கனவெழுக!

அன்புள்ள ஜெ

நான் உங்களுக்கு ‘ம்’  வாசகன். உங்களது புனைவு, அ-புனைவு எழுத்துக்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் வாசித்திருக்கிறேன்(வெண்முரசு உட்பட). இலக்கியம், ஆன்மீகம், தத்துவம், வரலாறு, மானுடவியல், அறிவியல் (உளவியல், மரபணுவியல், பிரபஞ்ச இயற்பியல்) போன்ற பலதுறைநூல்களை வாசித்து வருகிறேன். உலக-மாற்று சினிமா கலையிலும் ரசனை ஈடுபாடு உண்டு. எனது தனிநபர் புத்தக சேகரிப்பாக மூன்றாயிரத்துக்கு அதிகமான நூல்களை வைத்திருக்கிறேன். அச்சில் வந்த உங்களது அனைத்து நூல்களையும் தனிஅலமாரியில் பொக்கிஷமென வைத்துள்ளேன். (அந்த அலமாரியின் படம் உங்களுக்கு வாட்சாப்பில் அனுப்பினேன் உங்கள் பிறந்ததினம் அன்று).

உங்களது புனைவுகள் என் அகத்திற்கு மிகநெருக்கமானவை. நெருப்பில் ஒளியும் வெப்பமும் எவ்வளவோ நெருங்கியவையோ அவ்வளவு நெருக்கம் எனலாம். முதல் கடிதம் என்பதால் என்னைப் பற்றி விரிவாக அறிமுகப்படுத்திக் கொள்கிறேன் எனக்கு இடப்பட்ட பெயர் வீரபத்ரன். தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஒரு அழகிய கிராமத்தை என் வாழிடமாகப் பெற்றுள்ளேன். அறிதலுக்கு அப்பாற்பட்ட அந்த அலகிலியின் அருளால் 24வருடங்களாக  புவியாடும் இவ்வுயிர்ப்பெருநடத்தில் ஒரு சிறுஅசைவென  நிகழ்ந்து வருகிறேன். ஆரோக்கியமற்ற உடலையும் தகித்தெரியும் மனதையும் சிறுவயது முதலே கொண்டுள்ளேன். 17வயதில் நடைபெற்ற குடல்வால்நீக்க அறுவை சிகிச்சையை தொடர்ந்து வந்த உயர்-ரத்தஅழுத்த பிரச்சனை, இதயபலகீனம், நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் உளவியல் பிரச்சனைகளோடு பலகாலம் போராடி இப்போது அவற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளேன்.

கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டேன். தற்போதைக்கு எந்த பொருளீட்டல் வழிகளிலும் ஈடுபடவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக முழுநேரமாக அறிதல் சார்ந்த செயல்பாடு  தவிர்த்து பெரிதாக எதிலும் ஈடுபடவில்லை. என் இயல்பை பற்றி சொல்ல வேண்டுமானால் நான் ‘நான் இன்னார்’ என உணரத்துவங்கியது முதலே எதிலும் நீடித்து அமைந்து நிறைவடைய முடியாதவனாக இருந்துவருகிறேன். மேலும் அதிகமாக உள்ளொடுங்கிய சுபாவம் கொண்டிருப்பதால் வெற்றிகரமான மக்கள் தொடர்பு கைவரப்பெறவில்லை. அதனால் எந்தக்கூட்டத்தின் மத்தியிலும் தனியனாக உணர்கிறேன்.

சிறுவயதில் ‘எனக்கும் மரணம் வரும்’ என்று அறிந்துகொண்டபோதும் ‘மரணம் என்றால் முற்றான முடிவு’ என்ற தவறான நம்பிக்கையாலும் ஒரு பயமும் ஏக்கமும்  எனக்குள் இருந்தது. எங்கு பார்த்தாலும் மரணம் தான் தெரிந்தது. “மரணத்தின் முன் இந்த வாழ்வென்பது என்ன?” “ஏன் பிறக்கிறோம்?” “இந்த பெரிய இருப்பில் நான் யார்?” “கடவுள் உண்டா?” “இருப்பதற்கு இல்லாமலாவதற்கும் என்ன பொருள்?” போன்ற  அடிப்படை கேள்விகள் தெளிவற்றுவாறு உதித்தன. பின் பதின்வயது துவங்கியதும் எரியத்துவங்கிய பெருங்காமம் இந்த உலகை முன்பில்லா பேரெழிலோடு காட்டியது. அது அந்த கேள்விகளின் தீவிரத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தின. வாழ்வை சற்று தள்ளிநின்று வேடிக்கை பார்த்தவனை உள்ளே இழுத்துகொண்டது.தீவிரமான ‘லட்சிய’காதல்கள் வந்து கடந்தன. மனித உறவுகளை பின்னும் இழைகள் திட்டவட்டமாக அறிந்துகொள்ளக்கூடியவை இல்லை என்று புரிந்தது.

அடுத்ததாக என் வாசிப்பின் படிநிலைகளை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இன்று சில ஆயிரம் நூல்களை வாசித்துவிட்ட எனக்கு எனது எட்டாவது வயது முதலே வகுப்பு பாடநூல்களை தவிர்த்த வேறு நூல்கள் அறிமுகமாகியின. பேச்சுபோட்டிகளுக்கான தயாரிப்பிற்காக தான் அது துவங்கியது. பள்ளிக்கு பின்னாலிருந்த ஒரு சிறுநூலகத்தில் எனது ஆசிரியை எனக்காக புத்தகங்கள் எடுத்துதருவார். அவை மிகச்சாதாரணமான ‘தலைவர்கள் அறிமுகம்’ போன்ற எளிய நூல்கள் தான். அவற்றை படிப்பது ஒரு ஆணவச்செயல்பாடாகவே இருந்ததுள்ளது (அந்த குழந்தை மனதிற்கும் கூட) என்பதை இப்போது உணரமுடிகிறது. ’அவன் நிறைய நல்லா படிக்கிறான் பாருங்க’ என்று சகமாணவர்கள் முன் ஆசிரியர் சொல்லும்போது ஏற்படும் குட்டியான ஒரு பெருமித உணர்வுக்காகவே வாசிக்க துவங்கினேன் எனலாம்.

ஆனால் பின்னர் குட்டியான கதைகள் வாசிக்க துவங்கியதும் வாசிப்பு என்பது எனக்கான முதன்மை இன்பம் என்பதாக மாறிப்போனது. மூன்று பக்க குட்டிக்கதைகளை கூட மனதில் முப்பது பக்கம் வருமளவான கதைகளாக  கற்பனையில் விரித்து வளர்க்க முடிந்தமையால் அந்த வயதில் விளையாட்டை விடவும் வாசிப்பது தான் எனக்கு பேரின்பத்தை தந்தன. பின் அறிதல் என்பதே என் தலையாய இன்பமானது. தேடல் முறைப்பட்டவுடன் சிறந்த நூல்களை தேடித்தேடி வாசித்தேன். இப்போது எந்தவொரு சிறந்தநூலையும் ஆழமாக உள்வாங்கிகொள்ளும் நுண்வாசிப்புத்திறனை பெற்றுவிட்டதாக உணர்கிறேன்.

உங்களை 16வயதில் தான் கண்டடைந்தேன். அப்போது முதல் உங்கள் அகத்தோடு தொடர்பு கொண்டுள்ளேன். அதனால் தான் இந்த கடிததத்தை உங்களோடான முதல் ‘புற’த்தொடர்பு என்று சொன்னேன்.

இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத காரணம் நான் இப்போது ஒரு தடுமாற்றத்தில் உள்ளேன். இனி நான் புனைவுகளும், அபுனைவுகளும் தொடர்ந்து எழுதவேண்டும் என விருப்பப்படுகிறேன். எழுதுவதே என் தன்னறம் என உணர்கிறேன். பிறிதொன்றிலாமல் அதற்கு மட்டுமென என்னை முழுதளிப்பதால் மட்டுமே என் நிறைவு அமையும் என நம்புகிறேன். எழுதி கண்டடைவதன் மூலம் மட்டுமே இந்த பெருலீலையின் இன்ப-துன்ப சலனங்களுக்கு அப்பாலுள்ள பெருவெளி எனக்கு கிட்டும் என உணர்கிறேன். எழுத்தின் பொருட்டு பிற அனைத்தையும் இழக்கவும் தயாராக இருக்கிறேன். எழுத்தினால் என் அகம் அடையப்போவதை விட நான் இழக்கப்போகும் மற்றவை அரிதல்ல, பெரிதல்ல என நன்றாக அறிந்துள்ளேன்.

ஆனால் ஒரு பெரும்தடையும் ஒரு பெருந்தடுமாற்றமும் எனக்குள்ளது. அவற்றைக் கடக்காமல் நான் எதையும் எழுதமுடியாது என நினைக்கிறேன். “இதுவரை எழுதப்படாதவற்றை என்னால் எழுதிவிடமுடியுமா? இதுவரை திறக்கப்படாத கோணங்களை என்னால் திறந்துவிடமுடியுமா? எங்கும் முரண்களாய் காட்சிதரும் முழுமையை எழுத்தில் சாத்தியப்படுத்திவிட முடியுமா? அல்லது தவறிப்போய் நான் அன்றாடத்தின் துளிகளை என் கலையாக  முன்வைத்துவிடுவேனா?” போன்ற கேள்விகள் தரும் தயக்கம் தான் எனக்கு பெருந்தடுமாற்றமாக உள்ளது.

இரண்டாவதாக,தினமும் என்னை நானே மறுத்து உதறி முன்செல்லும் காலகட்டமாக எனக்கு இப்பருவம் உள்ளது.எப்போதெல்லாம் ஒரு புதிய கருத்து அல்லது ஒரு தரிசனம் அல்லது ஒரு தத்துவநிலைப்பாடு என்னுள் பரிணமித்துப் பெருகி நிற்கிறதோ அப்போது அதற்கு சமமான மறுக்கும் தரப்பு ஒன்றும் என்னுள் பெருகிநிற்பதை உணர்கிறேன்.இந்த நிலைத்து நிறைவடையாத்தன்மை தான் எனது பெருந்தடையாக உள்ளது. இவற்றை எப்படி நான் கடப்பது? இத்தடுமாற்றத்தையும் தடையையும் வெல்லும் படைக்கலமாக தங்களது வார்த்தைகளை வேண்டி    அருகமர்கிறேன்.

பேரன்புடன்,

வீரபத்ரன்

***

அன்புள்ள வீரபத்ரன்

உங்கள் கடிதத்தை வாசித்தபோது எனக்கு ஒரு புன்னகைதான் உடனடியாக வந்தது. ஒருவன் பேரிலக்கியவாதியாக ஆவதற்குரிய அனைத்தையும் கொண்டிருக்கிறீர்கள். ஒரு நற்கொடையாகவே அவை அமைந்துள்ளன. நீங்கள் உங்கள் சிக்கல்கள் எனச் சொல்லியிருப்பவை எல்லாமே மிகப்பெரிய நல்லூழ்விளைவுகள் என்பதை நீங்கள் கொஞ்சம் உலக இலக்கிய வரலாற்றை கூர்ந்து வாசித்தால் அறிந்துகொள்ள முடியும்.

உலக அளவில் இலக்கியத்தில் மட்டுமல்ல தத்துவத்திலும் கூட உடற்சிக்கல்கள் கொண்டவர்கள் ஒரு சாதகமான நிலையில் இருக்கிறார்கள். பொருளீட்டுதல், உலகியல் வெற்றியை அடைதல் போன்ற எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு இளமையிலேயே இல்லாமலாகிவிடுகின்றன. அவர்கள் வணிகம், அரசியல் என திசைதிரும்பி நாட்களை வீணாக்காமல் தேறிவிடுகிறார்கள். சூழலில் இருந்தும் அத்தகைய நெருக்கங்கள் அவர்களுக்கு இல்லை.

அவர்களின்  ‘அசாதாராணத் தன்மை’ அவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஒரு தனிமையை அளிக்கிறது. ‘வாடா மச்சி’ கும்பல் அவர்களைச் சுற்றி சேர்வதில்லை. அவர்கள் நம்மிடமிருந்து பிடுங்கி எடுத்துக்கொள்ளும் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி மிச்சமாகிவிடுகிறது.

தமிழ்ச்சூழலில் ஒருவன் வாசிக்க ஆரம்பிப்பது 25 வயதுக்குமேல்தான். தீவிர இலக்கியம் அறிமுகமாவது 30க்கு மேல். அது ஒரு தவறான வயது. குடும்பம் தொழில் என சுமை தனிமனிதன் மேல் ஏறிவிடும் காலகட்டம் அது. அவனுக்கான நேரமே குறைவாகத்தான் கிடைக்கும்.

அதைவிட அவன் தன் வாழ்க்கையின் சிறந்த ‘முதல்முறை’ அனுபவங்களை பெறும்போது நல்ல இலக்கியம் படித்து தன் புலன்களை தீட்டிக்கொள்ளாதவனாக இருப்பான். ஒருவன் காதலிக்கும்போது வைரமுத்து வாசகனாக இருப்பதற்கும் வண்ணதாசன் வாசகனாக இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு.

அத்துடன் முப்பது வயதுகளில் பெரும்பாலானவர்கள் மூர்க்கமான அரசியல் நிலைபாடு கொண்டிருப்பார்கள். அறுதியான அரசியல் நிலைபாடு கொண்டவர்களால் அதையன்றி வேறெதையும் யோசிக்க முடியாது. அவர்களுக்குரியது அல்ல இலக்கியம். தத்துவமும், சிந்தனையின் எந்த தளமும் அவர்களுக்கு வசப்படுவதில்லை. ஏன் அரசியல்கோட்பாடே கூட அவர்களுக்கு கைவராது.

உங்கள் வாழ்க்கையில் உரிய அகவையில் வாசிக்க வந்துள்ளீர்கள். தமிழ் எழுத்தாளர்களில் எனக்குள்ள மேலதிகத் தகுதி என்பது மிகமிக இளமையிலேயே நான் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தவன், அதற்கான சூழல் எனக்கு இருந்தது என்பதுதான். நீங்கள் இன்று வாசித்துக்கொண்டிருக்கும் தளம் தமிழ்ச்சூழலில் மிக அரிதானது. ஒரு பெருஞ்செல்வம்.

அந்த வாசிப்புடன் அனுபவங்கள் வழியாகக் கடந்துசெல்கிறீர்கள். அறிதல்களை சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அனைத்துமே எழுத்துக்கான விதைகள்தான். உங்கள் களத்தையும் உங்களையும் நீங்களே ஒருக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

ஒன்றை எண்ணிக்கொள்ளுங்கள், எழுத்தாளர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பின்னாளில் வாழ்க்கை முழுக்க எழுதுவதற்குண்டான மூலப்பொருட்களைத்தான் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் என நினைக்கிறேன். அவை விதைகள். உங்கள் களஞ்சியம் விதைகளால் நிறைந்துகொண்டிருக்கிறது.

கடைசியாக, உங்கள் இரண்டு அகப்பிரச்சினைகள். ஒன்று, சாதாரணமாக ஒன்றை எழுதிவிடுவோமா என்ற அச்சம். அது பெரிய எழுத்தாளனுக்கு தேவையான ஒன்று. அது ஒரு கவசம். அவன் இயல்பாக ஆவதற்கும், விளையாட்டாகவும் எழுதிப்பார்ப்பதற்கும், மேலும் கால்நூற்றாண்டு தாண்டவேண்டும். அதுவே இயல்பானது.

நீங்கள் உள்ளுணர்ந்து எழுதினால், எழுத்து உங்களைக் கடந்து உங்களை வெளிப்படுத்தினால், அதாவது உங்களூடாக எழுத்து நிகழ்ந்தால், அது அசலானதாகவே இருக்கும். அதை இன்னொருவர் இப்புவியில் எழுதியிருக்க மாட்டார்கள். ஆகவே வேறெவரோ எழுதிவிட்டார்களா என்ற ஐயமே தேவையில்லை. அறைகூவல், எழுத்துக்கு உங்களை அளிப்பதே,

இது எழுதுபவர்கள் மட்டுமே பகிர்ந்துகொள்ளத்தக்க ஒர் அகநிலை. எழுத்து அது நிகழும்போக்கில் உங்களை தன் கையில் எடுத்துக்கொள்ளும். உங்களை கருவியாக்கி அது நிகழும். அது நிகழ்ந்ததுமே அதை நீங்கள் உணர்வீர்கள். அதை உணர்ந்தபின் எழுத்து என்றால் என்ன என்று ஐயமே படமாட்டீர்கள். அது நிகழாதவரை எழுத்தும் ஒரு தொழில்நுட்பமே, ஒரு பயிற்சியே என்று அதை அறியாதோர் சொல்வது போல நீங்களும் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்.

ஆனால் அது ‘தன்னிச்சையாக’ நிகழ்வதில்லை. அது நிகழ்வதற்கு ஒரு புள்ளி உள்ளது. அதுவரை நீங்கள்தான் சென்று சேரவேண்டும். அது தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் புள்ளி. பயின்று எழுதுவோர் நடந்து நடந்து வந்தடையும் சிகரமுனையில் இருந்துதான் அது பறந்தெழவே தொடங்குகிறது.

ஆகவே அதுவரை எழுத்தைப் பயிலவேண்டும். எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு, சலிப்புகளை சோர்வுகளை மீறிச்சென்று, எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். எழுத்தை தீ என பொறியாக எழுப்பி, விசிறி தழலாக்கி, பெருந்தழலாக்கி, அதில் நீங்கள் பாய்ந்து ஆகுதியாகவேண்டும்.

ஆகவே பயில்க. பயிற்சியிலேயே இருங்கள். உங்கள் எழுத்துமுறை என்ன என்று எவரும் இப்போது சொல்லமுடியாது. எண்ணிப்பாருங்கள், நீங்கள் எழுதவிருப்பது பெருநாவல் என்றால் அதை ஓரிரு ஆண்டுகளில் அடைவீர்களா என்ன? பல ஆண்டுகளாகும் அல்லவா?அதற்கான தேர்ச்சியை அடைய கொஞ்சம் தவம் தேவைப்படும் அல்லவா?

முரண்படுதல் குறித்துச் சொன்னீர்கள். முதலில் சொன்னதேதான், அது உங்களுடைய சிறப்பியல்பு. சிந்திக்கும் எவரும் தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். அந்த முரண்பாடு உருவாக்கும் உள்விவாதத்தையே சிந்தனை என்கிறோம். மிகச்சிறிய அளவில் சிந்திப்பவர் அனைவரிடமும் இருக்கும் இந்த உள்மோதல் அடிப்படைச் சிந்தனையாளர்களிடமும் கலைஞர்களிடம் உச்சமடைகிறது.

இந்த உள்மோதல் இல்லாதவர்களே எதையாவது முற்றாக ஏற்றுக்கொண்டு விசுவாசத்தை அளிக்கிறார்கள். கட்சிக்கொடியை தன் முகப்படையாளமாக வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்யும் எளிய உள்ளங்களை இணையத்தில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் விசுவாசிகள், இலக்கியம் அவர்களுக்குரியது அல்ல.

இலக்கியம் முரண்படுபவர்களுக்கு, முரண்டிக்கொண்டே இருப்பவர்களுக்கு உரியது. மலையிறங்கும் நதி போல நூறு, ஆயிரம் பாறைகளில் மோதி மண்டை உடைத்துக்கொண்டு கொந்தளிப்பவர்களுக்கு உரியது. அவர்களில் தெளிவும் திடமும் உருவாவது அவர்களே தங்களுக்குரிய மெய்மைகளை ஓரளவேனும் கண்டடைந்தபின்னர்தான். அது ஒரு நீண்ட பயணத்துக்குப் பின். நீண்ட காலம் கழித்து.

வெவ்வேறு மதிப்பீடுகள், கருத்துநிலைகள், தரிசனங்கள் இணையான ஆற்றலுடன் ஒருவனுக்குள் மோதிக்கொண்டு கொந்தளிப்பதே உயர்நாடகீயத்தன்மை. அதுவே உணர்ச்சிநிலைகளில் உச்சமானது. அதுவே  முதல்நிலை புனைவுகளுக்குரிய பண்பு. அதைத்தான் பேரிலக்கியங்களில் காண்கிறோம்- கம்பனானாலும் தஸ்ஸ்தயேவ்ஸ்கியானாலும். அந்த கொந்தளிப்பை கவனியுங்கள். அந்த மோதலையும் கொந்தளிப்பையும் அவ்வாறே எழுதிவிட முடியுமா என்று பாருங்கள்.

உங்கள் கடிதத்தில் இருந்து தெரிவது, உங்கள் உலகம் பெரும்பாலும் தத்துவம் சார்ந்தது என்று. ஆனால் தத்துவத்தை தத்துவப்பாடநூல்களில் இருந்து கற்கவேண்டாம். தத்துவப்புனைவுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். கூடவே தத்துவத்தை வரலாற்றுடன் இணைத்துக்கொள்ளுங்கள். தத்துவம் வரலாறு வாழ்க்கைச்சித்திரம் மூன்றும் பிணைந்தெழும் பெருநாவல்களை கனவுகாணுங்கள்.

ஒருநாள் நீங்கள் எழுதுவீர்கள்.அந்த பயணத்தின் அல்லல்கள் இவை

வாழ்த்துக்கள்

அன்புடன்

ஜெ

முந்தைய கட்டுரைஅன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்
அடுத்த கட்டுரை‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,