வெண்முரசு ஆவணப்படம்- கடிதம்

வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு

ஆசிரியருக்கு வணக்கம்,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

வெண்முரசு  நிறைவை சிறப்பிக்கும் விதமாய் ‘வெண்முரசு ஆவணப்படம்’ திரையிடல் அறிவிப்பை கண்டேன். நான் மிக மகிழ்ந்த தருணம். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த பணியை மூத்தவர் ஆஸ்டின் சௌந்தர், நண்பர் ராஜன்சோமசுந்தரம் தலைமையில் ‘விஷ்ணுபுரம் அமெரிக்க’ நண்பர்கள் துவங்கியதை நானறிவேன்.

ஆஸ்டின் சௌந்தருடன் வாரம் ஒருமுறை போனில் பேசிவிடுவேன் முன்பெல்லாம். இந்த ஆவணப்பட வேலையை அவர்கள் துவங்கியதிலிருந்து எங்களது  உரையாடல் இல்லாமல் போயிற்று. எப்போது நான் முயற்சித்தாலும் அவர்கள் பிஸி.

கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக வெண்முரசு ஆவணப்படதிற்காக கடுமையாக உழைத்துள்ளனர். அதிக பொருட்செலவும் செய்துள்ளனர். நேற்று தளத்தில் ஆவணப்படம் திரையிடல் அறிவிப்பு கண்டதும்.அதற்கு முதுகெலும்பாய் உழைத்த ராஜன் சோமசுந்தரம், ஆஸ்டின் சௌந்தரை வாழ்த்து சொல்ல போனில் அழைத்தேன். ராஜன் ராலே திரையரங்கில் திரையிடலுக்கான கடைசிகட்ட பணியில் பிசி  பேச முடியவில்லை. சௌந்தர் அண்ணா “ஷாகுல் பத்து நிமிடம் மட்டும் பேசலாம்” என அழைப்பை ஏற்றார்.

அவர் சொன்னார் கடந்த எட்டுமாதமாக தனது பணிநேரம் போக தினமும் சனி, ஞாயிறு உட்பட மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் உழைத்ததாக. நிகழ் காவியமான வெண்முரசு எழுதிய ஆசானுக்காக இதை செய்துள்ளனர். பூமி பந்தின் எதிர் முனையில் வாழும் தமிழ்பேசும் மிக சொற்பமானவர்களே வாழும் தேசத்தில் மிக சொற்பமான ஜெயமோகன் வாசக நண்பர்கள் கூட்டாக இணைந்து பெருமுயற்சி செய்து இதை சாதித்துள்ளனர்.

அதன் தரம் எப்படி இருக்கும் என்பது திரையிடலுக்கு பின் உலகம் அறிந்துகொள்ளும். வெண்முரசை உலகறிய செய்யவேண்டும் என்பதே அவர்களின் பேரவா. அதிலும் அதன் முதல் திரையிடல் அமெரிக்காவில். இன்று ராஜன் சோமசுந்தரத்தை அழைத்து வாழ்த்து சொன்னேன். அதிக பட்சம் தொண்ணூறு பேருக்குதான் திரையரங்கில் அனுமதி. ராலே திரையிடல் முன்பதிவு முடிந்துவிட்டதாக (ஹவுஸ்புல்) மகிழ்ச்சியுடன் சொன்னார்.

ஆவணப்படம் திரையிடல் அன்று அமெரிக்காவின் பிலேதெல்பியா துறைமுகப்பில் நின்றுகொண்டிருப்பேன். மானசீகமாக நானும் திரையரங்கில் இருப்பேன்.

வெண்முரசு படைத்த உங்களுக்கு வணக்கமும், வாழ்த்துக்களும்.

ஷாகுல் ஹமீது .

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 1
அடுத்த கட்டுரைபெண்களின் அரசு