அந்த நாவலை எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. அதன் தாள்களை புரட்டிக்கொண்டிருந்தேன். நான் வாழும் காலத்தில் இருந்து இருநூறாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வேரூன்றத் தொடங்கிய காலகட்டம். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் உலகை விழுங்கத் தொடங்கியிருந்தது. பிரிட்டிஷ் இலக்கியம் வலுவான தொடக்கத்தை அறிவித்துவிட்டிருந்தது.
நான் நிறைய வாசிப்பவன் அல்ல. கையில் கிடைத்ததை வாசிக்கும் வழக்கம் இருந்தது. நாகர்கோயில் முனிசிப்பல் நூலகத்திற்குச் சென்று அமர்ந்து அங்கே ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருப்பேன். அன்றெல்லாம் அங்கே பெரும்பாலான புத்தகங்கள் மிகப்பழையவை. நாகர்கோயிலில் இருந்த வெள்ளையர் கிளப்புகளிலும் மகாராஜாவின் சேமிப்பிலும் இருந்த நூல்களே மிகுதி. நான் அவற்றில் அலக்ஸாண்டர் டூமாவின் நாவல்களையும் வால்டர் ஸ்காட்டின் நாவல்களையும் வாசித்திருந்தேன்.
ஆனால் அவையெல்லாம் கற்பனையுலகை உருவாக்குபவை. அந்த நாவல் ஒருவகையான நாட்குறிப்பு போல தோன்றியது. அதை எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. அதில் நீளமான ஒரு முன்னுரை இருந்தது. ஏறத்தாழ அறுபது பக்கம் அளவுக்கு பெரிய முன்னுரை. ஒரு குட்டி நூலாகவே போடலாம். ஈஸ்டன் ஃபிளெச்சர் என்பவர் எழுதியது. அதை படிக்க ஆரம்பித்தேன். மிகச் சம்பிரதாயமான மொழியில் ஆசிரியையை அறிமுகம் செய்திருந்தார்.
ஃபேன்னி பர்னி என்னும் புனைபெயரில் நாவல்களை எழுதிய ஃப்ரான்ஸெஸ் பர்னி 1752ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி பிரிட்டனில் லின் ரெஜிஸ் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய தந்தை இசைக்கலைஞரான சார்ல்ஸ் பர்னி. தாய் எஸ்தர் ஸ்லீப்பி பர்னியின் ஆறுகுழந்தைகளில் மூன்றாமள் ஃப்ரான்ஸெஸ். சிறுவயதிலேயே கொஞ்சம் நுரையீரல் நோய் இருந்தமையால் அதிகம் வெளியே செல்லாமல் வீட்டிலேயே வாழ்ந்த ஃப்ரான்ஸெஸ் தனித்தவராகவும், சிடுசிடுப்பானவராகவும், கனவு காண்பவராகவும் இருந்தார். வீட்டிலேயே ஆசிரியர்களை வைத்து எழுத்துக்கல்வி அளிக்கப்பட்டது. பத்துவயதிலேயே கவிதைகளும் நாட்குறிப்புகளும் எழுத ஆரம்பித்தார்.
ஃப்ரான்ஸெஸ் பர்னியின் குடும்பமே முறையான கல்வியும் அறிவுத்தளச் செயல்பாடும் கொண்டதாக இருந்தது. அவருடைய அண்ணன் ஜேம்ஸ் பர்னி கடற்படைத் தளபதியாகி பசிபிக் தீவுப்பகுதிகளுக்கு கடல்வழி கண்டடைந்தவரான காப்டன் குக்கின் இரண்டு கடல்பயணங்களில் கப்பலை நடத்தினார். அவருடைய தம்பி சார்ல்ஸ் பர்னி முக்கியமான அறிஞர், ஆய்வாளர், நூல் சேகரிப்பாளர். அவருடைய நாளிதழ்ச் சேகரிப்பு பின்னால் பர்னி நூலடைவு என்ற பேரில் ஆய்வாளர் நடுவே புகழ்பெற்றது.
ஃப்ரான்ஸெஸ் பர்னியின் தங்கை சூசன்னா கடற்படைத் தளபதியான மோல்ஸ்வொர்த் பிலிப்ஸின் மனைவியானார். அவருடன் காப்டன் குக்கின் கடற்படையில் பயணம் செய்தார். லண்டனை உலுக்கிய கோர்டான் கலவரத்தைப் பற்றிய அவருடைய நேரடிப் பதிவுகள் முக்கியமான இலக்கிய ஆவணங்களாகக் கருதப்படுகின்றன. பிரிட்டிஷ் படையில் கத்தோலிக்கர்கள் இரண்டாம் தரமாக நடத்தப்படுவதற்கு எதிராக வெடித்த கலவரம் இது. இன்னொரு தங்கை சாரா ஹாரியட் பர்னியும் புகழ்பெற்ற நாவலாசிரியையாக மலர்ந்தார். சாரா ஏழுநாவல்களை வெளியிட்டிருக்கிறார்.
ஃப்ரான்ஸெஸ் இளமையில் நாடகங்களை எழுதி தன் இல்லத்திலேயே உடன்பிறந்தாருடன் இணைந்து நடித்தார். அவருடைய இல்லம் அவருடைய தந்தையின் நண்பர்கள் ஒவ்வொரு நாளும் வந்துகூடும் இடமாக இருந்தது. அந்த சூழல் சிறுமியான ஃப்ரான்ஸெஸுக்கு வீட்டுக்குள் உலகைக் கொண்டுவந்து காட்டியது. பிற்காலத்தில் அதை அவர் விரிவாக எழுதியிருக்கிறார். “மது, உணவு, மகிழ்ச்சிச் சிரிப்புகள், நடனங்கள், ஆழ்ந்த உரையாடல்கள், இரவெல்லாம் நீளும் இசை. என் இளமையில் நான் வாழ்க்கையின் சாரமாகக் கண்டதே அவற்றையெல்லாம்தான். ஆனால் வளரவளர அவர்கள் ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்தார்கள் என்று உணர்ந்தேன். அந்த நடிப்பை சிறுமியாகிய நான் கூர்ந்து நோக்கி அறிந்திருப்பதையும் உணர்ந்தேன்.”
ஃப்ரான்ஸெஸ் குடும்பத்திற்குள் கொந்தளிப்புகளும் கசப்புகளும் இருந்தன. அத்தகைய குடும்பங்களுக்குள் அவ்வாறு இல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம். ஏனென்றால் அவை பெரிய குடும்பங்கள். பெரும்பாலான நேரம் உறுப்பினர்கள் வரவேற்பறை, உணவறை, தோட்டம் என்று அங்கேயே சுற்றிச்சுற்றி வாழ்ந்தனர். பெரும்பாலும் அனைவருமே கடும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை கொண்டவர்கள்.
“மனிதர்கள் நிறைய உரையாடிக்கொண்டால் பூசல்களே எழும். கசப்புகளே பெருகும். பேசப்பேச மனிதர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாதவர்கள் ஆகிறார்கள். ஏனென்றால் பேச்சு என்பது நாம் நம்மை காட்டிக்கொள்வது. நம்மை நாம் புனைந்துகொள்வது. நமக்கு சுற்றும் நாம் அமைக்கும் வேலி அது” என்று பின்னர் ஃப்ரான்ஸெஸ் எழுதினார்.
ஃப்ரான்ஸெஸின் அம்மா பிரிட்டனுக்கு அகதியாக குடிபெயர்ந்த ஒரு பிரெஞ்சுக்காரரின் மகள். ஆகவே அவருக்கு கணவன் இல்லத்தில் ஒரு சிறுமை இருந்தது. விருந்துகளில் எப்போதும் அது வெளிப்பட்டது. பேச்சினூடாக பிரான்ஸ் நாட்டை வம்புக்கிழுப்பது, மட்டம் தட்டுவது, அதைவிட மோசமாக போலியான அனுதாபம் காட்டுவது அன்றைய பிரிட்டிஷாரின் இயல்பு. ஒவ்வொரு சொல்லும் எஸ்தரை விஷமுள்ளாக சென்று தைத்தது. ஆகவே அவர் நரம்புத்தளர்ச்சி கொண்டவராகவும் தனிமையில் அழுபவராகவும் இருந்தார். தன் குழந்தைகளில் எஸ்தர் ஃப்ரான்ஸெஸ்ஸிடம் மட்டுமே அணுக்கம் கொண்டிருந்தார். அதற்குக் காரணம் அவருடைய பெயர்.
1760ல் ஃப்ரான்ஸெஸின் தந்தை லண்டனுக்கு குடிபெயர்ந்தார். லண்டனுக்குச் செல்வதில் அவர் அன்னை எஸ்தருக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. லண்டனின் உயர்குடி மிதப்பு கொண்ட சூழலில் தனக்கு மேலும் அவமதிப்புகள் இருக்குமென அவர் நினைத்தார். ஆனால் சார்ல்ஸ் பர்னி அதை பொருட்படுத்தவில்லை. லண்டனில் அவருக்கு பெரிய கனவுகள் இருந்தன. அவர் உள்ளூர் வீட்டையும் சொத்துக்களையும் விற்றுவிட்டு லண்டனில் உயர்குடிகள் ஸோகோ பகுதியில் போலந்து தெருவில் ஒரு பெரிய மாளிகையை விலைக்கு வாங்கி அங்கே குடிபோனார்.
சார்ல்ஸ் பர்னி லண்டனில் உயர்குடி நட்புவட்டத்தை உருவாக்கும் பொருட்டு தொடர்ச்சியாக விருந்துகளை அளித்தார். நாளடைவில் பெருங்கடனாளியானார். ஆகவே சிடுசிடுப்பும் கசப்பும் கொண்டவராக ஆகி மனைவியை சித்திரவதை செய்தார். எஸ்தர் ஏற்கனவே லண்டனின் மேனாமினுக்கிச் சீமாட்டிகளால் நையாண்டியும் நக்கலும் செய்யப்பட்டு ஆத்மா குதறப்பட்டிருந்தார். அவர் அபின் உண்ணத் தொடங்கினார். மூச்சிளைப்பு நோய்க்கு அபின் சிறந்த மருந்தாக அன்றைக்குக் கருதப்பட்டது.
மிகச்சீக்கிரத்திலேயே அழகியும் நாசூக்கானவளும் பிரெஞ்சு, லத்தீன் மொழிகளில் கல்விகொண்டவளும் இசைக்கலைஞருமான எஸ்தர் பர்னி கண்கள் பழுத்து, முகம் வரண்டு, உதடுகள் வெடித்து கிழவியாக ஆனாள். அதோடு சார்ல்ஸ் பர்னி அவளை முழுக்க தவிர்க்கலானார். கடன்காரராக ஆகி நாலாபுறமும் நெருக்கப்பட்ட அவர் ஒரு விதவையின் காதலராக மாறினார். ஓர் ஒயின் வணிகரின் மனைவியாக இருந்த எலிசபெத் ஆலன் மிகப்பெரிய கோடீஸ்வரி. ஆனால் குலப்பெருமை இல்லாதவள். நாகரீகமும், உயர்குடிப் பழக்கமும் அவளுக்கு இல்லை. அவள் லண்டனில் தனக்கான இடத்தை தேடிக்கொண்டிருந்தாள். அவள் சார்ல்ஸ் பர்னியை கவ்விக்கொண்டாள்.
லண்டன் வந்த இரண்டு ஆண்டுகளில் எஸ்தர் மறைந்தார். ஐந்தாண்டுகள் சார்ல்ஸ் பர்னி தடித்த புஜங்களும், பெரிய முலைகளும், தொங்கும் தாடைகளும், களைத்து தழைந்த கண்களும், கமறிக் கமறிப்பேசும் குரலும், எப்போதும் அதிருப்தி தெரியும் முகபாவனையும் கொண்டவளான எலிசபெத்தின் காதலனாக நீடித்தார். எலிசபெத் கருவுற்றதும் அவள் சார்ல்ஸ் பர்னி தன்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினாள். தன்னுடன் தன் மாளிகைக்கே வந்துவிடவேண்டும் என்று அவள் ஆணையிட்டாள். வேறு வழியில்லாமல் 1767ல் சார்ன்ஸ் பர்னி தன் குடும்பத்தை கைவிட்டு இரண்டாம் மனைவியுடன் சென்று குடியேறினார்.
அப்போது ஃப்ரான்ஸெஸ்ஸுக்கு பதினைந்து வயது. தன் பெரிய மாளிகையில் அவர் உடன்பிறந்தவர்களும் இரண்டு செவிலிகளுமாக குடியேறினார். தந்தை அவ்வப்போது அளிக்கும் சிறிய தொகைகள் மட்டுமே வருமானம். குடும்ப நண்பர்கள் சிறிய தொகைகளை அவ்வப்போது அளித்தார்கள். லண்டனின் உயர்நடுத்தர வாழ்க்கையை வேறுவழியில்லாமல் தொடரவேண்டியிருந்தது.
இந்தக் காலகட்டத்தைப் பற்றி ஃப்ரான்ஸெஸ் எழுதிய குறிப்புகள் இன்று கிடைப்பதில்லை. ஆனால் மிகச்சிக்கலான ஒரு விஷயம் ஆய்வாளர்களால் சில குறிப்புகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃப்ரான்ஸெஸ்ஸின் மூத்த அண்ணனாகிய ஜேம்ஸ் பர்னி தன் சகோதரியான சாராவுடன் பாலுறவு கொண்டிருந்தான். அதை ஃப்ரான்ஸெஸ் பார்த்து கண்டித்தமையால் அவர்கள் இருவரும் ஃப்ரான்ஸெஸ்ஸை மனநோயாளியாகச் சித்தரித்தார்கள். அது ஃப்ரான்ஸெஸ்ஸை மேலும் கொந்தளிக்கச் செய்து மனநோயின் விளிம்புக்கே தள்ளியது. வசைகளையும் ஆபாசமான சொற்களையும்கூட ஃப்ரான்ஸெஸ் எழுதியிருக்கிறார்.
ஆனால் குடும்ப நண்பர்களின் உதவியுடன் ஜேம்ஸ் பர்னி கடற்படைப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். அவர் கடற்படை அதிகாரியாக ஆவது வரை குடும்பத்தில் வெளியே தெரியாத வறுமை நீடித்தது. ஜேம்ஸுக்கு சாராவுடனான தகாத உறவும் முடிவுக்கு வந்தது என்று ஃப்ரான்ஸெஸ் பதிவுசெய்கிறார். ஆனால் ஃப்ரான்ஸெஸ் வாழ்நாள் இறுதிவரை சாராவுடன் நெருக்கமாக இருந்தார். இறுதிக்காலத்தில் பண உதவி செய்தார். அந்த அணுக்கம் ஏன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
சார்ல்ஸ் பார்னி குடும்பத்தை கைவிட்டபின் ஜேம்ஸ் கடற்படை அதிகாரியாக ஆவது வரைக்குமான காலகட்டம் ஃப்ரான்ஸெஸ் பர்னியின் வாழ்க்கையில் மிக மிக கடுமையானது. அன்றைய பிரிட்டிஷ் பிரபு குடும்பங்களில் பெண்கள் சீராட்டப்பட்டார்கள் என்னும் தோற்றம் இருக்கும். ஆனால் அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் என்பதே இல்லை. தந்தை வழிச் சொத்து கொண்ட பெண்கள் அனைத்து கொண்டாட்டங்களையும் அடைந்தனர். மற்றபெண்கள் எவரேனும் ஆண்களைச் சார்ந்தே வாழவேண்டியிருந்தது. ஃப்ரான்ஸெஸ்ஸின் உள்ளம் கசப்பு நிறைந்ததாக ஆகியது. அவர் எழுத்தில் கடைசிவரை இருந்த கேலியும் நையாண்டியும் இந்தப் பருவத்தில் எழுந்ததே.
ஃப்ரான்ஸெஸ்யின் குடும்ப நண்பர்களில் முதன்மையானவர் சாமுவேல் கிரிஸ்ப் [Samuel Crisp]. பயணியும் எழுத்தாளருமான அவர் ‘அப்பா கிரிஸ்ப்’ என்றுதான் ஃப்ரான்ஸெஸ்ஸின் அக்காலத்தைய எல்லா டைரிக்குறிப்புகளிலும் தென்படுகிறார். சாமுவேல் கிரிஸ்பை தவிர்த்து ஃப்ரான்ஸெஸ்ஸின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வது கடினம்.
1707ல் பிறந்த சாமுவேல் கிரிஸ்ப் ஆரம்பகால பிரிட்டிஷ் நாடகாசிரியர்களில் ஒருவர். புகழ்பெற்ற இறையியலாளரான தோபியாஸ் கிரிஸ்பின் பேரன் அவர். கிரிஸ்ப் அலைபாயும் ஆர்வம் கொண்டவர். இத்தாலிக்கு இசை பயிலச் சென்றார். கொஞ்சகாலம் பிரான்ஸில் ஓவியமும் பயின்றார். 1740ல் லண்டன் திரும்பி அங்குள்ள உயர்குடிச்சூழலில் புழங்குபவராக ஆனார். அலைபாயும் ஆர்வங்கள் கொண்டவர்கள் பொதுவாக நல்ல உரையாடல்காரர்கள். அவர்களால் எதையும் வித்தாரமாகப் பேசி அனைவரையும் கவர முடியும்.
கிரிஸ்ப் விர்ஜீனியா என்னும் நாடகத்தை எழுதினார். ரோமப்பேரரசின் காலத்தைச் சேர்ந்த ’ஆப்பியஸும் விர்ஜீனியாவும்’ என்ற கதை அக்காலத்தில் பலராலும் எழுதப்பட்டு நடிக்கப்பட்டது. அதை புதிய கோணத்தில் எழுதுவதாக எண்ணி அன்றைய அரசசபை அரசியலை எல்லாம் சேர்த்து இழுத்து நீட்டி எழுதப்பட்ட கிரிஸ்பின் விர்ஜீனியா நாடகம் காவெண்டரி சீமாட்டியின் நிதியுதவியுடன் லண்டனின் ட்ரூரி லேன் ராயல் தியேட்டரில் அரங்கேறியது. வெறும் பதினான்கு காட்சிகளே நடிக்கப்பட்டது. கடைசிநாட்களில் கேலிசெய்வதற்காக வந்தவர்களே அரங்கில் இருந்தனர்.
ஆனால் கிரிஸ்ப் அது ஒரு கிளாஸிக் என்று நம்பி திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருந்தார். அது ஒருநாள் அங்கீகாரம் பெறும் என நம்பினார். அந்த பிடிவாதத்தால் அவர் வேறெதையும் எழுதவில்லை. தன் நாடகத்தை அவர் நூலாக வெளியிட்டார். வாசித்த அத்தனைபேராலும் அது வசைபாடப்பட்டு எள்ளிநகையாடப்பட்டது. அவர் ’விர்ஜின் கிரிஸ்ப்’ என்று லண்டன் சூழலில் நையாண்டி செய்யப்பட்டார். அதற்கு மோசமான உள்ளர்த்தமும் இருந்தது. அது அவரை மேலும் இறுக்கமானவராகவும், கசப்பானவராகவும் ஆக்கியது. அவர் மனிதகுலத்தையே ஒட்டுமொத்தமாக வெறுத்தார்.
கிரிஸ்ப் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடைய உறவுகளின் ரேகைகளை பின்னர் வந்த வரலாற்றாசிரியர்கள் பூடகமாகவே எழுதியிருக்கிறார்கள். கிறிஸ்டோபர் ஹாமில்டன் என்னும் நண்பருடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது. ஹாமில்டனின் சகோதரியும் திருமணமாகாதவருமான சாராவுடனும் உறவிருந்தது.
சார்ல்ஸ் பர்னி குடும்பத்தை கைவிட்டுவிட்டுச் சென்ற எட்டு ஆண்டுகளில் கிரிஸ்ப் ஒவ்வொருநாளும் ஃப்ரான்ஸெஸ்யின் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். பல நாட்கள் அங்கேயே அவர் தங்கியிருந்தார். ஃப்ரான்ஸெஸ்ஸின் மொழிநடையிலும் உலகப்பார்வையிலும் கிரிஸ்ப் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தினார். 1773ல் சார்ல்ஸ் பர்னி தன் குடும்பங்களை இணைத்தார். அவர்கள் வெஸ்ட்மினிஸ்டரில் இருந்த செயிண்ட் மார்ட்டின்ஸ் ஸ்ட்ரீட்டுக்கு குடிபோனார்கள். அந்த வீட்டில்தான் முன்பு சர் ஐசக் நியூட்டன் வாழ்ந்தார்.
சார்ல்ஸ் பர்னி குடும்பத்துக்குத் திரும்பி வந்ததும் கிரிஸ்ப் தன் நண்பர் கிறிஸ்டோபருடன் லண்டனுக்கு வெளியே இருந்த செஸ்ஸிங்டன் என்னும் சிற்றூரில் குடியேறினார். அதன்பின் அவருக்கும் ஃப்ரான்ஸெஸ்ஸுக்கும் பெரிய தொடர்பேதும் இருக்கவில்லை. கிறிஸ்டோபரின் மரணத்துக்குப்பின் அந்த வீட்டில் சாராவும் அவரும் குடியிருந்தார்கள். கிரிஸ்ப் 1783ல், தன் 76 ஆவது வயதில் மறைந்தார்.
சார்ல்ஸ் பர்னிக்கு தன் மகள்களான எஸ்தர், சூசன்னா இருவருமே சூட்டிகைகள் என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் இருவரையும் பாரீசுக்கு அனுப்பி கல்வி கற்கச்செய்தார். கற்றல்குறைபாடும் நரம்புச்சிக்கலும் கொண்டிருந்த ஃப்ரான்ஸெஸ் வீட்டிலேயே தங்கி கல்விகற்றார். சார்ல்ஸ் பர்னியின் இல்லத்திலேயே ஒரு மிகச்சிறந்த நூலகம் இருந்தது. ஃப்ரான்ஸெஸ்ஸும் அவள் தம்பி சார்ல்ஸும் அங்கே ஒருநாளில் பல மணிநேரம் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஃப்ரான்ஸெஸ் பர்னி தன்னிச்சையாக உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை அக்காலத்து பிரிட்டிஷ் இலக்கியத்தின் தனித்தன்மை கொண்ட வடிவங்களில் ஒன்றின் முன்னோடியாக அவரை ஆக்கியது. இளமையிலேயே ஒவ்வொரு நாளும் தான் கண்டதையும் கேட்டதையும் சிந்தித்ததையும் டைரிகளாக எழுதிவைக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது. அந்த டைரிகள் பெரும்பாலும் அப்பா கிரிஸ்ப் அவர்களுக்கு எழுதப்பட்டவை. அவர் அவற்றை படித்து திருத்தங்களும் மதிப்புரைக் குறிப்புகளும் எழுதினார்.
பின்னர் அதையே ஃப்ரான்ஸெஸ் ஒர் எழுத்து வகையாக மாற்றிக்கொண்டார். இந்த நாட்குறிப்புகள் உண்மையான செய்திகளில் இருந்து வாசித்தவை, கற்பனை செய்தவை என விரிந்தன. நவீன இலக்கியப் புனைவின் முதல்வடிவங்களாக ஆயின. இன்றைய நாவல் எழுத்துமுறையே இந்த வகையான நாட்குறிப்பு எழுத்தில் இருந்துதான் தொடங்கியது. பிற்காலத்தைய பல நாவல்கள் நாட்குறிப்பு, தன்னொப்புதல் பாணி கொண்டவை. குறிப்பாகப் பெண்கள் எழுதியவை. தன்னிலையுரைக் கதாபாத்திரச் சித்தரிப்பே இன்றும் இலக்கியத்தின் மையநெறியாக உள்ளது.
ஃப்ரான்ஸெஸ் பர்னியின் நாட்குறிப்புகள் பின்னர் நூல்களாக பிரசுரமாகி இலக்கிய அந்தஸ்து பெற்றன. நமக்குக் கிடைக்கும் முதல் நாட்குறிப்பு 1768 மார்ச் 27ஆம் தேதி தொடங்குகிறது. அது ‘Nobody’ [யாருக்குமில்லை] என்று உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிறைய குறிப்புகளில் கிரிஸ்ப் தன்னை ’நோபடி’ என்றே கையெழுத்து போட்டிருக்கிறார். முதலில் குடும்ப உறுப்பினர் நடுவே சுற்றிவந்த இக்குறிப்புகளை கிரிஸ்ப் வெளியே கொண்டு சென்றார். லண்டன் உயர்குடிகளின் விருந்துகளில் இவை வாசிக்கப்பட்டன. ஃப்ரான்ஸெஸ் தன் தங்கை சூசன்னாவுக்கு நாட்குறிப்புகளை நகலெடுத்து கடிதங்களாகவும் அனுப்பிக் கொண்டிருந்தார்.
சார்ல்ஸ் பர்னி குடும்பத்தை விட்டு போய் எலிசபெத் ஆலனை திருமணம் செய்துகொண்டபோது ஃப்ரான்ஸெஸ் கொந்தளிப்புடனும் கசப்புடனும் எழுதியிருக்கிறார். முதலில் எழுதியவற்றை எரித்துவிட்டு கொஞ்சம் நிதானத்துடன் மீண்டும் எழுதியிருக்கிறார். உண்மையில் அவருடைய எந்த நாட்குறிப்பும் நேரடியானது அல்ல. பலமுறை திருப்பி எழுதப்பட்டவை அவை. ஆகவே அவற்றை நாட்குறிப்புகள் என்றே சொல்லமுடியாது. அவை ஒருவகையான இலக்கியப் பதிவுகளே. வடிவப்பிரக்ஞையும் வாசகர்கள் பற்றிய உணர்வும் கொண்டவை.
இந்தக் காலகட்டத்தில் தன்னை சீமாட்டிக்குரிய மாண்புகள் அற்றவளாக, கீழ்மையான பெண்ணாக உணர்ந்ததாக எழுதுகிறார். ‘என் மொழி இத்தனை கீழ்மையை அடைய முடியுமா?’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘எழுதப்பட்ட ஒரு காகிதத்தை எரிக்கும்போது என்னில் ஒரு பகுதியை பொசுக்குகிறேன். அதன் வழியாக விடுதலையை அடைகிறேன்‘ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ’எரியும் காகிதம் மாமிசம் பொசுங்கும் வாசனையை வெளியிடவேண்டும் என்றால் அதில் நீங்கள் ரத்தத்தால் எழுதவேண்டும். அல்லது மலத்தால் எழுதவேண்டும். கண்ணீரை தீ அறியாது, அது வெறும் உப்பு.’
இக்காலகட்டத்தில் ஃப்ரான்ஸெஸ் எழுதியவற்றில் பெரும்பகுதி அவரால் எரித்து அழிக்கப்பட்டது. மிகச்சில பகுதிகள் ஃப்ரான்ஸெஸ்ஸின் தங்கைக்கு அனுப்பப்பட்ட கடிதங்களாகவும், கிரிஸ்பின் சேகரிப்பிலும் இருந்து பின்னாளைய தொகுப்பாளர்களால் கண்டடையப்பட்டன. அவற்றை எங்கு பொருத்தி அர்த்தம் கொள்வதென்பது பெரிய சிக்கல்தான்.
ஒருகட்டத்தில் நாட்குறிப்புகளில் தன்னால் பொய்களையே எழுதமுடிகிறது என்று ஃப்ரான்ஸெஸ் கண்டுகொள்கிறார். புனைவுக் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கினால் அந்த கதாபாத்திரத்தின் வாழ்வாக உண்மையைச் சொல்லமுடியும் என்று எண்ணுகிறார். “நாட்குறிப்பில் புனைவும் புனைவில் நாட்குறிப்பும் உள்ளன. உண்மை என்று பொய்யையே நம்மால் சொல்ல முடியும். பொய் என்று சொல்லிவிட்டால் எந்த உண்மையையும் சொல்லிவிட முடியும்” என்கிறார்.
அவ்வாறுதான் கரோலின் ஈவ்லின் என்னும் கதாபாத்திரத்தை ஃப்ரான்ஸெஸ் உருவாக்கினார். கரோலினின் நாட்குறிப்புகளை முதலில் எழுதினார். கரோலின் ஈவ்லினின் மகள் ஈவ்லினாவின் வாழ்க்கையை பின்னர் எழுதலானார். அவளே ஈவ்லினா என்னும் முதல்நாவலின் கதைநாயகியாக உருவானாள். ஃபேன்னி பர்னி என்ற புனைபேரில் அவர் நாவல்களை எழுதி வெளியிட்டார்.
ஃபேன்னி என்ற பெயரை ஏன் ஃப்ரான்ஸெஸ் தேர்வுசெய்தார் என்பதும் முக்கியமானது. ஆங்கில இலக்கியத்தில் Memoirs of a Woman of Pleasure என்ற புனைகதை புகழ்பெற்றது. அது ஒரு பாலியல் படைப்பு. தன்கூற்றுத் தன்மை கொண்டது. அது அதன் கதாநாயகியான ஃபேன்னி ஹில் [ Fanny Hill ] பெயரில் பரவலாக அறியப்பட்டது. ஜான் க்ளீலேண்ட் [John Cleland] என்னும் ஆசிரியர் கடனாளிகளுக்கான சிறையில் இருந்தபோது பணத்துக்காக அதை வேறொரு பெயரில் எழுதினார்.
1748ல் லண்டனில் வெளியான இந்நூல் இன்றுவரை பாலியல் நூல்களுக்கு அழகியல் முன்னோடியாக உள்ளது. இதில் கெட்டவார்த்தைகளோ, உடலுறுப்புகளுக்கான வார்த்தைகளோ பயன்படுத்தபடவில்லை. மாறாக மறைச்சொற்கள் உருவகச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடியுதடு [nethermouth] என்று பெண்குறி சொல்லப்பட்டது. பார்க்காத கண் என்றும் வர்ணிக்கப்பட்டது.
‘பெண்குறியை கீழ்வாய் என்று சொல்வது ஒர் அரிய ரகசியத்தை கண்டறிந்து சொல்வதுபோல எனக்கு அன்று தோன்றியது. அது பேசிக்கொண்டிருக்கிறது. முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. உதடுகளை இறுகமூடிக்கொண்டிருக்கையில் அது வன்மமும் கசப்பும் நிறைந்ததாக இருக்கிறது. அது உண்பதையும் உமிழ்வதையுமே உலகம் அறிந்திருக்கிறது. நான் ஃபேன்னி ஹில்லாக என்னை உணர்ந்ததுண்டு.’
ஃபேன்னி ஹில் அன்றைய பிரிட்டிஷ் சீமான்களின் அவையில் பேசப்பட்ட, இல்லத்தில் வைக்கப்பட்ட நூல் அல்ல. ஆனால் இளமையில் அந்நூலை பைபிளைப்போல மீண்டும் மீண்டும் வாசித்ததாக ஃப்ரான்ஸெஸ் குறிப்பிடுகிறார். அந்நூல் போல மொழியின் அழகையும் சாத்தியங்களையும் தனக்கு காட்டிய இன்னொரு இலக்கியப் படைப்பே இல்லை என்கிறார். பிரிட்டானிய இலக்கியத்தின் உச்சம் என்றே சொல்கிறார். அதை அவருக்கு கிரிஸ்ப் கொண்டுவந்து கொடுத்தார் என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது.
ஃப்ரான்ஸெஸ் நெடுங்காலம் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமண வாழ்க்கைமேல் அவருக்கு கசப்பு இருந்தது. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர்களில் பலர் திருமண வாழ்க்கையை வெறுத்தவர்கள். மேரி கெரெல்லி, ஜார்ஜ் எலியட் என்று பல உதாரணங்களைச் சொல்லமுடியும். அவர்களெல்லாம் கொஞ்சம் கிறுக்குகளுங்கூட ‘திருமணத்தை ஏன் வெறுத்தேன் என்று தெரியவில்லை. ஆனால் அது ஓர் அருவருப்பான விவகாரம் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது’ என்கிறார் ஃப்ரான்ஸெஸ். ‘ஆனால் நான் திருமணத்தை விதவிதமாகக் கற்பனை செய்துகொண்டும் இருந்தேன். அதுதான் என் அந்தரங்கப் பகற்கனவு.’
ஃப்ரான்ஸெஸ்ஸுக்கு கிடைத்த முதல் திருமணத்திற்கான கோரிக்கை அவருடைய இருபத்து மூன்றாம் வயதில் தாமஸ் பார்லோ என்பவரிடமிருந்து. குரூரமான ஒரு விளையாட்டாக ஃப்ரான்ஸெஸ் அதை ஆக்கிக் கொண்டார். அவருடைய கோரிக்கையை மறுக்கவில்லை, ஏற்கக்கூடும் என்று காட்டிக்கொண்டார், அவர் தனக்காக ஏங்கி பித்துப்பிடித்து அலையச் செய்தார். அவரை முடிந்தவரை கீழ்மைப்படுத்தி லண்டன் வட்டாரத்தில் கேலிக்குரியவராக ஆக்கி கடைசியாக அவரை நிராகரித்தார்.
தாமஸ் பார்லோ தன் வாய்க்குள் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளும் எல்லை வரைக்கும் சென்றபின் விலகிச் சென்றார். ஸ்காட்லாந்துக்கு ஓடிய அவருக்கு கடிதமெழுதி மீண்டும் வரவழைத்தார் ஃப்ரான்ஸெஸ். பலமுறை அவர் விலகிச் சென்றபோது ஃப்ரான்ஸெஸ் அவரை விடவில்லை. துரத்திச்சென்று மீண்டும் அழைத்து, மீண்டும் நம்பிக்கை அளித்து, மீண்டும் நிராகரித்தார்.
இத்தனைக்கும் ஃப்ரான்ஸெஸ் அழகியோ செல்வச்செழிப்பு கொண்டவரோ அல்ல. தாமஸ் பார்லோ அன்று வணிகத்தில் மேலேறி வந்துகொண்டிருந்தவர். தாமஸ் பார்லோ ஃப்ரான்ஸெஸ்ஸின் இலக்கியத் திறமையினாலேயே கவரப்பட்டவர். அவருடைய இலக்கியச்சிறப்பு தனக்கு லண்டன் உயர்வட்டாரத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என ஒருவேளை நம்பியிருக்கலாம். ஆனால் ஃப்ரான்ஸெஸ் அதை முற்றிலும் வேறுவகையில் தன் நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.
1782ல் ஃப்ரான்ஸெஸ்ஸின் முதல் நாவல் Evelina or the History of a Young Lady’s Entrance into the World வெளியாகி அவருக்கு புகழ்சேர்த்தது. லண்டன் வட்டாரங்களில் அறியப்பட்ட ஆளுமையாக மாறினார். 1781ல் சாமுவேல் கிரிஸ்ப் இறந்தார். அதன்பின்னரே ஃப்ரான்ஸெஸ் திருமணம் செய்யும் எண்ணத்தை அடைந்தார். தன் முப்பத்து மூன்றாவது வயதில் அவர் பாதிரியான ஜார்ஜ் ஓவென் கேம்பிரிட்ஜ் என்பவரிடம் காதல் கொண்டார். ஆனால் ஃப்ரான்ஸெஸ்ஸின் கிறுக்குத்தனங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த உறவு முறிந்தது.
ஒரு பாதிரியாரை ஏன் காதலித்தேன்? நான் அவரிடம் பாவமன்னிப்பு கேட்க விரும்பினேன். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் பாவமன்னிப்பு கேட்டேன். அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து அவர் கைகளை முத்தமிட்டுவிட்டு அப்போது தோன்றும் பாவங்களை சொல்ல ஆரம்பிப்பேன். கொடியவை, கேட்பவரைக் கூசிச் சுருங்க வைப்பவை, நாற்றமெடுப்பவை. அவருடைய கால்கள் நடுங்கிக் கொண்டிருப்பதை காண்பேன். அவர் பாவமன்னிப்பு அளித்தபின் தளர்ந்து நாற்காலியில் அமர்ந்துவிடுவார்.
1785ல் மேரி கிரான்வில் டெலானி என்னும் சீமாட்டியின் உறவு ஃப்ரான்ஸெஸ்க்கு உருவானது. அவர் லண்டன் அரசகுடியுடன் தொடர்புடையவர். அவர் வழியாக பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் ஜார்ஜுக்கும் அரசி சார்லட்டுக்கும் நெருக்கமானவராக ஆனார். அரசி அவளுக்கு ‘அரசியின் ஆடை காப்பாளர்’ என்னும் பதவியை அளித்தார்.
அது ஒரு கௌரவப்பதவி. நம்மூர் அடைப்பக்காரர் மாதிரி. அரச சபையில் அரசி அணியும் நீண்ட அங்கியின் முனையை பிடித்துக்கொள்ள வேண்டும். அது சடங்கு சார்ந்த வேலை. மற்றபடி அரசியின் சந்திப்புகளை ஒருங்கமைத்தல், அரசியின் விருந்தினர்களை உபசரித்தல், அரசிக்கான உரைகளை எழுதி அளித்தல் ஆகியவைதான் அன்றாட வேலைகள். ஆண்டுக்கு இருநூறு பவுண்ட் ஊதியம்.
அந்த வேலை தன் தனிமையை அழிக்குமோ என்று ஃப்ரான்ஸெஸ் அஞ்சினார். ஆனால் அன்று அந்த தொகை பெரியது. ஆகவே வேலையை ஒப்புக்கொண்டார். அரசவை வாழ்க்கை முசுட்டுத்தனமும் நக்கலும் கொண்ட ஃப்ரான்ஸெஸ்ஸுக்கு கடினமானதாகவே இருந்தது. அதேசமயம் அவர் மிக தந்திரமானவர். ஆகவே அரசியுடன் மிக அணுக்கமான நட்பை பேணிக்கொண்டார்.
ஃப்ரான்ஸெஸ் அரசவையிலும் தொடர்ந்து நாட்குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்தார். அவற்றை சூசன்னாவுக்கும் பிற தோழர்களுக்கும் அனுப்பினார். அவற்றில் முக்கியமான அரசவை நிகழ்வுகளை விவரித்திருக்கிறார். இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு மீது முன்வைக்கப்பட்ட ஊழல், அத்துமீறல் குற்றங்களைப் பற்றிய விசாரணைகளை விரிவாக பதிவுசெய்திருக்கிறார். அந்தக் குறிப்புகளில்தான் புகழ்பெற்ற பேச்சாளரான எட்மண்ட் பர்க் ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற பொதுத்தலைப்பில் ஆற்றிய ஆற்றல்மிக்க உரைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இக்காலகட்டத்தில் ஃப்ரான்ஸெஸ் யாராவது ஒரு பிரபுவை மணந்துகொள்ள விரும்பி தீவிரமாக முயன்றார். கர்னல் ஸ்டீபன் டிக்பி என்பவருடன் அணுக்கமான உறவு இருந்தது. ஆனால் அவர் இன்னொரு பணக்காரப் பெண்ணை மணந்துகொண்டார். அது ஃப்ரான்ஸெஸ்ஸின் கசப்பை கூட்டியது. அக்கால நாட்குறிப்புகளிலும் புனைகதைகளிலும் அதை நையாண்டியாகக் கொட்டி வைத்திருக்கிறார்.
“அவருடைய ஆணவம் அவருக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு பெண்ணிடம் மட்டுமே பாலுறவு கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்கியது. பாலுறவுக்கு முன் நீண்ட, கண்ணீர் மல்கும் உரையாடலும், நெகிழ்வும், அணைப்பும், நாடகீய வசனங்களும் தேவை அவருக்கு. அவற்றை நான் அவருக்கு அளித்தேன். மனிதர்களால் பொய்களின் மேல் படுத்துத்தான் உடலுறவு கொள்ளமுடியும் என அறிந்திருந்தேன். ஆட்டுக்குடலால் ஆன ஆணுறையை அவரே கொண்டுவருவார். அவரே தன்னை அப்படி ஓர் ஆணுறைக்குள் வைத்திருந்தார்.
ஆனால் மனிதர்கள் பொய்யில் மூழ்கி மூழ்கிச்சென்று உண்மையில் அறைந்து நின்றுவிடுகிறார்கள். அவர் சென்று முட்டியது பணத்தில். உண்மையில் அத்தனை ஆண்களும் சென்று நிற்பது அங்கேதான். அதுதான் உண்மை என அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால் அவர்களின் உலகம் வெளியே இருக்கிறது. பணத்தாலான உலகில். பெண்களைப்போல உள்ளறைகளின் இருட்டில் அவர்கள் வாழ்வதில்லை. அந்த அப்பட்டத்தை தாளமுடியாமல் அவர்கள் நடிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பாவம் ஸ்டீவ். அவர் அந்தப் பணக்கார விதவையின் காலடியில் அமர்ந்திருப்பதை கற்பனை செய்கிறேன். காலடிநாய்தான். கழுத்தில் தோல்பட்டை உண்டுதான். ஆனால் தலையை நிமிர்த்தி தாடையை சற்றே தூக்கி கம்பீரமாக, ஆண்மையுடன் அவர் அமர்ந்திருப்பார். அதில் இழிவும் இல்லை. ஏனென்றால் இங்கே பெரும்பாலான ஆண்களின் வாழ்க்கை அதுதான்.”
இக்காலகட்டத்தில் ஃப்ரான்ஸெஸ் தன் அன்னையைப் போலவே அபினை மிதமிஞ்சி சாப்பிட ஆரம்பித்தார். வேலையை துறந்து தன் தந்தையின் இல்லத்துக்கே வந்தார். அங்கே அரசி அளித்த நூறு பவுண்ட் ஆண்டு ஓய்வூதியத்துடன் வாழ்ந்தார்.
1790 முதல் ஃப்ரான்ஸெஸ் நாடகங்களை எழுதலானார். நான்கு செய்யுள் நாடகங்களை எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு நாடகமே நடிக்கப்பட்டது. அது படுதோல்வி அடைந்தது. சோர்வும் தனிமையுமாக தன் தந்தையின் இல்லத்தில் வாழ்ந்த ஃப்ரான்ஸெஸ்ஸுக்கு ஊக்கம் அளித்தது 1789ல் நடந்த பிரெஞ்சுப்புரட்சி பற்றிய செய்திகள். தாய்வழியில் பிரெஞ்சு வேர்கள் கொண்டிருந்த ஃப்ரான்ஸெஸ் பிரெஞ்சுப்புரட்சியின் ஆதரவாளராக ஆனார்.
பிரெஞ்சுப்புரட்சி வீழ்ந்த பின் அதன் ஆதரவாளர்கள் பலர் லண்டனில் அடைக்கலம் புகுந்தனர். அவர்களில் பல தரப்பினர் இருந்தனர். அரசியல் விடுதலை, சமூகசமத்துவம், ஜனநாயக அரசு போன்ற புதிய கருத்துக்களால் ஊக்கம் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அன்று லண்டனில் தங்களை கற்றவர்கள் என காட்டிக்கொள்ள விரும்பிய பிரபுக்களின் சபைகளில் ஒரு வரவேற்பு இருந்தது.
லண்டனில் ஜுனுப்பர் ஹால் என்னுமிடத்தில் அவர்களின் கூட்டுத்தங்குமிடம் ஒன்று இருந்தது. அந்த இடம் இருந்த சர்ரே என்னும் பகுதியில்தான் ஃப்ரான்ஸெஸ்யின் தங்கை சூசன்னா குடியிருந்தாள். அவள் பிரெஞ்சு தெரிந்தவள், பிரான்ஸில் கற்றவள். அங்கே செல்லத்தொடங்கிய ஃப்ரான்ஸெஸ் அந்த கூட்டுக்குடியிருப்புக்கு நெருக்கமானவளாக ஆனாள்.
அங்குதான் ஜெனரல் அலக்ஸாண்டர் டி ஆர்ப்ளெ [General Alexandre D’Arblay]யை ஃப்ரான்ஸெஸ் அறிமுகம் செய்துகொண்டார். குதிரைப்படை வீரரான ஆர்ப்ளே பிரெஞ்சுப்புரட்சியில் கலந்துகொண்டு ஜெனரல் லாஃபாயட்டி[Lafayette]ன் மெய்க்காவலராகவும் இருந்தவர். ஒரு நேர்மையான, எளிமையான, அப்பட்டமான மனிதர். கொஞ்சம் முதியவர். அத்தகைய ஒருவர்தான் ஃப்ரான்ஸெஸ் போன்ற ஒரு பெண்ணுக்கு சரியாக அமைய முடியும்.
ஆர்ப்ளேயின் நட்பு ஃப்ரான்ஸெஸ்ஸின் அகத்தை திறந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக நம்பிக்கையும் கனவும் கொண்ட இலட்சியவாதிகளுடன் அவருக்கு உறவு ஏற்பட்டது. எதன்பொருட்டு வாழவேண்டும் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது. டைரியில் ஃப்ரான்ஸெஸ் எழுதினார். ‘இந்த உலகில் இந்த உலகின் பொருட்டு வாழ்வதைப் போல அபத்தமானது வேறு ஏதும் இல்லை.’
ஆர்ப்ளே ஃப்ரான்ஸெஸ்க்கு பிரெஞ்சு மொழி சொல்லிக்கொடுத்தார். அன்று உருவாகி வந்துகொண்டிருந்த புதிய இலட்சியவாதத்தை அறிமுகம் செய்தார். வால்டேரை ஃப்ரான்ஸெஸ் மூலத்திலேயே வாசித்தார்.
“நான் எங்கிருக்கிறேன் என்று அவர் எனக்கு காட்டினார். என்னுடைய கசப்பெல்லாம் என் மீதுதான். தன் உள்ளம் ஒவ்வாத ஒன்றை எதன்பொருட்டேனும் செய்தவர்கள் கசப்பை தவிர்க்கமுடியாது. அக்கசப்பை தன்மேல் திருப்பிக்கொள்ளும்போது அவர்கள் நோயுறுகிறார்கள். நோயைக்கொண்டு உலகை பார்க்கிறார்கள். நோயுற்ற உலகம் அவர்களைச் சூழ்கிறது” என்று ஃப்ரான்ஸெஸ் எழுதினார்.
ஆர்ப்ளேயை திருமணம் செய்துகொள்ள ஃப்ரான்ஸெஸ் முடிவெடுத்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்தொன்பது. அதை ஃப்ரான்ஸெஸ்ஸின் தந்தை கடுமையாக எதிர்த்தார். ஆர்ப்ளே கத்தோலிக்கர், வயதானவர், வறுமையில் இருப்பவர். ஆனால் அதை மீறி 1793ல் ஃப்ரான்ஸெஸ் ஆர்ப்ளேயை மணந்துகொண்டார். அதன்பின் ஆர்ப்ளேயுடன் இணைந்து பிரெஞ்சுப் புரட்சியின் அகதிகளுக்கு உதவவும், பிரெஞ்சுப்புரட்சியை மேலெடுக்கவும் தூண்டும் துண்டுப்பிரசுரங்களை எழுதினார். நிதி திரட்டினார்.
1794ல் ஃப்ரான்ஸெஸ் தன் முதல் குழந்தையை பெற்றார். அலக்ஸாண்டர் சார்ல்ஸ் லூயிஸ் என்று பெயரிடப்பட்ட அந்த மகன் ஃப்ரான்ஸெஸ்ஸுக்கு முன்னரே இறந்தான். பிரெஞ்சுப்புரட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகளால் அரசியல் பகைமை உருவாகவே ஃப்ரான்ஸெஸ் தன் கணவருடன் அயர்லாந்துக்கு ஓடிப்போக நேர்ந்தது. அங்கே சிலகாலம் பலருடைய ஆதரவில் வாழ்ந்தார்.
பிரான்ஸில் நெப்போலியன் ஆட்சியைப் பிடித்தபோது ஆர்ப்ளே பிரான்ஸ் திரும்ப முடிவெடுத்தார். 1801 ல் ஆர்ப்ளே நெப்போலியனிடம் பணிக்குச் சேர்ந்தார். அவருடன் குழந்தையை எடுத்துக்கொண்டு ஃப்ரான்ஸெஸ் பிரான்ஸுக்குச் சென்றார். அங்கே ஓராண்டுக்காலம் தங்கியிருப்பதே அவருடைய எண்ணமாக இருந்தது. ஆனால் நெப்போலியனுக்கும் பிரிட்டனுக்கும் போர் தொடங்கி பகைமை உச்சமடைந்தமையால் பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸிலேயே ஃப்ரான்ஸெஸ் தங்கநேர்ந்தது.
பிரான்ஸின் புறநகரான பாஸியில் தங்கியிருந்த இக்காலகட்டத்தில் ஃப்ரான்ஸெஸ் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளானார். அவருடைய மார்பகங்கள் வெட்டி நீக்கப்பட்டன. அதைப்பற்றி எழுதும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
அதை எண்ணி எண்ணி அஞ்சிக்கொண்டிருந்தேன். அதன்பின் நான் இன்னொருவராக ஆகிவிடுவேன் என்று எண்ணினேன். அவை என்னில் வளரத் தொடங்கியபோதே நான் பெண்ணாக உணரலானேன். அதன்பின் என் உடலின் அமைப்பை, அதன் வழியாக என் நடையை, என் பார்வையை எல்லாம் அவையே வடிவமைத்தன. அவை அகன்றபின் நான் யார்? பெண் அல்ல. ஆணுக்கான எந்த இயல்பும் என் உடலிலும் உள்ளத்திலும் இல்லை.
அறுவை சிகிச்சை முடிந்தபின் அதைப்பற்றி எழுதிய குறிப்பில் மொழி மாறுபடுகிறது.
அது ஒரு போர் போலிருந்தது. சக்கரவர்த்தினி மேரி லூயிஸின் ஆணைப்படி பிரான்ஸின் மிகச்சிறந்த மருத்துவர்கள் எனக்குச் சிகிச்சை அளித்தனர். அரசியின் மருத்துவச்சி டுபாய்ஸின் தலைமையில் ஏழு மருத்துவர்கள் என் உடலை போர்க்களமாகக் கொண்டனர். எதிரியை வெட்டி வீசினர். எஞ்சிய என்னுடைய உடல் உழுதிட்ட வயல் போலிருந்தது.
ஆனால் பின்னர் எழுதிய குறிப்பில் அவருடைய உளநிலையே மொத்தமாக மாறிவிட்டிருந்ததைக் காணமுடிகிறது.
காயங்கள் ஆறிவந்தபோது ஒரு நாள் படுக்கையை விட்டு எழுந்தபோது ஒரு பெரிய மாறுபாட்டை உணர்ந்தேன். என் உடலில் தொற்றிக்கொண்டிருந்த இரண்டு ஒட்டுயிர்கள் மறைந்துவிட்டிருந்தன. நான் ஒரு பாரத்தை எப்போதைக்குமாக இழந்துவிட்டேன். அந்த எடையின்மையை உணர்ந்தபடி நான் கழிப்பறைக்குச் சென்றேன். கண்ணாடியில் என்னை பார்த்தேன். சிவந்த வடுக்கள். தட்டையான மார்பு. ஆனால் நான் பெரும் விடுதலையை உணர்ந்தேன்.
மிகப்பெரிய விடுதலை. எவற்றிலிருந்து? என்னால் சொல்லக் கூடவில்லை. நான் என்னிடமிருந்து விடுதலை அடைந்துவிட்டேன். இந்த நாற்பத்தொன்பது ஆண்டுக்காலம் நான் பழகிய எல்லாவற்றையும் இனி துறந்துவிடலாம். நான் கொண்ட எல்லா அச்சங்களையும் களைந்துவிடலாம். அதைவிட இன்னொன்று உண்டு. மிக அந்தரங்கமான ஒரு கசப்பு. மிக மிக மிக அந்தரங்கமானது. ஆகவே மிகமிக சில்லறைத்தனமானது. அதை நான் வெட்டி வீசிவிட்டேன். அது ஒரு தொடுகை. முதல் தொடுகை. நம்மை நாமே கூசவைக்கும் ஒன்று நமக்கு முதன்முதலாக நிகழுமே அது. அந்த தடையத்தை வெட்டி வீசிவிட்டேன். ரத்தம் கசிய. இதோ முதல்முறையாக அதிலிருந்து வெளிவந்திருக்கிறேன்.
இந்த காயங்கள் ஏசுவின் ஐந்து புண்களைப் போல. ஆனால் இதுநாள் வரை நான் அறையப்பட்டிருந்த சிலுவையில் இருந்து என்னை கிழித்து வெளியே எடுத்துக்கொண்டதன் புண்கள் இவை. மிக மிகப்புனிதமானவை. நான் இப்போது மீண்டும் லண்டன் செல்ல விரும்புகிறேன். என் தந்தையைப் பார்க்கவேண்டும். என் சிற்றன்னையைப் பார்க்கவேண்டும். க்ரிஸ்பின் கல்லறை அமைந்திருக்கும் செஸ்ஸிங்டன் பாரிஷ் சர்ச்சுக்குச் சென்று ஒரு மலர் வைத்து வரவேண்டும். இனி எவர் முன்னாலும் நான் கசப்பும் சீற்றமும் கொண்டவளாக இருக்கவேண்டியதில்லை. இனி எவர் கண்கள் முன்னாலும் நான் பொய்விழிகளைச் சூடிக்கொள்ள வேண்டியதில்லை.
1812ல் போர் முடிந்தபோது ஃப்ரான்ஸெஸ் மீண்டும் லண்டனுக்கு வந்தார். நோயுற்றிருந்த தந்தையைச் சென்று பார்த்தார். லண்டனில் பழைய நினைவுகளை மீட்டிக்கொண்டு சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1814ல் தந்தை இறந்தபின் மீண்டும் பிரான்ஸுக்கு திரும்பினார்.
அந்தக் காலகட்டத்தில் அரசியல் இலட்சியவாதத்தில் இருந்து ஃப்ரான்ஸெஸ் முற்றாக விடுவித்துக் கொண்டதைக் காணமுடிகிறது. அவர் தன் சுயநலம் மிக்க தனியுலகில் வாழ்ந்தார். நெப்போலியனின் பிரான்ஸ் வால்ட்டேரின் பிரான்ஸ் அல்ல என்று அவர் கண்டுகொண்டார். அதை முன்னரே ஆர்ப்ளே கண்டுகொண்டார். அவர் நெப்போலியனுக்கு விசுவாசமாக இருந்தார். அதன் பின் பதினெட்டாம் லூயிக்கும் விசுவாசமாக இருந்தார். பல பதவி உயர்வுகளைப் பெற்றார். பல போர்களை நடத்தினார். லெஃப்டினென்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற ஆர்ப்ளே 1818ல் புற்றுநோய் கண்டு மரணமடைந்தார்.
இந்தக் காலகட்டத்தில் ஒரு சாமர்த்தியசாலிப் பெண்ணாகவே ஃப்ரான்ஸெஸ் செயல்பட்டிருக்கிறார். அவர் 1812ல் பாரீஸிலிருந்து லண்டன் திரும்பியதே தன் மகனை கட்டாய ராணுவசேவையில் இருந்து விலக்கும் பொருட்டுத்தான். ஆர்ப்ளே போருக்கு சென்றபோது ஃப்ரான்ஸெஸ் பெல்ஜியம் சென்று அங்கே பத்திரமாகத் தங்கியிருந்தார். பின்னர் புற்றுநோயாளியான கணவனுடன் பிரிட்டன் திரும்பி கிரேட் ஸ்டான்ஹோப் தெருவில் தங்கியிருந்தார். அங்கிருந்தபோதுதான் The Wanderer: Or, Female Difficulties என்ற நாவலை எழுதினார். அது அவருடைய நான்காவது நாவல்.
1837ல் ஃப்ரான்ஸெஸின் மகன் இறந்தான். ஆனால் அந்தச் சாவு ஃப்ரான்ஸெஸ்ஸை பெருமளவு பாதிக்கவில்லை. அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய வேடிக்கையும் நையாண்டியும் இப்போது சீற்றம் இல்லாதவையாக ஆகியிருந்தன. 1840 ஜனவரி ஆறாம் நாள் தன் எண்பத்தெட்டாவது வயதில் மறைந்தார். அவருடைய கணவரும் மகனும் அடக்கம் செய்யப்பட்ட வால்காட் நீத்தார் நிலத்தில் அவரும் அடக்கம் செய்யப்பட்டார். பல இடங்களில் ஃப்ரான்ஸெஸ்க்கு நினைவுப்பலகைகளும் இடையளவுச் சிலைகளும் பின்னாளில் நிறுவப்பட்டன.
ஃப்ரான்ஸெஸ் பர்னியின் முதுமையில் பர்னி குடும்பம் மிகப்பெரிதாக வளர்ந்திருந்தது. அவருடைய தங்கையும் தம்பியும் அறிவுத்துறையில் புகழ்பெற்றிருந்தனர். பேரன்களும் பேத்திகளும் விரும்பும் கதைசொல்லும் பாட்டியாக அவர் திகழ்ந்தார். தான் கண்ட சரித்திரபுருஷர்களை அவர் கேலியாக நடித்து காட்டுவது பேரக்குழந்தைகளால் மிக விரும்பப்பட்டது. பின்னாளில் அவர்கள் அதை பதிவுசெய்திருக்கிறார்கள்.
ஃப்ரான்ஸெஸ் எழுதினார். நான் இப்போது என்னை முழுமையாகவே ஒரு கேலிநடிகராக ஆக்கிக் கொண்டேன். மிக மகிழ்ச்சியாக கொண்டாட்டமாக உணர்வதெல்லாம் என் பேரர்களுடன் கூத்தடிக்கும்போதுதான். அரசர்கள், அரசிகள், தளபதிகள், ராஜதந்திரிகள், அறிஞர்கள், மதகுருக்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்கள் அத்தனை பேரையும் கோமாளிகளாக ஆக்கிவிடுகிறேன். அப்படி அவர்களை ஆக்கும்பொருட்டு நான் என்னை கோமாளியாக ஆக்கிக் கொள்கிறேன். கோமாளிக்கு உலகை கோமாளியாக ஆக்கும் உரிமை இருக்கிறது.
நான் என் உடலில் இருந்து விடுபட்டேன். அதன்பின் இங்கே எதனுடனும் எனக்கு உறவில்லை. இங்கே நான் ஆற்றவேண்டிய எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. எவருக்கும் கடன் பட்டிருக்கவுமில்லை. இங்கே நான் எவர் கண்ணிலும் படாத ஆவியுருவமாக நடமாடிக்கொண்டிருக்கிறேன். பெரியவர்களைக் கவனிக்கும் சிறுமி போல இவர்களின் பண்பாட்டை, அரசியலை, வரலாற்றை கவனித்துக் கொண்டிருக்கிறேன். சிரிப்பை அடக்கிக்கொண்டு முகத்தை தீவிரமாக வைத்துக்கொள்கிறேன்.
இங்கிருந்து நான் செல்லும்போதுகூட போதிய அளவு சிரித்து முடித்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். இந்த முட்டாள்கள் எனக்கு சிலை வைப்பார்கள். நினைவுப்பலகைகளை வைப்பார்கள். என் நாவல்களையும் நாட்குறிப்புகளையும் பிரசுரிப்பார்கள். அவற்றைக்கொண்டு என் வாழ்க்கையை ஆராய்வார்கள். என் வாழ்க்கையைக்கொண்டு பிரெஞ்சுப்புரட்சியையும் நெப்போலியன் வரலாற்றையும் வாரன் ஹேஸ்டிங்ஸையும் பிரிட்டிஷ் ராஜையும் ஆராய்வார்கள். அதை நம்பி தங்கள் வரலாறுகளை எழுதிக்கொள்வார்கள்.
நல்லது, நான் இவர்களை ஏமாற்றிவிட்டேன். நேற்று என் பேரக்குழந்தை ஆலனிடம் சொன்னேன், நான் உண்மையில் அவனுடைய பாட்டி அல்ல தாத்தா என்று. அவன் திகைத்துவிட்டான். உண்மையா உண்மையா என்றேன். ஆமாம், நான் அனைவரையும் பொய்சொல்லி ஏமாற்றிவிட்டேன் என்றேன். வா என்று அழைத்துச்சென்று என் மார்புகளை காட்டினேன். திகைத்துவிட்டான். ‘ஆமாம், தாத்தாவின் மார்பு போலத்தான் இருக்கிறது’ என்றான். ’யாரிடமும் சொல்லாதே’ என்றேன். அவன் பதற்றமடைவது தெரிந்தது.
அவன் இந்நாட்களில் நிலைகொள்ளாமல் இருக்கிறான். அவன் கண்டிப்பாக அவனுடைய அண்ணன்களிடமும் அக்காக்களிடமும் சொல்லியிருப்பான். அவர்கள் அவனை அதட்டிக் கண்டித்திருப்பார்கள். அவன் வாழ்க்கை எப்போதைக்குமாகக் குழம்பிவிட்டது. இனி அவனுக்கு உண்மை பொய் என்னும் வேறுபாடு அத்தனை துல்லியமாக, அறுதியாக இருக்காது. அவன் எல்லைகளில் தடுமாறுபவனாகவே இருப்பான். அது நல்லது. அறுதியாக எல்லாவற்றையும் வகுத்துக்கொண்டவர்கள் அறிவிலிகள். அறிவு என நம்பி அறிவின்மையை வளர்ப்பவர்கள். அதை நம்பி அரசு, மதம், தத்துவம், அறிவியல், இலக்கியம் என வளர்த்துக்கொண்டே செல்பவர்கள்.
இங்கே பெண்ணுக்கு இருக்கும் வேலை என்பது அந்த அறுதியான வரையறைகளின் ஊடே நுழைவதுதான். அவற்றை தடம்புரளச் செய்வது. அவர்களின் உணவில் கொஞ்சம் ஆர்சனிக் கலப்பது. அவர்களின் கூடத்தில் ஓர் அழுகிய முட்டையை கொண்டு வைப்பது. அவர்களின் தியான அறைக்குள் ஒரு குரங்கை கொண்டுவந்து விட்டுவிடுவது. நான் செய்தது அதைத்தான். நான் நாட்குறிப்புகளாக எழுதிய அனைத்துமே பொய்கள். நான் நாவல்களாக எழுதியவை அந்தப் பொய்களை வளர்த்தெடுத்த பெரும்பொய்கள்.
அப்பட்டமான பொய்கள் அல்ல. அப்பட்டமான பொய்கள் கற்கள் போல. அவை முளைப்பதில்லை. அரையுண்மைகளே விதைகள். அவையே மாபெரும் பொய்கள். நான் நடந்தவற்றை கொஞ்சம் திருப்பி எழுதுவேன். தகவல்களை சரியாக அமைப்பேன். வர்ணனைகளை உயிர்த்தன்மையுடன் சமைப்பேன். அனைவரும் சொன்னவற்றை சொன்னபடியே எழுதுவேன், ஆனால் சாரம்சமான ஒன்றை மாற்றிவிடுவேன். அந்த தகவல்களையும் வர்ணனைகளையும் பேச்சுக்களையும் எவரும் மறுக்கமுடியாது, ஆகவே அந்தச் சாரம்சத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அங்கே நான் செய்தது மேலுமொரு சூழ்ச்சி. என் நாவல்களில் நான் என் நாட்குறிப்பில் எழுதமுடியாதவற்றை பெயர்மாற்றி இடம் மாற்றி கற்பனையாக எழுதினேன் என்று சொல்லிக்கொண்டேன். ஒன்றை உண்மை என்று சொல்லுங்கள், ஆதாரம் கேட்பார்கள். அதையே புனைவு என்று சொல்லுங்கள், அதில் உண்மையை கண்டடைவார்கள். என் புனைவில் மறைந்திருக்கும் உண்மையென்பதும் பொய்யே என்றால் அவர்கள் என்னதான் செய்ய முடியும்?
ஏனென்றால் பொய்யே பெண்ணின் ஆயுதமாக இருக்க முடியும். பொய் என்பதை பெண்ணின் உண்மை என்று கொள்ளுங்கள். பெண்ணின் உலகமே உங்கள் பொய்களால் ஆனது என்று கொள்ளுங்கள். பொய் சொல்லும்போதே பெண் உண்மையான விடுதலையை அடைகிறாள். பொய்சொல்லும் பெண் ஆற்றல் கொண்டவளாகிறாள். பொய் சொல்லும்போது பெண் அத்தனை ஆண்களுக்கும் மேலே ஒரு பீடத்தில் அமர்ந்துகொள்கிறாள். தோற்கடிக்கப்பட்ட எல்லா இடங்களிலும் அவள் வெற்றிகொண்டவளாகிறாள்.
நான் முன்னுரையை படித்து முடித்தபோது விடிய ஆரம்பித்தது. மழை நின்றுவிட்டிருந்தது. காற்று மழையைவிட ஓசையிட்டபடி வீசியது. நான் வெளியே சென்று நின்றேன். கண் நோக்கியிருக்கவே காடு துலங்கி வந்தது. வண்ணங்கள் உருவாயின. இருட்டு பச்சையென்றாகியது. மலர்களைப் பார்க்க முடிந்தது.
ஆனால் ஆச்சரியமாக, எங்கும் ஒரு துளிகூட நீர் தேங்கியிருக்கவில்லை. மொத்த மழைநீரும் அப்படியே வடிந்து சென்றுவிட்டது. முற்றத்தில் மழையில் அலம்பப்பட்ட சிவப்புநிறமான மணல் பலவகையான தீற்றல்களாகப் பரவியிருந்தது. ஒரு மாபெரும் பறவையின் இறகின் பீலிவரிகள் போல. நான் முற்றத்தில் இறங்கி அங்கே கிடந்த ஓர் இலையை எடுத்தேன். இலையல்ல, சருகு. பாதாம் மரங்கள் பங்களாவைச் சுற்றி நின்றிருந்தன. அவற்றின் சருகுகள் செம்புத்தகடுகள் போல சிவந்திருந்தன.
கோரன் எழுந்து வந்து வாசலில் நின்றான். “சாயை இடட்டா?” என்றான்.
“போடு” என்றேன்.
அவன் உள்ளே சென்றான். பங்களாவின் ஓட்டின்மேல் புகை ஊறி தவழத் தொடங்கியது. காற்று நின்றுவிட்டது. மொத்த மழைத்துளிகளையும் உதறிவிட்டு மரங்கள் அன்று பிறந்தவைபோல் நின்றன.
நான் காட்டுக்குள் செல்ல விரும்பினேன். ஆனால் அது ஆபத்து என்று தெரிந்தது. கோரனை துணைசேர்க்காமல் செல்லக்கூடாது. அவனுடன் நடந்து காட்டை பழகிக்கொள்ளவேண்டும்.
கோரன் அலுமினிய டம்ளருடன் வந்து நின்றான்.
“அதை மேஜை மேலே வச்சிரு” என்றேன். அவன் உள்ளே சென்றான்.
வானம் வெளுக்கவில்லை. மேகங்கள் செறிந்து கருமையாக மூடியிருந்தன. ஆனால் கிழக்கே ஒரு பெரிய விரிசல். அதிலிருந்து வந்த ஒளியால்தான் அத்தனை காட்சியும் துலங்கியிருந்தன.
நான் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்தேன். மேஜைமேல் அந்த புத்தகம் இருந்தது. அதன் நடுவே மேஜைமேல் கிடந்த பழைய தீக்குச்சி ஒன்றை அடையாளமாக வைத்திருந்தேன். அந்த முன்னுரையில் வாசித்தவை எல்லாம் நினைவில் எழுந்தன. ஒரு முழு வாழ்க்கை. இருநூறாண்டுகளுக்கு முன் மறைந்துபோன ஓர் உலகம். அதை விட்டு வெளியே வரவே என்னால் இயலவில்லை. உடலளவில் வெளியே சென்றது மீண்டும் உள்ளே வரும்பொருட்டுத்தான்.
புத்தகத்தை விரித்து முன்னுரையை மீண்டும் படித்தேன். படிக்கப் படிக்க ஏதோ தவறாகத் தோன்றியது. என்ன என்று தெரியாமலேயே உள்ளம் பதறத் தொடங்கியது. என்னை நிதானப்படுத்திக் கொண்டு முன்னுரையில் நான் வாசித்த பகுதிகளை மீண்டும் கூர்ந்து படித்தேன். நான் இரவில் படித்த பகுதிகளில் பல அதில் இல்லை.
என்ன இது என்று நானே எனக்குச் சொல்லிக் கொண்டேன். கனவு கண்டேனா? அல்லது வேறு ஏதாவது பக்கங்களை வாசித்தேனா? நினைவை தீட்டிக்கொண்டேன். நான் வாசித்தவை துல்லியமாக நினைவிருந்தன. அவற்றின் எழுத்துக்கள்கூட கண்முன் என தெரிந்தன. அந்த வரிகள் அளித்த கொந்தளிப்பும் குழப்பமும் அப்போது என மீண்டும் நிகழ்ந்தது.
நான் கண்களை மூடி என்னை ஒருங்குதிரட்டிக் கொண்டேன். பின்னர் விரலை எழுத்துக்களின் மேல் வைத்து வரிவரியாக வாசித்தேன். பக்கங்கள் செல்லச் செல்ல உறுதியாகிக் கொண்டே வந்தது. நான் வாசித்தவை பெரும்பாலும் அந்நூலில் இல்லை. குறிப்பாக ஃபேன்னியின் நாட்குறிப்புகள் ஒருவரிகூட இல்லை. மிகச் சம்பிரதாயமான ஒரு வாழ்க்கைக் குறிப்புதான் இருந்தது.