வற்கீஸின் அம்மா:கடிதம்

அன்புள்ள ஜெ..,
வணக்கம்.
நலம். நலம்தானே.. வற்கீஸின் அம்மா மரணம் கட்டுரையைப்படித்துதான் விஷயம் அறிந்தேன்.  ஆஸ்பத்திரியில் கடைசிநேர நிமிடங்களை நீங்கள் விவரித்த விதம்
நெகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் கட்டுரையைப்படித்ததும் நண்பர் கமல செல்வராஜ்(தினமலர் நிருபர்)_ஐ மொபைலில் அழைத்தேன்.”ஆமா தலைவா ஞாயிற்றுக்கிழமை இறந்துட்டாங்க.. வியாழக்கிழமை சாயந்திரம் கல்லறைப்பிரதிஷ்டை ச்சிருக்காங்க..நீங்க வருவீங்களா?” என்றார். “ஆமா
வருகிறேன்!” என்றேன்.

நான் க‌திர‌வ‌ன் நாளித‌ழில் நிருப‌ராக‌ சேர்ந்த‌ புதிது..
1993.ம் வ‌ருட‌ம் ஒரு போலீஸ் கேஸ் தொட‌ர்பான செய்தி சேக‌ரிக்க‌ அரும‌னை சென்றிருந்தேன்.
அரும‌னை போலீஸ் ஸ்டேஷ‌ன் போய் செய்தி சேக‌ரித்துவிட்டு அந்த‌ செய்தி தொட‌ர்பாக‌  ச‌ம்ப‌ந்த‌ப்பட்ட‌ பார்ட்டியை ப‌ட‌ம் எடுக்க‌ வேண்டுமே என்ன‌ செய்வ‌து..? (அப்போது இன்றைக்குள்ள‌து மாதிரி டிஜிட்ட‌ல் கேம‌ரா வ‌ச‌திஒன்றும் கிடையாது. ஸ்டுடியோகார‌ங்க‌ யாரையாவ‌து கூட்டிட்டு போய் ப‌ட‌ம்எடுத்தாதான் உண்டு. ப‌ட‌ம் எடுத்து போட்டோகிராப‌ர் பிளாக் அன்ட்ஒயிட்டில் போட்டோ பிரின்ட் போட்டு அதை வாங்கி நியூசுட‌ன் சேர்த்து
க‌வ‌ரில் வைத்து நாக‌ர்கோவில் செல்லும் எதாவ‌து ப‌ஸ்சில் கொடுத்துநாக‌ர்கோவிலில் இருக்கும் பிர‌திநிதி மேற்ப‌டி க‌வ‌ரை எடுத்துதிருநெல்வேலி க‌திர‌வ‌ன் ஆபிசில் அனுப்பி, அங்குள்ள‌ எடிட்ட‌ரிட‌ம் க‌வ‌ர் ச‌ரியான‌ நேர‌த்தில் கிடைத்து செய்தி வெளியானால் ந‌ம‌து அதிஷ்ட‌ம். இன்று சம்பவ இடத்துக்கு  போய் டிஜிட்ட‌ல் கேமிராமில் ப‌ட‌ம் எடுத்து அடுத்த‌ க‌ணமே லேப்டாப்பில் இ_மெயிலில் ப‌ட‌த்தையும் மேட்டரையும்  சென்னைக்கு அனுப்பி அடுத்த‌ நாளே ப‌த்திரிகையில் பார்க்க‌ முடிகிற‌து. இன்று எல்லாமே எளிது..)

விஷ‌ய‌த்துக்கு வ‌ருகிறேன். அரும‌னை ஸ்டேட் பாங்க் அருகில் வாட‌கை க‌ட்டிட‌த்தில் இய‌ங்கி வ‌ந்த‌ மேனகா ஸ்டுடியோவுக்குச்சென்று விஷ‌ய‌ம் கூறி வெளியே வ‌ந்து ப‌ட‌ம்
எடுக்க‌ வேண்டும் என்று கூறினேன். அப்போது ஸ்டியோவில் வற்கீஸ் இருந்தார். நீங்க‌ள் சொன்ன‌துமாதிரி உட‌ம்பை ஜ‌ம் என்று வைத்திருந்தார். நான் போன‌போது ஏதோ பிளாக் அன்ட் ஒயிட் போட்டோ அவ‌ச‌ர‌மாக‌ ட‌ச் செய்யும் வேலையில் இருந்தார். ப‌த்திரிகை நிருப‌ர் என்றதும் ம‌திப்ப‌ளித்து பேசிவிட்டு “நான் இப்போ ஸ்டுடியோவுல‌ கொஞ்ச‌ம் பிஸியா இருக்கேன். காமிராவைத‌ர்றேன். இந்தா பைக் சாவி என‌க்க‌ புல்ல‌ட்டை எடுத்துகிட்டு போங்க‌!” என்றார். என‌க்கு அதிர்ச்சி. சாத‌ர‌ண‌ ஆட்டோ போக‌ஸ் காமிராவில் எ டுத்து ப‌ரிச்ச‌ய‌ம் உண்டு. இது மாதிரி ஸூம் காமிரா என்றால் எப்ப‌டி படம் எடுப்ப‌து? இது த‌விர‌ ந‌ம‌க்கு புல்ல‌ட் ஓட்ட‌த்தெரியாது. ஏன், அப்போது டிவிஎஸ். பிப்டி கூட‌ ஓட்ட‌த்தெரியாது..? இப்போது ஹீரோ ஹோண்டா
வ‌கையறா ஓட்ட‌த்தெரியும்..புதுசா ரெண்டு மாச‌மா கார் ஓட்ட‌ க‌த்துகிட்டு வ‌ர்றேன்.

ப‌தினைந்து நிமிட‌ நேர‌த்திலேயே ஒருவ‌ரை ந‌ம்பி காமிராவும் பைக்கையும் குண‌ம் ஒருவ‌ருக்கு வ‌ர‌வேண்டும் என்றால் ந‌ல்ல‌ ம‌ன‌திருந்தால் ம‌ட்டுமே முடியும். அவ‌ர‌து ப‌ண்பை ய‌ந்த‌ப‌டி,”இல்ல‌ சார், என‌க்கு பைக் ஓட்ட‌த்தெரியாது.. போட்டோவுக்கு நான் வேற‌ அரேஞ்ச் ப‌ண்ணிடுறேன்!” என்று கூறிவிட்டு திரும்பினேன். அத‌ன்பிற‌கு பல‌முறை அரும‌னை ஜ‌ங்ஷ‌ன் போனாலும்
ஸ்டியோவுக்கு செல்லாம‌ல் வ‌ந்த‌து இல்லை.இப்போது சொந்த‌ க‌ட்டிட‌த்தில் நான்குமாடிக‌ளுட‌ன் அரும‌னை ஜங்ஷ‌னில் பிர‌மாண்ட‌மாக‌ அவ‌ர‌து ஸ்டியோ காட்சிய‌ளிக்கிற‌து. வ‌ர்கீஸின் க‌லார‌ச‌னைக்கு எடுத்துக்காட்டாக‌ ஸ்டுடியோ முன்பு  செடி கொடிக‌ளுட‌ன்  ஆதாம் ஏவாள் புடைப்புச்சிற்ப‌ம்
பார்த்துப்பார்த்து ர‌சிக்கலாம். அரும‌னையின் லேண்ட் மார்க்குக‌ளில்
ஒன்றாக‌வும் மேன‌கா ஸ்டுடியோ உள்ள‌து.. ஒரு முறை ஆற்றிலிருந்து கிடைத்த‌ விஷ்ணு சிலையை இவ‌ர்தான் ப‌ட‌ம் எடுத்து ப‌த்திரிகைக‌ளுக்கு கொடுத்துள்ளார். த‌வ‌றாம‌ல் என்னையும் அழைத்து அந்த‌ ப‌ட‌த்தை த‌ந்தார். பின்ன‌ர் தின‌ம‌ல‌ர் சென்று இப்போது குமுத‌த்தில் சேர்ந்த‌ பின்னர் கட‌ந்த‌ நான்கு ஆண்டுகால‌மாக‌ அரும‌னைப்ப‌குதிக்கே போக‌வில்லை.
நீங்க‌ள் வரற்கீஸின் அம்மா குறித்து எழுதுவ‌த‌ற்கு சில‌நாட்க‌ள் முன்ன‌ர் அவ‌ரைப்பார்த்தேன். க‌ட‌ந்த‌ கிறிஸ்தும‌ஸ்சுக்கு முன்தின‌ம்
மாலையில் அரும‌னையில் பிர‌மாண்ட‌ கிறிஸ்தும‌ஸ் ஊர்வ‌லம். அதைக்காண‌ சென்ற‌போது ஸ்டுடியோவிற்குச்சென்றேன். அப்போது அவ‌ரும் அவ‌ர‌து உற‌வின‌ர்க‌ளும் ஸ்டுடியோவின் முன்பிருந்து ஊர்வ‌ல‌த்தை ர‌சித்துக்கொண்டிருந்த‌ன‌ர். வெளியே உள்ள‌ இரைச்சலையும் மீறி அவ‌ருட‌ன் சில‌ நிமிட‌ம் உரையாடினேன்.”அம்மா எப்ப‌டி இருக்காங்க‌..?” என்றேன்.”வ‌ய‌சாச்சில்லியா.. அத‌னால் உட‌ம்புக்கு அடிக்க‌டி
முடியாம‌ப்போவுது.. இப்ப‌ ப‌ர‌வாயில்லை..!.. ஆமா  அம்மாவுக்கு
சொக‌மில்லைன்னு யாரு சொன்னா..” கேட்டார். நான் உங்க‌ள் பிளாக்கில் படித்த‌தைச்சொன்னேன்.”அப்ப‌டியா?” என‌ ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டார்.

இப்ப‌டி அவ‌ருட‌ன் சில‌ நினைவுக‌ள்… 22.1.2009  வியாழ‌க்கிழமை மாலை நான்கு மணிக்கு  அரும‌னை ரீஜ‌ன‌ல்
இன்ஸ்டிடியூட்டில்  கமல செல்வராஜ் எனக்காக காத்திருந்தார்.
நானும் க‌ம‌ல‌ செல்வ‌ராஜும், தின‌க‌ர‌ன் நிருப‌ர் டி. டென்ச‌னும்
பாக்கிய‌புர‌ம் ச‌ந்தை வ‌ழியாக‌ வற்கீசின் வீட்டை அடைந்தோம். வீட்டின் பின்புற‌ம் க‌ல்ல‌றைத்தோட்ட‌ம். நாங்க‌ள் சென்ற‌போது க‌ல்ல‌றையைச்சுற்றி உற‌வுக‌ள். போத‌க‌ர் ஜெப‌ம் செய்து முடித்திருந்தார். நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தது போல வற்கீஸின் அம்மா ம‌ற்றும் அப்பாவின் க‌ல்ல‌றைக‌ள் இர‌ண்டையும் இணைத்து ஒரே க‌ல்ல‌றையாக‌ உய‌ர்த‌ர‌ க‌றுப்பு ப‌ள‌ ப‌ள‌
கிரானைட்டில் அமைத்திருந்த‌ன‌ர். க‌ல்ல‌றையின் மேல்ப‌குதியில்
கிரானைட்டில் அவ‌ர‌து அப்பா ராஜூ ம‌ற்றும் அவ‌ர‌து அம்மாவின் ப‌ட‌ம் செதுக்க‌ப்ப‌ட்டிருந்ந்த‌து. நீங்க‌ள் சொல்லியிருந்த‌து போல் அம்மாவின் முக‌த்தை அந்த‌ க‌றுப்பு கிரானைட்டில் பார்க்கையில் ஐஸ்வ‌ர்ய‌மாக‌வே தெரிந்த‌து. வீட்டுக்கு வ‌ந்து ஒரு நாளான‌பின்ன‌ரும் அம்மாவின் அந்த‌ புன்ன‌கை ம‌ன‌தில் நிற்கிற‌து. ஜெப‌ம் முடிந்து வீட்டுக்கு வ‌ந்த‌பின்ன‌ர் வ‌ர்கீஸ் அருகில் நானும் க‌ம‌ல‌ செல்வ‌ராஜும் சென்றோம்.”இறந்த‌ அண்ணைக்கு ஜெய‌மோக‌ன் சார் வ‌ந்துட்டு போனாரில்லையா.. அப்ப‌ இங்க‌
வ‌ந்த‌தையும் நீங்க‌ பேசிகிட்ட‌தையும் நெட்டில‌ எழுதி
போட்டிருக்காரு…!” வ‌ர்கீஸின் கையைப்பிடித்த‌ க‌ம‌ல‌செல்வ‌ராஜ்
அவ‌ரிட‌ம் கூறினார். “அப்ப‌டியா..? ந‌ம‌க்கு இதைப்ப‌த்தி ஒண்ணும்
தெரியாது. அவ‌ருகிட்டே கேக்க‌ணும். என்ன‌ அட்ர‌சுல‌ அதைப்பார்க்க‌ணும்னு கேக்க‌ணும்.இங்க‌ வ‌ருதேன்னுசொல்லியிருந்தாரு…!” என்றார் வற்கீஸ்.
பொதுவாக‌ அஞ்ச‌லி செய்திக‌ள் சாதார‌ண‌ ச‌ட‌ங்காக‌வே
பிற‌ருக்குத்தோன்றும். ஆனால் நீங்க‌ள் எழுதிய”வற்கீசின் அம்மா மரணம்” அஞ்ச‌லிதான் உண்மையான‌ அஞ்ச‌லியாக‌ என‌க்குத்தோன்றுகிற‌து. உங்களின் செய்தி வாயிலாகவே வற்கீசின் அம்மாவின் மறைவுச்செய்தியை நான் அறிந்து கொண்டதோடு.. ஒரு அன்பு நிறைந்த ஆத்மா குறித்தும் அறிந்து கொண்டேன். உறவுகள் அஞ்சலி செலுத்தியிருக்கும் அந்த நல் ஆத்மாவுக்கு…..! அதுபோலவே உங்களின் கட்டுரையைப்படித்த  வாசகர்கள் அனைவரும் வற்கீசின் அம்மாவுக்கு அஞ்சலி லுத்தியிருப்பார்கள்……!ப‌டித்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும்
நெஞ்சில் ஈர‌ம் க‌சிந்திருக்கும்.

ந‌ன்றி.

அன்புட‌ன்,
திருவ‌ட்டாறு சிந்துகுமார்

அன்புள்ள சிந்துகுமார்
நன்றி.நான் ஊரில் இல்லாமல் இருந்தமையால் கல்லறை விழாவுக்குச் செல்ல முடியவில்லை. வற்கீஸிடம் பேசினேன்.
பொதுவாக அஞ்சலிச் செய்திகள் பெரியமனிதர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் மட்டுமே உரியன. ஆனால் தன் குழந்தைகளுக்காகவே உயிர்வாழ்ந்து அவர்கள் வாழ்க்கைக்காக ஒவ்வொரு கணமும் போராடி அவர்களை உருவாக்கும் நம் அன்னையரும் தந்தையரும் அவர்கள் அளவில் சாதனையாளர்களே. அவர்களுடைய பேரன்பு அவர்களை எப்படியோ மகத்தானவர்களாக ஆக்கத்தான் செய்கிறது. தன் எல்லைக்குள் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வாழ்ந்த எவரும் ஒரு நிறைவாழ்க்கையையே வாழ்கிறார்கள்.
இது நம் அத்தனை அன்னைமாரைப்பற்றியும்தான். ஒரு சொல் கூட எழுதப்பாடாத கோடானுகோடி புனிதர்களைப்பற்றி என்று சொல்லலாம்.
ஜெ  

 

முந்தைய கட்டுரைமதுபாலா
அடுத்த கட்டுரைமதுபாலா:கடிதங்கள்