மிகுபுனைவுகள், கனவுகள்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

நான் தங்களது இளம் வாசகன்.தாங்கள் எழுதிய சிறுகதைகளில் கையளவு , முதற்கனல் இரு பகுதிகள், நீலம் கொஞ்சம், விஷ்ணுபுரம் கொஞ்சம் வாசித்திருக்கிறேன்.

மற்றபடி நான் அதிகம் வாசித்தது தங்கள் கட்டுரைகளை தான்.இலக்கிய புனைவுக்கு இன்னும் பழகிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம், நாவல் குறித்த தங்கள் பார்வைகள், வாதங்கள் ஓர் அளவுக்கேனும் புரிந்திருக்கிறது.

நாவல் என்பது கதையளக்கும் பகல் கனவாகவும் இல்லாமல், தகவல்களின் ஆவணத்தொகுப்பாகவும் இல்லாமல் நிகர்ஆவணமாக வரலாறுடன் பிணைந்த புனைவாக இருக்க வேண்டும் என புனைவில் வரலாற்றின் முக்கியத்துவத்தை சொல்லி இருக்கிறீர்கள் (தாங்கள் ஒரு இடத்தில் சொன்னவற்றை நான் புரிந்துகொண்டவாறு)

புனைவில் வரலாறை பின்புலமாக கொண்டிருக்கும் தல்ஸ்தோயின் “போரும் அமைதியும்”, தஸ்தயேவஸ்கியின் ” கரம்ச்சோவ் சகோதரர்கள்” இவற்றை, உதாரணத்திற்குரிய சிறந்த நாவல்களாக (பிரபலமானவை) குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

கனவுரு புனைவு நாவல்  (High and Epic Fantasy fiction)போன்ற வகைகளில் இருக்கும் நாவல்கள் பலவற்றை அறிந்திருப்பீர்கள். அதன் உதாரணங்களாக  ஜெ கே ரௌலிங்-இன் “ஹார்ரி பாட்டர்” தொடர், ஜே ஆர் ஆர் டோல்கியின்-இன் “லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்” தொடர். ஹார்ரி பாட்டர் epic low fantasy. நிகழ் உலகோடு தொடர்புடைய கற்பனை உலகில் நடைபெறும் பெரும் புனைவு.

‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ epic and high fantasy. முற்றிலும் கற்பனையால் எழுப்பப்பட்ட வேறு ஒரு உலகில் நடைபெறும் பெரும்புனைவு .

இந்த படைப்பு டோல்கியின்- இன் பிரம்மாண்ட பகல்கனவு. வெண்முரசு போல் காலம் காலமாய் இயங்கிய தொன்மத்தின் வரலாற்றின்  பின்புலமும் கிடையாது.

‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ வரலாறு என எதுவும் இல்லாதது. ஆயினும் பிரிட்டன், அதன் அரசியல், வரலாறு, கிறித்தவ மதம், நிலஅமைப்பு ஆகியவை கனவுருமாறி- ‘அதிகார மோகம்’ எனும் அதன் கதைக்கருவில் கலந்து, உச்சக்கட்ட கற்பனை எழுவித்த மாபெரும் உலகமாக, அதன் யுத்தமாக வெளிப்பட்டிருக்கும். வரலாற்றை முற்றாக அது துறக்கவில்லை. அதிகாரமோகத்தின் படிமமாக அந்த கதையை நகர்த்தும் ஒரு மோதிரம் அமைந்திருக்கும். நாவலுக்குரிய அம்சங்கள் நிறைய அதில் அமைந்திருக்கும்.(நினைக்கிறேன்)

அதேபோல்,

உர்சுலா கே ல கென் (Ursula K le Guin)

-இன் “எ விஸார்ட் ஆஃப் எர்த்ஸீ ” சமநிலை, தாஓயிச தத்துவங்களை கருவாக கொண்டிருக்கும் ஒரு high fantasy புனைவு. இதிலும் வரலாறு விடுபடுகிறது. எனக்குப்பட்டவரைக்கும் நாவல்-இன் பல அம்சங்களையும் இது கொண்டிருக்கிறது.

முடிவாக,

தாங்கள் நாவல் குறித்து கூறிய “வாழ்க்கையை தொகுத்துக் காட்டி பார்வையை அளித்தலை”, கற்பனை எழுவித்த இரண்டாம் உலகத்தில் டிராகன்கள், கோட்டைகள், குள்ளர்கள், மந்திரவாதிகள், மாயசக்திகள், மாயகாடுகள்- இவை மூலம் செய்யலாமா? அது மேலைப்படிமங்கள் என்றால் நம் கலாச்சார படிமங்களைக்கொண்டு படைக்கலாமா?அது எந்த அளவுக்கு realist நாவல்கள் செய்யும் தாக்கத்தை ஏற்படுத்தும்? முழு கற்பனை என்பதால் படைப்பாக்கம் மற்றும் கற்பனையாலான படிமங்களின் சாத்தியங்கள் அதிகமாகுமா?

அன்புடன்,

சஃபீர் ஜாசிம்

அன்புள்ள சஃபீர்

முதல் கேள்வி மிகுபுனைவு [Fantasy] எதற்காக எழுதப்படுகிறது? முன்னரே இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். உலக இலக்கியத்தில் நமக்கு கிடைக்கும் படைப்புக்களில் பெரும்பகுதி மிகுபுனைவுகளே. யதார்த்தவாதம் என்பது இருநூறாண்டுகள் வரலாறுள்ள ஒரு குறிப்பிட்ட வகையான அழகியல் மட்டும்தான்.

யதார்த்தவாதம் ஏன் உருவானது? அது நவீன ஜனநாயகத்துடன் சேர்ந்தே தோன்றியது. இதுதான் வாழ்க்கை என்று அது காட்ட விரும்பியது. அன்றாடத்தை, அதை இயக்கும் விசைகளை தொகுத்து முன்வைக்க முயன்றது. ஆகவே  ‘உள்ளது உள்ளபடி’ என்னும் பாவனையில் அது புனைவை அமைக்கலாயிற்று.

அதற்கு முன்னும் பின்னும் மிகுபுனைவுகள் ஏன் எழுதப்பட்டன? அவற்றுக்கு இதுதான் வாழ்க்கை என்று காட்டும் நோக்கம் இல்லை. மாறாக இதுதான் வாழ்க்கையின் சாரம் என்று காட்ட அவை விரும்பின. விழுமியங்களை, தரிசனங்களை இலக்கியம் வழியாக முன்வைக்க முயன்றன. அதற்குத் தேவை அன்றாடச் சித்திரம் அல்ல. குறியீடுகள், படிமங்கள். அவற்றை உருவாக்கும் ஒரு களமாகவே அவை மிகுகற்பனையைக் கண்டன.

மிகுகற்பனை வாழ்க்கையை குறியீடாக்குவதனூடாக உருவாவது. வாழ்க்கையின் காட்சிகள், நிகழ்வுகள், ஆளுமைகள் மேல் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் ஏற்றிவைக்கும்போது அவை குறியீடாக ஆகின்றன. அவ்வாறு அர்த்தமேற்றப்பட்ட அடையாளங்களையே நாம் படிமங்கள் என்கிறோம்.

மிகுகற்பனை பலவகை. மிகுகற்பனை இயல்பாகச் செல்லுபடியாகக்கூடியது சென்றகாலக் கதைகளில்தான். ஆகவேதான் வரலாறு மிகுகற்பனைகளால் ஆனதாக மாறியது. அதில் தொன்மங்கள் விளைந்தன. மாறாக அன்றாடத்தையே மிகுகற்பனையாக ஆக்குவதை நாம் மாயயதார்த்தம் என்கிறோம்.

மிகுகற்பனை பலவகை. தொன்மங்களில் இருந்து உருவாக்கப்படும் மிகுகற்பனைகளையே நாம் பெரும்பாலும் காண்கிறோம். விஷ்ணுபுரம், வெண்முரசு போன்றவை அத்தகையவை.அன்றாடத்தில் இருந்து உருவாக்கப்படுபவை மாயயதார்த்தம் எனப்படுகின்றன. அறிவியல் புனைகதைகளில் அறிவியலின் சாத்தியங்களைக்கொண்டு மிகுகற்பனைகள் உருவாக்கப்படுகின்றன. அறிவியல்புனைகதைகளில் ஒரு பகுதியாகிய எதிர்காலத்தன்மை கொண்ட கதைகளும் ஊகக்கதைகளும்கூட மிகுகற்பனைகளே.

நவீன இலக்கியம் தோன்றியபோதே இவை அனைத்துக்கும் முன்மாதிரிகள் உருவாகிவிட்டன. ராபின்ஸன் குரூசோ [ டானியல் டீஃபோ] பிராங்கன்ஸ்டைன்[மேரி ஷெல்லி] நிலவுக்குப் பயணம் [ஜூல்ஸ் வெர்ன்] போன்றவை வெவ்வேறு வகையான அறிவியல் மிகுபுனைவுகளை உருவாக்கின.  கலிவரின் பயணங்கள் [ஜோனத்தன் ஸ்விப்ட்] ஆலிஸின் அற்புத உலகம் [லூயி கரோல்] போன்றவை மிகுகற்பனை புனைவுகளின் முன்மாதிரிகள்.

இவற்றில் நவீன இலக்கியம் உருவாக்கிய மிகைக்கற்பனைக் கதைகளை நவீனப்புராணங்கள் எனலாம். அவற்றில் முன்னோடியானது பிராம் ஸ்டாக்கரின் ‘டிராக்குலா’. அதிலிருந்து தொடங்கி ஏராளமான மிகுபுனைவுகள் மேலை இலக்கியத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றுக்குள்ளேயே பல உட்பிரிவுகளும், காலகட்டங்களும் உண்டு. அந்த வகையில் உருவானவையே லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஹாரி போட்டர் போன்றவை.

அவை நாம் நவீனப் புராணங்கள். நாம் எண்ணுவதுபோல அவை வேரற்றவை அல்ல. அவை அந்தரத்திலும் உருவாகவில்லை. அவற்றுக்கு ஐரோப்பிய நிலத்தில் பண்பாட்டு முன்வடிவங்கள் உண்டு. அவை உருமாற்றப்பட்ட தொன்மங்கள்தான்.

ஐரோப்பியநிலம் ஒரு காலத்தில் செழிப்பான ‘பாகன்’ பண்பாடு கொண்டதாக இருந்தது. பாகன் பண்பாடு என்பது பழிக்கும் கோணத்தில் கிறிஸ்தவம் இட்ட பெயர். உண்மையில் அது ஒன்றல்ல. தத்துவச்செழுமை கொண்ட கிரேக்கமதம் முதல் நாட்டார்மதங்கள் வரை அதில் பல நிலைகள் உண்டு.

வரலாற்றை நோக்கினால் பாகன் பண்பாடு கிபி ஐந்தாம்நூற்றாண்டுக்குள் ஐரோப்பாவில் முழுமையாக அழிக்கப்பட்டது. ஆனால் எந்தப் பண்பாடும் முழுமையாக அழியாது . பாகன் பண்பாட்டின் ஒருபகுதி உருமாறி கிறிஸ்தவத்திற்குள் குறியீடுகளாக சடங்குகளாக விழாக்களாக நீடித்தது. இன்னொரு பகுதி ரகசியமாக நீடித்தது.

அந்த ஒளிந்திருந்த பாகன் பண்பாட்டிற்கு எதிராக ஐரோப்பியக் கிறிஸ்தவம் நிகழ்த்திய கொடிய ஒடுக்குமுறை மானுடகுலத்தின் இருண்ட பக்கங்களில் ஒன்று. சூனியக்காரிகளை கொல்வது, மதவிசாரணைகள் பல நூற்றாண்டுகள் அந்த வன்முறை நீடித்தது. அந்த மறைந்திருந்த பாகன் பண்பாடு கொடிய பேய்களின் உலகமாக சித்தரிக்கப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டின் இறுதி முதல் பாகன் பண்பாட்டை பேய்களின், மந்திரங்களின் உலகமாக காட்டி எழுதப்பட்ட இலக்கியங்கள் உருவாயின. பொதுவாக அவை கோதிக் இலக்கியம் எனப்பட்டன. அவற்றின் மிகச்சிறந்த உதாரணம் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா. டிராக்குலா பிரபு உண்மையில் ஒரு பாகன் தெய்வத்தின் கொடிதாக்கப்பட்ட வடிவம்தான். அதைப்பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கிறிஸ்தவத்தின் வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் உருவான சீர்திருத்தவாத கிறிஸ்தவம் ஒரு திருப்பு முனை. கடவுளின் புவிசார் உருவமாகவே திகழ்ந்த திருச்சபை என்னும் அமைப்பின் அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டது. அதேபோல இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு உருவான அறச்சிக்கல்கள் இரண்டாவது திருப்புமுனை. யூதப்படுகொலைகளுக்குப் பின் கிறிஸ்தவ மதிப்பீடுகள் என்பவை பொய் என ஐரோப்பியர்களில் கணிசமானோர் உணரத் தலைப்பட்டனர்.

அவர்கள் கிறிஸ்தவத்தால் ஒடுக்கப்பட்ட பாகன் பண்பாடுகளை தேடிச்சென்றனர். ஏற்கனவே சீர்திருத்தவாதக் கிறிஸ்தவத்தின் எழுச்சியின்போது கிரேக்க, ரோமானிய பண்பாடுகள் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டன. ஐம்பதுகளுக்குப் பின் ஐரோப்பாவின் பிற பாகன் பண்பாடுகள் மேல் தீவிரமான ஈடுபாடு உருவானது.

அந்த ஈடுபாட்டின் விளைவே லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஹாரிபாட்டர் போன்றவை. அவற்றுக்கு வெவ்வேறு பாகன் தொன்மங்களுடனான உறவு நிறைய எழுதப்பட்டுள்ளது. ஹாரிபாட்டர் தெளிவாகவே ஒரு  ‘புதைந்த’ உலகுக்கு கூட்டிச் செல்கிறது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஒரு இணைப்புராணத்தை உருவாக்கிக் காட்டுகிறது.

ஆனால் லார்ட் ஆஃப்த ரிங்ஸ், ஹாரிபாட்டர் இரண்டுக்குமே இலக்கியமதிப்பு இல்லை. அவை சிலதலைமுறைகளை கடந்துசெல்ல முடியுமென்றால் வெறும் தொன்மமாக நீடிக்கும்- டிராக்குலா போல.

ஏனென்றால் இவை அந்த பாகன் தொன்மங்களின் நீட்சிகளை, நிழலுருக்களைக் கொண்டு ஒரு கேளிக்கையுலகையே கட்டமைக்கின்றன. அடிப்படையான வினாக்களை எழுப்பவில்லை. விழுமியங்களை மறு ஆக்கம் செய்யவில்லை. இலக்கியத்தின் இலக்கு என்பது வாழ்க்கைசார்ந்த, காலம் வெளி சார்ந்த அடிப்படை தத்துவ வினாக்களை, மெய்யியல் புதிர்களை எழுப்பிக்கொள்வதும் விழுமியங்களை மறுவரையறை செய்வதும்தான்.

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் வழக்கமாக பழைய புராணங்களில் இருக்கும் அதிகாரம், அதற்கு எதிரான போராட்டம், நன்மைதீமை முரண்பாடு என்னும் எளிய சூத்திரங்களுக்குள்ளேயே சுழல்கிறது. ஹாரிபாட்டர் இன்னும் ஒரு படிகீழே. இலக்கியத்திற்கு இன்னும் ஒரு படி மேலே செல்லவேண்டியதுண்டு. அது புதிய புராணங்களை மட்டும் உருவாக்கினால் போதாது, அந்த புதிய புராணங்கள் குறிப்புணர்த்தும் புதிய தரிசனங்களை, தத்துவங்களை, உணர்வுநிலைகளையும் உருவாக்கவேண்டும்.

அதற்கு உதாரணமாகச் சொல்வதென்றால் யோஸ் சரமாகோவின்  பிளைண்ட்னெஸ் [ Blindness ,José Saramago]ஐ குறிப்பிடலாம். அது வெறும் நவீனப்புராணம் மட்டுமல்ல. அது ஒரு இந்த வாழ்க்கை பற்றிய புதிய கேள்விகளை, தரிசனங்களை உருவாக்குகிறது. உலகமெங்கும் பலமொழிகளில் அந்நாவலின் மையத்தொன்மத்தை தழுவியும் விரித்தும் நாவல்கள் வந்துள்ளன. மலையாளத்தில் ஒரு சினிமாவே வந்தது குரு.

இந்தியாவில் நாம் பழைய புராணங்களின் மறு ஆக்கமாக மிகுகற்பனைக் கதைகளை எழுதலாம். நவீனப்புராணங்களை உருவாக்கலாம். அவற்றில் நம் கற்பனையை பறக்கவிடலாம்- ஆனால் எப்படிப் பறந்தாலும் அதன் வேர் இங்குள்ள பழைய தொன்மங்களில் இருக்கும். மறைமுகமாக அல்லது தலைகீழாக.

எழுதுவதன் நோக்கமே முக்கியமானது. அதனூடாக ஆசிரியனாக நீங்கள் இலக்காக்குவதென்ன? வெறுமொரு புனைவு வெளியா? எனில் நீங்கள் இலக்கியத்துள் நுழையவில்லை. அப்புனைவுவெளியில் நீங்கள் புதிய படிமங்களை, உருவகங்களை, தொன்மங்களை உருவாக்கி அதனூடாக மெய்யியல், தத்துவ, விழுமிய வினாக்களை எழுப்பிக்கொள்கிறீர்கள், மறுவரையறை செய்கிறீர்கள் என்றால் மட்டுமே அதற்கு இலக்கிய மதிப்பு

உண்மையில் இந்தவகை மிகுபுனைவுகளை நோக்கி நாம் செல்லவேண்டிய காலம் வந்துள்ளது. ஏனென்றால் இன்று அன்றாடத்தில் எழுத பெரிதாக ஒன்றுமில்லை. புறவாழ்க்கை ஊருக்கு ஊர் இடத்திற்கு இடம் பெரிதாக மாறுபடுவதில்லை. உறவுகளும், வாழ்க்கைத் தருணங்ளும், உணர்வுநிலைகளும் ஏறத்தாழ ஒன்றுபோலவே உள்ளன ஆகவே யதார்த்தவாத எழுத்து சலிப்பூட்டுகிறது. காமம் வன்முறை ஆகியவற்றைக்கொண்டே அவற்றை நிறைக்கவேண்டியிருக்கிறது

யதார்த்தச்சூழலில் இருந்து படிமங்களை உருவாக்குவது கடினமாகிக்கொண்டே செல்கிறது. புழக்கப்பொருட்கள் கொஞ்சம் அகன்றால் மட்டுமே அவற்றை படிமங்களாக ஆக்கமுடியும். அந்த விலக்கம் நமக்கு இன்று அவற்றுடன் இல்லை.

அத்துடன் இன்றைய அதிநுகர்வுச்சூழல் எல்லா பொருட்களையும் வணிகப்படிமங்களாக ஆக்கி ஊடகங்கள் வழியாக நிலைநிறுத்துகிறது. அந்தப் படிமங்களை உடைத்து நம்மால் புதிய ஒரு படிமத்தை பொருட்களில் இருந்து உருவாக்க முடியாது.

ஆகவே மிகுபுனைவு நமக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஒரு கனவு வெளி அது.

ஜெ

விரிவெளி
மரபை மறுஆக்கம்செய்தல்
முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 7
அடுத்த கட்டுரைஇன்றிருந்தேன்…