செவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்

 

தமிழ் வாசிப்பு உதவி மென்பொருள்

அன்புள்ள ஐயா,

ஆசிரியரைப் பெயர் சொல்லி அழைக்கத் தயக்கமாய் இருக்கிறது. நான் எனது முப்பதுகளில் அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்துதான் பாடப் புத்தகங்கள் தாண்டி, வணிக இதழ்கள் படிக்கத் தொடங்கினேன். காரணம், பிரெயிலில் பாடப்புத்தகங்கள் அச்சடிப்பதே பெரும் சவால். தன்னார்வலர்களின் உழைப்பால் உருவான ஒலிப்புத்தகங்கள் வழியே ஜெயகாந்தனின் சில கதைகளைப் படித்திருக்கிறேன். மற்றபடி பெரும்பாலான ஒலிக்கோப்புகள் நல்வழி கொன்றை வேந்தன் ரகம்தான். அதனால் அயர்வே மிஞ்சியது.

இணையத்தில் விகடன் இதழ்களை வாசிக்கத் தொடங்கிய பின்புதான் S. ராமகிருஷ்ணன் எனக்கு அறிமுகமானார். திரு. எஸ்ரா அவர்களின் எழுத்துகள் என்னை வெகுவாகப் பாதிக்கத் தொடங்கின. அரசியல் நிலைப்பாடு என்பது, வைக்கோவிலிருந்து கலைஞர் என வந்து நிற்கிறேன். சில ஆண்டுகளில் விகடனும் சலித்துவிட்டது. எழுத்தாளர் சாருவைக் கொஞ்சம் தேடிப் படித்தேன். என்னை அதில் பொருத்திக்கொள்ள முடியவில்லை. எஸ்ராவின் எழுத்துகளில் பெருகிய ஆதூரம் அவர் எழுத்துகளில் எனக்கு வாய்க்கவில்லை. திரு. இமயம் அவர்களின் எழுத்துகள் கவர்ந்தது என்றாலும், எஸ்ரா எழுத்துகள் போல, அவருடைய எழுத்துகள் திரைவாசிப்பானுக்கு உகந்த முறையில் கிடைப்பதில்லை.

இந்த சமயத்தில்தான், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்களின் ‘நவீன தமிழ் இலக்கிய வரலாறு’ மற்றும் ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்ற இரண்டு புத்தகங்களையும் கிண்டிலில் வாசித்தேன். இதுவரை நான் தேடிக்கொண்டிருந்த கேள்விகளுக்கு ஒவ்வொரு விடையாகக் கண்டடையத் தொடங்கினேன். பிறகு நான் வாசித்த உங்களின் பயண நூலான ‘அருகர்களின் பாதை’ முரட்டு நாத்திகம் பேசிக்கொண்டிருந்த என் கன்னத்தில் அறைந்து கோவில்களின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்த்தியது. அதற்குப் பிறகு இதுவரை நான் கடந்து வந்த சிந்தனைப்பாதையில் ஒரு பெருந்திருப்பத்திற்கு உள்ளாகத் தொடங்கியிருக்கிறேன் என்பது மட்டும் எனக்குப் புரிகிறது.

இப்போது உங்கள் இணையத்தில்தான் கிடைக்கிற நேரம் அத்தனையிலும் வாசம் செய்கிறேன். அரசியல் விவாதங்களையே யூட்டூப் தளங்களில் தேடிக்கொண்டிருந்த நான், இப்போது உங்களுடைய உரைகளைத் தேடித்தேடிக் கேட்கிறேன். ஆழ்ந்து இல்லையென்றாலும், ‘கொற்றவை, ஏழாம் உலகம்’ ஆகிய நாவல்களை கிண்டிலில் வாசித்து முடித்தேன். கவனமாகமீண்டும் வாசிக்க வேண்டும். உங்கள் தளத்திலுள்ள கதைகளைத் தினமும் படித்துவருகிறேன். அவற்றுள், இருநோயாளிகள் என்ற கதையைப் படித்துவிட்டு, நான் எழுதியிருந்த கடிதத்தை உங்களின் தளத்திலும் வெளியிட்டிருந்தீர்கள். அந்தக் கடிதத்தில் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு, கடிதம் எழுதுவேன் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால், முடியவில்லை. காரணம், கடிதம் எழுதிய அன்று, இரவு என் மனைவிக்கு, ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் கொண்டாட்டம் மற்றும் பொறுப்புகளிலேயே சில நாட்கள் போய்விட்டன. ஆயினும் உங்கள் தளத்தைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.

இப்போது உங்கள் தளத்தில் வெண்முரசும், கிண்டிலில் விஷ்ணுபுரமும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். புரட்சி, முற்போக்கு என ஐம்பது பக்கங்கள்கூடத் தாண்டாத தங்கள் பிரச்சார நூல்கள் எங்கே நகல் எடுக்கப்பட்டுவிடுமோ என அஞ்சி, அவைகளைக் கிண்டிலில்கூட வெளியிடத் தயங்குகிற பலருக்கு நடுவே, 26000 பக்கங்கள் கொண்ட வெண்முரசு என்ற மகாக்காவியத்தையே திறந்த தளத்தில் படிக்கத் தந்திருக்கிறீர்கள் என்பதை நீனைத்து வியக்கும்போதெல்லாம், “உலகத்தில் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் தலைசிறந்த பத்து எழுத்தாளர்களில் நானும் ஒருவன் என்று நீங்கள் சொல்வதையே பதிலாக எடுத்துக்கொள்கிறேன்.

தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும், பார்வையற்ற எங்களால் நினைத்த நேரத்தில், நினைத்த புத்தகங்களை, சமகால படைப்பாக்கங்களைப் போகிற போக்கில் படிக்க முடியவில்லையே என நான் உள்ளுக்குள் ஏங்குவேன். அதனால், நான் சந்திக்கும் பார்வையுள்ளவர்களிடம்  “அதுமட்டும்தான் எனக்கு இந்தப் பிறவியில் வாய்த்துவிட்ட மிகப் பெரிய குறை. ஆகவே, தாங்கள் வாசிக்கும் எந்த ஒரு புத்தகமானாலும், அதை அப்படியே வாய்விட்டுப் படித்து, அதைப் பதிவு செய்து, ஒலிப்புத்தகமாக்கி, உங்களுக்குத் தெரிந்த பார்வையற்ற ஒருவருக்கு வழங்குங்கள்” எனச் சொல்லிக்கொண்டே இருப்பேன். அந்தக் குறையில் பெரும்பகுதியைத் துடைக்கும் பணியை உங்கள் தளம் கடந்த 2008 லிருந்து செய்து வருவதை அறியாது போய்விட்டேன். எப்படிநன்றி சொல்வதென்று தெரியவில்லை. காலத்தின் முன்னால், எத்தனை பெரிய அரிய பொக்கிஷம் உங்கள் தளம் என்பதை நினைக்கும்போது மெய் சிலிர்க்கிறேன்.

எனக்கு ஒரு கேள்வி மற்றும் ஒரு வேண்டுகோள். கேள்வி: அன்றாடம் நான் எதிர்கொள்ளும் எல்லா வினாக்களுக்கும் பகுதியளவேனும் ஒரு திறப்பை உங்கள் தளம் தருகிறது. உங்கள் கதைகள் படிக்கிறேன். கட்டுரைகள் படிக்கிறேன். ஆனால், ஒரு மாணவனாக, உங்களைப் படிப்பதில் நான் எங்கிருந்து தொடங்க வேண்டும்? அதன் படிநிலைகள் எவ்வாறு அமைவது சரியானதாக இருக்கும்?சொல்லுங்களேன். வேண்டுகோள்: இன்றுதான் நான் உங்களின் கீதை உரைகளின் முதற்பாகத்தை யூட்டூபில் கேட்டேன். ஐயா சுகிசிவம் அவர்களின் கீதை உரையைக் கேட்டதிலிருந்துதான் பிறர் சொல்வதைப்போல கீதை பகுத்தறிவுக்கு ஒவ்வாத நூல் அல்ல, என்பதை உணர்ந்தேன்.

ஐயா, மகாபாரதத்தை வெண்முரசு என்ற காப்பியமாக எழுதியதைப்போல, கீதையையும், ஒவ்வொரு பாடலாகவோ, அல்லது அத்தியாயங்களாகவோ நீங்கள் எழுதினால், அது மேலும் ஒரு புதிய திறப்பை உங்கள் மாணாக்கர்களுக்கு அழிக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. இன்னும் ஏதேதோ எழுத விரும்புகிறேன். எண்ணங்கள் சொற்களாகாமல் முட்டி நிற்பதால் இத்தோடு முடிக்கிறேன்.

இப்படிக்கு,

ப. சரவணமணிகண்டன்.\

 

அன்புள்ள சரவண மணிகண்டன்,

2010 முதலே என் இணையதளத்தை பார்வையற்றவர்கள் கேட்டு வாசிப்பதற்கான மென்பொருளை அளித்துவிட்டேன். இப்போது மிகச்சிறந்த உச்சரிப்பில் அழகாக வாசிக்கும் மென்பொருட்கள் வந்துவிட்டன. கூடவே யூடியூபில் பல நண்பர்கள் என் கதைகளை வாசித்துப் பதிவிட்டிருக்கிறார்கள்.

எவருக்காயினும் அகவாழ்க்கையே மெய்யான வாழ்க்கை. பார்வைக்குறைபாடு என்பது அகவாழ்க்கைக்கு ஒரு தடை அல்ல. அதை எளிதில் கடக்கமுடியும். அதை கடந்து ஓர் அரிய அகவாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்

என் புனைவுகளை அறம் வரிசைக் கதைகளில் இருந்து தொடங்கினால் எளிதாக இருக்கும். என் கதைகள் இணையதளத்திலேயே தனிப்பகுதியாக உள்ளன. இரவு, கன்யாகுமரி போன்ற நாவல்களும் தொடங்குவதற்கு உகந்தவை

கீதையை எழுதும் எண்ணம் உண்டு பார்ப்போம்.

குழந்தை பிறந்தமைக்கு வாழ்த்துக்கள். குட்டிக்கு என் முத்தங்கள்

ஜெ

அகமறியும் ஒளி

 

முந்தைய கட்டுரைவெண்முரசு, கதைசொல்லல்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 2