வெண்முரசு ஆவணப்படம் – கடிதம்

வெண்முரசு ஆவணப்படம்- கடிதம்

வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு

அன்புள்ள ஜெ,

வெண்முரசு ஆவணப்படத் திரையிடலுக்காக ராலே, வடகரோலினா பகுதியில் இருப்பதிலேயே சிறந்த இருக்கைகள், அகண்ட திரை, ஒளி, ஒலி துல்லிய வசதிகள் கொண்ட திரையரங்கில் ஒன்றைத் தேர்வு செய்தோம். ஐந்து பேர்கொண்ட குழு நாங்கள் ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து செய்ய ஆரம்பித்தோம். திரைப்பட விநியோகஸ்தரைத் தொடர்பு கொள்ள, டிக்கெட், போஸ்டர்  வடிவமைத்து பிரிண்ட் செய்வதற்கு சுப்பிரமணி என்ற ராஜனுக்கும், எனக்கும் பொது நண்பர் ஒருவர் உதவி செய்தார். டிக்கெட் பதிவுக்கு, பணம் வாங்குவதற்கு , டிக்கெட் வினியோக வேலையை நான் பார்த்துக்கொண்டேன். தொழில்நுட்ப பிரச்சினைகளை சரிசெய்வதற்காக விவேக்கும், நவீனும் உதவி செய்தனர். நாங்கள் நான்கு  பெரும் சேர்ந்து ஒரு வாரம் ராஜனிடம் இணைந்து வேலை செய்தோம்.

இந்த ஆவணப்படத் திரையிடல் பற்றிய முதல் செய்தியை எழுதி நண்பர்கள் இருக்கும் வாட்சப் குழுவிற்கும், தனியாகவும் பகிரத்தொடங்கினேன். நண்பர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. நான் எழுதிய அந்த செய்தி பகிர்வு இங்குள்ள மக்களிடம் நல்ல ஆர்வத்தைத் தூண்டுவதற்கு உதவியாக இருந்தது என்று ராஜன் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டார் நாங்கள் இருந்த சிறு குழுவில்.

வெண்முரசு ஆவணப்படத்துக்கான டிக்கெட் வாங்குவதற்கு உன் மொபைல் எண்ணையும், நண்பர் சுப்பிரமணி எண்ணையும் கொடுப்பதால் உங்கள் இருவருக்கும் ஏராளமான தொலைபேசி அழைப்புகளும், தனிச் செய்திகளும் வரலாமென ராஜன் பயமுறுத்தினார். பெருஞ் சிரமம் இல்லாமல் இந்த வேலையை செய்து முடிப்பது எப்படி என்றுதான் யோசித்தேன். தனியாக இதற்கென வாட்சப் குருப் ஆரம்பித்து, ஏற்கனவே விருப்பம் தெரிவித்த நண்பர்களை இணைத்து, இங்கு இருக்கும் மற்ற இரு பெரும் குழுவுக்கு விருப்பம் இருக்கும் நண்பர்களை இணையச் சொல்லி லிங்க் அனுப்பினேன். அனுப்பிய ஓரிரு நாட்களில் நிறைய நண்பர்கள் இணைந்து விட்டனர், ராஜனிடம் நேரிடையாக தொடர்பு கொண்டவர்களைத் தவிர்த்து.

Google sheet ஒன்றைத் தயார் செய்து நண்பர்களை நேரிடையாக அவர்கள் தகவல்களை பதிவுச் செய்ய சொன்னோம். எல்லா தகவல்களும் அந்த தனி குழுவில் பகிரப்பட்டது. ஒரு சிலர் மட்டும் தனியாக தொடர்பு கொண்டனர். அதிக சிரமம் இல்லாமல் நிகழ்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே எல்லா முக்கிய வேலைகளையும் முடித்துவிட்டோம்.

நண்பர்களை ஒரு பொது இடத்துக்கு வரச் சொல்லி டிக்கெட்டுகளை கொடுத்துவிட்டோம். நேரில் வர முடியாத சில  நண்பர்களுக்கும் ஒரு ஐஸ்கிரீம் கடையில் அவர்களே நேரிடையாக சென்று வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டோம். அவர்களுக்கு தனியாகத் தகவல்களும் அனுப்பிவிட்டேன். ராஜனிடம் நேரிடையாக டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்வதற்காக மீதம் உள்ள டிக்கெட்டுகளை அவரிடம் கொடுத்து விட்டோம் .

இங்கு மே 7 முதல் தான் பொதுமக்களுக்காக திரையரங்குகள் திறக்கப்பட ஆரம்பித்தன. மே 8 மதியம் 2.45 சிறப்பு காட்சியாக வெண்முரச ஆவணப்படம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தோம்.

நாங்கள் தீர்மானித்திருந்த 90 டிக்கெட்டுகளையும் மே 5 ஆம் தேதியே  நண்பர்களிடம் கொடுக்க முடிந்தது. கடைசி நிமிடம் வரை எந்த வேலையையும் தள்ளி வைக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தோம். எங்கள் அனைவருக்கும் பின்னால் எங்களை இயக்குவித்த மந்திர விசை ஜெ என்னும் ஆசானின்றி வேறு யாராக இருக்க முடியும்.

நேற்று மதியம் 2:30 மணியிலிருந்து மக்கள் வர ஆரம்பித்தனர். நேற்று நல்ல கூட்டம் ஆவணப் படம் பார்ப்பதற்க்கு. சரியாக 3 மணி அளவில் ராஜனின் உரையோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. வெண்முரசு ஆவணப்படத்தில் பங்கேற்று உதவிய உள்ளூர் நண்பர்கள் புகைப்படக் கலைஞர் பஷீர், வீணை இசைக்கலைஞர் கல்யாண் சுந்தர், ஆங்கிலத் தலைப்பு மற்றும் மொழியாக்க உதவி செய்த ரெமிதா சதீஷ் அவர்களுக்கும் ராஜன் மலர்க்கொத்து கொடுத்த கௌரவித்தார்.

1 மணி நேரம் 35 நிமிடம் நண்பர்கள் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். அவ்வவ்பொழுது நண்பர்களின் உற்சாகமான கரகோஷங்களை  கேட்க சந்தோசமாக இருந்தது. கலை, இசை, இலக்கிய ஆளுமைகள், விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் உரைகள் நம் எதிரில் உட்கார்ந்து நம்மோடு உரையாடுவது போல மிக இயல்பாக இருந்தது. உரையாடல்களுக்குப் பின்னணியில் மணி ஒலிப்பது போல மற்ற இயற்கை  இசை சத்தங்களை பல இடங்களில் கேட்க முடிந்தது. ஆவணப்படத்தில் வளைகுடா நண்பர், வட மாநில பணியில் இருக்கும் அரசு உயர் அதிகாரி நண்பர்களின் உரைக்குப் பின்னணியில்  அந்த நிலத்து இசையை ராஜன் தவழ விட்டிருப்பது மிகப் பொருத்தமாக  இருந்தது.

பல கலை, இசை, இலக்கிய ஆளுமைகள், விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் உரையை நீண்ட உரையாக இல்லாமல் சின்ன, சின்ன உரையாக கத்தரித்து, கோர்த்து பார்ப்பதற்கும், கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்குமாறு அருமையான முறையில் எடிட்டிங் செய்யப்பட்டு இருந்தது. திரையில் உங்களைப் பார்க்கும்போது உங்கள் மேல்  நண்பர்கள் வைத்திருக்கும் நேசமும், மரியாதையும் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

சவாலான பாடல்களுக்கும் சிறந்த மெட்டெடுத்து இசையமைப்பதில் ராஜன் வல்லவர். கமல் சார், ஸ்ரீராம் பார்த்த சாரதி சார், சைந்தவி மேடம் குரல்களில் தேனாக ஒலிக்கிறது பாடல். சிதார் இசைக்கருவியில் ரிஷாப் ஷர்மாவின் விரல்கள் நடனமாடுகின்றன என்றுதான் சொல்லுவேன். பரத்வாஜின் புல்லாங்குழல் இசையும் அற்புதம்.

வெண்முரசு தீம் பிரமாண்ட இசைக்கு உலகத்தரத்தில் எந்த இசைக்கலைஞர்களை, இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது என்ற சாமர்த்தியம் தெரிந்தவர் ராஜன். பிரமாதாக வந்திருக்கிறது. வெண்முரசு ஆவணப்படத்தை அடுத்தடுத்து திரையரங்கில் பார்க்க விரும்பும் நண்பர்களின் ஆர்வத்தை நான் விரிவாக எழுதி குறைக்க விரும்பவில்லை. அகண்ட திரையில் ஒளி, ஒலி துல்லியத்தில் படத்தை பார்ப்பது அபாரமான அனுபவமாக இருந்தது எங்களுக்கு.

திரைப்படம் முடிந்தவுடன் ராஜனுக்கு எல்லோரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி  மரியாதை செய்தார்கள். திரைப்படம் முடிந்து நெடுநேரம் ஆகியும் திரையரங்குக்கு வெளியில் நண்பர்கள் கலைந்து செல்லாமல் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமெரிக்கா நண்பர்களிடம் எங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டோம். சௌந்தர் அண்ணா போனில் என்னை அழைத்து ஆவணப்படம் பார்த்த அனுபவத்தை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார். முதன் முதலாக திரையரங்கில் பார்த்த சந்தோசம், பெருமை ராலே வட கரோலினா நண்பர்களுக்கு.

ஒரு தமிழ் நாவலை, எழுத்தாளளரை கௌரவிக்கும் விதத்தில் உலகத் தரத்தில் வெளியாகியுள்ள வெண்முரசு ஆவணப்படம் கண்டிப்பாக ஒரு சாதனை முயற்சிதான். பெருஞ்செயல் ஆற்றி முடித்த நிம்மதி, சந்தோசம் எங்களுக்கு.

ஆஸ்டின் சௌந்தர் அண்ணா அமெரிக்காவில் இருக்கும் மற்றத் திரையரங்கில் திரையிடத் தயாராகி வருவதாக சொன்னார்.

வெண்முரசு ஆவணப்படத்தை சாத்தியப்படுத்திய நண்பர்கள் ஆஸ்டின் சௌந்தர், ராஜன் சோமசுந்தரம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றி

“வேறெப்படி நாம் திருப்பியளிக்க முடியும்? தனக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு கைப்பிடி அள்ளி அன்னைக்கு திருப்பி ஊட்டமுயலும் மைந்தர் அல்லவா நாம்? அதைவிட இனிய உணவுண்டா அன்னைக்கு? (இமைக்கணம் பகுதி-42)”

முத்து காளிமுத்து

பிகு

வேறு ஊர்களில் வெண்முரசு ஆவணப்படம் திரையிடுவதற்காக அணுகவும்: [email protected]

வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு

முந்தைய கட்டுரைகுருவும் குறும்பும்
அடுத்த கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 15