அஞ்சலி-பெ.சு.மணி

நாளிதழ்களை வாசிக்காமையால் பெ.சு.மணி காலமானதை சற்றுப் பிந்தியே அறிந்தேன். வெங்கட் சாமிநாதன் அறிமுகம் செய்து அவருடன் நேரில் பழக்கமானேன். அவர் மகள் திருமணத்திற்கு வெ.சாவுடன் சென்ற நினைவு. ஆனால் அடிக்கடி சந்திக்கவோ பழகவோ நேரிட்டதில்லை.

அவரைச் சந்திப்பற்கு முன் அவருடைய நூல்களை வாசித்திருந்தேன். சென்னை நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள் வழியாகத் திரட்டப்பட்ட செய்திகளைக்கொண்டு தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர் பெ.சு.மணி. பாரதி, வ.வே.சு.அய்யர், வ.உ.சிராமகிருஷ்ண இயக்கம், பிரம்மஞான சங்கம் என தமிழகத்தின் நவீனச் சிந்தனைப்பரப்பு உருவாகி வந்த காலகட்டத்தின் சித்திரத்தில் ஒரு முக்கியமான பகுதியை எழுதியவர். ’இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’  ‘தமிழ்நாட்டில் ராமகிருஷ்ண இயக்கம்’ ஆகிய இரண்டையும் அவருடைய முதன்மையான நூல்களாகச் சொல்லமுடியும்.

பெ.சு.மணி கொள்கைகளை உருவாக்குபவர் அல்ல. வரலாற்றின்மீதான அவதானிப்புகளை அவர் நூல்களில் காணமுடியாது. ஆனால் வெவ்வேறு மூல ஆவணங்களில் இருந்து திரட்டப்பட்ட செய்திகள் சீராக அவரால் அளிக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு ஆவணம்சார்ந்த நம்பகத்தன்மை இருக்கும். அக்காலத்தைய ஆளுமைகளின் இயல்புகளை உருவகித்துக்கொள்ள அவருடைய நூல்கள் எனக்கு உதவியிருக்கின்றன

தமிழகத்தின் முக்கியமான ஓர் ஆய்வாளரின் இறப்பை ஒட்டி இணையத்தில் தேடியபோது ஒரு விக்கிப்பீடியா பக்கம்கூட இல்லை என்பது திகைப்பளித்தது. ஒன்றை உருவாக்கியிருக்கிறேன். நண்பர்கள் விரிவாக்கலாம்

பெ.சு.மணி

முந்தைய கட்டுரைவிழிநிறைக்கும் கலை
அடுத்த கட்டுரைஅடையாள அட்டை- கடிதம்