குருவும் குறும்பும்

மாயை

சென்ற சில நாட்களாகவே வேதாந்தக் கல்வி, மூளை சூடாகும்போது கொஞ்சம் கார்ட்டூன்கள், அவையும் வேதாந்தமும் தத்துவமும்தான். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வரைந்து தள்ளியிருக்கிறார்கள். புன்னகைக்க வைப்பவை, சிரிக்கவைப்பவை, அரிதாக ஆழமாக யோசிக்கவும் வைப்பவை.

இந்த கேலிச்சித்திரங்களிலுள்ள பொதுவான  ‘டெம்ப்ளேட்’கள் சில உண்டு. ஒன்று ஞானத்தின் உச்சி என்னும் உருவகம். அங்கே டெக்னாலஜி வந்து அமர்ந்திருப்பது. அங்கிருந்துகொண்டு அன்றாட உலகியல் சார்ந்த ஒரு தீர்வைச் சொல்வது.அதிலுள்ள அபத்தம். பெரும்பாலான நகைச்சுவைச் சித்திரங்கள் இந்த வகையானவைதான். மெய்ஞானத்தை கூகிளில் தேடுவது பற்றி மட்டும் நூற்றுக்குமேல் கேலிச்சித்திரங்கள் உள்ளன.

’தியானத்தை சரியா கண்காணிக்கலைன்னா என்ன ஆகுது பாரு”

இது ஒரு மேலைநாட்டுப் பிரச்சினை என நினைக்கிறேன். தொழில்நுட்பம், உலகியல் இன்பம் ஆகியவற்றின் உச்சியில் இருந்து ஒரு நாள் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். இந்தியாவுக்கோ ஜப்பானுக்கோ வருகிறார்கள். இங்கே குருவை தேடி அலைகிறார்கள். எங்காவது அமர்ந்தார்கள் என்றால் ஐந்தாவது நாளில் இருந்து நினைப்பெல்லாம் தொழில்நுட்பம் பற்றித்தான், உலகியல் பற்றித்தான். மெய்ஞானத்தையே தொழில்நுட்பம் வழியாக ஏன் பெறக்கூடாது என உள்ளம் பறக்கிறது.

மலையிலுள்ள குருகுலங்களில் மின்னஞ்சல் பார்க்காமல் துடிதுடிக்கும் வெள்ளையரை கண்டிருக்கிறேன். சமீபகாலத்தில்கூட ஒரு வெள்ளையர் குருகுலத்தில் அமர்ந்துகொண்டு நல்ல ரொட்டி இந்தியாவில் கிடைப்பதில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார். அந்த சிக்கலை அவர்கள் அந்த குரு மேல் ஏற்றி வேடிக்கையாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

’சீடா காலம் ஒரு மாயை. ஆனால் ஓய்வுநேரம் என்பது உண்மை. அதை தொந்தரவுசெய்யக்கூடாது”

மேலைநாட்டினர் மற்றும் இந்திய உயர்குடியினரின் சிக்கல் என்ன என்று என்னளவில் அவதானித்திருக்கிறேன். அவர்களுடைய சிக்கல் என்பது விழைவு இல்லாமலாவது அல்ல, நுகர்வில் உருவாகும் சலிப்பும் அல்ல, விழைவுக்கும் நுகர்வுக்குமான போராட்டமாக ஆகிவிட்ட வாழ்க்கையின் மெய்மையை அறிந்துகொள்வதும் அல்ல. அவர்களுடையது விழைவை, நுகர்வை கையாளத்தெரியாததன் பிரச்சினைகள்தான். அதன் விளைவான உளச்சோர்வுதான். அதாவது உண்மையில் எட்டு கோக் புட்டிகளை சேர்த்து வெறும்கையில் எடுத்துக்கொண்டு காருக்கு கொண்டுசெல்வதுபோன்ற ஒரு பிரச்சினை.

அவர்கள் பெரும்பாலும் உறவுச்சிக்கல்களில், அதன் வெறுமையில் சிக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து உளச்சோர்வை அடைந்திருக்கிறார்கள். விழைவும் நுகர்வும் உறவு வழியாகவே உருவாகிறது. மானுடருடனான உறவு, பொருட்களுடனான உறவு, சமூகத்துடனான உறவு. விழைவையும் நுகர்வையும் பெருக்கிக்கொள்கையில் அதற்கு நிகராக மறுபக்கம் உறவுகள் இழுபடுகின்றன, ஒரு கட்டத்தில்  அறுந்துவிடுகின்றன. அது உளச்சோர்வை அளிக்கிறது.

கேட்டுத்தான் தெரிஞ்சுகிடணும்னா பதிலை புரிஞ்சுகிடமுடியாது தம்பி”

உதாரணமாக, ஒருவன் காமவிழைவை முடிந்த எல்லைவரைக்கும் பெருக்கிக்கொண்டு அதற்கேற்ப ஏராளமாக நுகரவேண்டுமென விரும்பினால் அவன் மறுபக்கம் பெண்ணுடனான உறவை சிக்கலாக்கிக் கொள்கிறான். அவனுக்குக் காதலி இருக்க முடியாது, மனைவி இருக்கமுடியாது, குடும்பமும் குழந்தையும் இருக்கமுடியாது. வெறும் உடல்தான் கிடைக்கும். தன்னை உயிருக்குயிராக காதலிக்கும் ஏராளமான பெண்கள் வந்துகொண்டே இருக்கவேண்டும் என அவன் ஆசைப்பட முடியாது. உயிருக்குயிராக காதலிக்கும் பெண்ணுக்கு அவன் திருப்பி அதேகாதலையும், அதன் வெளிப்பாடான உலகியல் உறுதிகளையும் அளித்தாகவேண்டும்.

சரி,காமத்தையும் உறவையும் ரகசியமாக பெருக்கிக்கொண்டால் அந்த ரகசியத்தை அவனுடைய அன்றாட உலகம் தாங்கமுடியாது. உள அழுத்தமே பெருகும். அந்த உளஅழுத்தம் தாளாமல் ஒருநாள் காலையில் அவன் பின்பையை தூக்கி போட்டுக்கொண்டு இந்தியா வந்து இமைய மலைமேல் ஏறி அங்கே ஏதாவது குருகுலத்தில் தங்கி, எல்லாவற்றையும்  ‘துறந்து’, தியானம் செய்ய ஆரம்பித்தால் அவனுள் இருக்கும் காமம் சிலநாட்கள் அடங்கியதுபோல் காட்டிக்கொள்ளும். பின்னர் தடையுடைத்துப் பெருகி எழும். அதன்பின்னர் ஒரு துறவி ஒருமுறை சொன்னதுபோல இமையமலைமுடிகள் எல்லாம் மாபெரும் முலைகளும் பின்பக்கங்களுமாக ஆகிவிடும்.

”சீடா, கண்ணுக்குத்தெரியற எதுவுமே உண்மை இல்லை, தெரிஞ்சுக்கோ”

இன்னொரு ‘டெம்ப்ளேட்’ பொய்யான ஆசிரியர்களைப் பற்றியது. இதுவும் அவர்களுக்குரிய முதன்மைச் சிக்கல். இச்சிக்கல் எல்லாருக்கும் இருப்பதுதான். மெய்யான ஆசிரியரை எப்படி தெரிவுசெய்வது? நல்ல  இசை பயிலவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? நல்ல இசைக்கலைஞரை ஆசிரியராகத் தெரிவுசெய்யவேண்டும். அந்த தெரிவைச் செய்ய நமக்கு கொஞ்சம் இசை தெரிந்திருக்கவேண்டும். அந்த அடிப்படை இசையறிவு நமக்கு இயல்பிலேயே அமைவது.

ஆனால் மெய்யியலில் அது நடப்பதில்லை. எவருக்கும் அதில் இயல்பான திறமை அல்லது ருசி என ஏதுமில்லை. முதலில் நாம் தேடுவதென்ன என்பதே நமக்குத்தெரியாது. நாம் குழம்பி, துன்புற்று, முற்றிலும் இருளில் இருக்கையில்தான் மெய்மை நாடி செல்ல முனைகிறோம். அப்போது நமக்கு கண்ணுக்குத்தெரியும் ஏதேனும் ஒரு வழியை தெரிவுசெய்கிறோம். அந்த வழியே சென்றபின், அது பிழையென்றோ பொய்யென்றோ உணர்ந்தபின் திரும்பி வருகிறோம். வேறு வழியே இல்லை. அதிலுள்ள இழப்புகளை தவிர்க்கவே முடியாது.

”வாழ்க்கையோட அர்த்தமா? சரி, நான் சொல்லித்தரேன். ஆனால் எப்டி இந்த மலையிலே இருந்து இறங்கிறதுன்னு நீ எனக்குச் சொல்லித்தரணும்”

ஒரு மெய்யான குருவுக்கும் போலி குருவுக்கும் என்ன வேறுபாடு? மெய்யான மருத்துவருக்கும் போலி மருத்துவருக்கும் என்ன வேறுபாடோ அதுதான். மெய்யான மருத்துவரின் மருந்து குணப்படுத்தும். மற்றபடி போலி மருத்துவரும் அதே வெள்ளைக்கோட்டுடன், அதேபோன்ற மருத்துவமனையில், அதேபோன்ற மருத்துவக் கலைச்சொற்களுடன்தான் காட்சியளிப்பார். ஆனால் அவர் மருந்து குணப்படுத்தாது, சிலசமயம் ஆளைக்கொல்லவும் செய்யும்.

பெரும்பாலான ஐரோப்பியர் புறத்தோற்றத்தை முதன்மையாக கருதுகிறார்கள். குரு என்றால், ஒன்று பொலிவான தோற்றம், அல்லது உக்கிரமான தோற்றம். தோற்றம் என்பது ஒரு மனிதன் தன்னை ஓர் அடையாளமாக, குறியீடாக ஆக்கிக்க்கொள்வதே. குறியீடு நேரடியானது, ஆழமாக நம்மை பாதிப்பது. ஒவ்வொரு போலியும் மிக உண்மையான, அதனாலேயே மிகப்புகழ்பெற்ற ஒரு  மெய்ஞானியின் தோற்றத்தையே நகல் செய்திருப்பார். ஆகவே மிக எளிதில் நம்மை பாதிப்பார். அத்துடன் மெய்யியலுக்கான தனிமொழி, தனிக் கலைச்சொற்கள், அதற்கான பாவனைகளையும் கைக்கொண்டால் கண்டறிவதே கடினம். தின்றுபார்த்தபிறகுதான் நஞ்சா இல்லையா என்று சொல்லமுடியும். கொஞ்சமாக தின்று நோயுற்று மீள்வது நல்லது- நோயெதிர்ப்புசக்தி இருக்கும்.

”நிஜம்மாவே இதெல்லாத்தையும் பண்ண விரும்புறியா? இந்த மெய்ஞானத்துக்கெல்லாம் அவ்ளவு மதிப்பு இல்லேன்னு சிலபேர் நினைக்கிறாங்க”

அதைக் கண்டறிய ஒரே வழி நம் தேடலை உண்மையாக வைத்துக் கொள்வதுதான். நம் பசியை அல்லது நோயை சமரசம் செய்யாமலிருப்பதுதான். நம்மை ஏமாற்ற நம் ஆணவத்தையே போலிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். “நீ ஞானம் அடையும் விளிம்பில் இருக்கிறாய், ஏனென்றால் நீ மிக அரியவன், மிகக்கூர்மையானவன்” என்று ஒருவர் நம்மிடம் சொன்னால் “அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க” என்று சொல்ல பெரிய ஆன்மபலம் வேண்டும். அது பெரும்பாலும் இருப்பதில்லை. ஏழுநாள் கிராஷ்கோர்ஸ் யோகமோ தியானமோ அப்யசித்துவிட்டு  “இங்கிட்டு ஒரு வைபரேஷன் இருக்குங்க” என்பவர்கள் நாம்.

இன்னொரு சிக்கல், போலியை கண்டறிகிறோம் என்ற பேரில் எப்போதும் ஐயத்துடனேயே இருப்பது. அணுகும் ஒவ்வொருவரையும் சோதனை செய்வது. ஆன்மிகத்தில் மட்டுமல்ல, இலக்கியத்திலும்கூட இந்த ‘பரிசோதிக்கும் மனநிலை’ மிகப்பெரிய தடை. ஏற்புநிலையையே இல்லாமலாக்கிவிடுகிறது. ஏற்பவனை திரிபடையச் செய்துவிடுகிறது. முக்கியமாக ஆசிரியனை [அல்லது இலக்கிய ஆசிரியனை] ஆய்வுப்பொருளாக்கி ஆய்வாளனின் இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்ளச் செய்கிறது. அது ஒரு அசட்டு மேட்டிமைத்தனம். ஒரு மெய்ஞானியை, ஓர் இலக்கிய ஆசிரியனை ‘ஆராய்ந்து மதிப்பிட’ நமக்கு ஏது திறமை அல்லது தகுதி என்று நாம் யோசிப்பதில்லை. இந்த அசட்டு ஆணவம் ஒரு மாபெரும் இரும்புச்சுவர். மண்டையை முட்டி உடைத்துக்கொள்ளலாம், அவ்வளவுதான்.

”அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்”

உண்மையாகவே ஐயப்படும்போதுகூட நாம் நம் தர்க்கபுத்தியை ஆன்மிகம் அல்லது இலக்கியம் நோக்கி திருப்பி, கூராக்கி வைக்கிறோம். ஆன்மிகமும் இலக்கியமும் தர்க்கபுத்தியுடன் உரையாடுபவை அல்ல. தர்க்கபுத்தியை நோக்கி திருப்பினால் பொருளிழந்து விடுபவையும்கூட. ஆகவே ஒருவன் ஆன்மிகத்தேடலுடன் ஓர் ஆசிரியரை அணுகி அவரை ஐயம்கொண்டு ஆராய்ந்துகொண்டிருந்தால் அத்தனைபேருமே போலிகளாகத்தான் தெரிவார்கள். அது அருவமான ஒன்றை பருவடிவ அளவுகோலால் அளப்பதுபோன்றது.

ஏனென்றால் அவன் அந்த ஆசிரியரை நோக்கி திருப்பி வைக்கும் அந்த தர்க்கபுத்தி அதுவரை அவன் கற்ற கல்வி, அவன் வாழ்ந்த வாழ்க்கைச்சூழல், அவன் அடைந்த அனுபவங்களிலிருந்து வருவது. அந்த குரு அவற்றுக்கு வெளியே வேறொரு சூழலில் இருப்பவர். அவருக்கு அவனுடைய இறந்தகாலத்தில் எந்த இடமும் இல்லை. அங்கிருந்து திரட்டிய தர்க்கத்தால் அவரை மதிப்பிடவும் முடியாது.

ஆகவே எப்படியானாலும் அவன் நம்பிக்கையை அளிக்கவேண்டியிருக்கிறது, தன்னை ஒப்படைக்கவேண்டியிருக்கிறது, கற்று உணர்ந்து மாறிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. அந்த மாற்றங்களை அவதானித்து அதனூடாகவே அவன் குருவை மதிப்பிடவேண்டும். மெய்யான குருவே மாற்றங்களை உருவாக்குவார். ஒரே குரு அனைத்தையும் அளிக்கவேண்டியதில்லை. ஒருவர் ஒரு மாற்றத்தை அளிக்க அதன் உச்சியிலிருந்து மேலே செல்ல வழிகாட்ட இன்னொருவர் வரலாம்.

”ஞானத்தை அடைஞ்சிடலாம். அப்றம் கீழேதான் போயாகணும்”

மேற்கத்திய நகைச்சுவைகளின் இன்னொரு டெம்ப்ளேட் தியானம் அல்லது யோகத்தில் ஊடாடும் அன்றாடத்தின் வீச்சு. தியானம் செய்யும்போது அவ்வப்போது ஓரக்கண்ணைத் திறக்காதவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள். அதைப்பற்றிய பகடிகள் எந்த குருநிலையிலும் புழக்கத்தில் இருக்கும். நித்யாவின் பகடி, ஒரு பெண்ணிடம். “சியாமளா, தைரியமாக தியானம் செய். முந்தானையை கவனித்துக்கொள்ள தியானமரபில் ஒரு தனி தெய்வம் உண்டு”

தியானம் என்பது உடலுக்கும் நமக்குமான போராட்டம்தான். தன்னை ஆத்மா மறந்துவிடக்கூடாது என உடல் நினைக்கிறது. மிகவும் உடைமையுணர்வுகொண்ட மனைவிபோல. தூக்கத்திற்குள்ளும் கனவாக புகுந்து வந்து நிற்கிறது. தியானம் செய்ய கண்ணை மூடியதுமே  ‘அங்கே என்ன சோலி?” என வந்து நின்றுவிடுகிறது. தியானம் செய்ய அமர்ந்ததுமே கீழ்வாயு கிளம்ப ஆரம்பிப்பவர்கள் உள்ளனர். சொறிபவர்கள், அசைந்து அமர்பவர்கள் ஏராளம். முட்டச் சாப்பிட்டால்கூட கண்மூடி அமர்ந்ததுமே பசி வந்துவிடும் என ஒருவர் ஒருமுறை சொன்னார்.

”ஞானம்தானே?நானே தர்ரேன். இப்பதான் ஒரு ஞானியை சாப்பிட்டேன்”

ஞானத்தின் அன்றாடப்பயன் மதிப்பைப் பற்றிய பகடிகள் கடைசி ‘டெம்ப்ளேட்’. ஞானம், அறிவு, திறமை ஆகிய மூன்றுக்கும் இடையேயான வேறுபாடுகள் எப்போதுமே சிக்கலானவைதான். முற்றிலும் உலகப்பயனற்ற ஒன்றுக்குத்தான் உலகியலில் முதன்மை மதிப்பிருக்கும்– வைரங்கள் போல, கலைப்பொருட்கள் போல. மெய்ஞானமும் அப்படித்தான். இந்த முரண்பாட்டை ஒரு லௌகீகனின் கோணத்தில் நின்று பார்த்தால் வேடிக்கையாக ஆகிவிடுகிறது. ஞானமடைந்தவனுக்கு ரேஷன் கார்டில் அரிசி கூடுதலாக கொடுக்க முடியாது. ஆதார்கார்டில்கூட அதை குறிப்பிட முடியாது.

ஞானத்தை கேலிசெய்வதென்பதும் ஞானமே- சரியான ஞானத்தை அது கேலிசெய்கிறது என்றால். ‘நிர்குண பிரம்மம் என்று ஒன்று இல்லை. ஏனென்றால் அது நிர்குணம் என்ற அடையாளம் கொண்டது’ என்ற வரிக்கு வேதாந்திகள் சிரிப்பார்கள். மற்றவர்களுக்கு அதில் என்ன நகைச்சுவை இருக்கிறதென்றே தெரியாது.

”எவ்ளவோ காலமா பண்றானுக, இன்னும் தன்குண்டிய தானே நக்கிக்க முடியலை”

ஆனால் உண்மையில் மிகக்குறைவாகவே சாராம்சத்தில் தத்துவ அம்சம் கொண்ட நகைச்சுவைகள் உள்ளன. உதாரணம் இந்த கட்டுரையின் முதல் சித்திரம். நமது பார்வை உருவாக்கும் தன்னிலையை பகடி செய்யும் அந்த கேலிச்சித்திரம் மிக ஆழமானது. பகடி எங்கே தத்துவமாக ஆகிறதென்றால் அங்குதான்.

இப்படி அச்சில் வந்த பகடிகள் மிகக்குறைவு என்றாலும் பெரும்பாலான நவீன வேதாந்த குருகுலங்களில் நுணுக்கமான பகடிகள் உரையாடல்களில் வந்துகொண்டே இருக்கும். முப்பதாண்டுகளுக்கு முன்பு நித்யா குருகுலத்தில் ஒரு ஜெர்மனியரின் டைரியில் அவர் வரைந்த கேலிச்சித்திரங்கள் நிறைந்திருந்தன. கூடவே கவிதைகளும்

ஒரு கவிதை இது, நினைவிலிருந்து. தலைப்பு இல்லை. ஆனால் தன் பின்பக்கத்தை தானே நக்கும் ஒரு பூனையின் படம் இந்த கவிதையுடன் இருந்தது

நேற்றுத்தான் சொன்னார்கள்

ஓம் என்றால்

ஆம் என்று பொருள் என்று.

அய்யய்யோ,

நேற்றுவரை தியானம் செய்யும்போது

நான் எதற்கெல்லாம் ஆம் சொல்லியிருக்கிறேன்!

பரிதவித்து

கண்ணீர் மல்கி

முடிவுசெய்தேன்.

இன்று முழுக்க இல்லை இல்லை என்றேன்.

உதவி உதவி!

என்னை காப்பாற்றுங்கள்!

ஏகப்பட்டவற்றுக்கு இல்லை சொல்லிவிட்டேன்!

”எலும்பு முக்கியம் அல்ல, தோண்டுவதுதான் நாம் அடையும் இன்பம்”

வேதாந்தத்தின் பல நுண்தளங்கள் உடனடியாக பகடியாகவும் ஆகக்கூடியவை. பகடியாக ஆனபின்னரும் அந்த மர்மம் நீடிக்கும். வேதாந்தத்திலுள்ள அனைத்தும் பிரம்மம்தான் என்னும் வாசகம் முடிவற்ற சிரிப்புடனும் உணரத்தக்கது. சாமானியம் விசேஷம் என்னும் பிரிவினை, அறிபடுபொருளும் அறிதலும் அறிவும் ஒன்றே என்னும் தரிசனம் எல்லாமே அபத்தத்தின் எல்லையைச் சென்று முட்டுபவை. ஆகவே நகைச்சுவையாக ஆகக்கூடியவை.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பல குட்டிக்கதைகள் பகடிகள்தான்.உதாரணம் யானைக்கதை.  “யானையும் பிரம்மம் நானும் பிரம்மம். ஆகவே அஞ்சமாட்டேன்” என்று ஒருவன் யானைமுன் சென்று அடிவாங்கினான். சாகும்நிலையில் குருவிடம் அது ஏன் நடந்தது என்று கேட்டான். “மேலே இருந்து பாகன் என்ற பிரம்மம் விலகு விலகு என்றதே, அதை கேட்டாயா?”என்று அவர் சொன்னார்.

யாரோ சாமியார். நாம மோ ன்னு சொல்றத தலைகீழா சொல்லிட்டிருக்கார்”

வேதாந்த வகுப்புகளின் வேடிக்கைகளைப் பற்றி மட்டும் தனியாகத்தான் எழுதவேண்டும். ஆனால் அவற்றை வேதாந்தக் கோட்பாடுகளுடன் இணைத்துக்கொள்பவர்களால்தான் ரசிக்க முடியும். ஆகவே பெரும்பாலான பகடிகள்  வேதாந்தமும் பௌத்தமும் பாமரரின் பார்வையில்எப்படிப் பொருள்படுகின்றன என்ற அளவிலேயே அமைவது இயல்பானதுதான். வேதாந்த வகுப்பின் பகடிகள் சிதம்பரதீர்த்த சுவாமி நடராஜகுருவைப் பற்றி எழுதிய நூலில் நிறைந்திருக்கின்றன.

அதிலொன்று. ‘உழைப்பால்தான் மானுடனின் கை உருவானது என்கிறார் மார்க்ஸ்’ என்று ஒரு மாணவர் சொன்னான். ‘அப்படியென்றால் கண்?’ என்றார் நடராஜ குரு.

யோகம்

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 4
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் – கடிதம்