நான் விடியற்காலையில் படுத்து கொஞ்சம் வெயில் வந்தபிறகுதான் கண்விழித்தேன். எப்போது படுத்தேன் என்று நினைவிருக்கவில்லை. ஆகவே காலையில் விழிப்பதே அப்போதுதான் என என் மனம் எண்ணிக்கொண்டது. உடலில் கொஞ்சம் தூக்கக்குறைவின் அசதிபோல் இருந்தது. கைகால்களை நீட்டிக்கொண்டு முதுகை நெளித்தேன். குளிரில் போர்வைக்குள் தூங்குவதன் பிரச்சினைகளிலொன்று நாம் உடலை இரவெல்லாம் குறுக்கி வைத்திருப்போம் என்பது. உடலை நெளித்தால் கிடைக்கும் இன்பத்திற்காகவே அப்படித் தூங்கலாம்.
சட்டென்று இரவில் நிகழ்ந்தவை நினைவுக்கு வர திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். போர்வையை தள்ளிவிட்டுக்கொண்டு ஓடிச்சென்று அந்தப்புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அது அப்படியே நான் வைத்த இடத்தில் இருந்தது. இரவு நான் வாசித்துவிட்டு வைத்த பகுதியில் தீக்குச்சி அடையாளம் இருந்தது. அதைப் புரட்டிப் பார்த்தேன். The die is thrown, and I attend the event in trembling! ஈவ்லினா ரெவெரெண்ட் வில்லர்ஸுக்கு எழுதிய கடிதம் தொடங்கியது. அந்த கடிதத்திற்கு முந்தைய கடிதத்தில் ரெவெரெண்ட் வில்லர்ஸ் இப்படி எழுதி முடித்திருந்தார். you shall leave it for ever; and once again restored to my protection, secure your own tranquillity, and make, as you have hitherto done, all the happiness of my life. அதேதான் அங்கேதான் முடித்தேன்.
நான் புத்தகத்தை புரட்டிக்கொண்டே இருந்தேன். நேற்று வாசித்தவற்றை மீண்டும் வாசித்தேன். என் உள்ளம் எதை தேடியது? நான் வாசித்தவை அங்கிருக்கவேண்டும் என்றா, இருக்கலாகாது என்றா? இருந்தால் நான் இந்த பதற்றத்தில் இருந்து விடுபடுவேன். இல்லை என்றால் என்னால் புரிந்துகொள்ள முடியாத எதையோ எதிர்கொள்கிறேன். உண்மையைச் சொன்னால் நான் அங்கே அந்த வரிகள் இருக்கலாகாது என்றே விரும்பினேன்.
புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து சென்று முற்றத்தில் நின்றேன். வெயில் ஒளியுடன் விழுந்துகொண்டிருந்தது. முந்தைய நாள் மழையை முற்றத்தின் மென்மணல் வரிகளிலிருந்து மட்டுமே உணரமுடியும். இன்னும் சற்றுநேரத்தில் தோலை எரியச்செய்யும் வெயில் விழத்தொடங்கும். உடல் வியர்த்து வழியும். நீராவியால் மூச்சுத்திணறும். இந்தக் காட்டில் பகலுக்கும் இரவுக்கும் தொடர்பே கிடையாது. பகலில் இங்கே இரவில் நிகழ்ந்தவற்றை தொடர்பு படுத்திப்பார்க்கவே முடியாது.
நான் கேளாமலேயே கோரன் டீ கொண்டுவந்து தந்தான். அவனிடம் “இங்கே அரிசி எங்கே வாங்குறது?” என்றேன்
“அரி, கோதையாறு கடையில்…” என்றான்.
“இப்போ போனா வாங்க முடியுமா?”
“இப்போ இல்ல… நாளை.”
நான் யோசித்துவிட்டு “சரி, இன்னைக்கு ஸ்கூல் வேண்டாம். கோதையாறுக்கு போவோம்” என்றேன்.
“ஓ, கோதையாறு… அவ்விடம் கரண்டு உண்டு…” என்று அவன் சொன்னான். கைகளை விரித்து உத்வேகத்துடன் “பெரிய கரண்டு… புலியை காட்டிலும் பெரிய கரண்டு” என்றான்.
நானும் அவனும் கோதையாறுக்குச் சென்றோம். அவன் செல்லும் வழியில் புலியையும் கோதையாற்றின் மின்சாரத்தையும் பற்றி மாற்றி மாற்றி ஏதோ சொல்லிக்கொண்டே வந்தான். அவன் என்ன சொல்கிறான் என்று நான் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. இயல்பாகவே அச்சொற்கள் என்னுள் பொருள் கொள்ள ஆரம்பித்தபோது வியப்படைந்தேன்.
அவன் காட்டின் தலைமையை புலியிடமிருந்து மின்சாரம் எடுத்துக் கொண்டதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். மின்சாரம் கொடுமையானது, ஒரே அடியில் ஆளைக் கொன்றுவிடும். சண்முகம், மாதேவன் பிள்ளை, அம்புரோஸ் ஆகியோரை அதுதான் கொன்றது. நாகராஜன், வறுவேல், காமராஜ் ஆகியோருக்கு நல்ல அடி விழுந்தது. அவர்களின் கைகால்கள் உடைந்தன. புலி அப்படி அல்ல. நீண்ட நாட்களுக்கு முன்பு தூப்பன் என்பவனை அது கொன்றிருக்கிறது. ஏனென்றால் தூப்பன் கெட்டவன், அவன் கடுத்தா சாமிக்கு பலி கொடுக்கவில்லை.
மின்சாரத்தை புலி அஞ்சுகிறது. புலி வரும் வழிகளில் மின்சாரக் கம்பிகளால் கோடு போட்டு வைத்திருக்கிறார்கள். மின்சாரம் புலியை ஒருமுறை அடித்து தூக்கி எறிந்துவிட்டது. அதன்பின் கோதையாறுக்கு புலி வருவதில்லை. அங்கே மின்சாரம்தான் அரசன். மின்சாரத்தில் பூ பூக்கும். மரங்களை நட்டு பூ மலரச் செய்வார்கள். பெரிய சிவப்புப் பூக்கள். இரவில் அந்தப்பூக்கள் வெளிச்சம் வீசும்.
தீ போல அவை எரியும். ஆனால் பற்றிக்கொள்வதில்லை. எரிவதுடன் சரி. புகையும் வராது. ஏனென்றால் அது தீயல்ல, ஒரு பூதான். பகலில் அந்தப் பூ வாடிவிடும். அந்தப் பூவில் தேனெடுக்க சிறிய பூச்சிகள் முட்டிமுட்டி அதைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும். ஆனால் அந்தப் பூவைக் கண்டால் புலி அஞ்சிவிடும். அந்தப் பகுதிக்கே அது வராது. நம் பங்களாவில் மின்சாரத்தை கொண்டுவந்து பூ மலரச்செய்துவிட்டால் போதும், புலியை நாம் அஞ்சவேண்டியதில்லை.
ஆனால் மின்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்களை புலி பார்த்துக் கொண்டிருக்கும். அதற்கு நினைவிருக்கும். காட்டில் தனியாகப் போனால் பின்னால் வந்து கவ்வி கொண்டு சென்றுவிடும். புலி மனிதனைக் கொல்வதுடன் சரி, தின்பதில்லை. ஏனென்றால் மனிதனின் மேல் மலைவாதைகள் கூடியிருக்கின்றன. அவை இருட்டானவை. மனிதனின் வாய்க்குள் பார்த்தால் இருட்டு தெரியும். அந்த இருட்டை புலி தின்பதில்லை.
அவனுடைய உலகம் எனக்கு வியப்பாக இருந்தது. அவன் அவ்வளவு பேசுவான் என்பதும் கொஞ்சம் திகைப்பை அளித்தது, பேச ஆரம்பித்தால் பேச்சே அவனைக் கொண்டு சென்றது.
“உன் குடும்பம் எங்கே?” என்று கேட்டேன். “உனக்கு மனைவி இல்லையா?”
“வீட்டாள் இல்லை. வீட்டாள் பாம்புகடிச்சு செத்துபோய்” என்று அவன் பற்களைக் காட்டிச் சிரித்தபடிச் சொன்னாள். “குஞ்சாள் செத்து போயி.”
“ஓ” என்றேன். “குழந்தைகள் இல்லியா?”
“இல்லை” என்று அவன் சொன்னான். “நான் கோதையாறு போயி… கரண்டு கண்டேன்.”
அவன் தன்னை மின்சாரத்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டவன். ஆகவே புலியின் குடிமக்களான காணிகளுடன் அவ்வளவு நெருக்கமான உறவு இல்லை. அவர்களுக்கும் கோதையாறுக்கும் நடுவே அவன்தான் தொடர்பு. ஆனால் அவர்களின் ஏறுமாடங்களில் அவன் தங்குவதில்லை.
“நான் சோறு தின்னும். சோறு!” என்று அவன் கையை விரித்து காட்டினான். “கோதையாறிலே நெறைய சோறு!”
வயிறுமுட்ட சோறு கொடுத்து அவனை கோதையாற்றின் பிரஜையாக ஆக்கிவிட்டார்கள் என்று தெரிந்தது.
நாங்கள் கோதையாற்றை அடைந்தபோது வெயில் உடலையே மெழுகாக உருகிவழியச் செய்துவிடும் என்பதுபோல அடித்தது. என் வீட்டில் நெல்லவிக்கும் அண்டாவுக்கு அருகில் நின்று கிளறும்போதுதான் எனக்கு அப்படி வியர்க்கும்.
கோதையாற்றில் ஒரு கடைதான் இருந்தது. கப்ரியேல் நாடாரின் கடையில் மளிகைச் சாமான்களும் மருந்துகளும் டார்ச்லைட்டுக்கு பேட்டரிகளும் பிளாஸ்டிக் செருப்புகளும் துண்டுகள் வேட்டிகளும் எல்லாமே கிடைத்தன. சைக்கிள் டயரும் டியூபும் கூட கிடைத்தன.
நான் நாடாரிடம் பள்ளிக்கூடத்திற்கு தேவையான அரிசியும் பருப்பும் மளிகையும் கொண்டுவந்து பங்களாவிலேயே தரமுடியுமா என்று கேட்டேன்.
“என்னண்ணு சொல்லுதிய? அவனுகளுக்கு சோறு மட்டும் போரும். நம்ம கறியும் கூட்டுமெல்லாம் அவனுகளுக்கு பிடிக்காது. இவன் திம்பான், இவன் காட்டுநாய் பளகி நாட்டுநாய் ஆனதாக்கும். அவனுகளுக்கு ஒண்ணும் வயத்துக்குப் பிடிக்காது. நெறைய மலிவான அரிசிய வாங்கிட்டு போங்க. நல்லா சோறு பொங்கி வயிறு முட்ட குடுங்க…”
“பத்து பிள்ளைக தானே?”
கப்ரியேல் நாடார் பெரிய பற்களைக் காட்டி சிரித்து “அது பள்ளிக்கூடத்துக்கு. இவனுக அத்தனபேரும் சோத்துக்கு வருவானுக“ என்றார். ”ஆனா தினமும் வரமாட்டானுக… ஏன்னா இவனுகளுக்கு அரிசிச்சோறு வயித்துக்கு அவ்ளவு பிடிக்காது. இவனுகளுக்கு இறைச்சிதான் முக்கியமான சாப்பாடு… முயலோ பெருச்சாளியோ மானோ கொன்னு இறைச்சியை சுட்டு வயிறுநெறைய ஒருநேரம் தின்னுட்டான்னா அப்டியே இருந்திருவானுக.”
அவரே அரிசியை கழுதைகள்மேல் ஏற்றி பள்ளிக்கூடத்துக்கே கொண்டுவந்து தருவதாகச் சொன்னார். “பள்ளிக்கூடத்திலே அரிசியை வைக்க இடமில்லை” என்று நான் சொன்னேன்.
”பிளாஸ்டிக் காயிதத்திலே போட்டு நாலடி ஆழத்திலே புதைச்சு வையுங்க… அதெல்லாம் இவனுகளுக்கு தெரியும். அன்னன்னைக்கு தேவையானதை எடுத்துக்கிடுங்க…” என்றார் கப்ரியேல் நாடார். “அரிசி வேணும்னா முன்பணம் குடுக்கணும். நான் போனிலே கூப்பிட்டுச் சொன்னா கொலசேகரத்திலே இருந்து அரிசி லாரியிலே போட்டு அனுப்புவாரு நாடாரு. நான் நாளைக்கு வெயிலுக்கு முன்ன கொண்டுவந்து சேத்திருதேன்.”
நான் பணம் கொடுத்து அவரிடம் ரசீது பெற்றுக் கொண்டேன். நானும் கோரனும் நாடாரின் கடையிலேயே ஒரு பன் சாப்பிட்டு டீயும் குடித்தோம். திரும்ப நடந்து பங்களாவுக்கு வந்தபோது உச்சிப்பொழுது கடந்துவிட்டது. இந்தக் காடு தூரங்களால் இங்குள்ளவர்களைக் கட்டிபோட்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். இன்னும் சில ஆண்டுகள் நான் இந்த மூன்று இடங்களுக்கும் நடுவே ஊசலாடிக்கொண்டே இருக்கப்போகிறேன்.
காடுவழியாக வரும்போது நாங்கள் ஒரு யானைக்கூட்டத்தைப் பார்த்தோம். அதற்கு நெடுநேரம் முன்பே கோரன் மூக்கைச் சுளித்து “ஆன” என்று சொல்லிவிட்டான். சரிவுக்கு கீழே நாலைந்து யானைகள் நின்றிருந்தன. மண்நிறமானவை, செம்மண் குன்றுகள் என்றே தோன்றின. எங்களையும் அவை உணர்ந்துவிட்டிருந்தன. அவற்றில் முதிய யானை இருமுறை மெல்ல ஒலியதிர்வை எழுப்பியது. மற்றயானைகள் வாலைச் சுழித்தபடி மேய்ந்துகொண்டிருந்தன.
கோரன் “கறம்பியும் கூட்டமும்” என்றான்.
அவர்கள் யானைக்கூட்டங்களுக்கே பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. கோரன் சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்தான். இவர்கள் காட்டில் வாழ்வதன் வழியாக கற்றுக்கொண்டது காட்டில் செல்கையில் மனமில்லாமல் இருப்பது. உள்ளே எதுவுமே ஓடுவதில்லை. கண்ணும் காதும் மூக்குமாகவே செல்கிறார்கள். இந்தக் காட்டில் மனதையும் சுமந்து செல்பவன் வழிதவறுவான். விலங்குகளிடம் மாட்டிக்கொண்டு உயிர்விடுவான்.
சட்டென்று கோரன் ஒரு கல்லை எடுத்து சரித்து வீசினான். புதருக்குள் இருந்து ஒரு பெரிய முயல் துள்ளி விழுந்தது. அதன் மல்லாந்த அடிவயிறு தெரிந்தது. அது மீண்டும் துள்ளுவதற்குள் அவன் இன்னொரு கல்லால் அதை அடித்தான். அது துள்ளி துள்ளி அதிர்ந்துகொண்டிருந்தது. என்னால் அதைப் பார்க்கமுடியவில்லை. நான் முன்னால் சென்றேன்.
அவன் அதை எடுத்துக்கொண்டு வருவான் என்று நினைத்தேன். ஆனால் நான் சற்றுநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அவன் பெரிய நவரை இலையில் அந்த முயலின் இறைச்சியை கட்டி பொட்டலமாக்கி எடுத்துக்கொண்டு வந்தான். இரண்டுகிலோ வரை இருக்கும்.
“செவியன் இறைச்சி” என்று அவன் சொன்னான். நான் புன்னகை செய்தேன்.
பங்களாவை அடைந்தபோது நான் மிகவும் களைத்திருந்தேன். கல்படிகளில் நிழலிருந்தது. அதிலேயே அமர்ந்துவிட்டேன். அவன் உள்ளே சென்று எனக்கு டீ போட்டுக் கொண்டுவந்து தந்தான். அவனே முயலை சமைக்க ஆரம்பித்துவிட்டான்.
நான் எழுந்து சென்று அந்த நாவலை எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். டூவல் சீமாட்டி ஈவ்லினாவின் பொருட்டு அவளுடைய தந்தை சர் ஜான் பெல்மோன்டின் மேல் ஒரு வழக்கு தொடுக்க திட்டமிடுகிறாள். அவர் அவளை தன் மகளாகச் சட்டபூர்வமாக ஏற்கவேண்டும், அவருடைய சொத்துக்களுக்கு வாரிசாகவும் ஆக்கவேண்டும். ஆனால் ரெவெரெண்ட் வில்லர்ஸுக்கு அதில் ஈடுபாடில்லை. அவரிடம் சொத்துக்காக உரிமை கோரக்கூடாது, சொத்து என்பது விரும்பி அளிக்கப்படவேண்டியது என்கிறார். ஹோவார்ட் சீமாட்டி பெல்மோண்ட் பிரபுவுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதினாலும் அவர் ஆர்வம் காட்டுவதில்லை.
எனக்குச் சலிப்பாக இருந்தது. அந்நாவல் நான் எண்ணியதுபோல ஆழம் ஏதும் இல்லாததாகத் தோன்றியது. அப்போது ஏன் அந்தச் சலிப்பு வந்தது என்று இப்போது இப்படிச் சொல்கிறேன். புனைவெழுத்தில் ஒரு துடுக்குத்தனம் இருக்கவேண்டும். மீறல் என்றும் சொல்லலாம். பொதுப்புத்தியால் அறியும் விஷயங்களைத் தாண்டிச்செல்லும் ஆற்றலை அளிப்பது அந்த துடுக்குத்தனம்தான். அந்நாவலின் தலைப்பிலும், கருவிலும் எந்த அளவுக்கு துடுக்குத்தனம் தெரிந்ததோ அந்த அளவுக்கு நாவலில் இல்லை.
நீண்ட நீண்ட உரையாடல்கள், சில்லறை பிணக்குகள், அக்காலத்துச் சமூகச் சிக்கல்கள், அரசியல் முரண்பாடுகள். நாவலை மூடிவைத்துவிட்டேன். கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன். இங்கே எனக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது உண்மையில் என்ன என்று சிந்திக்கலானேன். இது கற்பனையும் பிரமையும் கலந்த ஒரு நிலை. இதற்கு உளவியலில் ஏதாவது பெயர்கூட இருக்கக்கூடும். ஒருவேளை மனச்சிக்கலின் தொடக்கமாகவே இருக்கலாம்.
அந்த எண்ணம் என்னை சில்லிட வைத்தது. மனச்சிக்கல் என் குடும்பத்தில் உண்டு. என் சித்தப்பா ஆவுடையப்ப பிள்ளை பலவகையான மனச்சிக்கல்களால் அவதிப்பட்டார். முழுப்பைத்தியமாக ஆகி சுசீந்திரம் போனவர் அங்கே தெப்பக்குளத்தில் குதித்து இறந்தார். உடனே அவரை நான் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வந்தன. அவர் எந்த புத்தகத்தை எடுத்தாலும் படித்துக்கொண்டே இருப்பார். தினத்தந்தியையே பலமணிநேரம் படிப்பார். எவராவது பிடுங்கிக் கொள்வது வரை.
வியர்த்துவிட்டேன். அந்த மனச்சிக்கல்தான் எனக்குமா? ‘எழுதாப்புறம் படிப்பது’ என்பார்கள் மலையாளத்தில். அது இல்லாதவற்றை கற்பனை செய்து கொள்வது. அதைத்தான் செய்கிறேனா? இருக்கும் என்ற எண்ணம் அளித்த பதற்றத்தை தாங்கவே முடியவில்லை. ஆமாம் அதுவேதான் என்று தோன்றி, அதுவே என உறுதியாகி, கணநேரத்திற்குள் பூதம்போல எழுந்து நின்றது.
இது தொடக்கம்தான், இனி விழிப்பிலும் குரல்கள் கேட்கும், கண்களுக்குள் ஒளிப்புள்ளிகள் தோன்றும், காதில் அவ்வப்போது நாராசமான ஓசைகளும் மூக்கில் கெட்ட வாசனைகளும் வரும். அதன்பின் காட்சிகள் தெரிய ஆரம்பிக்கும். நேர் உலகம் போலவே தோன்றும் காட்சிகள். அவை நேருலகுடன் ஊடுகலந்துவிடும். எந்த உலகில் இருக்கிறேன் என்றே தெரியாமலாகும். பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சீறிக்கொண்டும் இருப்பேன். ஒருநாள் கிளம்பிச் சென்றுவிடுவேன். தெருக்களில் அலைவேன். ஆடைகள் கந்தலாகும். சாக்கடை நீரை அள்ளிக்குடிப்பேன். எச்சில்களை உண்டு தெருவில் அமர்ந்திருப்பேன்.
என்ன செய்வது? இங்கிருந்து ஓடிவிடவேண்டும். இப்போதே, சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு, பையை தூக்கிக்கொண்டு காட்டின் வழியாக ஓடி, கோதையாறை அடைந்து, பஸ் பிடித்து குலசேகரம் சென்று, நாகர்கோயிலுக்கு சென்று, ஊரை அடைந்துவிடவேண்டும். ஆனால் திண்ணையில் அப்பா அமர்ந்திருப்பார். அவர் என்ன என்று கேட்பார். அம்மா உள்ளிருந்து வந்து “என்னடா மெய்யி?” என்பாள்.
நான் தளர்ந்து மீண்டும் நாற்காலியில் அமர்ந்துவிட்டேன். இந்த காட்டில், இந்த ஒழிந்த பங்களாவில் நான் இறந்தாலும் சரி, பைத்தியமாகி இங்கேயே அலைந்தாலும் சரி, என்னால் இந்த வேலையை துறக்க முடியாது. இது பைத்தியத்தின் தொடக்கம்தான். இல்லாதவற்றை காண்பது, இல்லாதவற்றை படிப்பது. பெரும்பாலான பைத்தியங்கள் இதைச் செய்கின்றன.
“இல்லை” என்று ஒரு குரல் மிக அருகே கேட்டது. என் முதுகுக்குப் பின்னால்.
“யார்?” என்றேன்.
“நான் இங்கே இருக்கிறேன். உண்மையாகவே இருக்கிறேன். இது உங்கள் பிரமையெல்லாம் இல்லை.”
பிரிட்டிஷ் உச்சரிப்பு கொண்ட ஆங்கிலம்.
“நீ பிரிட்டிஷ்காரியா?”
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“நீ யார்? ஃபேன்னி பர்னியா?”
அவள் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.
“இல்லை, ஈவ்லினா?”
அவள் இருப்பதாகவே தெரியவில்லை. நான் சட்டென்று திரும்பிப் பார்த்தேன், யாருமில்லை.
“பொய்” என்றேன்.
செவிகூர்ந்துவிட்டு “வெறும் பிரமை” என்றேன்.
மீண்டும் சற்று நேரம் கவனித்துவிட்டு “என்னுடைய மனச்சிக்கல்தான் இது” என்றேன்.
என் முன் ஒரு நிழல் உருப்பெற்று வருவதைக் கண்டேன். எனக்குப் பின்னால் நின்றிருக்கும் ஒருவரின் நிழல் அது. அவருக்குப் பின்னால் கண்ணாடிச் சன்னல் இருந்ததனால் நிழல் கூர்மையாக, நீண்டு விழுந்து கிடந்தது.
ஒரு பெண்ணின் நிழல் அது.
“யார்?” என்று நடுங்கும்குரலில் கேட்டேன்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. நான் உரக்க “இதுவும் என் மனமயக்கமாக இருக்கலாம்…” என்றேன்.
அவள் “எல்லாமே மனமயக்கமாகவும் இருக்கலாமே?” என்றாள்.
“அப்படியில்லை என்றால் நீ யாரென்று சொல்.”
அவள் மீண்டும் பேசாமல் நின்றாள்.
“சொல், நீ யார்?”
உள்ளிருந்து கோரன் வெளியே வந்து “ஏமானே…” என்று சொல்லி உடனே அஞ்சி பின்னடைந்தான். அவனுடைய கண்களில் இருந்த பயவெறிப்பை, வாய் திறந்திருந்ததை, நான் நன்றாகவே கண்டேன். திகைப்புடன் எழுந்துவிட்டேன்.
“என்னடா?” என்றேன்.
அவன் மாறி மாறிப்பார்த்தபடி அருகே வந்தான்.
“என்ன? என்னடா?” என்றேன்.
“ஆரோ நிக்குந்நு மாதிரி தோந்நி…” அவன் தரையைச் சுட்டிக்காட்டி “ஈ நிழலு… இது அப்புறம் நிக்குண மாவின் நிழலு” என்றான்.
நான் கீழே பார்த்தேன். ஜன்னலுக்கு அப்பாலிருக்கும் மாமரத்தின் மங்கிய நிழல்தான் தரையில் விழுந்துக் கிடந்தது.
“நான் கண்டு பயந்நேன்…” என்று அவன் பற்களைக் காட்டிச் சிரித்தான். “இறச்சிக்கஞ்ஞி எடுக்கட்டா?”
“என்னது?” என்றேன்.
“இறச்சிக்கஞ்ஞி… நாரங்காச் சம்மந்தி உண்டு.”
“எடு.”
அவன் உள்ளே சென்றான். நான் அவள் குரலுக்காக செவிகூர்ந்தேன்.
“அவனும் பார்த்துவிட்டான்” என்று குரல் கேட்டது.
“ஆனால் அது நிழல்.”
“நாங்கள் அப்படித்தான் வரமுடியும்…. ஆனால் இது உன் மனச்சிக்கல் இல்லை… அதை உறுதிசெய்துகொள்.”
”ஆமாம்” என்றேன்.
“ஆகவே நீ பயப்படவேண்டியதில்லை. நாங்கள் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை.”
“நான் என்ன செய்யவேண்டும்?” என்றேன்.
“அந்தப்புத்தகத்தை படி… முழுக்கப் படி…”
“ஏன்?”
“இந்தமாதிரி சென்ற நூற்றாண்டு நாவல்களை இப்போது எவருமே படிப்பதில்லை.”
“அதற்காகவா?”
“அதில் எத்தனை வாழ்க்கைகள்!” என்றது அக்குரல். “யாரும் படிக்காவிட்டால் அவை எங்கே போகும்?”
கோரன் வந்து “கஞ்ஞி எடுத்து வைச்சேன்” என்றான்.
“வாறேன்” என்றேன்.
“ஏமான், தனக்குத்தான் பேசுந்நூ” என்றான் கோரன்.
“இல்லையே” என்றேன்.
“இல்ல, நான் கண்டேன்.”
”சும்மா பேசிப்பார்த்தேன்” என்றேன்.
முயல்கறியை அரிசியுடன் போட்டு வைக்கப்பட்ட கஞ்சி. நார்த்தங்காய் மரத்தின் இலைத்தளிர்களை பச்சைப்புளியுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து எடுத்த துவையல். விசித்திரமான சுவை. ஆனால் எனக்கு மிகப்பிடித்திருந்தது.
“இந்த பச்சைப்புளி எங்க கிடைச்சுது?” என்றேன்.
“அவிடே… வலிய புளிமரம் உண்டு.”
கொல்லையில் நார்த்தங்காய் மரம் நிற்பதை முன்பே கண்டிருந்தேன். கழுவி ஊற்றிய நீரில் முளைத்த மிளகாய்ச்செடிகள் நிறையவே நின்றிருந்தன.
“நீ சாப்பிடு” என்றபடி முகப்புக்கு வந்தேன்.
நாற்காலியை நோக்கிச் செல்ல முயன்றபின், திரும்பி கட்டிலை நோக்கிச் சென்றேன்.
“அந்தப் புத்தகம் அங்கே இருக்கிறது” என்று மிகமெல்ல குரல் ஒலித்தது.
“ஆமாம்” என்றேன்.
“அதைப்படி.”
“வேண்டாம்…”
“நீ அதைப் படிக்கவேண்டும்…”
“மாட்டேன்.”
“தயவுசெய்து தயவுசெய்து…”
“ஏன்?”
“நீ அதைப்படித்தால்தான் நான் தோன்றமுடியும்.”
“நீ யார்?”
அவள் பதில் சொல்லவில்லை.
நான் கட்டில் நோக்கிச் சென்று அதன்மேல் அமர்ந்தேன். அந்த உரையாடல் என்னுள் ஒலிக்கிறது. உண்மையில் செவியில் கேட்கவில்லை, கேட்பதாகத் தோன்றுகிறது.
“அதை எடுத்து வாசி… அதை எடுத்து வாசி.”
“மாட்டேன்.”
“தயவுசெய்து… தயவுசெய்து.”
அந்தப் புத்தகம் மேஜைமேல் இருந்தது. அதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். சட்டென்று ஓர் எண்ணம் வந்தது. எழுந்து சென்று அதை எடுத்து டிராயரை திறந்து மூடி உள்ளே வைத்தேன்.
பின்னர் திரும்பி நடந்து வெளியே போய் படிகளில் அமர்ந்தேன். கைகளை மார்பில் கட்டியபடி வெளியே வெயில் சாய்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மழை வருவதுபோல எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் நீராவி மூச்சடைக்க வைக்கும் அளவுக்கு நிறைந்திருந்தது.
“ஏன்?” என்ற குரல் கேட்டது.
“நீ அதை எடுத்து வெளியே வை பார்ப்போம்.”
“எதற்கு?”
“நீ என் எண்ணக்குழப்பம் அல்ல, எனக்கு வெளியே உண்மையிலேயே இருக்கிறாய் என்று நான் நம்புகிறேன்.”
“அவனும் என்னைப் பார்த்தான்!”
“அவன் என்னுடைய பாவனைகளைக் கண்டு அஞ்சிவிட்டான். நான் என்னருகே ஒருவர் இருப்பதைப்போல பேசிக்கொண்டிருந்தேன்.”
“அதை எடுத்து வாசி…”
“மாட்டேன். நீ அதை எடுத்து வெளியே வை.”
நான் செவிகூர்ந்தேன். எந்த ஓசையும் இல்லை.
“இருக்கிறாயா?”
பதில் ஏதும் எழவில்லை.
“என்ன செய்கிறாய்?”
நெடுநேரம் செவிகூர்ந்தேன். எந்த ஓசையுமில்லை.
“போய்விட்டாயா?”
அங்கே நான் உணர்ந்த இன்மை என்னை திடுக்கிடச் செய்தது. அங்கே எவருமில்லை. நான் திரும்பிப் பார்த்தேன். மெய்யாகவே எவருமில்லை. எழுந்து உள்ளே சென்று விரிந்த கூடத்தை பார்த்தேன். அதே இன்மை. கூடத்தில் சுற்றி நடந்தேன். யாருமே இல்லை.
அங்கே அந்தக்குரல் ஒலிக்காதபோதுகூட நான் ஓர் இருப்பை உணர்ந்திருக்கிறேன். அது முற்றிலும் இல்லாமலாகிவிட்டிருக்கிறது. நான் நாற்காலியில் சென்று அமர்ந்தேன். மெய்யாகவே அவளை திருப்பியனுப்பி விட்டேனா? இனி அவள் இல்லையா?
டிராயரை திறந்தேன். அந்த புத்தகம் அங்கே இருந்தது. அதை எடுத்து வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. வாசிக்க ஆரம்பித்தால் அவள் தோன்றிவிடுவாள். அந்த புத்தகத்திலிருந்துதான் அவள் எழுந்து வந்தாள்.
ஆனால் அதைப் படிக்க ஆரம்பித்தால் மீண்டும் அந்த அவஸ்தையை இழுத்து என்மேல் போட்டுக்கொள்வேன். அது ஒருவேளை அது மனநோய் என்றால் நானே அதை வளர்த்துக் கொள்கிறேன். நான் தனியாள் அல்ல. எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. அத்தனைபேரும் என்னையே நம்பியிருக்கிறார்கள்.
டிராயரை மூடிவிட்டேன். என் நெஞ்சில் கழிவிரக்கம் நிறைந்தது. என்னால் முடிந்தது இதுதான். வேறெப்படியும் நான் நடந்துகொள்ள முடியாது. நான் இழந்தது மிகப்பெரிய ஒன்று . என் வாழ்க்கையில் இத்தகைய உச்சநிலையை அடைந்ததே இல்லை. நாள்முழுக்க ஒன்றையே எண்ணிக் கொண்டிருக்க நேர்வது எத்தனை அரியது. அது நாட்களை எத்தனை ஒளிகொண்டதாக ஆக்குகிறது. ஒருமாதம் கழித்து நினைவுகூரும்படி ஒருநாள் இருந்தால் அதில்தான் மெய்யாகவே வாழ்கிறோம். விக்டர் யூகோவின் வரியா அது? ஆனால் அத்தகைய எத்தனை நாட்கள் ஒருவருக்கு அமைகின்றன?
காதலில் விழுந்தவர்கள் அப்படி இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு இந்தக்காட்டில் என்ன காதல்? என் தங்கைகளுக்கு நான் பணம் சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரையாக கல்யாணம் செய்து அனுப்பவேண்டும். அதன்பின் எனக்கான ஒரு பெண். பெரும்பாலும் உலகமறியாத வேளாளப் பெண். பெரும்பாலும் பற்கள் உந்திய, கண்கள் குழிந்த, பலகாரணங்களால் திருமணம் தட்டிப்போய் வயதுகடந்த பெண்.
எரிச்சலுடன் நான் அந்த டிராயரை திறந்தேன். புத்தகத்தை கையில் எடுத்தேன். நான் தற்கொலை செய்துகொள்வதுதான் இது. ஆனால் மலையிலேயே நம்மை கவருமிடம் அதலபாதாளத்தின் விளிம்புதான். சாவின் அருகாமை இல்லாத எதுவும் ஆழமும் தீவிரமும் கொள்வதில்லை. ஒருகணம் தவறினால் சாவு என்றிருக்கையிலேயே நாம் நம்மை முழுமையாகத் தொகுத்துக் கொள்கிறோம். இந்தக்காட்டில் அத்தனை உயிர்களும் அப்படித்தான் வாழ்கின்றன.
ஆனால் கையில் சற்றுநேரம் வைத்திருந்துவிட்டு நான் மீண்டும் அந்த புத்தகத்தை உள்ளே வைத்துவிட்டேன். என்னால் முடியாது. என்னால் ஆசைப்படத்தான் முடியும். நான் அத்தனை புத்தகங்களைப் படித்ததே என்னால் எதையும் மெய்யாகவே நிகழ்த்திவிட முடியாது என்பதனால்தான். என்னால் மலைகளில் ஏறமுடியாது, கடற்பயணம் செய்யமுடியாது, எந்தப் பெண்ணின் கண்ணைப் பார்த்தும் காதல் சொல்ல முடியாது, எவரிடமும் குரலை உயர்த்தி சண்டைபோட முடியாது.
தன்னிரக்கம் கொண்டு நான் தலையை கைகளில் தாங்கிக்கொண்டேன். அழவேண்டும் போலிருந்தது. எனக்கெல்லாம் காதல்கூட வாய்க்காது. காதலி ஒருத்தி கனவுடன் வந்து என் முன் நின்றால்கூட என் குடும்பப் பொறுப்பை நினைத்து அவளை துரத்திவிட்டு தனிமையில் அமர்ந்து புலம்புவேன்.
எழுந்து முற்றத்திற்கு வந்தேன். இருட்டிக் கொண்டிருந்தது. மழை இன்னும் வரவில்லை. ஆனால் மழைக்கான எல்லாமே ஒருங்கிவிட்டிருந்தன. மரங்கள் அசைவில்லாத இலைகளுடன் காத்துநின்றிருந்தன. பறவைகள் ஒடுங்கிவிட்டன. தெற்குவானில் இடியோசை யானையின் உறுமல்போல எழுந்தது. வானில் மின்னல்கள் கீறித் துடித்துக்கொண்டே இருந்தன. மெல்லிய காற்றசைவு. அதில் செவிகளில் குளிரை உணர முடிந்தது.
தளர்ந்த காலடிகளுடன், உடல் எடைகொண்டு தள்ளாடுவதுபோல நடந்து கற்படிகளில் ஏறினேன். உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தேன். மேஜைமேல் இருந்த புத்தகத்தை எடுத்து கவனமில்லாமல் புரட்டினேன்.
சட்டென்று கை சுட்டதுபோல அதை மேஜை மேல் வைத்துவிட்டேன். அதை யார் எடுத்து மேஜைமேல் வைத்தது? அவளா? அது ஓர் ஆவிதானா? ஆனால் நானே முன்பு அங்கே அமர்ந்தபோது அந்த புத்தகத்தை எடுத்தேன். திரும்ப உள்ளே வைக்கவில்லையா? கைமறதியாக நானே மேஜைமேல் வைத்துவிட்டேனா? உள்ளே வைக்க எண்ணினேன், அது நினைவில் இருக்கிறது. ஆனால் வைத்தேனா? அப்படியே எழுந்து சென்றுவிட்டேனா?
அவளுடைய குரல் காதில் ஒலிக்கும் என்று காத்திருந்தேன். ஒலிக்கவில்லை. நெடுநேரம் ஆகியது. சட்டென்று மழை பேரொலியுடன் உடைந்து பங்களாவின் கூரைமேல் கொட்டியது. அந்த ஓசை என்னை மெய்சிலிர்க்கவைத்தது. நான் அந்த புத்தகத்தை பிரித்தேன். இந்த மழையில் இங்கே நான் செய்வதற்கொன்றுமில்லை. இதை வாசிப்பதைத் தவிர வேறேதும் செய்ய என்னால் முடியாது. இங்கே வேறேதுவும் இல்லை. நான் அஞ்சலாம், தயங்கலாம், நாய் வாய் வைப்பதற்கு முன் சுற்றிச் சுற்றி வருவதுபோல. ஆனால் இதை மட்டுமே என்னால் செய்யமுடியும்.
நான் அதை வாசிக்கலானேன். இம்முறை அந்த மொழி மிக அணுக்கமானதாக, இயல்பானதாக இருந்தது. எளிதாக அதற்குள் சென்றுவிட முடிந்தது. O, Maria! London now seems no longer the same place where I lately enjoyed so much happiness; every thing is new and strange to me; even the town itself has not the same aspect.-My situation so altered!-my home so different!-my companions so changed!-But you well know my averseness to this journey. ஈவ்லினின் உள்ளம் பெருகி வழிந்துகொண்டே இருந்தது.
இந்த நகரத்தில் பாவம் என்பது களியாட்டாக மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே செல்வம் என்பது அதிகாரமாக மாறியிருந்தது. செல்வத்திலிருந்து பாவத்தைப் பிரிக்கமுடியாது என்று சொல்வது உண்மை. இன்னொருவரிடமிருந்து பிடுங்கப்படாத செல்வம் என்பது இல்லை என்று ஒருமுறை ஃபாதர் மான்ஸ்ஃபீல்ட் சொன்னார். உண்மைதான். ஆனால் இங்கே செல்வமில்லாத காலம் இருந்திருக்கிறதா என்றாவது? கற்கால மனிதன் அவன் செய்த கற்கோடரியை பத்திரமாக வைத்துக் கொண்டிருப்பான். அவன் வேட்டையாடி உண்ணும் உணவை அந்தக் கோடரி இல்லாதவன் கனவுகூட காணமுடியாது. ஆகவே அவன் இவன் தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு அந்தக் கோடரியுடன் சென்றுவிட்டிருப்பான்.
அந்தக் கோடரி கைமாறிக்கொண்டே இருக்கிறது. அதை விலைகொடுத்து வாங்கலாம். அதற்கு இணையான போகங்களை அளிக்கவேண்டும். விலை என்பது என்ன? பணம்! பணம் என்பது என்ன?அது வாங்கும் போகங்கள். ஒரு நல்ல கோச் வண்டியை வாங்க பத்தாயிரம் நல்ல விருந்துணவுகளை கொடுக்கிறோம். அல்லது ஐநூறு பட்டு ஆடைகளைக் கொடுக்கிறோம். அவ்வளவுதான். இங்கே பரிமாறிக் கொள்வதெல்லாம் போகங்களை மட்டும்தான்.
அப்படியென்றால் ரெவெரெண்ட் வில்லர்ஸும் ஃபாதர் மான்ஸ்பீல்டும் எதை கொடுக்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்படுவது எதற்கு பதிலாக? அவர்கள் அளிப்பது ஓர் எளிமையான இளைப்பாறல். அவர்கள் பிறரிடம் பாவம் பற்றிய எண்ணத்தை விதைக்கிறார்கள். பாவம் செய்தோம் என்னும் குற்றவுணர்வை ஏற்றுகிறார்கள். அதன் பின் அந்தச் சுமையை இறக்கி வைக்க உதவுகிறார்கள். அந்த ஆறுதல் ஒரு போகம். அதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் வீடுகளை, ஆடைகளை, நகைகளை, மடாலயங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ருமேனிய மாயாஜாலக்காரர்கள். அவர்கள் நம்மை பேயின் பிடியில் இருப்பதாக நம்பச்செய்கிறார்கள். பேயை துரத்தி நம்மை மீட்கிறார்கள். நாம் மகிழ்ந்து கூச்சலிடுகிறோம்.
இங்கே மிகமிக அரிய வணிகத்தைச் செய்பவர்கள் பெண்கள். அவர்கள் அளிப்பது என்ன? அவர்களால் உச்சகட்டமாக அளிக்கமுடிவது உடலை. காமத்தை. ஆனால் அது வெளியே பரவிக்கிடக்கும் கூழாங்கற்களைப்போல அத்தனை சாதாரணமானது. அத்தனை உயிர்களும் செய்துகொண்டிருப்பது. உயிர்கள் அதைச் செய்ததுமே மறந்து கடந்துவிடுகின்றன. பெண் என்றோ எப்படியோ அதை ஆண் மறக்கமுடியாதபடி செய்துவிட்டாள். அவன் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்படிச் செய்வதில் வெற்றி பெற்றுவிட்டாள். வரலாற்றில் பெண் அடைந்த மாபெரும் வெற்றி அதுதான்.
அதை அவள் ஏன் செய்தாள்? அவள் அதன் வழியாக தன் குட்டிகளுக்கு அந்த ஆண் பொறுப்பேற்கும்படிச் செய்தாள். அவன் அக்குட்டிகளுக்காக எஞ்சிய வாழ்நாள் முழுக்க உழைத்து, போராடி, தியாகம் செய்யும்படிச் செய்தாள். ஆண் அதற்குப்பின் செய்த போர்கள், சேர்த்த செல்வங்கள், அமைத்த பேரரசுகள் எல்லாமே அதன்பொருட்டுத்தான். கூழாங்கல்லை வைரமென காட்டினாள். உண்மையில் வைரமும் கூழாங்கல்தான். அதற்கு எங்கோ எவரோ எதனாலோ மதிப்பை ஏற்றியிருக்கிறார்கள்.
பெண் வாழ்நாளெல்லாம் செய்வது தன் மதிப்பை ஏற்றிக்கொள்வதைத்தான். அழகாக இருக்க முயன்று கொண்டே இருக்கிறாள், வாழ்வின் கடைசிவரை. கலைகளை பயில்கிறாள், இலக்கியம் படிக்கிறாள், நடனம் ஆடுகிறாள். தன் தந்தைமேல் முதல் வெற்றியை அவள் அடைகிறாள். தந்தையை தன் அடிமையாக ஆக்குகிறாள். அவர்மேல் ஏறி நின்றுகொண்டு உலகை வெல்ல முயல்கிறாள். அவருடைய செல்வம், அவருடைய குடிப்பெருமை, அவருடைய சமூகநிலை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மேலே செல்ல எழுகிறாள்.
உயர்குடி என்பது இங்கே பெண்ணால் தீர்மானிக்கப்படுகிறது. ஆ! அதை தீர்மானித்தவள் ஒரு பெண்ணாகவே இருக்கவேண்டும். அவள் தன் மதிப்பின் உச்சமென முன்வைப்பது அது. இங்கே இந்த லண்டனில் அத்தனை பெண்களும் உயர்குடிப் பெண்களாகி, மேலும் உயர்குடிப் பெண்களாகி, அரசிக்கு சற்றுக்கீழே அமைவது வரை சென்று கொண்டே இருக்கிறார்கள். கோச் கதவை ஓர் உயர்குடி ஆண் திறந்துவிடுகிறான். அவள் கோட்டை கழற்றுபவன் ஒரு பிரபு. அவள் கைநுனியை பற்றி கூடத்திற்கு அழைத்து வருபவன் மென்மையான மலரை கொய்பவனின் முகம் கொண்டிருக்கிறான்.
அவளை நடனத்திற்கு அழைப்பவன் விண்ணின் தெய்வம் எலக்ட்ராவை மண்ணில் நின்று கைநீட்டி அழைப்பவன் போலிருக்கிறான். அவளுடன் ஆடுபவன் அவளுடைய நளினத்தை அடைய தன் முரட்டுத்தனமான உடலால் முயல்கிறான். இந்த ஆட்டத்தை உருவாக்கியவள் அவள். இதில் ஆண் வெல்லவே முடியாது. அவனுடைய முரட்டு சப்பாத்துக்களுடன், பெல்ட்டுகளுடன், சராய்களுடன் அவனால் மலர்க்கொடி போல துவள முடியாது. ஆட்டத்தில் அவள் அவனை வென்று சென்றுகொண்டே இருப்பாள். வேறு வழியே இல்லை.
இந்தப் பெண்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலாலும் பேச்சாலும் எண்ணத்தாலும் எப்படி தங்கள் மதிப்பை கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்று பார்க்கிறேன். அவள் ஏலமிட்டு உச்சவிலைக்கு விற்பது வெறும் கூழாங்கல் என இவளுக்கு தெரியும். இவளிடமிருப்பதும் கூழாங்கல் அல்லவா? ஆகவேதான் இவர்கள் மாறி மாறி வம்பு பேசிக்கொள்கிறார்கள். அவதூறுகளும் சொல்கிறார்கள்.
இவர்கள் தங்கள் பேச்சுக்களில் ஆண்களைப்பற்றி பேசுவதே இல்லை என்பதை முதலில் ஆச்சரியத்துடன் கவனித்தேன். ஏனென்றால் ஆண்கள் இவர்களுக்கு பொருட்டே அல்ல. இவர்களுக்கு உண்மையான சவால்கள் சக பெண்கள்தான். ஏனென்றால் இவர்களின் கூழாங்கற்களுக்கு நேரடி மதிப்பே இல்லை. ஒப்பீட்டு மதிப்பு மட்டும்தான். அவள்தான் இவளுக்கு மதிப்பை ஏற்றுகிறாள். ஆகவே ஒவ்வொருவரும் இன்னொருவருக்குப் போட்டி, ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு எதிரி, ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு விளம்பரம் செய்பவரும்கூட
மூச்சுத்திணறியது. இத்தனை அப்பட்டமாக ஒரு பெண் எழுதி நான் வாசித்ததே இல்லை. ஜேன் ஆஸ்டின், ஜார்ஜ் எலியட் நாவல்களை ஆளுக்கொன்று வாசித்திருக்கிறேன். ஜேன் ஆஸ்டின் பெண்களின் நுட்பமான பாவனைகளை எழுதுவார். ஜார்ஜ் எலியட் பெண்களின் அகக்கொந்தளிப்பையும் எழுதத்தெரிந்தவர். இத்தனை கசப்புடனும் துடுக்குத்தனத்துடனும் அவர்கள் எழுதியதில்லை.
துடுக்குத்தனம், அதைத்தான் பகலில் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுதான் ஒரு புனைவை ஆழமாக ஆக்குகிறது. மனிதர்கள் புதைத்து வைத்தவற்றை தோண்டி எடுக்கும் ஓநாய்கள் நல்ல எழுத்தாளர்கள். தெய்வங்கள் புதைத்து வைத்தவற்றையே தோண்டி எடுப்பவர்கள் மகத்தான எழுத்தாளர்கள்.
ஆனால் இந்தப் பெண்கள் தங்கள் மேல் பொறுப்பை ஏற்றிக்கொள்ள விரும்புவதில்லை. நாலைந்து நாட்களுக்கு முன்பு ஆர்வில் பிரபு அவருடைய உடைவாளை எனக்குக் காட்டினார். அது பெல்ஜியத்து தொழிலாளர்கள் வடித்த வாள். மிகமிக உயர்தரத்தைச் சேர்ந்தது. அது துருப்பிடிப்பதில்லை. தேய்த்துத் தேய்த்து அதை கண்ணாடிபோல ஆக்கியிருந்தனர். ஒரு நீண்ட கண்ணாடிக்குச்சியேதான். சுழற்றினால் அப்படியே கண்ணிலிருந்து மறைந்துவிடும். ஆர்வில் பிரபு சொன்னார், “வெட்டிவிட்டு எடுத்துப் பார்த்தால் ஒரு துளிக் குருதி இதில் இருக்காது. இதைக்கொண்டுதான் வெட்டினோம் என்று சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள்”. நான் சிரித்தபடிச் சொன்னேன். “இது ஒரு பெண்” அவர் வெடித்துச் சிரித்தார்.
அது உண்மை, தாங்கள் செய்வன எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ள பெண்கள் விரும்புவதில்லை. அப்பொறுப்பை பிறர் ஏற்கவேண்டும். அதாவது ஆண்கள். அவர்களின் இரையாக ஆகிய ஆண்கள்கூட பழியையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்காக அவர்கள் மிகமிக நுட்பமாக தங்களை வளைத்து நெகிழ்த்துக் கொண்டே இருக்கிறார்கள். குழந்தையாக, கள்ளமற்ற கன்னியாக, பாமரப்பெண்ணாக, கனிந்த அன்னையாக, விலக்கம் கொண்ட முதிய சீமாட்டியாகச் சித்தரித்துக் கொள்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் ஒரே அர்த்தம்தான் ‘எனக்கு ஒன்றுமே தெரியாது, நான் செய்வதென்ன என்றுகூட எனக்குத் தெரியாது.’
ஈவ்லினின் கசப்பு வெளிப்படுகிறதா அல்லது அவள் லண்டனை வெல்லும் வழிகளை தனக்காக வகுத்துக் கொள்கிறாளா? அவை அவள் தோழியான லாராவுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள். லாராவையும் இந்த வட்டத்திற்குள் இழுக்க முயல்கிறாளா? அவள் அங்கே விட்டுவிட்டு வந்த லாரா. தன் இன்னொரு பகுதியாக அவள் லாராவை பார்க்கிறாளா?
இன்று சர் கிளெமெண்ட் வில்லோபியின் இல்லத்து விருந்துக்கு ஒரு சிறுமி வந்திருந்தாள். சிறுமி என்று சொல்வது அவள் வயதைக்கொண்டு அல்ல, அவளுடைய நடத்தையைக் கொண்டு. அவளுக்கு பதினாறு வயது. அவள் தந்தை ஒர் இசைக்கலைஞர். ஒரு ஒயின் வியாபாரியின் மனைவியை மணந்துகொண்டு அவள் வீட்டுக்கே சென்றுவிட்டார். இவளும் சகோதரர்களும் சகோதரிகளும் கைவிடப்பட்டனர். குடும்ப நண்பர்களின் உதவியால் வாழ்கின்றனர்.
குடும்ப நண்பர்களில் முக்கியமானவர் ஒரு நாடகாசிரியர். அவர் எழுதிய நாடகம் அபத்தமான ஒன்று என்கிறார்கள். ஆனால் அவர் நல்ல பிரிட்டிஷ் நாடகாசிரியர்களுக்கு உரிய நடை உடை பாவனைகளை நன்றாகவே தேர்ந்திருக்கிறார். அவர் அந்தப்பெண்ணின் அடிமை என்று தெரிந்தது. மிகநுட்பமாக அவரை அவள் அடிமைப்படுத்தியிருக்கிறாள். அவர் அவளுடைய ஏவல் பூதம். அவளுக்கு அவர் சேவை செய்கிறார். அவளை தூக்கிச் சுமந்து செல்கிறாள். அவள் அவரை முற்றாக உறிஞ்சி வளர்வாள். வளந்து கிளை விரித்ததும் அவரை சக்கையாக தூக்கி வீசிவிடுவாள்.
எப்படி என்று சொல்வது சிக்கலானது. அவர் படைப்பு சக்தியே அற்றவர். வெறும் அறிவாளி. அவர் இசைக்கலைஞரும் ஓவியரும்கூட. அவருடைய ஓவியங்கள் இரும்புக்கூடைகள் போலிருக்கும். அவருடைய இசை ஆலையின் இயந்திர ஒலி போலிருக்கும். அவருடைய நாடகம் அரசாங்க ஆவணம் போன்றிருக்கும். ஆனால் அத்தகையோருக்கு மெய்யான படைப்புசக்தி என்பது என்ன என்று தெரியும். அந்தரங்கமாக அவர்கள் செய்யும் பிரார்த்தனையை கேட்காத தெய்வம் அல்லவா அது?
அந்த முதியவர் அந்தப்பெண்ணின் படைப்புசக்தியின் அடிமை. அவளுடைய வரிகளே அவரை முதன்மையாக கவர்கின்றன. அவள் எழுதுவதை அவர் திரும்பத்திரும்ப படிக்கிறார். மிகையாக புகழ்வதில்லை, ஆனால் அவளுக்குத் தெரியும், அவர் கிளர்ச்சி அடைகிறார் என. அவர் அவளை ‘கண்டெடுத்து’ ‘பயிற்றுவித்து’ ‘வெளிக்கொணர்ந்தவர்’ என்னும் பெருமையை விழைகிறார். அவர் உண்மையில் அவளுக்கு எதையுமே அளிக்கவில்லை. அது அவளுக்கே தெரியும். ஆனால் அவருக்கு அவள் அந்தப் பெருமையை விற்கிறாள், பதிலுக்கு அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறாள்.
ஆனால் அது மட்டுமல்ல. அதற்கும் மேலே ஏதோ ஒன்று உண்டு. அவரை அவளிடமிருந்து பிரியமுடியாதபடிச் செய்வது. முழு அடிமையாக ஆக்குவது. அது காமம்தான். காமமே பெண்ணின் முதன்மையான ஆயுதம். அதை அவள் எடுக்காமல் இருக்க மாட்டாள். அவரை அவள் தன் உடலாலும் கவர்ந்திருப்பாள். ஆனால் அதன் பழியையும் அவரே சுமக்கும்படிச் செய்திருப்பாள். அவர் அவளை தொட்டிருக்கலாம். அவரில் அது ஆழமான குற்றவுணர்ச்சியையும் அளித்திருக்கலாம். அக்குற்றவுணர்ச்சியால் அவள் அவரை கட்டியிருக்கிறாள். அதுதான் சேணமும் கடிவாளமும்.
அவளை நான் சந்தித்தேன். அவள் என்னை நோக்கி புன்னகை செய்தாள். பயின்ற உயர்குடியினரின் மென்மையான புன்னகை. அதில் ’நீ கிராமத்தாள் என்று தெரியும்’ என்னும் பாவனையும் இருந்தது. நானும் பணிந்து புன்னகைத்தேன். “உங்கள் நாட்குறிப்புகளைப் படித்தேன்” என்றேன்.
“அப்படியா, ஆச்சரியம்” என்று அவள் சொன்னாள்.
“நீங்கள் பெரிய எழுத்தாளர்” என்று நான் சொன்னேன். “நீங்கள் ஒருநாள் இசைநாடகங்களும் நாவல்களும் எழுதுவீர்கள்.”
“மெய்யாகவா?”என்று நெஞ்சில் கைவைத்தாள். என்ன ஒரு பசப்பு.
“ஆம், எனக்கு உண்மையாகவே தெரிகிறது” என்றேன்.
“உங்கள் கனிவுக்கு நன்றி உடையவள் நான்” என்றாள்.
“நான் இந்தச் சந்தர்ப்பத்தை மறக்கமாட்டேன்” என்று நானும் சொன்னேன்.
உபச்சாரச் சொற்கள். பெண்கள் பெண்களுடன் பேசும் உபச்சாரச் சொற்கள் எந்தக் கவிதையை விடவும், எந்த மதநூல் வசனங்களைவிடவும் நுட்பமானவை, கூர்மையானவை. வாள்முனையால் வாள்முனையை தொடுவதுபோன்றவை.
நான் பெருமூச்சுடன் புத்தகத்தை மூடிவிட்டு கண்களை மூடி மல்லாந்தேன். வெளியே மழை பெய்துகொண்டிருந்த ஓசை பெருகிக் கொண்டே செல்வது போலிருந்தது.