ததுபோல காதுகள். அல்லது பழுத்த இலைபோல. இரண்டு சிறிய காதுகள். அவை என்னை அறிந்துவிட்டிருந்தன. என் ஓசைக்கு ஏற்பத் திரும்பியிருந்தன. நான் அசைந்ததற்கு ஏற்ப அவையும் அசைந்தன. மழை பெய்ய ஆரம்பித்தது. என்னைச் சுற்றி நீர் பரவி நின்றிருந்தது. அப்பால் அந்தக் காதுகள், காதுகள் மட்டும்தான். என் கையில் துப்பாக்கி இருந்தது. ஆனால் அதை எடுத்து குறிபார்த்துச் சுடமுடியாது. அத்தனை அணுக்கம். அந்த அசைவில் அது எழுந்து பாய்ந்தால் ஒரே அடியில் என் கழுத்தை முறித்துவிடும்.”
”நான் மிகமிக மெல்ல காலை பின்னால் எடுத்து வைத்தேன். தண்ணீரில் மூழ்குவதுபோல மழைக்குள் விலகி விலகிச் சென்றேன். பின்னர் அப்பால் நின்று பார்த்தேன். புலியின் காதுகள் தெரியவில்லை. அதன் பார்வையை உணரமுடிந்தது. சட்டென்று திரும்பி ஓடத் தொடங்கினேன். வெறிகொண்டவனாக ஓடி மூச்சு தெறிக்க பங்களாவை வந்தடைந்தேன். அப்போது ஒவ்வொரு கணமும் அந்தப் புலியின் பார்வை என் மேல் இருந்தது. இப்போதும் அந்த பார்வையை அத்தனை கூர்மையாக, அணுக்கமாக உணர முடிகிறது” காப்டன் மக்கின்ஸி சொன்னார்.
நான் அந்த நூலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். அந்நூலை எழுதியது யார்? நானேதானா? அந்த விந்தை உணர்வால் நான் மெய்ப்படைந்தேன். மீண்டும் எழுத்துக்களைப் பார்த்தேன். ஆனால் அவை நீரில் மிதப்பவை போல அலைபாய்ந்தன.