நான் அந்தக் காலையை எப்படிக் கடந்தேன் என்பது இன்று ஒவ்வொரு நிமிடமாக நினைவு வைத்திருக்கிறேன். நெடுங்காலத்துக்கு இப்பாலிருந்து கொண்டு அதை ஒரு கற்பனை என்றோ, அந்த இடத்தின் விசித்திரத்தால் நான் உருவாக்கிக்கொண்ட பிரமை என்றோ விளக்கிவிடலாம்தான். அப்படி இல்லை என்று இன்றைக்கு முழுக்க மறுக்கவும் மாட்டேன்.
ஆனால் அன்று அப்படி அல்ல. உள்ளிருந்து குடல்களெல்லாம் கொந்தளித்து வெளியே வந்து விடும் என்பது போன்ற ஒரு பதற்றம். கைகள் நடுங்கியதில் அந்த நூலை வைத்திருக்கவே முடியவில்லை. அதை மேஜை மேல் வைத்துவிட்டு எழுந்து முடிந்தவரை விலகிச்செல்பவன் போல அறையைவிட்டு வெளியே வந்து முற்றத்தில் நின்றேன்.
திகைக்கவைக்கும் வசீகரத்துடன், எல்லா வசீகரத்திற்கும் இருக்கும் மர்மத்துடன், காடு என்னைச்சுற்றி இருந்தது. காற்றில்லாமல், அசைவில்லாமல். அஞ்சிய மான்கூட்டங்கள் போல என் ஓர் அசைவுக்குச் சொடுக்கி கொள்ளும் பொருட்டு கூர்ந்த உடல்களுடன் நின்றிருந்தன மரங்கள். நான் ஒரு சொல் கூட இல்லாமல் காட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதை எப்படி விளக்கிக்கொள்வது என்றுதான் என் உள்ளம் பரபரத்துக் கொண்டிருந்தது என்பதை பின்னர் அந்த எண்ணங்களை தொகுத்துக் கொண்டபோது உணர்ந்தேன். எப்போதுமே இது இப்படித்தான். அச்சமூட்டக்கூடிய எந்த அனுபவத்திலும் அதை எப்படி விளக்கி நாம் ஏற்கனவே கொண்டிருக்கக்கூடிய உலக உருவகத்துடன் பொருத்திக்கொள்வது என்பதில்தான் நம்முடைய அகத்தின் பதற்றம் இருக்கிறது. எந்தப் புதிய அனுபவமும் அச்சமூட்டுவது அதனால்தான் ஏற்கும்படி ஒரு விளக்கம் கிடைத்தவுடனேயே அச்சம் மறைந்து ஆறுதல் உருவாகிவிடுகிறது.
நான் கண்களை மூடி என்னை ஒருகணம் உற்றுப்பார்த்தேன். எனக்கு தேவையாயிருப்பதென்ன? ஒரு விளக்கம். அப்படியென்றால் மிகச்சிறந்த விளக்கம் இதுதான். நேற்றிரவு நான் கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட அரைத்தூக்கத்தில் இருந்திருக்கிறேன். வாசித்த வரிகளை என் உள்ளம் மிகைப்படுத்திக் கொண்டது. அல்லது வாசித்துக் கொண்டிருக்கையிலேயே சற்று கண்ணயர்ந்திருப்பேன். அப்போது உள்ளம் மேலும் ஓடி புதிய வரிகளை உருவாக்கிக் கொண்டது.
அது அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. நாகர்கோவிலில் இரண்டாம் ஆட்டம் சினிமா பார்க்கப் போகும்போது நடுவே தூங்கிவிடுவோம். சினிமா வெளியே ஓசையிட்டுக் கொண்டிருப்பதனால் உள்ளேயும் அது நிகழும். எம்.ஜி.ஆர். படத்திற்குள் சிவாஜி வருவார். ஆங்கிலப்படத்திற்குள் தமிழ்ப்படம் ஊடுருவிவிடும். மெய்யாகவே அது அப்படித்தான் என்றே நினைவில் நின்றிருக்கும். அது நம்மால் கற்பனை செய்துகொள்ளப்பட்டது என்று தெரிந்திருந்தால் கூட நம் மனதில் இருக்கும் அச்சித்திரத்தை அதிலிருந்து மாற்ற முடியாது. நான் நினைக்கும்போதெல்லாம் சிவாஜியின் ‘அவன் தான் மனிதன்’ படத்தில் ஹம்ப்ரி பொகார்ட் வருவார். வேறு எவ்வகையிலும் அந்தப்படத்தை என்னால் நினைவுகூர முடியாது. அதுபோலத்தான் இது.
இந்த இடம் இத்தனை விசித்திரமாக, இத்தனை தொலைதூரத்தில், இத்தனை தனிமையில் இல்லாமலிருந்தால் நான் இப்படி கற்பனை செய்துகொண்டிருக்க மாட்டேன். விளக்கி விளக்கி நான் மெல்ல எதார்த்தத்தை அடைந்தேன். சொற்களாகச் சொல்லிக்கொண்டாலே எல்லாம் தெளிவடைந்து விடுகிறது. வெறும் அரைக்கனவு. அதற்காகத்தான் இத்தனை அஞ்சினேன். இதை எவரிடமேனும் ஒரு சிரிப்புடன் சொல்லிவிட்டேன் என்றால் முற்றும் விடுதலை பெற்றுவிடுவேன்.
அதன்பிறகு என்னால் உள்ளே செல்ல முடிந்தது. பல் தேய்த்து குளித்து ஆடைமாற்றிக் கொண்டேன். அந்தக்காட்டில் நான் கொண்டு போன பெல்பாட்டம் பாண்டும் இறுக்கமான சட்டையும் உயரமான செருப்பும் போல வேடிக்கையான எந்த ஆடையும் இல்லை. இங்கே மலையில் கமுகுப்பாளையைக் கோவணமாகக் கட்டிக்கொண்டு உலவும் ஆதிவாசி நாகர்கோவில் மணிமேடை ஜங்ஷனில் எந்த அளவுக்கு அந்நியமாக இருப்பாரோ அந்த அளவுக்கு அந்நியமாக இருந்தேன்.
வெளியே வந்தபோது கோரன் என்னை அழைத்துச்சென்றான். அந்த வீட்டை பூட்டவில்லை. நான் “பூட்டவேண்டாமா?” என்று கேட்டேன்.
“பூட்டு இல்ல” என்று அவன் சொன்னான்.
அப்போதுதான் நான் வந்தபோதும் அந்த வீடு பூட்டப்படாமல் இருந்ததை நினைவுகூர்ந்தேன். அங்கே இன்னொருவர் வரப்போவதில்லை. ஒருவேளை வந்தாலும் அவருக்கு அந்த வீடு தேவைப்படும் நிலைதான் இருக்கும். மழையாக இருக்கலாம். யானை துரத்தி வந்திருக்கலாம். அங்கு அந்த வீட்டை பூட்டி வைப்பது தவறுதான்.
அத்துடன் எப்போதும் அங்கே பத்து நாட்களுக்குத்தேவையான மளிகைப்பொருட்கள், மண்ணெண்ணை எல்லாம் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அப்படித்தான் முந்தைய ஆசிரியரும் இருந்திருக்கிறார். வெள்ளையர் காலத்திலிருந்தே அப்படி இருந்திருக்கலாம்.
மீண்டும் ஏழு கிலோமீட்டர் நடக்கவேண்டியிருந்தது. நல்லவேளையாக முழுமையான ஏற்றம் கிடையாது. பாதி இறங்கி, நீர்பெருகி ஓடும் ஒரு ஓடையை அடைந்து, அதன் மேல் போடப்பட்டிருந்த இரண்டு தென்னைமரத்தடிகள் வழியாக மறுபக்கம் சென்று, மீண்டும் வளைந்து ஏறி மேலே செல்லவேண்டும்.
அந்த உச்சி வரை செல்வது வரைக்கும் கூட கொன்னமேடு கண்ணுக்குத் தெரியாது. அங்கே உருட்டித்தூக்கிக் கொண்டு வந்து வைக்கப்பட்டது போல் ஒரு பாறை. அங்கு சென்றபோது அது இரண்டு பாறை என்று தெரிந்தது. இரண்டு பாறைகளும் சந்தித்துக்கொள்ளும் இடுக்கில் ஒரு தெய்வம். அது மலைமாடன் என்று கோரன் சொன்னான். ஓடையில் எடுத்துக் கொண்டுவரப்பட்ட உருளைக்கல்தான். கரியால் கண் வரையப்பட்டிருந்தது. பட்டையான ஒரு கல்லின்மீது அது வைக்கப்பட்டிருந்தது அதைச்சுற்றி எலும்புகள் கிடந்தன. அங்கு எப்போதாவது பலி கொடுக்கப்படும் கோழி எலும்புகள் என்று தெரிந்தது.
அங்கு நின்று மூச்சுவாங்கி, குளிர்ந்த காற்றில் வியர்வை உலர மறுபக்கம் பார்த்தால் மலைச்சரிவில் பள்ளிக்கூடம் என்று சொல்லப்பட்ட மூங்கில் கூரை தெரிந்தது ஒரு புத்தகத்தை விரித்து கவிழ்த்து வைத்தது போல. அது கட்டிடம் அல்ல, தரைமேல் வைக்கப்பட்ட கூரை. கூரையேதான் சுவர்களும்.
அது ஏனென்பதை அங்கு சென்ற பின்னர்தான் உணர்ந்தேன். அந்த கூரையை அப்படியே தூக்கி இன்னொரு இடத்துக்கு கொண்டு வைத்துவிடமுடியும் தரையை சற்று சமன்படுத்தி அதை வைத்திருந்தார்கள். அதைக் கண்ணால் பார்த்தபிறகும் அங்கே சென்று சேர அரை மணிநேரம் நடக்கவேண்டியிருந்தது.
நான் அங்கு சென்று சேர்ந்த போது எவரும் இல்லை. கோரன் “இது பள்ளிக்கூடமாக்குமே” என்றான்.
நான் தலையசைத்தேன். அவன் சுற்றி வந்து “வல்ய பள்ளிக்கூடம்” என்றான்.
நான் புன்னகையுடன் “ஆமாம்” என்றேன்.
அவன் இரண்டு கைகளையும் காட்டி “பத்து கொச்சுகள்” என்றான்.
நான் “அப்படியா அவர்கள் எங்கே?” என்றேன்.
“அவங்களுக்கு பள்ளிக்கூடம் இருக்க்குந்நு எந்நு அறியில்ல. விளிச்சு வந்தா அவரு வரும்” என்றான்.
“அவங்க வீடெல்லாம் எங்கே?” என்று கேட்டேன்.
“அதெல்லாம் காட்டினுள்ளே… தோ அவிடே” என்று சொல்லி சுட்டிக்காட்டினான்.
அங்கு நின்று பார்த்தபோது கண்படும் தொலைவில் மூன்று மாடங்களை பார்க்க முடிந்தது பெரிய மரங்களின் விரிந்த கிளைகளுக்கு நடுவே மூங்கில் வைத்து சேர்த்து கட்டி உருவாக்கப்பட்டவை. யானைக்கு எட்டா உயரத்தில் அமைந்த அக்குடில்கள் சற்று பெரிய கிளிக்கூடுகள் போல தெரிந்தன. எந்த மாடத்திலும் எவரும் கால்நீட்டி படுக்க முடியாது. அவர்கள் ஏன் உட்கார்ந்தே தூங்குகிறார்கள் என்பது தெரிந்தது.
அந்த பள்ளிக்கூடமும் சரி, குடில்களும் சரி, கமுகுப்பாளையை வெட்டி விரித்து பரப்பி சேர்த்து கூரை போடப்பட்டவை. மழையில் கமுகுப்பாளை மட்கி சாம்பல் நிறம் கொண்டிருந்தது. யானைத்தோலின் வண்ணமும் வரிகளும். கூரை உருளையாக இருந்திருந்தால் அந்த பள்ளிக்கூடமே மாபெரும் யானையொன்று அங்கு நிற்பது போலிருக்கும்.
நான் குடிலுக்குள் சென்றேன். ஒரு விலங்கின் உடலுக்குள் செல்லும் உணர்வு எனக்கு இருந்துகொண்டிருந்தது. உள்ளே மழையின் ஈரநைப்பு படர்ந்திருந்தாலும் எங்கும் ஒழுகியிருக்கவில்லை. நான் கோரனிடம் “நீ போய் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை கூட்டிட்டு வா” என்றேன்.
அவன் என்னை வெற்றுப்பார்வை பார்த்தான்.
“முடிஞ்சவரை பிள்ளைகளை கூட்டிட்டு வா” என்று சொல்லி “நான் ஐம்பது பைசா தாறேன்” என்றேன்.
அவன் “பைசா வேண்டாம். நான் கூட்டிவரும்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
நான் பள்ளிக்கூடத்தை சுற்றிச் சுற்றி வந்தேன். மூங்கில் கால்கள் தரையில் ஊன்றப்பட்டிருந்தன. நான்கு திசைகளிலும் அந்தக் கூரை கயிறுகளால் இழுத்து மரங்களுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. காற்றில் அடித்துக்கொண்டு செல்லாமலிருக்க அது தேவையென்று தோன்றியது.
உள்ளே மையத்தில் மூன்றாள் உயரம் இருந்தது. இருபது பேர் வரை வசதியாக அமர்ந்து கொள்ள முடியும். கரும்பலகையோ பொருட்கள் வைப்பதற்கான இடமோ எதுவுமில்லை. ஒரு கரும்பலகை தயார் செய்ய வேண்டும். அதற்கு முன் சாக்குகட்டிகளை வாங்கிக்கொண்டு வரவேண்டும். பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று தெரியவில்லை. முந்தைய ஆசிரியர் வகுப்புகள் எடுத்திருக்கிறாரா? ஏதாவது சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறதா?
அவர்களுக்கு என்ன தெரியும் என்பதன் அடிப்படையில் அவர்களை வகுப்பு பிரிக்க வேண்டும் ஒரே சமயத்தில் மூன்று வகுப்புகளை எடுக்கமுடியும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. ஒன்றும் தெரியாத பிள்ளைகள், ஓரளவுக்கு எழுத்துகள் தெரிந்த பிள்ளைகள், எழுதத் தெரிந்த பிள்ளைகள், அவர்களுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் சொல்லிக்கொடுக்க வேண்டும். எண்கள் போடவும் கூட்டவும் சொல்லிக் கொடுக்கவேண்டும். கறாராக வகுப்பு பாடங்களை பின்பற்ற வேண்டியதில்லை.
வகுப்புகள் மதியம் வரைக்கும்தான். மலையில் உச்சிப்பொழுதுக்கு மேல் மழை தொடங்கிவிடுவதனால் மதியத்துடன் வகுப்பை விட்டுவிடலாம். பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதற்கு ஒரு தொகையும் உண்டு. அதை நாகர்கோவில் சென்று எழுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசி மற்ற பொருட்களை கீழிருந்து வாங்கிக் கொண்டு வந்து அவர்களுக்கு சமைத்து போடவேண்டும். சமைப்பதற்கான ஒரு ஆளை நான் இங்கே வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். அவனிடமிருந்து ரசீது வாங்கி வைக்க வேண்டும்.
ஆனால் இவை அனைத்தையுமே முந்தைய ஆசிரியர் செய்திருப்பது போல் தெரியவில்லை. மதிய உணவு கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. அதற்கான பாத்திரங்களோ, பானைகளோ அடுப்போ அங்கே கண்ணில் படவில்லை. பாத்திரங்களை எங்காவது கொண்டு வைத்திருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அடுப்பு இருந்திருக்கும்.
ஒருவேளை மதிய உணவை நான் கொடுக்கத் தொடங்கினால் அவர்கள் எண்ணிக்கை கூட வாய்ப்பிருக்கிறது. கோரனை சமையல்காரனாகவும் உதவியாளனாகவும் அமர்த்திக்கொண்டு சம்பளம் கொடுக்க ஆரம்பித்தால் இந்தப் பகுதியில் என்னுடைய நடமாட்டமே எளிதாகிவிடும். இங்கே வரும் ஆசிரியர்கள் வெறுமேதான் வந்து செல்கிறார்கள். பள்ளி நடத்தியிருக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் நான் என்ன நடந்தாலும் இந்தப் பள்ளியை நடத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
நான் அருகிலிருந்த பெரிய பலாமரத்தின் வேரில் அமர்ந்தபடி என்னென்ன செய்யவேண்டும் என்று உள்ளத்தில் தொகுத்துக் கொண்டேன். அங்கே இருக்கும் பள்ளிக்கூடம் எப்படிப்பட்டதென்று தெரியாததனால் நான் எதையுமே கையில் கொண்டுவரவில்லை. பங்களாவில் எங்கேயோதான் பதிவேடுகளை முந்தைய ஆசிரியர் வைத்திருக்க வாய்ப்பு. அதில் ஒவ்வொரு நாளும் நானே வருகைக் கையெழுத்து போடவேண்டும். பணிக்கு சேர்ந்ததை எழுதி ஒரு நகலை அந்த பதிவேட்டில் ஒட்டி வைக்கவேண்டும். எல்லா காகிதங்களும் சீராக இருக்கவேண்டும்.
இந்தக்காட்டில் இத்தனை விசித்திரமான குடிலில் இருந்தாலும் இது ஒரு பொது நிறுவனம். அரசுடன் நேரடித்தொடர்பில் உள்ளது. ஒருவேளை இங்கிருக்கும் இந்த இடத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் சுற்றளவில் இந்திய அரசுக்குத் தெரிந்த ஒரே புள்ளி இதுதான்.
கோரன் மூன்று ஆதிவாசிக் குழந்தைகளுடன் தொலைவில் வருவதைக் கண்டேன். மூவருமே சிறிய கரிய வெற்றுடலுடன் எலிக்குஞ்சுகள் போலிருந்தார்கள். இடுப்பில் கமுகுப்பாளையை வகுந்து எடுத்த கோமணம் மட்டும் அணிந்திருந்தார்கள். கழுத்தில் வெள்ளைக் கல்லை உரசி துளையிட்டு மணியாக்கி நாரில் கோர்த்து அணிந்திருந்தார்கள். அந்தவகையான மாலைகளை அவர்கள் சந்தைக்கு வரும்போது பார்த்திருக்கிறேன். கற்களை நாட்கணக்கில் உரசி உரை அவற்றைச் செய்வார்கள்.
அவர்கள் அருகே வந்து நின்றதும் நான் எழுந்து நின்றேன். அவர்களும் என்னை திகைப்புடன் பார்த்தபடி விலகி நின்றார்கள். கோரன் அவர்களை அருகே அழைத்தும் அவர்கள் வரவில்லை. கோரன் அங்கே நின்றபடி “அவுரு பயப்படுந்நு” என்றான்.
நான “பயப்படாதேன்னு எப்டிச் சொல்றது அவங்க பாசையிலே?” என்றேன்.
“பயக்கருது. எந்நு” என்றான்.
நான் “பயக்கருது பயக்கருது” என்று சொல்லியபடி அவர்களின் அருகே சென்றேன். முடிந்தவரை முகத்தை விரித்துப் புன்னகை செய்தேன். என்னை ஆசிரியர் என்று சொல்லவில்லை. அவர்கள் உள்ளத்தில் ஆசிரியர் எப்படி பதிந்திருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை. இப்படித் தெரிந்திருந்தால் ஏதாவது இனிப்பு வாங்கி வந்திருக்கலாம். தின்பதற்கு எதாவது கொடுத்திருக்கலாம். அதைப்போல திட்டவட்டமான வார்த்தை வேறில்லை. எல்லா விலங்குகளுக்கும் புரியும் அன்பு அது.
நான் அருகே சென்றதும் மிருகங்கள் அஞ்சுவது போல உடம்பிலேயே திடுக்கிடல் தெரிய அவர்கள் பின்னடைந்தனர். நான் மேலும் காலடி எடுத்து வைக்க ஒவ்வொரு காலடிக்கும் அவர்கள் உடலில் விதிர்ப்பு தெரிந்தது. பெரிய வெண்ணிற விழிகள். மான்களுக்குத்தான் அவ்வளவு பெரிய கண்கள் இருக்கும்.
“பயக்கருது, பயக்கருது” என்று நான் சொன்னேன்.
கோரன் கைகளை ஆட்டி உரக்க “வாத்யாராக்கும். கத பறயும், வாத்யார் நல்ல கத பறயும்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.
நான் இன்னொரு அடி எடுத்து வைக்கவா வேண்டாமா என்று தயங்கி, முன்னகர முடிவெடுத்து, உடலில் அந்த சிறிய அசைவு எழுந்ததுமே மூவரும் திரும்பி குருவிக்கூட்டம் பறந்தது போல் காட்டுக்குள் சென்று மறைந்தனர். ஒரே கணத்தில் ஒரே உந்துதலில் மண்ணிலிருந்து எழுந்து காட்சியில் இருந்து அகன்றனர்.
நான் கோரனைப் பார்த்தேன். கோரன் அனைத்து பற்களும் தெரிய சிரித்து ”ஓடிப்போயி” என்றான். தொடர்ந்து வெற்றிலை போடும் பழக்கத்தால் அவன் வாய் பற்கள் தோலுடன் புளியங்கொட்டைகள் போலிருந்தன.
“கூட்டிக்கொண்டு வா, போ” என்றேன்.
“இனி அவன்மாரே பிடிக்கான் பற்றில்ல. அவுரு காட்டினுள்ளில் ஓடிபோயி” என்றான்.
“நீ எங்கே அவங்கள பிடிச்சே?” என்றேன்.
“அவன்மார் எல்லாரும் காட்டில் போயி தேனெடுக்கா. குரு பெறுக்கா. இவுர் மாத்திரமே குடிலின் முன்னில் விளையாடிக்கொண்டிருந்நார். தேனு காட்டித்தராம்னு சொல்லி கூட்டிவந்தேன்” என்று கோரன் சொன்னான்.
“பள்ளிக்கூடத்துக்கு கூட்டி வரல்லையா?” என்று நான் கேட்டேன்.
“இல்லை பள்ளிக்கூடத்தினு அவுர் வரில்லா” என்றான்.
“பள்ளிக்கூடத்தில் அவங்களுக்கு சோறு போடுறது உண்டா?” என்று நான் கேட்டேன்.
“சோறா?” என்று அவன் திருப்பி கேட்டான்.
“இங்கே சோறு சமைத்து கொடுப்பதுண்டா?” என்றேன்.
“சோறு இல்லை” என்று அவன் கைகளை விரித்துக் காட்டிச் சொன்னான்.
“உப்புமா?” என்று நான் மறுபடியும் கேட்டேன்.
”உப்புமா இல்லை” என்று அவன் மறுபடியும் சொன்னான்.
“வாத்தியார் காலம்பற எத்தன மணிக்கு வருவார்?” என்றேன்.
“வாத்யார்!” என்று அவன் எண்ணி, தன் விரல்களை பார்த்து, மூன்று விரல்களைக் காட்டி, “மூநு நாள் வரும்” என்றான்.
“வாரத்தில் மூணு நாளா?” என்றேன்.
அவன் குழம்பி மண்டையை சொறிந்தபடி காட்டையும் சுற்றுப்புறத்தையும் ஒருமுறை பார்த்தபின் “நெறைய நாளின்னு மூநு நாள்” என்றான்.
மாதம் மூன்று நாட்கள் வருவதை அந்த ஆசிரியர் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். அப்படியானால் இந்தக் குழந்தைகளுக்கு எந்த அடிப்படையும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நல்லது, கதைகளில் வருவது போல ஒரு காட்டுக்குள் முதல் முறையாக சரஸ்வதியைக் கொண்டு வந்திருக்கிறேன். எழுத்துக்களின் தேவதைகளை இங்கே பிரதிஷ்டை செய்யப்போகிறேன்.
உண்மையில் அது நிறைவாகவே இருந்தது. அப்படி வித்தியாசமாக, புதியதாக ஒன்றை என் வாழ்க்கையில் நான் செய்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. நான் சொல்லிக்கொள்ள ஏதோ நிகழப்போகிறது என் வாழ்க்கையில்.
என் வாழ்க்கை மட்டுமல்ல என் அப்பாவின் வாழ்க்கை , என் தாத்தாவின் வாழ்க்கை எல்லாமே எந்த நிகழ்வுகளும் அற்றவைதான். எப்போதாவது எவராவது கிணற்றில் விழுந்தாலோ, கலப்பை கொழு காலில் பட்டாலோ எங்கள் கிராமமே பரபரப்படையும். ஒரு மாதம் அதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அடுத்து இன்னொரு சம்பவம் நிகழ்வதற்கு பல மாதங்கள் ஆகும். பல ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் இங்கே இந்தக்கணம் ஒரு யானை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு சிறுத்தை கூட வரலாம்.
“இங்கே புலி உண்டா?” என்றேன்.
“ஒரு புலி!” என்று அவன் ஒரு விரலைக் காட்டினான். “பெரிய புலி! கடுவன்” என்றான்.
”பெட்டை?” என்று கேட்டேன்.
“பெட்டை அந்த மலையில் உண்டு. இவ்விடம் சிலப்போ வரும்” என்றான்.
“கடுவன் அடிக்கடி வருமா?” என்று கேட்டேன்.
“கடுவன் மூத்ரம் விடும். மூத்திர மணம் உணங்கும் முன்பு அது வரும்” என்றான்.
“இங்கே அது மூத்திரம் விட்டு எவ்வளவு நாளிருக்கும்?” என்றேன்.
அவன் புன்னகைத்தான் அதைச்சொல்ல முடியாதென்று தோன்றியது. ஒரு மழையடித்தால் மூத்திர மணம் போய்விடாதா? அதிலும் இங்கே பெய்யும் இந்த வெறிபிடித்த மழையில் எந்த மணம்தான் நீடித்து நிற்கும்?
நான் அவனிடம் ”மூத்திர மணம் மழையிலே அடிச்சிட்டுப் போகாதா?” என்று கேட்டேன்.
அவன் எழுந்து வந்து அங்கு நின்ற ஒரு மரத்தின் இடைவெளியைக் காட்டி “இவ்விடம் கடுவன்புலி மூத்ரம் விடும்” என்றான்.
“இதுக்குள்ளேயா?”
“ஆ.. இதுக்கு உள்ளே” என்று அவன் புலி மூத்திரம் விடுவதை நடித்துக் காட்டினான். புலிபோலவே மூக்கை சுளித்து நாக்கை நீட்டி சுழற்றினான். முழங்காலில் அமர்ந்து முகத்தை உள்ளே விட்டு முகர்ந்து பார்த்து “அகத்தே மூத்ர மணம்! நாலு நாள் ஆயிட்டு” என்றான். இன்னும் யோசித்து ”அஞ்சு நாள்” என்றான்.
ஐந்து நாட்களுக்குள் ஒரு பெரிய ஆண்புலி வந்து சென்ற இடம் இது. மழை தொடாத இடுக்குக்குள் தன் சிறுநீரை அடித்து எல்லை வகுத்து வைத்திருக்கிறது. இப்போது அதன் ஆட்சிப்பரப்பிற்குள் நான் வந்திருக்கிறேன். முன்பு எப்போதோ படித்திருக்கிறேன், காட்டில் சிங்கத்திற்கும் புலிக்கும் எல்லை உண்டு, அந்த எல்லைக்குள் இன்னொரு அதிகாரத்தை அது அனுமதிக்காது என்று. இங்கே நான் அரசாங்கத்தின் அதிகாரத்துடன் வந்திருக்கிறேன். அந்த அதிகாரத்தை புலி தெரிந்துகொள்ளுமா ஏற்குமா என்று தெரியவில்லை.
ஆனால் நாளை முதல் நான் வேறொருவனாக இங்கு வரவேண்டும் என்னுடைய ஆடையின் வண்ணங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். கொண்டு வந்ததில் நீல நிறத்தில் இருக்கும் சட்டைகளைத்தான் இங்கு போட வேண்டும். மண் நிற சட்டை போடலாம். வெள்ளை நிறமோ, மஞ்சள் நிறமோ, சிவப்பு நிறமோ போடக்கூடாது. முகப்பவுடர், பல்பொடி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. சோப்புக்கூட மணமில்லாத காரச்சோப்பைத்தான் பயன்படுத்த வேண்டும். காதி பார் சோப் வாங்கிக் கொள்ளலாம்.
மணத்தாலோ வண்ணத்தாலோ வெளியாள் என்று தெரியக்கூடாது. அந்தப்புலி ஒருவேளை என்னைப் பார்த்தால் கூட நான் இங்கு குடியேற வந்தவன், பிரஜை என்று நினைக்கவேண்டும், அதற்குப் போட்டியாக அறைகூவலாக வந்தவன் என்று எண்ணிவிடக்கூடாது. அதை அதற்கு தெரிவிப்பதற்கு ஒரு உடல் மொழி இருக்கும். அது இவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதை நானும் கற்று பயில வேண்டும். எதிர்த்து நிற்பதும் சரி, பயந்து அலறி ஓடுவதும் சரி தவறாக ஆகிவிடலாம்.
எங்கோ அந்தப்புலி என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வந்தது. மிக அருகே எங்கோ கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. நாசி தீட்டி என்னை முகர்ந்து கொண்டிருக்கிறது. நான் யார் என்பதை ஒவ்வொரு அசைவாலும் மணத்தாலும் ஓசையாலும் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
அதுதான் என் பணியிடம் என்பது உறுதியாயிற்று இனி அங்கே நீண்ட நேரம் இருந்து எந்தப் பயனுமில்லை. பள்ளிக்கூடத்திற்குள்ளே சென்று பார்த்தேன். குப்பைகள் ஏதும் இல்லை. ஆனால் இரவில் ஏதோ மிருகங்கள் அங்கே படுப்பது தெரிந்தது. முடியின் வாசனை இருந்தது. நரியா காட்டு நாயா தெரியவில்லை. மான் கூட்டங்களாகக்கூட இருக்கலாம். அதை தூய்மைப்படுத்தி வைக்க வேண்டும். சமையலுக்கு பாத்திரங்கள் கொண்டு வரவேண்டும். அதற்கு முன் பதிவேடுகள் அங்கு எங்கு இருக்கின்றன என்று கண்டுபிடிக்கவேண்டும்.
ஒவ்வொன்றாக என் மனதிற்குள் சொல்லி ப்பார்த்துக்கொண்டேன். கோரனிடம் திரும்பி ”போவோம்” என்றேன்.
அவன் உற்சாகமாக எழுந்து வந்து “மலைகேறி போகும்” என்றான்.
“சரி வா” என்றேன்.
அவனிடம் “நீ கோதையாறு போகவேண்டுமா?” என்றேன்.
“கோதையாறு போனால் வேலை கிட்டும்” என்று அவன் சொன்னான்.
“என்ன வேலை?” என்று நான் கேட்டேன்.
“காட்டில் கூட்டினு போகும் வேலை” என்று அவன் சொன்னான். அதற்கு மேல் கடுமையான உடலுழைப்பு வேலைகளை அவன் செய்வான் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவனே ”மரத்தில் கேறும் வேலை” என்றான்.
இவனைப்போய் உயர் அழுத்த மின்கம்பிகளில் ஏற்றி விடுவார்களா என்று நான் பீதியுடன் நினைத்தபோதே ”மரத்தில் மரநாய் இருந்நா அதைப் பிடிச்சு கொண்டு போய்க் காட்டில் விடும் வேலை” என்று அவன் சொன்னான்.
நான் புன்னகையுடன் “ஒருநாள் வேலைக்கு என்ன தருவார்கள்?” என்று கேட்டேன்.
அவன் ”அம்பது பைசா” என்றான்.
“நான் உனக்கு அம்பது பைசா தாறேன். சமையல் செய்தா ஒரு ரூபாய் தருவேன்” என்றேன்.
அவன் ”வேண்டா” என்று பயத்துடன் சொன்னான்.
“இது சர்க்கார் ரூபாய். சர்க்கார் உனக்கு ரூபாய் தரும்” என்றேன்.
“சர்க்காரா?” என்று அவன் கேட்டான்.
“ஆமாம்” என்று நான் சொன்னேன்.
“சர்க்கார்! சர்க்கார் வலிய தொப்பி வெச்சிருக்கும்” என்றான்.
அவன் என்ன சொல்கிறான் என்பதை ஒருகணம் கழித்து புரிந்துகொண்டு ”அது சர்க்கார் இல்ல. அது போலீஸ். போலீஸ் வேற சர்க்கார் வேற” என்று நான் சொன்னேன்.
“சர்க்கார் அடிக்கும்” என்று அவன் சொன்னான்.
“இந்த சர்க்கார் அடிக்காது. சர்க்கார் சோறு தரும்” என்று நான் சொன்னேன்.
“சோறா?” என்று அவன் மறுபடி கேட்டான்.
“உனக்கும் சோறு தரும். பள்ளிக்கூடத்துக்கு வரும் எல்லாப் பிள்ளைகளுக்கும் சோறு தருவேன்” என்றேன்.
அவன் ஆர்வத்துடன் “நெறைய சோறா?” என்றான்.
“ஆமா” என்றேன்.
அவன் உடனே தரையில் அமர்ந்து விரலால் ஒரு வட்டம் வரைந்து அதில் குவியலை கையால் காட்டி ”இத்ரேயும் சோறு?” என்றான்.
“ஆமா, அவ்வளவு சோறு”
அவன் முகம் மலர்ந்துவிட்டது. என் அருகே வந்து “அத்ரேயும் சோறு!” என்று தன் வயிற்றை சுட்டிக்காட்டினான்.
“அவ்வளவு சோறு உனக்கு” என்றேன்.
அவன் நம்ப முடியாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். ”உனக்கேதான்” என்று நான் மீண்டும் சொன்னேன். “வா” என்று அவன் தோளில் தட்டி அழைத்துக்கொண்டு நடந்தேன்.
நாங்கள் காட்டுப்பாதையில் வளைந்து ஏறும்போது புதர்களுக்குள் ஓசை கேட்டது. நான் நடுக்கத்துடன் நின்றேன். அத்தனை சிறிய ஓசையையும் கேட்பதாக, கேட்ட கணமே மெய்விதிர்ப்பு கொள்வதாக என் உடம்பு மாறிவிட்டிருந்தது.
கோரன் புன்னகைத்து “செறுக்கன்” என்றான். அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் புதர்களுக்குள்ளிருந்து அங்கு வந்த மூன்று பையன்களில் வயது குறைவான சிறுவன் நிற்பதைப் பார்த்தேன். அவனுடைய தொப்புள் ஒரு நெல்லிக்காய் அளவு பெரிதாக இருந்தது அவன் என்னைப் பார்த்து புன்னகைத்தான். “இந்நா” என்றான்.
அவன் எதை நீட்டுகிறான் என்று பார்த்தேன். ஒரு பெரிய மாம்பழம்.
“மாம்பழம்!” என்று கோரன் சொன்னான்.
நான் பேசாமல் நின்று புன்னகையுடன் பார்த்து “இங்கே கொண்டு வந்து தா” என்றேன்.
அவன் இல்லை என்று தலையை அசைத்தான்.
“கொண்டு வா” என்று நான் சொன்னேன்.
அவன் என்னையும் கோரனையும் மாறிமாறிப் பார்த்தான். மெதுவாக நடந்து என் அருகே வந்தான் நான் அந்த பழத்தை வாங்கிவிட்டு புன்னகையுடன் அவன் தலையைத் தடவினேன். விலங்குகள் கொஞ்சப்படும்போது காட்டும் எதிர்வினையை அவன் காட்டினான்.
நான் அவன் தோளில் தடவி காதைப்பற்றி குலுக்கியபடி “உன் பேரென்ன?” என்றேன்.
”சிருதன்” என்று அவன் சொன்னான்.
”சிருதனுக்க அப்பா எவிட?” என்றேன்.
”அச்சன் காட்டில்” என்று அவன் சொன்னான். “தேனும் குருவு எடுக்கும்.”
”அம்மா?”
”அம்மை காட்டில் கிழங்கு எடுக்கும்.”
கோரன் “அவரு ரெண்டாளும் காயும் தேனும் எடுக்கும். அவன் அச்சன் மச்சன் பொறி வச்சு முயல் பிடிக்கும்” என்றான்.
சிரிதன் “நான் சாருக்கு முயல் தரும்” என்றான்.
”நாளைக்கு நீ ஸ்கூலுக்கு வருவியா?” என்றேன்.
”நான் வரில்ல” என்று அவன் சொன்னான்.
”நீ ஸ்கூலுக்கு வந்தால் சோறு தருவேன்” என்று நான் சொன்னேன்.
”சோறா?” என்று அவன் கேட்டான்.
”சோறு! நெறைய சோறு!” என்றபின் கோரனிடம் “சொல்லு” என்று சொன்னேன்.
கோரன் உடனே தரையில் அமர்ந்து விரல் ஒரு பெரிய வட்டம் போட்டு ஒரு குவியலைக்காட்டி “இத்ரேம் சோறு” என்றான்.
”இத்ரையும் சோறா?” என்று அவன் என்னிடம் கேட்டான்.
”இத்தனையும் சோறு உனக்கு தருவேன் எல்லாரையும் விளிச்சு கூட்டிக்கொண்டுவா” என்றேன்.
”எல்லாருக்கும் சோறா?” என்றான்.
”ஆமாம் அத்தனை பேருக்கும் சோறு” என்று நான் சொன்னேன்.
அவன் என்னையும் கோரனையும் மாறி மாறி பார்த்தான்.
கோரன் புன்னகைத்து ஆமென்று தலையசைத்தான்.
நான் அவனிடம் கன்னத்தில் தட்டி நாளை வா என்று சொல்லிவிட்டு நடந்தேன்.
திரும்ப அக்கரைப் பங்களாவுக்கு வருவது வரை நான் அந்த புத்தகத்தை பற்றி எண்ணியிருக்கவே இல்லை. காலையில் அந்த தர்க்கபூர்வச் சிந்தனை வழியாகவே அதைப்பற்றிய பதற்றத்தை முழுமையாகவே கடந்துவிட்டேன். அதை மடித்து சுருட்டி என்னுள்ளத்தில் இருந்த அடுக்குகளில் ஏதோ ஒன்றில் சொருகிவிட்டது போல. ஆனால் அது உண்மையல்ல. நானே எனக்கு செய்துகொண்ட பாவனை தான் அது. அத்தகைய பல பாவனைகள் வழியாகத்தான் நாம் நமது நாட்களை கடத்துகிறோம்.
அந்த வீட்டைக் கண்டதுமே என்னுடைய உள்ளம் திடுக்கிட்டது. என் நரம்புகள் எல்லாவற்றிலும் ஒரு விரல்சுண்டல் நடந்தது போல. இடது கால் தொடை துடிக்க அங்கே நின்றிருந்தேன். கோரன் முன்னால் போய் திரும்பிப் பார்த்து நின்றான். இந்த ஆதிவாசிகள் பொதுவாக பெரும்பாலும் பார்வையாலேயே பேசிக்கொள்கிறார்கள் மிக அபூர்வமாகத்தான் அவர்கள் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அது வேட்டைக்காரர்களின் வழக்கம்.
நான் ஒன்றுமில்லை என்று முகபாவனை காட்டி நடந்து பங்களாவை நோக்கிச் சென்றேன். தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு புலியை அணுகுபவன் போல. அது என்னை ஏற்கனவே மோப்பம் பிடித்துவிட்டது. அதன் செவிகள் முன்மடிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கண்களை மூடி என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது.
மிக மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வீட்டை அடைந்தேன். கல்படிகளில் ஏறும்போது நெஞ்சு துடிப்பு தாளாமல் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தேன். கோரன் கதவைத்திறந்து உள்ளே சென்றான். ”உச்சக்கஞ்ஞி வெக்கட்டே?” என்று கேட்டான்.
அப்போது தான் மதியத்துக்கு என்ன சாப்பிடுவது என்று எண்ணங்கூட இல்லாமல் காலையில் கிளம்பி பள்ளிக்குச் சென்றுவிட்டது எனக்கு உறைத்தது. அங்கே ஒரு பள்ளிக்கூடம் மட்டும் தான் இருக்கிறது என்று நன்கு தெரிந்திருந்தும் கூட என்னுடைய வருகையை எதிர்பார்த்து யாரோ இருக்கிறார்கள், ஓர் அமைப்பு இருக்கிறது, ஒரு தலைமை ஆசிரியர் இருப்பார் என்ற இயல்பான கற்பனையில் இருந்து என்னால் வெளியே வந்திருக்க முடியவில்லை.
அந்த எண்ணம் எனக்கு ஒரு புன்னகையை அளித்தது. அந்தப்புன்னகை வழியாக அக்கணத்தின் இறுக்கத்திலிருந்து வெளியேறினேன். நாற்காலியில் அமர்ந்துகொண்டு “ஏதாவது செய்டே” என்றேன்.
”சோறு வடிக்கட்டே? சோறு?” என்று அவன் சொன்னான்.
“சரி” என்று அவனிடம் கூறிவிட்டு எழுந்து ஆடைகளைக் கழற்றி கைலி அணிந்து மேலே கையுள்ள பனியன் போட்டுக்கொண்டேன். முந்தின நாளிரவு எந்த அளவுக்கு மழைக்குளிர் இருந்ததோ அதே அளவுக்கு நீராவியின் வெக்கை இருந்தது. அக்குள் வியர்த்து வழிந்தது. அங்கே மின்விசிறி ஏதுமில்லை. விசிறிக்கொள்வதற்கு ஏதாவது தேவை. ஏதாவது இல்லாமல் இருக்காது. இந்த வெக்கை இங்கே பகல் முழுக்க இருக்கும்.
நான் எழுந்து சென்று அறைக்குள் தேடியபோது கமுகுப்பாளையில் வெட்டிய நான்கு விசிறிகள் இருப்பதைப் பார்த்தேன். ஒன்றை எடுத்துக் கொண்டுவந்து விசிறியபடி நாற்காலியில் அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். முற்றத்தில் கண்கூசும்படி வெயில் விழுந்துகிடந்தது. முற்றத்தில் மரங்களின்றி வானம் சற்று திறந்திருந்ததனால் அங்கு எவ்வளவு வெயில் அடிக்கிறது என்று தெரிந்தது.
அந்தவெயிலை அப்போதுதான் காட்டில் பார்க்கிறேன். வந்த வழியெங்கும் மரக்கிளையின் இடைவெளியினூடாக விழுந்த வெளிச்சம் மட்டும்தான். அது விதவிதமான வெள்ளித்துணிக்கிழிசல்கள் போல பாதையெங்கும் பரவிக்கிடந்தது. என்னையும் கோரனையும் அவ்வப்போது ஒளிரச்செய்து அணைத்தது. முற்றத்து வெயில் உண்மையிலேயே வெயில். வானிலிருந்து ஏதோ வெண்ணிறமாக உருகி கொதிக்கக் கொதிக்க வழிந்துகொண்டிருப்பதுபோல.
நான் அந்த அந்த வெயிலை பார்த்துக் கொண்டிருந்தேன். நிழலில் அமர்ந்து வெயிலைப் பார்க்கும்போது உருவாகும் ஆழமான அமைதி ஏற்பட்டது கண்கள் சொக்கி வந்தன. அரைத்தூக்கம் வந்து என்மேல் படர்ந்து கைகால்களை எடைகொள்ள வைத்தது. இம்முறை கொட்டாவி விட்டு கால்களையும் கைகளையும் நீட்டி உடல்களை தளர்த்திக் கொண்டேன். இமைகள் நனைந்தவை போல எடைகொண்டு சரிந்து, எண்ணங்கள் ஒரு சொல்லிலிருந்து இன்னொரு சொல் பிரிய, குழம்பி அசைவிழந்தன.
அப்போது என் அறைக்குள் எவரோ நிற்பதை உணர்ந்தேன். மிக அருகே என்னை பார்ப்பதை. கோரனல்ல. நம் உள்ளுணர்வு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளத்தை வைத்திருக்கிறது. பார்த்தோ கேட்டோ முகர்ந்தோ அறிவதல்ல அது. வேறொரு அடையாளம். நம்மருகே இருப்பவர் எவர் என்பதை அந்த அடையாளத்தால் எப்போதும் நம் அகம் உணர்ந்திருக்கிறது.
அதுவரை நான் பார்த்திராத ஒருவர் மிக அருகே நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆணா பெண்ணா தெரியவில்லை ஆனால் மனிதர் அமைதியற்றவர் போல அந்த நீண்ட அறையில் அவர் நடந்தார். கதவு நோக்கிச் சென்று வெளியே பார்த்துக்கொண்டு நின்றார். மீண்டும் என் அருகே வந்து என்னைக் கூர்ந்து பார்த்தார்.
கோரனின் குரல் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். கோரன் என்னிடம் “காய் உண்டு” என்றான்.
“என்ன காய்?” என்று நான் கேட்டேன்.
“பொறத்தே பூசணிக்காய் நிக்குது. அதை வேவிக்காம்” என்றான்
“மொளகுப்பொடி எதாவது இருக்கா?” என்றேன்.
அவன் தலையசைத்தான்.
நான் “சரி” என்றேன்.
“காட்டில் மரச்சீனி உண்டு” என்று அவன் சொன்னான்.
அதற்கும் நான் ”சரி” என்றேன். அவன் புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றான்.
இதென்ன உணர்வு என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு கற்பனை. அந்த இடத்தில் இப்படி ஒரு கற்பனை எனக்கு வராமல் இருந்தால் நான் கதை படிக்காதவன் என்று பொருள். இத்தனை நாவல்களைப் படித்தபிறகு, இத்தனை சினிமாக்கள் பார்த்தபிறகு இங்கு இப்படி ஒரு கற்பனையை எப்படி தவிர்க்க முடியும்?
நான் மீண்டும் அந்த நாற்காலியில் அமர்ந்தேன். என் முன் அந்தப்புத்தகம் அங்கே இருந்தது அதை எடுத்து பிரித்தேன். இம்முறை அதில் எதுவும் இருக்காது என்று நன்கு தெரிந்திருந்தாலும் கூட என் நெஞ்சு படபடத்தது. கண்களில் நீராவி அடிப்பது போல ஒரு மங்கல் வந்து சென்றது. மூச்சின் ஓசையை நானே கேட்டேன்.
அந்த முன்னுரையை மீண்டும் விரல் வைத்து ஒவ்வொரு வரியாக படித்தேன். பதினான்கு பக்கங்களுக்குள் அடங்கிய சற்று பெரிய எழுத்துக்களாலான முன்னுரை அது. ஃபானி பர்னியின் வாழ்க்கை பற்றிய பொதுவான தகவல் அடங்கிய ஒரு குறிப்புதான். நான் வாசித்த எதுவும் அதில் இல்லை. பெருமூச்சுடன் நாவலை மூடிவிட்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு ஒன்று தோன்றியது. ஒருவேளை இரவில் அந்த எழுத்துக்கள் தோன்றலாம். ஆம் இன்றிரவு. இன்றிரவு நான் விழித்துக்கொள்வேன். இன்றிரவு மீண்டும் அதைப் படிப்பேன். இதில் நான் நேற்றிரவு படித்த வரிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பேன். அவை இருக்கும் என்ற உறுதி எனக்கு உருவாயிற்று. அதற்கு எந்த தர்க்கமும் இல்லை என்றாலும் கூட . என் நெஞ்சு பதைத்துக்கொண்டே இருந்தது.