பயணம்,பெண்கள் – கடிதம்

அன்புள்ள ஜெ,

சித்திரைப் புத்தாண்டை ஒட்டிய விடுமுறையில் ஒரு பயணம் திட்டமிட்டோம். இங்கு ஏப்ரல் மாதத்தில் சுடர் கொள்ள தொடங்கிய வெம்மையில் இருந்து தற்காலிகமான தப்பித்தலாக நாகர்கோயில் மற்றும் கேரளத்தின் காடுகளை நோக்கி ஐந்து நாட்கள் பயணம். முதலில் நேராக திருவனந்தபுரம் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கொரானா இரண்டாம் அலையில் இ-பாஸ் முதலிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என்பதால், நாகர்கோயில் வந்து அங்கிருந்து பயணத்தைத் தொடங்க முடிவு செய்திருந்தோம்.

முதலில் அன்பரசி சென்னையில் இருந்து திருச்சி வந்து ரயில் நிலையத்தில் எங்களுக்காக காத்திருந்தாள். பிறகு நானும் செல்வராணியும் சேர்ந்துக் கொண்டோம். திருச்சியில் இருந்து வைகை எக்ஸ்பிரஸில் மதுரை. அங்கிருந்து புனலூர் எக்ஸ்பிரஸில் நாகர்கோயில் வந்து இறங்கிய போது விடியற்காலை 4.30 மணி. அதிகாலையில் பயணம் தொடங்குவதன் பரபரப்பு மனதை நிறைக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கோவையில் இருந்து வந்த ரயிலில் மகேஸ்வரி இறங்கினாள். ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து செல்ல சுப்ரமணியன் சார் காருடன் வந்திருந்தார். ஷாகுல் சாரின் நண்பர் மற்றும் தங்களது வாசகர் என்று செல்வா அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு வகையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவே.

முதலில் சென்றது காளிகேசம். காளிகேசம் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தின் முக்கியமான வனப்பகுதி. வழியெங்கும் வாழை ரப்பர் மற்றும் கிராம்பு தோட்டங்களைப் பார்த்து கொண்டு வந்தோம். ரப்பர் தோட்டங்களில் அதிகாலையில் பால் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களைக் காண முடிந்தது. சுப்ரமணியன் அங்கிருந்த வனத்துறை சூழியல் முகாமில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். அறையில் பைகளை வைத்ததும் நேராக காளிகேசம் அருவியை நோக்கி சென்றோம்.

காலை நேரத்தில் முற்றிலும் ஆட்கள் இல்லாது அமைதியாக ஓடிக் கொண்டிருந்த ஓடைகளின் வழியே ஓரமாக உள்ளாக நடந்து சென்றோம். இந்த ஆறு இங்குள்ள மலைச் சரிவுகளில் விழுந்தோடி, சிறு சிறு சரிவுகளில் பாறைகளைக் குடைந்தும் அறுத்துக் கொண்டும் செல்கிறது. சரிந்து அமைந்த கற்பாறைகள். பாறைகள் வழுக்கலாக இருப்பதால் கொஞ்சம் ஆபத்தானவை. கவனமாக செல்ல வேண்டி இருந்தது.

ஆங்காங்கு சரிவுகளில் தனியாகவும் சிறு குழுக்களாகவும் ஒரே சமயம் குளிக்கலாம். அருவியில் நல்ல தண்ணீர் இருந்தது. அந்த நேரத்தில் அங்கு நாங்கள் மட்டுமே. பசுங்காட்டின் மணம். அருவியின் சீரான ஓசை. சுற்றிலும் மலைகள் முழுக்க பசுமை சூடி நின்றிருக்க அந்த அருவி நீரில் நின்றிருந்தது உண்மையில் ஒரு அபூர்வமான அனுபவம். அலுப்பூட்டும் அன்றாடம் எங்கோ தொலைவில் இருந்தது. நீரில் இறங்கியவுடன் எங்களையும் மீறி ஒரே சந்தோசக் கூச்சல். கண்களை மூடி உச்சியில் அருவி நீர் விழுவதை உணர்ந்த படி நெடு நேரம் அருவியில் நின்றிருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக உடல் குளிர தொடங்கியதுமே நேரம் செல்வதை உணர்ந்து வெளியில் வந்தோம்.

அருவியில் குளித்து முடித்து வந்து அங்கிருந்த காளி கோயிலுக்கு சென்றோம். அருவிக்கு செல்லும் வழியில் இந்த காளி கோயில் உள்ளது. அருகில் இருந்த மலைக்குன்றுக்கு மேல் காளியின் உறைவிடம். அதற்கு கீழாக தாந்திரீக மரபில் காளி வழிபாட்டின் தடயங்கள் இருந்தன. நாங்கள் சென்ற போது சித்ரா பௌர்ணமியை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கான கொடை விழாவைப்  பற்றிய அறிவிப்பைக் கண்டோம்.

மதிய உணவிற்குப் பின், மாறாமலை செல்வது என முடிவானது. அங்கிருந்த காணிக்காரர் ஒருவர் ஜீப்புடன் வர நாங்கள் எல்லாரும் கிளம்பினோம். சரளைக்கற்களும் குழியும் ஆங்காங்கு பெரும் கற்களுமாக இருந்த அந்த மலைப் பாதையில் ஜீப் மேலேறி சென்றது. ஜீப்பை ஓட்டிய காணிக்காரர் மேலே ரப்பர் எஸ்டேட்டில் வேலை செய்கிறார். முன்பொருமுறை அந்த பாதையில் இரவில் ஜீப்பில் வந்த போது புலி குறுக்காக நடந்து சென்றதைப் பார்த்த அனுபவத்தையும் அந்த இடத்தையும் சுட்டி காட்டினார். மேலே ரப்பர் தோட்டம் வரை ஜீப்பில் சென்றதும் இறங்கினோம். ஜீப்பை முன்னால் இறங்கி கொஞ்ச தூரத்தில் நிற்க சொல்லி விட்டு அங்கிருந்து ஒரு நடை சென்றோம். முகில்கள் இறங்கிய வானத்தில் மழை வருவதன் சாயல். இரு பக்கமும் பசுமரச்செறிவு.

அன்பரசி இந்த பயணத்தின் முதலில் இருந்தே  அரிய வகை பறவைகளைத் தேடி காமெராவும் கையுமாக சுற்றிய படி இருந்தாள். அவள் சேலம் பறவையியல் கழகம் மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு குழுமம் ஒருங்கிணைக்கும் “தமிழ் பெண்களின் சிறகு பேச்சு” (SOF Sunday Talkies) நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறாள். இந்த பயணம் முழுவதும் பறவைகளைப் பற்றிய தனது அனுபவங்களையும் மற்றும் பல புதிய தகவல்களையும் சொல்லிய படி வந்தாள். ஒரு கட்டத்தில் நாங்கள் எல்லாரும் எங்கே புதிதாக பறவை தென்படுகிறதென்று சுற்றியும் பார்க்க ஆரம்பித்தோம். மாறாமலையில் இரண்டு புதிய வகைகளைக் கண்டோம். துடுப்பு வால் கரிச்சான் (Rocket tailed drongo) மற்றும் வெண்வயிற்று வால் காக்கை (White bellied treepie). இவை இரண்டும் பொதுவாக ஒன்றாக அடர் காடுகளில் காணக் கிடைப்பவை. திரும்பி ஜீப்பில் வரும் போது செந்தலை பஞ்சுருட்டானை (Chestnut-headed bee-eater) கண்டோம். மிளிரும் சிவப்பு நிறத்திலான தலையும் மஞ்சள் நிறத்திலான தொண்டையும் உடைய சிறிய அழகிய பறவை. இவற்றை மீண்டும் மாலை நடையின் போது பெருஞ்சாணி அணையின் கரையோரப் பகுதிகளில் அதிகமாகக் காண முடிந்தது. இப்பகுதி நாங்கள் தங்கியிருந்த வனத்துறை சூழியல் முகாமின் பின்பகுதியில் தொடங்கி அதன் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அடர் காடுகள் வழியே உள்ளே செல்கிறது.

நாங்கள் கரையோரமாக நீர் குறைந்த மணல் மேடுகள் மற்றும் புல்வெளிகளில் நடந்து சென்றோம். இங்கு சில நேரங்களில் நீரருந்த வரும் மிளாக்கள் உள்ளிட்ட வன விலங்குகளை காண நேரலாம். அப்படியே உள்ளே நடந்து சென்று ஒரு மணல் திட்டில் ஒளிரும் நீர்நிலைகளைப் பார்த்தவண்ணம் சும்மா அமர்ந்திருந்தோம். தூரத்தில் கோடுகளாக மலைகளின் உச்சி முனைகள். ஆற்றின் மறு கரையில் தென்னை மரங்கள் சூழ்ந்த கிராமங்கள். வட்டமான தீவாக நீரில் நீந்தித் திளைக்கும் மாடுகள். கூட்டம் கூட்டமாக வெண்கொக்குகள், நாரைகள் மற்றும் பல வித நீர்ப்பறவைகள். சிறு கூட்டங்களாக பறவைகள் கிளம்பி நீருக்கு மேலே தளர்வாக பறந்து மறுபக்கம் சென்றன.அந்தி அணைவது வரை அங்கிருந்தோம். இந்த நேரங்களில் பார்க்கும் நிலக்காட்சிகள் வெகு நாட்களுக்கு நம்மில் நீடிப்பதுண்டு.

அறைக்கு வந்ததும் இரவுணவு. செல்வா இரவுணவு உண்பதில்லையாதலால், அறைக்கு சென்றதும் உறக்கத்திலாழ்ந்தார். அருவியில் குளித்த பிறகு வரும் இனிய உறக்க மயக்கம். ஒரு வழியாக அவரையும் எழுப்பிக் கூட்டிக்கொண்டு இரவு வெளியில் வந்தோம். பின்பகுதியில் காடுகளை ஒட்டி அமர்வதற்கு பச்சை மூங்கில்களில் செய்யப்பட்ட வட்ட வடிவிலான மூங்கில் அமர்வுகள். காடுகள் முழுக்க இருட்டி நிலவின் ஒளி மேல் எழுந்தது. இரவில் காடு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. விதவிதமான பறவைகள் பூச்சிகளின் ரீங்காரம். மகேஸ்வரியும் அன்பரசியும் அங்கு நெடுநேரம் தனித்து கூவியபடி இருந்த பறவையின் குரலை கண்டுப்பிடிக்க முற்பட்டார்கள். தூரத்தில்  புதர்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு வன விலங்கின் சாயல். சுப்ரமணியன் மொபைல் டார்ச்சை அடித்தபோது சுடரும் இரு கண்களைக் காண முடிந்தது. மிளாவாக இருக்கலாம். சரியாக பார்க்க முடியவில்லை.

அங்கிருந்த வனக்காவலர் பெயர் காந்திராஜன். அந்த சூழியல் முகாம்களை நடைமுறைப்படுத்துவதற்கான தன்னுடைய பல்வேறு முயற்சிகளை பகிர்ந்து கொண்டார். நாங்கள் மாலை நடை சென்ற ஆற்றுக்கு எதிர்ப்பக்கமாக ரப்பர் மரங்கள் செறிந்த காட்டிற்குள் சிறிது தொலைவு சென்றால் வன விலங்குகளைப் பார்க்க முடியும் என்று சொன்னார். அந்த காட்டிற்குள் ராஜநாகங்கள் மிகுதி. அவரும் சுப்ரமணியனும் இரவு வெகு நேரம் அந்த காட்டினைப் பற்றி பேசி கொண்டிருந்தார்கள். நாங்கள் அறைக்கு சென்று படுத்தோம். இரவு நாங்கள் அறைக்கு சென்று உறங்கும் வரையிலும் மறுநாள் காலை எழுந்த பிறகும் கூட அந்த பறவையின் தனித்த குரல் ஒலித்து கொண்டேயிருந்தது.

மறுநாள் அங்கிருந்து கிளம்பி வாகமன் சென்றோம். ஏறத்தாழ பெரும்பகுதி நாள் கார்ப்பயணத்தில் சென்றது. இந்த பயணத்தின் நீண்ட கார்ப்பயணங்கள் அனைத்துமே உற்சாகமானவை. சுப்ரமணியன் சாரின் சுவாரஸ்யமான கதைகள். செல்வாவின் தேர்வில் இனிய பாடல்கள். கொஞ்சம் இலக்கியம். நிறைய சிரிப்பு. ஒரு கட்டத்திற்கு மேல் எங்கள் சிரிப்பு சத்தத்தையே கேட்டுக் கொண்டிருந்தோம். மகிழ்ச்சிகரமான தருணங்கள்.

வாகமனில் சுப்ரமணியன் சார் தன் நண்பர் மூலம் தெரிந்த ஒருவர் நடத்தி வரும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் அங்கு சென்று அவர் வருவதற்காக காத்திருந்தபோது, அருகிலிருந்த மலைக்குன்றின் மீதிருந்து ஒரு ஜீப் வளைந்து சரிவின் சிறிய பாதையில் வெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்தது. அதை எங்களுக்கு சுப்ரமணியன் சார் சுட்டிக்காட்ட நாங்கள் அனைவரும் கொஞ்சம் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் நாங்கள் ஏறிய ஜீப்பும் அந்த மலைக்குன்றின் பக்கமாக திரும்பி மேலே அதே பாதையில் ஏற ஆரம்பிக்க எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்தோம். பிறகு தான் தெரிந்தது நாங்கள் தங்க போகும் விடுதி அந்த மலைக்குன்றின் மேலே இருந்தது.  மலைச்சரிவில் வெட்டி உருவாக்கப்பட்ட பாதையின் ஏற்ற இறக்கங்களையும்  சக்கரங்களின் அதிர்வுகளையும் மிக அருகில் ஒரு பக்கமாக தெரிந்த மலைச்சரிவின் முனைகளையும் உணர்ந்தபடி சென்ற அந்த ஜீப் பயணத்தை மறக்கவே முடியாது. விடுதி கட்டிடம் குன்றின் உச்சியில் இருந்தது. அதற்கும் இடப்பக்கமாக மேலே கூடார முகம் ஒன்று. அங்கும் சிலர் தங்கி இருந்தனர். அதன் எதிர்புறமாக மலை உச்சியை சமப்படுத்தி சிறிய ஹெலிபேட் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டிருந்தது

அந்த விடுதியை நடத்தி வந்த சிபி சேட்டன் அருகிலிருந்த மூன்று மலைக்குன்றுகளுக்கு உடைமையாளர். தன்னுடைய பதினைந்து வயதில் இருந்து இந்த மலைப்பாதைகளில் ஜீப் ஓட்டுவதாகவும், அந்த குன்றின் மேல் வேறு வாகனங்கள் செல்ல முடியாதாகையால் அந்த ஜீப்பில் மட்டுமே தேவையான கட்டுமானப் பொருட்களை பெரும்பாலும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுச்சென்று இந்த விடுதியை கட்டிய கதையையும் கூறினார். இன்னும் இந்த விடுதி மற்றும் அருகில் இருந்த இரு மலைக்குன்றுகளையும் விரிவாக்கம் செய்யும் திட்டங்கள் வைத்திருந்தார். அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருந்த இன்னொரு மலைக்கு ரோப் கார் விடும் திட்டங்கள் உட்பட. உண்மையில் அவருடைய இந்த முயற்சிகள் மற்றும் ஈடுபாடுகள் அனைத்தையும் வைத்து இன்னொரு தனி கட்டுரை எழுதலாம்.

அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கிருந்து அருகில் ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்த மலையுச்சி வரை காலை மற்றும் மாலை நடை. அங்கிருந்த பாறை முனையில் அமர்ந்து அந்தி அடங்குவதையும் மறுநாள் புலரி எழுவதையும் கண்டோம். அவ்விடத்தை சுற்றிலும் பசுமை போர்த்திய மேகங்களில் மூழ்கிய மலைச்சரிவுகள். எதிரில் உருண்டு திரண்டு நின்றிருந்த மலைகளின் உச்சிப்பாறைகள். அதற்கும் மேலாக வானைத் தொடும்படி நின்றிருந்த சிறு மரங்கள். கீழிருந்து ஏறி வந்த மேகக் கூட்டங்கள். சில நிமிடங்கள் நின்றிருப்பது அவற்றின் நடுவிலா என்று புரியாத மயக்கம். மேகங்கள் திரண்டு சட்டென்று மழைத்துளிகளை அள்ளி வீசியபடி காற்றடிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் நல்ல மழை. வீசிய காற்றில் மழைத்துளிகள் வானில் நீண்ட பெரும் கோடுகளாக நடந்து செல்வதைக் காண முடிந்தது. தூரத்தில் தெரிந்த மலைச்சரிவில் மழை நீர் வழிந்து அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

அந்த மலைமுகப்பில் அமர்ந்து சுற்றிலும் விரித்திருந்த பச்சைப் பெருவெளியைப் பார்த்தவாறு நண்பர்களுடன் அரட்டை. சுப்ரமணியன் சாரின் பணி அனுபவங்கள், செல்வாவின் இமயமலை பயணம், இலக்கிய உரையாடல்கள். சிறந்த சுவையான கேரள உணவு. புட்டு, கடலைக்கறி, மரவள்ளி கிழங்கு, சம்பா அரிசிக் கஞ்சி, தேங்காய் மாங்காய் சம்மந்தி, சிக்கன் குழம்பு என இரண்டு நாட்களும் சேட்டன் அருமையாக சமைத்தார். மகேஸ்வரி பயம் தெளிந்து அதன் பிறகு ஜீப் கீழே  பொருட்கள் வாங்க செல்லும் போதெல்லாம் நானும் வருகிறேன் என்று ஆர்வமாக செல்லலானாள். அன்பரசி பறவைகளைத் தேடி கீழே மலைச்சரிவில் இறங்கத்  தொடங்கினாள். இந்த முறை மூன்று புதிய பறவைகள் கிடைத்தன என்று அவற்றின் படங்களைக் காட்டினாள். சீகார்ப் பூங்குருவி (Malabar whistling thrush), குங்குமப் பூச்சிட்டு (Orange Minivet),  சுடர் தொண்டைச்சின்னான் (Flame-throated bulbul). இவற்றுள் அடர் ஆரஞ்சு நிற உடலும் நீண்ட வாலும் கொண்ட குங்குமப் பூச்சிட்டு மிக அழகிய காட்டுப் பறவை.

அங்கிருந்து மறுநாள் திரும்பி வரும் வழியில் மொட்டகுன்னு வியூ பாயிண்ட் வந்தோம். பெரிய மரங்கள் இல்லாத முற்றிலும் மலை உச்சிகளாலும் புல்வெளி மூடிய பள்ளத்தாக்குகளாலும் ஆன அழகிய நிலம். மாலைக்குள் வற்கலை செல்லும் திட்டமிருந்ததால், மொட்டகுன்னுவின் புல் மடிப்புகளில் சிறிய நடை சென்று விட்டு விரைவில் கிளம்பிவிட்டோம். கோட்டயம் கொல்லம் வழியாக வற்கலை சென்று சேரும் போது கிட்டத்தட்ட மாலை ஆறு மணி.

சென்ற முறை செல்வா அங்கு வந்திருந்த போது தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றார். அந்த விடுதியின் மேலாளர் செல்வராணியை அடையாளம் கண்டுகொண்டார் (2019 நவம்பரில் வந்திருந்தீர்கள் அட்வொகேட்.) அந்த விடுதி கடற்கரையை ஒட்டி இருந்த மலைக்குன்றின் மேலே இருந்தது. அங்கிருந்து செங்குத்தாக கீழிறங்கும் நிலம் ஆழத்தில் கடற்கரையைத் தொடுகிறது. சுத்தமான வெண்மணல் விரிந்த கடற்கரை. நெடிய தென்னை மரங்களின் ஓலை அசைவுகள். பருந்துகள் வட்டமிட்ட வானம். கூட்டமாக பறந்த கரும்பருந்துகளையும் (Indian spotted eagle) செம்பருந்துகளையும் (Brahminy Kite) பார்த்தோம். நாங்கள் இருந்த மேட்டில் இருந்து பருந்துக்கூட்டங்களை அருகில் பார்க்க முடிந்ததால் அன்பரசி பரவசமானாள்.

இரவில் கீழே விரிந்து பரந்திருந்த நீரலைகளையும் அப்பால் தூரத்தில் சுடர்களென தெரிந்த கப்பல்களையும் பார்த்தவாறு முதல் தளத்தில் இருந்த அறையின் வெளியில் அமர்ந்திருந்தோம். காலை எழுந்து கடற்கரையில் ஒரு நீண்ட நடை. கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் செம்மண் நிறத்தில் சாய்ந்த குன்றுகள். நிறைய வெளிநாட்டவர்கள். இளைஞர்கள். கடலுக்குள் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். மதியத்திற்கு மேல் வற்கலையில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வந்தோம்.

அன்று ஊர் திரும்புவதாக ஏற்பாடு. வழியில் கரிக்ககம் சாமுண்டிகோயிலுக்கு சென்றோம். 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சாமுண்டி மூன்று வெவ்வேறு வடிவங்களில் வழிபடப் படுகிறார். விஷு பண்டிகை நாளாகையால் அன்று பரதநாட்டியம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சாமுண்டியின் மூன்று வடிவங்களையும் வெளிப்படுத்தி பெண்கள் ஆடிய நடனம் சில வினாடிகள் முழுமையாக ஆட்கொண்டது. நேரமாகியதால் மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். அன்பரசி கிருஷ்ணகிரிக்கு பஸ் ஏறினாள். என்னையும் செல்வராணியையும் மகேஸ்வரியையும் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சுப்ரமணியன் சார் விடைபெற்றார். மகேஸ்வரி கோவைக்கும் நானும் செல்வாவும் திருச்சிக்கும் ரயில் ஏறினோம்.

இந்த கடிதத்தை ஒரு வகையில் முழுப் பயணத்தையும் மொழி அனுபவமாக நினைவில் தொகுக்கும் பொருட்டே எழுதினேன். அங்கிருந்தோம் ஜெ. இன்று எண்ணும் போது மனதில் எழும் வரி அதுவே. பயணம் முடிந்து இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் கனவில் நிறைந்திருப்பவை அந்த மலைமுடிகளும் வானை நிறைத்து பரந்து நின்ற மேகக்கூட்டங்களும் தான். இந்த பயணத்தை சாத்தியப்படுத்தியதில் பெருமளவு செல்வாவுக்கும் சுப்ரமணியன் சாருக்கும் பங்குண்டு. இருவருக்கும் எனது நன்றிகள்.

– ம.பிரதீபாதேவி

***

அன்புள்ள பிரதீபா

பெண்கள் தாங்களே சேர்ந்து ஏற்பாடுசெய்துகொண்டு நிகழ்த்தும் பயணங்கள் பற்றி எப்போதுமே எழுதிவந்திருக்கிறேன். அந்தப்பயணங்களில் மட்டுமே இன்றைய சூழலில் பெண்கள் உண்மையான சுதந்திரத்தையும் கொண்டாட்டத்தையும் அடையமுடியும். பெண்கள் குடும்பத்துடன் செய்யும் எல்லா பயணங்களிலும் அவர்களுக்கு பொறுப்பு என்னும் சுமை வந்தமைகிறது.

ஜெ

***

முந்தைய கட்டுரை‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
அடுத்த கட்டுரைஇலையின் கதை- கடிதம்