தாண்டிக்குடி கல்வட்டங்கள்- ராஜமாணிக்கம்

ராபர்ட் புரூஸ் ஃபூட்-சிரஞ்சீவியின் கல்லறை– ராஜமாணிக்கம்
பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்- ராஜமாணிக்கம்

அன்புள்ள அண்ணா,

சென்ற வாரத்தில் தாண்டிக்குடியின் கல்பதுக்கைகள், கல் வட்டங்கள், குகை ஓவியங்களை பார்க்கலாம் என திட்டமிட்டு சென்றோம். கொடைக்கானல் மலைக்கு பின்புறம் இருக்கும் தாண்டிக்குடி பகுதியில் பரந்து விரிந்திருக்கும் கல் திட்டைகள், கல் பதுக்கைகள், ஈமச்சின்னஙகள், ஈமப்பொருட்கள், கல் மணிகள், ஆகியவைகள் பெரும்பாலும் அருகிலுள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். அதையும் தாண்டி இருப்பவை தங்கள் வடிவ நேர்த்தியை மட்டும் இருத்திக்கொண்டு அசைந்தமர்ந்த சிற்பங்களாக இருப்பவை. இங்கு பயிரிடப்படும் காபி, மிளகுகளுக்காக அசைக்கப்பட்டவை, அல்லது இவை இருக்கிறது என்று சொன்னால் அரசு நிலத்தை கையகப்படுத்தும் என்பதற்காக சிதைக்கப்பட்டவை.

இங்குள்ள கல்வட்டங்களில் இருக்கும் பதுக்கைகள் இரண்டு, மூன்று , நான்கு , மற்றும் எட்டு அறைகள் கொண்ட பதுக்கைகள். இது மிகவும் தனித்துவமானது . இரும்பு காலத்திய பதுக்கைகள், கல்லறைகளோடு, செம்பு காலத்திய , பெருங்கற்கால கல் திட்டைகளும் இருக்கின்றன. பொது ஆண்டிற்கு முந்தைய 13 ஆம் நூற்றாண்டு முதல் 5 ஆம் நூற்றாண்டு அதாவது கருமான்களின் முதற்பொற்காலம் வரை இங்கு செழித்திருந்த நாகரீகத்தின் முக்கிய ஈமச்சான்றுகள் இவை.

முதலில் வத்தலக்குண்டு வழியாக ஏறி தாண்டிக்குடிக்கு அருகில் இருக்கும் காமனூர், குமரிக்குன்று, சங்கரன் பேத்து, பெருங்கானல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஈமச்சின்னங்களை பார்த்து விட்டு , மலை அருவியையும்  தரிசித்து விடலாம் என்று கிளம்பி வந்தோம். காமனூர் தாண்டி குமரிக்குன்று பகுதியை அடைந்தோம். மலையின் வளைவில் இருக்கும் சிறிய புறம்பின் மீது ஏறி சென்றோம். அங்கு அதன் உச்சியில் கல் அடுக்குகள், கல் வட்டங்களை கண்டோம். முதலில் ஒரு சிதைந்த கல் வட்டம், பின்னர் அதன் நடுவில் கல் பதுக்கை மேலே கலைந்த நிலையில் cap stone எனும் மூடிக்கற்கள், இவை வெறும் மூடிகள் மட்டுமல்ல அடுத்த கல் வட்டத்தை எப்படி அணுகுவது என்பதை சொல்லும் திசைகாட்டியும் கூட. அதற்கு சமானமான தொலைவில் இன்னும் கொஞ்சம் பெரிய கல் வளையம் முற்றிலும் கலைந்திருக்கிறது. அதில் இரண்டு அடுக்குகளில் நான்கு அறை கொண்ட பதுக்கைகள் இருக்கிறது.

கல் வட்டங்களின் நடுவே இருக்கும் பதுக்கைகள், திட்டைகளில் தாழியில் முழு உடலோ, எரிமிச்சமோ வைத்து கண்வட்டத்தோடு மூடப்படும். இரண்டு விதமான முறைகளில் ஈமச்சின்ன கட்டுமானங்களில் இடு பொருட்கள் போடப்படுகின்றன. இடுகாட்டு ஈமச்சின்னங்கள் , எரிகாட்டு ஈமச்சின்னங்கள்ன்னு இரண்டு வகை சின்னங்களை பார்க்கலாம். இடுகாட்டு ஈமத்தாழிகளில் உடல் உள்ளே வைக்கப்பட்டு, அவர்கள் உபயோகித்த பொருட்கள் மண்ணிலும், பொன்னிலும் பிரதி எடுக்கப்பட்டு வைக்கப்படும். அவர்களின் ஆயுதம், பிடித்தமான பண்டத்தோடு வைத்து பதுக்கையை மூடி விடுவார்கள். எரிகாட்டு ஈமச்சின்னங்களில் எரித்த பிறகு மிஞ்சும் எலும்புகள் கருப்பு சட்டியிலும் , சாம்பலும், மண் பொருட்களும், பொன் பொருட்களும் சிவப்பு சட்டியிலும் இட்டு பால் சமனம் செய்து உள்ளே வைப்பார்கள். அவர்களின் குல வழக்கப்படி மூதாதையர்கள் மண்ணிறங்கும் நாள்களில் படையலோடு வழிபாடு செய்து திரும்புவார்கள். முழு நிலவு நாள் வழிபாடும், கரு நிலவு நாள் வழிபாடும் இருக்கும்.பலி பூசனைகளும் இருக்கும்.

அங்கிருந்து கொஞ்சம் தெற்கே தள்ளி உயரமான இடத்தில் இன்னொரு தனித்த கல் பதுக்கை இருந்தது. இது தான் மையமாக இருக்கும் என நினைக்கிறேன். இதிலிருந்து ஒவ்வொரு கல் பதுக்கை, திட்டைகளை பறவைப்பார்வையில் குறித்து அதிலிருந்து இந்த கல் வட்டம் சொல்லும் காலத்தை அறியலாம். இந்த கல்வட்டங்கள் பெருங்கற்கால பண்பாட்டு துவக்கத்திலிருந்து இரும்பு பண்பாட்டு காலம் வரையிலான வெவ்வேறு காலகட்டத்தை சார்ந்ததாக இருக்கிறது. தாண்டிக்குடியின் கல் வட்டங்கள் பற்றி 1852 முதல் தொடர் ஆய்வு சமீப காலம் வரை நடந்து வந்திருக்கிறது. முதலில் ஜியாலஜிகல் சொசைட்டியினர், பின்னர் ஜெசூட்ஸ் எனும் யேசுசபை பாதிரியார்கள்.இந்தியவியலாளர்கள், தாவரவியலாளர்கள், பின்னர் தொல் பொருள் ஆய்வாளர்கள் என்று தொடர்ந்து ஆய்வு செய்து வந்திருக்கிறார்கள். ரெவரண்ட் காஸ்டன், ஜெசூட்ஸ் ரோஸ்னர், ராபர்ட் பெல் துவங்கி வீலர் வழியாக பேராசிரியர் ராஜன் வரை ஆய்வு செய்திருக்கிறார்கள். நன்கு செதுக்கப்பட்ட கற்கள் நான்குபுறமும் வைக்கப்பட்டு அதன் மேல் கல்லாலான மூடி போட்டு வைக்கப்பட்டது போன்ற அமைப்பு. அதை சுற்றி கல்வட்டம்.

உள்ளேயே இரண்டு அடுக்குகள், மூன்று அடுக்குகள் கூட இருக்கும் என்று கல்லறை திருடர்கள் தங்களின் சாகசக்கதைகளில் சொல்லி இருக்கிறார்கள். வட்டத்திற்குள் இருக்கும் சதுரத்தில் இரண்டாகவோ, நான்காகவோ தடுக்கப்பட்ட , பதிக்கப்பட்ட கற்தொகுப்பை ஒன்றாக மறைத்து மூடியிருக்கும் ஒற்றை தொப்பிக்கல். அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று கல்லறைகள் தொகுந்து அமைந்துள்ள கல்லறைகள் என்று தாண்டிக்குடி பதுக்கைகள் குறிப்பிடத்தகுந்த வரலாற்று இடத்தை முன்பதிவு செய்து இருப்பவை. கல் வட்டங்கள் முற்றிலும் சிதைந்து விட்டது.ய்ர்ன் சர்க்கிள்கள் என்று சொல்லப்படும் இந்த கல் வட்டங்களில் காஸ்மிக் க்ளாகை பொருத்தியிருப்பார்கள் நம் முது மூதாதையர்கள். கல் வட்டத்தின் முதன்மைக்கல்லை கண்டறிந்து அதிலிருந்து புதைக்கப்பட்டவரின் இறந்த திதி , நாள், கோளை கண்டுபிடிக்கும் அறிஞர்கள் இருக்கிறார்கள். இதில் சூரிய வட்டம், நட்சத்திர கூட்ட வட்டம் என்று இரண்டு இருப்பதாக தொல் பண்பாட்டு வானியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இதை மையப்படுத்தி ( sundial, stellar dial ) நவீன நாவல்கள், அறிவியல் புனைகதைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

கல்வட்டங்களில் இருக்கும் கல் அமைவிடங்களை நவீன வானியல் தொழில் நுட்ப மென்பொருள் உதவியோடு வானியலில் கோள்களின் இருப்பிடத்தை கண்டறிந்து சற்று ஏறக்குறைய துல்லியமான ஆண்டை நிருபண ரீதியாக சொல்லி விடுகிறார்கள். வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்பதை எப்படி காலக்கணிதம் கொண்டு தேதியை வரையறை செய்கிறார்களோ அப்படி துல்லியமாக கல்வட்டங்களின் கிங் ஸ்டோன்( முதன்மைக்கல் அல்லது துவக்கப்புள்ளி, அல்லது மையப்புள்ளி) கொண்டு மற்ற கற்களின் இருப்பு, கோணம், அமைவிடம் ஆகியவற்றை வைத்து முதலில் வானியலின் நட்சத்திர கூட்டத்திற்கு அருகில் இருப்பது என்பதை ஊகித்து பின்பு அதிலிருந்து விலக்கியும் சேர்த்தும் பரிசிலீத்து கோள்தொகுதியின் அமைவிடத்தை வைத்து நாளையும் சில நேரங்களில் அந்த தலைவனின் பெயரையும் ஊகிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு இந்து தொன்மத்தின் முப்புரம் எரித்த சிவனின் கதையை எடுத்து கொண்டால், அதில் வரும் முப்புரமும் ஒரே நேர்கோட்டில் வரும் போது மட்டுமே அழிக்க முடியும் என்ற தொன்மத்தை நினைவில் கொள்ளுங்கள். தாராக்‌ஷரும் , வித்யூமாலியும், கமலாக்‌ஷரும் இணைந்து முப்புரத்தையும் ஆண்டதையும், அவை ஒரே நேர் கோட்டில் வந்ததை சிரியஸ் எனும் நாய் நட்சத்திர தொகுப்பு அல்லது மான் நட்சத்திர தொகுப்பின் ஒற்றை அணியை குறிக்கும் குறியீடு என்று சொல்கிறார் இந்தியவியலாளரான ஸ்டெல்லா க்ராம்ஸ்ரிஸ்ச் ( Stella kramrisch). அவருடைய presence of shiva நூலில் மூன்று கோள்கள் ம்ருகவ்யதா எனும் அழல் மீனுக்கு நேராக வந்த வானியல் நிகழ்வின் குறியீடு என்கிறார். இது தொடர்பாக இந்திய அறிதல் முறையில் பண்பாட்டு மானுடவியல் மற்றும் இந்தியவியல் அறிஞரான அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் இந்திய அறிதல் முறைகளில் விளக்கமாக சொல்லி இருப்பார். தொன்மங்களில் இருந்து கவித்துவமாகவும், தத்துவார்த்தமாகவும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் இந்த கல்வட்டங்கள் தமிழகத்தின் முக்கியமான பண்பாட்டு அடையாளங்கள். அதோடு இவை நம் சமூக பொதுமனத்திற்கு தெரிந்த நெருக்கமான ஒரு படிமம் .

இந்த கல்வட்டங்களில் இருக்கும் கற்கள் ஏச கோசலாக இருப்பதாகவும், ஒரே மாதிரி இருப்பதாகவும் பார்ப்பவர்களுக்கு தோன்றும். ஆனால் அது ஒரு புதிர், காண்பவர்களின் அறிதலுக்கேற்ப அகம் திறக்கும் அதிசயம். இந்த தேசம் முழுக்க ஆயிரக்கணக்கான ஆடல்வல்லானின் சிற்பங்கள், செப்பு திருமேனிகள் இருக்கின்றன. அவை வழிபடவும் படுகின்றன. ஆனால் ஒவ்வொன்றும் அதனளவிலேயே தனித்துவமானதும், கவித்துவமானதும், புதுப்புது தத்துவார்த்த மெய்மைகளை சொல்லக்கூடியதுமாகும் . ஒவ்வொரு நடராசர் திருமேனியும் ஒவ்வொருவரின் கைரேகை அளவிற்கே தனித்துவமானது. எதுவும் ஒன்றல்ல. இந்த சிற்பங்களில் ஆயிரம் ஒற்றுமையும், ஒரு சிற்ப, தத்துவ, மெய்யியல் வேற்றுமையும், கல்வியும் இருக்கும். அதை நுணுகி அறிபவன் அறிகிறான். மற்றவர்களுக்கு அது வெறும் காட்சியின்பம், அல்லது பக்தியின் வெளிப்பாடு. அது போலவே இந்த கல்வட்டங்களும் தனித்துவமானது. குறியீட்டு ரீதியில் பல செய்திகளை அணுகி செவி மடுப்பவர்களுக்கு சொல் எண்ணி மெய்மை சொல்வது.

கல்வட்டங்கள் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு நட்சத்திர கூட்டங்களை குறிக்கும் ( constellation). அதோடு 8 ராசி அல்லது நட்சத்திர குறியீடுகள். மீனம், மேஷம், இரட்டை தலை கழுகு, ஆறு தலை நட்சத்திரம் , ஆகியவைகளை நாமே பாறை செதுக்குகளில் ரத்னகிரி அருகில் பார்த்தோம்.   அதோடு ஜெமினி எனும் இரட்டைக்குழந்தை, கும்ப வடிவம் , நண்டு ஆகியவை மிக அதிகமாக உலகளவில் காணக்கிடைப்பவை. ஓரியன், அக்வா, பிஸ்கஸ் , சிரியஸ் எல்லாம் அனைவரும் அறிய முடிந்த ஒன்று சப்த ரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், வெள்ளி இவைகளில் இருந்தும் தரையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இருக்கும் கல் பதுக்கைகளின் மேல்தட்டு எனும் கேப் ஸ்டோன் காட்டும் திசையையும் மனதில் கொண்டு பறவைப்பார்வையில் கல் பதுக்கைகளை கீழிருந்து மேலாகவும், அல்லது மைய மேல் பகுதியில் இருந்து கீழாகவும் இணைத்து இது எந்த வியாழ வட்டத்தை சார்ந்த, எந்த நட்சத்திர கூட்டத்தின் நாளை சொல்கிறார்கள்ன்னு புரிய முயற்சி செய்யலாம் . ம்ருகவயதா எங்கு குறிக்கப்பட்டிருக்கிறதோ அது 50 ஆண்டு என்பதை குறிக்க கூடியது. மற்ற நட்சத்திர குறியீட்டை கொண்டு எத்தனையாவது ஆண்டில் நிகழ்ந்த மரணம் என்பதை சரியாக அறியலாம்.

இது பற்றிய ஆய்வில் பண்டைய ஜெர்மானிய இந்தியவியலாளர்கள் பெரும் ஆர்வத்தோடு ஈடுபட்டிருக்கிறார்கள். 1948ல் மார்ட்டிமர் வீலர் வரை இந்த புதிரை விளக்க பெரும் முயற்சி செய்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் பிரம்மகிரியில் கண்டறிந்த கல்வட்டங்கள் , குத்துக்கல்களை கொண்டு காலத்தை கணித்து வெளியிட்டிருக்கிறது இந்திய வானியல் துறை . ( astronomical orientation of the megalithic stone circles in brahmagiri – by n kameswara rao. —- astronomical society of India  வெளியிடு) . தமிழகத்தின் கல் வட்டங்கள் பற்றி மேலதிகமாக ஆய்வு செய்து புதிய மைல்கல்லை எட்டும் வாய்ப்பு இன்னும் மிச்சமிருக்கிறது. உலகளவில் எகிப்தியலாளர்கள், மயன் நாகரீகவியலாளர்கள், ஜெர்மானியர்கள் கல் வட்டங்களின் புதிர்களை அணுகி அறிந்திருக்கிறார்கள். பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் குவிந்து கிடக்கின்றன. பண்பாட்டு ஆய்வாளர்கள், மானுடவியலாளர்கள், வானியல் நிபுணர்களையும் தாண்டி இது புனைவெழுத்தாளர்கள் , கவிஞர்கள் இவர்களையும் தாண்டி இணைய விளையாட்டுகளுக்கு புனைவு எழுதும் குறு நாவலர்கள் வரை இந்த விஷயங்கள் எட்டியிருக்கிறது.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களுக்கும், வானியல் அறிஞர்களுக்கும், இந்தியவியலாளர்கள், அல்லது எகிப்தியலாளர்கள், மய நாகரீக ஆய்வாளர்களுக்கும் இடையே ஒருஙகிணைந்த உரையாடல் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் திசையில் மெய்மையை தேடி தனித்தனியாக பயணிக்கிறார்கள்.  இங்கே இதை முன் வைத்து தத்துவார்த்த தளத்திலும், பண்பாட்டு தளத்திலும் மாபெரும் விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இது தொடர்பாக பல புனைவுகள், அபுனைவுகள், தொன்மத்தை அணுகும் புதுக்கிளைகள் என்று இந்த ஆய்வுகள் பரந்து விரிய வேண்டும். அது நம் மொழிக்கு பண்பாட்டிற்கு இன்னும் புதிய பாய்ச்சலை கொடுக்கும்.

வீர ராஜமாணிக்கம்

மேலும் :

  1. இந்திய அறிதல் முறைகள்.( https://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2015/may/03/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-1108399.html)

 

  1. https://www.researchgate.net/publication/234242642_Astronomical_orientations_of_the_megalithic_stone_circles_of_Brahmagiri

 

  1. ஆகி சிவசுப்ரமணியம் : தாண்டிக்குடி ஆய்வு, பழனியில் தொல்லியல் ஆய்வு.
முந்தைய கட்டுரைவிமர்சனம், ரசனை – கடிதம்
அடுத்த கட்டுரைவடக்குநாதனின் வாசலில்