சிதம்பரம்

மலையாள எழுத்தாளர்களில் சி.வி.ஸ்ரீராமன் தனித்தன்மை கொண்டவர். திரிச்சூர் அருகே போர்க்குளம் என்னும் ஊரில் 1931ல் பிறந்தார். சட்டப்படிப்பு படித்தபின் அந்தமான் நிக்கோபாரில் வங்காளப் போர் அகதிகளை மறுகுடியேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் ஊருக்கே திரும்பி குன்னங்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றினார்

ஒருங்கிணைந்த கம்யூனிஸ்டுக் கட்சியிலும், பின்னர் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் உறுப்பினராக இருந்த சி.வி.ஸ்ரீராமன் போர்க்குளம் பஞ்சாயத்து தலைவராகவும்,சொவ்வன்னூர் பிளாக் பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றியவர். பின்னர் கேரள சாகித்ய அக்காதமி தலைவராகவும் பணியாற்றினார்.

சிறுகதைகள் மட்டுமே எழுதியவர் சி.வி.ஸ்ரீராமன். மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். நேரடியான உணர்ச்சிகரமான கதைகள் அவை. ஆகவே அவை மிகப்பெரிய வாசகவட்டத்தையும் அடைந்தன.

சி.வி.ஸ்ரீராமன்

சி.வி.ஸ்ரீராமன் கேரளக் கலைப்பட இயக்கத்துக்கு அணுக்கமானவர். அவருடைய பல கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. வாஸ்துஹாரா [ஜி.அரவிந்தன்] புருஷார்த்தம் [கே.ஆர்.மோகனன்] பொந்தன்மடா [டி.வி.சந்திரன்] போன்றவை அவருடைய கதைகள். ஷாஜி என் கருண் இயக்கிய பிறவி படத்தில் தோணிக்காரராக நடித்திருக்கிறார்

சி.வி.ஸ்ரீராமனின் புகழ்பெற்ற கதை சிதம்பரம். அதை ஜி.அரவிந்தன் சினிமாவாக எடுத்தார். அரவிந்தனே தயாரிப்பாளர். மிகக்குறைந்த செலவில், முற்றிலும் இயற்கை ஒளியில் ஏழெட்டுநாட்களில் படம் தயாரிக்கப்பட்டது, திரைவிமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பல கேரள திரைவிருதுகளையும் பெற்றது. ஒளிப்பதிவு ஷாஜி என் கருண்.

உயர்தரப் பதிவாக யூடியூபில் கிடைக்கிறது.  ‘சப்டைட்டில்’ இல்லை. ஆனால் தேவையில்லை. அரவிந்தனின் படங்களில் வசனங்கள் பெரும்பாலும் பொருளற்ற அன்றாட வார்த்தைகள் மட்டும்தான். கணிசமான வசனங்கள் தமிழ். கோபி, ஸ்மிதா பாட்டில் நடித்திருக்கிறார்கள். அன்று இளம் நடிகராக இருந்த ஸ்ரீனிவாசன் முக்கியமான கதாபாத்திரத்தை செய்திருக்கிறார் 

ஜி.அரவிந்தன்

மூலக்கதையில் ஒரு வரி வரும். ’பாவத்துக்கு பிராயச்சித்தம் உண்டு என்பது ஒரு பொய். இரண்டும் வேறுவேறு, ஒன்று இன்னொன்றால் எப்படி இல்லாமலாக்கப்படும்?’ அதுதான் கதையின் மையம். குற்றவுணர்வும் தனிமையும் கொண்டு அலையும் மையக்கதாபாத்திரமான சங்கரன் வானம் முடிவில்லாதது, ஒட்டுமொத்தமாக மானுடவாழ்க்கையே மிகச்சிறியது, அதில் பாவமும் துளியினும் துளியே என உணர்வதுதான் கதையின் உச்சம்.

கதையின் இறுதித்தருணம் சிதம்பரத்தில் சங்கரன் காணும் ஓர் உருவெளிக்காட்சி. ஒரு கணநேரக் கண்மயக்கம். அதைநோக்கிச் செல்லும் ஏழெட்டுப் பக்க அளவுள்ள கதை அது. அதை அரவிந்தன் திரைவடிவில் கொண்டுவந்திருக்கிறார்

படம் வெறும் காட்சிகள் வழியாகவே செல்கிறது. வசந்தத்தின் பொன்னொளி நிறைந்த மாட்டுப்பெட்டி. அங்கே மிரண்ட மான் போல வந்துசேரும் சிவகாமி. விலக்கப்பட்ட எல்லைகள். அவற்றை அவள் கடக்கும் மர்மமான தருணங்கள்.மூன்று கதாபாத்திரங்களின் உடல்மொழியில் உள்ள நுட்பமான வெளிப்பாட்டை நம்பியே படம் அமைந்துள்ளது. சிவகாமியின் மிரட்சியும், மலர்வும். சங்கரனின் அகக்கிளர்ச்சி. முனியாண்டியின் எச்சரிக்கை. அவை தொடர்ச்சியாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கோபி, ஸ்மிதா பாட்டில், ஸ்ரீனிவாசன் மூவருமே அதை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்

இந்தப்படம் இன்று முதன்மையாக ஸ்மிதா பாட்டிலின் அழகான பாவனைகளுக்காகத்தான் பார்க்கப்படவேண்டும். மிரட்சி, கிளர்ச்சி, மலர்வு, மயக்கம் என அவர் இந்தப் படத்தினூடாக உருமாறிக்கொண்டே இருக்கிறார்.

இப்போது பார்க்கையில் சினிமா அச்சிறுகதையை தவறவிடும் இடம் சங்கரன் கொள்ளும்  அகக்கொந்தளிப்பை, கைவிடப்பட்ட நிலையை படத்தால் போதுமான அளவுக்குக் காட்ட முடியவில்லை என்பதுதான். நிகழ்வுகளை முழுமையாக தவிர்த்துவிடுவது அரவிந்தனின் பாணி. வெறும் ‘அன்றாடப் புழக்கம்’ மட்டுமே அவர் கதைகளில் இருக்கும். உரையாடல்கள், உணர்வு வெளிப்பாடுகள், கதாபாத்திர மோதல்கள் முற்றாக தவிர்க்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் சங்கரன் கொந்தளிப்புடன் ஓடுவதும், சிதம்பரத்தில் அவன் அலைவும் நீண்டநாட்களுக்குப் பின்னரும் கண்களில் நிற்பவை. ஆனாலும் எனக்கு கதை ஒரு படிமேல் என்றே படுகிறது

101 மலையாளத் திரைப்படங்கள்

முந்தைய கட்டுரைஇலக்கியத்தில் சண்டைகள்
அடுத்த கட்டுரைநன்னம்பிக்கை- கடிதம்