விஷ்ணுபுரம் பற்றி சரவணன் சந்திரன்

அன்புள்ள சரவணன் அண்ணனுக்கு,

வணக்கம், நான் தங்கள் வாசகர்களில் ஒருவன். சாரு மூலமாகவே தாங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். தங்களின் அதிவேகமான மொழி நடையின் ரசிகன் நான்.

ஜெயமோகனின் எழுத்துக்களுக்கு தீரா காதலன். அவரது காடு என்னால் மறக்கவே முடியாத நாவல். அவரது விஷ்ணுபுரம் நாவலை 6 ஆண்டுகளுக்கு முன் வாங்கி பல முறை முயன்றும் என்னால் அதை முழுமையாக வாசிக்க முடியவில்லை. கடந்த மாதம் முழுவதும் முயன்று நாவலை வாசித்தும் முடித்தேன். ஆனால் என்னால், அதன் எந்த பகுதிக்கும் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

உங்களுடைய பல பேட்டிகளில் தங்களுக்கு மிகவும் பிடித்த நவலாக விஷ்ணுபுரத்தை குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் கேட்கிறேன் விஷ்ணுபுரத்தைப் புரிந்து கொள்ள எனக்கு எதுவும் வழி காட்ட முடியுமா?

நன்றி.

சிபி ராமமூர்த்தி

அன்புள்ள சிபி ராமமூர்த்தி,

பல உள்ளடுக்குகள் கொண்ட மாபெரும் கனவு அது. கனவைப் பின் தொடர கூர்மை அவசியம். அப்படியிருந்தும்கூட எல்லா கனவுகளையும் முழுமையாக விரட்டிப் பிடித்துவிடவும் முடியாது. முதலில் அந்நாவல் குறித்த முன்முடிவுகளை விட்டு விடுங்கள். அந்த நாவலின் வரிகளினூடாக உங்கள் கற்பனையில் அந்நகரைக் காட்சிப்படுத்துங்கள். அது என்றேனும் ஒருநாள் சட்டென உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும்.

மேற்கண்டவாறு எழுதி விட்டு, அதை விரித்தெடுக்காமல் நிறுத்தி விட்டு, ஒரு சிறுநடை போனேன். நேரடியான எளிமையான, அதே சமயம் கூர்மையான கேள்வி உங்களுடையது. விஷ்ணுபுரத்தினுள் நுழைவது எப்படி? அதற்குரிய சாவி உங்களிடம் இருக்கிறதா? எளிமையாகவே உங்களிடம் விளக்க முயல்கிறேன்.

பாசாங்குகள் இல்லாமல் நேர்மையாக உங்களிடம் அகத்தைத் திறந்துவைக்கவும் முயல்கிறேன். விளக்கி விட முடியுமா என்கிற அச்சமும் எழுகிறது உடனடியாக. அந்நாவல் கல்லூரியில் முதலாண்டு படிக்கையில் என்னிடம் வந்து சேர்ந்தது. எதிலும் மனம் நிலைகொள்ளாமல் அலையடித்துக் கொண்டிருந்த காலம். இப்போது மத்திய வயதில் உங்களுக்கிருப்பதைப் போல. இப்போது அந்தக் காலத்தை மறுபடியும் தொகுத்துக் கொள்கிறேன். அதற்கு முன்னரும் எனக்கு வாசிப்பு பழக்கம் இருந்தது.

ஆனால் நேரிடையான கதைகளை வாசித்து, அதற்குத் தோதாய் ஒரு பழக்கம் ஒட்டிக் கொண்டிருந்தது. எந்த இடையூறுகளும் இல்லாமல் திறந்த வெளியில் சைக்கிள் ஓட்டுகிற மாதிரி எளிமையான வாசிப்பும் அது கொடுத்த சுகமும். திடீரென இப்படியான ஒருநாவல். வெங்காயத்தை உரிப்பதைப் போல நிறைய உள்ளடுக்குகள் கொண்ட நாவல். அதற்கு முன்னர் அதுபோல வேறெதையும் வாசித்ததும் இல்லை. அதற்கான வாசிப்பு பயிற்சிகளும் இல்லை. அது நிறையத் தத்துவங்களை அலசுகிறது என ஒரு பேச்சு. எதிர்ப்புகளும் சரிக்குச் சமமாய். பிரமைகளை நெஞ்சிலேந்தி முதன் முறையாய் அதைப் படித்த போது, என்னால் நுழையவே முடியவில்லை. அத்தத்துவங்களை முழுமையாய் புரிந்து கொள்ள விழைந்து, புரிந்து கொண்டதாய் பாவனை செய்து ஒன்றுமே புரியாமல் திகைத்து ஒரு குழந்தையைப் போல நின்று விட்டேன். ஆனால் அந்நாவலைப் படித்து முடித்து விட்டதாய் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அலைந்தேன்.

ஆனால் ஒரு புகைமூட்டம் போல அந்நகரமும் அதை மறித்துக் குறுக்கே படுத்திருக்கும் ஒரு சிலையும் என்னையறியாமல் என்னைத் தொடர்ந்து வந்தது. ஐந்து முதலைகளின் கதை நாவலில் என்னையறியாமல், கடலட்டை கடலுக்குள் விஷ்ணு சிலையைப் போல படுத்துப் புரண்டு கொண்டிருந்தது என எழுதும் வகையில்.

தொழில் நிமித்தமாய் திமோர் நாட்டில் இருந்த போது, மலையுச்சி குடிசை ஒன்றினுள் வைத்து, திரும்பவும் அந்நாவலை படிக்கக் கையிலெடுத்தேன். அப்போது இலக்கிய உலகில் இருந்து முற்றிலும் என்னைத் துண்டித்துக் கொண்டிருந்தேன். திரும்ப எடுத்த போது பிரமைகள் எதுவும் இல்லாதவனாக அதில் நுழைந்தேன். அறியாத ஒன்றின் மீது பிரமை கொள்ளாதே என அத்தாரோவில் எழுதிய ஒரு வரியைப் போல. அதேசமயம் முதுகிற்குப் பின்னால் எந்தக் கண்களும் உற்றுப் பார்க்கிற குதுகுறுப்பு இல்லாமல், அந்நகரத்தைச் சுற்றி உலாவ, உள்ளார்ந்த ஆவல் இருந்தது. மனவிழைவு எச்செயலுக்கும் முக்கியமானது.

எந்தவித முன்முடிவுகளும் இல்லாமல், அலையடித்தல்களும் இல்லாமல் உள்நுழைந்த போது அந்நகரத்தின் வாயில் தட்டுப்பட்டது. நெடிந்துயர்ந்திருந்த கோபுரம் தட்டுப்பட்டது. வெளியேற வாய்ப்புகளை அதில் உலவும் மனிதர்களுக்கு அளிக்காத நகரம் அது. திரும்ப ஒரு போதும் கோபுர தரிசனம் வாய்க்காது. ஒரு மாபெரும் நகரத்தில் பல்வேறு மனிதர்கள் உள்நுழைகிறார்கள்.

பிங்கலன், சங்கர்ஷணன் என என்னோடு நுழைந்தவர்களை அடியொற்றி நானும் நுழைந்தேன். அந்த நகரத்தில் தன்னை நிறுவ எல்லோருமே துடிக்கிறார்கள். காபலிகர்கள்கூட அந்நகரத்தை கைப்பற்றி அழிக்க சித்தம் கொண்டிருக்கிறார்கள். தத்துவங்கள் கொண்டு அந்நகர மையத்தைக் கைப்பற்ற மனிதர்கள் காலம்தோறும் இறந்து பிறந்து வந்தபடியே இருக்கிறார்கள். இதனையெல்லாம் உள்வாங்கியபடி, அந்நகரம் அதன் தன்னியல்பில் சுழன்று கொண்டிருக்கிறது.

அந்நகரம் ஒரு அதிகார மையத்தால் இணைத்துக் கட்டப்பட்டிருக்கிறது என்றாலும் அதனடியில் சுருண்டு படுத்திருக்கிறது காலம் என்னும் மாபெரும் சிலை. அது ஒவ்வொரு யுகத்திற்கும் சற்றே திரும்பிப் படுக்கிறது. பிங்கலன் ஒரு காலமாகி விடுவதைப் போல, பீதாம்பர மாமா கூட ஒரு காலமாகி விடுகிறார். நானும் அதில் ஒரு காலம். நீங்களுமே நுழைந்தால் அப்படி ஒருகாலமாக ஆகி விடுவீர்கள்.

கோபுர தரிசனம் என்பது கோடி புண்ணியம் என்பார்கள். கோபுரமும் மண்ணில் அமிழ்கிற, ஊழி பெருவெள்ளம் சூழ்கிற காலமும் உண்டு அதில். மீண்டும் மண்ணுக்கடியில் புதைந்து கொள்ளும் அக்காலம். அதை ஒருநாள் நீங்களோ நானோ வேறொருவரோ தோண்டி எடுப்போம். அது தன்னியல்புப்படி சுற்றி மீண்டும் நிர்மூலமாகி மறுபடி முகிழ்த்தெழும் ஒரு தாமரை வடிவச் சக்கரம் போல.

அந்நகரத்திற்குள் எந்த பிரமைகளும் இல்லாமல் உள்நுழையுங்கள். அங்கே உங்களுக்குத் தோதானவர்கள் தட்டுப்படுவார்கள். எனக்குப் பிங்கலனும் சங்கர்ஷனும் என்பதைப் போல. எண்ணற்றவர்கள் உலவும் நகரமே அது. அவர்களைப் பின் தொடருங்கள். அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள். அது உங்களை வழிநடத்தும். ஒட்டுமொத்தமாய் எல்லோருக்குமானதான நாம் வாழும் இப்பூமிதான் புரண்டு படுக்கும் அச்சிலை என இப்போது உணர்கிறேன். அது காலத்தில், வெவ்வேறு முகங்களைப் பூணுகிறது.

சிலையின் முகம் தரையில் விழுந்து கிடக்கும் ரோகி ஒருத்தனின் சிரிப்பில் உள்ளதாக உணர்ந்தேன் நான். எல்லாம் அறிந்தவன் அவனே என்னளவில். உங்களுக்கு எப்படியோ? எனக்குத் தெரியவில்லை. கோபுர தரிசனமும் கிட்டலாம் உங்களுக்கு.

அன்புடன்

சரவணன் சந்திரன்.

முந்தைய கட்டுரைஓர் ஆவேசக்குரல்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 4