இஸ்லாமிய வெறுப்பா?

அன்புள்ள ஜெ,

நான் ஓர் இஸ்லாமியன். என் இஸ்லாமிய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் உங்களை இஸ்லாமின் எதிரி என்றார். உங்கள் எழுத்துக்கள் எதையும் படித்திருக்கவில்லை. ஆனால் உச்சகட்ட வெறுப்புடனேயே இருந்தார். தொடர்ச்சியாக நாலைந்து சொற்றொடர்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவை அவருக்கு இணையம் வழியாகக் கிடைத்தவை.

ஒன்று, நீங்கள் இஸ்லாமியரை இழித்து எழுதுகிறீர்கள். இரண்டு, நீங்கள் ஓர் இஸ்லாமியன் அருகே அமரப்பிடிக்கவில்லை என்று எழுதினீர்கள். ஆகவே நீங்கள் இஸ்லாமிய எதிரி. இதை நம்ப அவர் விரும்புகிறார். நான் எத்தனை விளக்கினாலும் இந்நிலைபாட்டில் மாற்றமில்லாமல் இருந்தார்.

சரி, படித்துப்பார் என்று படையல், முதுநாவல் என்ற இரு கதைகளை கொடுத்தேன். நீங்கள் இஸ்லாமிய இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இரண்டை கொடுத்தேன். படிப்பதே பாவம் என்று சொல்லி தள்ளிவைத்துவிட்டார். வருத்தமாகவும் சலிப்பாகவும் இருந்தது

எம்.சலீம்

முதுநாவல்[சிறுகதை]
படையல் [சிறுகதை]

அன்புள்ள சலீம்,

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல இந்துக்கள், கிறிஸ்தவர்கள், மார்க்ஸியர்கள், திராவிட இயக்கத்தவர் என அனைத்து ’நம்பிக்கையாளர்’களிடமும் உள்ள மூர்க்கம் இது. ஒரு நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய அவர்கள் முயல்வதே இல்லை—கூடுமானவரை அதைப் பேணிக்கொள்ளவே முயல்வார்கள். பொதுவாக நம்பிக்கையின் வழி அது.

நம்பிக்கையின் மறுபக்கம் வெறுப்பு. தன் தரப்பை ஆழமாக பற்றியிருக்கும் பொருட்டே தன் தரப்பு அல்லாதவற்றின்மேல் வெறுப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘நான் இதை நம்புகிறேன்’ என நம்பிக்கையாளர் திரும்பத் திரும்ப தன்னிடமே சொல்லிக்கொள்கிறார். கூடவே ‘நான் இதல்லாத எல்லாவற்றையும் வெறுக்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டிருப்பார்.

இஸ்லாமியர் மட்டுமல்ல இந்துத்துவர்களும், கிறிஸ்தவர்களும், மார்க்ஸியர்களும், திராவிட இயக்கத்தவரும் அவர்களை நான் வெறுத்து இழிவுசெய்கிறேன் என்று நம்பி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் பிராமண விரோதி என்ற கூக்குரல் ஆண்டுக்கொருமுறை உக்கிரமாக சில வட்டங்களில் எழுவதுண்டு. அதை நம்பும் ஒரு பெரிய கூட்டம் உண்டு. அனேகமாக ஒவ்வொருநாளும் அவர்களிடமிருந்து வெறுப்பு மின்னஞ்சல் வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இணையத்தைச் சுற்றிவந்தாலே அதைக் காணலாம். இதற்கு நான் என்ன செய்யமுடியும்?

எந்த மக்கள்திரளிடமும், எந்த தரப்பிடமும் வெறுப்பை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என எனக்கே ஆணையிட்டுக் கொள்கிறேன். எழுத்தாளர்கள் அனைவரிடமும் அதையே சொல்வேன். ‘நல்லவன்’ ஆக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. வெறுக்கும் ஒன்றை நம்மால் அறியமுடியாது என்பதற்காக. அறிவை எந்நிலையிலும் எந்த புகைமூட்டமும் இல்லாமல் வைத்துக்கொள்வது எழுத்தாளனின் தேவை என்பதற்காக.

எந்தப் போதையாலும் மூளையை மழுங்கடித்துக் கொள்வதில்லை, எந்நிலையிலும் எதையும் அனுபவிப்பதை திசைதிருப்பிக் கொள்வதில்லை,  வெறுப்பாலும் விருப்பாலும் எதையும் மூடிக்கொள்வதில்லை என்பது நானே எனக்கு போட்டுக்கொண்ட நெறி – என் நெறி என்பது அத்வைதம். தூய அறிவே அதன் பாதை.

இஸ்லாம் பற்றி முப்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கேரள இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்திற்கு ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இஸ்லாமியப் பண்பாட்டை கூர்ந்து அறிந்துமிருக்கிறேன். என் ஆதர்ச எழுத்தாளர்களான இஸ்லாமியர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அனைத்துக்கும் மேலாக காசர்கோட்டில் பணியாற்றிய காலம் முதல் இன்றுவரை நான் என் இஸ்லாமிய நண்பர்களுக்கு அணுக்கமானவன்.

நானே எனக்கு விதித்துக்கொண்ட சில நெறிகள் உண்டு:

அ. இஸ்லாம் பற்றி நம்  சூழலில் புழங்கும் எந்த எதிர்மறையான பொதுச்சித்திரத்தையும் என் எழுத்தில் முன்வைப்பதோ ஆதரிப்பதோ இல்லை. இஸ்லாமிய மதத்தை தீவிரவாதத்துடனோ வன்முறையுடனோ இணைத்து எதுவுமே எழுதியதில்லை. இஸ்லாமியர் பற்றிய எந்த வகையான அரசியல் வகைப்படுத்தல்களையும் ஏற்பதில்லை.

ஆ. இஸ்லாமியர் குறித்து எதிர்மறை உணர்வுகள் கொந்தளிக்கும் தருணங்கள் பல அமையும். பாராளுமன்றத் தாக்குதல், இலங்கை தேவாலயத் தாக்குதல், தப்லீக் ஜமாஅத் செய்திகள்  போன்றவை. அப்போதெல்லாம் உடனடியாக எந்தக் கருத்தையும் சொல்வதில்லை. சம்பிரதாயமான கண்டனத்தைக் கூட தெரிவிப்பதில்லை. ஏனென்றால் அப்போதிருக்கும் பொது உணர்வுகளுடன் இணையக்கூடாது என உறுதிகொண்டிருக்கிறேன்.

இ. இஸ்லாம் என்றல்ல எந்த மதநம்பிக்கையாளரின் எந்த மதநம்பிக்கையையும் எதிர்த்தோ இகழ்ந்தோ எழுதுவதில்லை. எந்த பண்பாட்டுக்கூறையும் எதிர்மறைத் தன்மையுடன் எழுதுவதில்லை.

ஈ.இஸ்லாமியர்களை ஒரு தனி மக்கள் திரள் என்று பார்ப்பதில்லை. அவர்களின் பண்பாட்டையோ இலக்கியத்தையோ சிறப்புக் கரிசனமோ, தட்டிக்கொடுக்கும் தோரணையோ கொண்டு அணுகுவதில்லை. அவர்கள் இயல்பாகவே இந்த மண்ணின் பண்பாட்டின் ஒருபகுதி என்றே அணுகுவேன்.

*

இஸ்லாமியப் பண்பாட்டில் எனக்கு ஈடுபாடுள்ள ஓர் அம்சம் உண்டு—அது சூஃபி மரபு. இந்தியாவெங்கும் அலைந்து நான் சூஃபி தர்காக்களுக்குச் செல்வதுண்டு. இன்றும் செல்வதுண்டு. ஓச்சிற உப்பா போன்ற சில சூஃபிகளை சந்தித்ததுண்டு. [மகாபாரத நாவல் தொடரான வெண்முரசு நூல்களில் ஒரு நாவல் ஓச்சிற உப்பாவுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அதற்காகவும் எனக்கு வசைகள் வந்தன].

சூஃபி வழிபாடு என் ஆன்மிகப் பயணத்தின் ஒரு பகுதி. அதில் நான் அடைந்த பல உன்னதத் தருணங்கள் உண்டு. அவற்றில் பெரும்பகுதியை பொதுவெளியில் பகிர முடியாது. புனைவிலக்கியத்தில் முயல்கிறேன் – முதுநாவல், படையல் போன்றவை அத்தகைய முயற்சிகள்.

ஆனால் இஸ்லாமிய மதத்திற்குள் இன்று உருவாகியிருக்கும் தூய்மைவாத, அடிப்படைவாத இயக்கங்களுடன் எனக்கு எந்த விதமான உடன்பாடும் இல்லை. அவை இஸ்லாமை ஓர் அரசியலாக மட்டுமே ஆக்குகின்றன, இஸ்லாம் முன்வைக்கும் ஆன்மிகத்திற்கு அவை எதிரானவை என நினைக்கிறேன். அதை நான் ஏற்கவில்லை. அதையே அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன். அதையே இந்து அடிப்படைவாதம் பற்றியும் குறிப்பிடுகிறேன். அது இந்துமதத்திற்கு எதிரானது என்று.

அந்த அடிப்படைவாதத்தின் முகமாகிய ஜவஹருல்லா போன்றவர்களுடன் என்னால் இணையாக மேடையில் அமரவியலாது, அமரவிருந்த ஒரு தருணத்தில் ஓர் அச்சத்தை உணர்ந்தேன் என்று எழுதியிருந்தேன். அதையே திரித்து இஸ்லாமியர் அருகே வந்தால் அச்சம் ஏற்படுகிறது என்று நான் எழுதியதாகச் சொல்லிச்சொல்லி பரப்பினர். உங்கள் நண்பர் நம்புவது அதையே.

அர்ஜுன் சம்பத்திடமும் எனக்கு இருப்பது அதே விலக்கமே. நான் பேசிய ஓர் அமைப்பு சில ஆண்டுகளுக்குப் பின் அர்ஜுன் சம்பத்தை அழைத்தது என்பதனால் அந்த அமைப்புடனான எல்லா உறவையும் துண்டித்து, அந்நண்பர்களையும் விலக்கிவிட்டேன். அதை என் தளத்திலேயே காணலாம்.

இஸ்லாமியர்களில் சிலர் இன்றிருக்கும் உளநிலை என்பது இஸ்லாமிய அடிப்படைவாதம் சார்ந்தது. அந்த அடிப்படைவாதத்தை அப்படியே ஏற்று இஸ்லாமியர்களை கண்மூடித்தனமாகப் புகழ்பவர்களே தங்களவர் என அவர்கள் நினைக்கிறார்கள். அந்தவகையான பசப்புகள் அரசியல்வாதிகளுக்கு இயல்பானவை. எழுத்தாளர்கள் அதைச் செய்யமுடியாது. ஏற்பும் விலக்கமுமாகவே எதையும் அவர்கள் அணுகுவார்கள். அதைப் புரிந்துகொள்ளும் சில இஸ்லாமியர் இருப்பார்கள், அவர்களே என் வாசகர்கள். அவர்களையே நான் கருத்தில்கொள்ள முடியும்.

ஆனால் நான் இந்து என்பதனால் இந்துமத ஆசாரவாதத்தையும், அடிப்படைவாத அரசியலையும்தான் நேரடியாக எதிர்க்கிறேன். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஏற்பதில்லை என்று தெளிவுபடுத்துவதுண்டு,  தொடர்ந்து அதை எதிர்த்து எழுதுவதில்லை. அதை அவர்களில் உள்ள தெளிவுள்ளோரே செய்யவேண்டும் என நினைக்கிறேன்.

இந்து அடிப்படைவாதத்தை எதிர்ப்பதனால் இந்துவிரோதி என்று நான் வசைபாடப்படுகிறேன். ஆசாரவாதத்தை எதிர்ப்பதனால் பிராமணவிரோதி எனப்படுகிறேன். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஏற்காததனால் இஸ்லாமிய விரோதி என சிலர் சொல்லக்கூடும். என்ன செய்ய முடியும்?

அடிப்படைவாதிகள் எப்போதும் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் ஏற்காதவர்களை எதிரிகள் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களை அப்படியே ஏற்று, அவர்களின் மேடைகளிலும் தோன்றுபவர்கள் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.வி.ராஜதுரை தஸ்லீமா நஸ்ரீன் ஹைதராபாத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் ஒரு மேடையில் தாக்கப்பட்டதை கண்டித்தார். உடனே அவர் இஸ்லாமிய எதிரி என வசைபாடப்பட்டார். அ.மார்க்ஸ் ஒருமுறை ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய கொலைகளை கண்டித்தார், ஒருமுறை துருக்கியின் எர்டோகனை கண்டித்தார். மறுகணமே இஸ்லாமியர் மேல் காழ்ப்பு கொண்டவர் என வசைபாடப்பட்டார். இந்த வசையில் இருந்து எவரும் தப்ப முடியாது.

*

இங்குள்ள சூழல் ஒன்றுண்டு. தனிப்பட்ட இலக்கியக் காழ்ப்புகளும் கூடவே அரசியல் காழ்ப்புகளும் கொண்ட ஒரு சிறு கும்பல் மிகுந்த வெறியுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மொண்ணையான இலக்கியவாதிகள். நான் இலக்கியக் கருத்துக்களை சமரசமில்லாமல் சொல்லி, தெளிவான அளவுகோல்களை முன்வைப்பதனால் உருவாகும் காழ்ப்புதான் அது.

ஆனால் அவர்கள் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர், இஸ்லாமிய ஆதரவாளர் , தலித் ஆதரவாளர், ஈழ ஆதரவாளர் எனப் பற்பல வேடங்களை பூண்டு காழ்ப்புகளை கக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சில்லறை எழுத்தாளர்கள், உதிரிக்கட்டுரையாளர்கள். இவ்வாறன்றி எவ்வாறும் எந்த அடையாளத்தையும் பெறும் தகுதி அற்றவர்கள்.

அவர்களின் வழி என்பது என் கட்டுரைகளில் இருந்து ஒற்றை வரியை எடுத்து அதை முடிந்தவரை எதிர்மறையாகத் திரித்து, திரும்பத்திரும்ப சலிப்பில்லாமல் சொல்லி காழ்ப்பை நிலைநாட்டுவது. அதில் ஒன்றே மேலே சொன்னதுபோல இஸ்லாமியர் அருகே இருக்க எனக்கு பிடிக்கவில்லை என்று நான் சொன்னதாக செய்யப்படும் திரிபு. அவ்வாறு பலவகை திரிபுகள் வழியாக இஸ்லாமியர் உட்பட பல தரப்பினரை ‘தூண்டிவிட்டு’ தங்கள் ஆயுதமாக்கிக் கொள்வது அவர்களின் உத்தி.

இப்படி பல உண்டு.  ‘ஈழத்தில் பேரழிவு நடைபெற்றது, அது அநீதியானது கொடியது. ஆனால் ஈழத்தில் புலிகள் ஓர் ஆயுதமேந்திய ராணுவமாகச் செயல்பட்டனர். அவர்களும் போரிட்டனர். அந்நிலையில் அதை போர்க்குற்றமாக சர்வதேச அளவில் கொண்டுசென்றால் மட்டுமே உலகநாடுகளின் ஏற்பு கிடைக்கும். இனப்படுகொலை என்று சொல்லிக்கொண்டால் நமக்கு கொந்தளிப்பாக இருக்கும். ஆனால் உலகநாடுகளின் ஆதரவு கிடைக்காது. ஏனென்றால் உலகில் எந்த நாடும் உள்நாட்டில் உருவாகும் ஆயுதக்கிளர்ச்சியை இலங்கை எதிர்கொண்டதுபோலத்தான் எதிர்கொள்ளும். இந்தியாவே நக்சலைட் எழுச்சியை அப்படித்தான் எதிர்கொள்கிறது.’ இது நான் சொன்ன கருத்து.

உண்மையில் இதுதான் நடைபெறுகிறது. இனப்படுகொலை என்ற நிலைபாட்டை உலகில் எந்நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. போர்க்குற்றம் என்ற சொல்லையே இன்று பொதுவெளியில் சொல்லவும் முடிகிறது. ஆனால் நான் சொன்னதை  ‘ஈழத்தில் படுகொலைகளே நிகழவில்லை என்று ஜெயமோகன் சொல்கிறார்’ என்று திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு நாளுக்கு நான்குபேராவது நீங்கள் அப்படிச் சொன்னீர்களா என்று எனக்கு எழுதுகிறார்கள்.

இலங்கையில் கவிதை எழுதுபவர்களில் சிறந்தவர்கள் என ஒரு எட்டுபேரை ஒரு விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன். மு.பொன்னம்பலம் என்ற மூத்த கவிஞர் அங்கே சிறப்பாகக் கவிதை எழுதுபவர்கள் என நூறுக்கும் மேற்பட்டவர்களின் பட்டியலை எழுதிப் பிரசுரித்திருந்தார். அதை நையாண்டியாக ‘இலங்கைபோன்ற சின்னஞ்சிறு சூழலில் நூறுக்குமேல் கவிஞர்கள் அலைந்தால் அது சட்ட ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்காதா? கவிஞர்தொல்லைக்கு பூச்சிமருந்து அடிக்கவேண்டும்’ என்று சொன்னேன்.

அது தராதரம் அறியாமல் பட்டியலிடும் போக்குக்கு எதிரான நையாண்டி. சு.வில்வரத்தினம், சேரன் போன்ற இலங்கையின் பெருங்கவிஞர்களைப் பற்றி தமிழில் நீண்ட கட்டுரைகளை நான் மட்டுமே எழுதியிருக்கிறேன். இளைய கவிஞர்கள் பலரை கவனப்படுத்தியிருக்கிறேன். ஆனால் ஈழக்கவிஞர்களை எல்லாம் நஞ்சூட்டிக் கொல்லவேண்டும் என்று ஜெயமோகன் சொல்கிறார் என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை நம்பவும் ஒரு கும்பல் உண்டு.

தமிழில் அம்பேத்கரின் மெய்யியல், அறவியல், வரலாற்றுப் பங்களிப்பு பற்றி விரிவாக பேசும் மிகச்சிலரில் நான் ஒருவன். ஆனால் அம்பேத்கரை அவதூறு செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். என்ன அவதூறு என்றால் அம்பேத்கரைப் பற்றி இவர்கள் சொல்லும் எதையாவது நான் சொல்லவில்லை என்பதுதான்.

இதேதான் இஸ்லாமியர்களை குறித்தும் செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இஸ்லாமியர்களில் ஒருசாரார் இந்துக்களிடம் கொள்ளும் விலக்கம் பற்றி எழுதியிருந்தேன். அது இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் உருவாக்கப்படுவது. இந்துக்களையும் இஸ்லாமியரையும் விலக்குவது இரு தரப்பிலும் உள்ள அடிப்படைவாதிகளின் தேவை. அந்த வலையில் இஸ்லாமியர் விழக்கூடாது, இந்துக்களுடனான அணுக்கமே அவர்கள் அடிப்படைவாதத்தை எதிர்ப்பதற்கான வழியாக இருக்கமுடியும். இது நான் எழுதியது.

இதையே இஸ்லாமியர் இந்துக்களை வெறுக்கிறார்கள் என்று அவர்களை நான் குற்றம்சாட்டுவதாக திரித்து சொல்லிச்சொல்லி பரப்பினார்கள் காழ்ப்பாளர்கள். முகநூல் போன்ற ஓர் அமைப்பின் பிரம்மாண்டமான அவதூறுப்பெருக்கை எவரும் எதிர்கொள்ள முடியாது. ஓராண்டுக்குப் பின் அவதூறு பரப்பியவர்களே நான் சொன்ன அதே கருத்தை சொன்னார்கள் என்பதும் வரலாறு.

இவர்கள் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் மறுப்பு அளிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்த மறுப்பும் விளக்கமும் எழவில்லை என்பதுபோல அதையே மீண்டும் சொல்வார்கள். மீண்டும் அதைச்சொல்லியே கட்டுரைகள் எழுதுவார்கள். இந்த வகையான காழ்ப்புகளையும் பரப்புகிறார்கள். இதற்கு ஒன்றும் செய்யமுடியாது. நாம் சொல்வதைச் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

இந்த ஒட்டுமொத்த அவதூறு இயந்திரமும் தரமான எழுத்தாளர்களை நோக்கி மட்டுமே செயல்படுகிறது, அத்தனை அரைகுறைகளும் இவர்களுடன் சேர்ந்துகொள்கிறார்கள், அத்தனை போலிகளும் இவர்களால் கொண்டாடப்படுகிறார்கள். அதை மட்டும் நீங்கள் கவனித்தாலே போதும், இதன் பொருளென்ன என்று புரிந்துவிடும்.

*

எந்த எழுத்தாளனும் சமூகம் மீதான விமர்சனத்தை முன்வைக்காமல் இருக்க மாட்டான் – ஏனென்றால் அந்த விமர்சனத்தில் இருந்தே அவன் எழுத வருகிறான். ஆகவே சமூகத்தின் எந்தப் பகுதியைப் பற்றிச் சொன்னாலும் அவனுடைய விமர்சனமும் அதில் இருக்கும். தன் சமூகமானாலும் பிற சமூகமானாலும். ஓர் எழுத்தாளன் சமூகத்தின் ஒரு பகுதியைப் பற்றி விமர்சனமே இல்லாமல் புகழ்மொழிகளை சொல்லிக்கொண்டிருக்கிறான் என்றால் அவன் போலியானவன்.

எழுத்தாளன் புகழ்மொழி அன்றி எதைச் சொன்னாலும் அவன் தன் சமூகத்தின் எதிரி என நினைப்பது ஒரு நோய்க்கூறு. அத்தகைய காழ்ப்புகளை தனிநபர் பகைமையினால் பரப்பும் இலக்கியவாதிகள் இஸ்லாமிய சமூகத்திற்கு பெருந்தீங்கு இழைக்கிறார்கள். அவர்களை தங்கள் தனிப்பட்ட பூசல்களில் ஆயுதங்களாக, வெறும் கைப்பாவைகளாகப் பயன்படுத்துகிறார்கள். அதுதான் ஒரு சமூகத்தையே கீழ்மை செய்தல்.

இங்கே அறிவுச்சூழலில் ஒரு பழக்கம் உண்டு. அரசியல் சரிநிலைகளை கணக்கிட்டு இஸ்லாமியர்களைப் பற்றியோ மற்ற சிறுபான்மையினரைப் பற்றியோ ஒரு சிறுசொல் கூட விமர்சனமாகச் சொல்ல மாட்டார்கள். வழக்கமான டெம்ப்ளேட் புகழ்மாலைகள் மட்டும்தான் இருக்கும். தன் சாதியைப் பற்றி ஒரு சொல் எதிர்மறையாகச் சொல்ல மாட்டார்கள். தன் சாதி கௌரவக்கொலைகள் செய்யும்போதுகூட கௌரவக் கொலைகள் தப்பு என்று பொதுவாகவே பேசுவார்கள். ஆனால் அத்தனைபேரும் சேர்ந்து பிராமணர்களை தாக்குவார்கள். ஏனென்றால் அது இங்கே முற்போக்கு என்று சொல்லப்படுகிறது. இந்தவகை  ‘அச்சடிக்கப்பட்ட’ முற்போக்குகளில் ஒருவன் அல்ல நான்.

எனக்கு முப்பதாண்டுகளாக இஸ்லாமிய வாசகர்கள், நண்பர்கள் பலர் உண்டு. அந்தரங்கமான குடும்ப நண்பர்களே உண்டு. தனிப்பட்ட முறையில் இதுவரை என் இலக்கிய நண்பர்களில், தனிப்பட்ட நண்பர்களில் எந்த இஸ்லாமியரிடமிருந்தும் ஒவ்வாதன ஏதும் சந்திக்க நேர்ந்ததில்லை. ஆனால் அணுக்கமாக இருந்த பிற சாதியினரான ஒரு சில நண்பர்களிடமிருந்து நம்பமுடியாத அளவு மேட்டிமைத்தனம், சிறுமை, காழ்ப்புகளை காணநேர்ந்தது. இஸ்லாமியர்களில் என்னை அறியாதவர்களிடமிருந்து மட்டுமே காழ்ப்பு வெளிப்படுகிறது.

இரண்டு நிலைகளிலும் நான் சொல்லிக்கொள்ளுவது ஒன்றே. மனிதர்களை அவர்களின் திரள் அடையாளங்களைக் கொண்டு ஒட்டுமொத்தமாக விரும்புவதும் வெறுப்பதும்போல அறிவுக்கு எதிரான ஏதுமில்லை. அது எழுத்தாளனின் நுண்ணுணர்வின் அழிவு. நாளும் அசட்டு மேட்டிமையையும் சிறுமையையும் கக்கிக் கொண்டிருக்கும் சிலரைக் கொண்டு நான் அவர்களின் சமூகத்தை வகுப்பதில்லை.  இஸ்லாமியர்களில் அடிப்படைவாதிகள் சிலரின் காழ்ப்பினால் இஸ்லாம் குறித்தும் எந்த எதிர்மறை எண்ணத்தையும் உருவாக்கிக்கொள்ளப் போவதில்லை.

ஏற்கனவே பலமுறை எழுதியதை மீண்டும் அப்படியே பதிகிறேன். இஸ்லாம் இந்தியப் பண்பாட்டின் ஒரு பகுதி. வரலாறு அப்படித்தான் உருவாகி வந்துள்ளது, எவரும் அதை மாற்ற முடியாது. இஸ்லாமியருக்கு இடமில்லாத அரசோ, அரசியலோ, இலக்கியமோ, தத்துவமோ இந்தியாவில் இருக்க முடியாது. எந்நிலையிலும் இஸ்லாமியருடன் இணைந்து மட்டுமே பிற இந்தியர் வாழமுடியும். அந்நல்லுறவே நம் பண்பாடாக இருக்கமுடியும்.

ஜெ
முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 2
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு