ஆன்மிகமும் சிரிப்பும்

வாழ்க்கையோட அர்த்தம் என்ன. அரைமணிநேரத்திலே சொல்லுங்க. ஒரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு

ஒரு குறிப்பிட்ட ஆன்மிக வழியை மதிப்பிடுவதற்கு உகந்த கேள்வி “‘நீங்கள் ஜோக் அடிப்பது உண்டா?” என்பது. அதன்பொருள் “உங்கள் ஆன்மிக, தத்துவக் கல்வியில் உங்கள் வழிமுறைகளையும் அடையாளங்களையும் கொள்கைகளையும் கேலி செய்துகொள்ள அனுமதி உண்டா?” என்றுதான்.

ஆசாரங்களையும், நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட மரபுகளில் அது முற்றிலும் அனுமதிக்கப்படுவதில்லை. அனுமதித்தால் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் அப்படியே மறைந்துபோகும். மாற்றமற்ற உறுதிப்பாடுகள் வழியாக நிலைகொள்பவை அவை.

’ஞானம் கிடைச்சதுமே ஒத்தக்கைய மட்டும் தட்டுங்க”

தத்துவத்தையும் தரிசனங்களையும் அடிப்படையாகக் கொண்ட மரபுகளில் மட்டுமே அத்தகைய நகைச்சுவை அனுமதிக்கப்பட முடியும்.ஏனென்றல் அறிவார்ந்த உசாவல்கள், மறுபரிசீலனைகள் ஆகியவற்றுக்கு அங்கே இடமுண்டு. நகைச்சுவை அறிவுசார்ந்தது.

ஆசாரவாதம் ஏன் நகைச்சுவையை அனுமதிப்பதில்லை? ஏனென்றால் அது மறுபரிசீலனைக்கு இடமில்லாதது. முழுஏற்பு அதன் நிபந்தனைகளில் ஒன்று. ’நான் மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிறேன், என்னை முழுமையாக அளிக்கிறேன்’ என்பது அதன் முதல் வரி.

”எப்பவாச்சும் எல்லாத்தையும் கடாசிட்டு அக்கடான்னு கன்சூமரிசத்திலே குதிச்சிடணும்னு தோணுறதுண்டா?”

ஆனால் மானுடர் எவராயினும் எதையும் முழுமையாக ஏற்பது அத்தனை எளிதல்ல. ஏனென்றால் பாதுகாப்புணர்வு என்பது ஒரு விலங்காகவே மானுடனுக்கு இயல்பானது. ஆகவே அவன் ஐயப்படுவான், பரிசீலனை செய்தபடியே இருப்பான்.

அந்த ஐயம் அவனுடைய ஏற்பின்மேல் வலுவாக முட்டிக்கொண்டிருக்கும். ஆகவே அதை அவன் அழுத்தி உள்ளே செலுத்துகிறான். அவன் ஆழுள்ளத்தில் புதைக்கிறான். அது இல்லையென எண்ணிக்கொள்கிறான். அதை மறந்தால் அதை கடந்தோம் என்று கருதுகிறான்.

கடைசியா கெளம்பிப் போறவர் ஞானஒளிய அணைச்சுட்டு போகவும்

ஆசாரவாதம் அந்த ஆழுள்ளத்து ஐயத்தை இரண்டு வழிகளில் கடக்கிறது. ஒன்று, மாறாத அன்றாடச் செயல்பாடுகளை [அனுஷ்டானங்களை] அது வலியுறுத்துகிறது. சந்தியாவந்தனம், குளியல் மற்றும் பூஜைகள், மந்திர உச்சாடனங்கள், கூட்டுப் பிரார்த்தனைகள், தனிநபர் ஜெபங்கள், ஐவேளை தொழுகைகள்  என பலவற்றை அது கண்டடைந்துள்ளது.

இரண்டாவது, அது உணர்ச்சிகரமான ஈடுபாட்டை உருவாக்கிக் கொள்கிறது. கண்ணீர்மல்கச் செய்யும் பிரார்த்தனைகள், உக்கிரமான கதைகள், ஆழமான தொன்மங்கள், தீவிரமான அழகுணர்வுகொண்ட நிகழ்வுகள் என அது அந்த உணர்ச்சிகரத்தை விரிவாக்கிக்கொண்டே செல்கிறது. பக்தி என்று நாம் சொல்வது அந்த உணர்ச்சிகர ஈடுபாட்டைத்தான்.

ஞானத்தோட உயரம் ஜாஸ்தி ஆகிறப்ப ஆக்ஸிஜன் மாஸ்க் அதுவா விழுந்திரும் இங்க

இவ்விரண்டிலும் ஓடிக்கொண்டிருக்கும் பொதுக்கூறு என்பது ’நான் உறுதியாக நம்புகிறேன்’ என்னும் அறிவிப்புதான். ஆசாரங்களிலும் பக்தியிலும் ‘நான் நம்புகிறேன், நான் ஏற்றுக்கொள்கிறேன், பிறிதொன்று எனக்கில்லை, என்னை அர்ப்பணிக்கிறேன்’ என்ற சொற்கள் மீளமீள ஒலிக்கின்றன. பக்திப்பாடல்கள் அனைத்துமே இந்தக் கருப்பொருள் கொண்டவை. பிரார்த்தனைக்கான அழைப்புக்கள், வழிபாட்டுக்கான மூலநூல் வாக்கியங்கள் எல்லாமே நான் நம்புகிறேன் என்னும் தன்னறிவிப்புகளே.

அந்த தன்னறிவித்தல் போதாது என நினைப்பவர்கள் புறத்தாரிடம் ஆவேசமாக வாதிடவும் புகுகிறார்கள். அந்த வாதிடுதல் முழுக்க முழுக்க அவர்கள் தங்களை தாங்களுக்கே நிறுவிக்கொள்ளும் முயற்சிதான். ‘இதுவே உண்மை, பிற எல்லாம் பொய்’ என்பது ஓர் உளநிலையின் இரண்டு பக்கங்கள்.

ஜென் பிறந்தநாள் வாழ்த்து அட்டை. ‘உன்னைப்பத்தின நினைப்பின்மையோட இருக்கேன்’

அவர்களுக்கு நேர் எதிரானது நகைச்சுவை. அவர்கள் இயல்பில் நகைச்சுவை உணர்ச்சிகொண்டவர்களாக இருக்கலாம். அவர்கள் உலகிலுள்ள அனைத்தைப்பற்றியும் வேடிக்கைபேசி சிரிக்கலாம். அவர்களின் அந்தரங்கமான நம்பிக்கை நகைச்சுவைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும். அதை ஒரு வர்மமுடிச்சு போல பாதுகாப்பார்கள். அதில் மெல்லத் தொட்டால்கூட உச்சகட்ட வலி கொள்வார்கள்.

உலகம் முழுக்க ‘மதப்புண்படுதல்’ வருவது அங்கிருந்துதான். ஒருவர் தன் நம்பிக்கையைப் பற்றி மறுத்தோ கேலியாகவோ ஏதேனும் சொல்லிவிட்டால் ஒருவர் உச்சகட்ட கோபவெறியோ துயரோ அடைவது அடிப்படையில் ஓர் அபத்தமான செயல்பாடு. என் நம்பிக்கையை நீ பேணவேண்டும் என இன்னொருவரிடம், பலசமயம் நேர் எதிரானவர்களிடம் கோருவதிலுள்ள பொருளின்மை அதை முன்வைப்பவர்களுக்கு உறுத்துவதே இல்லை.

ஜென் ஜிபிஎஸ். 1. உன்னோட ஆனந்தத்தை ஃபாலோ பண்ணு 2. தடையே உனது பாதை 3. அதைத் தேடிப்போனா நீ அதிலே இருந்து விலகிப்போறே

மறுப்பவர், கேலிசெய்பவர் தன் தரப்பைச் சொல்கிறார். தேவையில்லை எனில் முற்றிலும் உதாசீனம் செய்யத்தக்கச் செயல்பாடு அது. ஆனால் நம்பிக்கையாளர்கள் எப்போதும் மறுப்பாளர்களைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அஞ்சுகிறார்கள், ஆகவே சீற்றம் கொள்கிறார்கள்

ஏனென்றால், உண்மையில் மறுப்பாளர்களின் வசை,கேலி, மறுப்பு ஆகியவற்றை தங்கள் ஆழத்திலிருந்து எழுந்துசென்று சந்திக்கும் ரகசியக் கண்ணும் காதும் தங்களுக்குள் இருப்பதை நம்பிக்கையாளர் அறிவார்கள்.முருகனைப் பற்றிய ஒரு கேலியை உடனடியாகக் கவனிப்பவர் முருகபக்தர்தான். அவருள் இருந்து ஒரு ஆழ்மனம், ஒரு அழுத்தப்பட்ட இருள், அந்த கேலியை உடனே தானும் செய்கிறது. மறுகணமே குற்றவுணர்வுகொண்டு கூசுகிறது. அந்த குற்றவுணர்ச்சியில் இருந்தே அது சீற்றம் கொள்கிறது.

ஞானம் கிடைச்ச பிறவு நீ உன் ஃப்ரண்ட்ஸ் கூட வெளையாடப்போகலாம்…

இனிமேல் கவனியுங்கள், நீங்கள் முருகனைக் கேலிசெய்தால் அந்தக் கேலிக்கு அரைக்கணம் ஒரு  முருகபக்தர் புன்னகைப்பதை நீங்கள் காண்பீர்கள். மறுகணம்தான் அவர் சீறி எழுகிறார். இது யோகம் பயிலும் எவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உண்மை. நம் உள்ளம் பலவாறாகப் பிரிந்து ஒன்றையொன்று மறுத்தே இயங்க முடியும்.

அறிவின் வழி அல்லது ஞானத்தின் வழி என்பது பலவாறாகப் பிரிந்து பிரிந்துசெல்லும் கிளைகளின் பின்னலால் உருவாவது. ஏற்கப்படுவதை உடனே அகம் மறுக்கிறது. ஏற்பும் மறுப்பும் முரண்பட்டு ஒரு சமரசமாகவே நிலைபாடு உருவாகிறது. உடனே அதற்கான மறுப்பு நம் அகத்தில் உருவாகிறது. எதுவும் மாறாமல் நிலைகொள்வதில்லை. எதுவும் உறுதியாக நீடிப்பதுமில்லை.

”எப்ப பாத்தாலும் இதை கடிச்சுக்கோ, அதை கடிக்காதே. இதப்பாத்து குரை அதைப்பாத்து குரைக்காதே. இதை தின்னு, அதை தின்னாதே.என்னோட இருத்தலே வெறும் தெரிவுகளா ஆயிட்டுது, சே”

இந்த அகவிவாதம் எப்போதுமே நம்முள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த அகவிவாதத்தை எளிதாக்க, இனிதாக்க நகைச்சுவை இன்றியமையாதது. நகைச்சுவை இன்றி அந்த அகவிவாதம் நிகழுமென்றால் அது கொந்தளிப்பாக, அகவன்முறையாகவே இருக்கும். அது அறிவார்ந்த மெய்யியல் தேடலுக்கு மிகமிக ஆபத்தானது.

அத்தகைய கொந்தளிப்பு நிலை தேவையில்லாத மிகையுணர்ச்சிகளை அகத்தில் நிறைக்கிறது. சிந்தனைக்குத் தேவைப்படும் சமநிலையை இல்லாமலாக்குகிறது. ஒரு சிந்தனையை மிகையாக தூக்கி இன்னொன்றை தூக்கிவீசுகிறது. நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் வன்முறை அது.

நான் இப்ப நினைக்காததைத்தான் நீங்களும் நினைக்காம இருக்கிறீங்களா?

அகவிவாதத்தில் நகைச்சுவை ஓர் உயவுப்பொருள். எண்ணங்கள் உரசிக்கொண்டு அனல்கொள்வதை அது தடுக்கிறது. இயல்பான எளிதான இயக்கம் நிகழச்செய்கிறது. நகைச்சுவை உள்ளதா என்பதே ஒர் அறிவார்ந்த அகவிவாதம் நிகழ்கிறதா என்பதற்கான சோதனைக் கேள்வி.

இரண்டு வகையில் நகைச்சுவை பயனளிக்கிறது. ஒன்றின்மேல் நமக்கு ஏற்படும் மிகையான ஈடுபாட்டை அது குறைக்கிறது. தேவையான விலக்கத்தை உருவாக்கி அதை தெளிவாகப் பார்க்கச் செய்கிறது. அதாவது ‘செண்டிமெண்ட்’ களை இல்லாமலாக்கி நம்மை மெய்யின் ஒளியில் ஆராயவைக்கிறது.

ஒரு போன் தன்னைத்தானே செல்பி எடுக்கலேன்னா அது எப்டி ஸ்மார்ட் ஆகும்?

இன்னொன்று மேலும் நுட்பமானது, ஒன்றை நாம் ஆழமாக ஏற்கவேண்டும் என்றால் அதை நகைச்சுவையாக, கேலியாக ஆக்கிக்கொள்வது உதவுகிறது. நகைச்சுவையில் எப்போதுமுள்ளது எதிர்மறைத்தன்மை. அது எப்படி ஏற்பை அளிக்கும் என்பது ஒரு கேள்விதான். ஆனால் நடைமுறையில் அளிக்கிறது என்பது ஓர் உண்மை

அறிவார்ந்த அகம் கொண்ட ஒருவர் முன் ஒரு கருத்து அல்லது ஒரு படிமம் முன்வைக்கப்பட்டால் உடனே அவருக்குள் அதற்கு எதிரான ஓர் எண்ணமும் உருவாகிறது. அதை தர்க்கபூர்வமாக மறுக்க அவர் இயல்பாகவே முயல்கிறார். அந்த எதிர்ப்பை முறியடித்து அக்கருத்து அல்லது படிமம் தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும். ஆனால் எந்நிலையிலும் அவருள் அது ஒரு ஏற்பு-மறுப்பு நிலையிலேயே இருக்கும்.

‘’நான் யார்?” “இவன் யார்?”

ஏனென்றால் அந்த மறுப்பின் அடிப்படையாக இருப்பது அவருடைய தன்னிலை. தன்னிலை உச்சமடைந்தால் ஆணவம். அதை அவர் விடவே மாட்டார், விட்டால் அவர் தன் தனித்தன்மையை இழப்பதுபோல. ‘அருமையான கருத்துதான், ஆனா…’ என்பதே நம்மில் பெரும்பாலானவர்கள் தங்கள் ஏற்பைக்கூட முன்வைக்கும் சொற்றொடராக இருக்கிறது.

ஒவ்வொரு கருத்துடனும் படிமத்துடனும் இணைந்து அதை ஆற்றலிழக்கச் செய்யும் ‘ஏற்பவனின் ஆணவம்’ என்னும் அந்த நச்சுத்துளியை வீரியமிழக்கச் செய்யும் ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு. ஒரு கருத்தை நாம் வேடிக்கையாக ஆக்கும்போது நம்முள் இருக்கும்  அதன் மீதான மறுப்பையே வெளிப்படுத்துகிறோம். அதாவது நாம் நம் ஆணவத்தால் செய்வதை விளையாட்டாக மாற்றிச் செய்கிறோம். அது அந்த ஆணவத்தை சிதறடிக்கிறது, கரைத்தழிக்கிறது. அக்கருத்து கலங்காமல், சிதையாமல் நம்மை வந்தடைய வழிவகுக்கிறது.

”வாழ்க்கைநெடுஞ்சாலையிலே அவசரமா போறப்ப அப்பப்ப கொஞ்சம் நின்னு வழியிலே பூத்திருக்கிற அழகான ரோஜாக்களையும் தின்னுடணும்”

ஒன்றை எதிர்கொள்ளும்போது நம்மிடமிருந்து எழும் அதை வெளியே தள்ளும் விசையை சிரிப்பாக ஆக்கிக்கொண்டு அதை எதிர்கொள்கையில் இன்னும் இயல்பானவர்களாக நாம் ஆகிறோம். இன்னும் இனியதாக அந்தக் கல்வி மாறிவிடுகிறது. அதிலிருந்து கசப்பு மறைகிறது. வெப்பம் குளிர்கிறது

ஆனால் இரு எச்சரிக்கைகள் தேவை. அந்த நகைச்சுவையே வன்மமும் கீழ்மையும் கொண்டதாக இருக்கலாம். அவ்வாறு இருக்குமென்றால் நாம் கீழ்மை நோக்கிச் செல்கிறோம். மூர்க்கமான நிராகரிப்பே அதன் வழி என்றால் பலசமயம் நமக்கு எதுவுமே எஞ்சாமலாகிறது.

”குருவெல்லாம் ஓல்ட் ஃபேஷன். இப்ப எங்க பேரு ஞான ஆலோசகர்”

அந்நகைச்சுவை அச்சிந்தனையை அல்லது படிமத்தை ‘சல்லிசாக்குவது’ என்றால் அதுவும் அழிவுச்செயல்பாடுதான். வேதாந்தக் கல்வியில் trivializing என்பது மிகப்பெரிய எதிர்மறைச் செயல்பாடாகச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் இங்கே கற்கப்படுவது மிக நுட்பமானது. அதை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தே பெரிதாக்கி கையாளவேண்டியிருக்கிறது. அதை சில்லறைத்தனமாக அணுகினால் அது இல்லையென்றே ஆகிவிடும்.

ஆகவே எதிர்மறைப் பண்பு இல்லாத, சிறுமையாக்காத நகைச்சுவையே உகந்தது. பலசமயம் அத்தகைய நகைச்சுவை மிக ஆழத்தில் ஒரு கவித்துவத்தை கொண்டிருக்கிறது. ஓர் அற்புதமான உதாரணம் போல அந்தக் கருத்தை விளக்கி நிற்கிறது. அக்கருத்தை இன்னொருவருக்குச் சொல்ல மிகமிக உகந்த வழியாக தெரிகிறது

”கொஞ்சம் அந்த செகண்டிலே அப்டியே இருந்திட்டிருங்க. இந்த காலை பேசிடறேன்”

வேதாந்தமும், பௌத்தமும்தான் சிரிப்புக்கு பெருமளவு இடமளிப்பவை. அன்றும் இன்றும் மிகச்சிறந்த நகைச்சுவைகள் அவை சார்ந்தே உள்ளன. ஏனென்றால் சிரிக்கச் சிரிக்க அவை அளிக்கும் மெய்ஞானம் பெருகுகின்றது. அவற்றின் ஆதாரமான கொள்கைகள் ஒரு நகைச்சுவையாலும் விளக்கத்தக்கவை.

ஒருவேளை ஒருவகை நகைச்சுவைதானோ என்னவோ. இல்லாத ஒன்று இப்படியெல்லாம் ஆகவேண்டும் என்றால் அதற்கு நல்ல நகைச்சுவையுணர்ச்சி இருக்கவேண்டும்.

முந்தைய கட்டுரைகல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்
அடுத்த கட்டுரைசிதம்பரம்- கடிதம்