இடுக்கண் வருங்கால்…

”இந்த வாசிப்பு விளக்கு வாங்கின நாளிலே இருந்து ஒரு வார்த்தை வாசிச்சதில்லை”

ஜிம் உங்கரின் ஹெர்மன் காமிக்ஸை ரசிக்க நமக்கு ஐம்பது வயது தாண்டியிருக்கவேண்டும். இவை கொஞ்சம் புன்னகைக்கவைப்பவை, அவ்வப்போது ‘என்ன பெரிய ஜோக் இதிலே?’ என்று சலிப்படையவும் வைப்பவை. ஆனால் மெய்யான நகைச்சுவை என்பது அவ்வப்போது இதிலுள்ள சில வேடிக்கைகளைப் பார்த்து அவை யதார்த்த உண்மைகள்தானே என நாம் நினைக்க நேர்வது.

ஹெர்மன் சிரிப்புகள் எங்கே தொடங்குகின்றன? ஏழாண்டுகளுக்கு முன் நான் நாகர்கோயில் மணிமேடையில் மெல்ல வளைந்து திரும்பிய ’பார்வதிபுரம் முதல் பார்வதிபுரம்’ பஸ்ஸில் ஏற முயன்றேன். நான் உத்தேசித்த இடத்தில் பஸ்ஸின் கைப்பிடியும் கால்படியும் இருக்கவில்லை. தவறி உயிரின் ஆவேசத்துடன் இன்னொன்றை பற்றிக்கொண்டு உயிர்தப்பினேன். அப்போது தெரிந்தது, அவ்வளவுதான், ஒரு காலகட்டம் முடிந்தது என்று.

”அந்த புது ஆளு எனக்கு ஹெல்ப் பண்ணிட்டு இங்கதான் இருந்தான்…”

அதன்பின் நாம் நம்மை முதியவர்களாக நினைக்க ஆரம்பிக்கிறோம். கால்வைக்கும் முன் படிகளை ஒருமுறை பார்த்துக்கொள்கிறோம். ஏறுவதற்கு முன் உயரமென்ன என்று கணித்துக்கொள்கிறோம். பிறர் உடல்நலம் பற்றிச் சொல்லும்போது செவிகொடுக்கிறோம். சில்லறைச்சிக்கல்களைப் பற்றி நிறையநேரம் யோசிக்கிறோம்.[சீப்பில் ஆணியை வைத்து பற்றிக் கொண்டு ஆணியடிக்கும்போது சுத்தியல் தவறி பட்டுவிட்டால் சீப்பு உடைந்துவிடாதா?- என்கிற மாதிரி]

நமக்கு ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. நெருக்கமான சமவயதினர் சிலர் போய்ச்சேர்கிறார்கள்.நாம் பொறுமையாக கல்யாணங்களுக்கு போய் வரிசையில் நின்று மொய் வைக்கிறோம். சாவு வீடுகளில் தேய்வழக்குகளை உசிதமான முறையில் சொல்கிறோம்.  “இந்த லேண்ட்லாம் நான் பாக்க சும்மா கெடந்தது, இப்பல்லாம் பிளாட் போட்டுட்டான், என்னா வெலைங்கிறீங்க?” என்று பேசிக்கொள்கிறோம். ”எங்க காலத்திலே ஒரு ஃபோன் பேசணுமானா போஸ்டாப்பீஸுக்கு போகணும்” என்று தொழில்நுட்பத்தை வியக்கவோ பழிக்கவோ செய்கிறோம்.

”அப்டி பாக்காதே, நான் பாலீஷ் பண்ணிட்டிருந்தேன், அவ்ளவுதான்”

ஹெர்மன் அமெரிக்க நடுத்தர வர்க்க, நடுவயது கடந்த, குடிமகனின் வாழ்க்கையை காட்டுகிறது. ஜெர்மனிய வம்சத்தவராக இருக்கலாம். பிரம்மாண்டமான உடலும் செங்குத்தான மூக்கும் கொண்டவர். கோட்டு போட்டுக்கொண்டு வேலைக்குச் சென்று அடிக்கடி வேலையிழப்பவர். பெட் பிராணிகள் வளர்ப்பது, ரெஸ்டாரெண்டுகளில் சாப்பிடுவது, ஹாலிடே செல்வது, கண்டபடி ஷாப்பிங் செய்வது ஆகியவை பற்றிய அமெரிக்க கனவுகள் கொண்டவர். அங்கே சிக்கல்களில் மாட்டிக்கொள்பவர்.

அமெரிக்க மொழியில் ’ஸிக் ஜோக்’ எனப்படும் நையாண்டிகள்தான் பெரும்பாலும். கணிசமான கதைகள் வெள்ளெழுத்துக் கண்ணாடி போட்டபிறகு நிகழும் குட்டிக்குட்டி விபத்துக்கள், ஆஸ்பத்திரி அனுபவங்கள், பல்பிடுங்குதல், கண் பரிசோதனை செய்தல். மனைவியின் உடம்பு பூதாகரமாக ஆகிவிடுகிறது, கூடவே அவள் சமையல் சகிக்கமுடியாமலாகிறது. அன்றாட வாழ்க்கையிலேயே இருத்தலியல் துயர் மிக்க கணங்கள் அமைகின்றன

”ஃப்ரிட்ஜிலேதான் முட்டைய வைச்சேன். எப்டி பொரிச்சுதுன்னு தெரியலை”

ஹெர்மனுக்கு அமெரிக்காவின் ‘சிஸ்டமும்’ சிக்கல்தான். போலீஸ்காரர்கள், வாசல்காவலர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் எல்லாரும் கொஞ்சம் பயமுறுத்துகிறார்கள். ”உலகம் இத்தனை வேகமாக மாறினால் நான் எப்படி மாறுவது?” என்ற பரிதவிப்பு அவருக்கு உண்டு. தள்ளுபடியில் தேவையில்லாத பொருளை வாங்குவது, நாமே செய்துகொள்ளும் கருவிகளை வாங்கிவந்து தப்பாகச் செய்து பிரச்சினைக்காளாவது, செய்திகளை வேறுகோணத்தில் புரிந்துகொண்டு திகைப்பது என அல்லாடுகிறார்.

இந்தவகையான கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு ஒரு டெம்ப்ளேட் இருக்கும். திரும்பத்திரும்ப அதுவே நடக்கும். நடக்கப்போவதென்ன என்று நமக்கு தெரியும். ஆனால் பார்க்கும்தோறும் அதன் நுட்பங்கள் தெரிய ஆரம்பிக்கும். அமெரிக்காவின் ஒரு நடுத்தர வார்க்கையின் முழுச்சித்திரத்தையே இவை உருவாக்கி அளித்துவிடுகின்றன.

ஜிம் உங்கர் [Jim Unger] பிரிட்டனில் பிறந்த கனடிய கேலிச்சித்திரக்காரர். பதினெட்டு ஆண்டுகள் ஹெர்மன் என்ற தலைப்பில் கார்ட்டூன்களை வரைந்தார்.  1937ல் பிறந்தவர் 2012ல் மறைந்தார். தன் அண்ணன் பாப்பின் சாயலில் ஹெர்மனை படைத்ததாக ஜிம் சொல்லியிருக்கிறார்.

ஹெர்மனை அணுக்கமாகப் புரிந்துகொள்ளுந்தோறும் அதிலிருக்கும் நகைச்சுவை மறைந்துவிடுகிறது. பக்கத்துவீட்டுக்காரரிடம் அவருடைய அன்றாடத்தை கேட்டு தெரிந்துகொள்வதுபோல ஆகிவிடுகிறது. நாமே இந்தப்பக்கம் இன்னொரு ஹெர்மனாக இருந்தால்தான் மெய்யாகவே இதை ரசிக்கமுடியும்.

”இந்த மாத்திரைகளை ஒரு கப்பு தண்ணியொட தூங்கி முழிக்கிறதுக்கு அரைமணிநேரம் முன்னாடி சாப்பிடுங்க”

நான் ஷேவிங் க்ரீம் வைத்து பல் துலக்கியிருக்கிறேன்.சூடான டீக்கோப்பையை என் தொடைமேலேயே வைத்துக் கொண்டிருக்கிறேன். அண்டாவுக்குள் நீர் இருக்கிறதா என சட்டைப்பைக்குள் செல்போனுடன் குனிந்து பார்த்திருக்கிறேன். கடுகு பொரியும் எண்ணை கொண்ட வாணலியில் கருவேப்பிலை வெங்காயத்தை போட்டபோது அந்த தட்டில் நிறைய தண்ணீர் இருந்திருக்கிறது.

நான் ஷேவ் செய்துகொண்டால் ஆஃப்டர்ஷேவ் பயன்படுத்துவதுண்டு. ஆனால் அவசரத்துக்கு கைக்குச் சிக்காது. ஸ்பிரிட்தானே எல்லாம் என்னும் அடிப்படையில் ஹேண்ட்சேனிடைசரையும் போட்டுக்கொள்வேன். அதுவும் கைக்குக் கிடைக்கவில்லை என்றால் டியோடரண்டை ஸ்ப்ரே செய்துகொள்வேன். அதுவும் ஸ்பிரிட்தான்.நான் மதுவருந்துவதில்லை என்பதனால் அது ஸ்டாக் இருப்பதில்லை.

“இனி சிகிச்சைன்னா மறுபிறப்புத்தான்”

அவசரமாக சென்னை கிளம்பவேண்டும். வீட்டில் அருண்மொழி இல்லை, நான் மட்டும்தான். ஷேவ் செய்துவிட்டு வந்து சட்டையைப் போட்டு ஜீன்ஸை போட்டுக்கொண்டே ஆஃப்டர் ஷேவுக்காக தேடினேன். ஸ்ப்ரே அகப்பட்டது. எடுத்து சர் சர் சர் என நான்கு வீச்சு. ஏதோ விபரீதமாக நடந்துவிட்டதென்று தெரிந்தது. என்ன என்று தெரிவதற்குள் நான் பற்றி எரிய ஆரம்பித்துவிட்டேன்.

அது சுளுக்கு , தசைவலிக்கு அடிக்கும் ’மூவ்’ மருந்து ஸ்ப்ரே. விக்ஸையும் அமிர்தாஞ்சனத்தையும் வற்றல்மிளகாயுடன் கலந்து அடித்தது போல ஏரிய ஆரம்பித்தது [இதை பெண்கள் தற்காப்புக்காக பெப்பர் ஸ்ப்ரே ஆக பயன்படுத்தலாம், நான் அனுபவ உண்மையாகச் சொல்லமுடியும்] முட்டாள்தனமாக தண்ணீர்விட்டு கழுவப்போக மேலும் எரியத் தொடங்கியது. வாசலில் ஆட்டோக்காரர் ஜான் ஹார்ன் அடித்தார்.

”அப்பா, உனக்கு சரியாகலைன்னா நான் என்னோட அக்குபங்சரை பண்ணிப்பாக்கவா?”

ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. நாகர்கோயிலே பற்றி எரிந்துகொண்டிருந்தது. நடுவே என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த இலக்கிய சிந்தனைகளும் அனல் பறந்தன. ரயில்நிலையத்தி இறங்கி பெட்டியுடன் சென்றபோது எதிர்பட்ட ஒரு வாசகர் புன்னகைத்து நலம் விசாரித்தார். நானும் புன்னகைத்து நலம் கூறினேன். என் முகம் அப்போதிருந்த வடிவை எழுத்தாளர்களின் பொதுவான முகமாக அவர் நினைக்காமலிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

நான் ஹெர்மனை பார்த்தால் அவர் என்னைப் பார்த்து அணுக்கமாகப் புன்னகை புரிவார் என நினைக்கிறேன்.

”புது கோட்டு வாங்கி குடுத்தே. இப்ப சிங்கம் இருக்கிற காட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கே? உன்னோட உத்தேசம் என்ன?”
”உங்க மருமான் இங்க இல்ல, உங்க இறுதிச்சடங்குக்கு போயிருக்கார்”
”வாசிக்க முடியலை டாக்டர், அவ்ளவு கிட்டக்க காட்டினா என்னாலே வாசிக்க முடியாது’”
“ஏய், இந்த முட்டைய எந்தக்கடையிலே வாங்கினே?”
”கூலா இருக்க டிரை பண்ணுங்க. அதுக்கு பயத்தோட வாசனை தெரியும்”
”எந்திரிங்க, பூனை உங்க பல்செட்டை கவ்விட்டுது”
பிரசவ ஆஸ்பத்திரி “இந்த குழந்தை என்னோடதுதான்னு உறுதியா சொல்லமுடியுமா?”
விமானநிலையத்தில்: “பெட்டி வந்திட்டுது, உங்க மனைவிதான் டோக்கியோ போயிட்டாங்க”
”அந்த இடது காலை ரெண்டு நாளைக்கு ஊணாதீங்க”
”காத்துக்காக கதவ தெறந்து வைச்சாச்சு, இப்ப ஓக்கேதானே?”
”ஒண்ணுமில்ல, புது கப்பு. என் மனைவி கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கா”
”இந்த சுத்தியல் இடதுபக்கம் ரெண்டு இஞ்சு தள்ளியே அடிக்குது”

”அதாவது உங்க கணவர் ஃபர்னிச்சரை நகத்துறப்ப நீங்க உதவி செஞ்சீங்க, அப்டியா மாட்டி நின்னுட்டுது…”
”இதுக்கு மேலே அது தந்திரமா இருக்க வாய்ப்பிருக்குன்னு தோணலை?”
”உணவே நாம்னு ஒரு பழமொழி இருக்கு”
”இந்த தொற்றுநோய் பரவாம இருக்கத்தான் நான் டிரைபண்ணணும், நீயே சொல்லு சரிதானே?”
முந்தைய கட்டுரைவிழிநிறைக்கும் கலை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 1