அன்புள்ள ஜெ , தங்களுடைய காந்தமுள் படித்தேன் . நல்ல தலைப்பு . எங்கே திருப்பினாலும் ஒரே திசையில் வந்து நிற்கும் முள் . ஒரு வகையில் இதுவும் ஒரு மன நோய்தான் . தன்னுடைய தாழ்வு மனப்பான்மைக்கும் , தோல்விகளுக்கும் ஏதேனும் ஒரு பொது எதிரியை காரணம் கூறும் மனநோய். Beautiful mind படத்தில் இந்த மன நோய் தெளிவாகவே காண்பிக்க பட்டுள்ளது . ஒரே ஒரு வித்தியாசம் , இது ஒரு கும்பலின் மன நோய் .
எந்த ஒரு ஆதி சமூகமும் தனக்குள் பிரிந்து இயங்குவது இயல்பு . இந்த பிரிவுகள் பின்பு அரசியல் மற்றும் சமூக காரணங்களினால் சாதியாக நிறுவப்பட்டிருக்கலாம் . ஆனால் இது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் ஒரு முன்கணிப்பு உடைய மன நிலையிலேயே எழுத பட்டதாக உணர்கிறேன் ( ஒரு சிலரை தவிர). இது பற்றிய நடு நிலைமையான ஆராய்ச்சிகளை பரிந்துரை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் .
குமரன்
அன்புள்ள குமரன்
நீங்கள் எழுதியது உண்மை. அது ஒருமனநோயாக ஆக்கப்பட்டிருக்கிறது. ·பாஸிச அரசியலின் இயல்பே அதுதான். எளிமையான பண்பாட்டு வாய்ப்பாடுகளை உருவாக்குதல். அந்த அடிப்படையில் பொது எதிரிகளை கண்டுபிடித்தல். அந்த எதிரிகள் மீதான அச்சம் வெறுப்பு ஆகியவற்றை ஓங்கி ஓயாமல் பிரச்சாரம்செய்து மெல்லமெல்ல மனநோய்மண்டலமாக பண்பாட்டுச்சூழலை ஆக்குதல். இங்கும் நடந்தது அதுவே.
நான் அறிந்தவரை இங்கே வேளாள தமிழியக்கத்தில் இருந்த பிராமண வெறுப்பை பின்னர் திராவிட இயக்கம் அரசியலாக்கியது. அதற்கு விதையூன்றியவர்கள் கால்டுவெல், எல்லிஸ்,தர்ஸ்டன் முதலிய காலனியாதிக்ககால ஆய்வாளர்கள்.
இந்திய சமூகத்தில் சாதியின் உருவாக்கம் அதன் பங்கு வளர்ச்சி போன்றவற்றைப்பற்றிய அறிவார்ந்த ஆய்வுகளை இந்திய மார்க்ஸிய ஆய்வாளர்களே செய்திருக்கிறார்கள். டி.டி.கோஸாம்பி முக்கியமான ஒரு தொடக்கப்புள்ளி. அவரது ஆய்வுநூலான ‘பண்டைய இந்தியா’ இப்போது என்.சி.பி.எச் வெளியீடாக எஸ்.என்.ஆர்.சத்யா மொழியாக்கத்தில் கிடைக்கிறது.
ஆனால் அந்த முறைமையை கடைப்பிடித்த தமிழ் மார்க்ஸிய ஆய்வாளர்கள் அனேகமாக எவருமே இல்லை. இங்குள்ளவர்களுக்கு வரலாற்றையும் சமூகவியலையும் அத்தனை சிக்கலாக விளக்குவதில் நம்பிக்கை இல்லை. அவர்கள் மக்கள் ஏற்கனவே நம்பும் வெறுப்புசார்ந்த வரலாற்று எளிமைப்படுத்தல்களை வைத்து அவர்களிடம் பேசுவது எளிது என்று கண்டுகொண்டவர்கள் மட்டுமே
ஜெ
அன்புள்ள ஜெ
காந்தமுள் கட்டுரை படித்தேன். உண்மையிலேயே உற்சாகமாக இருந்தது. கிட்டத்தட்ட இதேபோல ஒருவர் மக்கள் டிவியிலே வந்து பேசுகிறார். நன்னன் என்று பெயர். அவரது முகத்தில் தெறிக்கும் அதி தீவிரமான இனவெறுப்பு அச்சமூடுகிறது. எல்லாவகையான வெறுப்புகளையும் தொலைக்காட்சியில் கட்டுப்படுத்துகிறார்கள். அதெல்லாம் பிற்போக்கு என்றும் மனிதாபிமானம் அற்றது என்றும் சொல்லப்படுகிரது. இதைமட்டும் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதைப்பார்க்கும் பிராமணர்கள் அடையும் அன்னிய உணர்வை என்னால் ஊகிக்க முடிகிறது. இதுதான் நம் கலாச்சார சூழல்
விவேக்
[தமிழாக்கம்]