குமரியும் குருவும்

அறுபது தொடங்கும் இப்பிறந்தநாள் அன்று கன்யாகுமரிக்குச் செல்லவேண்டுமென்று ஏன் முடிவெடுத்தேன் என்று சொல்லத்தெரியவில்லை. நாகர்கோயிலுக்கு டிக்கெட் போடச் சொல்லியிருந்தேன். அதை கன்யாகுமரி வரை நீட்டித்துக் கொண்டேன். தனியாக இருக்கவேண்டும், குருவின் இடம் ஒன்றில் இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

கன்யாகுமரியை தெரிவு செய்ய குமரித்துறைவியின் உளநீட்சி ஒரு காரணம். அத்துடன் அருகே மருத்துவாழ்மலை இருக்கிறது. அங்கே ஒரு குகையில் நாராயணகுரு துறவியாக ஆவதற்கு முன் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். துறவியானபின் இரண்டு ஆண்டுகள்.

அருண்மொழியின் இல்லத்தில் ஒரு துயரம், அவள் தம்பி லெனின் கண்ணன் சென்ற ஏப்ரல் 6 ஆம் தேதி மறைந்துவிட்டான். அருண்மொழியின் இளம்பருவத் துணைவன். அவளைவிட நான்காண்டு வயது குறைந்தவன். முன்பு அவளுக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்தவனே அவன்தான்.

நான் அருண்மொழியை திருமணம் முடித்த நாட்களில் அவன் பிளஸ்டூ மாணவன். திசைகளின் நடுவே தொகுதியிலிருக்கும் எல்லா கதைகளையும் கையால் அழகாக நகலெடுத்தவன். அந்தப் பதிப்பில் அவனுக்கு நன்றி சொல்லியிருப்பேன். பின்னர் அவன் வாழ்க்கை பலவாறாக திசைதிரும்பிவிட்டது. கலையுள்ளம் என்பது பலசமயம் ஒருவகை சாபம்.

அருண்மொழியும் சைதன்யாவும் திருவாரூரில் இருந்தனர். தாய்மாமனை ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்துக்கொண்ட அஜிதனுக்கு கொரோனா. 10 ஆம்தேதி அவனை நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அவனுக்கு உடம்பு ஓரளவு சரியானபின் நான் சென்னை சென்றேன்.

நான் சென்னையில் இருக்கையில் அருண்மொழியும் சைதன்யாவும் நாகர்கோயில் வந்தனர். அஜிதன் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினான். மொத்தத்தில் துக்கம், நோய் என சலிப்பூட்டும் சூழல்.

ஆனால் அதற்குச் சம்பந்தமே இல்லாமல் என் மனம் வேறொரு திசையில் இருந்தது. நான் எனக்குள்ளிருந்து ஒரு வழிகாட்டுதலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். இந்த சிக்கல்களுக்கு நடுவேதான் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு மதுரைக்குச் சென்றேன். நித்யாவைப் பற்றி உரையாற்றினேன்.

அஜிதன் ஆஸ்பத்திரியில் இருக்கும்போதுதான் வீட்டில் தனிமையில் இருந்து குமரித்துறைவி எழுதினேன். அந்த அல்லல்களிலிருந்து என்னை மேலெடுத்துக்கொள்ள மீன்விழியை நாடினேன். ஒரு காலப்பயணம், ஒரு கனவு. என்னை அது எப்போதுமே அணைத்துக் காக்கிறது. அங்கே சென்று மிக உயரத்தில் விலகிச்சென்று அங்கிருந்து அனைத்தையும் பார்த்தேன்.

கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் 21-4-2021 அன்று காலை கன்யாகுமரிக்கு வந்திறங்கினால் அங்கே ஊரடங்கு. தெருக்களில் ஒருவர்கூட இல்லை. கடைகள் இல்லை. முன்பதிவுசெய்த விடுதியில் நான் மட்டும். அருகே ஒரு சிறு ஓட்டல் செயல்பட்டது- காவல்நிற்கும் போலீஸ்காரர்களுக்காக. கன்யாகுமரி முனைக்குச் செல்ல தடுப்பு அமைத்திருந்தனர். ஆனால் எனக்கு கன்யாகுமரியில் எல்லா வழிகளும் தெரியும்.

கன்யாகுமரியின் சுற்றுலாக்கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. நெரிசல் பிதுங்கும் சாலைகள் ஓயந்து கிடந்தன. தெருநாய்கள், பைத்தியக்காரர்கள் மட்டும் நிதானமாக உலவிக்கொண்டிருந்தனர். கூட்டிப்பெருக்கப்பட்ட சாலை குப்பையில்லாமல் கடற்காற்றில் மணல்சுழிக்க திறந்து விரிந்து கிடந்தது.

சாலைகளிலேயே நரிக்குறவர் குடும்பங்கள் குடியிருந்தன. அவர்களுக்கு அரசு கட்டிக்கொடுத்த ஊர் ஆரல்வாய்மொழியில் உள்ளது. ஆனாலும் கால்வாசிப்பேர் அங்கே தங்குவதில்லை. அவர்களுக்கு கன்யாகுமரியின் வணிகமும் கொண்டாட்டமும் தேவைப்படுகிறது. கடும் உடலுழைப்புகள் செய்ய அவர்கள் வருவதில்லை. அவர்களின் அந்த மனநிலை பற்றிய புகார்களை பலரும் சொல்வதுண்டு. ஆனால் எனக்கென்னவோ அவர்கள் வாழ்வது சரி என்று படுவதுண்டு. கடும் உழைப்பு ஒரு தண்டனை.

நரிக்குறவர்கள் கொரோனாவையே அறியவில்லை. அத்தனைபேருமே சீன செல்பேசிகளில் கூடிக் கூடி அமர்ந்து சினிமா பார்த்துக்கொண்டிருந்தனர். முன்பெல்லாம் வானொலிப்பெட்டி வைத்திருப்பார்கள். அவர்களின் குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடின. சண்டைபோட்டு கட்டிப்புரண்டன. தேங்காய் நார்போன்ற தலைமுடி கொண்ட, மாநிறமான, அழகான குழந்தைகள்.

பெரிய கூடைகளில் உணவைக் கொண்டுவந்து எவரோ அவர்களுக்கு அளித்தனர். ஆச்சரியமான ஒன்றைக் கண்டேன். நரிக்குறவர்களும் சரி பைத்தியங்களும் சரி நாய்களுக்கும் உணவை பகிர்ந்துகொண்டே சாப்பிட்டனர். கிட்டத்தட்ட பாதிப்பாதியாகவே பங்கிட்டனர். நாய்கள் பட்டினி கிடக்கவில்லை.

வந்த அன்றே அன்னை குமரியைச் சென்று பார்த்தேன். ஆலயத்தில் நானும் அர்ச்சகரும் மட்டுமே. அத்தனை நேரம், அத்தனை அணுக்கமாக, அத்தனை தனிமையாக குமரியை நான் பார்த்ததே இல்லை. சிற்றாடை கட்டி தவமணிமாலையுடன் நின்றிருந்தாள் சிறுமி. இருபுறமும் அடுக்கு விளக்குகளின் சுடர்கள் அசைந்தன. மூக்குத்தியின் ஒளி இன்னொரு விழி. ஈசனின் அனல்விழி அல்ல, குளிர்விழி.

இளமையில் அங்கே வந்து மெய்யாகவே அங்கே ஒரு கரிய அக்கா நிற்பதாக உணர்ந்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்திருக்கிறேன்.  இரண்டு வயது இருக்கும். இன்றும் அக்காட்சி, அந்த சூழல் எல்லாமே அப்படியே நினைவிருக்கிறது. அது ஒரு கனவாக பலமுறை வந்துள்ளது பலவாறாக அதை எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

அலைகள் இல்லாத கடல். ஓய்ந்து விரிந்த கன்யாகுமரியில் நான் மட்டுமே நின்று சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்த்தேன். இத்தனை நாளில் தோன்றும்போதெல்லாம் வரும் ஓர் இடம் கன்யாகுமரி. அதன் நெரிசலும் குப்பையும்கூட ஒருவகை மகிழ்ச்சியை அளிக்கும். ஏனென்றால் அங்கே அத்தனை முகங்களுமே மகிழ்ச்சிகொண்டிருக்கும். கடற்கரை மகிழ்ச்சியாக இருக்கையில் அலைகள் கொண்டாட்டமிடுபவைபோல ஆகிவிடுகின்றன.

ஆனால் அந்த ஆளில்லா வெற்றுவிரிவு வேறொரு உளநிலையை அளித்தது. காலியான பாதைகள், காத்திருக்கும் பெஞ்சுகள், மணல் பரவிக்கிடந்த கருங்கல் பரப்புகள், உப்புக்காற்றின் நைப்பு பரவிய தூண்கள். நான் ஒவ்வொன்றாக விழிகளால் தொட்டுத்தொட்டு அலைந்தேன். சிதறிப் பரவினேன். ஏதேதோ உதிரி எண்ணங்கள். ஏதேதோ குழப்பங்கள். பின்னர் மெல்ல குவிந்தேன். நான் மட்டுமேயாகி அங்கே கடலைப் பார்த்து நின்றிருந்தேன்.

முதல்நாள் கன்யாகுமரி அலங்கார உபகார மாதா கோயிலுக்குச் சென்றேன். கன்யாகுமரியில் எனக்கு இனிய இடங்களில் ஒன்று இது. கோயிலுக்குள் உள்ளறை ஒன்றில் இருக்கும் பழைய மாதாசிலைதான் அனேகமாக இந்தியாவிலுள்ள மாதா சிலைகளில் அழகானது என்று நினைக்கிறேன். அங்கும் எவருமே இல்லை. ஆலயம் திறந்திருந்தது. ஓருசில மெழுகுவத்திகள் எரிந்தன. மாதாவும் நானும் மட்டும்தான்.

மதியவெயில் பத்துமணிக்கே எரியத்தொடங்கியது. அறைக்குத் திரும்பி குமரித்துறைவியை படித்து திருத்தங்கள் போட்டேன். மதிய உணவு உண்டதுமே தூங்கிவிட்டேன் நான்கு மணிக்கு விழித்து மீண்டும் கடற்கரைக்குச் சென்றேன். கடலோரமாக நடந்தேன். ஒவ்வொரு கல்பெஞ்சிலும் அமர்ந்திருந்தேன். அந்தி இருட்டியபின் மீண்டும் குமரியைச் சென்று பார்த்தேன்.

21 முதலே என் செல்பேசியை பெரும்பாலும் அணைத்து வைத்திருந்தேன். இரவில் தூக்கத்தில் குமரித்துறைவியின் காட்சிகள். இன்னும் விழாவின் வேலை முடியவில்லை, முக்கியமான எதையோ விட்டுவிட்டேன் என்னும் பதற்றம் என்னை இருமுறை எழுப்பியது.

22 ஆம் தேதி அதிகாலை நான்குமணிக்கு விழித்துக்கொண்டேன். குளிர்நீரில் குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்றேன். செல்லும் வழியில் எவருமில்லை. ஒரு கடைகூட திறந்திருக்கவில்லை. செருப்புவைக்கும் இடம் இல்லை. கடைகளின் பெயர்ப்பலகை விளக்குகள் மட்டும் எரிந்து அணைந்துகொண்டிருந்தன.

ஆனால் பூ- அர்ச்சனைத்தட்டு விற்கும் கடை திறந்திருந்தது. உள்ளே ஆலயம் திறந்திருந்தது. அர்ச்சகர் இருந்தார். கருவறையிலும் மண்டபங்களிலும் சுடர்கள் பொலிந்தன. நீண்ட தெற்குவாயில் வழியாக மிகத்தொலைவில் தெரியும் தேவியை பார்த்தேன். பின் அருகே சென்று நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

திரும்பி வரும்போது ஒரு டீக்கடை திறந்திருந்தது. காபி சாப்பிட்டுவிட்டு கடற்கரைக்குச் சென்று புலரியைப் பார்த்தேன். அந்தப் பொழுதில் திளைப்பதென்பது எத்தனை கடினமானது. அதற்கு அர்த்தமில்லாமல் எதையாவது செய்யவேண்டியிருக்கிறது. கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்தேன். அதன்பிறகு கொஞ்சம் கற்களை பொறுக்கி மேலிருந்து கடல்மேல் வீசினேன். மணலைக் கூட்டிவைத்து அதை கடற்கரைக் காற்று கரைப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

என்ன செய்கிறேன் என்று எனக்கே சிரிப்பு வந்தபோது திருவிதாங்கூர் ராஜா முன்பு எங்கிருந்தாலும் ஊழலில் திளைத்த கரைநாயர் ஒருவரை கடலில் அலையெண்ணும் பணிக்கு அனுப்பிய ஞாபகம் வந்தது. [மீன்பிடிப்பவர்களின் படகுகள் அலையெண்ணுவதை தடுப்பதனால் அவர்கள்  தனக்கு லஞ்சம் கொடுக்கவேண்டும் என ஓர் ஏற்பாட்டை கரைநாயர் செய்துகொண்டார்] ஆகவே கொஞ்சநேரம் அலையெண்ணினேன்.

அதன்பின் நாய்களைப் பார்த்தேன். அங்கே எங்கும் பலவகை நாய்கள். சுருண்டு தூங்குபவை. ஆர்வமின்றி ஈ கடிப்பவை. அடிவயிற்றில் மூக்கால் நிமிண்டிக்கொண்டிருப்பவை. கோணல் வாலுடன் ஒரு நாய் என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்றது.

இரண்டு நாய்கள் ஏதோ செய்துகொண்டிருந்தன. கவனித்தபோது ஆச்சரியமாக இருந்தது. தார்ப்பாயால் ஒரு கடை மூடி கட்டப்பட்டிருந்தது. அதை கட்டியிருந்த நைலான் கயிற்றை ஒரு நாய் கடித்துக்கொண்டிருந்தது. அருகே இன்னொரு நாய் அமர்ந்திருந்தது.  பின்னர் அந்த கடித்த நாய் ஓய்வெடுக்க அதுவரை அருகே இருந்த நாய் கடிக்க ஆரம்பித்தது.

என்ன செய்கிறதென்று கடைசிவரை பார்த்தேன். கடைசியில் நைலான் கயிற்றை அறுத்துவிட்டன. தார்ப்பாயை விலக்கி ஒரு நாய் உள்ளே புகுந்தது. எதையெதையோ உருட்டியது. வாயில் எதையோ கவ்விக்கொண்டு ஓட இன்னொருநாய் உள்ளே சென்றது. கூட்டு உழைப்பும் அதற்குரிய பொறுமையும் கொண்டவை.

இந்த உளவியாட்டுக்கள் வழியாகவே நாம் ஒரு தருணத்தில் இருந்துகொண்டிருக்க முடிகிறது. நம்மை அறியாமலேயே நமக்குள் நம் உள்ளம் அமைதியடைந்து அந்த இடத்தில், அத்தருணத்தில் படிந்து கொண்டிருக்கிறது. எப்போதோ பெஞ்சில் அமர்ந்து அலைகளை பார்த்துக்கொண்டிருந்தபோது முற்றாகவே என்னை இழந்து, காலத்தில் கடந்துசென்று, விழிப்புகொண்டு மீண்டேன்.

பின்னர் அறைக்குச் செல்லாமலேயே மருத்துவாழ்மலைக்குச் சென்றேன். அரியமூலிகைகள் இருப்பதனால் அப்பெயர் பெற்ற மலை இது. அனுமன் தூக்கிச் சென்ற சஞ்சீவி மலையின் துண்டு என்பது தொன்மம். உண்மையில் பெரும்பாறைமேல் பெரும்பாறையென அமைந்த ஒரு வறண்ட குன்று. ஆனால் இடுக்குகளில் மரங்கள் எழுந்திருக்கும். மருத்துவாழ்மலைமேல் சித்தர்கள் வாழ்ந்ததாக வரலாறுண்டு. ஐயா வைகுண்டர், நாராயணகுரு உட்பட பலர் இங்கே தவமிருந்திருக்கிறார்கள்.

மலைக்குமேல் நாராயணகுருவின் குகைக்குச் சென்றேன். மாலை வரை அங்குதான் இருந்தேன். திரும்பி வந்து மீண்டும் கடற்கரை. மீண்டும் குமரியின் தரிசனம். இரவில் விண்மீன்கள் நிறைந்த வானின் கீழ் தனியாக கடற்கரையில் நின்றிருந்தேன். எட்டு மணிக்கு சாலைக்கு வந்தபோது கன்யாகுமரி நாகர்கோயில் பஸ் சென்றுகொண்டிருந்தது. ஏறி மீண்டும் மருத்துவாழ்மலைக்கு வந்தேன்.

இருண்டிருந்தது மலையடிவாரம். மலைக்குமேல் செல்லும் பாதையில் மின்விளக்குகள் தனிமையில் எரிந்துகொண்டிருந்தன. காற்று சுழற்றிக்கொண்டு வீசியது. மேலேறிச் சென்று மீண்டும் அங்கேயே அமர்ந்திருந்தேன். சீவிடுகளின் ரீங்காரம் என்று சொல்வதுண்டு. செவிதுளைக்கும் விசில் ஓசையை அவை எழுப்பிக்கொண்டிருந்தன. விண்மீன்கள் இடம் மாறின. காற்று குளிரத்தொடங்கியது.

இறங்கி கீழே வந்தேன். நடந்தே நெடுஞ்சாலை முகப்புக்கு வந்தேன். சாலைப்பணிகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஒரு டீக்கடை திறந்திருந்தது. டீ குடித்துவிட்டு காத்திருந்தேன். கன்யாகுமரி செல்லும் ஒரு வேன் வந்தது. ஏதோ பொருட்கள் கொண்டுசெல்வது. மீண்டும் விடுதிக்கு வந்தபோது மூன்றரை மணி.

அரைமணிநேரம் விடுதியில் இருந்தேன். நீராடி மீண்டும் அன்னையின் ஆலயம் சென்றேன். மிக முன்னரே சென்றுவிட்டேன். நான் உள்ளே சென்றபோது நிர்மால்யபூஜை தொடங்கிவிட்டிருந்தது. அபிஷேகம் முடிய முக்கால்மணிநேரம். நானும் வேறு மூன்றுபேரும்தான்.

கடற்கரைக்குச் சென்று உதயத்தைப் பார்த்தேன். துயில்நீக்கம் இருந்தாலும் சற்றும் களைப்பில்லை. உள்ளம் நிறைந்திருந்தது. விடுதிக்கு வந்து அறையை காலிசெய்துவிட்டு நாகர்கோயிலுக்குச் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டேன். வீடு திரும்பினேன்.

என்ன செய்தேன் என்பதையே சொல்லமுடியும். நாளை ஒருநாள் நானே படித்துப் பார்ப்பதற்காக. என்னென்ன எண்ணினேன் என்று சொல்லமுடியாது. எண்ணங்கள் சில பொழுது கொந்தளித்தன. சிலபொழுந்து பாறைவெளியென அசைவிழந்து கிடந்தன. சில சமயங்களில் ஒரு சொல் துளித்து அப்படியே நின்றது. சம்பந்தமே இல்லாமல் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்ற பாட்டு எங்கோ கேட்டு உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. அப்படியே மறைந்தும் போயிற்று.

இந்த தனிமை நன்று. மெல்லமெல்ல திரட்டிக்கொள்ள முடிந்தது. சில தெளிவுகள், அதிலிருந்து சில திட்டங்கள். எதுவானாலும் இப்போதைக்கு 2028 வரை, என் அறுபத்தாறு வயது வரை மட்டுமே. எஞ்சியதை அதற்கப்பால் பார்ப்போம்.

செயல்திட்டங்கள் சில உண்டு, ஆனால் அவற்றை நான் இயற்றவேண்டுமே ஒழிய அவை என்னை கொண்டுசெல்லக் கூடாது. அவற்றிலிருந்து முற்றாக விலகியும் நின்றாகவேண்டும். அவற்றின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால் நின்று வேடிக்கை பார்ப்பவனாக திகழவும் வேண்டும்.

*

இன்று மின்னஞ்சலில், வாட்ஸப்பில், குறுஞ்செய்தியில் வாழ்த்துக்களை பார்த்து அனைவருக்கும் மறுமொழி இட்டேன். அதிலேயே இந்த நாள் சென்றது. மூத்தவர்கள் நண்பர்கள் வாசகர்கள் என பலதரப்பினரின் செய்திகள். அனைவருக்கும் நன்றி.

முந்தைய கட்டுரைஏழாம் உலகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாலுணர்வெழுத்தும் தமிழும்