ரிஷிமூலம்

அன்புள்ள  ஜெ அவர்களுக்கு,

Taboo எனும் தடை செய்யப்பட்ட தகாத உறவுமுறைப் பற்றிய ரிஷி மூலம் குறுநாவல் படித்தேன். 70களிலேயே அப்படி ஒரு முயற்சி என்னை அதிர்ச்சி க்கு உள்ளாக்கியது. இதை ஒப்பிட்டால் அக்னிபிரவேசம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. இது ஒரு வகை யான Freud ய பார்வை எனவும் படித்தேன். இறுதியில் அத்வைதமும்.

இந்த படைப்பைப் பற்றி தங்களது கருத்தை அறிய விழைகிறேன். இது ஜெயகாந்தனின் ஒரு experiment படைப்பு என எடுத்துக் கொள்ளலாமா?  .

பணிவுடன்,
கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

ஜெயகாந்தன் அன்று பொதுவாக எழுத்தாளர்கள் தொடாத பல இடங்களுக்கும் சென்று எழுதியிருக்கிறார். அதற்கு முதன்மைக்காரணம் அவர் எழுத வந்தபோதே அடித்தள மக்களின் உலகை எழுதக்கூடியவராக, உளச்சிக்கல்களை எழுதுபவராக, அவ்வகையில் எல்லைகளை மீறிச்செல்பவராக அறிமுகமானார் என்பது. புதுமைப்பித்தனின் பொன்னகரம் என்னும் கதைதான் ஜெயகாந்தனின் தொடக்கப்புள்ளி என்று சொல்லலாம்.

ஜெயகாந்தன் எல்லா வகையான தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள்ளும் இயல்பாகச் சென்றிருக்கிறார். ’எங்கோ யாரோ யாருக்காகவோ’ போன்ற கதைகளில் ஒழுக்கக் கண்டனம் இல்லாமல் இயல்பாக விபச்சாரத்தைச் சொல்லியிருக்கிறார்.

ரிஷிமூலம் ஜெயகாந்தனின் மெய்யியல் தேடல் வெளிப்பட்ட கதைகளில் ஒன்று. ஒருவன் மெய்மையை தேடிச் செல்லவேண்டும் என்றால் அவன் உலகியலில் இருந்து உந்தி வெளியேற்றப்பட வேண்டும். ஒரு கல் ஏதாவது ஒன்று அதன்மேல் படுவதுவரை அங்கேயே ஊழிக்காலம் வரை இருக்கும் என்று சொல்வதுபோல. அந்த நகர்வின் கணத்தை ஜெயகாந்தன் வகைவகையாக எழுதிப் பார்த்திருக்கிறார்.

சுயதரிசனம், குருபீடம் போன்ற கதைகள் எல்லாம் அத்தகைய ‘அடிவிழும்’ கணங்களைப் பற்றிப் பேசுபவைதான். அத்தகைய ஒரு கதைதான் ரிஷிமூலம். நாம் உணர்ந்துகொண்டிருக்கும் நமது பிரக்ஞைநிலைக்கு அடியில் நமது காமமும் வன்முறையும் ஆணவமும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. நிலம் விரிசலிட்டு எரிமலைக்குழம்பு வெளிவருவதுபோல அந்த ஆழம் வெளிப்படும் ஒரு கணம் அக்கதையில் நிகழ்கிறது. அது அவனுக்கு ஒரு சுயதரிசன தருணமாக ஆகிறது. அவன் தன்னைத் தேடி கிளம்பச் செய்கிறது.

இக்கதை வெளிவந்தபோது கடுமையான விமர்சனம் எழுந்தது. தினமணிக்கதிரின் ஆசிரியர் சாவி அதை பலவாறாக வெட்டிச் சுருக்கித்தான்  வெளியிட்டார். கண்டனங்கள் வந்தபோது அதை வெளியிட்டதற்காக வருந்துகிறேன், இனிமேல் இத்தகைய கதைகள் வெளிவராது என அறிவித்தார். அது ஜெயகாந்தனைச் சீற்றமடையச் செய்தது. ஆனால் தனக்கும் வாசகர்களுக்குமான ஊடகமாக இருந்த வணிக இதழ்களை கண்டிக்கவும் அவர் தயங்கினார்.

ஜெயகாந்தனின் கதையை சாவி வெட்டிச் சுருக்கியதை கண்டித்து வெங்கட் சாமிநாதன் ஒரு கடுமையான கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரைக்குப் பதிலாக அசோகமித்திரன்  ‘அழவேண்டாம், வாயை மூடிக்கொண்டிருந்தால்போதும்’ என்று ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு வெங்கட் சாமிநாதன் ஒரு மறுமொழி எழுதினார். இது அக்காலத்தைய ஒரு இலக்கியப் பூசலாக நிகழ்ந்தது. சுந்தர ராமசாமி உடபட பலரும் அதில் பங்கெடுத்தனர்

இலக்கியத்திற்குரிய வெளிப்பாட்டு உரிமையை பேரிதழ்கள் மறுக்கின்றன, தங்களுக்குத்தேவையானவற்றை எழுத்தாளனைக்கொண்டு எழுதச் செய்கின்றன என்று ஒருசாரார் குறிப்பிட்டனர். எழுத்தாளனின் படைப்பை தங்கள் விருப்பப்படி ஆசிரியர் வெட்டலாமென்றால் அங்கே படைப்பியக்கம் என என்ன உள்ளது என்று வினவினர்.

ஆனால் சிற்றிதழ்களில் எழுதுவது மெய்யான வாசகர்களுக்கே சென்று சேர்வதில்லை, இன்னொரு எழுத்தாளரே அதை வாசிக்கிறார், அவர் வாசகரே அல்ல என்று அதற்கு பதில் சொல்லப்பட்டது. எழுத்தை கொண்டுசென்று சேர்க்க ஊடகம் தேவை. அந்த ஊடகத்தை ஓர் அமைப்பே நடத்தமுடியும். அந்த அமைப்புக்கு சில சமரசங்கள் தேவையாகும். அதை புரிந்துகொண்டே ஆகவேண்டும், கட்டற்ற எழுத்து என ஏதும் உலகில் இல்லை என்றனர்.

வணிகஎழுத்து- தீவிர எழுத்து பற்றிய விவாதமாக அந்த உரையாடல் நடந்தது. எழுத்தாளன் சமூகத்தின் ஒழுக்க- அறக் கோட்பாடுகளை எந்த அளவுக்கு சீண்டலாம் என்ற விவாதமும் தொடர்ந்தது.

ஜெயகாந்தனின் கதைகள் அவை வெளியான காலகட்டத்தில் அவை உருவாக்கிய அதிர்ச்சிகள், விவாதங்களால் மறைக்கப்பட்டவை. ஆழத்தை அலை மறைப்பதுபோல என்று சொல்லலாம். ரிஷிமூலமும் அப்படிப்பட்டது. அது உண்மையில் வாசிக்கவே படாத கதை.

ஜெயகாந்தனின் கதைகள் பிரசங்கம் செய்பவை, அப்பட்டமானவை, தாங்கள் மிக நுட்பமனாவர்களாகையால் அந்த அப்பட்டத்தன்மை பிடிக்காமலாயிற்று என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தரப்பு நம் சூழலில் உண்டு. அவருடைய குருபீடம், ரிஷிமூலம் போன்ற கதைகள் உண்மையில் என்ன சொல்ல வருகின்றன என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று அப்படிச் சொன்ன பலரிடம் கேட்டிருக்கிறேன். தத்துப்பித்து என்று ஏதாவது சொல்வார்கள்.

தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் நுட்பம் என்றால் பூடகமாகச் சொல்லப்பட்ட ஆண்பெண் உறவு மட்டும்தான். அதாவது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று ஒரு கதையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். அதை ஊகித்துவிட்டால் நுட்பவாசிப்பு. இந்த வெட்கமில்லாத பந்தாவை இரண்டு தலைமுறைகளாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

இன்று ரிஷிமூலம் அன்று உருவாக்கிய  ஒழுக்கம் சார்ந்த அதிர்ச்சியை அளிப்பதில்லை. ஆகவே அந்த அலையைக் கடந்து அக்கதையை வாசிக்கலாம். அக்கதை என்னதான் சொல்கிறது? எதை உணர்த்தி நிற்கிறது?

மிக எளிமையான ஒரு பொதுவாசிப்பே அன்று சிற்றிதழ்ச்சூழலில் இருந்து ரிஷிமூலத்திற்கு வழங்கப்பட்டது. ஏனென்றால் அன்றைய சிற்றிதழ்ச்சூழல் நவீனத்துவப் பார்வையால் மூடப்பட்டிருந்தது. அதற்குத் தெரிந்ததெல்லாம் முதிரா மார்க்ஸியமும், வேகாத ஃப்ராய்டியமும், அரைகுறை இருத்தலியமும் கலந்த ஒரு ஆராய்ச்சிநோக்குதான். உலகையே அதைவைத்து விளக்கிவிடலாம் என்னும் ஆணவமும் அதற்கு இருந்தது.

ஆகவே அன்று ரிஷிமூலம் ஃப்ராய்டிய கோணத்தில் குதறப்பட்டது. மறுபக்கம் பிரபல இதழ்களின் வாசகர்களுக்கு அது என்ன கதை என்றே புரியவில்லை. ஜெயகாந்தன் அக்கதையை அவர் கண்டு அறிந்த அன்றைய வாழ்க்கையில் இருந்து எழுதினார். அவர் அதற்கு விளக்கம் அளிக்கவில்லை, சொல்லப்போனால் அவரால் விளக்கப்பட முடியாத ஒரு புதிர் அது. அவர் அதை எழுதி அப்படியே கடந்துசென்றார். விவாதிக்கவும் விளக்கமும் முயலவில்லை.

இன்றும் நவீனவாசகனின் வாசிப்பைக் கோரி ஓர் அறைகூவலென நின்றிருக்கிறது ரிஷிமூலம். தமிழில் அவ்வாறு ஒரு தலைமுறைக்குப் பின்னரும் ‘வாசிக்கப்படாமல்’ எஞ்சியிருக்கும் கதை புதுமைப்பித்தனின் கபாடபுரம் மட்டும்தான்.

அது ராஜாராமனின் கதை. அவன் அசாதாரணமான அறிவாற்றலும் நுண்ணுணர்வும் கொண்டவன். அத்தகையோரின் கற்பனையும் அடிப்படை இச்சைகளும்கூட ஆற்றல் மிக்கவையே. அவை மிக எளிதாக எல்லை கடக்கும். அப்படி கடக்கும் ஒருகணம் அக்கதையில் அமைகிறது. அவன் தன்னுள் எழுந்து பேருருக்கொண்டு நிற்கும் மானுடஇச்சையை காண்கிறான். கற்கால மானுடனில் இருந்து வந்துகொண்டிருக்கும் ஒரு மாபெரும் பெருக்கை. அதை சாமானியன் தன்னில் கண்டடைய முடியாது. நாம் அறிந்த கதைதான் அது. வான்மீகி வன்முறையிலும் அருணகிரிநாதர் காமத்திலும் கண்ட விஸ்வரூபம். ரிஷிமூலம் கதைக்கும் அருணகிரிநாதர் கதைக்கும் உள்ள ஒற்றுமையும் தொடர்பும் நானறிந்து பேசப்பட்டதே இல்லை.

அந்த அலைக்கழிப்பும் தேடலும் ஆணுக்குத்தான் உள்ளது. ராஜாராமன் அந்த அடியால் தூக்கி வீசப்படுகிறான். அவன் எங்கெங்கோ முட்டி ஏதேதோ ஆகிறான். ஆனால்  சாரதா மாமி இயல்பாக அன்னையென நின்று அசைவிலாதவளாக இருக்கிறாள். ஆவுடை பீடமென அமைந்திருக்கையில் சிவம் அனலுருவென விண்தொட்டு பாதாளம் தொட்டு விரிகிறது. ராஜாராமனை நிலையழியச் செய்த அந்த நிகழ்வைப்பற்றிச் சொல்லும்போது ஓர் அன்னை குழந்தையை உணர்வதுபோல் அவனை உணர்ந்தேன் என்று அவள் சொல்லுமிடம் ரிஷிமூலத்தின் முதல் தளம்.

ரிஷிமூலம் கதையின் மாளாப்புதிர் ராஜாராமன் விடுபட்டுவிட்டானா, அடுத்தநிலை நோக்கிச் சென்றுவிட்டானா என்பது. ஆம் என்கிறது கதை. அவன் ரிஷி, மெய்யறிந்து அதில் அமர்ந்தவன். ஆனால் மறுபக்கம் அன்னையின் பார்வையில் ஒர் எளிய குழந்தை. ஆணவத்தாலோ அறியாமையாலோ தன்னை ஏமாற்றிக்கொள்ளும் ஒருவன். அதுவும் உண்மை. இரண்டுமே உண்மையாக இருக்கமுடியும் என்று கதை சொல்கிறது. ஏசு அவர் அம்மாவுக்கு ஒர் அசடாக, ஆணவம்கொண்ட சிறுவனாகத் தோன்றினால் அது பிழையா? அவளுக்கு அது உண்மை, அவள் நிலையிலிருக்கும் அத்தனை அன்னையருக்கும் அது உண்மை. உண்மை ஒன்றே என நிலைகொள்ளவேண்டிய தேவையில்லை.

மீண்டும் கதைக்குள் செல்கையில் அன்னையை முழுவுருவில் கண்ட ராஜாராமனின் அத்தருணம் அல்லவா ஆதிசங்கரரின் சௌந்தரிய லகரி என சொல்லலாம். அது ஒழுக்கவியலில் கொந்தளிப்பான ஒர் உச்சம். இக்கதையில் ராஜாராமன் பற்றி சொல்லும் எல்லா ஃப்ராய்டிய ஆய்வுகளையும் சௌந்தரிய லகரியை முன்வைத்து சங்கரரைப் பற்றியும் சொல்லலாம். ஆனால் அது பெருந்தரிசனமாகி அவரை முழுமைகொள்ளச் செய்தது.

அப்போதும் ரிஷிமூலம் எஞ்சுகிறது. மெய்யாகவே விடுபட்டுவிட்டவன் என நாவலில் வரும் ராஜாராமன் சாரதா மாமியின் முன் மட்டும் ஒரு நடிகன்போல பொய்யென வெளிப்படுகிறான். “இவன் என் மகன் அல்ல, எவர் மகனும் அல்ல” என உணரும் சாரதா மாமி அவனை கடந்துசெல்லக்கூடும். அவனால் கடந்துசெல்லமுடியுமா என்று கதைக்குள் இல்லை.

காமகுரோதமோகங்களை இந்திய மெய்மரபு விரித்து விரித்து பேசிக்கொண்டே இருக்கிறது. அறிதலும் துறத்தலும், அடைதலும் கடத்தலும் நிகழும் கணங்களை எழுதி எழுதி பார்த்திருக்கிறது. அந்த தருணத்தின் முடிவிலாத மர்மத்தை எழுதிப்பார்த்த கதை ரிஷிமூலம்.நம் நவீனத்துவ வாசிப்புச்சூழல் அதன் முன் மிக அற்பமானது. நவீனத்துவச்சூழலுக்கு மேலைத்தத்துவ அறிமுகமும் இல்லை, இந்திய தத்துவத் தொடர்ச்சியும் இல்லை. இன்று புதியதாக உருவாகிவரும் தலைமுறை, ஆழ்ந்த வாசிப்பினூடாக அக்கதையை மீண்டும் கண்டடையக்கூடும்.

ஜெ

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2
ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-3
ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2
ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.
நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்
கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்
சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா
ஜெயகாந்தன் வாசிப்புகுறித்து
கலைஞனின் உடல்மொழி ஜெயகாந்தன் ஆவணப்படம்
ஜெயகாந்தன்
ஜெகே இரு கடிதங்கள்
ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா?
ஜெயகாந்தனும் வேதமும்
இருசந்திப்புகள்
மூன்று சந்திப்புகள்
முந்தைய கட்டுரைரத்தம் படிந்த காலம்- கிருஷ்ணன் சங்கரன்
அடுத்த கட்டுரைபகடை பன்னிரண்டு