அமெரிக்கா சந்திப்பிற்கு பின் எழுதும் முதல் கடிதம் இது. இன்று ராலே நகரில் வெண்முரசு திரையிடல் மிகுந்த கொண்டத்துடன் முடிந்தது. கடந்த ஜூன் 2020 இல். நண்பர் ராஜனுடன் ஜோர்டான் ஏரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். தொடர்ந்து 2 மணி நேரம் உரையாடலுக்கு பிறகு சிறு அமைதி. ஏரியின் சிறு அலை எங்கள் கால்களை அவ்வப்போது வந்து நனைத்துக்கொண்டிருந்தது. அப்போது ராஜன் முதலாவிண்னிலிருந்து சில வரிகளை காண்பித்தார். “கண்ணானாய் காண்பதானாய் கரு நீலத் தழல்மணியே”. இது பாடலாக வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். ஆவணப்படத்தின் முதல் வித்து தொடங்கியது அங்குதான்.
பாடல் பதிவு முடிந்தவுடன். முழுநீள ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் முடிவு செய்தார்கள். இதோ இன்று திரையில் பிரமாண்டமாக உயர்தரமான இசையில் அந்த பாடல் வரும் போது வாசகர்கள் எல்லோரும் ரசித்தோம். கலைஞன் தான் காலத்தில் நின்று பேசுகிறான். அவனுடைய கலை மொழியின் செயல்பாடு. மாபெரும் பண்பாட்டின் அடையாளம். மூதாதையர்களின் குரல். வெண்முரசை மூதாதையரின் குரலாக 6 1/2 வருடங்கள் தொடர்ந்து எழுத்தில் நீங்கள் எழுதியதை அதே குரலுடன் திரையில் ஒலிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நண்பர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இதில் பல்வேறு வாசகர்கள், மூத்த எழுத்தாளர்கள், அமெரிக்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள்,தமிழ் திரைப்பட ஆளுமைகள், இந்திய குடிமைப்பணியில் உயர் பதவியிலிருப்பவர்கள், பல்வேறு நிலப்பரப்பில் வசிப்பவர்கள் எல்லோரும் வெண்முரசை அவர்களின் பார்வையில் சிறப்பாக பேசியிருக்கிறார்கள்.
கடலூர் சீனு “அத்வைதிகள் பண்பாட்டு ரீதியான ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது. ஜெமோ அவ்வழியில் வந்தவர். மேலும் வெண்முரசை இந்தியப்பெருமிதம்” என்று கூறினார்.
நாஞ்சில் அவர்கள் இதை மொழிக்குள் நடந்த சாதனையாக பார்க்கிறேன். மேலும் தோராயமாக எவ்ளவு சொற்களை பயன்படுத்தியிருக்கக்கூடம். இது ஒருவகையான தவம் என்றார்.
லட்சுமி மணிவண்ணன் கூறும் போது “ஜெயமோகனின் இடம் என்பதே தன்னிகரற்ற இடம் என்றுக் கூறினார்”. முத்துலிங்கம் அய்யா பேசும் போது “கனடா எழுத்தாளர்களுக்கு நான் ஜெயமோகனை அறிமுகம் செய்யும் போது இவரை தமிழில் நோபல் பரிசு பெறத்தகுதியான எழுத்தாளர் என்று தான் அறிமுகம் செய்கிறேன்” என்றார்.
இயக்குனர் வசந்த பாலன் “இதை வானளாவிய கலைக் கோபுரமாக பார்க்கிறேன் என்றுக் கூறினார்”. ராம்குமார் அவர்கள் வெண்முரசின் படிமங்களை பழங்குடி சமுதாயத்தின் பார்வையில் பேசினார். சுபஸ்ரீ “நாம் அறிந்த மகாபாரதம் மட்டும் இல்லை வெண்முரசு. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்வையும் வேறொரு கோணத்தில் அணுகி பார்க்க முடியும் என்றுக் கூறினார்”. மீனாம்பிகை “வெண்முரசு தன்னை தொடர்ந்து செப்பனித்துக்கொள்ள எப்படி உதவியது என்றார்.
சுதா அவர்கள் வெண்முரசில் சில நெகிழுச்சியான தருணங்கள் வழியான பயணத்தை உணர்வு பூர்வமாக பேசினார். சுசித்ரா “வெண்முரசு மூலம் எனக்கான இளையாதவன் கிருஷ்ணனை நான் எப்படி மறுஅறிமுகம் செய்துகொண்டேன் என்றார்”. ராதா சௌந்தர் பேசும் போது வெண்முரசு எப்படி தனக்கு நடைமுறை வாழ்க்கையின் சாராம்சத்தை படிமங்களாக வெண்முரசு கொண்டிருக்கிறது என்று விளக்கினார்
லோகமாதேவி ,மஹேஸ்வரி ஆகியோர் “வெண்முரசு தங்கள் குழந்தைகளின் ஆளுமையில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை விளக்கினார்கள்”. அருண்மொழி அக்கா வெண்முரசு உன்னதமாக எழுதப்பட்ட தருணங்களையும் . உலக இலக்கியத்தில் வெண்முரசு தனிப்பெரும் இடத்தை வகிப்பதை குறித்து அருமையாக பேசினார்கள்.
ஷாஹுல் பேசும் போது “வெண்முரசு தனக்கு எப்படி இந்தியாவின் மொத்த சித்திரத்தை அளித்தது என்றார். தொடர்ந்து வெண்முரசுடன் தினமும் பயணிப்பதாக கூறினார் “. நண்பர் சிஜோ பேசும் போது “வெண்முரசை பைபிளில் வரும் சில சம்பவங்களுடன் ஒப்பிட்டு பேசினார். காளிபிரசாத் பேசும் போது தர்க்கரீதியாக வெண்முரசை அணுகாமல் எப்படி பண்பாடு ரீதியாக புரிந்துக்கொள்வது என்று விளக்கினார்
ராஜகோபாலன் “இந்தியப் பண்பாட்டின் ஒட்டுமொத்தமான படைப்பு உரைநடையில் வந்திருப்பது வெண்முரசு மட்டுமே என்றார்” நண்பர் பழனி ஜோதி வெண்முரசு கதாபாத்திரங்களின் தேடல்களில் வரும் மெய்மையை அடையும் போது. மெய்மையை நாமும் எப்படி அடைகிறோம் என்று தன் பார்வையை முன்வைத்தார். தேடலில் வரும் மெய்மையின் மொத்த தரிசனம் தான் வெண்முரசு என்றார். நண்பர் வேணு “ஒப்பீட்டளவில் வெண்முரசு போன்ற நாவல் இது வரை உலகத்தில் வேறெந்த மொழியிலும் எழுதப்படவில்லை” என்றார்.
கிருஷ்ணன். “பெருவாழ்வு வாழ்வு வாழ வேண்டும் என்றால். வரலாற்றின் நிகழ்வுகளில் பங்கேற்க வேன்றும் என்றால் வெண்முரசை படிக்க வேண்டும் என்றார்”. அரங்கா 2013 டிசம்பர் மாதம் நடந்த விஷ்ணுபுரம் விழாவை தொடர்ந்து உங்களின் வெண்முரசு பெரும்செயலின் திட்டத்தை நீங்கள் விளங்கியதை கூறினார்.
Dr.Pamela Winfield “Professor of Religious Studies” பேசும் போது “I would characterize Mr.Mohan as humanist”என்றார்
ஆவணப்படம் பிரமாண்டமாக வந்திருக்கிறது. தரத்தை பார்க்கும் போது . எவ்வளவு உழைப்பை கோரும் பணி என்று தெரிகிறது. ராஜனுக்கும் . சௌந்தர் அண்ணா மற்றும் விஷ்ணுபுர இலக்கியவட்ட நண்பர்கள் மிகப் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்கள். பெரும் செயல் ஆற்றும் போது தடைகள் நமக்குள் இருந்து தானே வரும். ஒரு சிறுதுளி சந்தேகம் அல்லது “ஏன் தேவை” என்றாலும் நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது. நம் முழு ஆளுமையும் பரிசோதிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவோம். மேலும் இனைந்து பணியாற்றுவது என்பது ஒருவகையான சவால். பிடியை கடைசி வரைக்கும் கொண்டு செல்ல வேண்டும். தேர்ந்த வாத்தியார்கள் அவசியம். அதை சௌந்தர் அண்ணா செய்திருக்கிறார்.
கலையின் பிரமாண்டமே அதற்கு செலவிடும் நேரமும்தான். அர்ப்பணிப்பும் . ஒரு சின்ன செயலுக்கு ராஜன் மற்றும் சௌந்தர் அண்ணா மணிக்கணக்கு போராடுவார்கள். இதில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள். ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்களின் சிறப்பை வாங்குவதற்கு திட்டமிடுதல். நொடிப்பொழுதில் யோசிக்கும் திறன் அவசியம்.
பாடல் மற்றும் இசைக்கோர்வையை தனியாக நண்பர்கள் கேட்க வேண்டும் . ஆவணப் படம் முழுவதும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டது. இதில் உள்ள ஆளுமைகள்/கலைஞர்கள் இந்திய மற்றும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றவர்கள். அவர்களின் நேரத்தை கோருவதும் அதை சிறப்பாக பயன்படுத்துவதும் எவ்வளவு சவால் என்று. மிகுந்த கவனத்துடன் “Detailing” செலுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக “Editing”/மற்றும் இசைக்கோர்வை செய்யப்பட்டுள்ள முறை. நண்பர்கள் பார்த்து புரிந்து கொள்ளலாம். நம் குழு நண்பர்கள் “subtilte” சிறப்பாக செய்துள்ளார்கள். அவர்களின் மிகப்பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார்கள். ஆவண படத்தின் தரத்தை “subtilte” இன்னும் உயர்த்துகிறது.
“கண்ணானாய் காண்பதானாய் கரு நீலத் தழல்மணியே” பாடலுக்கு மிக அருமையாக ராஜன் இசை அமைத்திருக்கிறார். இதில் கமல். ஸ்ரீராம் பார்த்தசாரதி. சைந்தவி போன்ற திறமையான கலைஞர்கள் முழுஅர்பணிப்பை கொடுத்திருக்கிறார்கள். சிதார் கலைஞர் ரிஷாப் ரிக்கிறாம் (இவர் ரவி சங்கர் அவர்களின் கடைசி மாணவர்) சிதார் இசை ஒரு விதமான “transcendental state” நம்மை அழைத்து செல்கிறது.
சென்னை/நியூயார்க்/ஜெர்மனி/ராலே போன்ற பல இடங்களில் இசைகோவை செய்யப்பட்டுள்ளது. சைந்தவி இப்பாடலை மிகவும் உணர்வுபூர்வமாக பாடியிருக்கிறார்.
“சிறுதண்டை சுழன்ற மென்கால்மலரே.
சற்றென விலகி விரிமலரின் முதலிதழோ எனத் தோன்றும் பெருவிரலே.
இளம்பாளை தளிரென்ற பாதப்பரப்பே.
அதிலெழுந்த ஆழிச்சங்குச் சுழியே.
அமுதுண்ணும் களிப்பில் நெளியும் சிறுகுமிழ் விரல்களே.
அமைக என் தலைமேல்!
அமைக இப்புவிமேல்!
அமைக திருமகள் மடிமேல்!
அமைக இக்ககனவெளிமேல்!
அமைக காப்பென்று அமைக!”
என்ற வரிகள் தன்னை மிகவும் பாதித்ததாக கூறினார்”.
இதில் பங்குபெற்ற வாசகர்கள். கலைஞர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி. மிகப்பெரிய அனுபவத்தை உருவாக்கி தந்த ராஜன். சௌந்தர் அண்ணா. விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்கு அன்பும். பாராட்டுகளும்.!!
விவேக் சுப்ரமணியன்