சூல்கொண்ட அருள்

தென்னந் தமிழினுடன் பிறந்த

சிறுகால் அரும்ப தீ அரும்பும்

தேமா நிழல் கண்டு அஞ்சும் இளஞ்

செங்கண் கயவாய் புளிற்றெருமை

 

இன்னம் பசும்புல் கறிக்கல்லா

இளங்கன்று உள்ளி மடித்தலம் நின்று

இழிபாலருவி உவட்டு எறிய

எறியும் திரை தீம்புனல் பொய்கைப்

 

பொன்னங் கமல பசுந்தோட்டுப்

பொற்றாது ஆடி கற்றைநிலா

பொழியும் தரங்கம் பிறை உயிர்த்த

பொன் போற்றோடு தோலடிப்பொலன் சூட்டு

 

அன்னம் பொலியும் தமிழ் மதுரைக்கு

அரசே தாலே தாலேலோ!

அருள் சூல் கொண்ட அங்கயற்கண்

அமுதே தாலே தாலேலோ!

[குமரகுருபரர். மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ். தாலப்பருவம்.1]

தென்னகத்தமிழுடன் பிறந்த தென்றல் அரும்ப,

அப்பருவத்தில் தீயென அரும்பும்

தேன்மாமரத்தின் தளிரின் ஒளியைக் கண்டு

தீயென்று எண்ணி அஞ்சும்

செவ்விழிகளும் கரியவாயும்கொண்ட  அன்னை எருமை

இன்னும் பசும்புல்லை கடிக்க்கத் தெரியாத தன் இளங்கன்றை எண்ணி

மடித்தலத்தில் இருந்து ஒழுகவிடும் பாலருவி பெருக்கெடுக்க

அந்தப் பால் கலந்து அலையடிக்கும் நீர்கொண்ட பொய்கையில்

மலர்ந்த தாமரையின் மென்மையான இதழ்களிலுள்ள

தங்கப்பொடியில் ஆடிய அன்னப்பறவைகள்

நிலவெழுந்த கடலில் அலையெழுகையில்

பொன்னணிந்து எழும் திருமகள் என பொலியும்

தமிழ்மதுரைக்கு அரசியே தாலேலோ.

அருளைச் சூல்கொண்ட அழகிய கயல்கண் அமுதே தாலே தாலேலோ

மூன்றுவகை மடங்கள் உண்டு. தாய்மைமடம், கொடைமடம், பக்தி மடம். அன்னை குழந்தையை எண்ணி தேவையின்றியே அச்சமும் பதற்றமும் அடையும் மடமை. பெறுபவனின் தகுதியோ தன் தேவையோ எண்ணாமல் அக்கணமே கொடுக்கும் வள்ளலின் மடமை. ஏழுலகாளும் தெய்வத்தை தனக்கு அணுக்கமான மானுடவடிவமாக எண்ணி பக்தன் கொள்ளும் மடமை. மூன்றும் தெய்வத்தன்மை கொண்ட அறியாமைகள்.

அவற்றில் முதல் மடமையே கண்கூடானது, இப்புவியை வாழச்செய்வது. மனிதனில் இருந்து புழுப்பூச்சிகளில் வரை எங்கும் திகழ்வது. தாய்மைமடம். தென்றல் வீசும் சித்திரையில் மாந்தளிர் செந்நிறமாக எழக்கண்டு தீ என்று அஞ்சி தன் குட்டியை எண்ணி பால்பெருக்கும் அன்னையில் எழும் மடமையே அங்கயற்கண்ணி இங்கு கண்கூடாக அளிக்கும் பெருந்தோற்றம். ‘சர்வ ஃபூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா’. அனைத்துயிர்களிலும் அன்னைவடிவென நிலைகொள்பவள் அவள்.

அதிலும் இப்பாடலில் எருமை வருவது நிறைவளிப்பது. பால் நினைந்துச் சொரிவதாகச் சொல்லப்படும் பல பாடல்களில் எருமைதான் குறிப்பிடப்படும். முட்டி முட்டி கோரினால் பாலூட்டுவது பசு. தொட்டாலே பால் சொரிவது எருமை. எண்ணியே பால் பொழிவது. பால் நினைந்தூட்டும் அன்னை என்னும் உருவகத்துக்குப் பசுவைவிட எருமையே பொருத்தமானது.

அந்தப் பால்பெருகி கலந்து பாற்கடலின் அலையென்றாகிய பொய்கையில் மலர்ந்த தாமரையின் பூந்தாதைப் பூசிக்கொள்ளும் அன்னம் என்னும்போது தாய்மையின் கனிவிலிருந்து வளர்ந்து அழகுக்கும் செழிப்புக்கும் செல்கிறது அப்படிமம். பாற்கடல் அலையில் தோன்றிய திருமகள் நிலவொளியின் பொன்னைச் சூடியதுபோல பொலிகின்றன அன்னங்கள். அவ்வன்னங்களின் நாடான மாமதுரையின் அரசி கண்ணயர்கிறாள்.

அங்கயற்கண்ணியின் கண்கள் துயிலில் மூடியிருக்கின்றன. ஆகவே அருள் உள்ளே சூல்கொண்டிருக்கிறது. உலகு புரக்க பேருருக்கொண்டு எழும்பொருட்டு.

*

குமரித்துறைவி [குறுநாவல்] – 6

குமரித்துறைவி [குறுநாவல்] – 5

குமரித்துறைவி [குறுநாவல்] – 4

குமரித்துறைவி [குறுநாவல்] – 3

குமரித்துறைவி [குறுநாவல்] – 2

குமரித்துறைவி [குறுநாவல்] – 1

முந்தைய கட்டுரைபெண்ணமுது
அடுத்த கட்டுரைபாலுணர்வெழுத்து தமிழில்…