அஞ்சலி: கே.ஆர்.கௌரியம்மா

என் இளமையில் எங்களூரில் ஏழைத் தொழிலாளர் வீடுகளிலெல்லாம் நான்கு படங்கள் இருக்கும். சகாவு பி.கிருஷ்ணபிள்ளை, ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ், கே.ஆர்.கௌரியம்மா. அந்த வரிசையில் இருக்கும் ஒரே பெண். அந்த ஒரு காரணத்தால் என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் மற்ற அத்தனை பெண்களுக்கும் பிடித்தமானவர். நான் இளமையில் கௌரியம்மா பற்றிய மெய்சிலிர்க்கும் கதைகளைக் கேட்டு வளர்ந்தவன்.

பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய புகழ்பெற்ற கவிதை ‘கௌரி’ கௌரியம்மாவை ஓர் எளிய பாணனின் மொழியில் போற்றுகிறது

கரயாத்த கௌரி தளராத்த கௌரி

கலிகொண்டு நிந்நால் அவள் பத்ரகாளி

இதுகேட்டு கொண்டே செறுபால்யமெல்லாம்

பதிவாயி ஞங்ஙள் பயமாற்றி வந்நு

[அழாத கௌரி தளர்வில்லாத கௌரி

சினம்கொண்டெழுந்தால் அவள் பத்ரகாளி

இதைக் கேட்டு கொண்டல்லவா இளம்நாளிலெல்லாம்

பயமகற்றி வாழ்ந்தோம் நாங்களெல்லாம்!]

குளத்திப்பறம்பில் ராமன் கௌரியம்மா என்னும் கே.ஆர்.கௌரியம்மா 1919 ஜூலை 14 ஆம் தேதி ஆலப்புழா மாவட்டத்தில் சேர்த்தல வட்டத்தில் அண்டகாரனழி என்னும் சிற்றூரில் பிறந்தார். இது ஒரு கடலோரச் சிற்றூர். இன்று சுற்றுலாமையமாக உள்ளது. தந்தை குளத்திப்பறம்பில் ராமன். தாய் பார்வதியம்மா. ஈழவச் சாதியைச் சேர்ந்த கே.ராமன் நாராயணகுருவின் இயக்கத்தில் ஈடுபாடுகொண்டவர். ஆலப்புழை கயிறுத்தொழிலில் ஈழவர்கள் ஈடுபட நாராயணகுரு வழிகாட்டினார். ராமன் அவ்வாறு பொருளீட்டி நடுத்தர வாழ்க்கை வாழ்ந்தார். தன் குழந்தைகளை உயர்படிப்பு படிக்க வைப்பதில் தீவிரமாக இருந்தார்.

கே.ஆர்.கௌரியம்மா  திரூர், சேர்த்தலை என்னும் ஊர்களில் பள்ளிக்கல்வியை முடித்து எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றார். பின்னர் எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் சட்டத்தில் பட்டம்பெற்றார். அவருடைய அண்ணன் சுகுமாரன் முதலில் காங்கிரஸ் கட்சியிலும் பின்னர் கம்யூனிஸ்டுக் கட்சியிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அண்ணனால் தூண்டுதல் பெற்று கௌரியம்மா 1946ல் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் மாணவர் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

ஏ.கே.கோபாலனுடன்

அன்று ஆலப்புழ மாவட்டம் கம்யூனிஸ்டுக் கட்சியின் விளைநிலமாக இருந்தது. கயிறுத்தொழிலாளர்களில் இருந்தே கம்யூனிஸ்டுத் தொண்டர்களும் தலைவர்களும் உருவாகி வந்தனர். 1946 ல் திருவிதாங்கூர் ஆட்சிக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் ஒருங்கிணைத்த போராட்டமும் அதன்விளைவாக  புன்னப்ரா- வயலார் என்னுமிடத்தில் நிகழ்ந்த ஆயுதக்கலவரமும், பலநூறு பேர் கொல்லப்பட்ட நிகழ்வும் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு பெரும் ஆதரவை உருவாக்கின. புன்னப்ரா வயலார் போராட்டத்தில் கௌரி பங்கெடுத்தார். அதற்குப் பிந்தைய போராட்டங்களில் தலைமை வகித்தார்.

1953லும் 1954லிலும் திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தின் சட்டச்சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்றார். தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றிபெற்றுக் கொண்டே இருந்தார். கேரளத்தின் முதல் சட்டச்சபை முதல் பதினொன்றாம் சட்டச்சபை வரை பத்து சட்டச்சபைகளில் அவர் உறுப்பினராக இருந்தார். ஐந்தாம் சட்டச்சபையில் மட்டுமே அவர் பங்குபெறவில்லை. அவருடைய ஆதரவுத்தளம் என்பது கட்சிக்கு அப்பாற்பட்டது. அவர் கேரளத்தின் பெண்களின் கௌரவத்தின் அடையாளம். அவரை வழிபடாத மலையாளப்பெண்கள் இல்லை என்பார்கள்.

டி.வி.தாமஸுடன் திருமணம்

கே.ஆர்.கௌரி கௌரியம்மா பழைய புராணங்களில் தென்படும் கதாபாத்திரம் போலவே எனக்குத் தோன்றினார். போராட்டங்கள், தலைமறைவு, சிறைவாழ்க்கை. அவரை கைகளில் விலங்கிட்டு போலீஸ்காரர்கள் சாலையில் இழுத்துச்செல்வார்கள் என்று அம்மா சொல்வார். வேனிலிருந்து தலைமுடியை கொத்தாகப் பிடித்து தூக்கி இறக்குவார்கள். ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படக்கூடிய அனைத்து கொடுமைகளையும் அவருக்கு காவல்துறை இழைத்தது. அவருடைய மார்பகங்களை பொது இடத்தில் பிடித்து கசக்கிய ஒரு காவலரை பின்னாளில் கம்யூனிஸ்டுக் கட்சி கொலைசெய்தது- அப்படி எத்தனை கதைகள்.

கம்யூனிஸ்டுக் கட்சி ஆயுதக்கிளர்ச்சியைக் கைவிட்டு தேர்தல்பாதைக்கு வந்தது. 1957ல் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு தலைமையில் அமைந்த முதல் கம்யூனிஸ்டு அமைச்சரவையில் கே.ஆர்.கௌரியம்மா நிலவரி, சுங்கவரி மற்றும் தேவஸ்வம் போர்டு அமைச்சராகப்  பதவியேற்றார். அந்த துறைகள் அன்று மிக முக்கியமானவை. கேரளத்தின் விளைநிலங்களில் பெரும்பகுதி ஆலயங்களுக்குச் சொந்தமானதாக, ஆலயக்காவலர்களாகிய நம்பூதிரிகளுக்கு உரியதாக இருந்தது. நடைமுறையில் நாயர்களின் கையில் இருந்தது. கம்யூனிஸ்டுக் கட்சி அன்று நிலச்சீர்திருத்தம், ஏழைகளுக்கு நிலம் என்பதையே முக்கியமான வாக்குறுதியாக முன்வைத்தது. அந்தப்பொறுப்பை ஏற்றவர் கே.ஆர்.கௌரியம்மா.

கௌரியம்மா உறுதியுடன் இன்றுக் கேரள கம்யூனிஸ்டு இயக்கத்தின் பெருஞ்சாதனையாகச் சொல்லப்படும் நிலச்சீர்திருத்தத்தை தொடங்கினார். அதன் மெய்யான தீவிரமே கம்யூனிஸ்டுக் கட்சிக்கு எதிராக முஸ்லீம்- கிறிஸ்தவ- நாயர் கூட்டமைவு உருவாக வழிவகுத்தது. காங்கிரஸ் தலைமையிலான அந்தப் போராட்டம் [விமோசன சமரம்] இ.எம்.எஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் சென்று முடிந்தது. ஒடுக்கப்பட்ட ஈழவச்சாதியைச் சேர்ந்த கௌரியம்மா அன்று மிகக்கீழ்மையான சாதிய வசைகளுக்கு ஆளானார். உண்மையில் நிலச்சீர்திருத்தத்தால் நலனடைந்தவர்கள் புலையர்களும் ஈழவர்களும்தான். அவர்களின் ஆதரவே இன்றுவரை கேரள இடதுசாரி இயக்கத்தின் அடிப்படை.

எடுத்தை முடிக்கும் உறுதியுடன் இ.எம்.எஸ் 1967ல் மீண்டும் ஆட்சியை பிடித்தார். இம்முறை முஸ்லீம் லீகை உடைப்பது உட்பட எல்லா அரசியல் சித்துவேலைகளையும் செய்தார். அந்த அரசில் கௌரியம்மா நிதி, பொதுவினியோகம், சமூகநலம் ஆகிய துறைகளை வகித்தார். நிலச்சீர்திருத்தம் உண்மையாகவே செய்து முடிக்கப்பட்டது. கேரளத்தில் இன்றும் மக்கள்தொகையில் எழுபது சதவீதம் பேர் அன்று கையகப்படுத்தப்பட்ட ‘மிச்சபூமி’யில்தான் வாழ்கிறார்கள். கேரளத்தில் பின்னர் இடதுசாரிகள் கொண்டுவந்த ‘லட்சம்வீடு’ என்னும் குடியிருப்பு திட்டத்தின் அடித்தளமும் மிச்சபூமிதான்.

கம்யூனிஸ்டுக் கட்சியின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு இருந்த பொதுவினியோகம், சமூகநலம் ஆகிய துறைகளையும் கௌரியம்மாவே நடத்தினார். போராட்டத்தில் புலி என நின்றவர் ஆட்சித்திறனில் பொறுமையும் விடாமுயற்சியும் கொண்டவர். எந்த கோப்பையும் இரவுக்குள் முழுமையாகப் படித்து முழுச்செய்திகளையும் நினைவில் வைத்திருப்பவர். அவருடன் பணியாற்றிய பல அதிகாரிகள் அவர்கள் கண்ட மாபெரும் ஆட்சியாளர் கௌரியம்மாவே என்று சொல்லியிருக்கிறார்கள்.

கேரளத்தின் பொருளியலை கட்டமைத்த பல முதன்மையான சட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றியவர், பின்னாளில் இந்தியாவுக்கே முன்னுதாரணமகா அமைந்த பல சமூகநலச் சட்டங்களை கொண்டுவந்தவர் கௌரியம்மா. 1957ல் ‘குடிகிடப்பு உரிமை சட்டம்’ நிலத்தின்மேல் அதில் குடியிருப்பவர்களுக்கு உரிமையை வழங்கியது. 1957ல் ‘திருவிதாங்கூர் கொச்சி நிலவரிச் சட்டம்’ குத்தகைதாரர் நிலத்துக்கு வரிகட்ட அனுமதி அளித்தது. 1957ல் ’நிலப்பாதுகாப்புச் சட்டம்’ நிலத்தின்மேல் கோயில், மதம், மரபு அளித்த உரிமைகளை ரத்துசெய்து நிலத்தை அதில் தங்கிப் மக்களுக்குரியதாக ஆக்கியது.

1958ல் ’குடியிருப்போர் ஈட்டுரிமைச் சட்டம்’ ஒரு வீட்டில் நெடுங்காலம் குடியிருந்தவர்கள் அதை திருப்பி அளிக்கவேண்டுமென்றால் நஷ்ட ஈடு பெறலாம் என்று நிறுவியது. 1959ல் ’கேரள முத்திரைப்பத்திரச் சட்டம்’ பழைய நில ஆவணங்களை முறைப்படுத்தி நிலவுரிமையை தெளிவாக வரையறை செய்தது. 1960ல் ’கேரள நிலப்பிரபு உரிமைரத்துச் சட்டம்’ நிலத்தின்மேல் சில உயர் ஜாதிகளுக்கு இருந்த பிறப்புசார் உரிமையை ரத்துசெய்தது. 1960ல் ’கேரள குடியானவர் உறவுச் சட்டம்’ பாட்டம்,குத்தகை போன்றவற்றை வரையறைசெய்தது. 1968ல் ’ஜப்திச் சட்டம்’ நிலத்தை முறைகேடாக ஜப்தி செய்வதை தடைசெய்தது. 1987ல் ’ஊழல்தடைச்சட்ட’மும் 1991ல் ’பெண்கள் கமிஷன் அமைப்பதற்கான சட்ட’மும் கௌரியம்மாவால் கொண்டுவரப்பட்டவையே.

1957ல் கேரளத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியைப் பிடித்த பின்னரே கௌரியம்மா திருமணம் செய்துகொண்டார். கட்சித்தோழரான டி.வி.தாமஸை. அவரும் முதல் கம்யூனிஸ்டு அமைச்சரவையில் பதவி வகித்தார். 1964ல் கட்சி உடைந்தபோது கௌரியம்மா மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார். டி.வி.தாமஸ் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியிலேயே நீடித்தார். அவர்கள் மணவுறவை முறித்துக்கொண்டார்கள். அது அன்று மிகவும் பேசப்பட்ட ஒரு நிகழ்வாக இருந்தது.அதன் பின் கௌரியம்மா திருமணம் செய்துகொள்ளவில்லை.

கே.ஆர்.கௌரியம்மாவின் வாழ்க்கையில் சரிவுகள் தொடங்கியது அவருடைய முதுமையில்தான். கேரளத்தில் சாதி-மத அரசியல் வேரூன்றியதும் தெற்குக்கேரளத்தில் கம்யூனிசத்தின் செல்வாக்கு குறைந்தது. கம்யூனிஸ்டுக் கட்சி வடகேரளத்தின் வாக்குகளால் நிலைகொள்வதாக ஆகியது. கட்சிக்குள் வடகேரளத்து தலைவரான இ.கே.நாயனார் முதன்மை பெற்றார். தொடர்ந்து அவரே முதல்வராக இருந்தார். நாயனார் வயதிலும், அனுபவத்திலும் ,ஆற்றலிலும் கௌரியம்மாவை விட குறைவானவர். இ.எம்.எஸுக்குப் பின் கேரள கம்யூனிச இயக்கத்தின் பெருந்தலைவர் கௌரிதான். ஆனால் அவருக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு எப்போதும் குறைவாகவே இருந்தது. இது ஜனநாயகத்தின் வழி என்றெ கொள்ளவேண்டும்.

ஏற்கனவே நாயனாருக்கும் கௌரிக்கும் இடையே பூசல்கள் இருந்தன.1987 தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதல் அமைச்சருக்கான வேட்பாளராக கௌரியம்மாவே முன்னிறுத்தப்பட்டார். ஆனால் தேர்தல்வெற்றிக்குப் பின்னர் வடகேரள எம்.எல்.ஏக்கள் நாயனாரை தலைவராக தேர்வுசெய்தனர். அந்த தேர்தலில் வடகேரளத்திலேயே கம்யூனிஸ்டுக் கட்சி அதிக இடங்கள் பெற்றிருந்தது. கௌரியம்மா கறாரானவர், கட்சிக்காரர்களிடமும் கடுமையாக நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

கௌரியம்மாவுக்கு முக்கியமான துறைகள் வழங்கப்பட்டாலும் அவர் நாயனாருக்கு கீழே பணியாற்றுவதில் கசப்பு கொண்டார். கட்சியை பொதுமேடைகளில் விமர்சனம் செய்தார். கட்சி அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தபோது தோல்விக்கு நாயனாரே காரணம் என கடுமையாகக் கண்டித்தார். ஆகவே  1994 இல் கட்சிக்கு எதிராக செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஜனாதிபத்ய சம்ரக்ஷண சமிதி என்னும் கட்சியை தொடங்கிய கௌரி அடுத்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் சிறிய கூட்டணிக் கட்சியாக ஜே.எஸ்.எஸ் நீடித்தது. காங்கிரஸ் முதல்வர்களான ஏ.கே.அந்தோனி, உம்மன் சாண்டி இருவரின் அமைச்சரவைகளிலும் கௌரி பதவி வகித்தார். கடைசியாக 2004 முதல் 2006 வரை அவர் காங்கிரஸ் அமைச்சரவையில் விவசாயம்,கயிறுத்தொழில், விலங்குப் பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தார்.

கௌரியம்மா பதினைந்தாண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இன்று [மே-11, 2021] திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் தன் 102 ஆம் வயதில் காலமானார். கே.ஆர்.கௌரியின் தன்வரலாறு ‘என் வாழ்க்கை’. 2011ல் வெளியான அவருடைய அந்நூலுக்கு கேரள சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது.

சுள்ளிக்காடு கௌரியம்மாவைப் பற்றி எழுதிய கவிதை இப்படி முடிகிறது

இனி கௌரியம்மா சிதையாய் மாறும்

சிதையாளிடும்போள் இருளொட்டு நீங்ஙும்

சித கெட்டடங்கும் கனல் மாத்ரமாகும்

கனலாறிடும்போள் சுடுசாம்பலாகும்

செறுபுல்கொடிக்கும் வளமாய் மாறும்

[இனி கௌரியம்மா சிதையாய் மாறுவார்

சிதை எரிகையில் இருள் முற்றகலும்

சிதை அணைந்து கனல் மட்டுமாகும்

கனலும் ஆறும்போது சூடான சாம்பலாகும்

சிறு புல்லுக்கும் உரமாக ஆவார்]

ஒரு நூற்றாண்டு, ஒரு காலகட்டம், ஒரு பெண்மணி. கே.ஆர்.கௌரிக்கு இந்திய அரசியலிலும் உலக அரசியலிலுமேகூட நிகரான ஆளுமைகள் அரிதே. கேரளத்தின் துர்க்கைக்கு அஞ்சலி.

ஞான் கௌரி- கௌரியம்மா ஆவணப்படம்

முந்தைய கட்டுரைஅந்த நூல்
அடுத்த கட்டுரைஓர் ஆவேசக்குரல்