அறம்- கடிதம்

அறம் விக்கி

வணக்கம் அண்ணா.

கவிதை என்கிற வட்டத்தைத் தாண்டி கதைகள், கட்டுரைகள் பக்கம் வந்த போது நாளிதழ்கள் வெளியிடும் சிறப்பு மலர்கள் மூலமாக உங்களின் கதைகள் எனக்கு அறிமுகமானது. அந்த இதழ்களில் இருக்கும் பிற கதைகளைப் போல உங்கள் கதையில் மனம் ஒட்டாது. கடந்து விடுவேன். எனக்கிருந்த வாசிப்பு பயிற்சியின்மை அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். உங்கள் கதைகளை அணுகுவது என்னளவில் சிரமமாக இருந்த சமயத்தில் நண்பர் ஒருவர் ஏழாம் உலகம் நாவலை தந்தார். சில பக்கங்கள் மட்டுமே கடந்த நிலையில் இன்றும் அந்நாவல் வாசிப்பிற்க்காக காத்திருக்கிறது. இந்த சூழலில் அறம் கதைகள் வந்தது. உங்களின் இணைய பக்கத்தில் வாசித்தேன்.

நேரடி கதைகள் என்பதால் அதனோடு என்னால் ஒட்ட முடிந்தது. அந்தக் கதைகள் என்னுள் ஏற்படுத்திய அக எழுச்சி முன் எப்போதும் நான் உணராதது. அந்தக் கதைகளும், மாந்தர்களும் உறங்கவிடாமல் செய்தனர். இன்றும் கூட எங்கேனும் அறம் சார்ந்த நிகழ்வுகளை அல்லது அதை தன்னளவில் நிறைவேற்றும் மனிதர்களைக் காணும் போதெல்லாம் அறம் தொகுப்பு நினைவில் வந்து விடுகிறது. பலமுறை தொகுப்பை வாசித்த போதும் முன்பு வாசித்த கதைகள் தானே என்ற உணர்வை அவைகள் தந்ததேயில்லை. ஒவ்வொருமுறையும் அது எனக்குள் ஏதோ ஒன்றை ஊடேற்றிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், இவை குறித்தெல்லாம் எழுத ஏதோ ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.

சமீபத்திய அறுவை சிகிச்சையால் கிடைத்த முழு ஓய்வையும், வலியையும் தின்று செரிக்க மீண்டும் அறம் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அறம், சோற்றுக் கணக்கு, வணங்கான், யானை டாக்டர், நூறு நாற்காலிகள், ஓலைச் சிலுவை ஆகிய கதைகளில் வரும் கதை மாந்தர்களை என் பால்யத்தில் வேறு வேறு களங்களில் கண்டிருக்கிறேன். அவர்களை இவர்களோடு ஒப்பிட்டு பார்த்து வியக்கிறேன்.  சில கதைக் களங்கள் என் மண் சார்ந்தவைகளாக அமைந்திருக்கின்றன. எங்கும் வியாபித்துக் கிடக்கும் அறம் சார்ந்த மனிதர்களை அறத்தின் உண்மை முகத்தோடு வாசிக்கத் தந்திருக்கிறீர்கள்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு கதையை வாசித்து விடுவேன். அந்தக் கதையை பவா சொல்லியிருந்தால் அதையும் கேட்டு விடுவேன்.  இந்த சமூகம் எப்படியான கூர்மையோடு பிசகின்றி தன்னை நகர்த்தி வந்திருக்கிறது.  அதைக் கொண்டு செலுத்திய மனிதர்களின் மிச்ச சாயல்கள் இன்று இல்லாமல் போய்விட்டதா? அல்லது வேக வாழ்க்கையில் நமக்கான அறத்தையும் தொலைத்து அப்படியான மனிதர்களையும் கண்டுணராது போய்விடுகிறோமா? என்ற கேள்வி பின்னிரவு வரை என்னுள் ஓடிக் கொண்டே இருக்கும்.

உண்மை தரும் சூட்டை கைமாற்ற மொழியில்லாத போதும் அறம் எனக்குள் கிளர்த்திக் கொண்டிருக்கும்,  நீர்த்துப் போகாது நிறைந்திருக்கும் அக எழுச்சியை பதிவாக்கிவிட வேண்டும் என நினைக்கிறேன். மீதி கதைகளையும் மீள் வாசிப்பு செய்து செய்வேன்.  உங்களின் கதைகளுக்குள் நுழைவதற்கான வாசல் “அறம்” கதைகள் என நீங்கள் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. சரடைக் கண்டு கொண்டேன். இனி அதன் வழி உங்களின் இதர படைப்புகளுக்குள்ளும் நுழைய முடியும் என நம்புகிறேன்.

சிநேகமாய்

மு. கோபி சரபோஜி

அன்புள்ள கோபி,

அறம் கதைகளின் முக்கியமான சிறப்பம்சம் என்ன? சாதாரணமாக கதைகளை வாசிக்கையில் பொதுவாசகன் ‘இது கதைதான்’ என்னும் தன்னுணர்வு கொண்டிருக்கிறான். கேளிக்கை எழுத்துக்களை வாசித்துப் பழகியவர்களால் அதை கதை மட்டுமே என்று பார்க்கும் உளநிலையில் இருந்து வெளிவர முடிவதில்லை. அறம் கதைகள் கதைகள் அல்ல, மெய்யான மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து எழுந்தவை. ஆகவே அந்த நம்பிக்கையின்மை இல்லாமலாகிறது. கதைகளை உணர்வுபூர்வமாக வாசிக்க முடிகிறது ஆகவே இலக்கியத்திற்கு அவை நுழைவாசல்கள்.

ஆனால் தேர்ந்த இலக்கியவாசகன் ஒன்றை அறிவான். இலக்கியம் என்பது கதைதான், ஆனால் பொய் அல்ல. நம் வாழ்க்கையில் நாம் உண்மை என நம்பும் பலவிஷயங்கள் புனைவுகளே. வரலாறு, சமகால அரசியல், கொள்கைகள் என பலவும். இன்று பொருளியலேகூட புனைவுகள்தான். இலக்கியம் இன்னொரு புனைவு. புனைவு என்பது பொய் அல்ல, உண்மையை செறிவாக சொல்லி கற்பனையில் அதை நிறுவும் ஒரு வழிமுறை மட்டுமே. ஆகவே அவன் இலக்கியத்தை ’புனைவுண்மை’ என்றுதான் எடுத்துக்கொள்வான்

ஜெ

அறம்- கடிதங்கள்

அறம்- கடிதங்கள்

அறம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 3