வெண்முகில்நகரம் – வாசிப்பு

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது நாவல். வெண்முரசு – இன் அனைத்து நாவல்களும் தன்னளவில் முழுமை கொண்டது என்பதால், வெண்முகில் நகரம் – நாவலை இவ்வாறு பிரித்தறிய முயற்சிக்கிறேன்.

அ. திரெளபதி – இந்திரபிரஸ்தம் நகரை அமைத்தல்

ஆ. இருதரப்பினரும் போருக்கு ஆயத்தமாக தங்கள் தரப்பில் படைகளைத் திரட்டுதல்

இ. மலைக்குடிகள் – சிறிய குலங்கள் தங்கள் பாதுகாப்பின் பொருட்டு எடுக்க நேரிடும் முடிவுகள் அதன் விளைவுகள்

ஈ. பானுமதியின் கருணை கொண்ட விழிகள்

வெண்முரசின் ஐந்தாவது நாவலான பிரயாகை, திரெளபதி – பாண்டவர்கள் திருமண நிகழ்வுடன் நிறைவு பெற்றது. அதிலிருந்து தொடங்குகிறது வெண்முகில் நகரம். சாத்யகி மற்றும் பூரிசிரவஸ் – இருவர்களின் வழியாகவே வெண்முகில் நகரம் – கட்டப்படுவதற்கான சூழல் உருவாதை பார்க்கிறோம். சாத்யகி கிருஷ்ணனின் அணுக்கன். பூரிசிரவஸ் மலைக்குடியில் இருந்து வந்து துரியோதனனின் அணுக்கனானவன்.

முந்தைய நாவலான வண்ணக்கடல் – பிரயாகை இரண்டும் உணர்ச்சி பெருகி ஓடிய வெள்ளம் என்றால் வெண்முகில் நகரம் அவ்வப்போது சுழலில் முட்டி ஒழுகும் நதி. நதியின் இரு கரைகளாக பூரிசிரவஸ் மற்றும் சாத்யகி. இரு கரைகளில் இருந்து சுழலை எப்படி பார்க்க வேண்டும் என கிருஷ்ணன் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

அனைத்தையும் தள்ளி நின்றே பார்க்கிறான் கிருஷ்ணன். எதிலும் பங்கெடுத்துக் கொள்வதில்லை. ஆனால் எல்லாம் அவனால் நடத்தப்படுகிறது. கோட்டைக் காவலனின் பெயரை செல்லி அவனை தழுவும் கிருஷ்ணனிடம், சாத்யகி “ஒற்றர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள் ” என்றதும் “அதில் என்ன பிழை, கோட்டைக்குள் இருப்பவரைப் பற்றி தெரிந்து கொண்டு தான் வருகிறோம் இல்லையா, அதை போல் தான்.

நான் இவர்களால் எனக்கு ஏற்படும் நன்மை குறித்து எல்லாம் சிந்திப்பதில்லை, அறிதலில் மகிழ்கிறேன்” ( என் நினைவில் இருந்தே இதை எழுதுகிறேன், குறிப்பு எடுத்தேன் – நான் என்றும் நினைவில் நிறுத்த வேண்டியது – அதனால் குறிப்புகளைப் பார்க்கவில்லை ) ஏன் கிருஷ்ணன் அனைவருக்கும் வழிகாட்டியாக குழந்தையாக இருக்கிறான் என்பதற்கான ஆதார வரிகள் இவை. எந்த செயல் செய்தாலும் அதில் மட்டுமே முழுமையான ஈடுபாட்டோடு செய்பவன்.

கிருஷ்ணன் வரும் பகுதிகள் எப்போதும் மகிழ்ச்சிக்குரிய தருணங்கள் தான். இல்லை அத்தருணங்கள் மகிழ்ச்சிக்குரியதாக கிருஷ்ணனால் மாற்றப்படுகிறது. எரிமாளிகை நிகழ்விற்கு பிறகு துரியன் – யுதிஷ்டிரன் முதல் சந்திப்பு என்பது பெரிய சங்கடம் கொடுக்க கூடிய ஒன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். கிருஷ்ணன் அச்சந்திப்பை ஒருங்கிணைத்து கொண்டு சென்ற விதம் ஒரு மேலாண்மை கதை.

பேரரசுகள் வணிகத்தால் நிலைநிறுத்தப்படுகின்றன. வணிகம் – அஸ்தினாபுரியில் எப்படி நிகழ்கிறது, துவாரகை எப்படி தன் வணிகத்தை பொருக்கி கொள்கிறது. இந்திரபிரஸ்தம் எப்படி வணிகத்தை கையாளத் திட்டமிட்டிருக்கிறது, மலை வணிகம் எப்படி நடைபெறுகிறது என முழுமையான வணிகச்சித்திரத்தையும் அளிக்கிறது வெண்முகில் நகரம்.

நாவலில் வந்த அனைத்து விஷயங்களும் பானுமதியின் கருணைமுன் பஞ்சாகின்றன. பானுமதி எப்படி மாறப்போகிறாள், அந்த நிகழ்வுகள் யாவை என்பது நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அவர்கள் மாறாமல் அதே கருணையுடன் இருக்க வேண்டும்.

வாசிக்கும் போது நீண்ட கடிதம் எழுதவே திட்டமிட்டேன். ஆனால் பானுமதி கதாபாத்திரம் என்னை முழுமையாக அதனுள் இழுத்துக் கொண்டது. அதற்குள்ளேயே சில நாட்கள் இருக்க வேண்டும்.

நன்றி

பலராம கிருஷ்ணன்

பெண்களின் நகரம்
முந்தைய கட்டுரைஇன்றிருந்தேன்…
அடுத்த கட்டுரைமோட்சம்- கடிதம்