பழையதொரு மாயம்
இனிய ஜெயம்
பழையதொரு மாயம் பதிவு கண்டேன். என்னிடம் இந்த வண்ணப் படத்தின் dvd உண்டு. ஆம் முன்பெல்லாம் dvd player என்றொரு மின்னணு சாதனம் வழியே, எண்ம மொழியில் எழுதப்பட்ட குறுவட்டினை இயக்கி தொலைக்காட்சி வழியே படம் பார்க்கும் முறை வழக்கத்தில் இருந்தது. என்னிடம் இருந்த இந்த வரிசை dvd களில் முக்கியமான மற்ற இரண்டு dvd கள், உயர் வண்ணமும், 5.1 ஒலியும் சேர்க்கப்பட்ட பஸ்டர் கீடனின் தி ஜெனரல் மற்றும் ஆரிப் இயக்கிய மொகல் ஏ அஜாம். இரண்டு வண்ணமேற்றப் படங்களுமே இப்போது you tube இல் 1080 தரத்தில் காணக்கிடைக்கிறது.
எனக்கு தனிப்பட்ட முறையில் அந்த முகில் இந்த முகில் கதை மொத்தமும் மொகல் ஏ அஜாம் படத்துடன் இணைந்தே பொருள் கொண்டது. அந்த முகில் இந்த முகில் பாடல் உட்பட. காரணம் நான் ஸ்ரீ ராஜவிஜயேஸ்வரி படம் பார்த்ததில்லை. ஆனால் கதைக்குள் அந்த படம் குறித்து விவரிக்கப்படும் அத்தனை விஷயங்களும் ஒன்று விடாமல் நான் பலமுறை பார்த்த இந்த அஜாம் படத்துடன் இணைந்து காட்சி தரும் ஒன்று.
என் பால்யத்தின் இரவுகள் பெரும்பாலும் பஜாரில் எங்கள் பொடிக்கடை எதிரே பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தையா அரங்கில் கழிந்த ஒன்று. பிட்டு படங்கள் தொடர்ந்து போட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் பொற்காலங்களில் இடை நிறுத்தமாக பழைய மிகப் பழைய கற்காலத்து மழை பொழியும் படங்கள் திரை இடப்படும். அப்படி ஒன்றில் கண்டதே அக்பர் எனும் கருப்பு வெள்ளை (அது முகல் ஏ அஜாம் ஹிந்தி படத்தின் தமிழ் டப்பிங் என்பதை மிக பிந்தி அறிந்தேன்) படம். சிவாஜியின் தீவிர ரசிகரான என் அப்பாவே பல முறை பத்து சிவாஜி சேந்தாலும் ஒரே ஒரு ப்ரித்விராஜ் கபூர் இன் கம்பீர நடை உடல் மொழியை காட்டிவிட முடியாது என்பார்.
1990 களில் என் கூட்டுக் குடும்பத்தில் பழைய கதைகள் கேட்ட வகையில் இன்று இதை எழுதும் கணம் ஆச்சர்யமாக நினைவில் எழுவது, அன்று நெல்லை பகுதியில் குறிப்பாக சைவப் பிள்ளைமார் குடும்பங்களில் பெண்கள் இடையே
ஹிந்தி படங்கள் வழியே நர்கீஸ் மிக பிரபலமானவர் என்பது. அதே அளவு பிரபலம் கொண்டவர் மதுபாலா. அந்த காலங்களை பற்றி எரிய வைத்தவை இரண்டு ஹிந்தி படங்கள். ஒன்று முகல் ஏ அஜாம். மற்றது ஷோலே. ஆண்கள் எல்லோரும் ஷோலே பைத்தியம். பெண்கள் எல்லோரும் முகல் ஏ அஜாம் பைத்தியம்.
பின்னர் யோசிக்கயில் ஒன்று புரிந்தது, பெரும்பாலான அந்த கால கூட்டுக் குடும்பங்களில் பெண்களின் காதல் அந்த குடும்பத்து தட்டான் குரங்கால் முறிக்கப்பட்டு, வேறு எவருக்கோ வாழ்க்கைப் பட போனவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் அனார்கலி, திலீப் குமார் அவர்களின் கனவு காதலன். ப்ரித்விராஜ் கபூர்தான் அவர்கள் காதலை முறிக்கும் தட்டான் குரங்கு. முகல் ஏ அஜாம் படத்தில் அக்பர் காணும் எதிர்ப்பு என்றென்றும் அவர்களின் அந்தரங்க கனவு.
அப்பா அப் படம் குறித்து நிறைய கதை சொல்வார். படத்தில் மட்டுமல்ல உண்மையில் திலீப் குமாரும் மதுபாலாவும் காதலர்கள். திலீப் குமாருக்கும் மது பாலாவுக்கும் இடையே, முகில் நாவலின் ராமராவ் ஸ்ரீ பாலா உறவு போல ஒரு உறவு இருந்திருக்கிறது. வாழ்ந்து கெட்ட முஸ்லீம் குடும்பம் ஒன்றின் இறுதி வாரிசு மதுபாலா. வேற்று மதம். நோயாளி. இப்படி ஏதேதோ காரணம் மது மீது விலகலையும், அனைத்தையும் கடந்த காரணமற்ற ஒன்று மது மீது ஈர்ப்பையும் அளிக்க, இதே தத்தளிப்பில் இருந்த திலீப் குமார் மதுபாலா இடையிலான உறவு, அஜாம் படத்தின் ஆ ஏழு வருட படப்பிடிப்பில், உச்சம் கண்டு முறிவில் முடிந்தது.
ஆரிப் இயக்கிய ஒரே படம். அவரது சொந்தப் படம். இப்படத்தின் முதல் துவக்கம் நர்கீஸ் கதாநாயகியாக நடிக்க துவங்கபட்டு (இதில் சின்ன வயது சலீம் தபேலா பண்டிட் ஜாகிர் உசேன்) நாயகன் மரணத்தால் கால்வாசி படப்பிடிப்புடன், அனைத்தையுமே மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டும் என்ற நிலையில் வந்து நிற்க, இப்போது காணும் நடிகர் நடிகை கொண்டு படம் மீண்டும் துவங்கி 7 வருடம் படப்பிடிப்பு கண்டு நிறைவடைந்தது. உண்மையாகவே பணத்தை தண்ணீர் போல இறைத்து படம் எடுத்திருக்கிறார். போர் காட்சிக்கு உண்மையாகவே போர்க்களத்தை உருவாக்கி இயக்கி இருக்கிறார். பங்கு கொண்ட குதிரைகள் மட்டும் 4000.
ஒளிப்பதிவு சாத்தியமே இல்லை எனும் வகையில் எல்லா பக்கமும் சூழ்ந்த கண்ணாடி மாளிகை செட்டில்,ஒளிப்பதிவாளர் மதூர் படப்பிடிப்பு நிகழ்த்தியது அன்றைய நாளில் பெரிய சாதனையாம்.இசை நௌஷாத். என்றும் இனிய பாடல்கள். குறிப்பிட்ட சூப்பர் ஹிட் பாடல் ஒன்று (காதல் கொண்டாலே பயமென்ன) 100 முறை மீண்டும் மீண்டும் திருத்தி எழுதப்பட்டு 105 ஆவது முறை முழுமை கண்டிருக்கிறது. குறிப்பிட்ட பாடல் ஒன்று, அதன் reverb இவ்வாறுதான் வர வேண்டும் என்று, லதா மங்கேஷ்கர் சகிதம் சகல ஒலிப்பதிவு கருவியுடன் அந்தப் பாடல் ஒரு குளியல் அறைக்குள் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
படே குலாம் அலிகான் இப்படத்தில் ஒரே ஒரு பாடல் பாட 1955 இல் பெற்ற ஊதியம் 30,000 ரூபாய். சலீமை பீரங்கி வாயில் கட்டி சுடும் போது வரும் ஜிந்தாபாத் பாடலை பாடியவர் மொஹமத் ரக்பி சாப், அந்த பாடலை பாடி நடித்தவர் இசையமைப்பாளர் நௌஷத். இத்தனை வருட படப்பிடிப்பு கண்ட இப்படத்தில், கண்டினியுட்டி பிழைகள் மிக மிக குறைவு என்பது மற்றொரு சாதனை. சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் வசூல் சாதனை ஷோலே வெளியாகும் வரை முறியடிக்கப்படாத ஒன்றாக இருந்திருக்கிறது. அடுத்து ஒரு ஆங்கில படம் தயாரித்து இயக்கும் முனைப்பில் இருக்கையில் 47 வயதில் ஆரிப் இயற்கை எய்துகிறார்.
கடலூரில் பழைய புத்தக கடை வைத்திருக்கும் காதர் பாய் தனது இளமையில் மும்பயில் வாழ்ந்தவர். மதுபாலா வெறியர். வாரம் முழுக்க நண்பர்களுடன் ஒரு பக்கிட் நிறைய பைசா சேர்த்து, வார இறுதியில் முகல் ஏ அஜாம் படம் சென்று, பியார் கியா தோ டர்னா பாடல் வருகையில், பாடல் முடியும் வரை திரையில் சில்லறைகளை அள்ளி இறைப்பது என்பதை அவரது கொண்டாட்டங்களில் ஒன்றாக கொண்டிருக்கிறார்.
இந்தப் படம் தமிழில் அக்பர் எனும் பெயரில் மொழிமாற்றம் கண்டது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல் அளவே, இப்படத்தின் கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆனதே எனும் பாடல் அன்று எல்லா பெண்களையும் பித்தென பிடித்து ஆட்டி இருக்கிறது. எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். பாடல்களை எழுதியவர் கம்பதாசன். முகில் கதையின் ராமராவ் ஸ்ரீ பாலாவின் அதே கதை கம்பதாசன் உடையது. ஆராய்ச்சி மணி படப்பிடிப்பில் கம்பதாசன் கண்ட நடன சுந்தரி சித்ர லேகா. ( இவர் கேரளா கவி வள்ளத்தோள் மகள் என்கிறது கம்பதாசனின் விக்கி பக்கம்). பேய்த்தனமான காதல். தோல்விகரமான திருமண வாழ்வு. வறுமையில் தனிமையில் நோக்காடு பின்னர் சாக்காடு. அவரது கொதிப்பு மொத்தமும் அக்பர் படத்தின் பாடல் வரிகளாக வந்திருந்தது. இந்த முகல் ஏ அஜாம் தான் இந்திய அளவில் கருப்பு வெள்ளையில் இருந்து வண்ணத்துக்கும், dts ஒலி அமைப்புக்கும் மாற்றப்பட்டு 2004 இல் வெளியான (இப்போதும் சூப்பர் ஹிட்) முதல் படம். மாயா பஜார் வண்ணம் கொண்டு வெளியானது 2010 இல். ஷோலே 2015 இல் dts ஒலி கொண்டு முப்பரிமாணத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
எனக்குள் முகில் கதையை அந்தக் கதைக்குள் வரும் ஸ்ரீ ராஜ விஜயேஸ்வரி படம், அதன் நாயகன் ராமராவ் நாயகி பானுமதியை, முகல் ஏ அஜாம் படமாகவும், ராமராவ் ஸ்ரீ பாலாவை கம்பதாசன் சித்ர லேகா வாகவும் மாற்றிக் கொண்டேன். காமத்தை உதைத்து எழுந்து காதல் எனும் சப்லைம் நிலையை அடைவது. அங்கிருந்து காமத்தில் விழுவது. இந்த தத்தளிப்பின் இயங்கு முறை மர்மம் அதை யார் அறியக் கூடும். இந்த தத்தளிப்பின் இனிய துயரிலிருந்து ஏதோ ஒரு கணம் உணர்வுகள், காதலை உதைத்து எழுந்து ஆத்மீகமான ஒரு நிலையில் சில கணம் நின்று விடுகிறது. காதல் வழியே எய்த இயண்ற இரண்டற்ற தன்மை. அந்த நிலையைத்தான் முகில் கதைக்குள் அப்பாடல் வழியே இருவரும் எய்துகிறார்கள். அதன் பின்னர் காதல் பல மாற்று குறைவு, காமமோ தரை தளத்தில் கிடப்பது.
திலீப் குமார் மதுபாலா துவங்கி கம்பதாசன் சித்ரலேகா தொடர்ந்து இக்கதையின் ராமராவ் ஸ்ரீ பாலா வரை குருதி நெய் கொண்டு, காதல் தீ எரியும் இதயம் கொண்டு ஏதோ ஒரு கணம் அந்த இரண்டற்ற நிலையை ஒரு கணமேனும் எய்தி இருப்பார்கள். அவர்கள் சொல்வார்கள் மணிமுடிகள் எழும் விழும் இந்த பூமியே இன்றிருந்து நாளை மறையும். ஆனால் கொண்ட காதலோ என்றும் வாழும்.
கடலூர் சீனு