அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
“இந்திய யானைகள் சில நேரங்களில் விம்மி அழுவதாகச் சொல்கிறார்கள்’ என்கிற சார்லஸ் டார்வினின் ஓர் வாக்கியத்தை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. மனது முழுக்க அவ்வரி மழைநனைந்த இலையீரம் போல ஒட்டிக்கொண்டது. யானைகள் விம்மி அழுகிற சித்திரத்தை மனதுள் காட்சிப்படுத்தவே அச்சமாகவே உள்ளது.
ஆனாலும், யதார்த்தத்தில் ஏதோவொருவகையில் மாதத்திற்கு குறைந்தது இரண்டு செய்திகளாவது ஏதாவதொரு யானையின் உயிரிழப்பு பற்றியதாக இருக்கிறது. ஓர் பேருயிர் இனம், இந்த பூமியில் தன்னினத்தைச் சுருக்கிக்கொள்ளும் அபாயகாலத்தின் சாட்சிகளாக நாம் இருந்துவருகிறோமோ என்கிற பதட்டமும் அடிக்கடி அகத்தில் வந்தெழுந்து அமிழ்கிறது.
அதேபோல, அண்மையில் தெருவில் நடக்கையில் விநாயகர் கோவிலின் ஒலிபெருக்கியில் ஒரு பக்திப்பாடல் ஒலிப்பதைக் கேட்க நேர்ந்தது, “வானத்தின் மேகத்தில் தோன்றியது ஒரு யானை முகம், நானதன் உருவத்தில் கண்டேன் ஒரு குழந்தை முகம்”. எளிமையான ஒரு இசைவரி, ஆனால் யானைகளின் முகத்தில் இயல்பில் குடிகொண்டிருக்கும் ஓர் குழந்தை முகத்தை திரும்பத் திரும்ப மனதுக்குள் இவ்வரி உருவகிக்கிறது.
நவீன அறிவியலின் எல்லா அறிதலோடும் பழக வாய்ப்பு கிடைத்த ஒரு குழந்தைக்குள்ளும் ‘யானை’ என்பது வியந்து அதிசயக்கத்தக்க கானுயிர் என்றே சிந்தைக்குள் நிலைகொள்கிறது. இக்கடிதம், உங்களுடைய ‘யானை டாக்டர்’ கதையின் அச்சுநீட்சி தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாசிப்பு மனங்களைச் சென்றடைந்து வருகிறது என்பதை உங்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவிக்கும் பொருட்டே.
நல்விழைவின் நிறைவேறலாக, யானை டாக்டர் புத்தகம் தன்னறம் நூல்வெளி மூலமாக மூன்றாம் பதிப்பு அடைந்து வெளிவந்துள்ளது. ஒவ்வொருமுறை பதிப்பு அடைந்து வெளிவரும்போதும் இந்நூல் உருவாக்கும் மனவெளி என்பது பட்சிகளும் பூச்சிகளும் நிரம்பிய வனவெளி போல இயற்கையின் எல்லையின்மைக்குள் இட்டுச் செல்கிறது. ஒவ்வொரு வாசிப்பிலும், டாக்டர் ‘கே’வும், யானைகளும் வெவ்வேறு விதமாக மனதுக்குள் துலங்கிவருவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.
ஒரு கதை, கிட்டத்தட்ட காலம் படிந்த தொன்மமென உருவாகுவதை சமகாலத்தில் நாங்கள் யானை டாக்டர் வழியாகத்தான் நேரிலறிகிறோம். பிறந்தநாள் அன்பளிப்பாக, திருமணவிழா தாம்பூலப்பையோடு ஒரு புத்தகமாக, சூழலியலுக்குள் அறிமுகமாகும் முதல்கட்ட வாசகர்களின் பெருந்திறவுவாசலாக, பள்ளிக்கல்வியில் பாடத்திட்டமாக, சொல்லப்போனால் பாணர்கள் பாடும் வாழ்வுக்கதை போல ஏதோவொருவிதத்தில் யானை டாக்டரின் கதை மீளமீள தமிழ்ச்சூழலில் முளைவிட்டு வனமாகிக்கொண்டே இருக்கிறது.
யானைக்கும் மனிதனுக்குமான உறவுபற்றி இனி தமிழில் எழுதப்படுகிற கதைகளுக்கு இருக்கும் சவாலே, இக்கதையின் தாக்கத்தையும் தழுவலையும் கடந்து வாசக மனதில் பதிவதுதான். இந்த நூற்றாண்டின் இணையற்ற நூறு கதைகளில் ஒன்றென இக்கதை, இந்திய மொழியின் பிராந்திய மொழிகளில் அச்சாகி நிலைபெறும் நற்கனவு ஒன்று எங்களுக்கு உள்ளது. எதிர்வரும் காலம் அது நிச்சயம் நிகழும்.
இம்மூன்றாம் பதிப்பிற்கான யானைகள் சார்ந்த ஒளிப்படங்களாக, சர்வதேச ஒளிப்படக்கலைஞர் செந்தில்குமரன் அவர்கள் காட்சிப்படுத்திய யானை ஒளிப்படங்களை இந்நூலில் பிரசுரித்துள்ளோம். யானைகளைப்பற்றி செந்தில் அண்ணன் அறிந்துவைத்துள்ள அனுபவக்கதைகளின் தொகுப்பும் யானை டாக்டர் அளவுக்கு இன்றியமையாதவை என்றே கருதுகிறோம்.
யானை – பாகன் உறவு, யானை – மனித வாழ்வெல்லை மோதல் உள்ளிட்ட காட்சிச் சித்திரங்களை ஆவணரீதியாகவும் இவர் ஒளிப்படமாக்கி வருகிறார். தன்னுடைய ஒளிப்படக்கலைக்காக சர்வதேச விருதுகள் பல வென்றுள்ளார். இப்புத்தகத்திற்காக ஒளிப்படங்களை தந்துதவிய அவரின் நிறையன்புக்கு என்றைக்கும் தன்னறத்தின் நன்றிகள் சென்றடைக.
வரலாற்றில் சிலசமயம் மனிதர்களே விழுமியங்களாக எஞ்சுவதுண்டு. அவ்வாறாக, மனமெஞ்சிய நற்பெருமனிதர் டாக்டர்.கே அவர்களின் வாழ்வையொட்டி எழுதப்பட்ட இக்கதை, தமிழ்ச்சூழலில் மிகவும் அதிகமாக பகிரப்படும் மக்கள்பிரதியாக வரமடைந்துள்ளது. தமிழில் நிறைய பதிப்பகங்கள் தன்னளவில் இக்கதையைத் தங்கள் சித்தாந்த இடரெல்லைகளையும் கடந்து பொதுசன வாசிப்புக்கான நல்லாக்கம் என கட்டமைத்து வருகிறார்கள்.
இப்புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருத்தர் உள்ளத்திலும் ஓர் உருப்பெருங்காடு விதைவிட்டெழுகிறது. தமிழில் இப்படைப்பு நிகழ்வதற்கான காரணகர்த்தாவாக இருந்த உங்கள் புனைவுமனத்தின் கனவெழுச்சி என்றும் எங்களின் வணக்கத்திற்குரியது.
இப்படிக்கு,
சிவராஜ்
தன்னறம் நூல்வெளி
www.thannaram.in