கதாநாயகி – குறுநாவல் : 4

அன்றும் முந்தையநாள் போல மாலை நான்கு மணிக்குமேல் காடு இருட்டிக்கொண்டே வந்தது. இலைகள் அசைவிழந்தன. எங்கும் இறுக்கமான நீராவிப்படலம் நிறைந்து, அழுத்தி மூடியது. ஓசைகள் நீருக்குள்ளிருந்து கேட்பவைபோல் ஒலித்தன. பறவைகள் பறந்து பறந்து அகன்று செல்வதுபோல அவற்றின் ஓசைகள் மயங்கி அமைந்து கொண்டிருந்தன.

நான் வாசலில் அமர்ந்து வெளியே மழை முறுகி வருவதை பார்த்துக் கொண்டிருந்தேன். குளிருக்குப் பதில் வெப்பம் தான் ஏறி ஏறி வந்தது. என் உடல் வியர்த்து வழிந்தது. விசிறியால் உடலின் ஒவ்வொரு பக்கத்தையாகத் தேடித்தேடி விசிற வேண்டியிருந்தது. ஒரு கட்டத்துக்குப்பிறகு மூச்சுத்திணறத் தொடங்கியது. விசிறியால் மூக்குக்கு முன்னால் விசிறிக்கொண்டிருந்தேன். நாக்கை தள்ளி வாயைத் திறந்து பறவைகள் போல் அமர்ந்திருந்தேன்.

பின்னர் காட்டில் பறவைகள் எதுவும் இல்லை என்பதைக் கவனித்தேன். அவையனைத்தும் இலை தழைகளுக்குள் மறைந்துவிட்டிருந்தன. ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும் காகங்களின் ஓசைகூட முற்றாக மறைந்து விட்டிருந்தது. நான் மழையின் முதல்துளி விழும் கணத்திற்காக காத்திருந்தேன். பெரிய துளிகளாக மரத்திலிருந்து உதிர்க்கப்பட்டது போல அம்புகள் போல நீர்த்துளிகள் வந்து விழும் என்று நினைத்தேன். அதற்குள் கடுமையான வெயிலில் வெந்து முற்றம் நீர்காத்து தகித்துக்கிடந்தது.

ஆனால் எதிர்பாராத கணத்தில் மிகத்தொலைவில் ஓங்கார ஓசை எழுந்தது. எந்த திசையிலிருந்து எழுந்ததென்றே நிதானிக்க முடியவில்லை. கிழக்கு என்று நினைத்தேன். திரும்பி கிழக்கு திசை நோக்கி பார்த்தேன். அங்கே வெளிச்சமில்லை. வானில் எல்லாத்திசையுமே ஒருங்கு திரண்டு ஒரு அரைவட்டமாக இருந்தது. ஓசை மிகச்சில கணங்களிலேயே அணுகி என்னை மூடிக் கடந்து சென்றது பங்களாவின் மீது வானிலிருந்து பிரம்மாண்டமான அருவி ஒன்று விழுந்து அசைவின்றி நிற்கத்தொடங்கியது. பின்னர் சிறிய அலைகளுடன் அதன் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

எங்களூரில் மழைக்குமுன் பலத்த காற்று வீசும். பெரும்பாலும் மழை தென்கிழக்கிலிருந்து வரும். மலைகளின் இடைவெளியினூடாக வருவதாகையால் காற்று கூர்மைகொண்டு தென்னை மரங்களை வில்லென வளையச்செய்வதாக ஓலைகளை மறுபுறம் எழுந்து பறந்து துடிக்கச்செய்வதாக இருக்கும். இங்கே காற்றில்லை. வானை ஓரு கத்தியால் கிழித்து உள்ளே தேங்கியிருக்கும் ஒரு மாபெரும் ஏரியை கொட்டச்செய்வது போல மழை விழுந்தது

மழையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஓர் உளச்சோர்வு ஏற்பட்டது. முதல் நாள் மழை அளித்த பாதுகாப்புணர்வை, கதகதப்புணர்வை, கிளர்ச்சியை பின் உருவான அமைதியை உணரமுடியவில்லை. மழையிருள் சன்னல் கண்ணாடிகளை நீர்நீல நிறத்திற்கு மாற்றியிருந்தது. அவற்றின் மேல் நீர் விழுந்து வழிய அவை உருகிக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. வீட்டுக்குள் அத்தனை பொருட்களிலும் மிக நுண்மையான நீர்த்துளிகள் பரவியிருந்தன. மேஜை மேல் சுட்டுவிரலால் எனதுபெயரை எழுத முடிந்தது.

கோரன் இரவுணவை சமைத்து கொண்டு வந்தான். கொதிக்கும் கஞ்சி பூசணிக்காய் கறி மதியம் செய்ததின் மிச்சம். பூசணிக்காயை துண்டுகளாக வெட்டி வேகவைத்து, அதில் உப்பும் மிளகாயும் போட்டு கிளறி எடுக்கப்பட்டது. தாளிக்கும் வழக்கம் அங்கில்லை. மரவள்ளிக்கிழங்கை துண்டுகளாக்கி அவித்து உப்பும் மிளகாய்ப்பொடியும் சேர்த்து கிளறி, அதன்மேல் தேங்காயெண்ணை ஊற்றி உருவாக்கிய பொரியல். அந்த இடத்திற்கு மிக தாராளமான மிக ஆடம்பரமான உணவுதான்.

மழை கஞ்சியை வயிறுமுட்ட குடிக்கச் செய்தது. மழைக்காலத்திற்குக் கஞ்சி சிறந்த உணவு. நமக்கு தண்ணீர் அருந்தவேண்டும் என்று தோன்றுவதில்லை. வெக்கைக்கு திடப்பொருட்களை உண்ணத் தோன்றுவதில்லை. ஆனால் தாகமிருப்பதனால் கஞ்சி நம்மை அறியாமல் உள்ளே செல்கிறது. இரவில் மிக விரைவிலேயே செரித்து வயிற்றை காலியாக்கிவிடுகிறது. இரவில் வயிறு ஒழிந்திருப்பது மிக ஆழ்ந்த தூக்கத்தை அளிக்கும்.

உண்மையில் நான் டிசம்பர் ஜனவரி மாத குளிர் காலம் தவிர எப்போதுமே எங்களூரில் அப்படி அசந்து தூங்கியதில்லை. மெய்மறந்து தூங்குவதென்பது ஒவ்வொரு குளிர்காலத்தையும் எதிர்பார்க்கச் செய்யும் இனிய நினைவாகவே இருந்தது. இங்கே அந்த குளிர்காலமே ஆண்டெல்லாம் நீடிக்கும் போல. இத்தகைய சூழலில் உள்ளம் ஆழத்தில் அமைதியடைந்துவிடுகிறது. மேலே ஒரு மெல்லிய பதற்றமோ அலையோ இருந்தாலும் கூட அகம் ஓய்ந்தே கிடந்தது. ஏனெனில் மிக தொலைவில் இருந்தது எனது குடும்பம் நானறிந்த உலகம், அங்கே ஒன்றுமே நிகழவில்லை.

காடு என்பது ஒரு நிகழ்வு மிக நிதானமான ஒற்றை நிகழ்வு அது. ஒரு அசையாப்படத்தை பார்த்துக் கொண்டிருப்பது போல. விலங்குகளும் பறவைகளும் புழு பூச்சிகளும் நிறைந்திருந்தாலும் கூட, காலையும் மாலையும் மாறி வந்தாலும் கூட, மழையும் வெயிலும் அடித்தாலும் கூட அது ஓர் ஓவியம் மட்டும்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த அசைவின்மை நம்முள்ளும் குடியேறிவிடுகிறது. அசைவின்மை ஓய்வை அளிக்கிறது. ஓய்வு சூன்யத்தை அளிக்கிறது.

உண்மையில் அங்கு சென்ற பலமாத காலம் நான் பெரும்பகுதி நேரத்தை தூங்கித்தான் கழித்தேன். தூக்கத்தை குறைத்துக்கொண்டு இயல்பான சுறுசுறுப்புடன் இருப்பதற்கு காடு என் அகத்திற்கு பழகவேண்டியிருந்தது. அதன்பிறகு ஊருக்கு வந்தால் ஊர் ஒரு இரும்பாலை போல கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. புயல் பிடித்த காடு போல கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் இன்னொருவரை நோக்கி அடிவயிற்றிலிருந்து கூச்சலிடுகிறார்கள் என்று தோன்றியது என் நரம்புகள் அதிர்ந்து கொண்டிருந்தன. ஊரில் நான் ஓரிரு நாட்கள் கூட தங்காமல் ஆனேன். தூங்க முடியாமல் ஆனேன். மீண்டும் காட்டுக்கே திரும்பினேன்.

அன்று ஏழுமணிக்கே கஞ்சி குடித்து நாற்காலியில் அமர்ந்து அந்த புத்தகத்தை வெறுமே புரட்டிக் கொண்டிருந்தேன். அந்த முன்னுரையை இன்னொருமுறை வாசித்தேன் அதில் நான் வாசித்த எதுவுமில்லை என்பதை எனக்கே மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்பவன் போல. பின்னர் எழுந்து சென்று படுத்து கம்பளியை போர்த்திக் கொண்டேன். மழை வானிலிருந்த மொத்தக் குளிரையும் மண்ணுக்கு இறக்கிவிட்டிருந்தது. சன்னல்கள் மூடப்பட்டிருந்தாலும் கூட உள்ளே குளிர் வந்துகொண்டிருந்தது. அங்கிருந்த சன்னல்களை இறுக மூட முடியும் என்றாலும் ஓட்டுக்கூரைகளை இடைவழிகளினூடாக காற்று வருவதை தடுக்க முடியவில்லை. ஆனால் அந்தக்குளிர் மிதமிஞ்சிப் போகாமல் போர்வைக்குள் எண்ணிய கதகதப்பை அனுபவிக்கும் அளவுக்கே தேவையானதாக இருந்தது. நான் தூங்கிவிட்டேன்.

தூக்கத்தில் நான் ஒரு கனவு கண்டேன் அது கனவா என்பதை என்னால் இப்போதுமே கூடச் சொல்லிவிட முடியாதுதான் என் அருகே எவரோ நின்றிருந்தார்கள். குனிந்து என்னை பார்த்தார்கள். இம்முறை அந்தப் பார்வையை என்னால் உணரமுடிந்தது. எப்படியோ அக்கண்களினூடாக என்னால் அது பெண்ணென்று உணரமுடிந்தது. ஒரு பெண்! யார் அவள்? எனக்குத் தெரிந்த எந்தப்பெண்ணும் அல்ல.

எனக்குத் தெரிந்த பெண்களே குறைவு என் அம்மா, தங்கைகள் தவிர வேறெந்த பெண்ணையும் நான் அருகே பார்த்ததில்லை. நெருக்கமாக உரையாடியதுமில்லை. அவர்களின் அருகாமை என்னவாக இருக்குமென்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பெண் அத்தனை நெருக்கமாக தன் இருப்பை உணர்த்துகிறாள் என்றால் இவள் பொய்யல்ல, உண்மை. உண்மையால்தான் முன்பிலாத ஒன்றாக திகழமுடியும். பொய்யென்பது முன்பிருந்த ஒரு உண்மையின் மறுநிகழ்வாகவே இருக்க முடியும்.

ஆனால் இவள் இந்த பங்களாவில் ஏன் இருக்கிறாள்?. இங்கே என்ன செய்கிறாள்? நான் தூங்கும்போது மட்டும் வந்து ஏன் என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்?

நான் “என்ன?” என்றேன்.

அவள் மிக மெல்ல என் காதில் “அந்தப் புத்தகம்” என்றாள்.

நான் “என்ன?” என்று உரக்க கேட்டேன்.

“படிப்பதாக சொன்னீர்கள்” என்று மீண்டும் சொன்னாள்.

“ஆமாம், அதற்கென்ன?” என்று சொன்னேன்.

“இப்போது மணி இரண்டு” என்றாள்.

“இரண்டா?” என்றேன்.

“ஆமாம், இரண்டு.”

“ஆனால் நான் இப்போதுதானே படுத்தேன்” என்றேன்.

“இல்லை நீங்கள் அசந்து தூங்கிவிட்டீர்கள்.”

“இப்போது மணி இரண்டு நேற்று நீங்கள் வாசித்த அதே நேரம்.”

“அப்படியா?” என்றேன்.

கையூன்றி எழுந்தமர்ந்தேன் மழை அதே போலவே நின்று பெய்து கொண்டிருந்தது. சன்னலுக்கு அப்பால் கிளைகள் முறியும் ஓசை கேட்டது அறையின் மூலையில் கோரன் கம்பளிக் குவியலாக தூங்கிக் கொண்டிருந்தான்.

நான் எழுந்து நின்று சோம்பல் முறித்தேன். என்ன கனவு அது? ஒரு பெண் வந்து என்னை எழுப்பியிருக்கிறாள். சட்டென்று கடிகாரத்தை எடுத்து மணி பார்த்தேன். இரண்டு. மிகச்சரியாக. மெய்யாகவே எனக்கு சொல்லியிருக்கிறாள். கனவு அளிக்கும் திகைப்பு என்பது நாம் நம் உள்ளாழத்தை நேருக்குநேர் பார்ப்பதன் விளைவு.

நான் பெருமூச்சுடன் சென்று அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். அரிக்கேன் விளக்கொளியில் அந்த அறை சிவப்பான மங்கலான ஓவியப்பரப்பு போலிருந்தது. எழுந்து சென்று குடுவை விளக்கை பற்றவைத்து மேஜைமேல் கொண்டுவந்து வைத்துக் கொண்டேன். இத்தனை கற்பனைகளை இத்தனை உயிர்ப்புடன் எழுப்பக்கூடியதாக என் மனம் முன்பு இருந்ததில்லை. என் ஊரில் நான் ஒருபோதும் இத்தகைய தீவிரமான கற்பனைகளை கனவையும் அடைந்ததில்லை.

அதற்குக் காரணம் நான் என் வழக்கமான சூழலிலிருந்து வெளியே வந்ததில்லை என்பதாக இருக்கலாம் திரும்ப திரும்ப ஒரே வாழ்க்கை. ஒரே நிகழ்வுச்சரடு. ஆகவே என் கற்பனை மேலே பொருக்கோடி கடினமாக இருக்கிறது. கற்பனைக்கு இத்தனை தீவிரமான சாத்தியம் கொண்ட இத்தகைய ஓர் இடத்தில் நான் இதே போலத்தான் எண்ணங்களை வளர்த்துக்கொள்வேன் என்று நினைத்தேன். எவராக இருந்தாலும் அதைத்தான் செய்வார்கள்.

பின்னர் நான் படித்தறிந்தேன், ஒரு சூழலை தர்க்க உள்ளமும் அதர்க்க உள்ளமும் சேர்ந்தே புரிந்துகொள்ள முயல்கின்றன. தர்க்க உள்ளம் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறது. அதற்கு தொடர்பில்லாதபடி அதர்க்க உள்ளம் இன்னொரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறது. இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று படிந்து ஒற்றை சித்திரமாக ஆகவேண்டும். அதுவரை உள்ளம் தத்தளித்துக் கொண்டிருக்கும். அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும். ஒன்று தொட்டு இன்னொன்றுக்கு ஓடிக்கொண்டிருக்கும். அதர்க்க உள்ளம் கனவுகளை முடிவில்லாமல் சமைத்து தர்க்க உள்ளத்துக்கு அளித்துக்கொண்டே இருக்கும். அவற்றை உடைத்து கலந்து தர்க்க உள்ளம் தனக்கான உண்மையை உருவாக்கிக்கொள்ளும்.

நான் அந்த புத்தகத்தை எடுத்து பிரித்து அதன் முன்னுரையை படித்தேன். அதன் முதல் வார்த்தையைக்கூட என்னால் படிக்க முடியவில்லை. என் உள்ளம் பதறிக்கொண்டிருந்தது. மெல்ல தெளிந்து அந்த எழுத்துக்கள் விரிந்தபோது நான் அது பகலில் படித்த அதே கட்டுரைதான் என்பதைக் கண்டேன், வரிக்கு வரி அதுவேதான். நான் படித்த அந்த டைரிக்குறிப்புகள் இல்லை. பெரும்பாலான செய்திகள் இல்லை.

சலிப்புடன் புத்தகத்தை மூடினேன். நேற்றைய கனவு மட்டும்தான் அது. அதை விரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இங்கிருக்கும் இந்த சலிப்பை வெல்ல விரும்புகிறேன். எதையாவது நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். பிறகு நினைவுகூர, பலரிடம் சொல்ல. என்னை எப்போதுமே எழுதாத ஓர் எழுத்தாளன் என நினைத்துக் கொள்பவன். என்றாவது ஒரு நல்ல நாவலை எழுதிவிடுவேன் என்று உள்ளூர கருதிக்கொண்டிருப்பவன்.

மீண்டும் அந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். முன்னுரைக்குப்பின் ஒரு சுருக்கமான பதிப்புரை இருந்தது. ஈவ்லினா ஒர் இளம்பெண் உலகுக்குள் நுழைந்த வரலாறு1778ல் ஃபேன்னி பர்னியால் எழுதப்பட்டு அவருடைய மூத்த நண்பர் சாமுவேல் கிரிஸ்ப் முயற்சியால் தாமஸ் லாண்டர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. முதலில் அது ஆசிரியர் பெயரில்லாமல்தான் வெளியாகியது. ஆனால் லண்டன் வட்டாரங்களில் அந்த நாவலின் பல வடிவங்களை பலரும் முன்னரே வாசித்திருந்தார்கள். அவர்களுக்கு அதன் ஆசிரியை நன்கு தெரிந்தவராக இருந்தார்.

கவிஞரும் இறையியலாளருமான ரெவரென்ட் ஜார்ஜ் ஹட்டர்ஸ்போர்ட் அந்நாவலை ’பாவத்தின் குமிழி’ என்று கண்டித்து அதன் ஆசிரியையின் பெயரையும் வெளியிட்டு எழுதினார். ஆனால் அது ஃபேன்னிக்கு மேலும் புகழ்சேர்க்கவே உதவியது. ஃபேன்னியே அதை ஒரு ’தீமையின் கவிதை’ என்றுதான் சொல்லிக்கொண்டார். ‘பாவத்தை அஞ்சுவதை விட எதிர்கொள்வதே நல்லது என்று ஒரு பெண் கற்றுக் கொள்ளும்போதே அவள் வெல்லத் தொடங்குகிறாள்.’

நான் பல பக்கங்களை புரட்டி பார்த்துவிட்டு வாசிக்க ஆரம்பித்தேன். நான் அந்நாவலை அதன்பின் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் ஒருமுறை வாசித்திருக்கிறேன். மூன்று வால்யூம்கள் கொண்ட அந்நாவல் ஆவணத்தொகை நாவல் [Epistolary novel] என்ற வகைமைக்குள் பின்னாளில் விமர்சகர்களால் சேர்க்கப்பட்டது. கற்பனையாக எழுதப்பட்ட கடிதங்கள், குறிப்புகள் போன்ற ஆவணங்களின் தொகுதியாக அமைந்தது.

நாவலின் கதாநாயகி ஈவ்லினா அரசகுடியைச் சேர்ந்த ஒரு காமக்களியாட்டனின் மகள். பதினேழு வயது வரை அவள் ஒரு சிறு கிராமத்தில் வளர்க்கப்படுகிறாள். பிரிஸ்டல் அருகே உள்ள ஹாட்வெல்ஸ் என்னும் சிற்றூரில் அங்குள்ள மதக்கல்வியையும் அடிப்படை எழுத்தறிவையும் இசைக்கல்வியையும் மட்டும் பெற்ற ஈவ்லினா ஒருவகை கிராமத்து அப்பாவியாகவும், ஆனால் இயல்பான கூர்மையும் சூழ்ச்சித்திறனும் நகைச்சுவையுணர்வும் கொண்டவளாகவும் வளர்கிறாள்.

ஈவ்லினா அங்கிருந்து லண்டன் வருகிறாள். அன்றைய லண்டனின் உயர்குடி வாழ்க்கையின் அபத்தமான ஆசாரங்களையும், பொதுப்புழக்க நாகரீகங்களையும், முடிவே இல்லாத வம்புப் பேச்சுகளையும், கள்ள உறவுகளையும், ஊழல்களையும் கண்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு அவற்றை தானும் கையாளக் கற்றுக்கொண்டு கெட்டிக்காரியாகி ஒரு நல்ல ஆணை கண்டுபிடித்து காதலில் வீழ்த்தி கல்யாணம் செய்துகொண்டு ஒரு மதிக்கத்தக்க சீமாட்டியாக ஆவதுதான் கதை.

பழையபாணி ஆங்கிலம். நீளநீளமான சொற்றொடர்கள். ஆகவே ஒவ்வொரு வரியையும் நிறுத்தி நிறுத்திப் படித்து, கொண்டுகூட்டிப் பொருள் கொண்டு மேலே செல்ல வேண்டியிருந்தது. நாவலின் தொடக்கத்தில் டூவல் சீமாட்டி தன் பேத்தியான ஈவ்லினாவை சந்திக்க லண்டனுக்கு வரவிருப்பதைப் பற்றிய ஒரு கடிதம் இருந்தது. டூவல் சீமாட்டியின் தோழியான கிழவி ஹோவார்ட் சீமாட்டி தனக்கு நெருக்கமான ரெவெரெண்ட் ஆர்தர் வில்லர்ஸுக்கு தெரிவித்த கடிதம் அது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் டூவல் சீமாட்டி தன் மகள் கரோலினை முழுமையாகவே விலக்கி வைத்துவிட்டாள். குடும்ப கௌரவத்தை குலைத்துவிட்டவள் என்று மகள்மேல் கிழவிக்கு கோபம். ஆனால் கரோலினுக்கு ஒரு மகள் இருப்பதை அவள் அறியவில்லை. அந்த மகளுக்கு பதினெட்டு வயதாகப்போகிறது என்ற செய்தியை சிலநாட்களுக்கு முன்புதான் அறிந்திருந்தாள். பேத்தியை உடனே சந்திக்கவேண்டும் என்று விரும்பினாள்.

Can any thing, my good Sir, be more painful to a friendly mind, than a necessity of communicating disagreeable intelligence? Indeed it is sometimes difficult to determine, whether the relator or the receiver of evil tidings is most to be pitied. என்ற சொற்றொடரையே நான் நாலைந்து தடவை வாசித்தேன். அந்த மொழிக்குள் செல்வது என்பது நாம் நின்றிருக்கும் மண்ணை தோண்டி துளையிட்டு உள்ளே செல்வது போன்றது. நடுவே பெரிய கல் வந்து தடுக்கும். அங்கே நம் துளையிடும் பற்கள் உடையும்.

பின்னர் கண்டுகொண்டேன், நாம் அந்த சொற்றொடரை தமிழில் மொழியாக்கம் செய்துகொண்டே வாசிக்கக் கூடாது. அது மூளையை களைப்படையச் செய்கிறது. ஏனென்றால் அந்த மொழிக்கட்டுமானமே வேறு. அதை உடைத்து துண்டுதுண்டாக்கி திரும்ப இணைத்துத்தான் தமிழாக ஆக்கமுடியும். அந்த சொற்றொடர் சொல்வதென்ன என்று மட்டுமே கவனித்தபடி வாசித்துச் செல்லவேண்டியதுதான் ஒரே வழி.

ரெவெரெண்ட் வில்லர்ஸ் ஹோவார்ட் சீமாட்டிக்கு எழுதிய கடிதம் அடுத்தது. அதன் மொழியும் அதேபோலத்தான். மொத்த நாவலும் அந்த உபச்சார மொழியாகவே இருக்குமோ என்ற பீதியை கிளப்பியது அது. Your Ladyship did but too well foresee the perplexity and uneasiness of which Madame Duval’s letter has been productive. However, I ought rather to be thankful that I have so many years remained unmolested, than repine at my present embarrassment; since it proves, at least, that this wretched woman is at length awakened to remorse…. இப்படித்தான் அந்தக் காலத்தில் பேசி எழுதிக் கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களுக்கு ஏராளமான நேரம் இருந்திருக்கிறது.

ரெவெரெண்ட் வில்லர்ஸ் கிழவியுடன் ஈவ்லினை அனுப்புவது சரிதானா என்ற ஐயத்தை அடைகிறார். ஏனென்றால் கிழவி வாழும் உயர்குடிச்சூழல் பாவமும் பாவனைகளும் நிறைந்தது. கிழவியின் மகளான கரோலின் சர். ஜான் பெல்மோர்ட் என்ற பிரபுவை ரகசியத் திருமணம் செய்துகொண்டாள். பின்னர் அவர் அந்த திருமணத்தை மறுத்துவிட்டார். குழந்தை தந்தையில்லாமல் பிறந்து அனாதையாக வளர நேர்ந்தது. ஈவ்லின் எளிமையான சூழலில் பக்தியும் அர்ப்பணிப்பும் கொண்ட பெண்ணாக வாழ்வதற்கு கிராமமே நல்லது என்று நினைத்தார்.

ஆனால் ஈவ்லின் தனக்கென திட்டங்கள் வைத்திருந்தாள். அவளுடைய அழகான கள்ளமற்ற முகத்தால் அவை மறைக்கப்பட்டிருந்தன. அவளுக்கு அந்தச் சிற்றூர் சலிப்பூட்டியது. அவள் எழுதிய கடிதத்தில் அவள் அந்த ஊரை பலவாறாக பழித்தும் கசந்தும் எழுதியிருந்தாள். இந்த சிற்றூரை நான் வெறுக்கிறேன். இது கள்ளமற்றது என்கிறார்கள். இல்லை என்று நான் அறிவேன். ஏனென்றால் ஒவ்வொருநாளும் துணி தைக்கும் பெண்களுடனும் லினன் நெய்யும் பெண்களுடனும் பேசிக்கொண்டே இருக்கிறேன். இது பாவம் நிறைந்த, ஆனால் பாவம் செய்வதற்கான சூழல் அமையாத ஊர். செய்யமுடியாத பாவம் கற்பனையில் பெருகி இவர்களைச் சூழ்ந்திருக்கிறது.

இப்படிச் சொல்கிறேன், இந்த ஊரின் ஒர் எளிமையான பெண்ணை கடவுள் எடுத்துக்கொண்டு சென்று அவள் உள்ளத்தை வெட்டி ஆராய்ந்தார் என்றால் அங்கே ஆயிரம் சாத்தான்களும் பல்லாயிரம் பேய்களும் நடனமாடிக்கொண்டிருப்பதைக் காண்பார். லண்டன் நகரையே மூடிவிடுமளவுக்கு சாக்கடைப் பெருக்கு ஒன்றை கற்பனை செய்யுங்கள், அதுதான் இங்குள்ள ஒரு பெண்ணின் உள்ளம். ஏனென்றால் அது பாவத்தை உடலால் செய்ய வாய்ப்பே அமையாத துரதிஷ்டம் கொண்டது.

அப்படியென்றால் நான் விரும்புவது என்ன? நான் லண்டனுக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் எதற்கு? இந்த பாவத்தில் இருந்தெல்லாம் தப்பவேண்டும் என்றுதானே நான் ஆசைப்படவேண்டும்? ஆனால் அப்படி தப்பவேண்டுமென்றால் நான் மேலும் மேலும் உள்ளே செல்லவேண்டும். கத்தோலிக்க கான்வெண்டுகளுக்குள் செல்லவேண்டும். அந்தக் கான்வெண்டுகள் ஏதாவது மலையுச்சிகளில் இருக்கவேண்டும். ஆனால் அங்கும் நான் என் இதே உள்ளத்துடன் செல்வேன். அது பாவம் வளரும் செழிப்பான நிலமல்லவா?

நான் பாவத்தை குறைப்பதற்கு ஒரே வழிதான் உள்ளது, அது நடைமுறையைச் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பளிப்பது. நடைமுறையில் இந்த உடலால், இது உருவாக்கும் உறவுகளால், மனிதர்களால் ஓர் எல்லைக்குமேல் பாவம் செய்ய முடியாது. ஒரு பாவத்தின் விளைவை நன்மையாகவோ தீமையாகவோ அனுபவித்துவிட்டால் பாவம் ஓர் எல்லையை கண்டுவிடுகிறது. பாவம் செய்து, அதனால் அடிவாங்கியவர்களிடம் மட்டுமே பாவத்துக்கான மெய்யான அகத்தடை இருக்கிறது. மற்றவர்கள் எல்லாருமே செய்யாத பாவத்தில் மகிழ்ந்து திளைப்பவர்கள் மட்டுமே.

ஈவ்லினை அவள் பாட்டியிடமிருந்து விலக்குவதற்காக ரெவெரெண்ட் வில்லர்ஸ் அவளை ஹோவார்ட் சீமாட்டியின் இல்லத்துக்கே அனுப்புகிறார். அங்கே ஒரு சிறு விடுமுறைக் கொண்டாட்டத்தை அவள் கழிக்கலாமென நினைக்கிறார். அங்கே ஹோவர்ட் சீமாட்டியின் மருமகனாகிய கடற்படை அதிகாரி காப்டன் மிர்வின் வருகிறார். அவர் அப்போதுதான் கப்பலில் இருந்து கரைக்கு வந்திருக்கிறார். அவர் ஓய்வுபெறும் வயதில் இருக்கும் முதியவர். நிறைய அனுபவங்கள் கொண்டவர். ஆனால் தான் ஒரு கனவான் என்றும், பெண்கள் தன்னுடன் பழகும்பொருட்டு உருகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்புகிறார். அவருடன் லண்டனுக்குச் செல்ல ஈவ்லின் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெறுகிறாள். தன்னை அழைத்துச்செல்லும்படி மிர்வினை பேசிப்பேசிக் கரைக்கிறாள்.

இந்த காப்டன் மிர்வின் ஒரு அற்புதமான மடையன். ஆண்மை என்று ஒன்றை நம்பி அதை தன் வெளிப்பாடாக வைத்திருக்கும் ஆண்களைப்போல மடையர்கள் எவருமில்லை. மோவாயை தூக்கிக்கொண்டு விருந்துகளில் அலைகிறார்கள். அப்படியே மேலதிகாரிகள் முன் வணக்கம் வைக்கிறார்கள். அப்படியே சென்று போர்க்களத்தில் சாகிறார்கள். சவப்பெட்டியிலும் மோவாயை தூக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் மிகச்சிறந்த குதிரைகள் இவர்கள். ஆனால் ஏறுவதற்குப் பழகியிருக்கவேண்டும்.

நான் ஒன்றைக் கண்டுகொண்டேன். அதுவரை நான் நம்பியிருந்த ஒன்று பொய். நான் கிராமத்தில் புனைவுகளை படித்தே வாழ்ந்தவள். எல்லாமே பதினாறாம் நூற்றாண்டு இசைநாடகங்கள், வீரசாகசக் காதல்கதைகள். வாளேந்திய தீரர்கள், அவர்களை காதலிக்கும் மென்மையான காதலிகள். கூர்முனைக் கோட்டைகள், உருளைக்கல் பரவிய குதிரைப்பாதைகள், கொடியவர்களான டியூக்குகள், கம்பீரமான பிரபுக்கள், பணிவான குடியானவர்கள், வெள்ளை உள்ளம் கொண்ட குடியானவப் பெண்கள், எப்போதுமே கனிந்து கொண்டிருக்கும் செவிலியன்னைகள், விசுவாசமான வேலையாட்கள். அவையெல்லாம் பொய், வெற்றுக் கற்பனை, அவற்றை கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாது என்று எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நான் அப்படித்தான் நினைத்திருந்தேன்.

ஆனால் அது என் கிராமச்சூழலுக்குத்தான் பொருந்துவது. இந்த பிரபுகுடும்பச் சூழலில் நான் பதினாறாம் நூற்றாண்டு இசைநாடகங்களில் கண்ட வாழ்க்கைதான் உண்மையிலேயே இருக்கிறது. அந்த வாழ்க்கை அல்ல, அதன் போலி நகல். இங்கே எல்லா சீமாட்டிகளும் அந்த கதைநாயகியரை நடிக்கிறார்கள். எல்லா ஆண்களும் அந்த கதைநாயகர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களின் அசட்டுத்தனமான பேச்சு மொழியும் அதன் சொலவடைகளும் அப்படியே நிகோலாஸ் உடாலின் நாடகத்தில் இருந்து எடுத்தவை.

அதை நான் நன்றாகவே நடிக்க முடியும். ஏனென்றால் அதைத்தானே நான் பகற்கனவில் நடித்துக் கொண்டிருந்தேன். நான் என்னை அப்பாவியான, நாகரீகமே அறியாத, எளிமையான அன்பும் கனிவும் கொண்ட கிராமத்து அழகியாக காட்டிக்கொண்டேன். நாகரீகத்தின் கறைபடியாத ஒரு தேவதை. காப்டன் மிர்வின் போன்றவர்களுக்கு அந்தவகை பெண்கள் மேல் ஒரு மயக்கம். ஏனென்றால் அந்தவகைப் பெண்களை அவர்கள் அதற்கு முன் கண்டிருக்க மாட்டார்கள். கற்பனையிலேயே உருவாக்கி வைத்திருப்பார்கள்.

அத்துடன் அவர்களுக்கு அவர்களின் வீங்கிய ஆணவத்தை மென்மையாக வருடிக்கொடுக்கும் பெண் தேவைப்படுகிறாள். இந்தச் சீமாட்டிப் பெண்களை அவர்கள் நிறையவே பார்த்திருப்பார்கள். அவர்களின் பட்டு ஆடைக்குள், பயின்று தேர்ந்த மொழிக்குள், சுயநலக் கணக்குகளும் இன்னொரு வீங்கிய அகந்தையும் இருக்கிறதென அவர்களுக்குத் தெரியும். பணமுள்ள சீமாட்டிகளுக்கு பணத்தின் ஆணவம். இல்லாத சீமாட்டிகளுக்கு எளிதில் புண்படும் கன்றிப்போன ஆணவம்.

இனிய பூங்கொடி போல அசைந்தபடி தங்கள் நகைச்சுவைகளுக்கு சிரித்து, இசையைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் பேசி, அரசியலே தெரியாதவர்களாக கண்களை மலரவிழித்து தங்களுடன் இருக்கும் இப்பெண்கள் சட்டென்று உள்ளிருந்து நஞ்சு பூசிய கூர்முனை ஒன்றை வெளியே எடுப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அந்த எல்லைக்கு முன் அத்தனை சரசங்களையும் நிறுத்திவிடுவதற்கு அவர்கள் எப்போதும் கவனமாக இருப்பார்கள்.

ஆனால்கிராமத்து கள்ளமில்லாத பெண்அப்படி அல்ல. ‘, இது சேற்றில் கிடக்கும் வைரம் அல்லவா?’ அதாவது கூழாங்கற்களில் இருந்து வைரத்தை பார்த்ததுமே கண்டுகொள்ளும் கூர்மை கொண்டவர்கள் இவர்கள். கீழே ஆழத்தில் கைநீட்டித் தவிக்கும் ஒரு பெண்ணுக்காக இறங்கிச் சென்று கைநீட்டும் கருணை கொண்டவர்கள். அவளுக்கு நாகரீகத்தை கற்றுத்தருவதற்கான பொறுமையும், அவளுடைய நாகரீகமின்மைக்காக பொதுமேடைகளில் சிறிய அவமதிப்புகளைச் சந்திக்கும்போது அதை பொருட்படுத்தாத பெருந்தன்மையும் கொண்டவர்கள்.

அந்தக் குதிரை எதை விரும்புகிறது, எப்படி நான் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறது என்று கண்டுகொண்டேன். அதன்பின் எல்லாம் எளிதுதான். நான் அதன்மேல் ஏறிக்கொண்டேன். அதை சவுக்கால் அடித்து விரட்டி எனக்கான பாதையில் விரைந்தேன். அந்தக் குதிரை என்மேல் கருணை கொண்டு என்னை தூக்கிக்கொண்டு செல்வதாக எண்ணிக்கொண்டிருந்தது.

ஈவ்லின் காப்டன் மிர்வினுடன் லண்டனுக்குச் சென்றாள். லண்டனில் அவளுடைய அழகு உடனடியாக கவனிக்கப்பட்டது. அதேசமயம் அவளுக்கு சமூக கௌரவம் ஏதும் இல்லை என்பதை அவர்கள் ஒவ்வொரு சொல்லாலும் நோக்காலும் உணர்த்திக் கொண்டிருந்தார்கள். லண்டனின் பொது நாகரீகங்கள், மரபுகள் எதுவும் அவளுக்கு தெரியவில்லை. அவள் விருந்தில் ஒரு முட்கரண்டியை வேகவைத்த முட்டைமேல் குத்தி வைத்தாள். பன்றியிறைச்சியை பெரிய துண்டுகளாக வெட்டி வாய்க்குள் திணித்தாள். அவளுடைய கரண்டிகள் ஓசையிட்டன. விரைந்து செல்ல வேண்டியிருந்தபோது நீண்ட கவுனை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டாள்.

அவளைக் கண்டு மற்ற இளம்பெண்கள் கண்களைப் பரிமாறிக் கொண்டு புன்னகைத்தனர். முதியபெண்கள் அன்பாக அவள் தோளை தட்டி மென்மையான குரலில் அறிவுரை சொன்ன பின்னர் இன்னொரு முதியவளைப் பார்த்து புன்னகைத்தார்கள். ஆனால் அத்தனை பேருக்குமே அவள் டூவல் சீமாட்டியின் பேத்தி என தெரிந்திருந்தது. ஒருவேளை அவளுக்கு கிழவியின் சொத்து கிடைக்கலாம். சீமாட்டிப் பட்டமேகூட அமையலாம். அவளை கொஞ்சம் சரிப்படுத்தி எடுத்தால் அவளேகூட ஒரு சீமாட்டியாக ஆகிவிடக்கூடும். ராணுவக் குதிரைக்காரர்களின் மகள்களுக்கு அவளெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை.

ஆனால் அவள் எதையுமே கருத்தில் கொள்ளவில்லை. அவள் அந்நகரத்தை பெரும்பித்துடன் கண்டறிந்து கொண்டிருந்தாள். உலகின் முதல்நகரம் என்று பிரிட்டிஷாரால் சொல்லப்பட்டது. உலகை ஆளவிருக்கும் சக்கரவர்த்தியின் இருப்பிடம். உலகநாகரீகத்தின் மையம். அது அவளுக்கு ஒரு புத்தகம் போலிருந்தது, புரட்டிப்புரட்டி படித்துக் கொண்டே இருந்தாள். அவளுக்குத் தேவையான அனைத்தையும் அந்நகரமே கற்றுக் கொடுத்தது.

லண்டன்! நான் நினைவறிந்த நாள் முதலே கனவு கண்டுகொண்டிருந்த மாநகரம். நான் தாந்தேயின் டிவைன் காமெடியை ரெவெரெண்ட் வில்லர்ஸிடமிருந்து படித்திருக்கிறேன். அதிலிருக்கும் இன்ஃபெர்னோதான் லண்டன் என்று எனக்கு சொல்லப்பட்டது. மனிதனின் எல்லா ஆபாசங்களும் வெளிப்பட்டு பெருகிச் சூழ்ந்திருக்கும் கொடிய நரகம். இருளும் நாற்றமும் நிறைந்த வெளி. ஆனால் அந்தக் கற்பனையே என்னை இன்பக் கிளுகிளுப்புக்கு கொண்டுசென்றது.

நான் வாசித்த பழைமையான நூலில் மரவெட்டு ஓவியங்கள் இருந்தன. அதில் வரையப்பட்டிருந்த நரகச்சித்திரத்தில் நிர்வாணமான ஆண்களும் பெண்களும் உடலோடு உடலொட்டி ஒற்றை படலமாக நிறைந்திருந்தனர். அதைப் பார்த்ததும் நான் உடற்கிளர்ச்சி அடைந்தேன். என் முகம் சிவந்து வியர்த்துவிட்டது. மூச்சு ஏறியிறங்கியது. அன்றிரவுதான் நான் என் முதல் காமக்கனவை கண்டேன். என் உடலில் எழும் காமத்தின் இன்பம் என்பது எப்படிப்பட்டது என்றும் அறிந்தேன். அந்தப் புத்தகத்தை நான் நீண்டநாட்கள் என்னுடன் வைத்திருந்தேன். அதை நான் எதற்குப் பயன்படுத்தினேன் என்று எவருக்கும் தெரியாது.

ஈவ்லின் ரெவெரெண்ட் வில்லர்ஸுக்கு எழுதிய கடிதம் லண்டன் பற்றிய வர்ணனைகளால் நிறைந்திருந்தது. லண்டன் கண்ணைப் பறிக்கும் மாயங்களின் நகரம் என்றார்கள். இரண்டு நாடக அரங்குகள் திறந்திருக்கின்றன. ரானேலா மற்றும் பாந்தியன். அந்தப்பெயர்களை எல்லாம் நான் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். அங்கே நான் செல்ல முடியும் என்றே நினைக்கவில்லை. நான் இல்லாமலேயே அவை நடக்கும். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடலாம். ஆனால் எனக்கு வருத்தமில்லை.

ஈவ்லின் தன் டைரியில் எழுதிய குறிப்பு சற்று மாறுபட்டிருந்தது. அதை அவள் நகலெடுத்து தன்னுடன் அனாதை விடுதியில் வளர்ந்த லாராவுக்கு அனுப்பினாள். நான் அந்த உலகியல் கொண்டாட்டங்களை எப்படிப் பார்க்கிறேன். அவை பொம்மைகள். குழந்தைக்கு அவை தேவைதான். ஆனால் குழந்தை முதலில் பாதுகாப்பை அதன்பின் பசியைத்தான் எண்ணும். அவை கிடைத்த பின்புதான் அது பொம்மைகளை நாடும். எனக்கு இன்று தேவை உறுதியான ஓர் இடம், என்னை பொருத்திக் கொள்ளும் ஓர் இல்லம். ஒரு ஆண். அவனை நான் வென்றாகவேண்டும். அதன்பின்னர் இதெல்லாம் என் முன் விரிந்து கிடக்கும்.

ஈவ்லினை ரெவெரெண்ட் வில்லர்ஸ் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கடிதத்தில் அவர் எழுதினார். Heaven bless thee, my dear child! And grant that neither misfortune nor vice may ever rob thee of that gaiety of heart, which, resulting from innocence, while it constitutes your own, contributes also to the felicity of all who know you. அவருக்கு அவளுடைய ஆழ்ந்த கள்ளமின்மை மேல் இருந்த நம்பிக்கை அந்த வரிகளில் தெரிந்தது. அல்லது அவநம்பிக்கையா?

ஆனால் ஈவ்லின் ரெவெரெண்ட் வில்லர்ஸை அப்படி நினைக்கவில்லை. அவளுடைய வரிகள் ஈவிரக்கமில்லாமல் அவரை விவரிக்கின்றன.

இந்தக் கிழவர்களுக்கு இளம்பெண்கள் மேலிருக்கும் அன்பென்பது உண்மையில் என்ன? அவர்கள் இளம்பெண்களின் உள்ளத்தின் ஆழத்தில் நுழைந்துவிட விரும்புகிறார்கள். அதன் வழியாக அவர்கள்மேல் கவிந்துவிட்ட முதுமையை வெல்ல முயல்கிறார்கள்.

அக்கறை காட்டும், அணைத்துக் கொள்ளும், முதியவன் இளம்பெண்ணுக்கு தேவைப்படுகிறான். அவன் சென்றவழிகளின் அனுபவம் எல்லாம் பெண்ணுக்கு தேவையாகிறது. அவள் அவனை பயன்படுத்திக் கொள்கிறாள். ஆனால் அவனை அவள் வெறுக்கிறாள். ஏனென்றால் அவன் தன் முதிய கையால் அவளுடைய மிக அந்தரங்கமான இளமையை தொட்டுவிடுகிறான்.

முதுமை என்பது சாவு. சாவின் நீர்த்த வடிவம். வற்றி வற்றி அது செறிவாகிக் கொண்டிருக்கிறது. இளம்பெண்ணில் வாழ்வு தளிர்விட்டுக் கொண்டிருக்கிறது. அவள் உறுப்புக்கள் தளிர்கள். அவற்றை அவன் தொட்டுவிட்டான் என்றால் அவள் அவனை மன்னிக்கவே போவதில்லை.

இந்தக் கிழவனின் இசைநாடகம் மிகமிக மேலோட்டமானது. அதை அவன் உணரப்போவதே இல்லை. ஜான் வெப்ஸ்டரின் நாடகமே மேலோட்டமானதுதான். அதற்கு முன்னர் ரிச்சர்ட் போவரின் நாடகமோ வெறும் உபதேசம். குடும்ப கௌரவத்துக்காகவோ அல்லது உயர்ந்த அறத்துக்காகவோ சொந்த மகளையே அப்பா கொல்லுவது, அதன் பின் உள்ளம் உடைவது. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவது, ஆனால் சொந்த மகளைக் கொன்ற அப்பா தண்டிக்கப்படவே இல்லை.

நான் அதை கிழவனிடம் கேட்டிருக்கிறேன். “ஏன் விர்ஜீனியஸ் தண்டிக்கப்படவில்லை? அவனும் செத்திருக்க வேண்டும்தானே?” கிழவன் முகத்தில் அப்போது வந்த அந்தப் புன்னகையை மறக்க மாட்டேன். ”ஏனென்றால் அவள் அவனுடைய மகள். அவனுடைய உடைமையைப் போன்றவள். அவளுக்கு தந்தையின் நற்பெயரை தக்கவைக்கும் கடமை மட்டுமல்ல அவர் நல்லெண்ணத்தை ஈட்டிக்கொள்ளும் பொறுப்பும் உள்ளது.

என்னால் பேசவே முடியவில்லை. இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று நினைத்தேன். எனினும்ஆனால் விர்ஜீனியஸ் தவறான புரிதலால்தானே மகளைக் கொன்றான்? அதில் அவளுடைய தவறென்ன?” என்றேன். அவர் தலையை செல்லமாக ஆட்டினார். அசட்டுத்தனமாகப் பேசும் சிறுமியை கொஞ்சும் தந்தையின் பாவனையில்.

கண்களைச் சுருக்கிச் சிரித்தபடி என்னிடம் கிழவர் சொன்னார். “இது அந்தக்கால ரோம். அங்கே தந்தையிடம் அசைக்க முடியாத நல்லெண்ணத்தை உருவாக்கவேண்டிய இடத்தில் இருப்பவள் மகள். விர்ஜீனியா அப்படிச் செய்யவே மாட்டாள் என்று ஏன் விர்ஜீனியஸ் நினைக்கவில்லை? அப்படி நினைக்க முடியாதபடித்தான் அவள் இருந்தாள் என்று சொல்லலாம் அல்லவா?”

நான் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். “அவ்வளவெல்லாம் சிந்திக்காதேஎன்று சொல்லி என் தலைமுடியை கையால் அளைந்தார். நான் வழக்கமாக அவருக்கு வழங்கும் கொஞ்சப்படும் பூனைக்குட்டியின் உடலசைவை அளித்தேன். ஆனால் அதில் மெல்லிய முரண்டு ஒன்று இருந்தது. அதை நான் என்னுள்தான் நிகழ்த்தியிருந்தேன். ஆனால் அவர் அறிந்தார், அவர் கண்கள் மாறின. “நாம் ஷேக்ஸ்பியருக்குத் திரும்புவோம்என்றார்.

நான் திகைப்புடன் புத்தகத்தை மேஜைமேல் வைத்தேன். இது எவருடைய வரி? ஈவ்லினா ஏன் இதை எழுதவேண்டும்? நான் அதை உண்மையிலேயே வாசித்தேனா? புத்தகத்தை திரும்ப எடுத்து பார்த்தேன். அதில் அச்சு எழுத்துக்களில் அந்த வரிகள் இருந்தன. ஈவ்லீனா எழுதிய கடிதம். The trees, the numerous lights, and the company in the circle round the orchestra make a most brilliant and gay appearance; and had I been with a party less disagreeable to me, I should have thought it a place formed for animation and pleasure…

ஆனால் இந்நாவலில் விர்ஜீனியா என்ற நாடகத்தை எழுதியவர் யார்? நாடக ஆசிரியர் என்று எந்தக் கதாபாத்திரமும் இல்லை. யார் யாரிடம் இதைச் சொன்னது? ஈவ்லின் அந்தக் கடிதத்தை சாராவுக்கு எழுதியிருந்தாள். சாரா என்ற கதாபாத்திரமே நாவலில் இல்லை. ஆர்தர் வில்லர்ஸ், கிளமெண்ட் வில்லொபி, ஆர்வில் பிரபு, காப்டன் மிர்வின், திருமதி மிர்வின், மரியா மிர்வின், டூவல் சீமாட்டி, டுபாய்ஸ், பிராங்க்டன் குடும்பம், கவிஞனான மக்காட்ட்டினி மெர்ட்டன் பிரபு… நாடக ஆசிரியரான முதியவர் யார்? நான் எதை படித்துக்கொண்டிருக்கிறேன்?

நான் கண்களை மூடி கட்டைவிரலால் இமைகளை அழுத்திக் கொண்டேன். ஈவ்லினாவும் ஃபேன்னியும் ஒருவரா? ஃபேன்னி தெரியாமல் தன் தனிப்பட்ட குறிப்புகளை நாவலின் ஊடே கலந்துவிட்டாரா? ஒரே சமயம் நாட்குறிப்புகளையும் நாவலையும் மாறிமாறி எழுதிக்கொண்டிருப்பதாக ஃபேன்னி பர்னி தன் கடிதமொன்றில் எழுதியிருந்தாள். அவை எப்படி நாவலுக்குள் கலந்தன? எப்படி எல்லா தொகுப்பாளர்களையும் பரிசோதகர்களையும் கடந்து புத்தகத்திலேயே நீடித்தன?

ஒருவேளை இந்த பதிப்பு அபூர்வமானதாக இருக்கலாம். அபத்தமாக எல்லாம் கலந்து வெளியானபின் இந்த புத்தகங்களை திரும்பப் பெற்றிருக்கலாம். இந்தப் பிரதி இங்கேயே தங்கிவிட்டது. அப்படியென்றால் இப்போது இந்நாவலின் கதாநாயகி மெய்யாகவே யார்?

நான் என்னருகே இருப்பை உணர்ந்தேன். பெண்தான். மிக அருகே நின்றிருந்தாள். இன்னும் ஓர் அடி எடுத்து வைத்தால் என்னை தொட்டு விடுவாள் என்பது போல. என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே மழை அறைந்து கொண்டிருந்தது. நான் திரும்பினால் மறைந்துவிடுவாள். எனக்கு சட்டென்று மெய்சிலிர்த்தது. என் கைகள் குளிர்ந்து நடுங்கலாயின. நான் ஓர் ஆவியை அருகே உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

சட்டென்று திரும்பினால் என்ன ஆகும்? அங்கே நின்று கொண்டிருப்பவர் எவர்? ஃபேன்னியா? எங்கோ பதினெட்டாம் நூற்றாண்டில் லண்டனிலும் பாரீஸிலும் வாழ்ந்து மறைந்த ஒரு பெண்மணி இந்தக் காட்டில் தன்னந்தனியான இந்த கைவிடப்பட்ட பங்களாவில் ஏன் வரவேண்டும்? பேய்களுக்கானாலும் காலமும் இடமும் உண்டு. ஆனால் இது கற்பனை அல்ல. என் முதுகு உணர்வது மெய்யாகவே ஓர் இருப்பை. பெண் என்று தெளிவாகவே தெரியும் ஒரு பார்வையை.

நான் சட்டென்று திரும்பினேன். எவருமில்லை. விரிந்த கூடம் விளக்கொளியில் அசைவிலாது கிடந்தது. வெளியே மழையின் ஓலம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் பற்றி சரவணன் சந்திரன்
அடுத்த கட்டுரைகுருவும் குறும்பும்