திருமணம்

இன்று மதுரை மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். தமிழகத்தின் மாபெரும் திருவிழாக்களில் ஒன்று. சென்ற ஆண்டு செல்லவேண்டும் என திட்டமிட்டோம். இவ்வாண்டும் திட்டமிட்டோம். சொல்லிலேயே நிகழ்த்திப் பார்த்துவிட்டேன்.

இணையத்திலும் தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு இருக்குமென நினைக்கிறேன். நண்பர்கள் பார்க்கலாம். எந்த திருவிழாவானாலும் நேரில் செல்வதுபோல மகத்தான அனுபவம் வேறில்லை. தமிழகத்தில் ஆலயங்கள் தோறும் நிகழும் மாபெரும் திருவிழாக்கள் நமது மகத்தான பண்பாட்டுச் செல்வங்கள். தமிழ்ப்பண்பாடு உருவாக்கி எடுத்த அழகுகள் அவை. ஆத்திகர்களுக்குரியவை மட்டும் அல்ல, பண்பாட்டுணர்வுகொண்ட அனைவருக்கும் உரியவை.

அவற்றில் பங்கெடுக்கும்போது நாம் பல்லாயிரம் ஆண்டு பழைமை கொண்ட நம் பண்பாட்டுடன் இணைகிறோம். நாம் முடியுடை மூவேந்தர்களின், நாயக்கர்களின் காலத்திலிருந்து ஓர் அகநீட்சியை அடைகிறோம். திரளாக இருக்கையில் மானுடன் அடையும் நிறைவு ஒன்று உண்டு. தன்னை மானுடம் என அவன் உணர்கிறான். துளியென்றும் முடிவிலி என்றும் ஒரே சமயம் உணர்கிறான். அந்த அனுபவம் வேறெங்கும் இல்லை. வேறெந்த கொண்டாட்டமும் கேளிக்கையும் அதற்கு நிகர் அல்ல

ஒரு முறை இளம் வாசகர்- எழுத்தாளர் சந்திப்புக்கு வந்திருந்த நண்பர்களிடம் அவர்கள் தமிழகத்தில் கலந்துகொண்ட திருவிழாக்கள் என்னென்ன என்று கேட்டேன். ஆச்சரியம், இளைஞர்களில் ஒருவர்கூட ஒரு திருவிழாவில்கூட கலந்துகொண்டதில்லை. பலர் அவர்களின் ஊர்களில் மாபெரும் திருவிழாக்கள் நிகழ்வதை அறிந்திருந்தார்கள், கலந்துகொண்டதே இல்லை.

காரணம் இளமையிலேயே பெற்றோர் திருவிழாக்களுக்குச் செல்வதை தடுத்துவிட்டார்கள். ‘படிப்பில் கவனம் சிதறிவிடக்கூடாது’ என்பதற்காக. எங்கும் அனுப்பியதில்லை. பள்ளி, டியூஷன், டிவி, அவ்வப்போது சினிமா- அவ்வளவுதான். அப்படியே அச்சிட்டு எடுத்துக்கொண்டுவிட்டார்கள் பிள்ளைகளை.

நான் சொன்னேன். “ஒரு மரத்தின் கனிகளை உண்ணாதவர் எப்படி அந்த மரத்தை அறியமுடியும்? தமிழ்ப்பண்பாட்டின் கனிகள் இங்குள்ள ஆலயங்கள், திருவிழாக்கள், இலக்கியங்கள், சிற்பங்கள், நிகழ்த்துகலைகள். அவற்றில் அறிமுகமே இல்லாமல் நீங்கள் எழுதப்போவதுதான் என்ன? நீங்கள் வாசிக்கும் எந்த மேலைநாட்டு எழுத்தாளனாவது அவனுடைய பண்பாட்டை அறியாதவனாக இருக்கிறானா?”

இந்தப் புறக்கணிப்புக்கு எந்த பகுத்தறிவுப் பார்வையும் காரணம் அல்ல. மிக சில்லறைத்தனமான லௌகீகவெறிதான் காரணம். இவர்கள் பரிகார பூஜைகளுக்காக பிள்ளைகளுடன் பரிகாரத்தலங்களுக்கு ஏறி இறங்குபவர்கள்தான். நம் திருவிழாக்கள் வெளிறிக் கொண்டிருக்கின்றன. அதிலும் இந்த கொரோனாவின்போது அவை எவ்வளவு பெரிய இழப்புகள் என்பது முகத்தில் அறைகிறது.

ஐரோப்பாவுக்குச் சென்றபோது அங்கே அவர்கள் ஒவ்வொரு திருவிழாவாக மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருப்பதைக் கண்டேன். தேவாலயங்களில் வண்ணக் கற்கண்டு விற்பனைநிலையங்கள், பாலாடைக்கட்டி விற்பனை நிலையங்கள், ஜிப்ஸிகளின் நடனம் என அந்த திருவிழாக்களை பதினேழாம் நூற்றாண்டு பாணியிலேயே நடத்திக்கொண்டிருந்தனர். அந்தக் காலகட்டத்து ஆடைகளுடன்.

அவை அவர்கள் அறியாமையால் மறையவிட்ட விழாக்களை மீட்டெடுக்கும் பரிதாபகரமான முயற்சிகள். கேரளம் சரியான நேரத்தில் தன் அனைத்து விழாக்களையும் மீட்டுக்கொண்டது- விவேகமுள்ள இடதுசாரியான இ.எம்.எஸ் அதற்குக் காரணம்.நாம் அழியவிட்டுக்கொண்டிருக்கிறோம்.

நான் அந்த இளைஞர்களிடம் சொன்னேன். “இனிமேல்கூட நீங்கள் திருவிழாக்களுக்குச் செல்லலாம். அவை அனுபவங்களாக ஆகும். ஆனால் இளமையில் சென்றிருந்தால் அது வாழ்நாள் நினைவு. புனைவுஎழுத்தாளனுக்கு வற்றாத படிம ஊற்றாக ஆகும் கனவு. அதை என்றென்றைக்குமாக இழந்துவிட்டீர்கள்”

குழந்தைகளுக்கு மரபை, அதன் மாபெரும் தொடர்கனவை மறுக்க நமக்கு என்ன உரிமை? அற்பமான அரசியல் நம்மை நம் முன்னோரின் வரலாற்றையும் பண்பாட்டையும் பார்க்க முடியாதவர்களாக ஆக்குமென்றால் நாம் எத்தகைய குடிகள்?

இந்நாளில் மீனாட்சியின் திருமணத்தை ஊடகங்களில் பார்ப்போம். அடுத்த ஆண்டு நேரில்.

குமரித்துறைவி [குறுநாவல்] – 6

குமரித்துறைவி [குறுநாவல்] – 5

குமரித்துறைவி [குறுநாவல்] – 4

குமரித்துறைவி [குறுநாவல்] – 3

குமரித்துறைவி [குறுநாவல்] – 2

குமரித்துறைவி [குறுநாவல்] – 1

முந்தைய கட்டுரைபாலுணர்வெழுத்தும் தமிழும்
அடுத்த கட்டுரைஎழுதுவது- கடிதம்