மனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ.,

பொதுவாக காலையில் ஒலிக்கத் தொடங்கி அன்று முழுதும் ‘மனதின் குர’லாக ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பாடல் அவ்வப்போது மனிதனின் குரலாகவும் வெளிப்பட்டு விடுவதுண்டு. இன்றைய ஸ்பெஷல் ‘கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்’. ஒன்று எம்.எல்.வசந்தகுமாரி எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் ‘ஏழை படும் பாடு’ (1950) படத்தில் பாடியது. இன்னொன்று ஜி.ராமநாதன் இசையில் எஸ்.ஜானகி ‘தெய்வத்தின் தெய்வம்’ (1962) படத்தில்  பாடியது. ஒரே பாட்டை வெவ்வேறு மெட்டுக்களில் அமைப்பது பாரதி பாட்டுக்களுக்கே அதிகம் நடந்திருக்கிறது.

காதலினால் தவிதவிக்கும் பெண்ணின் உள்ளத்தை ஒரு ராகத்தில் வெளிப்படுத்துவது பொருந்தாது என்று நினைத்தோ என்னவோ இருவருமே ‘ராகமாலிகை’ யில் போட்டிருக்கிறார்கள். பாரதி இப்பாடலை ‘கோனார் வீட்டுப் பெண்களிடம் காட்டுகிற வேலையை என்கிட்ட வெச்சுக்காதே’ என்று மறப்பெண்ணொருத்தி பாடுவது போல வைத்திருக்கிறார். அந்தப் ‘பாவம்’ ஒப்புநோக்க முதல் பாடலிலேயே சிறப்பாகக் கூடி வந்திருக்கிறது. பின்னது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் எந்தக் கோபிகையும் பாடியிருப்பது. முன்னது ஒப்புநோக்க எளிமையான பாடல். பின்னதில் இசைக்கோர்வைகளையும், ஜானகியின் குரலையும் கொண்டு உயர்தரமான ஒரு பாடலைச் செதுக்கியெடுத்திருக்கிறார் ஜி.ராமநாதன். அது தேனில் ஊறிய பலா என்றால் இது அந்தப் பலா ஊறிய தேன். அல்லது இது அது, அது இது.

முதல் பாடலில் அந்தக் காலத்து அழகு பத்மினியின் நடனம் கண்ணுக்கு விருந்து என்றால் பின்னதில் சிட்டிபாபுவின் வீணை இசை காதுக்கு. ‘டொய்ங்’ ‘டொய்ங்’ என்று அங்கங்கே தீர்மானம் கொடுத்துக்கொண்டே போகிறார். கூடவே ஷெனாய் வேறு. பின்னதில் கண்ண்ண்ண்ண்ணன்… என்ற நீட்டலுக்குப் பின் குழலாக ஒலிக்கும் இசை பின் வீணையாக, நடுநடுவே ஷெனாயாகவும் மாறி வர்ண ஜாலம் பண்ணுகிறது. தன் மணிக்குரலோடு எம்.எல்.வி கம்பீரமாகவும் லகுவாகவும் பாடலினூடே மிதந்து செல்கிறார். ஜானகியின் குரலோ பதனீராய், இளநொங்காய் தித்திக்கிறது. சுருள் பிருகாக்களிலும், நிரவல்களிலும் ‘ரோலர் கோஸ்டெ’ராய் உருளுகிறது பிரளுகிறது. ‘பாவி மனுசா…கேக்காமப் போய்ட்டியே’ என்றுதான் தோன்றியது. இந்தக் கண்ணும் காதும்தான் எவ்வளவு கொடுத்து வைத்தவை.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் – எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே – அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக் குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் – மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் – அதைப்
பற்றி மறக்கு தில்லை பஞ்சை உள்ளமே.

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே – உள்ளம்
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***
எம்.எல்.வி பாட்டு
எஸ்.ஜானகி பாட்டு
முந்தைய கட்டுரைநன்னம்பிக்கை- கடிதம்
அடுத்த கட்டுரைஇரு சிறுகதைகள்- கடிதங்கள்