மீண்டும் நோய், மீண்டும் உறுதி

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

மீண்டும் ஒரு கோவிட் உச்சநிலைக் காலகட்டம். என் வீட்டிலேயே எனக்கும் என் மகனுக்கும் வந்து அகன்றுவிட்டது. எத்தனைபேருக்கு கொரோனா மெய்யாக வந்து தெரியாமல் சென்றது என்றே தெரியாத சூழல். தனிப்பட்ட முறையில் வரும் செய்திகள் பதற்றமளிப்பவை.

சென்ற கொரோனா அலையை தமிழகத்திலும், கேரளத்திலும் பொதுசுகாதாரத்துறை மிக வெற்றிகரமாக எதிர்கொண்டது. நோயாளிகளை கணக்கு வைத்துக் கொள்வது, தொடர்ந்து தொடர்புகொண்டு  செய்திகளை பதிவுசெய்வது ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெற்றன. நான் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். என் மகனும் அங்கேதான். சிகிச்சை மிகச்சிறப்பாகவே இருந்தது.

நான் என் மகனிடமிருந்து அறிந்தவரை சென்ற பத்துநாட்களுக்கு முன்புவரைக்கும் கூட அரசு மருத்துவமனைச் சிகிழ்ச்சை நன்றாகவே இருந்தது. ஆனால் சென்ற ஐந்தாறுநாட்களாக நம் சுகாதாரத்துறை நெரிபடத் தொடங்கியிருப்பதை நண்பர்கள் சொல்லும் செய்திகள் காட்டுகின்றன. ஏனென்றால் எண்ணிக்கை திடீரென்று பெருகிவிட்டது. ஊழியர்களின் எண்ணிக்கை வரையறைக்கு உட்பட்டது. அதோடு அவர்கள் ஒரு முழு ஆண்டு உழைப்பால் சற்றே சோர்வும் சலிப்பும் அடைந்திருக்கிறார்கள்.

ஓர் உடலில் வழக்கமாக இருக்கும் நோய்கள் உடல் பலவீனமடையும்போது பெருகும். அதேபோல இந்த நெருக்கடிச் சூழலில் நம் சமூகத்திலுள்ள அரசியல் காழ்ப்புக்கள், சாதிக்காழ்ப்புக்கள் பெருகி ஆட்டம் போடுகின்றன. குற்றம்சாட்டல்கள் திரும்பக் குற்றம்சாட்டல்கள் நிகழ்கின்றன.

எதையுமே தங்கள் அரசியலுக்குக் கருவிகளாக மட்டுமே காண்பது, வேறெதையுமே காண மறுப்பது, அதையன்றி எதையுமே எப்போதுமே பேசாமலிருப்பது, அதை உச்சகட்ட காழ்ப்பும் கசப்புமாக மட்டுமே முன்வைப்பது நம் அரசியலாளர்களின் இயல்பு. வலதும் இடதும் இதில் ஒன்றின் இரு பக்கங்களே. நம்மைப் போன்ற பொதுமக்களுக்கு இவர்கள் உருவாக்கும் காழ்ப்பும் கசப்பும் நம் அன்றாடத்தை நச்சுமயமாக்கிவிடுபவை.

முதன்மைக் குற்றம் நம்மிடம். சென்ற சில மாதங்களில் கண்ணில்படும் முதியவர்களிடமெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா என்று கேட்டேன். அனைவருமே இல்லை என்றே சொன்னார்கள். ஊசி தேவையற்றது என்றும், கொரோனா போய்விட்டது என்றும் சொன்னார்கள். இரண்டு மாதங்கள் தொடர்ந்து பேசியும் முதியவர்களான என் மாமனார், மாமியாரை ஊசிபோட வைக்க என்னால் இயலவில்லை. சென்ற 13 ஆம் தேதிதான் அவர்கள் ஊசிபோட்டுக்கொண்டார்கள்.

சென்ற பல நாட்களாக ஆட்டோக்காரர்களிடம் கேட்கிறேன். எவருமே போடவில்லை என்பதுடன் போடத்தேவையில்லை என்றும் சொல்கிறார்கள். ஊசிக்குப் பின் வரும் காய்ச்சலை ’சைடு எஃஃபக்ட்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஊடகம் அவர்களை அச்சுறுத்திவிட்டிருக்கிறது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை உட்பட எங்கும் எவரும் முகக்கவசம் அணியவில்லை. கைகளை தூய்மை செய்துகொள்ளவில்லை. அதைப்பற்றிய பேச்சே கேலிக்குரியதாக இருந்தது. குடும்பவிழாக்கள், திருவிழாக்கள் மிகுந்த நெரிசலுடன் நடைபெற்றன. சிலநாட்களுக்கு முன் என் நண்பரின் தந்தை கொரோனாவினால் மறைந்தார். அவர் முக்கவசம் போடுவதை கிண்டல் செய்ததையும், தன் மகள் போடுவதை தடுத்ததையும், குடும்ப விழாக்களுக்குச் சென்றதையும் நண்பர் சொன்னார். வியப்பாக இருக்கவில்லை. என் உறவினர்களே அப்படித்தான் இருக்கிறார்கள்.

அத்துடன் தேர்தல் கொண்டாட்டம். தேர்தல் பிரச்சாரம் சென்ற பல மாதங்களாகவே நடைபெற்றது. ஊர்ச்சபைக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள். தெருவெங்கும் மக்கள் ததும்பிக் கொண்டிருந்தனர். கொரோனா பேருருக் கொண்டு திரும்பி வந்ததில் வியப்பே இல்லை. இத்தகைய மக்கள்தொகை மிக்க நாட்டில் மிகப்பெரும்பாலானவர்கள் இப்படி இருக்கையில் எந்த அமைப்பும் அதை தாக்குப்பிடிக்காது.

இன்று, கொரோனா உச்சமடைந்த பின்னரும்கூட தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் நிகழ்கிறது. நாகர்கோயிலில் நான் விசாரித்தபோது சிறுபான்மையினர் இந்த தடுப்பூசி சிறுபான்மையினருக்கு எதிரானது என்னும் எண்ணம் கொண்டிருப்பது தெரிகிறது. பல போஸ்டர்களும் கண்ணுக்குப்பட்டன. அவற்றை பகிரவிரும்பவில்லை.

இப்படி ஒரு சூழலை உருவாக்கியபின் நாம் நம் மருத்துவக் கட்டமைப்பை குற்றம்சொல்வதில் பொருளே இல்லை. அதற்கான தகுதி நமக்கில்லை. என் வாசகர்கள் நண்பர்கள் உட்பட பல மருத்துவ ஊழியர்கள் உச்சகட்ட வெறியுடன் களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தகட்டமாகவே நாம் அரசைக் குற்றம்சாட்டவேண்டும். முதல் அலைக்குப்பின் அரசு ஆழ்ந்த மெத்தனத்திற்குச் சென்றது, அடுத்த அலையை எதிர்பார்த்துத் திட்டமிடவில்லை என்பது உண்மை. நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் எந்தத்துறையிலும் மைய அரசு நிபுணர்களை கலந்தாலோசிப்பதோ, அவர்களின் கூற்றை ஏற்றுச் செயல்படுவதோ இல்லை. முழுக்கமுழுக்க முச்சந்தி அரசியல்வாதிகளாகவே மைய அரசின் பொறுப்பிலிருப்பவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

தேர்தல்பிரச்சாரத்தை இத்தனை பெரிய மக்கள்திரள்களுடன் நடத்த முடிவெடுத்தது மிகப்பெரிய பிழை. அதன் விலையையே கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலை திரள் இல்லாமல், மின்னணுப் பிரச்சாரங்கள் வழியாகவே நடத்தியிருக்க முடியும். உண்மையில் இப்போது தேர்தலுக்கு இந்த மாநாடு, ஊர்வலம், மக்கள்சபைக் கூட்டம் எதுவும் தேவையே இல்லை. அவை பிரச்சாரங்கள் அல்ல, பலம் காட்டல்கள் மட்டுமே.

கும்பமேளாவை அனுமதித்ததும் பெரும்பிழை. கும்பமேளா அடிப்படையில் ஒரு பெரிய வணிகப்பரப்பு. அதை நம்பி ஓர் பொருளியலே உள்ளது. ஆகவே எத்தனை அழுத்தம் வந்திருக்குமென ஊகிக்க முடிகிறது. ஆனால் நிபுணர்களின் ஆலோசனையை கேட்டிருக்கவேண்டும்.

தடுப்பூசி இருக்கையிலேயே இத்தனை பெரிய அலை வந்தது என்பது முழுக்க முழுக்க ஆட்சித்திறனின் வீழ்ச்சியே. ஊசியை கட்டாயப்படுத்தி உச்சகட்ட விசையுடன் போட்டிருக்கவேண்டும். பல மாதங்கள் மிகமெல்ல ஊசி போடப்பட்டது. விரும்பினால் போட்டுக்கொள்ளலாம் என்னும் கூற்றே இந்நிலைக்கு மிகப்பெரிய காரணம்.

இச்சூழலை அரசு சமாளிக்கவேண்டும், வேறு வழியில்லை. எதிர்க்கட்சிகள் அரசின் பிழைகளைச் சுட்டிக்காட்டி அழுத்தம் அளிக்கவேண்டும். அதுவே ஜனநாயகம். அவர்கள் அதைச் செய்யட்டும்.

ஆனால் பொதுமக்களாகிய நாம் அரசின் தரப்பையோ எதிர்த்தரப்பையோ எடுத்து காழ்ப்பைக் கக்கிக் கொந்தளிப்பதும், அறச்சீற்றத்தின் உச்சங்களை நடிப்பதும் தேவையற்றது. நம்மை நாமே கசப்பு நிறைந்தவர்களாக ஆக்கிக் கொளவது அது.

அதைச்செய்பவர்களுக்கு வேறு அறிவுலகம் இல்லை. அகவுலகும் இல்லை. ஆகவே அவர்களிடம் ஏதும் சொல்ல விரும்பவில்லை. நான் பேசுவது என்னைப்போன்ற பொதுமக்களிடம். இந்த தருணத்தை குறைந்தபட்ச துயருடன், கூடுமானவரை பயனுள்ளவர்களாக இருந்துகொண்டு கடந்துசெல்ல விரும்புபவர்களிடம்.

சென்ற ஆண்டு சொன்னவற்றைத்தான் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அ. பதற்றமூட்டும், கசப்பூட்டும், ஐயங்களை கிளப்பும், எதிர்மறை மனநிலையை உருவாக்கும் செய்திகளை முற்றாகத் தவிர்த்துவிடுவோம். அவற்றைப் பற்றிப் பேசாமலிருப்போம். எதிர்வினைகூட ஆற்றவேண்டியதில்லை. நாம் எந்நிலைபாடு எடுத்தாலும் எந்த வேறுபாடும் உருவாகப்போவதில்லை. ஒரு வகை வதை -சுயவதை மட்டும்தான் அது

ஆ. கூடுமானவரை இந்தச்சூழலில் இடர் உறுபவர்களுக்கு உதவுவோம். அதற்கான அமைப்புக்களுடன் இணைந்துகொண்டு செய்வது நன்று. அல்லாதவர்கள் பொருளுதவிகளைச் செய்வோம்.

இ. ஆக்கபூர்வமான, நிறைவூட்டும் செயல்களில் ஈடுபடுவோம். ஒருவேளை இந்த நோயால் நாம் உயிரிழந்தோமென்றால்கூட நமக்குப் பிடித்த, நாம் நிறைவுகொள்ளக்கூடிய செயல்களைச் செய்துகொண்டிருக்கும்போது அது நிகழட்டும். அஞ்சி, கசந்து, ஒண்டியிருந்து நஞ்சுகக்குபவர்களாக நம்மை சாவு சந்திக்கவேண்டியதில்லை.

ஈ. எதுவும் நல்வாய்ப்பெனக் கொள்ளத்தக்கதே. நம் இடத்தை சுருக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே நாம் அகத்தை விரித்துக் கொள்ள முடியும். என் நண்பர்கள் பலர் வாசித்து தள்ளுகிறார்கள். எழுதுகிறார்கள். தங்களுக்குள் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இது அதற்கான தருணம் என அமையட்டும்.

இந்த இக்கட்டுக் காலத்தை நாம் சிறுமையடையாமல் கடந்தோம் என்று நாம் திரும்பிப் பார்க்கையில் நிறைவுகொள்ளவேண்டும். அதுவே இன்று நாம் கொள்ளவேண்டிய உறுதிமொழி.

நான் வாசிக்கிறேன். இம்முறையும் வரலாறும் புனைவும்தான். இந்த மனநிலைக்கு எளிமையான உற்சாகமான சாகசப்புனைவு ஒன்றை எழுதினாலென்ன என்று படுகிறது.

இனி கொரோனா பற்றி பேசுவது அது முற்றடங்கி பழைய நினைவென ஆன பின்னர்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைசித்திரை- கடிதம்
அடுத்த கட்டுரைபொழுதுபோக்கின் எல்லைகள்- கடிதங்கள்