‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

வெண்முரசு’ நாவல் தொடரில் 10ஆவது நாவல் ‘பன்னிருபடைக்களம்’. என்னைப் பொருத்தவரை இது தெய்வங்களின் ஆடலரங்குதான். நற்தெய்வங்களும் தீத்தெய்வங்களும் சூழ்ந்து நின்றாடும் பெருங்களம் இது. அவற்றின் ஆடலுக்கு ஏற்ப மானுட எண்ணங்கள் தொடர்ந்து அலையாடுகின்றன.

மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் சூதாட்ட நிகழ்வே மையப்புள்ளி. ஏறத்தாழ வெண்முரசிலும் இதுவே மையமாகிவிடுகிறது. 26 நாவல்களைக் கொண்ட இந்த வெண்முரசில் 10ஆவது நாவலான இந்தப் ‘பன்னிருபடைக்களம்’ நாவலில்தான் சூதாட்டக்களம் அமைந்து, தொடங்கி, நிறைவுறுகிறது. ஒட்டுமொத்த மகாபாரதக் கதைமாந்தர்களின் எண்ணவோட்டம் திசைமாறும் பெருந்திருப்புமுனையாக இந்தச் சூதாட்டக்களமே அமைந்துவிடுகிறது.

இதுவரை ‘வெண்முரசு’ நாவல்தொடர்களின் வழியாக வாசகருக்கு அறிமுகமாகி, வளர்ந்து, தனித்தனி மனிதர்களாக உடலாலும் உள்ளத்தாலும் உருக்கொண்டு, வாசகரின் நெஞ்சில் பண்பாளர்களாக, அன்பாளர்களாக அமர்ந்திருந்த அனைத்துக் கதைமாந்தர்களும் தங்களின் உள்ளத்தையும் பண்புநலத்தையும் மாற்றிக்கொள்ளும் ஓர் ஒப்பனையறையாகவே இந்தப் ‘பன்னிருபடைக்களம்’ நாவல் அமைவுகொள்கிறது. ஆம்! மாபெரும் ஒப்பனைதான். உலகமே மாபெரும் ஒப்பனைக்கூடம்தானோ?

இந்த நாவலில்தான் தேசிநாட்டரசர் சிசுபாலனின் முழு வாழ்வும் கூறப்படுகிறது. ஒருவகையில் அவன் பூரிசிரவஸ் போலத்தான் இருக்கிறான். தன்னடையாளம் பெற விழையும் பெருந்துடிப்பும் தன்னைப் பற்றிய மிகைநம்பிக்கையும் நுண்ணறிவற்ற செயல்பாடுகளும் என அவன் பல வகையில் பூரிசிரவஸாகத்தான் எனக்குத் தெரிகிறான்.

திருதராஷ்டிரர் தொட்டும் நுகர்ந்தும் பிறரின் உள்ளத்தை அறிபவர். அதனால்தான் அவரால் சிசுபாலனின் தலையைத் தொட்டதும் அவனின் மனநிலையை உய்த்தறிந்துகொள்கிறார்.

“சிசுபாலன் வணங்கியபோது அவன் தலைமேல் கைவைத்த திருதராஷ்டிரர் விழிகள் அதிர சுட்டவர் போல உடனே கையை திரும்ப எடுத்துக்கொண்டார். உன் தலை அதிர்கிறதுஎன்றார். அரசே!என்றான். உன் தலை தொடுகையில் வெட்டுக்கிளியை தொடுவதுபோல் உணர்கிறேன். அதிர்ந்துகொண்டிருக்கிறதுஎன்றார் திருதராஷ்டிரர். ஏற்கெனவே உதிர்ந்து சிலந்தியிழையில் தவிக்கும் இறகு என்று தோன்றுகிறது…” சிசுபாலன் என்ன சொல்கிறீர்கள்?” என்றான். உனக்கு உடல் நலமில்லையா என்ன?” சிசுபாலன் இல்லை, நன்றாக இருக்கிறேன்என்றான் குழப்பத்துடன். கனவுகள் காண்கிறாயா?” என்றார் திருதராஷ்டிரர். ஆம், நான் எப்போதும் கனவுகளில் உழல்கிறேன்.திருதராஷ்டிரர் அறியேன். நீ நலமாக இல்லை. உன்னுள் ஏதோ நிகழ்கிறது. நீ அதிர்ந்து கொண்டிருக்கிறாய்என்றார்.

ஆம்! இந்த அதிர்வு அவன் பிறந்தபோதிருந்தே தொடங்கிவிட்டது. இறுதியாக இளைய யாதவரின் படையாழியால் கழுத்தறுபட்டபோதுதான் அந்த அதிர்வு நின்றது. வாழ்க்கை முழுக்க புறத்தால் வலிப்புநோய்கொண்டவனாகவும் அகத்தால் அதிர்பவனாகவுமே இருந்துவிட்டான் சிசுபாலன்.

இந்த நாவலில் மற்றொரு சிறப்பு ‘இரட்டையர்கள்’. சமக்ஞை-சாயை, ரம்பன் – கரம்பன், நரன் – நாரணன், ஹம்சன் – டிம்பகன், சலன் – அசலன், அணிகை – அன்னதை, அஸ்வினி தேவர்கள் என இந்த நாவல் நெடுகிலும் இரட்டையர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வரலாறும் வாழ்வும் அதிகற்பனையாக மாறி வாசகரைத் திகைக்கச் செய்கின்றன.

சகுனியின் நாற்பதாண்டுக்காலத் தவமும் கௌரவர்களின் ஒட்டுமொத்த விழைவுகளும் இணைந்து உருவான இந்தப் பன்னிருபடைக்களத்தில், ஊழின் பெருங்கூத்து நிகழ்கிறது. அதைத் தள்ளி நின்று கவனிப்போருக்கு அது ஒரு பெருங்களியாட்டு. அதில் களமிறங்கியவர்களுக்கோ அது ஒட்டுமொத்த வாழ்க்கைப்பாடு.

காலந்தோறும் ‘சூதாட்டம்’ ஒரு பெரும்போதைதான். நிறைவடைய முடியாத, கடந்துசெல்ல முடியாத பேராசைப்போதை. சூதாட்டத்தை மகிழ்வுக்காக ஆடினாலும் வஞ்சத்தின் பொருட்டு ஆடினாலும் அது போதையைத் தரக் கூடியதுதான். இனிப்புக்கட்டியை எந்தப் பக்கமிருந்து கடித்தாலும் இனிக்கவே செய்யும். அதுபோலத்தான் சூதாட்டமும்.

சூதாட்டத்தில் ஒருமுறை வென்றவர் மீண்டும் களமாடுவார். சூதாட்டத்தில் ஒருமுறை தோற்றவர் தான் வெற்றிபெறும்வரை மீண்டும் மீண்டும் களமாடிக்கொண்டே இருப்பார். சூதாட்டத்திலிருந்து முற்றாக வெளியேற வேண்டுமெனில், இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று தன்னிடமிருப்பன அனைத்தையும் இழக்க வேண்டும். இரண்டு தனக்கு எதிர்நின்றாடுபவரிடம் இருக்கும் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும்.

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘சூதாடி’ நாவலின் வழியாக நாம் மிகத் துல்லியமாகச் சூதாடியின் உளப்போக்கினை அறியலாம். சூதாட்டத்தின் வரையறைகளுக்குத் தர்மர் மட்டும் என்ன விதிவிலக்கா? தருமரின் உள்ளத்தையும் சூதாட்டம் தன்போக்கில் ஈர்த்துக்கொள்கிறது. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’. உண்மைதான். ஆனால், இங்கோ இங்குத் தர்மமே தன் தலையைச் சூதின் வாய்க்குள் திணித்துக்கொண்டது.

ஒவ்வொரு சிறு சிறு விஷயத்துக்கும் மணிக்கணக்காக அரசுசூழும் தர்மர், இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்த விதுரர் அவரிடம், ‘அஸ்தினபுரிக்கு வந்து கௌரவர்களோடு சூதாடு’ என அழைக்கும்போது உடனே ஒப்புக்கொள்கிறார்.

விதுரர் தர்மரைச் சந்திக்கும் விநாடிக்கு முன்புவரை தருமரின் நெஞ்சு பெரும்போரைத் தவிர்க்கும் வழிமுறைகளைப் பற்றியே எண்ணி, ஏங்கிக் கொண்டிருந்தது. அதனால்தான் விதுரரின் இந்தச் சொற்கள் தருமரின் எண்ணச் சுழலுக்குப் பெருவிடுதலையைத் தந்துவிடுகிறார். அது விடுதலையா? அல்லது சிறையா? என்பதைச் சற்றும் சிந்திக்காமல், ‘மறு எண்ணம் இல்லாமல் உவகைப் பெருக்குடன்’ ஒப்புதல் தருகிறார்.  சிங்கத்தின் வாயிலிருந்து தப்புவதற்காகப் புலியின் வாயில் விழுந்த கதையாகிவிடுகிறது.

இந்தப் பெரும் நிகழ்வை, ஒட்டுமொத்த மகாபாரதக் கதைக்கும் திருப்புமுனையாகத் திகழும் இந்தத் தருணத்தை, எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ஐந்தே வரிகளில் கடந்துவிடுகிறார். காரணம், இந்த ஐந்துவரிகளே வாசகரின் மனத்துக்குள் ஐந்நூறு வரிகளாக விரிந்தெழும் என்று அவர் நம்பியிருக்கிறார். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை.

“விதுரர் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்து அவைமுகமன் பெற்றபின் தருமரை மந்தண அறையில் சந்தித்து பீஷ்மரும் துரோணரும் கிருபரும் திருதராஷ்டிரரும் ஒப்புக்கொண்ட வழி என்று பன்னிரு பகடைக்களம் ஆடுவதைக் குறித்து சொன்னதும் மறு எண்ணம் இல்லாமல் உவகைப் பெருக்குடன் அவர் கைகளை பற்றிக்கொண்டு ஆம், மூத்தோரின் சொல். அதுவே எனக்கு இறையாணை”  என்றார்.

தர்மர் தான் முடிவெடுத்த பின்னர் அது பற்றி, மற்றவர்களிடம் தன் முடிவை நியாயப்படுத்தி, அவர்களையும் ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும் என்பதற்காகவே அவர் பலரிடம் இது பற்றிச் கருத்துக் கேட்கிறார்.

அவர்கள் தன் கருத்துக்கு முரணான கருத்தைத் தெரிவிக்கும்போதெல்லாம்  தன்னுடைய வாழ்நாள் அறத்தாலும் பகடையில் இதுநாள்வரை தான் பெற்ற வெற்றியினால் அடைந்த இறுமாப்பினாலும் நீக்கி, அவர்களை அமைதியடையவும் தன்னுடய முடிவுக்குக் கட்டுப்படவும் வைத்துவிடுகிறார். ஆனால், நகுலன் மட்டும் தர்மரிடம் தயக்கத்தோடு தன் கருத்தை முன்வைக்கிறான்.

“நகுலன், தர்மரிடம் இளைய யாதவரிடம் சொல்சூழ்ந்த பின்னர் முடிவெடுத்திருக்கலாம், மூத்தவரே!”.  

என்கிறான். ஊழின் திரை அங்கிருந்த பலரின் கண்களை மறைத்துவிடுகிறது. அதனால், அவர்களுள் யாருக்குமே இளைய யாதவரைப் பற்றிய நினைவு எழவேயில்லை. ஊழின் திரையால் விழி மறைக்கப்படாத, நகுலனுக்கு மட்டுமே அந்தத் தருணத்தில், இளைய யாதவர் நினைவுக்கு வருகிறார். ஆனாலும், காலம் கடந்துவிடுகிறது. எல்லாவற்றையும்விட ஊழ் வலியதுதானே!.

‘தருமரின் உண்மையான அறத்தையும் மறத்தையும் அறிந்தவர் பீமன் மட்டுமே’ என்றுதான் எனக்குக் கூறத் தோன்றுகிறது. ஆம்! அவர் ‘காட்டாளர்’ அல்லவா? காடழித்துத்தானே நாடாக்குகிறார்கள்?. ‘இந்திரப்பிரஸ்தம்’ நிற்பது அழிக்கப்பட்ட பெருங்காட்டின் மீதுதானே! அதனால், காடழிக்கும் அவர்களின் அறமும் மறமும் பீமனுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது!

‘தர்மர் சூதாட்டத்தில் தோற்பது உறுதி’ என்பதைப் பலமுறை கூறுகிறான் பீமன். அதைத் தர்மரிடமும் நேடியாகவே கூறுகிறான். ஆனால், தர்மர் அதை மறுத்து, ‘பெரும்போர் நடக்காமல், துளிக்குருதியும் சிந்தாமல், இந்தச் சூதாட்டத்தின் வழியாகவே நீ வெற்றி பெறுவாய்’ என்று தன் உள்ளம் தனக்குத் தந்த தவறான வாழ்த்தையே பீமனிடம் திடமாகக் கூறுகிறார்.

தருமர் தன்னுடைய அறத்தின் மீதும் பகடையாடும் திறனின் மீதும் அதீத நம்பிக்கைகொண்டுள்ளார். எப்போதுமே நமது அதீத நம்பிக்கை நம்மை நோக்கியே அறைகூவல் விடுக்கும். அந்த அறைகூவல் விதுரரின் மீதேறிவந்து தருமருக்கு முன்பாக நின்றது. அதற்குத் தருமர் செவிசாய்த்தார். அதன் பின்னர் அவர் வேறு எவர் பேச்சையும் உள்வாங்கிக் கொள்ளும் திறனை இழந்துவிட்டார். தர்மர் பிறிதொருவராக மாறிவிட்டார்.

துரியோதனன் எப்படி இந்திரப்பிரஸ்தத்தில் திரௌபதியின் முன் விழுந்து, அஸ்தினபுரிக்குத் திரும்பியதும் பிறிதொருவராக மாறினானோ அதுபோலவே, இங்குத் தர்மர் மாறிவிட்டார். துரியோதனனின் மாற்றத்துக்குக் காரணம் ‘ஊழ்’ என்றால், தருமரின் மனமாற்றத்துக்குக் காரணமும் ‘ஊழ்’ என்றே கொள்வோம். மானுடர் மனம்செய்யும் தவறுகளை எல்லாம் ஊழ்மீது ஏற்றுவதுதானே மானுடர் செய்யும் பெருந்தவறு! ஆம்! அதையேதான் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களும்,

அது ஊழின் கணம். ஒரு துளியேனும் எண்ணம்பிறழாமல் எடுத்த முடிவு. வாழ்வில் ஒரு முறை கூட அத்தகைய ஒரு உடன்முடிவை எடுத்ததில்லை. அதன் பின் நூறு கோணங்களில் எண்ணி, சூழ்ந்த பின்னரும் அம்முடிவன்றி பிறிதெதும் உகந்ததென்று தோன்றவுமில்லை.”

என்று தருமர் தனக்குள் நினைத்துக்கொள்வதாக எழுதியுள்ளார்.

ஊழ், ‘தருமரின் விழிகளைப் பெரும் புழுதிப்புயல்போலச் சூழ்ந்துகொள்கிறது’ என்று கருதநேர்கிறது. அவருக்கு வேறு வழியில்லை. அவர் சூதாடவே நினைக்கிறார். அந்த எண்ணமே அவரைச் சூதாட்டத்தில் இப்போதே வெற்றிபெற்றுவிட்டவராக உளமயக்குகொள்ளச் செய்கிறது. அந்த மயக்கத்தில் அவர் தலைநிமிர்ந்து செல்கிறார்.

அந்த மயக்கம், அவர் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து நின்ற பின்னரே தெளிவடைகிறது. மயக்கம் தெளிவடைந்தபின்னர் அவர் தன் தலையை நிமிர்த்தவே இல்லை.

விப்ரர் தன்னால் இயன்ற இறுதிச் சொல்லையும் எடுத்துக் கூறி, விதுரரிடம் சூதாட்டத்தைத் தவிர்க்குமாறு கூறுகிறார். திருதராஷ்டிரரும் சூதாட்டத்தை விரும்பவில்லை. விப்ரரின் பின்வரும் இறுதிப் பேச்சு முக்கியமானது.

“மானுடவாழ்வென்பது நேற்றிருந்தோரின் நீட்சி. நாளைவருபவர்களின் தொடக்கம். அதை அறிந்து வாழ்பவர்களே முழுமையாக வாழ்கிறார்கள். தானென்று எண்ணித் தன்னதென்று இவ்வாழ்வைக் காண்பவன் துயரை அன்றிப் பிறிதை அடைவதில்லை.”

இது எல்லோருக்குமானது. இந்த நாவலில் விப்ரரின் இறப்பு ஒரு திருப்புமுனை என்றே கூற வேண்டும். அதுவரை தன் நிலையழியாது இருந்த திருதராஷ்டிரர் மனம் மாறிவிடுகிறார். சூதாட்டத்திற்கு ஒப்புக்கொள்கிறார்.

சூதாட்டக் களத்தில் கௌரவர் விகர்ணனுடன் மகிடன் முதலானவர்கள் மனத்தளவில் உரையாடுவதும் தர்மருடன் தெய்வங்கள் மாறி மாறி உரையாடுவதும் மிகச்சிறந்த நாடகீயம்.

ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெற்ற மேன்மைகளையும் கீழ்மைகளையும் அறத்தையும் அறமீறல்களையும் எண்ணிப் பார்த்து, தனக்குள் பலவாறாகப் பிரிந்து நின்று பேசத் தொடங்கும் உளவியல் உரையாடல் அது.

ஒரு மனிதனின் தன் மனவோட்டத்தை எப்படியெல்லாம் பின்தொடரலாம் தன்னைத்தானே எப்படிப் பித்தேற்றிக் கொள்ளலாம் என்பதற்குச் சிறந்த சான்று. அதேபோல திரௌபதையை இழுத்துவருவதற்காகச் செல்லும் காவலர்கள் அடையும் உளமயக்கமும் எழுத்தாளரால் மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.

விதுரரின் மனைவி இறப்பதற்கு முன்னால் அவர் காணும் சிறுகனவுநிலைகளும் அவரின் மனைவி இறந்த பின்னர் அவர் அடையும் பெருந்துயரமும் மனநிலையழிவும் எழுத்தாளரால் சொல்லெண்ணிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

திரௌபதியின் ஆடைபறிப்பு நிகழ்வையும் திரௌபதியின் மானம் காக்கப்படும் தருணத்தையும் ‘மாயங்கள்’ இன்றி இயல்பாகவும் பொதுஅறிவுக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்ற வகையிலும் எளிய மற்றும் நுட்பமான வாசகர்களும் ஒப்புக்கொள்ளும் விதத்திலும் எழுத்தாளர் இந்த நாவலில் காட்டியிருக்கிறார்.

திரௌபதியின் ஆடைபறிப்பு நிகழ்வில், திரௌபதி வேறு வழியின்றி, இறுதியாக, தன்  ஆடையைப் பிடிக்காமல் தன்னிரு கைகளையும் உயர்த்தி இளைய யாதவரைக் கூவியழைக்கிறாள். அத்தருணத்தில் உப்பரிகைமேடையிலிருந்த அசலை தன்னுடைய ஆடையைக் களைந்து, அதைத் திரௌபதியின் மீது வீசுகிறாள். திரௌபதியின் மானம் காக்கப்படுகிறது.

ஆம்! எங்கும் தெய்வம் நேரில் வந்து நின்று அருள்வதில்லை. தெய்வத்தின் அருள் எளிய மானுடர்களின் உடலிலிருந்தே வெளிப்படுகிறது. காலந்தோறும் தெய்வம் தான் நின்றாடும் களமாகவும் நின்றருளும் பீடமாகவும் எளிய மானுடரையே தேர்ந்தெடுக்கிறது. இந்த அற்புதமான, மெய்யான கருத்தோட்டத்தை மிக இயல்பாகவும் அழுத்தமாகவும் எழுத்தாளர் காட்டிவிடுகிறார்.

இந்த நிகழ்வைப் போலவே, ‘வெண்முரசு’ நாவல் தொடரில் பல முக்கிய தருணங்களை எழுத்தாளர் பொது அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்ற வகையில், மாயங்களுக்கு இடந்தராமல் எழுதியிருக்கிறார். அதனாலேயே நாம் மகாபாரதத்தை ‘அது மிகைக்கற்பனைப் புனைவு அல்ல; அது ஓர் உண்மைப்பெருவாழ்வு’ என்று நம் மனம் உறுதியுடன் ஏற்கத் துணிகிறது. அதற்காகவே, நான் எழுத்தாளரை மிகவும் பாராட்ட விழைகிறேன். இத்தகைய எழுத்துமுறைக்காகவே நாம் அவரைக் கொண்டாட வேண்டும்.

‘பன்னிருபடைக்களம்’ மானுட மனங்கள் கொந்தளிக்கும் பெரும்பாழ்ப்பரப்பு. இது ஒட்டுமொத்தத்தில், பெருந்துயர நாடகத்தின் கொதிநிலைப் புள்ளியாக நின்று, நம்மை உற்றுநோக்குகிறது. நாம் திகைத்து, அதனிடம் ‘நீதி, நேர்மை, அறம், தர்மம், மேன்மை, சான்றாண்மை என்பன அனைத்தும் எதன் பொருட்டுத் தொழிற்படுகின்றன?’ என்று கேட்டு, வெறுமனே நிற்கிறோம். அதற்கு இந்தப் பன்னிருபடைக்களம் அல்ல, காலமே நமக்குப் பதிலளிக்கக் கூடும்.

முனைவர் . சரவணன், மதுரை

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்
வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
முந்தைய கட்டுரைகனவெழுக!
அடுத்த கட்டுரைபயணம்,பெண்கள் – கடிதம்