அற்ப சகி

முன்பு ஒரு நோக்கியா செல்பேசியை வைத்திருந்தேன். அது எனக்கு கைக்கடக்கமானது, என் தேவைகளுக்கு அது போதும். நான் விரும்பும்போது மட்டுமே மின்னஞ்சல் பார்ப்பவன். செல்பேசியை அணைத்தே வைத்திருந்து நடைசெல்லும்போது மட்டும் பேசுபவன். என் பொழுதுகளை அப்படி திட்டமிட்டு சேமித்துக்கொள்ளாவிட்டால் இத்தனை எழுத முடியாது.

நான் எழுதுவதில், அல்லது வேலைசெய்வதில் ஒருபகுதிதான் பொதுவாக நண்பர்களுக்கு தெரியும். இலக்கியம் மற்றும் இணைய எழுத்துக்கள். சினிமாவுக்கு எழுதுகிறேன் என்று பலருக்கு தெரியும், ஆனால் எவ்வளவு எழுதுகிறேன் என்று தெரியாது. திட்டமிடப்பட்டு, முழுத்திரைக்கதையும் எழுதப்படும் சினிமாக்களிலேயே சிறுபகுதிதான் கடைசியில் திரையை அடைகிறது- எழுதப்படும் எல்லாவற்றுக்கும் எழுத்தாளனுக்கு பணம் உண்டு.

நான் இதற்கு அப்பால் மலையாளத்தில் தென்திருவிதாங்கூர் வரலாற்றாய்வாளர்களுடன் தொடர்பு கொண்டிருப்பவன். இங்குள்ள வரலாற்றுச் செய்திகளுக்கு பலரும் என்னை அணுகுவதுண்டு. பழைய மலையாண்மை என்பது முக்கால்வாசித் தமிழ். பலவற்றை தெளிவாக வாசித்துப் பொருள் சொல்பவர்களில் இளையவன் நானே.

வரலாற்றாய்வாளர்களுக்கு நிறைய மொழியாக்கம் செய்து கொடுப்பேன். சமீபத்தில் தென்திருவிதாங்கூரின் நாலைந்து நாட்டார்காவியங்களை மொத்தமாகவே மொழியாக்கம் செய்து ஓர் ஆய்வாளருக்கு அளித்தேன். மொழியாக்கம் என்பது ஆழமாக வாசிப்பதுதான். எல்லாம் நட்பு அடிப்படையில். ஆய்வாளர்களுக்கு எங்கே காசு?

இதுபோக மலையாள இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்திற்காக குமரிமாவட்ட இஸ்லாமிய வரலாற்றிடங்கள் பற்றிய குறிப்புகளை நூல்களில் இருந்து திரட்டி அளிப்பதுமுண்டு. இதெல்லாமே என்னுடைய சொந்த ஆர்வத்தால்தான். இவை எனக்கு ஆழமாக கற்கும் அனுபவங்கள். ஆகவே தவிர்ப்பதில்லை.

ஆகவே செல்பேசியை பெருஞ்சுமையாகவே எண்ணியிருக்கிறேன். சமூகவலைத்தளங்களையும் தவிர்க்கிறேன், நேரமில்லை. ஆனால் நவீனச் செல்பேசி தேவையாக ஆகியது. 2.0 படப்பிடிப்பு நடக்கும்போது அதன் அன்றாடச்செய்திகளை எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். திருத்தங்கள் போடவேண்டியிருந்தது. மின்னஞ்சலை ஒருமணிநேரத்துக்கு ஒருமுறையாவது பார்க்கவேண்டும். அப்படியே இப்போது வாட்ஸப் பார்ப்பது வரை வந்துவிட்டது.

ஆனால் தேவையில்லாமல் வாட்சப் செய்திகளை அனுப்புபவர்களை உடனடியாக ‘பிளாக்’ செய்து மட்டுமே என்னால் காலந்தள்ள முடியும். மின்னஞ்சல்களிலேயே நான் தடைசெய்திருப்பவை மூவாயிரத்துக்கும் மேல் இருக்கும். என்னை எல்லைக்குள் ஒடுக்கிக் கொண்டாலொழிய தீவிரமாகச் செயல்பட முடியாது.

இன்றைய இணையச்சூழலில் ஒருவர் தன் ஆர்வ எல்லையை, செயல்பாட்டு எல்லையை மிக திட்டமிட்டுச் சுருக்கிக்கொள்ளவேண்டும். இல்லையேல் ஒரு கோப்பை நீரை ஆயிரம் சதுர அடிக்கு பரப்புவதுபோல ஆளுமை அர்த்தமில்லாமல் ஆகிவிடும்.

இணையவெளியில் பொழுதுழல்வது ஒரு மாபெரும் வீணடிப்பு. உண்மையில் தீவிரமாக எதையோ செய்வதுபோல தோன்றும். ஆனால் அது தீவிரமல்ல, பாவனைதான். ஏனென்றால் கண்கூடான விளைவுகளை உருவாக்காத செயல் அது. காற்றாடிச்சிறகுகளுடன் வாள்சண்டை.

ஓய்வுநேரத்தை மட்டுமே அதில் செலவிடுவதாகத் தோன்றும். அதுவும் மாயை. நாம் எஞ்சியநேரம் முழுக்க அதையே எண்ணிக்கொண்டிருப்போம். நீண்டநேரம் ஒன்றில் ஈடுபட்டுப் பணியாற்ற நம்மால் முடியாதுபோகும்.

நான் குமரித்துறைவி எழுதியபோது 16 மணிநேரம் எந்த இடைவெளியும் விடாமல், நடுவே வேறெதையும் நோக்காமல், எழுதினேன். அதுதான் தீவிரம் என்பது. எச்செயலையும் அவ்வண்ணம் செய்ய முடியுமா என்று பார்க்கவேண்டும்.

செல்பேசியின் பொன்விதிகள் மூன்று.

அ. எப்படி எப்போது எந்த அளவுக்கு தவிர்ப்பது என்று தெரிந்திருக்கவேண்டும்.

ஆ.கூடவே இருக்கவேண்டும், ஆனால் இல்லாமலும் இருக்கவேண்டும்.

இ.மிகவும் மலிவானதாக வைத்துக்கொள்ளக்கூடாது, அலட்சியமாக கீழே போட்டு உடைத்துவிடுவோம். மிக விலை உயர்ந்ததாகவும் வைத்துக்கொள்ளக்கூடாது. கீழே விழுந்தால் நம் உள்ளம் உடைந்துவிடும்

ஆனால் இதைமீறி செல்பேசி பயனுள்ளது என்பதையும் கண்டுகொண்டிருக்கிறேன். பொதுவாக வெளியே சென்றால் செல்பேசி எனக்கு பலவாறாகக் கை கொடுக்கிறது. எவ்வாறெல்லாம்?

அ. சலிப்போ எரிச்சலோ ஊட்டும் ஒன்றிலிருந்து விடுபட்டுக்கொள்ள செல்பேசியை திறந்து எதையாவது பார்ப்பது உதவும். பெரும்பாலும் நம்மை உடனே அது திசைதிருப்பிவிடும்.

. செல்பேசி சரியாக பயன்படுத்திக்கொண்டால் நம்மை ஒரு நல்ல மனநிலையில் வைத்திருக்க உதவும். நான் ஆங்கில ‘காமிக்’ துண்டுகளின் பெரிய ரசிகன். பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் உறுப்பினர்தொடர்பு கொண்டவன். அவை எனக்கு வந்துகொண்டே இருக்கும். ஹெர்மன், டெனிஸ் த மெனஸ், பீ நட்ஸ் என புகழ்பெற்ற காமிக் துண்டுகள் தவிர பின்டிரஸ்ட் போன்ற தளங்கள் அன்றாடம் இருநூறுக்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. ஓய்வென்பது அவற்றைப் பார்ப்பது. அவை என் வாழ்க்கையின் மலர்ச்சியான தருணங்களை உருவாக்குகின்றன. விலங்குகளின் விளையாட்டு பற்றிய காட்சித்துணுக்குகளும் எனக்கு மிக உகந்தவை

. நாம் ஒன்றை கவனிக்கையில் கவனிக்காததுபோல் நடிக்க செல்பேசி மிக உகந்தது. பொது இடங்களில் இருக்கையில் பிறர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்பது எழுத்தாளனுக்கு அள்ளக்குறையா வாழ்க்கைக்களஞ்சியம்  ஆனால் நாம் கவனிப்பதை அவர்கள் அறிந்தால் உடனே ’நியாயம் பேச’ ஆரம்பித்துவிடுவார்கள்.

.நாம் உள்ளத்தின் ஆழத்தில் ஓர் அசைவு கொண்டிருக்கையில் அதை புறச்செயல்கள் வழியாகத் தாண்டவேண்டியிருக்கிறது. என்னுள் அப்படி ஒன்று நிகழும்போது செல்பேசியின் தேவையில்லாத குறுஞ்செய்திகளை ஒவ்வொன்றாக அழிப்பேன். அது விழிப்புநிலையை ஏமாற்றி திசைதிருப்ப ஆழம் தன்னை அழுத்தமாக தொகுத்துக்கொள்ளச் செய்கிறது

.வெவ்வேறு சிறு காத்திருப்புகளின்போது எதையாவது வாசிக்கலாம். நான் சிறுகதைகளை பெரும்பாலும் அப்போதுதான் வாசிக்கிறேன். ஒருநாளில் பத்துச் சிறுகதைகள்கூட வாசித்ததுண்டு.

ஆகவே கொஞ்சம் நொச்சு பண்ணுகிற, ஆனால் உதவியான ஒரு நண்பன்தான் செல்பேசி. நண்பி என்று சொல்லவேண்டும். மேலே சொன்ன எல்லா எச்சரிக்கைகளும் நண்பிகளுக்கும் பொருந்தும் இல்லையா?

மேல்ஷாவனிஸ்ட் பிக் என்று வரும் கருத்துரையாளர்களுக்காக மேலதிக வரி. பயனர்கள் பெண்கள் என்றால் செல்பேசி ஒப்புமை கணவர்களுக்கும் பொருந்தும். கொஞ்சம் கடினமான செல்பேசி இருப்பது நன்று. கோபத்தை காட்டிக்கொள்ளவு  உதவும். தொண்ணூறுகளில் லோகி நோக்கியா செல்பேசியை பற்றி பெருகும் பாராட்டுணர்வுடன் சொன்னார். “அற்புதமான செல்போன். உறுதியானது, நாயை எறியலாம்.”

முந்தைய கட்டுரைதெரிந்துகொள்ளலும் அறிதலும்- கடிதம்
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி- ஒரு சொல்