ஓர் இலக்கிய வாய்வு

வணக்கம்  ஜெமோ,

“திருக்குறளுக்கு பின் 1900கள்  வரை ஒரு நல்ல இலக்கியம்  தமிழில் வரவில்லை”, “தமிழ் பக்தி இலக்கியங்கள் இலக்கியங்கள் அல்ல, அவை இரவல் இலக்கியங்கள்”, “இதற்கு  காரணம் பிராமண  ஆதிக்கம், அதாவது அவர்கள் பிற  ஜாதிகளுக்கு கல்வியை மறுத்தது’ என்ற கருத்து, சமிபத்திய தேர்தல் மேடைகளில்  எதிரொலிக்க  கேட்டேன். அது  ஒரு  நெருடலை உண்டாக்கி கொண்டே  இருக்கிறது.

நீங்கள் திராவிட இயக்கங்கள் பற்றி எழுதிய பதில்களை  படித்து  அவைபற்றிய கொஞ்சம் தெளிவை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் இந்தகருத்துக்கு சரியான எதிர்வினையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.  இப்படி பல நூறாண்டுகளாய் தமிழில் ஒரு இலக்கிய/கருத்தியல் தேக்கம் உண்மையிலயே இருந்ததா? அதற்கு பின்னால் ஓரு deliberate முயற்சி இருந்ததா ? அதற்கு என்ன காரணம்? அதிலிருந்து எப்படி தமிழிலக்கியம் மீண்டு வந்தது? வடமொழியல்லாத மற்ற மொழிகளுக்கும் இது போன்ற தேக்கம்  வந்திருக்கிறதா?

நன்றி

வேலுச்சாமி

***

அன்புள்ள வேலுச்சாமி,

கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். சொல்பவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பதே கருத்துக்கு மதிப்பை அளிக்கிறது. இதைச் சொன்னவரின் தரம் இந்த வரியாலேயே தெரிகிறது. அவர் அரசியல்மேடைகளில் எச்சில்தெறிக்கவைக்க மட்டுமே தகுதியானவர்.

முதலில் சங்க இலக்கியம் மதச்சார்பற்றது என்று எவர் சொன்னது? அதில் ஏராளமான மதக்குறிப்புகள் உள்ளன. இன்றிருக்கும் இந்துமத வழிபாட்டின் எல்லா கூறுகளும் அதிலுள்ளன. இதிகாசங்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. தெய்வங்கள் பேசப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரம் உள்ளிட்ட ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் பௌத்த, சமண மதச்சார்பு கொண்டவை. திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களே சமண, பௌத்த சார்பு கொண்டவைதான்.

அப்படி என்றால் மதச்சார்பின்மையை மேற்படி ‘அறிஞர்’ உத்தேசிக்கவில்லை. சைவ, வைணவச் சார்புடையவை நல்ல இலக்கியங்கள் அல்ல என்று மட்டுமே சொல்ல வருகிறார். சைவ வைணவ இலக்கியங்கள் பிராமணச்சார்பு கொண்டவை என்று எண்ணி ஒட்டுமொத்தமாக தூக்கிப் போடுகிறார். அவருடையது எந்த விழுமியத்தின் அடிப்படையிலும் அமைந்த பார்வை அல்ல, வெறும் சாதிக்காழ்ப்பு மட்டும்தான்.

பக்தி இலக்கியங்களில் தலையாயவை எனக் கருதப்படும் நம்மாழ்வார் பாசுரங்களோ, ஆண்டாள் பாசுரங்களோ, தேவார நால்வரின் பாடல்களோ வெளியே எங்கிருந்தும் கருத்துக்களையோ அழகியலையோ பெற்றுக்கொண்டவை அல்ல. அவற்றின் அழகியல் தமிழகத்தில் உருவானது, சங்க அகத்துறையின் நீட்சி அது. அந்த அழகியல் இங்கிருந்து வடக்கே சென்று பக்தி இயக்கமாகப் பரவியது. அவர்கள் பாடும் மாலும்,அனல்வண்ணனும் சங்ககாலம் முதலே இங்கே பாடப்பட்டவர்கள்.

சரி, பக்தியே இரவல் என்று கொண்டால்கூட மதக்குறிப்பே இல்லாத கலிங்கத்துப் பரணி போன்ற போரிலக்கியங்கள் பல உள்ளன. முத்தொள்ளாயிரம்,நந்தி கலம்பகம் போல தமிழ் மன்னர்களைப் பாடும் பெருநூல்கள் உள்ளன.

சம்பந்தப்பட்டவரிடம் வீரமாமுனிவரின் ’தேம்பாவணி’யும், உமறுப்புலவரின் ’சீறாப்புராண’மும் இலக்கியமா என்று கேளுங்கள்.  அவை சைவ, வைணவ இலக்கியங்கள் அல்ல. அந்த வினாவின் முன் அதைச்சொன்னவர் பம்முவதைக் காணலாம்.

சரி, அவையும் இரவல் இலக்கியம் என்பார் என்றால் சீவகசிந்தாமணியும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் எல்லாம் அசலா என்ன? மணிமேகலையின் பல கதைகள் நேரடியாகவே வடக்கிலிருந்து வந்தவை. சீவகசிந்தாமணி வடக்கத்திக் கதையின் மறு ஆக்கம். ஆக, ஜைனர்களும் பௌத்தர்களும் கொண்டுவந்தால் இரவல் இல்லையா?

தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மைகொண்ட தத்துவநூலாக கருதப்படும் திருமந்திரம்கூட இரவல் என்று சொல்வாரானால் அவர் யார்? உண்மையான நோக்கம் என்ன?

பிராமணர்கள் மற்றவர்களை கல்விகற்க விடவில்லை என்கிற அசட்டுத்தனமெல்லாம் எப்படிச் செல்லுபடியாகிறதென்றால் இங்கே எவருக்கும் மேடை அமைவதனால்தான். சைவ வைணவப் பேரிலக்கியங்களை இயற்றியவர்கள் பிராமணர்கள் அல்ல. நம்மாழ்வார், கம்பர், சேக்கிழார், ஜெயங்கொண்டார் எவருமே பிராமணர்கள் அல்ல.

தமிழின் பெரும்படைப்பாளிகளில் பிராமணர்கள் எனச் சொல்லத்தக்கவர் ஓரிருவரே.சாதியை சொல்லவேண்டும் என்றால் ஏராளமானவர்கள் வேளாளர்கள். சங்ககாலம் முதலே அவ்வாறுதான் – கிழார் என்னும் பின்னொட்டு வேளாளர்களுக்குரியது. ஏனென்றால் தமிழ்ப்பண்பாட்டின் உயர்குடியினராக இருந்தவர்கள் உண்மையில் அவர்கள்தான்.

இந்தவகையான இலக்கியக் கருத்துக்கள் இலக்கிய ஆய்விலிருந்து வருவன அல்ல, இது ஒருவகை வாயுத்தொல்லை. சம்பந்தப்பட்டவருக்கு வெளியேற்றிய நிம்மதி வரும், மற்றவர்களுக்குத்தான் குமட்டல்.

*

இனி உங்கள் புரிதலுக்காக. எங்கும் வரலாற்றின் போக்கு ஒரேவகையானதுதான். அதை எவரும் தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியாது. எவரும் வரலாற்றில் திரும்பிப்போக முடியாது.

எப்பண்பாட்டிலும் முதலில் உருவாவது நாட்டாரிலக்கியம். அதன்பின் அதிலிருந்து தொல்லிலக்கியம் அல்லது செவ்வியலக்கியம் உருவாகிறது. நமக்கு அது சங்க இலக்கியம். தொல்லிலக்கியம் பெரும்பாலும் உலகியல் சார்ந்ததாக, போர்வெற்றிகள் சார்ந்ததாக, வீரர்களை புகழ்வதாக இருக்கும். அதில் வாழ்க்கைச்சித்திரங்களே ஓங்கியிருக்கும்.

ஆனால் அது மதச்சார்பற்ற இலக்கியம் அல்ல, தொல்மதத்தின் பண்பாட்டுக் கூறுகள் அதில் நிறைந்திருக்கும். தொல்மதங்கள் பலவாறாகச் சிதறுண்டவையாக, வெறும் ஆசாரங்கள் மற்றும் நம்பிக்கைகளாகவே இருக்கும். நிறுவன அமைப்பு அவற்றுக்கு இருக்காது. தத்துவம் அவற்றில் ஓங்கியிருக்காது. சங்க இலக்கியத்திலேயே நடுகல் வழிபாடு, படையல் அளித்தல், வேலன் வெறியாட்டு, தெய்வங்களுக்கு பூசையிடுதல் என பல தொல்மதக் கூறுகள் உள்ளன.

வரலாற்றின் அடுத்த கட்டம் பேரரசுகள் உருவாவதும் பெருமதங்கள் உருவாவதும். இவை இணைந்தே உருவாகின்றன. ஒன்றையொன்று உருவாக்குகின்றன. தமிழ்ச்சூழலில் சமண -பௌத்த மதங்கள் வந்து இங்குள்ள தொல்மதங்களின் பல பண்பாட்டுக்கூறுகளை உள்வாங்கிக்கொண்டு பெருமதங்களாக ஆயின. நிறுவன அமைப்பும், தத்துவக் கட்டமைப்பும் உருவாயின.

உலகமெங்கும் அவ்வாறுதான் நிகழ்கிறது. பெருமதங்கள் எவையும் ஒரு நிலத்திற்குள் உருவாகி அங்கேயே முழுமை கொள்வதில்லை. அவற்றின் விதை எங்கோ இருக்கும். அவை பரவி பரவிச்சென்று, செல்லுமிடங்களில் வேரூன்றி, அங்கிருந்து ஆசாரங்கள், ஆழ்படிமங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இஸ்லாம், கிறிஸ்தவம் எல்லாமே அப்படித்தான். இஸ்லாமை அரேபியாவிலும் கிறிஸ்தவத்தை அராமியாவிலும் நிறுத்திவிடவேண்டும் என்று சொல்பவர்கள் வரலாற்றை திருப்பிச் சுழற்ற நினைக்கும் அற்பர்கள்.

தமிழகத்தில் ஓங்கிய பௌத்தமும் சமணமும் வடக்கிலிருந்து வந்தவை. அவற்றின் தரிசனங்களும் தத்துவங்களும் வடக்கிலிருந்து கொண்டுவரப்பட்டவை. ஆனால் அவை இங்கே தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டன. அவற்றை தமிழ்ச்சமணம், தமிழ் பௌத்தம் என்றே சொல்லமுடியும். அன்னிய மதங்கள், இரவல் மதங்கள் என்று சொல்லமுடியாது.

ஏற்கனவே, சங்க காலத்திலேயே தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தவை சைவ, வைணவ மதங்கள். சங்ககாலத்தில் இந்திரன் இங்கே முதன்மையான வழிபடு தெய்வம். மருதநிலத்தின் தலைவன். இந்திரவிழா இங்கே கொண்டாடப்பட்டதை சங்க இலக்கியம் காட்டுகிறது. சிலப்பதிகாரத்தில் சைவம் வைணவம் சாக்தம் ஆகியவை பலதெய்வங்கள் கொண்ட கோட்டங்கள் என்னும் பெரிய ஆலயங்களுடன் தமிழகத்தின் மைய மதங்களாக இருந்தமைக்கான சான்றுகளைக் காணலாம்.

ஆனால் அவை பெருமதங்களாக வளர்ந்தது சமண, பௌத்த மதங்களின் வருகைக்குப் பின்னர்தான். சமண, பௌத்த மெய்யியல்களுடன் விவாதித்து அவை விரிவடைந்தன. பல்லவர், பிற்காலச் சோழர்களின் காலத்தில் பெருமதங்களாக மாறி இன்றுள்ள வடிவை அடைந்தன.

சைவ, வைணவ மதங்களில் பெருவாரியான அடித்தள மக்களின் பங்கேற்பை உருவாக்கியதே ஆழ்வார்கள், நாயன்மார்களின்  பக்தி இயக்கம்தான். இதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதப்பட்டுவிட்டது. பக்தி இயக்கம் அடிப்படையில் அன்றைய சூத்திர மக்களின் எழுச்சி. அதனூடாக அவர்கள் கல்வியதிகாரம், சமூக அதிகாரம், மத அதிகாரம் ஆகியவற்றையும் நிலத்தின்மேலும் அரசிலும் ஆதிக்கத்தையும் அடைந்தனர்.

அதாவது தமிழகத்து பக்தி இலக்கியங்கள் என்பவை பிராமணர்கள் மற்றவர்களை படிக்கவிடாமல் ஆக்கியதன் விளைவுகள் அல்ல. மாறாக பெருமதங்கள் பெருவாரியான மக்களை மதக்கல்வி அளித்து தங்களுக்குள் இழுத்துக்கொண்டதன் விளைவுகள். நாயன்மார்களிலும் ஆழ்வார்களிலும் பிராமணரல்லாச் சாதியினரே மிகுதி. அடித்தளத்து மக்களும் உள்ளனர்.

பக்தி இயக்கம் கல்வியை பரவலாக ஆக்கியது. பக்தி அனைத்து மக்களுக்கும் உரிய மதநெறி என்பதனால் அது பெருந்திரளை சைவ, வைணவ பெருமதங்களுக்குள் கொண்டுவர உதவியது. திருவிழாக்களில் மண்டகப்படிகள் , தேர்வடம் பிடிக்கும் உரிமைகள் போன்ற ஏராளமான ஆசாரங்கள் வழியாக அனைத்துச் சாதியினரும் இணைக்கப்பட்டு அரசின் அங்கமாக ஆக்கப்பட்டனர்.

பக்தி இயக்கம் பல்லவ, சோழப் பேரரசுகளுக்குத் தேவையாக இருந்தது. அந்த மாபெரும் மக்கள் பங்கேற்புதான் அந்தப் பேரரசுகளின் அடித்தளம். சோழர் காலத்தில் அனைத்து சாதியினருக்கும் கல்வி அளிக்கப்பட்டமைக்கான நூற்றுக்கணக்கான சான்றுகள் உள்ளன. அனைத்துச் சாதியினரும் நிலவுரிமை கொண்டிருந்ததற்கும் சான்றுகள் உள்ளன.

சோழர்காலம் வேளாளர் முதலிய சாதியினரின் எழுச்சியை உருவாக்கியது. அதேசமயம் பறையர்கள் உள்ளிட்ட சாதிகள் அதிகாரம் இழந்து அடிமைநிலையை அடைந்ததும் அப்போதுதான். வரலாறு எப்போதுமே அப்படித்தான், வெல்பவரும் வீழ்பவர்களும் கொண்டது அது. எந்தப்பேரரசும் பெரும்பான்மையினருக்கு அதிகாரம் அளிப்பதன் வழியாகவே உருவாகும். சிறுபான்மையினர் சிலர் ஒடுக்கவும்படுவார்கள்

பக்தி இயக்கம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது. அதற்குள் பலவகையான இலக்கிய இயக்கங்கள் உள்ளன. ராமனின் கதையைச் சொல்லும் நூல் கம்பராமாயணம். ஆனால் அதுதான் அரசனைவிடப்பெரிய அறத்தை முன்வைக்கிறது. மானுடசமத்துவத்தை அறைகூவுகிறது.

தமிழக பக்தி இயக்கத்தின் புராணங்கள் பெரும்பாலும் இங்கே இந்த மண்ணில் உருவான தொல்கதைகளின் மறுஆக்கம்தான். திருவிளையாடற்புராணத்தை நீங்கள் தமிழகத்துக்கு வெளியே தேடமுடியாது. நப்பின்னையின் கதையை தமிழ்மண்ணிலேயே காணமுடியும்.

பக்தி இயக்கம்தான் தமிழ்மண்ணுக்கே உரிய தனித்துவம் கொண்ட மூன்று தத்துவமரபுகளை உருவாக்கியது. சங்கரரின் அத்வைதம் சேரநிலத்தில் உருவானது. சோழநிலத்தில் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். சைவசித்தாந்தத்தின் தமிழ்வடிவம் ஒன்றும் இங்கே உருவானது. சென்ற ஆயிரமாண்டுகளில் தமிழகம் உருவாக்கிக்கொண்ட முதன்மைத் தத்துவ சிந்தனைகள் இவை.

எந்த தத்துவசிந்தனைகளையும்போல இவற்றின் தொடக்கம் வெவ்வேறு ஊற்றுமுகங்களைச் சேர்ந்தது. ஆனால் அடிப்படைக்கொள்கைகளை உருவானது இங்கே. இங்கிருந்தே அவை வடக்கிலும் பின் உலகெங்கிலும் பரவின.

பக்தி இயக்க இலக்கியத்திற்குள்தான் தமிழக நாட்டாரிலக்கியம் புத்துயிர்கொண்டு வளர்ந்தது – அதன் மிகச்சிறந்த வெளிப்பாடுகள் குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, திரிகூட ராசப்ப கவிராயரின்  குற்றாலக்குறவஞ்சி போன்றவை.

பக்தி இலக்கியத்தில்தான் தமிழ்ப்பண்பாட்டுக்கே உரிய பண்மரபு இசை இயக்கமாக புத்துயிர் கொண்டது. நாதமுனிகள் இல்லையேல் பண்ணிசையே மறைந்திருக்கக்கூடும். பண்ணிசை- சந்த மரபின் உச்சம் அருணகிரிநாதரின் திருப்புகழ்.

இவையனைத்தையும் தூக்கிவீசிவிட்டு எந்த தமிழ்ப்பண்பாட்டை திரட்டி எடுக்கப்போகிறார்கள் இந்த அறிவிலிகள்? இவர்கள் பாணியில் இரவல் என திருக்குறளையே தூக்கி வீசலாம்.சமணசூத்திரங்களுக்கு திருக்குறள் பெரிதும் கடன்பட்டது. அதன் அறம்,பொருள்,இன்பம் என்னும் கருதுகோளே வெளியே இருந்து வந்ததுதான்.

கற்பனைசெய்து பாருங்கள், பௌத்தமதம் திபெத்திற்கு எட்டாம் நூற்றாண்டில் சென்று சேர்ந்தது. அங்கிருந்த பான் மதத்தின் பண்பாட்டை உள்ளிழுத்துக்கொண்டு தனித்தன்மை கொண்ட திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்தின் பண்பாட்டு முகமே அதுதான். இன்றைக்கு ஒருவர் வந்து திபெத்திய பௌத்தம் இரவல், ஆகவே தவிர்ப்போம் என்கிறார்.

சரி என்று பின்னகர்ந்தால் பான் மதமே வெளியே இருந்து வந்து சேர்ந்ததுதான். சீனத்து தாவோ மரபின் திபெத்திய வடிவம் அது. மேலும் பின்னகர்ந்து திபெத் பழங்குடிகளின் நம்பிக்கைகள்தான் அசல், அதுவே போதும் என்கிறார். அவர் திபெத்தை என்னவாக காட்ட முயல்கிறார்? வெறும்பழங்குடிகளாக. அப்படி காட்ட விரும்புபவரின் மெய்யான நோக்கம் என்ன?

இதே சூத்திரத்தின்படிப் பார்த்தால் உலகில் பிற பண்பாட்டு கலப்பே இல்லாத தனித்தன்மை கொண்ட பண்பாடுகள் எவை? ஒவ்வொரு நாடும் ஆயிரமாண்டு பண்பாட்டுக் கலப்பை நீக்கி பழங்குடிகளாக எஞ்சுமென்றால் உலகம் என்னவாக இருக்கும்?

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கே நவீன தமிழிலக்கியம் உருவானது. அது மட்டும் அசலாக வேரிலிருந்து முளைத்ததா என்ன? தமிழ் நவீனஇலக்கியம் முழுக்கமுழுக்க ஐரோப்பிய இலக்கியத்திற்குக் கடன்பட்டது. அதன் நவீன இலக்கணக் கவிதைகள் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிமரபில் இருந்து உருவானவை- பாரதி முதல் அனைவருமே.அதன் புதுக்கவிதை வால்ட் விட்மனுக்கு கடன்பட்டது.அதன் நாவல் இலக்கியம் ரெயினால்ட்ஸ், வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமா, விக்டர் யூகோ போன்றவர்களிடமிருந்து உருவானது. அதன் சிறுகதைக்கு மாப்பசானும், செகாவும் முன்னோடிகள். அது இரவல் அல்லவா?

இன்றுவரை தமிழில் நிகழும் எந்த இலக்கிய மாற்றமும், அலையும் உலகளாவிய இலக்கியப்போக்குகளின் விளைவாகவே நிகழ்ந்துள்ளது. மார்க்ஸிய அலை, நவீனத்துவ அலை, பின்நவீனத்துவ அலை அனைத்துமே. அப்படித்தான் இயலும். அதுவே அறிவியக்கத்தின் பாணி.

அறிவியக்கம் உலகை நோக்கி அனைத்து வாசல்களையும் திறக்கிறது. அத்தனை பண்பாடுகளுடனும் உரையாடுகிறது, மாறுகிறது மாற்றுகிறது. இனவெறியர்கள், பண்பாட்டு அடிப்படைவாதிகளின் குறுக்கல்போக்குகளுக்கு இலக்கியம் என்றுமே எதிரானது.

ஐரோப்பா தன் மாபெரும் பண்பாட்டுக் கலப்பால், பண்பாட்டு உரையாடலால் உருவாகி உலகின் மேல் அறிவாதிக்கத்தை அடைந்தது. ஐரோப்பா கிறிஸ்தவத்தை கைவிட்டு தனது பாகன் பண்பாட்டுக்கு திரும்பிச்செல்லவேண்டும் என்பார்களா?

சொல்லவே மாட்டார்கள். அவர்கள் சொல்வது கீழைநாடுகள் தங்கள் பண்பாட்டு வளர்ச்சியை துறந்து பழங்குடிப் பண்பாட்டை மட்டுமே ஏற்றுக்கொண்டு அரைப்பழங்குடிகளாக வாழவேண்டும் என்று. அந்தப் பழங்குடிகளுக்கு இவர்கள் வேறொரு ’உயர்நாகரீகத்தை’ கொண்டுவந்து கொடுப்பார்கள். அது அன்னிய மதமாகவே இருக்கும். அதைச் சொல்பவரின் நிதியாதாரம் அங்குதான். கீழோர், கூலிநத்திப் பிழைக்கும் அற்பர்.

ஜெ

முந்தைய கட்டுரைகணக்கு- கடிதம்
அடுத்த கட்டுரைமழைப்பாடல் வாசிப்பு