கே.ஜி.ஜார்ஜ்- ஆவணப்படம்

இரைகளும் இலக்கணமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுக்கு கே ஜி   ஜார்ஜ் அவர்களை குறித்து ஒரு கடிதம் எழுதவேண்டும் என்றெண்ணி, தங்களது வலைத்தளத்தை திறந்தேன், ஆச்சர்யமாக அதில் முதல் கட்டுரையே அவரை பற்றி நீங்கள் எழுதியதாக இருந்தது. (இரைகளும் இலக்கணங்களும்)

நான் சொல்ல வந்தது என்னவென்றால் சில நாட்களுக்கு முன்பு அவரை பற்றிய ஒரு முழு நீளஆவணப்படம்  ” 8 1/2  INTERCUTS LIFE AND FILMS OF KG GEORGE”  மலையாளத்தில் வெளியாகியுள்ளது.

தங்கள் தளத்தின் மூலமே அவர் படங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.  மேலும் யவனிகா, இரகள் மேளா, ஆதாமிண்டே வாரியெல்லு போன்ற படங்களை பார்த்துள்ளேன்.

மலையாளத்தின் மிகப்பெரிய ஆளுமைகளும், சினிமா பிரபலங்களும் அவர் படைப்புகளை மிக அருமையாக அலசி ஆராய்கிறார்கள்.  ஒரு விறுவிறுப்பான சினிமா போல் இந்த ஆவணப்படத்தை ரசிக்கும்படியாக எடுத்துள்ளார்கள்.

இந்த ஆவணப்படம் குறித்த தங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்

அன்புடன்

பா. சரவணகுமார்
நாகர்கோயில்

அன்புள்ள ஜெ

கே.ஜி.ஜார்ஜ் பற்றி இன்று ஒரு கவனம் உருவாகியிருப்பதும், அதைப்பார்க்க அவர் இருப்பதும் ஒரு நல்ல விஷயம். நல்ல படங்களை எடுத்த காலகட்டத்தில் அவர் கவனிக்கப்படவில்லை. அதற்கு தனிப்பட்ட காரணம் இல்லை. அன்றைய தேடல் சினிமா என்ற கலையின் சாத்தியக்கூறுகளைப் பற்றித்தான். சினிமாவின் பேசுபொருள் அன்று பெரிதாக கவனிக்கப்படவில்லை

அவர் கவனிக்கப்படாததில் அவருக்கும் பங்குண்டு. அவர் எடுத்த படங்களில்  மற்றொராள்,இரைகள்  ,யவனிக ,கோலங்கள்  ,உள்க்கடல் ஆகியவை மட்டுமே நல்ல படங்கள். பஞ்சவடிப்பாலம் ஒரு முயற்சி. மற்றவை மோசமான படங்கள். சில படங்களை உட்கார்ந்து பார்க்கவே முடியாது.

கே.ஜி.ஜார்ஜ் திரைப்படம் என்ற கலைமேல் அழுத்தமான பற்று இல்லாத கலைஞர். அவருடையது ஒரு நவீனத்துவ மனம். அந்த மனதை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாக அவர் சினிமாவைக் கண்டார். ஆகவே அவருடைய படங்களெல்லாம் சினிமாக்களாக முழுமை பெறாதவை – அவருடைய நல்ல படங்களெல்லாம் திரைக்கதையின் வலிமையால் நிலைகொள்பவைதான்.

ஜார்ஜுக்கு நாடகக்கலையில் ஈடுபாடுண்டு. அவர் தொடர்ந்து மேடைநாடகத்தில் இருந்து நடிகர்களை சினிமாவுக்குக் கொண்டுவந்தார்- திலகன் போல. ஆனால் அடூர் போன்றவர்கள் அப்படி அல்ல. அவர்கள் சினிமாவுக்கான முகங்களையே தேடிச்சென்றார்கள். இந்த நாடக அம்சம் ஜார்ஜின் படங்களில் உண்டு. அது சிறப்பாக வெளிப்படும்போது படம் நன்றகா அமைகிறது. இல்லாதபோது சலிப்பூட்டுகிறது

ஜெயராமன்

முந்தைய கட்டுரைசம்ஸ்காரா- ஒரு கட்டுரை
அடுத்த கட்டுரைகாந்தி, இந்துத்துவம், கியூபா