அன்பின் ஜெ
நலமுடன் இருக்கிறீர்களா? நோய்கள் சூழ்ந்த கடும் நாட்களில் இருக்கிறேன்.
அந்த முகில் பற்றி இப்பொழுது தான் எழுத முடிகிறது. சினிமா படப்பிடிப்பு பிண்ணனியில் உள்ள கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பழைய திரைப்படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்.ஆகவே இக்கதையின் களமே எனக்கு அணுக்கமாகிவிட்டது.நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள்,தையல் தொழிலாளர்கள் அக்கால படப்பிடிப்பு விழாக்கள் அனைத்தையுமே நேரில் நான் கண்டேன்.
இளமையில் உண்டாகும் அந்த பித்து மனநிலை,அது காதல் கூட இல்லை அதனைக் கடந்து வந்தவர்களுக்கு அது புரியும்.எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் பிரியத்துக்குரியவருடன் செல்லும் பயணமே எனக்கு இக்கதையின் பிடித்தமான பகுதி.அந்த பயம்,சாகசம் காதல் பிரேமை உலகிலுள்ள எல்லோரையும் விட்டு இருவர் மட்டுமே வாழும் அக உலகு ,அது தரும் உளநிலை அந்த நெருக்கம் அவையெல்லாம் வாய்க்கப் பெற்றவர்கள் பேறு கொண்டோரே.அப்படியான சில நாட்கள் என் பயணங்களிலும் இருந்ததுண்டு.அந்நினைவுகள் நான் அழியும் போது மட்டுமே மறையும்.அந்த உளநிலையை அளித்தது இந்நாவல்.மிக அற்புதமான படைப்பு.
நெருங்கிய உறவுகளின் இழப்பு, வீட்டுத்தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இப்போது தான் இதை வாசித்து எழுதுகிறேன்.இந்த பெருந்தொற்றில் எனக்கு பிடித்த வார்த்தை தனிமைப்படுத்துதல் என்பது தான்.இலக்கியத்துடன் தொடர்பு கொண்ட எழுத்தாளர் வாசகர் அனைவருமே உள்ளத்தில் எப்பொழுதும் ஒரு தனிமை கொண்டவர் தானே.இப்பொழுது அரசும் சமூகமும் உடல் அளவில் தனிமை படுத்துகிறது.
அன்புடன்
மோனிகா மாறன்.
அன்புள்ள ஜெ
அந்த முகில் இந்த முகில் நாவல் இந்த வீடடங்கு வாழ்க்கையில் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. இப்போது ஒன்று தோன்றுகிறது, வாழ்க்கையில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்பது ‘பிசியாக’ இருப்பதுதான். ஓடிக்கொண்டே இருக்கிறோம். எதையும் நினைத்துப்பார்க்கவோ கனவுகாணவோ பொழுதில்லை. அப்படி இருப்பது ஒரு பெருமை என்றுவேறு நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால் நாம் அடைந்த அனுபவங்களும் அதிலிருந்து கிடைக்கும் நினைவுகளும் நமக்கு பெரிய சொத்துக்கள். நஸ்டால்ஜியா என்று சொல்லலாம். ஆனால் நம் அனுபவங்களில் நாம் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பதில்லை. நமக்கு அதில் ஒரு தெரிவு இருக்கிறது. அந்த தெரிவு நம்முடைய சொந்த ரசனைக்கும் இயல்புக்கும் பொருந்திவருவது. ஆகவேதான் அவை ஞாபகத்திலிருக்கின்றன.
அவற்றை மீட்டிக்கொண்டிருப்பது ஓர் இன்பம். அது நமக்கு ஒரு முழு வாழ்க்கையிலும் கிடைத்த செல்வங்களை எண்ணிப் பார்ப்பதுதான். அதில்தான் நமக்கான ஞானமும் உள்ளது. அப்படி எண்ணிப்பார்க்கவைத்த நாவல் அந்த முகில் இந்த முகில்.
அதில் துன்பம் இருக்கலாம். கசப்பு இருக்கலாம். ஆனால் அது வாழ்க்கை. ஆகவே இனிமையானது. நாவல் முழுக்க அந்தக் கனவின் இனிப்பு இருந்துகொண்டே இருந்தது. அந்த நாவலை கொஞ்சம் கொஞ்சமாகவே வாசித்தேன்
அதனுடன் பழைய தமிழ் தெலுங்கு பாடல்களையும் கேட்டேன். அவற்றிலிருந்த இனிமையையும் துக்கத்தையும் ரசித்தேன். அடைபட்டுக்கிடந்த நான் ரொம்பதூரத்துக்குப் போய்விட்டேன். நன்றி
எச்.ஆர்.சாரதாதேவி