பழையதொரு மாயம்

விஜயா வாகினியின் அந்தக்கால கிளாஸிக்குகளில் ஒன்று மாயாபஸார். இளமையில் இருமுறை பார்த்திருக்கிறேன். அதன்பின் பலமுறை அதை துளித்துளியாகப் பார்த்தேன். முழுமையாக பார்க்கவில்லை.

நேற்று முதல் இருநாட்களிலாக அதை வண்ணத்தில் பார்த்தேன். ஒரு கனவனுபவமாக இருந்தது. சினிமாவாக அல்லாமல் ஓர் இசைநாடகத்தின் திரைப்பதிவாக பார்க்கவேண்டும். தெலுங்கு இசைநாடக மேடை அறுபதுகள் வரைக்கும்கூட மிக வீச்சுடன் செயல்பட்டு வந்த ஒன்று. இந்த சினிமாவே அங்கிருந்து வந்ததுதான்.

சினிமா என்னும் கலைவடிவம் என்று சொல்லவும் நம்பவும் எண்பதுகளின் திரைப்பட இயக்கங்கள் எனக்கு பயிற்றுவித்தன. அடூர் கோபாலகிருஷ்ணனை அந்த அழகியல்பார்வையின் குரலாக அறிமுகம் செய்துகொண்டு அதன்மேல் உறுதியான நம்பிக்கைகளை உருவாக்கிக் கொண்டேன்.

ஆனால் இன்று அப்படி சினிமாவுக்கென ஒரு காட்சிமொழி தேவையானதா என்னும் ஐயம் இருக்கிறது எனக்கு. ஒருசினிமா இசைநாடகத்தின் அழகியலுடன் இருக்கலாம். இன்னொன்று தெருக்கூத்துபோல் இருக்கலாம். சினிமா ஏன் எல்லாவகை காட்சிக்கலைகளின் அழகியல்களும் வந்துசேரும் ஒரு பொதுவான கலைப்பரப்பாக இருக்கக் கூடாது? சினிமா ஏன் நாடகமாக நடனமாக ஓவியமாக எல்லாம் இருக்கக்கூடாது?

மார்க்கஸ் பர்ட்லே

இப்படத்தைப் பார்க்காமல் நான் தவிர்த்தமைக்குக் காரணம் வண்ணம். பழைய கருப்புவெள்ளைப் படத்தை வண்ணப்படுத்தியிருப்பது பற்றிய ஓர் ஒவ்வாமை இருந்தது. ஏனென்றால் கருப்புவெள்ளையில் அதன் ஒளிப்பதிவு ஒளிப்பதிவுமேதை மார்க்கஸ் பட்லேயின் சாதனையாக சினிமாவில் சொல்வார்கள். கருப்புவெள்ளை ஒளிப்பதிவுக்கான ஒரு பாடநூலாகவே இங்கே நெடுங்காலம் பார்க்கப்பட்ட படம் அது.

ஆனால் டிஜிட்டல் முறையில் வண்ணப்படுத்தப்பட்டது மிகச்சிறப்பாக இருப்பதாக இப்போது படுகிறது. அதன்பிறகும்கூட இத்தனை தரமாக எந்தப்படமும் வண்ணமாக்கப்படவில்லை. அதற்கு முதன்மைக்காரணம் விஜயா-வாகினி ஸ்டுடியோவிடமிருந்த மிகச்சிறப்பாக பேணப்பட்ட பல நெகட்டிவ்கள்தான்.

அத்துடன் ஒரு புதுப்படம் தயாரிக்கும் அளவுக்கே செலவிட்டு ஒவ்வொரு ஃப்ரேமாக வண்ணம் கொடுத்தனர். பின்னர் தமிழ்- தெலுங்கு படச்சூழலில் புகழ்பெற்ற ஏராளமான வண்ணக்கலவை நிபுணர்கள் அதில் பணியாற்றினர். வண்ணப்படுத்துதலில் மாயாபஜார் ஒரு சாதனை- ஓர் அளவுகோல்.

இன்று பார்க்கையில் பல ஃப்ரேம்கள் அப்படியே பெரிய செவ்வியல் ஓவியம் போலிருக்கின்றன. அதற்குக் காரணமும் மார்க்கஸ் பட்லேயின் அற்புதமான படச்சட்டகக் கட்டமைப்புதான். இவை சினிமாவுகான சட்டகங்கள் அல்ல. செவ்வியல் சுவரோவியங்களுக்கான சட்டகங்கள். ஒளிநிழல்கோப்பும் அதற்கேற்ப சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. ஆகவேதான் வண்ணத்திலும் அழகிய காட்சியொழுக்காக உள்ளது இந்தப்படம்.

முந்தைய கட்டுரைகதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்
அடுத்த கட்டுரைஅறிவியல்,கற்பனை- கடிதங்கள்