வெண்முரசும் குழந்தையும்

ஓவியம்: ஷண்முகவேல்

அன்புள்ள ஜெ,

பிறந்த நாள் வாழ்த்துகள்.

இம்மடலுடன் அமுதினி உங்கள் பிறந்த நாளுக்கென வரைந்த ஓவியம் ஒன்றை இணைத்திருக்கிறேன். உடன் ஓவியத்திற்கான காயத்ரியின் விளக்கத்தையும்…

சித்தார்த்

குழந்தைகளுக்கு வெண்முரசை வாசித்துக் காண்பிப்பதில்லை. கீர்த்துவுக்கு 7 வயது தான் ஆகிறது. வெண்முரசின் மொழிவனத்திற்குள் அவளால் நுழைய முடிவதில்லை. அதனால், இரண்டு மூன்று அத்தியாயங்களாக நான் வாசித்து வைத்துக் கொண்டு, குஞ்சுகளுக்கு உணவூட்டும் தாய்ப்பறவை போல தினமும் இரவில் கதை சொல்வேன். அறையில் விளக்கணைந்ததும் அவர்களின் மூடிய கண்களுக்குள் அஸ்தினபுரியின் கதவுகள் விரியத் திறக்கும். துவாரகை, அலைத்துமிகளின் நடுவே வானுரசி எழத் தொடங்கும். காந்தாரம் சுடுமணல் பரப்பில் ஆவியெழ விரிந்திருக்கும். ஒவ்வொரு நாளும் தரைக்கீழ் பூமி, தலைக்கு மேல் வானமென  வெண்முரசும் அவர்களுடனேயே வாழ்வதும் வளர்வதுமாயிருக்கிறது.

இரு நாட்களுக்கு முன்பாக வெண்முகில் நகரம் – 83 வது அத்தியாயத்தில் கீழ்வரும் பத்தியை வாசிக்கும் போது தோன்றியது, இதைச் சொல்ல முடியாதென. இதுவென் சொல்லில் முடியாதென.

படிப்பதை நிறுத்தி விட்டு, “அம்மு இதைக் கேளேன். கீர்த்து நீயும் தான்” என்றபடி வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தேன்.

பால்ஹிக இளவரசன் பூரிசிரவஸ் முதன் முதலாய் கண்ணன் குழலூதுவதைக் கேட்கிறான்.

“அதன்பின்னர்தான் அவன் குழலிசையை செவிகொண்டான். அது குங்கிலியச்சுள்ளியின் புகை என சுருளாகி எழுந்து மெல்லப்பிரிந்து பரவிக்கொண்டிருந்தது. அவன் நடை தயங்கியது. நீரில் விழுந்த குருதித்துளி. அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம். கொடிவழியாக செல்லும் செவ்வெறும்பு நிரை. இளவெயிலில் ஆடும் சிலந்திவலை. மலைமடியில் விழுந்த முகில்பிசிறு. பாலையில் தன்னந்தனியாக ஓடும் வெண்புரவி. குட்டியானையின் குறுவால் சுழற்சி. பனிப்புகை படரும் மலைச்சரிவுகள். தேவதாரு. தனித்த பசுங்கோபுரமென எழுந்த தேவதாரு. அது சூடிய ஒளிமிக்க வானம். தனிமையென விரிந்த வானம். தித்திக்கும் வானம். மென்மையான குளிர்ந்த வானம். நெடுநேரமென காலம் சென்றபின்னர் மீண்டபோது அவன் திகைப்புடன் உணர்ந்தான், அந்த இசையை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.”

வாசித்து நிறுத்தியதும் அம்மு, மெய்சிலிர்த்துக் கைகளை முன்னால் நீட்டிக் காண்பித்தாள். “வாவ்! அம்மா எனக்கு goosebumps வருது. நான் ஜெயமோகன் மாமாவை நேர்ல பார்த்து congratulate பண்ணனும். எப்டி இப்டிலாம் எழுத முடியுது?” என்றாள்.

பினாத்தலுக்கு பக்கத்தில் வரும்படியாக இரண்டு நாட்களுக்கு இந்தப் பத்தியையே சிலாகித்துக் கொண்டிருந்தவள், இன்று அவர் பிறந்தநாள் என்று தெரிந்ததும் இதை பரிசாக்கிக் கொடுத்திருக்கிறாள்.  கலைமகள் கைப்பொருளாயிருக்கும் அவர் எழுத்திற்கும் அவருக்கும் அன்புடனும் வணக்கங்களுடனும் எங்களது மனம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

காயத்ரி

முந்தைய கட்டுரைஅஞ்சலி:டிராஃபிக் ராமசாமி
அடுத்த கட்டுரையானைடாக்டர்- கடிதம்