ஆடை களைதல்

வணக்கம் ஜெமோ

மிச்சக்கதைகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரையை இந்த இரவில் கேட்டுக்கொண்டிருந்தேன். அதை பாதியிலேயே நிறுத்துவிட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற எனது நீண்டநாளைய ஆசையை இப்போது செய்துகொண்டிருக்கிறேன்.

நாட்டாரியல் _ செவ்வியல் குறித்து நீங்கள் முன்வைத்ததைக் கேட்ட பிறகு மனம் சும்மா இருக்கமாட்டேன் என்கிறது. யோசனை எங்கெங்கோ அறுத்துக்கொண்டு ஓடுகிறது. முத்தாரம்மன் பாடல் கேட்டு சுரா ஓடினார் அல்லவா அதே மனநிலையில்தான் நீண்டகாலமாக இருக்கிறேன். நவீன இலக்கியத்தின் அறிமுகத்திற்கு முன்பாகவே கன்னியாகுமரியில் முதன் முதலாக கடல்பார்த்தபோது ஒரு பிரமாண்டமான போதாமையும், தனிமையுணர்ச்சியும் வெறுமையும் உண்டானது.

அதன் பிறகு விவேகானந்தர், ராமகிருஷ்ணர், கண்ணதாசன் என புரிந்தும் புரியாமலும் படித்தேன். நாஞ்சிலின் ஒரு கட்டுரையின் மூலம் நவீன இலக்கியம் அறிமுகமானது. தொடக்கமே நகுலனும், சுராவும், அசோகமித்திரனும்தான். சுராவின் ஜே.ஜே வும், நகுலனின் நினைவுப்பாதையையும் படித்துவிட்டு நான்குமாதம் வேலைக்கு போகாமல் திரிந்தேன் இனி இந்த வாழ்க்கையில் அடையவேண்டியது என ஏதுமில்லையென.

பிறகு சாரு படித்தேன். சாருவின் எழுத்து அதிர்ச்சியோ ஆச்சரியமோ அளிக்கவில்லை. ஆனால் சிந்தனை ரீதியாக அடுத்த தளத்தை நோக்கி நகர்த்தியது சாருவுடைய எழுத்து. பிறகு மனுஷ்யபுத்திரனின் கவிதை உலகம் எனது எல்லா ஸ்திதிகளையும் குலைத்தது. அதன்பின்பு நகுலன், ஆத்மாநாம், பெருந்தேவி, குமரகுருபரன் ஆகியோருடைய கவிதையுலகம் ஏழுவருடங்களுங்கு முன் கன்னியாகுமரியில் கடல்பார்த்தபோது உண்டான உணர்வுகளை மேலதிகமாய் பெருக்கின.

இப்போது கொஞ்சம் கவிதைகளும் எழுதுகிறேன். சமீபத்தில் எனது கவிதைகள் குறித்து இரு மூத்தக் கவிஞர்கள் பேசினார்கள். எனது சொற்களில் இருக்கும் துயரமும் கசப்பும் எரிச்சலும் நவீன இலக்கியம் – சு.ரா போன்ற முன்னோடிகளின் மேலைத்தேய சிந்தனை மரபு அல்லதே கலை மரபு – கையளித்தது என. வறட்சியான மனநிலை சிறுவயதிலிருந்தே இருந்துவந்திருக்கிறது. அதை என்காலம் எனக்கு கையளித்திருப்பதாக உணர்கிறேன். புலம்பெயர்வின் உதிரி வாழ்க்கைமுறை.

சென்றவருடம் அபிக்கு விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தேன். கவிஞர் பெருந்தேவியின் அமர்வில் நீங்களும் இருந்தீர்கள். பெருந்தேவியிடம் சு.வேணுகோபாலும், லட்சுமி மணிவண்ணனும் கேட்ட கேள்விகள்

  1. உங்கள் கவிதைகளில் மரபு எங்கே இருக்கிறது?

2. நிக்கனார் பார்ராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்?

3. இது ஒருமாதிரியான மேலைநாட்டு இலக்கிய மோகத்தால் எழுப்படுவதுபோல இருக்கிறது?

4. நகுலன் கவிதைகளில்கூட மரபு இருக்கிறது. உங்கள் கவிதைகளில் ஏன் இல்லை?

இந்த கேள்விகளுக்கான பதில்களை பெருந்தேவி அளித்தார். ஆனாலும் அங்கிருந்து திரும்பி பிறகு மரபு குறித்து யோசித்துக்கொண்டே இருந்தேன். இந்த நாள்வரை அப்படித்தான் இருக்கிறேன்.

நகுலனின் ஒரு கவிதையில் குடிக்க அமரந்திருப்பார்கள் இரு நண்பர்கள். அதில் கடைசிவரி. “இந்த சாவிலும் சுகமுண்டு” என ஒரு வரி வரும். ஒருவனுக்கு தன் நண்பனுடன் இருக்கும்போது வாழ்க்கையைப்பற்றிய கனவுகளின் வண்ணங்கள் அல்லவா மிளிர வேண்டும்? மாறாக ஏன் சாகத் தோன்றுகிறது. எனக்கும் என் காதலி அருகில் இருந்தால் கூட சில கணங்களிலேயே மனம் முற்றாய் அங்கிருந்து விலகி ஒருவிதமான இருண்மையில் ஸ்திதி கொள்கிறது. இது ஏன் இப்படி நிகழ்கிறது என்பதும் தெரியவில்லை.

ஆனால் நீங்கள் மரபும் நவீனமும் என்ற ஒரு உரையில் “இனி நாகர்கோவில் கவிதை, தஞ்சாவூர் கவிதை என எழுதமுடியாது” என்றும் நவீனத்துவத்தின் அத்தியவசியமான கூறுகளையும் நிறுவினீர்கள். “மரபை ஏற்பதும் மறுப்பதும்” என்ற உரையில் நீங்கள் சொன்ன பண்பாட்டு மரபும், குருதி மரபும் பெரும் வெளிச்சமாக இருந்தது. இருந்தும் இதுசார்ந்த இத்தனை பேச்சுகளுக்கு அப்பாலும் அது புகைமூட்டமாகவே இருக்கிறது. சமயங்களில் பாவனையாகக்கூட தோன்றுகிறது.

ஏனெனில் ஒருநாளில் பெரும்பாலான நேரம் எனை ஓர் தனித்த உயிரியாக உலகில் முதல் தோன்றிய ஒரு உயிரியின் தனிமையுடன் உணர்கிறேன். இதையெல்லாம் சொல்லி உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும் ஆசானே. என் ஒரே கேள்வி இதுதான் நான் என்னை உதிரியாக நினைக்கவில்லை உறுதியாகவே உணர்கிறேன் ரத்தமும் சதையுமாக. எனை ஒருபோதும் எதன் தொடர்ச்சியாகவும உணர முடியவில்லை. தமிழ் கூட பழக்கத்தின் காரணமாக அல்லது சூழலில் காரணமாக மட்டுமே இருப்பதாக மனதார உணர்கிறேன்.

ஆனால் இந்தத் தன்மையை நவீன இலக்கியம்தான் கையளித்ததா? அல்லது இந்த உணர்வில் இவ்விலக்கியங்கள் கூடுதலான அழுத்தங்களை கையளிக்கிறதா? மேலும் யாருடைய எழுத்தும் எந்தக் கலையும் இந்த வெற்றிடத்தை நிரப்பவியலாத போதாமையுடன் இருப்பதாகவும் சமீபமாக உணர்கிறேன். உண்மையில் நீங்கள் கூறியதுபோல இந்த ஆதித்தனிமையின் தகிப்பை பதிலீடு செய்யத்தான் இவ்வளவுமா?

சரியா தவறா என்றெல்லாம் தெரியவில்லை ஆசானே. ஆசான் என மனதார வேண்டி நிற்கிறேன். வாழ் ஞானத்தை கையளிக்கவும்.

சியர்ஸுடன்

சதீஷ்குமார் சீனிவாசன்

அன்புள்ள சதீஷ்குமார்,

என் படைப்புக்களில் ‘அதிநவீனத்துவ’ வாசகர்கள் பெரும்பாலும் வாசிக்காத ஒரு படைப்பு விஷ்ணுபுரம். அவர்கள் தங்களை நவீனமானவர்கள் என்று எண்ணிக்கொள்வதனால் அதை பழையது, புராணம் என உருவகித்துக் கொள்கிறார்கள். அவர்களில் பலருக்கு வரலாறு, தொன்மம் சார்ந்து ஆரம்ப அறிமுகம்கூட இருப்பதில்லை. பெரும்பாலானவர்களால் இருநூறு பக்கங்களுக்குமேல் படிக்க முடிவதில்லை.

ஒரு கட்டத்திற்குமேல் குடி. இந்தியாவின் மதுவகைகளை ஓராண்டுக்குமேல் குடிப்பவர்களால் மூளையுழைப்பு செலுத்த முடியாது. கண்ணுக்கும் உடலுக்குமான ஒத்திசைவு இல்லாமலாகும். சில பக்கங்கள் படிக்கையிலேயே மூளைக்களைப்பும் அதிலிருந்து எரிச்சலும் உருவாகும். இங்கே கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும் கவிதையை பழகுவதை விட குடியைப் பழகியிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் விஷ்ணுபுரம் பற்றிய செவிவழிச்செய்தியையே அறிந்திருப்பார்கள்.

விஷ்ணுபுரத்தின் முக்கியமான பேசுபொருட்களில் ஒன்று, அல்லது மொத்தநாவலுமே அதைப்பற்றித்தான், ‘தேடலும் பாவனைகளும்’ தான். மெய்மையை தேடுபவர்கள் தலைமுறை தலைமுறைகளாக தோன்றிக்கொண்டே இருப்பதைச் சொல்கிறது அந்நாவல். அவர்களிடமிருக்கும் பாவனைகள் அனைத்தையும் எடுத்து வைக்கிறது. இன்றைய இலக்கியவாதி, அறிவுஜீவி எதில் திளைக்கிறானோ அந்த பாவனைகளின் பெருங்கடல் விஷ்ணுபுரத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

மெய்மையை நாடுபவனின் இயல்புகளில் முதன்மையானது தன்னுணர்வு. அதை அவன் ஆணவமாக ஆக்கிக்கொள்கிறான். நான் ‘மற்றவர்களை’ போல அல்ல , நான் வேறானவன் என்ற தன்னுணர்வே அவனுடைய அடிப்படை விசை. ஆகவே அவன் தன்னை வாழ்வதைவிட வாழ்க்கையை அறிவதை தலைக்கொள்பவன் என்று சித்தரித்துக் கொள்கிறான்.

அதன் பின் அந்த மெய்நாடுவோர் அனைவரும் செய்வது தங்களைத் தாங்களே ‘சித்தரித்துக்கொள்வது’ தான். அதை நடிப்பு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அது பொய் அல்ல. அது ஒருவகை உண்மை. ஒருவன் தன்னை ஒருவகையாக முன்வைத்துக்கொண்டே இருக்கையில் உண்மையாகவே அப்படி தன்னை ஆக்கிக்கொண்டும் இருக்கிறான். அப்படியே திகழ்கிறான்.

அதாவது பொதுவாக மனிதனின் இருப்பு என்பது அவனுடைய வெளிப்பாடுதான். அதற்கு அப்பால் அவனுக்கு ஓர் இருப்பு உண்டு என்றால் அதை அறிவதும் அதுவாக ஆவதும் அத்தனை எளிதல்ல. அதையே யோகம் என்கிறார்கள். யோகம் என்றால் இரண்டின்மை. இரண்டின்மை என்பது இங்கே இருத்தலும் வெளிப்பாடும் ஒன்றே என ஆகும் நிலை.

விஷ்ணுபுரத்தில் தத்துவவாதிகள், கவிஞர்கள், ஞானப்பயணிகள் கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட பாவனைகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றிய விமர்சனங்களும் கிண்டல்களும் கூட உள்ளன. அவற்றை எழுத என்னால் இயன்றது ஏனென்ன்றால் நான் அவற்றில் சிலவற்றினூடாக சென்றிருக்கிறேன். பலவற்றை கற்பனையில் நிகழ்த்தியிருக்கிறேன். ஏராளமானவற்றை கண்டிருக்கிறேன்.

விஷ்ணுபுரத்தில் ஒருவர் ‘ஞானத்தை தேடிச்சென்று முடிவிலியில் கரைபவர்’ என்ற வேடத்தை நடிப்பார். ஒருவர் ‘ஞானத்தின் பொருட்டு கடைசியில் செத்துக்கிடப்பவர்’ என்பதை நடிப்பார். “ஞானமென ஒன்றில்லை, அது பொய்’ என்ற பாவனையை ஒருவர் நடிப்பார். ‘ஞானத்துக்கு எதிரான பொறுக்கி’ என ஒருவர் தன்னை ஆக்கிக்கொள்வார். எதுசெய்தாலும் அது ஒரு பாவனையாகவே ஆகிவிடும் நச்சுச் சூழல் அந்நாவலில் உள்ளது.

முடிந்தால் அதைப் படியுங்கள். அதன்பின் அப்படியே அதை நம் சமகால வாழ்க்கைக்குக் கொண்டுவாருங்கள். நாம் எங்கிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளுங்கள். இன்றைய சூழல் ஏதோ இப்போது உருவான ஒரு அரியுநிகழ்வு என்று எண்ணிக்கொள்கிறோம். இது இப்படியே மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் இருந்துகொண்டிருக்கிறது.

நான் சொல்ல வருவது, நாம் என நாம் முன்வைக்கும் ஆளுமையை நாம் அப்படியே நம்பிக்கொள்ளத்தான் வேண்டுமா என்றுதான். கலகக்காரனாக, நம்பிக்கையிழந்தவனாக, புரட்சியாளனாக, பிடிப்பற்றவனாக, தீவிரநம்பிக்கையாளனாக, இன்னும் என்னென்னவோ ஆக. இதெல்லாம் நாம்தானா? இவற்றை இங்கே இவர்கள்முன் வைத்துவிட்டு இதற்குள் ஒளிந்திருக்கிறோமா?

சர்க்கஸ் கோமாளியாக வேடமிட்டு தெருவில் ஆடும் ஒருவரை இளமையில் எனக்கு அறிமுகமிருந்தது. ‘சீரியசான’ ஆள் அவர். சிடுசிடுப்பானவர். ஆனால் அந்த கோமாளிமுகத்தை வேடமிட்டுக்கொண்டதும், வாயில் அந்தச் செயற்கை இளிப்பு பொருத்தப்பட்டதும், உற்சாகமான கோமாளி ஆகிவிடுவார். அந்தர்பல்டி அடிப்பார். மெய்யாகவே வெடித்துச் சிரிக்கவைக்கும் நகைச்சுவைகளைச் செய்வார்.

நாம் அணிந்துகொள்ளும் முகங்களை நாமே ஈவிரக்கமில்லாமல் பார்க்கவும் பரிசீலிக்கவும் முடிந்தால் மட்டுமே நாம் எழுத்தாளர், கவிஞர்.எந்த வகையான தத்துவச்செயல்பாடும், இலக்கியச்செயல்பாடும், ஆன்மிகச் செயல்பாடும் முதன்மையாக தன்னைக் கண்டடைதல்தான். தன்னுள்ளே ஆழ்ந்துசென்று வரலாற்றையும் பண்பாட்டையும் கண்டடைதல். இயற்கையையும் விசும்பையும்கூட தன்னுள் செல்வதனூடாகக் கண்டடைதல்.

அதற்கு மிகப்பெரிய தடையாக அமைவதென்ன? தன்னை தான் தேடத் தொடங்குவதற்கு முன்னரே தன்னை வரையறைசெய்துகொள்ளுதல். தன்னை முற்றாக கட்டமைத்துக்கொள்ளுதல். தன்னை அப்படி முன்வைக்க தொடங்குதல். படிப்படியாக அதற்குரிய வாழ்க்கைமுறையையும் அதற்குரிய உளநிலையையும் உருவாக்கிக் கொள்ளுதல்.மீளமுடியாதபடி அந்த வேடத்திலேயே சிக்கிக் கொள்ளுதல்.

இளையோர், குறிப்பாக கவிதை எழுதுவோர், அவ்வாறு சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முகமூடிகளுடன் என் முன் வந்து நின்றிருப்பதை காண்கிறேன். எங்கும் அந்த முகங்களுடன் சென்று தங்களை நிறுத்துகிறார்கள். பார்ப்பவர் எவரும் அதை முழுக்க நம்பப் போவதில்லை. அது அவர்களுக்கும் தெரியும், ஆகவே அதைக் கொஞ்சம் மிகையாகவே நடிக்கிறார்கள்.ஜேம்ஸ்பாண்டும் நம் நவீனக்கவிஞர்களும் தான் licensed to overkill.

உங்களைப் பற்றி நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொள்கிறேன். உங்களுக்கு செவ்வியல்,நாட்டார் மரபுகளில் ஈடுபாடில்லை. எந்த இடத்திலும் வேர்கள் இல்லை. எங்கும் உதிரியாக புறனடையாக உணர்கிறீர்கள். சரி, அவ்வாறு ஒருவர் இருப்பது இயல்பானது. அவ்வாறு அவர் தீவிரமாக மொழிவடிவங்களில் வெளிப்பட்டால் அது இலக்கியம்தான்.

ஆனால் அதுதான் நீங்கள் என இப்போதே ஏன் வகுத்துக்கொள்கிறீர்கள்? அதுதானா நான் என திரும்பத் திரும்ப, முடிவில்லாமல், உசாவவேண்டியதல்லவா கலைஞனின் வேலை?

உண்மையிலேயே நீங்கள் அப்படி என்றால் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பெருமிதமோ சிறுமையுணர்வோ கொள்ளவேண்டியதில்லை. அது ஓர் ஆளுமையியல்பு. அப்படி ஏராளமான ஆளுமைத்தன்மைகள் இலக்கியத்தில் வெளிப்படுகின்றன

அப்படி அல்ல என்று எப்போது தோன்றுகிறதோ அக்கணமே அதுவரை அடைந்த அனைத்தையும் தூக்கிவீசி அப்போது நீங்கள் எவர் என்று தோன்றுகிறதோ அவராக ஆனால்தான் நீங்கள் கலைஞர். நீங்களொன்றும் இந்த வேடத்தை நடித்துக்கொடுக்க முன்பணம் வாங்கி இங்கே வரவில்லை அல்லவா?

ஓர் உதிரி உதிரியாக இருப்பதனாலேயே, உதிரிவாழ்வை எழுதுவதனாலேயே எந்த தகுதியும் வந்துவிடுவதில்லை. அதுபோல ஓரு நிலப்பிரபு அவ்வாறே வெளிப்படுவதனால் எந்த தகுதிக்குறைவும் இலக்கியத்தில் அமைவதில்லை. ஃபாஸிஸ்டுகளை ஆதரித்த பேரிலக்கியவாதிகளின் பெருநிரை உலக இலக்கியத்தில் உண்டு.

இலக்கியம் தேடுவது மெய்மையின் வெளிப்பாட்டை மட்டும்தான். ஒரு வாழ்க்கையின் அகஉண்மை வெளிப்படுகிறதா என்றுதான். அந்த அகஉண்மையினூடாக மானுடத்தின் மெய்மைகளில் ஒன்று வெளிப்பாடு கொள்கிறதா என்பதை மட்டும்தான்.

ஆகவே இலக்கியவாதி என இயங்கும் எவரிடம் சொல்ல எனக்கு ஒன்றே உள்ளது. எது ஒன்றாகவும் ’ஆக’ முயலாதீர்கள். எதுவாகவும் சித்தரித்துக் கொள்ளாதீர்கள். எதுவாக இருக்கிறீர்களோ அதுவாக வெளிப்படுங்கள். அதுவே இலக்கியம். இதைச் சொல்ல எனக்கு நிறைய தகுதி உண்டு. பலவாக ஆக முயன்று கொஞ்சகாலம் என்னை வீணடித்து சுயமாக கண்டுகொண்டவன் நான்.

இலக்கியவாதிக்கு அவன் இருப்பு எதுவாக இருப்பினும் அது ஒரு சவால்தான். கால்பந்தாட்டக்காரனுக்கு பந்து அவனுக்கு அவன் தன்னிலை, அவனுடைய உள்ளம். அதை உதைத்து உதைத்துத்தான் அவன் தன் வெற்றிகளை எய்த முடியும். வேறுவழியே இல்லை. இலக்கியவாதிக்கு அவன் அகம்.

இங்கே ஒவ்வொரு உயிர்க்குலத்திற்கும் மாளாத்தனிமையை இயற்கை அளித்துள்ளது. தெருவோரம் நோயுற்றுச் சாகும் நாய் ஒன்றை பாருங்கள். கூவிக்கூவி அழுது அழுது நைந்து அது சாகிறது. அத்தனை பெரிய தனிமை. அந்த தனிமை மனிதனுக்கும் உண்டு. அதை வெல்லவே சமூகம், குடும்பம், உறவுகள் என உருவாக்கினான். மதங்கள், அரசு, கொள்கைகள் என உருவாக்கினான்.

சாமானியர்கள் குளிருக்குப் போர்த்திக்கொள்வதுபோல அவற்றை ஒன்றன்மேல் ஒன்றென எடுத்து போர்த்திக்கொள்கிறார்கள். ஒரு தேர்தலரசியல் உருவாக்கும் கூட்டுக்களிவெறிக்கு தன்னைக் கொடுக்கும் இலக்கியவாதி அங்கே பாமரனாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். மெய்யான இலக்கியவாதிக்கு அந்த எந்தப்போர்வையும் உகக்காது. அவன் வெட்டவெளியில் நிற்கவேண்டியவன்.

அந்த வெட்டவெளித் தனிமை வதைதான். கைவிடப்பட்ட நிராதரவான இருப்புதான். விளக்கங்கள் அற்ற வெற்றுநிலைதான். ஆனால் அது எவருக்கும் உரியது. ஒன்றுமே செய்ய முடியாது. சரி, திரும்பச்சென்று விடலாமென்றால் அங்கே திரும்ப வாசலே இல்லை.

விஷ்ணுபுரத்துக்கே திரும்ப வருகிறேன். அதில் பிங்கலன் என்னும் கதாபாத்திரம் வினாக்களுடன் கிளம்பிச்சென்று அந்த வெறுமையில் திகைத்து மூளைக்கொதிப்படைந்து தன் ஆசிரியரிடமே திரும்ப வருகிறது. ’என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள், நான் பழைய பக்தனாக ஆகிவிடுகிறேன்’ என்கிறது. ’நீ கேள்விகள் கேட்டுவிட்டாய், இனி திரும்பவே முடியாது’ என்று ஆசிரியர் பதில் சொல்கிறார்.

என் இளமைமுதலே அந்த தனிமையை, விலக்கத்தை, எதிலும் முழுதுற அமையாத அலைதலை அறிந்துகொண்டிருக்கிறேன். இன்றுவரை மேலும் மேலும் கூர்மையாக அந்த தேடல் முன்சென்றுகொண்டேதான் இருக்கிறது. தீவிரம் மேலும் தீவிரம் என. நீள்கையில் மேலும் கூர்கொள்ளும் வாள் என. அத்துன்பத்தில், வலியில், தவிப்பில் ஒரு துளியும் கிடைக்காமல் தவறிவிடக்கூடாது என்றே நான் எண்ணுகிறேன்.

ஆனால் இந்த கொந்தளிப்பை அடைவது என் அகம். அங்கே எரியும் நெருப்பு என் சொத்து. என்னை கலைஞனாக்குவது அது. என் சொற்களில் எரிவதும் அதுவே. அதன்மேல் நான் நீரை அள்ளிக்கொட்டி அணைக்க முயலமாட்டேன். தன் மூளையை மதுவூற்றிச் சேற்றில் சிக்கவைத்து அசைவற்றதாக்கும் கலைஞர்கள் எவர் மேலும் எனக்கு பெரிய மதிப்பில்லை. அதில் எழும் எல்லா பேய்களையும் நேருக்குநேர் நின்று பார்ப்பவர்களே எனக்குரிய கலைஞர்கள்.

குடி ஒரு சாக்கு. முதலில் எளிய அல்லல்களில் இருந்து தப்ப, கூட்டாளிகள் நடுவே இருக்கவேண்டுமென்ற விழைவால், அன்னியனாக தன்னை காட்டிக்கொண்டாகவேண்டும் என்பதனால் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன்பின்னர் அவர்களுக்கு இருப்பது ஆன்மிகச்சிக்கல் அல்ல, தத்துவச்சிக்கல் அல்ல, அழகியல் சிக்கல் அல்ல, இருத்தலியல் சிக்கல் அல்ல, குடி உருவாக்கும் சிக்கல்கள் மட்டுமே.

பொருளியல் சிக்கல், உறவுச்சிக்கல், உடல்நிலைச்சிக்கல் என குடி சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அதை ஆன்மிகச்சிக்கலாக, தத்துவச்சிக்கலாக, அழகியல் சிக்கலாக, இருத்தலியல் சிக்கலாக உருமாற்றிக் காட்டும் பாவனைகளை கற்றுக்கொண்டால் கலகக்கலைஞனாக வாழ்ந்து மடியலாம். நான் இலக்கியத்தில் வந்து முப்பதாண்டுகளாகின்றன. அப்படி இரண்டு மூன்று தலைமுறையினரை கண்டுவிட்டேன்.

ஆகவே உங்களிடம் என்ன சொல்வேன்? எதிர்கொள்க. போதையால், பாவனைகளால் அதை தவிர்க்கவேண்டியதில்லை. எது உங்களுக்குள் உள்ளதோ அதை அப்படியே எதிர்கொள்க. அதை மொழியாக ஆக்கும் பயிற்சியில் இடைவிடாது திகழ்க. வெளிப்பாடு கொள்கையில் அது தன்னியல்பாக இருக்குமென்றால், உங்களை மீறி நிகழுமென்றால் அதுவே கலை.

அவ்வண்ணம் கலை வெளிப்பட்டதென்றால் அக்கணமே அதை ஆமை தன் குஞ்சுகளை கைவிடுவதுபோல விட்டுவிடுங்கள். அடுத்ததற்குச் செல்லுங்கள், மேலும் மேலும் செல்லுங்கள். எழுதியவை உங்களை வரையறை செய்யக்கூடாது. எழுதவிருப்பவற்றை தடுக்கும் மிகப்பெரிய சக்தி அந்த வரையறைதான்.

எழுதும்போதிருக்கும் பரவசம், வெளிப்பாட்டிற்குப்பின் சிலகணங்கள் எழும் தன்னிறைவும் தருக்குதலும் மட்டுமே இந்த வாழ்க்கையில் எதிர்பார்க்கத்தக்க இன்பம். அந்தப் பயணம் கனிந்து தன்னை கண்டடைதலாக, அமைதலாக ஆகுமென்றால் அதுவே எதிர்பார்க்கத்தக்க மீட்பு.

சியர்ஸ் – சுக்குக்காப்பி என்றால் மட்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைகையறு: ஒரு முக்கியமான மலேசிய நாவல்
அடுத்த கட்டுரைஉரைகள்- கடிதங்கள்