குமரித்துறைவி [குறுநாவல்] – 6

[ 18 ]

நான் இருட்டில் நெடுந்தொலைவு சென்று அதன்பின்னரே குதிரையின் விரைவைக் குறைத்தேன். மூச்சிரைத்துக் கொண்டிருந்தேன். பின்னர் இறங்கி அங்கிருந்த கற்பாறைமேல் அமர்ந்தேன். உடல் மிக தளர்ந்திருந்தது. சிந்தனை ஓடாமல் அங்கிருந்தபடி கீழே விரிந்துகிடந்த செவ்வொளிப்புள்ளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நான் சொற்களை விட்டுவிட்டேன் என்று தெரிந்தது. ஏன் அதைச் சொன்னேன்? ஆணவம் அல்ல. உண்மையில் நான் அஞ்சிக்கொண்டிருந்தேன். எங்கோ ஏதேதோ பிழைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று அறிந்திருந்தேன். பிழையில்லாமல் இந்தப் பெரிய திருவிழாவை நடத்தி முடிக்க முடியாதென்று நன்றாக உணர்ந்திருந்தேன். ஆனாலும் சொன்னேன். என் நாக்கிலிருந்து என்னை மீறி அச்சொற்கள் வந்தன.

நான் களைத்திருந்தேன். தொடர்ச்சியான துயில்நீக்கம். அத்துடன் அத்தருணத்தின் எரிச்சல். அதைவிட மேலாக பிழை பிழை என எண்ணி எண்ணி தேடிச் சலித்த என் அகம். ஏதோ அவ்வாறு சொல்ல நேர்ந்துவிட்டது. ஆணவம் அல்ல. வேறேதோ ஒன்று. ஒளிந்து விளையாடும் பிழைக்கு நான் ஓர் அறைகூவல் விடுத்திருக்கிறேனா? நான் கண்களை மூடிக்கொண்டேன். அலையலையாக இருட்டும் செவ்வொளிகளும் கண்களுக்குள்ளும் நெளிந்தன. நடுவே ஒரு முகம். மீனம்மையின் சின்னஞ்சிறிய மாந்தளிர் நிறமான நீள்முகம். நீள்மூக்கு, நீள்விழிகள், குமிழுதடுகள், மென்சிரிப்பு. குறும்பு செய்வதற்கு முந்தைய சிறுமியின் பாவனை.

என் மெய் சிலிர்த்தது. அதுதான், நான் அம்மையைத்தான் அறைகூவியிருக்கிறேன். என்னுடன் விளையாட வா என அழைத்திருக்கிறேன். அவள் வந்தேயாகவேண்டுமென்றால் நான் என் உயிரை பணயம் வைத்தாக வேண்டும். அதைத்தான் செய்திருக்கிறேன். விளையாட வாடி சிறுக்கி என்று கூவியிருக்கிறேன்.

என்ன நடக்கும்? ஒருவேளை நாளை அந்தியில் நான் இருக்கமாட்டேன். இருக்கவேண்டுமென்றால் மீனாம்பாள் நினைக்கவேண்டும். அவளுடைய குறும்புச்சிரிப்பு என்னைக் காக்கவேண்டும். நான் புன்னகைத்தேன். என் எல்லா பதற்றங்களும் அகன்றன. அவள் என்னை கைவிட்டாலும் என்ன? அவள்பொருட்டு உயிர் விடுவதும் நிறைவே. நல்லது, நான் அவளுக்கு முன் என் பகடையை உருட்டிவிட்டேன். இனி அதை எடுத்து ஆடுவது அவள் பொறுப்பு. ஆடட்டும் பார்க்கிறேன். ஆம், ஆடட்டும் அவள். அச்சொல்லை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். என் உள்ளம் மலர்ந்துகொண்டே இருந்தது.

நான் எழுந்து குதிரைமேல் ஏறி ஆரல்வாய்மொழி எஜமானனின் அரண்மனைக்குச் சென்றேன். அங்கே என்னைப் பார்த்ததும் எஜமானன் ஓடி வந்துமகாராஜா அங்கேயா இருக்கார்?” என்றார்.

தூங்கிட்டிருக்கார்தூங்கட்டும், காய்ச்சல் இருக்கு. தூங்கினால் காய்ச்சல் குறைஞ்சிரும்என்றேன்.

இன்னும் ஒரு நாழிகையிலே பிரம்ம முகூர்த்தம்பூஜைகள் தொடங்கிரும்.”

அப்ப எந்திரிச்சிருவார். எந்திரிச்சதுமே தேவி முகத்தைப் பாக்கிறது நல்லது. நான் இங்கே குளிச்சு ஒருங்கணும். அவரு எந்திரிச்சதுமே சம்பிரதி செல்லப்பன் பிள்ளையை அனுப்பி கூட்டிட்டு வந்திருங்க. இங்கே கொஞ்சம் சாப்பிட்டு குளிச்சு ஒருங்கி அவர் அங்கே வாறதுக்கு சரியா இருக்கும்.”

நான் குளித்தபோது நெஞ்சுக்குள் தேவி மந்திரத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அதை தலைதுவட்டும்போதுதான் உணர்ந்தேன். “யாதேவி சர்வபூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா!”. குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி விட்டுக்கொண்டேன். இவ்வுலகமெங்கும் ஏழுலகங்களிலும் அன்னை வடிவமாக அமைபவளே! ”யாதேவி சர்வ ஃபூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா

ஆடைகளை அணிந்து வெளியே வந்தேன். கருக்கிருள் கூடியிருந்தது. ஒவ்வொன்றும் இருளில் இருந்து உயிர்கொண்டு எழுந்து வந்து இன்னொன்றைச் சந்தித்து இணைந்து இணைந்து காலையை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஒளியால் தங்களை ஒன்றாக்கிக் கொண்டிருந்தன. ஒளியில்லை. இது மெல்லிய மிளிர்வு. இது ஒரு துலக்கம் மட்டுமே. காகங்களின் ஓசைகள் கேட்டன. கோழி ஒன்று ஊருக்குள் கூவியது.

நான் குதிரையில் ஏறி ஆரல்வாய்மொழி கோட்டையின் கீழே சென்றேன். காவலர்கள் ஈட்டிமாற்றிக் கொண்டிருந்தனர். சென்றவர்களும் களைப்புடன் இல்லை. நிலம் நிறைத்து அமர்ந்து அரைத்தூக்கத்திலிருந்த மக்கள் கலைந்து கலைந்து ஓசையிட்டபடி எழுந்துகொண்டார்கள். அவர்கள் நீராடுவதற்கு காட்டுக்குள் சிறுகுளங்கள் வெட்டப்பட்டிருந்தன. அங்கே நிரைநிரையாக நின்று பனையோலை தொன்னைகளால் நீர் அள்ளி ஊற்றி குளித்துக்கொண்டிருந்தனர்.

நேற்றைய கூட்டத்தில் நூறில், ஆயிரத்தில் ஒரு பங்குகூட இல்லை. பெரும்பாலானவர்களை அனுப்பிவிட்டேன். இன்று உண்மையில் மக்களை விட படைகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் இருப்பவர்கள் அன்னை கிளம்புவதை காணாமல் திரும்பிப் போகக்கூடாதென்று இருந்துவிட்டவர்கள். இருபது கல் தொலைவு சுற்றி மீண்டும் ஆரல்நகருக்குள் வந்தவர்கள்.

ஊட்டுபுரைகளில் நான்கு மட்டும் இன்று காலையும் மதியமும் இயங்கும். அவற்றில் புகை எழத்தொடங்கிவிட்டது.  ஒவ்வொன்றும் இயல்பாக அமைந்துவிட்டிருந்தன. இரவுயிர்கள் ஒடுங்க, காலைஉயிர்கள் எழ, காட்டில் பொழுது மாறுவதுபோல ஒவ்வொன்றும் நிகழ்ந்துகொண்டிருந்தது. இவ்வண்ணமே என்றும் எவ்வகையிலும் என.

மணப்பந்தலுக்குச் சென்றேன். அங்கே நெய்விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. கொண்டையத் தேவர் குடியைச் சேர்ந்த மறவர்கள் புதிய வெள்ளை ஆடையும் புதிய தலைப்பாகைகளுமாக ஓரிடத்தில் கூடியிருக்க அவர்கள் நடுவே ஒரு முதியவர் பேசிக்கொண்டிருந்தார். நான் அவர்களருகே சென்றேன்.

முதியவர் என்னை நோக்கி புன்னகையுடன் வணங்கிஇன்னைக்கு அம்மைகூட கெளம்புறோம் உடையதே. அதைச் சொல்லிட்டிருந்தேன்.”

எல்லாரும் கிளம்பல்லை இல்லியா?” என்றேன்.

அதெப்டி? இந்த மண்ணுலேதானே பிறந்தோம். இந்த மண்ணுக்காக இன்னும் நூறு தலைமுறைக் காலம் எங்க ரத்தம் விளணும்லா? அங்கேருந்து எத்தனைபேரு வந்தோமோ அதிலே ஏழுபேரு கூடுதலா திரும்பிப் போகணும்னு ஏற்பாடு.”

மதுரைக்கா?” என்றேன்.

மதுரைக்கும் எங்களுக்கும் என்ன? நாங்க போறது கயத்தாறிலே எங்க ஊருக்கு. கயத்தாறு பக்கம் உசிலங்குளம்.”

அங்க யாரு இருக்காங்க?”

யாருக்கு தெரியும்? நாங்க விட்டுட்டு அம்மைக்கு காவலா வந்து எளுவது வருசமாச்சு. அப்ப வந்தவங்களிலே மாயாண்டிச்சாமி பாட்டன் மட்டும்தான் இப்ப இருக்காரு. வயசு எம்பத்தெட்டாச்சுசெவி கேக்காது. அவருக்கு ஊரும் தடமும் தெரியும். மூத்து வயசானப்ப அவரு முழுசா அங்கேயே போயிட்டாரு. அங்க இருந்த மரமும் செடியும் பாறையும்கூட ஞாபகத்திலே வருது. அதனாலே தெளிவா கேட்டுத் தெரிஞ்சுகிட்டோம். அங்க ஒண்ணுமில்லை. கருவாக்காடு. மொட்டைப்பாறை. ஊரிலே இந்த பஞ்சகாலத்திலே மக்கமனுச யாரும் இல்லாம இருக்கத்தான் வாய்ப்பு. போனதுமே குடிசை போட்டு சுவரு கட்டி ஊரை எளுப்பணும்.”

பொண்டுக கூட வாறாளுகல்ல?”

எட்டு பேரு உண்டு வாறதுக்குஅங்க போயி காசு குடுத்து வேற கூட்டத்திலே பொண்ணு எடுத்துக்கிடுவோம்.”

அங்க அப்டி கஷ்டப்பட்டு எதுக்கு?” என்றேன்.

சாமி, அது எங்க நிலம்லா? அங்கதானே எங்க கருப்பசாமியும் மாயாண்டிச்சாமியும் நின்னுட்டிருக்கு?”

நான் தலையசைத்தேன். “வேண்டது கையிலே இருக்கும்ல?” என்றேன்.

மூணு தலைமுறை நின்னு வாழுற பொன்னு இருக்கு. கேட்டுக்கேட்டு மகாராஜா குடுத்திருக்கார். அதை விட மீனாட்சி குடுத்திருக்கான்னு சொல்லணும். எங்க பாட்டன் அம்மைக்கு தோள் குடுத்த அந்த நாளிலே இருந்து இந்நாள் வரை எங்க குடியிலே ஒரு குழந்தை சோறில்லாம இருந்ததில்லை. இனிமேலும் அப்டித்தான்.”

நான் வணங்கிவிட்டு மேலே சென்றேன். கன்யாகுமரி திருமஞ்சனக்காரர்களையும் பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். அவர்கள் இவர்களைப்போல அல்ல. அவர்களுக்கு அரசர்கள் ,கோயில்கள் எதனுடனும் தொடர்பில்லை. அவர்களின் நிலம் வேறு. அவர்களின் அரசமுறையும் தெய்வங்களும் வேறு.

பரகோடி கண்டன்சாஸ்தா கோயில் முன்னால் ஒரு கொட்டகையில் அவர்கள் இருந்தனர். பாதிப்பேர் நீராடி வந்திருந்தனர். எஞ்சியவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். அவர்களில் மூத்தபட்டக்காரருக்கு செண்பகராமன் பட்டம் இருந்தது. மெய்யன் கண்டன் செண்பகராமன் மணக்குடி அருகே பொழிக்கரையைச் சேர்ந்தவர்.

நான் சென்றதும் அவர்கள் வணங்கினர். பெரிய சிவப்புத்தலைப்பாகையும் குண்டலங்களும் சிப்பிமணி மாலையும் அணிந்திருந்த மெய்யன் கண்டன் செண்பகராமன்அம்மை எறங்கினதுமே நாங்க கிளம்புறதா இருக்கோம்என்றார். “அம்மைக்கான மங்களங்கள் முடிஞ்சாச்சு. எங்க மக விட்டுட்டு போறா. புருசன்கூட அவ நிறைஞ்சு வாழணும்

அம்மை போன பிறகு இங்கே என்ன சடங்குகள்?” என்றேன்.

நாங்க மஞ்சனம் கொண்டுவந்த நீரிலே அம்மையை குளுப்பாட்டியாச்சு. இப்ப அம்மை நீராடின தண்ணியை அந்த மஞ்சனக்கலங்களிலே நிறைச்சு குடுப்பாங்க. அதை திரும்ப கொண்டுட்டுப் போவோம். அதை ஏழுநாள் ஊர்களிலே வைச்சு கும்பிடுவோம். பிறவு கடலிலே விடுவோம்என்றார் மெய்யன் கண்டன் செண்பகராமன். “அவ தென்கடலிலே பிறந்தவ. தென்கடலரசின்னு அவளுக்கு பேரு

உங்க குடிக்கு செம்பகராமன் பட்டம் எப்ப வந்தது?” என்றேன்.

அது பண்டு ஆய்ராஜாக்கள் காலத்திலே வந்ததாக்குமேஎன்றார்.

நானும் செம்பகராமன்தான்என்றேன்.

அவர் புன்னகைத்துதெரியும்என்றார்.

இங்கே குறையொண்ணும் இல்லியே?”

நிறை மட்டுமே சொல்லுறதுக்கு இருக்கு…” என்றார்.

குறையிருந்தா சொல்லுங்க.”

நிறைஞ்ச மனசுதான் இருக்கு சர்வாதிக்காரரே. ஆனா இன்னைக்கே விட்டுப் போகணும், அது ஒண்ணுதான் குறை.” என்றார் மெய்யன் கண்டன் செண்பகராமன்.

நான் வணங்கி விடைபெற்றேன். இனி குறைகளை தேடவேண்டியதில்லை. குறையிருந்தால் எனக்குக் காட்டவேண்டியது அவள் பொறுப்பு.

மணப்பந்தலில் வெளித்திரைகள் போடப்பட்டிருந்தன. காலையின் காற்றில் வெளிறி வந்த வானின் பின்னணியில் ஏழுநிலைப் பந்தல் மெல்லிய ஆட்டத்துடன், சன்னதம் எழப்போகும் பூசாரியைப்போல நின்றிருந்தது. ஏழுநிலை கொண்ட கோட்டை. ஏழுநிலை மாடம். ஆனால் அது எனக்கு வானில் ஒரு கருமுகில் ஒளிகொள்ளக் காத்திருப்பதுபோல தோன்றியது.

எங்கோ ஆரல்மலைத் தொடர்களில் கொடுங்காற்று ஒன்று கருக்கொண்டிருக்கிறதா? புலிபோல கண்மின்ன காத்திருக்கிறதா? எண்ணாதே. விலக்கு. இங்கே இரு. எண்ணி எண்ணிச் செல்லுமிடம் தொலைவு, வழியிலா முடிவிலா செலவு.

திரைக்குள் மீனாக்ஷிக்கும் ,சுந்தரேசனுக்கும் ,பரகோடி கண்டன் சாஸ்தாவுக்கும் சிவாச்சாரியார்கள் திருமஞ்சனம் முடித்து பூசைக்கான அலங்காரங்கள் செய்துகொண்டிருந்தனர். ஆதிகேசவனுக்கு நம்பி அலங்காரம் செய்தார். பண்டாரங்கள் பிள்ளையாருக்கும், முதுநாடார் முத்தாலம்மைக்கும் அலங்காரம் செய்தனர்.

அலங்காரம் செய்யும்போது பூசகர்களின் முகம் பிறிதொன்றாக மாறிவிடுகிறது. அதில் பக்தி இருப்பதில்லை. பணிவு தென்படுவதில்லை. தெய்வம் குழந்தையாக மாற, அவர்கள் அன்னையாகி விடுகிறார்கள். மீனாட்சியின் கன்னத்தை இறுகப் பிடித்தபடி நெற்றிப்பொட்டை சரிசெய்யும் சிவாச்சாரியார் அவள் அசைந்தால் ஓர் அடி போடுவார் என்று தோன்றியது. செல்லமாகப் பேசியபடி, ஒருவருக்கொருவர் கேலிச்சொல் உரைத்தபடி அவர்கள் அணிச்செயலில் ஈடுபட்டிருந்தனர்.

கீழே மணப்பந்தலின் முகப்பில் முல்லமங்கலம் நம்பூதிரி ஹோமகுண்டத்தை ஒருக்கிக் கொண்டிருந்தார். ஓரு நம்பூதிரி இளைஞன் அரணிக்கட்டையை சரடு கட்டி தயிர் கடைவதுபோல இழுத்து தீ எழுப்பிக்கொண்டிருக்க சமித்துகளை ஒருவர் சீராக ஒடித்துக் கொண்டிருந்தான். அரணிக்கட்டை புறாபோல ஒசை எழுப்பியது. ஹோமப்பொருட்களை முதிய நம்பூதிரி தொட்டுத்தொட்டு எண்ணினார்.

அவர்கள் அனைவருமே காலைநீராடி புதிய ஆடைகள் அணிந்திருந்தனர். மகாராஜாவின் சிம்மாசனம் வெள்ளை துணி போர்த்தப்பட்டிருந்தது.அங்கே குரல் எழக்கூடாதென்று ஒருவர் இன்னொருவரை சைகையால் அழைத்துப் பேசிக்கொண்டனர். ஆகவே கலங்கள் முட்டும் ஓசையும் நீரின் ஓசையும் உரக்கக் கேட்டன. எவரிடமும் பேசவேண்டுமென்று தோன்றவில்லை. சட்டென்று தீ பற்றிக்கொண்டது. பஞ்சு எரியும் மணம். கற்பூரம் பற்றிக்கொள்ளும் புகை மணம்.

வெளியே இருந்து உள்ளே கிண்டியில் நீருடன் வந்த ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் என்னை பார்த்து நின்றார். நான் அருகே சென்றேன். அவர் தாடியில் நீர்மணிகள் ஒளியுடன் தெரிந்தன.

காலைப்பூசை முடிஞ்சதும் அம்மனுக்கு புறப்பாடு அலங்காரம். அம்மைக்கு புறப்பாட்டுக்கு உடுக்க வேண்டிய பட்டும் போடவேண்டிய நகையும் கொண்டு வந்திருக்கு. பையன் பொண்ணு ரெண்டுபேருக்கும் பூர்ணாலங்காரம்…” என்றார்.

காலைபூஜைக்கு மகாராஜா வந்திருவார்என்றேன்.

எல்லாம் மங்களமா முடியும்என்றபின் அவர் உள்ளே சென்றார்.

நான் வெளியே சென்று புதியகாற்றில் நின்றேன். விடிவெள்ளி தெரிந்தது. உடனே நெஞ்சில் ஓர் அமைதி எழுந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தபோது அதை மையமாக்கி வானம் சுழல்வதுபோலத் தோன்றியது.

சம்பிரதி செல்லப்பன் நாயர் வந்துஅங்கே மணவாளன் வீட்டிலே எல்லாரும் ஒருக்கம் ஆயாச்சு. படைகள் எல்லாம் ஒருங்கியாச்சு. தளவாயும் ராயசமும் அலங்கராம் பண்ணிட்டிருக்காங்கஎன்றார்.

நான்திவானும் தளவாயும் அங்கதான் இருக்காங்களா?” என்றேன்.

இல்லை, அவங்க ரெண்டுபேரையும் உடனே வெளியே போகச்சொல்லிட்டாரு தளவாய். திவான் நேரா தோவாளைக்குப் போனாரு. தளவாய் நாராயணக் குறுப்பு எங்க போனார்னு தெரியல்லை.”

சரிஎன்றேன். அவர் போகலாமென்று கைகாட்டினேன்.

எதையாவது சாப்பிடவேண்டும் என்று தோன்றியது. அவ்வெண்ணம் முதலில் வந்தது. அதன் பின்னரே பசி ஓர் அலையென எழுந்து அறைந்தது.

நான் முதல் ஊட்டுபுரைக் கொட்டகைக்குச் சென்றேன். சேவூர் கிருஷ்ணன்குட்டி நாயர் அங்கே அரிவைப்பு. அவருடைய உதவியாளன் செல்லப்பன் நாயர் என்னை கண்டதும் ஓடிவந்தான். நான் நேற்று மாலை அருந்திய பிரதமன் நினைவுக்கு வரபிரதமன் மிச்சமுண்டாடே?” என்றேன்.

உண்டுசூடாக்கிக் கொண்டு வாறேன்.”

முந்தையநாள் பிரதமன் சற்றே நொதித்து, அதன்பின் சரியாகச் சூடாக்கப்பட்டால் ஓர் அற்புதமான மணம் வரும். ஆனால் புளித்திருக்கக் கூடாது. அதற்கு ஒரு படி முன்னரே நின்றுவிட்ட நொதிப்பு வேண்டும். நினைவில் என் இளமைப்பருவ சுவைகள் எழுந்து வந்தன. என் உள்ளம் இந்தக் காலையில் மலர்ந்திருக்கிறது. இளமைநினைவுகள் அந்த மலர்வை கொண்டுவருகின்றனவா, அந்த மலர்வால் இளமை நினைவுகள் எழுகின்றனவா?

அவன் கையில் கொண்டுவந்த தொன்னையிலிருந்து அந்த இனிய மணம் எழுந்தது. என்னை அறியாமலேயே நான் எழுந்து அதை வாங்கிவிட்டேன்.

அதை துளித்துளியாகக் குடித்தேன். ஒவ்வொரு சொட்டும் உள்ளே நறுமணமாகி மூக்கிற்குள் நிறைந்தது. சுவையில் நாக்கு திளைத்தது. முறுகிய தேங்காய்ப்பாலும் கருப்புவெல்லமும் பசுநெய்யும் பச்சரிசி அடையும் கலந்து உருவான சுவை, அவை சரிவர இணையும்போது தோன்றி அந்நான்குக்கும் அப்பால் நின்றிருக்கும் ஒன்று.

நேத்து சத்யைவட்டம் சாப்பிட வருவீங்கன்னு நினைச்சேன்…” என்று அவன் சொன்னான். “ஆசான் நாலஞ்சு தடவை கேட்டுட்டார்.”

இதோ இதுதான் சத்யவட்டத்திலேயே உத்துங்க சிகரம்இந்த ருசியை அறியணுமானா நாலஞ்சு கல்யாணத்தை நின்னு நடத்தியிருக்கணும்.”

அவன் சிரித்துஉள்ளதாக்கும், ஆசான் இதை மட்டும்தான் குடிப்பார். இது அவருக்கு எடுத்துவைச்சதுஎன்றான்.

நான் மீண்டும் மணப்பந்தலுக்கு வந்தேன். மகாராஜா கீழிருந்து கிளம்புவதை அறிவித்து எரியம்பு எழுந்தது. மங்கல ஓசைகள் காற்றில் அலையலையாகக் கேட்டன. அவருடன் வந்தவர்கள் தூக்கிப்பிடித்திருந்த ஐந்துகொத்து எண்ணைப்பந்தங்கள் வரிசையாக மேலேறின. அவருடைய பல்லக்கு குலுங்கியபடி மேலே வருவதைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

மணப்பந்தலின் முகப்பில் போடப்பட்டிருந்த திரை அகற்றப்பட்டது. மேலும் சில எண்ணைப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. செவ்வொளி பெருகிப் பெருகி புலரி என்னும் எண்ணத்தை உருவாக்கியது.

மேலே ஏறி வந்த சம்பிரதி கிருஷ்ணப்பையர் என்னிடம் ஓடிவந்துஇங்கே நிக்கிறேளா? மகாராஜாவுக்கு நல்ல காய்ச்சல் இருக்கு. காலம்பற எந்திரிக்கவே முடியல்லை. வராம இருக்கக்கூடாதேன்னு கூட்டிட்டு வாறோம்என்றார்.

நல்லா தூங்கினாரே?” என்றேன்.

ஆமா, காலையிலே இங்கே எந்திரிச்சப்ப நல்லாத்தான் இருந்தார். நடந்தே கீழே போகலாம்னு சொன்னார். நான்தான் நேரமில்லைன்னு குதிரையிலே கூட்டிட்டுப் போனேன். ஆனா அங்க போனதுமே மறுபடி மூதேவி பிடிச்சுக்கிட்டா. உடனே கிளம்பி உச்சிமாகாளி கோயிலுக்குப் போகணும்னு சொன்னார். நான் கெஞ்சி காலிலே விழுந்து குளிக்க வைச்சேன். குளிச்சு வந்தா நடுக்கம், காய்ச்சல். சூனியமா இருக்கு சுவாமி, மகாசூனியமா இருக்கு, செத்திடலாம்னு தோணுதுன்னு அரற்றல். என்னத்தைச் செய்ய?”

பாப்போம், இன்னும் கொஞ்ச நேரம்தானே?”

சூக்ஷிக்கணும். இப்ப அவரு இருக்கிற நெலைமை சரியில்லை. அங்கே நாலஞ்சுவாட்டி உடைவாளை உருவிட்டார். ஆயுதங்கள் இருக்கிற இடத்துக்கே கொண்டு போகாம கூட்டி வந்தேன். செத்திருவேன், செத்திருவேன்னு சொல்லிக்கிட்டே இருக்கார்

அதுக்கு என்ன பண்ண? அவருதான் மங்கள ரக்ஷகர்த்தா. அரையிலே வாளில்லாம மகாராஜா இருக்க முடியுமா?”

பக்கத்திலேயே ஆளிருக்கணும். அதைச் சொல்ல வந்தேன். மெய்கண்ணான ஒரு அப்பியாசி இருக்கணும். அவரு மனசிலே மூத்தவ கேறி முத்தி வாளை உருவிட்டாருன்னா உடனே அதை பிடிச்சு தடுக்கப்பட்டவன்…” என்றார் கிருஷ்ணப்பையர்நான் பிராமணன், எனக்கு அது வசமில்லை

யாரு எங்க உக்காரணும்னு இருக்கு. அப்டி மாத்திர முடியாதுஎன்றேன்

அப்ப?”

நடக்கிறது நடக்கட்டும். மீனாக்ஷி நினைக்கிறது என்னமோ அதுதான் நடக்கும். நாம என்ன செய்ய?”

அவ வெளையாட்டுச்சிறுக்கிநாமதான் கவனமா இருக்கணும்என்றார் கிருஷ்ணப்பையர்.

என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஊர்வலம் முற்றத்திற்கு வந்து நின்றது. பந்தக்காரர்களும் முழவும் கொம்பும் ஒலித்தவர்களும் விலக பல்லக்கு வந்து இறங்கியது. “நீச்சே! நீச்சேஎன்று பல்லக்குக்காரன் ஆணைகளை இட்டான். பல்லக்கு தரையில் அமர்ந்தது.

மகாராஜா வெளியே இறங்கியபோது கால் தளர்ந்து விழப்போனார்கிருஷ்ணப்பையர் ஓடிப்போய் பிடித்துக்கொண்டார். பின்னர் பிடித்தது தெரியாமல் மகாராஜாவின் பின்னால் நின்றார். மகாராஜா கைகூப்பியபடி நடந்தபோது எக்கணமும் மீண்டும் விழப்போகிறவர் போலிருந்தார். கால்களும் கைகளும் குளிரில் என நடுங்கின. தோள்கள் ஒடுங்கியிருந்தன. கண்களுக்குக் கீழே ஆழ்ந்த கருமையும் வீக்கமும் தெரிந்தது. முகம் வெளுத்து உதடுகள் விரைத்திருந்தன.

மகாராஜா நல்ல நிலைமையிலெ இல்லைஎன்று என்னருகே நின்ற சண்முக சிவாச்சாரியார் சொன்னார்.

அம்மை பாத்துக்கிடுவாஎன்றேன்.

மகாராஜாவை மகாப்பிராமணனான ஆரியன் நம்பூதிரிப்பாடு வந்து எதிர்கொண்டு பந்தலுக்குள் அழைத்துச் சென்றார். மகாராஜா முதலில் கணபதியையும் முத்தாலம்மனையும் வணங்கிவிட்டு ஆதிகேசவன் முன் நீளவிழுந்து வணங்கினார். அதன்பின் மீனாட்சியையும் சுந்தரனையும் வணங்கிவிட்டு மூன்று பிராமணர்களும் நான்கு குடித்தலைவர்களும் இட்டுச்செல்ல தொய்ந்த உடலுடன் சென்று சிம்மாசனத்தில் அமர்ந்தார். நம்பூதிரிகள் அவருக்கு மணிமுடியை சூட்டி, நீர் தெளித்து மஞ்சளரிசி இட்டு வாழ்த்தினர்.

அதன்பின்னர் கொம்புகள் முழங்கின. அவைக்குள் மாடம்பிகள் வரத்தொடங்கினர். ஒவ்வொருவராக வந்து மகாராஜா முன் வாள்தொட்டுப் பணிந்து வணங்கி தங்கள் இருக்கைகளுக்குச் சென்றனர். குதிரைகளிலும் பல்லக்குகளிலும் அவர்கள் வந்துகொண்டே இருந்தனர். எட்டுவீட்டுப் பிள்ளைமார் வந்தனர். அதன்பின் குடித்தலைவர்கள் வந்தனர்.

மகாராஜாவால் கைகளை தூக்கவே முடியவில்லை. அவருடைய தோள்கள் நடுங்கியமையால் கைகளை தொடைக்குக் கீழே ஊன்றியிருந்தார். ஊன்றிய கைகளின் மூட்டுகள் நடுங்க தலைகுனிந்து அமர்ந்திருந்தார். தலையின் எடை கூடிக்கூடி வருவதுபோல குனிந்துகொண்டே சென்றார்.

அனைவரும் அவரைக் கவனித்தார்கள். ஆனால் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் அனைவருமே அவ்வாறு காய்ச்சல் வந்தவர்கள்போல, களைத்தவர்கள் போலத்தான் இருந்தனர். சட்டென்று ஜரை என்னும் முதுமையின் தெய்வம் வந்து அத்தனை பேரையும் தொட்டு கிழவர்களாக ஆக்கிவிட்டதுபோலத் தோன்றியது. நானும் அப்படித்தான் இருந்திருப்பேன்.

தளவாய் நாராயணக் குறுப்பும் திவான் நாகமையாவும் ஒரே பல்லக்கில் வந்திறங்கினர். அவர்கள் அத்தனை பிந்தியதை மற்றவர்கள் கவனித்தனர். முறைமை வணக்கம் செய்துகொண்டே அவர்கள் இருவரும் சென்று மகாராஜாவின் இருபக்கமும் நின்றனர். இருவர் முகங்களும் இறுக்கமாக இருந்தன. இருவரும் நான் அங்கே இருப்பதையே அறியாதவர்கள் போல நடித்தனர்.

கொம்புகளும் குழல்களும் முழங்கின. மணவாளனின் சொந்தக்காரர்கள் அவர்களின் கொட்டகைகளில் இருந்து ஊர்வலமாக வந்தனர். தவுலும் நாதஸ்வரமும் முழங்க, தாலமேந்திய தாசிகளும் கொடிப்பட்டங்கள் ஏந்திய அணிக்காரர்களும் தொடர்ந்து வர, நீண்ட நான்கு நீரைகளாக வந்து முற்றத்தை அடைந்தனர். ராயசம் விஜயரங்கய்யாவும் தளவாய் வெங்கப்ப நாயக்கரும் நாராயணப் பட்டாச்சாரியாரும் நடுவே கைகளைக் கூப்பியபடி வந்தனர்.

திவான் நாகமையாவும் தளவாய் நாராயணக் குறுப்பும் ஸ்தாணுலிங்கச் சிவாச்சாரியாரும் சென்று அவர்களை வாசலிலேயே வரவேற்று உள்ளே அழைத்து வந்து அமரச்செய்தனர். அவையினர் அவர்களுக்கு வாழ்த்தொலி எழுப்பினர்.

அவர்கள் அனைவரும் அமர்ந்ததும் வட்டப்பாறை அச்சு மூத்தது எழுந்து கைகூப்பி உரக்கவேணும் சுபம்!” என்றார். ஓசைகள் அடங்கின. “எந்தெந்நால், இப்ப இங்கே அம்மைக்கும் அப்பனுக்கும் அவளுடே சகோதரனுக்கும் இளையவனுக்கும் தோழிக்கும் குட்டிக்கும் பூசைகள் நடக்கப்போகுது. புண்ணியபூஜைகள் முடிஞ்சதும் அம்மைக்க அணுக்கக் குடிகளான கன்யாகுமரி மீனவப் பட்டக்காரங்களுக்கும், கயத்தாறு கொண்டையாத் தேவர் வகையறாவுக்கும் மகாராஜா முறை செய்வார். அந்தச் சடங்குகள் முடிஞ்சதும் அம்மை ஆடை மாற்றி ஆபரணம் சூடி கைப்பிடிச்ச மணவாளன் கூட புகுந்தவீட்டுக்கு கிளம்புவா. அம்மைக்க ஆசீர்வாதம் வேணாட்டு மண்ணிலே எப்பவும் இருக்கும். அவளுக்க கனிவு இங்க மழையா பொழியும். அவளுக்க சிரிப்பு பூவா மலரும். அவளுக்க முலைப்பால் அன்னமா விளையும். ஓம் தத் சத்.”

அனைவரும்ஜய! ஜய! ஜய!” என்ற வாழ்த்தொலியை எழுப்பினர். ஆனால் ஏதோ மந்திரத்தை உச்சரிப்பதுபோல அந்த பந்தல் ஓங்கார ஓசையையே எழுப்பியது.

.

 [19]

பூஜைகள் நடந்துகொண்டிருந்தபோது நான் வெளியே சென்றேன். பூஜைகள் மிக விரிவாக, மிக நிதானமாகத்தான் நடக்கும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒருவகை பூஜை. அம்மைக்கும் அப்பனுக்கும் கணபதிக்கும் சைவாகம பூஜை. ஆதிகேசவனுக்கும் சாஸ்தாவுக்கும் மலைநாட்டு தாந்த்ரீக விதிப்படி பூஜை. முத்தாலம்மைக்கு காட்டுமுறைப்படி பலி பூஜை. அதன்பின் அரசரிலிருந்து குடிகள் வரை ஒவ்வொருவரும் வந்து வணங்கி அம்மை அருள் பெற்று சென்று அமரவேண்டும்.

வெளியே விடிந்துகொண்டிருந்தது. முற்றத்தின் செம்மண் துலக்கம் கொண்டது. கூழாங்கற்கள் இளங்கன்னி முகத்தின் முகப்பருக்கள்போல முழுத்தெழுந்தன. நான் நிறைவாக, உல்லாசமாக உணர்ந்தேன். என் மனதில் தேவிஸ்துதியின் சொற்களை அறிந்தேன். தேவி, ஏழுலகங்களிலும் சக்தி வடிவாக அமைந்தவளே!

வெளியே மணப்பந்தலை ஒட்டிய உபவிதானத்தின் கீழே நீண்ட தாடியும் சடைமுடிக் கொண்டையுமாக நீலகண்ட சிவாச்சாரியார் நின்றிருந்தார். “அம்மைக்கு ஆபரணங்களெல்லாம் ஒருக்கமா?” என்று கேட்டேன்.

ஒருக்கி வைச்சுக்கிட்டு நின்னுட்டிருக்கேன்என்று அவர் சொன்னார்.  “எந்தெந்த நகைகளைப் போடணும்னு ஒரு பேச்சு நேத்து இங்க ஓடிச்சு. அவங்க கொண்டுவந்த நகைகளை அம்மைக்குப் போடணுமான்னு குழப்பம். பாண்டிநாட்டு முறைன்னாக்க மணவாளன் வீட்டு நகைகளையும் போடலாம். இங்க நம்ம வேணாட்டு முறைன்னா பொண்ணுவீட்டு நகை மட்டும்தான் போடணும். பொண்ணுவீட்டு சீரு என்னான்னு கணக்கு போடுற நேரம்லா? கடைசியிலே பேசிப்பேசி ஒரு உடன்பாடு வந்தாச்சு. மணவாளன் கொண்டுவந்த நகைகளிலே நாலஞ்சு வளையலையும் ஒரு மாலையையும் போட்டுக்கிடட்டும். மிச்சமெல்லாம் வேணாட்டு நகை. பொண்ணு சுமக்க முடியாம நகை சுமந்துகிட்டுத்தான் போகணும். அதாக்கும் முறை.”

ஆமாம், அதான் நம்ம ஊரு வளமைஎன்றேன். சிரித்தபடிநகையாலே கழுத்துவலி வரணும்னு பாட்டிலே இருக்கே?”

நம்ம ஊருன்னு சொல்லுதேன். ஆனா நம்ம மூதாதை மருதையிலே இருந்து வந்தவங்க. நான் பறளியாத்துத் தண்ணிகுடிச்சு வளந்தவன்என்று அவர் சிரித்தார். “பறளியும் வைகையும் ஒண்ணாகுத ஒரு உடம்பு இது. அம்மைக்க அருள்

நான் மணப்பந்தலின் பின்பக்கம் சென்று மலைச்சரிவில் கீழிறங்கினேன். கீழே சாலையில் வேணாட்டுச் சீர்வரிசையாக அளிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்ட நூற்றெட்டு வண்டிகள் நிரையாக நின்றிருந்தன. அத்தனை வண்டிகளும் புதிதாக வண்ணம் பூசப்பட்ட மூங்கில்பாய்களால் செய்யப்பட்ட கூண்டு கொண்டிருந்தன. எல்லா காளைகளுமே நல்ல வெண்ணிறமான உடலும் பெரிய அரக்குநிற கொம்பும் கொண்டவை. அவற்றுக்குள் அரிசி, பருப்பு, வெல்லம், நெய் என ஒரு பெண் வாழ்நாள் முழுக்க குடும்பம் நடத்த தேவையான அடுக்களைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

அனைத்தையும் கிருஷ்ணன்கோயில் கொட்டாரம் ராயசம் சாமிநாத பிள்ளை கோட்டாறு கம்போளத்தில் இருந்தும் மணக்குடி துறைமுகத்தில் இருந்தும் தேர்வு செய்து நான்கு நாட்கள் முன்னரே வண்டியில் ஏற்றினார். சீர்வரிசைகளில் அடுக்களைக் காரியங்களுக்கு அவர் பொறுப்பு. அவரால் மீனாக்ஷி திருமணத்திற்கு வரவே முடியவில்லை. வாழைத்தார்களும் காய்கறிகளும் பழங்களும் மட்டும் அன்று காலையில்தான் வடசேரிச் சந்தையில் இருந்து வந்தன.

கோலத்துநாட்டு வீராளிப் பட்டு, காஞ்சிபுரம் சரிகைப்பட்டு, சீமைக்காப்பிரி நாட்டு பருத்தி துணிகள், சோனகநாட்டு பாலாடைத்துணிகள் பலவகை துணிகள். ஒரு வகையிலும் ஒன்று விடுபட்டுவிடக் கூடாது. கூடவே உள்ளூரில் நெசவு செய்யப்பட்ட ஆடைகள். புளியிலைக்கரை, வேப்பிலைக்கரை, முறுக்குக்கரை வேட்டிகள். மாம்பழச் சரிகைக்கரை, யானைச்சரிகைக்கரை, மயில்சரிகைக்கரை நேரியதுகள். செம்பு, பித்தளை, ஓடு என எல்லா வகை உலோகங்களிலும் அடுக்களைப் பாத்திரங்கள். பலவகையான குத்துவிளக்குகள், அடுக்குநிலை விளக்குகள், தூக்கு விளக்குகள் என ஒரு பெரிய வரிசை. பித்தளையில் கோளாம்பிகள், எண்ணைதூக்கிகள், தூண்டிக்கலங்கள், கெண்டிகள், அகவிகள், முகவிகள், கால்போணிகள், உழக்குப்போணிகள்,குத்துப்போணிகள், வங்கங்கள் என எல்லாவகையிலும் பாத்திரங்கள்.

சிற்றகப்பைகள், கோரகப்பைகள், கண்ணகப்பைகள், மரத்தவிகள், கோருவைகள், அரிப்பைகள், சல்லரிகள், சட்டுவங்கள், மத்துகள், வரிச்சைகள் என ஒரு வரிசை. புதிய மண்கலங்களே நூற்றுக்கும் மேலே. வண்ணப்பாய்கள், சுருட்டுப்பாய்கள், பனைநார்ப்பெட்டிகள், பிரம்புக்கூடைகள். முருக்கு மென்மரத்தால் செய்யப்பட்டு உள்ளே உள்ளே என வைக்கும் அடுக்குபெட்டிகள், வட்டப்பெட்டிகள், மூங்கில்பெட்டிகள், நார்ப்பெட்டிகள், துணிவைக்கும் மரப்பெட்டிகள், பித்தளைப் பூணிட்ட கால்பெட்டிகள், உள்ளே மெத்தை வைத்த நகைப்பெட்டிகள், மாக்கல்லில் குடைந்த பெட்டிகள், பளிங்கில் குடைந்த பெட்டிகள், அரக்கில் வார்த்த பெட்டிகள் என எல்லா வகையிலும் பெட்டிகளும் பேழைகளும்.

என்னென்ன தேவை என தேடித்தேடி சேர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் பொறுப்பு. சம்பிரதி கிட்டன்குட்டி நாயர் சின்னச் சின்னப் பொருட்களுக்குப் பொறுப்புவிதவிதமான குடுவைகள், கோருவைகள். நீறும் மாவும் வைக்கும் பூசணி மற்றும் சுரைக்காய் குடுவைகள். பல்வேறு அளவுகளில் சீனத்து ஜாடிகள், சீமைநாட்டு கண்ணாடிக் குடுவைகள். யானைத்தந்தத்தில் செதுக்கப்பட்ட சிமிழ்கள், சீப்புகள், நகைவைக்கும் கையடக்கப் பெட்டிகள். மான்கொம்பில் செதுக்கப்பட்ட சீப்புகள் தனியாக. அரக்கிலும் கெம்பிலும் செய்யப்பட்ட குங்குமச் சிமிழ்கள், நகைச்சிமிழ்கள்.

எருமைக்கொம்புகளில் செதுக்கப்பட்டு தேனால் ஆனவை போல ஒளி ஊடுருவும் கோப்பைகள். எருமைக்கொம்பை பனையோலை தடிமனுக்குச் செதுக்கி அமைத்த விசிறிகள். சந்தன மிதியடிகள், கொம்பு மிதியடிகள், யானைத்தந்த மிதியடிகள். அரக்கில் வடித்த மிதியடிகள், அரக்கில் சிற்பச்செதுக்குகளுடன் செய்யப்பட்ட மரப்பொருட்கள், சந்தனக் கடைசலில் செய்யப்பட்ட மரப்பொருட்கள். பல வகைகளில் ஆறன்முளைக் கண்ணாடிகள். முத்துச்சிப்பி மூடியாகக் கொண்ட சந்தனப்பேழைகள். கடலாமையோட்டால் மூடியிட்ட பெரிய ஆமாடப்பெட்டிகள். எருமைக்கொம்பில் கடைந்த உடைவாளுறைகள், காளைக்கொம்பில் கடைந்த குத்துவாள் உறைகள்.

வேணாட்டுக்குரிய ஆயுர்வேத மருந்துகள் ஒரு வண்டி நிறைய இருந்தன. குருமிளகு, கிராம்பு, சுக்கு, ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்கள். பலவகையான மருந்து எண்ணைகள், லேபனங்கள், லேகியங்கள், சூரணங்கள், அரிஷ்டங்கள். எல்லா உடல்நிலைக் குறைவுக்கும் உரிய மருந்துகள். அவைபோக வாற்றுவடிகள் என்னும் உள்ளூர் பழம் வடித்த மதுவகைகள்.பலாக்காயின் சுளைகளைக் கொண்டு செய்யப்பட்ட மதுவகையான ராஜமதுரம். மாம்பழச்சாறில் வாற்றப்பட்ட மதுவான சுவர்ணம். சீமை மதுப்புட்டிகளே ஐநூறு. மலைத்தேன் நிறைக்கப்பட்ட பானைகள் நூறு. அவற்றில் நெல்லிக்காய் ஊறிய மலைத்தேன், ஜாதிக்காய் ஊறிய மலைத்தேன் என பலவகை. சிறுதேன் புட்டிகள் நூறு.

ஒண்ணும் குறையக்கூடாது. கூடட்டும், குறைஞ்சிரப்பிடாது. இதில்லாம ஒருத்தி எப்டி குடும்பம் நடத்துவான்னு ஒரு சொல் வந்திரப்பிடாதுஎன்று மகாராஜா பலமுறை சொன்னார்.

ஒவ்வொருவரும் பட்டியலிட்டுக் கொண்டு தேடினார்கள். கடைசிநாளில் எட்டு வகை கிழங்குகளில் நனகிழங்கு இல்லை என்று கண்டுகொண்டு அதற்காக சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். சாதிக்காய், சாம்பிராணி, சந்தனம், குந்திரிக்கம், அகில் , கொம்பரக்கு என நறுமணப் பொருட்கள் அனைத்தும். உயிர்மணப் பொருட்களில் கஸ்தூரி, கோரோசனை ,புனுகு என்னும் வரிசையில் ஏதோ ஒன்று குறைய அது இருந்தே தீரவேண்டும் என மலைக்காணி கிராமங்கள் முழுக்க ஆள் சென்றது. நாள் நெருங்க நெருங்க தேடுவது கூடிக்கூடி வந்தது. இப்போதாவது முடித்தார்களா என்று தெரியவில்லை.

மணவாளனின் கொட்டகையில் இருந்து வந்த முத்துப்பல்லக்குகள் வரிசையாக நின்றன. செம்பட்டுத் திரையிடப்பட்டு பொற்சரிகை அலங்காரம் செய்யப்பட்டவை. முகப்பில் பொற்பட்டம் சூடிய பிடியானை. அதன் பின்னால் இருகொம்புகளும் சீராக அமைந்த களிறு. அவற்றைத் தொடர்ந்து பழுதற்ற வெண்குதிரைகளின் நிரை. அவற்றுக்குப் பின்னால் தாசிகள் வரிசையாக தாலங்களுடன் நின்றிருந்தனர்.

மீனாக்ஷியும் சுந்தரேசனும் செல்லும் பல்லக்குகளுக்குப் பின்னால் தளவாய் வெங்கப்ப நாயக்கரும் ராயசம் விஜயரங்கய்யாவும் நாராயணப் பட்டாச்சாரியாரும் செல்லும் பல்லக்குகள். அவை ஒவ்வொன்றும்  படகு போல பெரிதாக இருந்தன.அதைத் தொடர்ந்து செல்லும் காவல்படைவரிசைகள் தனித்தனிக் குழுக்களாக தள்ளி நின்றிருந்தன.

அணிகொண்டு செல்லும் தாசிகள் களைப்படையும்போது அவர்களுக்கு மாற்றாக செல்ல வேண்டிய தாசிகள் செல்லும் வண்டிகள் நின்றன. அவற்றுக்கு அருகில் தாசிகள் காலையின் ஒளியில் மின்னும் அலங்கார உடைகளுடன் நின்றனர். தொடர்ந்து வெவ்வேறு தேவைகளுக்கான வண்டிகள். அவர்கள் முன்னால் சென்றதும் அவர்களுடன் சீர்வரிசை வண்டிகளும் இணைந்து கொள்ளும். திவான் நாகமையாவும் தளவாய் நாராயணக் குறுப்பும் அவர்களுடன் சென்று சேர்மாதேவியில் வேணாட்டு எல்லையில் பாதபூசை செய்து விடைகொடுத்து அவர்களை பாண்டிநாட்டுக்கு அனுப்பிவைப்பார்கள்.

செல்லும் வழியில் பணகுடி, வள்ளியூர், திருக்கணங்குடி, நான்குநேரி என எல்லா ஊர்களிலும் கோயில்களில் மணமக்களுக்கு வரவேற்பும் பூஜைகளும் இருந்தன. ஒவ்வொரு ஊரிலும் ஒருநாள். நான்குநேரி வானமாமலைப் பெருமாள் ஆலயத்தில் மூன்றுநாள். மறுநாள்தான் சேரன்மாதேவி. சேரன்மாதேவிக்கு அப்பால் பாண்டிநாட்டு எல்லையில் இன்னொரு மாபெரும் திருவிழா ஒருங்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன. இங்கே நடந்தவற்றின் செய்திகள் அங்கே பெருகிப்பெருகி சென்றுகொண்டிருந்தன. இங்கே நடந்தவற்றுக்கு மும்மடங்கு நடக்காவிட்டால் பாண்டியத்தின் பாதமான நெல்வேலிக்குப் பெருமை இல்லை.

நான் மூச்சை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தேன். நெஞ்சு நிறைந்திருந்தது. உள்ளே கல்லென்று இரும்பென்று குளிர்ந்து இறுகி எடைகொண்டு உள்ளம் இருந்தது. உள்ளத்தின் எடையால் கால்கள் தளருமென அப்போதுதான் உணர்ந்தேன்.

வடிவீஸ்வரம் சீகாரியம் மாடன் பிள்ளை என்னருகே வந்துஎல்லா ஏற்பாடும் ஒருங்கியாச்சுஒண்ணு குறை இல்லைஎன்றான்.

குறை இருக்கும்என்றேன்.

என்ன சொல்லுறீக?” என்று அவன் திகைத்தான்.

எங்கோ ஏதோ குறை இருக்கும்தெரியல்லை. ஆனா இருந்தாகணும். ஏன்னா எல்லா மனுஷவிளையாட்டுகளிலேயும் கடைசியிலே தெய்வங்கள் இறங்கி விளையாடுறதுண்டு. அம்மை விளையாடுவா. அவ விளையாட்டுக்காரி…”

அவன் பெருமூச்சுடன்நாம செய்றதைச் செஞ்சாச்சுஎன்றான்.

அவன் முகத்தில் இருந்த கவலை எனக்குச் சிரிப்பை அளித்தது. “இந்தச் சின்னக்குட்டிக எப்பவுமே வெளையாடும்அதுகளுக்கு இந்த உலகமே ஒரு விளையாட்டாக்கும்என்றேன்.

அவன் முகம் மலர்ந்துஆமாஎன்றான். “எனக்க வீட்டிலேயும் ஒரு குட்டி கெடக்குஉயிர வாங்கிப்போடும்என்றான்

இவ செல்லப்புழுக்கையில்லாஎன்றேன்.

அவன் வெடித்துச் சிரித்துஉள்ளதாக்கும்என்றான். “சேரன் மடியில் இருந்துட்டு பாண்டியன் தலையிலே கால்வைச்சு ஆடுற மகள்னாக்கும் பாட்டு

நான் உள்ளே சென்றேன். மகாராஜா கண்மூடி துயில்பவர்போல சிம்மாசனத்தில் அரையுடல் சரித்துக் கிடந்தார். கைகால்கள் எல்லாமே தளர்ந்திருந்தன. அருகே சென்றபோது கண்டேன், அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. தாடை விளிம்பிலிருந்து கண்ணீர் சொட்டி மார்பில் விழுந்தது.

சம்பிரதி கிருஷ்ணப்பையர் என்னருகே வந்துமகாராஜாவுக்கு முடியலை. மூச்சு நின்னுடுமோன்னுகூட தோணிச்சு…” என்றார். “நேக்கு ரொம்ப பயமா இருக்கு…”

ஒண்ணும் பண்ண முடியாது. இன்னும் கொஞ்ச நேரம்தானே?”

இந்த பூசைகளை விரசா நடத்தி முடிச்சா என்ன?”

என்ன சொல்லுறீர்? அம்மையை சீக்கிரமா துரத்திவிடணுமாக்கும்?”

அய்யோ அப்டிச் சொல்வேனா?”

எல்லாம் முறைபோலே நடக்கட்டும்…”

பூஜைகளை நான் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசியாக மீனாட்சிக்கு பூஜைகள் முடிந்ததும் திரையிட்டார்கள். அம்மையையும் சுந்தரனையும் அலங்கரிக்க நகைப்பெட்டிகளை சிவாச்சாரியார்கள் சுமந்து கொண்டு வந்தனர். திரைக்கு அப்பால் தெய்வங்களுக்கான அலங்காரங்கள் தொடங்கின.

நான் மகாராஜா அருகே சென்றேன். மெல்லதம்புரானே, தம்புரானேஎன்று அழைத்தேன்.

பலமுறை அழைத்தபின்னரே அவர் விழித்தார். வெளுத்த உதடுகள் அசைந்தன.

அடியேன், தம்புரானுக்கு கொஞ்சம் இனிப்புத்தண்ணி…”

வேண்டாம்டே…. ஒண்ணும் வேண்டாம்.”

அடியேன். கொஞ்சம் அபினி வேணுமானா..”

ஒண்ணும் வேண்டாம்வேண்டாம்டேஎன்றார். நடுங்கும் கைகளால் கும்பிட்டுநான் உயிரோடே இருக்க மாட்டேன். தெரிஞ்சுபோச்சு. நான் இனிமே உயிரோடே இருக்க மாட்டேன்….”

அடியேன், ஒண்ணுமில்லை. இது தூக்கக் கலக்கம். அபினுக்க கலக்கம்.”

என் ஐஸ்வரியமெல்லாம் போகுதுடேஎன் மகாராணி போறா. என் மண்ணுக்கு வந்த தெய்வம் இப்ப கெளம்பி போகப்போறா.”

மகாராஜா கைகளைக் கூப்பிக்கொண்டு மீண்டும் அழத்தொடங்கினார். அவருடைய தளர்ந்த கழுத்து தசைகள் விம்மலில் நெளிவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

திவான் என்னிடம் வந்து குரல் தழைத்துஎல்லா ஏற்பாடுகளும் முறைபோலே இருக்குல்ல?” என்றார்.

அவர் விழிகளில் அந்த முள்ளை நான் பார்த்தேன். உதடுகளில் வன்மம் மிக்க இறுக்கம். “இருக்கு, ஒரு குறையில்லைஎன்றேன்.

அவளுக்கு ஒண்ணும் குறையாதுஎங்கும் எப்பமும் ஒரு குறையும் இருக்காது. சமுத்திரமும் வானமும் குறையாது, கூடாதுஎன்றார் மகாராஜா.

நான் விலகி நின்று கூட்டத்தவரைப் பார்த்தேன். தளவாய் வெங்கப்ப நாயக்கரும் கைகூப்பி கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.

முரசொலி கேட்பதுவரை நான் அவையையே மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஓர் இடியோசை என எழுந்த முரசொலி என்னை திடுக்கிடச் செய்தது. நான் திரும்பிப் பார்ப்பதற்குள் சிவாச்சாரியார்கள் திரையை விலக்கிவிட்டனர். அவையில் இருந்து வியப்பொலி ஒற்றை முழக்கமாக எழுந்தது.

நான் கைகளைக் கூப்பி பார்த்துக்கொண்டு நின்றேன். என் கண்களிலும் நீர் வழிவதை, என் மூக்கு கண்ணீர் ஊறி அடைபடுவதை உணந்தேன். மீனாக்ஷியன்னை வைரத்தின் ஒளியே அவளென அமர்ந்திருந்தாள். வலஞ்சரிந்த கொண்டையில், நெற்றிச்சுட்டியில், காதுகளில், கழுத்தில் ,மார்பில், இடையில், தொடையில் வைரங்கள். கால்களில் வைரங்கள். விரல்களெல்லாம் வைரங்கள். கையில் இருந்த கிளி வைரங்களையே சிறகென அலகென கண்ணென கொண்டிருந்தது.

ஒற்றை வைரமென அவளே ஆகிவிட்டதுபோல. அவளருகே அதேயளவு வைரங்கள் சூடி அமர்ந்திருந்த சுந்தரேசன் ஒளி மங்கிவிட்டிருந்தார். அவள் முகம் செங்கனல் கொண்ட செம்புக்கலம் போலிருந்தது. உருகிச் சொட்டிவிடும் என்பதுபோல. அந்த அனல் எது? மணம்கொண்டு செல்லும் பெண்களின் முகங்களில் அதை முன்னரும் கண்டிருக்கிறேன். நீண்ட கண்களில் மதமயக்கம். காய்ச்சலின் செம்மை ஓடியதுபோல. பித்தெழுந்ததுபோல. குழந்தைப்பேறுக்குப் பின்பும் பெண்களின் கண்களில் அந்த வெறி தோன்றியிருக்கும்.

தேவனுக்கும் தேவிக்கும் உரிய பூஜைகள் தொடங்கின. அவை வாழ்த்தொலி எழுப்பியபடி எழுந்து கைகூப்பி நின்றது. வெளியே மேளங்கள் பெருமுழக்கமிட்டன. ஆரல்வாய்மொழியைச் சூழ்ந்த மேற்குமலைகள் அனைத்தில் இருந்தும் மக்களின் வாழ்த்தொலிகள் எதிரொலித்துச் சூழ்ந்துகொண்டன.

மகாராஜா எழுந்து நின்று கும்பிட்டுக்கொண்டிருக்க அவரை சம்பிரதி கிருஷ்ணப்பையர் பின்னாலிருந்து ஏந்திப் பிடித்திருந்தார். தளவாய் வெங்கப்ப நாயக்கரும் நடுங்கிய கைகளை கூப்பியபடி நின்றிருந்தார். ஒவ்வொருவரும் சன்னதம் கொள்பவர்கள் போல உடற்துடிப்பு கொண்டிருந்தனர். புஷ்பார்ச்சனையும் தலார்ச்சனையும் நடைபெற்றன. தூமாராதனையும் தீபாராதனையும் நடந்தன.

பூஜைகள் முடிந்ததும் சிவாச்சாரியார் கைகாட்ட மகாராஜா அழுதுகொண்டு, நடுங்கிக்கொண்டு முன்சென்று வணங்கினார். “வீடுநிறைஞ்சு நின்ன பிள்ளை. இப்ப மங்கலவதியா புகுந்தவீட்டுக்கு போகப்போறா. தந்தையா நின்னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைக்க வேணும்என்றார் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார்.

மகாராஜா விம்மலை அடக்க முடியாமல் தலைகுனிந்தார். மீனாக்ஷி அம்மை சப்பரத்திலிருந்து இறக்கப்பட்டு மகாராஜாவின் கால்தொட்டு வணங்குவதற்காக குனிந்தாள். மகாராஜா பதறி இருகைகளாலும் அவள் தலையைத் தொட்டுதீர்க்கசுமங்கலியா இருமகாமங்கலையா இரு…” என்றார். பின்னர் உரத்த கேவல்களுடன் அழத்தொடங்கினார்.

சுந்தரேசரும் மகாராஜாவை வணங்கி வாழ்த்து பெற்றார். ஆதிகேசவன் சப்பரத்தில் இருந்து இறங்கி மீனாக்ஷியின் வலக்கை பற்றி சுந்தரேசனின் கையில் அளித்து வாழ்த்தினார். அவர்கள் அவையை நோக்கி திரும்பி வணங்க அத்தனைபேரும் உரத்தகுரலில்மகாமங்கலே தேவீ!” என்று வாழ்த்தொலி எழுப்பினர்.

சுந்தரேசன் மீனாக்ஷியம்மையை கைப்பற்றி அழைத்துச்செல்ல முத்தாலம்மையும் கணபதியும் உடன் சென்றனர். ஆதிகேசவனும் பரகோடி கண்டன் சாஸ்தாவும் மகாராஜாவும் தொடர்ந்து வெளியே சென்றனர். அவர்கள் மணப்பந்தலை விட்டு வெளியே சென்றதும் அங்கே பெருமுரசுகளும் நூற்றுக்கணக்கான கொம்புகளும் முழக்கமிட்டன. வாழ்த்தொலிகளின் அலை மேலும் பெருகியது.

நான் மணப்பந்தலைச் சுற்றிக்கொண்டு ஓடி முகப்புக்குச் சென்றேன். மணப்பந்தலில் இருந்தவர்கள் அனைவரும் சீரான வரிசைகளாக வெளியே வந்து முற்றத்தில் நின்றனர். மகாராஜாவுக்குப் பின்னால் தளவாய் நாராயணக் குறுப்பும் திவான் நாகமையாவும் சென்றனர்.

மீனாக்ஷியன்னையை சுந்தரேசர் பாண்டிநாட்டுப் பல்லக்கில் ஏறும்படிச் சொன்னார். அவள் தயங்கி தலைகுனிந்து நின்றாள். மும்முறை பல்லக்கில் ஏறும்படி சுந்தரேசர் சொன்னார். அன்னை முதல் அடி எடுத்துவைத்து, தயங்கி பின்னால் திரும்பி மகாராஜாவைப் பார்த்தாள்.

மகாராஜா கைகளை விரித்தபடிமகளே! தங்க மகளே! பொன்னு மகளே! தேவீ!” என்று அலறியபடி தூக்கி வீசப்பட்டவர் போல ஓடி அவளருகே சென்றார். தேவியின் செப்புத்திருமேனியை வைத்திருந்த சிவாச்சாரியாரின் தோளைப்பிடித்து உலுக்கிவேண்டாம், என் மகள் எங்கேயும் வரமாட்டாஇங்கேதான் இருப்பா. நான் விடமாட்டேன். விடமாட்டேன்என்று கூச்சலிட்டார்.

தளவாயும் திவானும் மகாராஜாவை தொட்டுப் பிடிப்பதா என்று தயங்கினர். சிவீந்திரம் ஆரியன் நம்பூதிரிப்பாடுபொண்ணும் நாத்தும் இடம் மாறாம வளர முடியுமா? வாங்க மகாராஜாவரணும்என்று அவர் தோளைப் பிடித்து பின்னால் இழுத்தார். மகாராஜா திமிறி உறுமலோசை எழுப்ப இன்னொரு நம்பூதிரியும் அவரைப் பிடித்து பின்னால் இழுத்தனர்.

ஆதிகேசவன் தங்கையிடம்போய் வாடி செல்லம்என்று கைகாட்டினார். பரகோடி கண்டன் சாஸ்தாபோய்ட்டு வா அக்காஎன்று கைகாட்டினார். அம்மையும் தலைகுனிந்து கண்ணீர் விட்டுக்கொண்டு நின்றிருந்தாள்.

முத்தாலம்மை புடவையால் முகத்தை மூடி அழுதாள். பிள்ளையார் தானும் பல்லக்கில் ஏறப்போக அவரை மீனாக்ஷியம்மை தலையில் தொட்டு ஆசீர்வதித்துப் புன்னகை செய்தாள்.

குட்டிப்பிள்ளையாரை முத்தாலம்மை பிடித்து தன்னருகே இழுத்துக்கொண்டாள். அவர் பல்லக்கில் ஏறி மூத்தவளுடன் செல்வேன் என அடம்பிடித்து திமிறினார். அவருக்கு சிவாச்சாரியார் ஒரு பெரிய மோதக உருளையை கொடுக்க அவர் அதை வாங்கிக்கொண்டு அமைதியடைந்தார்.

சுந்தரேசர் மீண்டும் அழைக்க மீனாம்பாள் பல்லக்கில் ஏறிக்கொண்டாள். பல்லக்கில் இருந்தபடி எட்டிப்பார்த்து தந்தையிடமும் தமையனிடமும் தம்பியிடமும் தோழியிடமும் குட்டியிடமும் விடைபெற்றாள். அடக்கமுடியாதபடி அழுகை எழ முகத்தை மஞ்சள்பட்டால் மறைத்தபடி உள்ளே சென்றுவிட்டாள்.

சூழ்ந்திருந்தவர்கள் அனைவருமே விழிகலங்கியிருந்தனர். மகாராஜா பித்தனைப்போலமகளே! பொன்னு மகளே! தங்கமே!” என்று அரற்றிக்கொண்டிருந்தார். தளவாய் வெங்கப்ப நாயக்கரும் கண்ணீர்விட்டு விசும்பினார். சிவாச்சாரியார் கைகாட்ட ஊர்வலம் நகரத்தொடங்கியதும் மகாராஜாமீனாக்ஷீ, மகளேஎன அலறியபடி நினைவிழந்து மண்ணில் விழுந்தார். நாலைந்துபேர் அவரை தூக்கினார்கள்.

ஊர்வலத்தின் முகப்பில் அன்னையின் கிளிக்கொடியுடன் முதலடி முகப்பட்டமிட்ட பிடியானையின் மேல் ஏறி வானத்தில் என மிதந்து சென்றான். சுந்தரேசனின் நந்திக்கொடியுடன் ஒருவன் களிற்றானையில் ஏறி அவனை தொடர்ந்தான்

பாண்டியர்களின் துள்ளுமீன் கொடியும் விஜயநகரத்தின் பன்றிக்கொடியும் ஏந்தியவர்கள் தொடர்ந்து சென்றனர். அலங்காரதாசிகளும் வாத்தியக்காரர்களும் சென்றனர். குதிரைகளும் படைவீரர்களும் நிரைவகுத்துச் சென்றனர்.

சூழ்ந்திருந்த வேணாட்டுக் கூட்டத்தினர்மகாமங்கலே, தேவீ, மீனாக்ஷியம்மேஎன்று கூவி வாழ்த்தி மலர்களை அள்ளி வீசினர். அங்கிருந்து பார்த்தபோது நெடுந்தொலைவுக்கு மலர்களின் அலைவளைவுகள் கொப்பளிப்பதையே கண்டேன்.

மீனாம்பாளின் பல்லக்கு முற்றத்தைக் கடந்து செல்லும்போது முன்னால் சென்ற குதிரைகளில் ஒன்று தும்மலோசை எழுப்பியபடி நின்று காலால் உதைத்தது. அதன்பின்னால் சென்றவன் தடுமாறி பல்லக்கு தூக்கியவன் மேல் விழுந்தான். அவனுடைய கால் நொடித்து அவன் ஒருகணம் பிடியை விட்டான். அதை எதிர்பாராத அவனுக்குப் பின்னால் நின்றவனும் கால்நொடித்தான். இரு தூக்கிகளும் கைகளை விட்டுவிடவே பல்லக்கின் முன்இடப்பக்கம் சட்டென்று சரிந்தது.

உள்ளிருந்து சிவாச்சாரியார் அன்னையின் சிலையுடன் வெளியே சரிந்தார். ஆனால் சிலையை பல்லக்குடன் அழுத்தியபடி அவர் மட்டும் வெளியே விழுந்து, உடனே உடலை திருப்பி தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

அக்கணமே இரு வீரர்கள் சிவாச்சாரியாரைப் பிடிக்க நால்வர் பல்லக்கையும் பிடித்துக்கொண்டனர். அன்னையின் சிலையை உள்ளே வைத்துவிட்டு சிவாச்சாரியார் துள்ளி மீண்டும் பல்லக்கில் ஏறிக்கொண்டார். கால்நொடித்த பல்லக்கு தூக்கியை அகற்றி வேறு இருவர் பல்லக்கை தூக்கிக்கொண்டனர்.

எல்லாம் சிலகணங்களுக்குள் நடந்து முடிந்தன. பட்டில் ஒரு சிறு கசங்கல் போல, நதிப்பெருக்கில் ஒரு சிறு குமிழிபோல. முன்னால் சென்றவர்கள் அதை அறியவே இல்லை. மேலும் மேலுமென பெருகிச்சென்ற ஊர்வலத்தால் அக்காட்சியே கண்ணிலிருந்து உடனே மறைந்துவிட்டது.

மகாராஜாவை உள்ளே தூக்கிக் கொண்டுசென்றார்கள். நான் அங்கே நின்றேன். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அறுத்துவீசப்பட்ட தசைபோல என் இடத்தொடை துள்ளியது. ஆனால் என் நெஞ்சில் நிறைவும் உதடுகளில் புன்னகையும் இருந்தது.

[ 20 ]

நான் என் பின்னால் அசைவை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன். தளவாய் நாராயணக் குறுப்பு நின்றிருந்தார். அவரைக் கண்ட கணம் அதுவரை என்னுள் ததும்பி நின்ற சிரிப்பு வெடித்து கிளம்பியது.

சரியான குறும்புச் சிறுக்கியார்னு காட்டிட்டுப் போய்ட்டாஎன்றேன்.

தளவாய் நாராயணக் குறுப்பு என்னிடம்சர்வாதிக்காரரே, இதெல்லாம் அம்மையுடே ஒரு நாடகம்னு கூட்டிக்கிடணும். நான் சொன்னதும் நீங்க சொன்னதும் எல்லாம் அர்த்தமில்லா ஜல்பனங்கள். வேண்டாம். எல்லாம் முடிஞ்சாச்சுசொன்ன சொல்லு நம்முடையது இல்லை. அம்மை ஆடிய ஆட்டம்அதை அப்டியே மறந்திடணும்என்றார்.

நான்ஆமா, அம்மைக்க வெளையாட்டுதான்ஆனா குறை வந்திட்டுதுல்ல? பிழை நடந்திட்டுதில்ல? நீ சொன்னதுபோலே செய்ய முடியுமாடான்னுல்ல கேக்குறா? அவளுக்கு நான் சொன்னதைச் செய்றவன்னு காட்டணுமில்ல?” என்றபடி உள்ளே சென்றேன்.

திவான் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக என்னை நோக்கி வந்தார். “மார்த்தாண்டா, நான் உனக்க தந்தைக்க வயசுள்ளவன், பிராமணன், என் உத்தரவாக்கும் இது. வேண்டாம். அவிவேகம் காட்டவேண்டாம்விடு. எல்லாம் அம்மைக்க லீலைவேண்டாம்என்று கூவி என் கையைப் பிடித்தார்.

இது அம்மைக்கும் எனக்குமான விளையாட்டு. நான் செய்யவேண்டியதைச் செய்வேன். அதுக்கு முன்னாலே இந்த வாளை மகாராஜா காலடியிலே வைச்சு பதவி ஒழியணும். இனி இந்த வாளு அவருக்கு சேவை செய்யாதுன்னு சொல்லிடணும். அவ்ளவுதான்இன்னைக்கே உச்சினி மாகாளியம்மை சன்னிதியிலே…”

மார்த்தாண்டா, வேண்டாம். சொல்றதைக் கேளு. நான் வேணுமானா ஆதிகேசவன் முன்னாலே நின்னு என் சொல்லு எல்லாத்தையும் திருப்பி எடுத்துக்கிடுதேன். வேண்டாம்இந்த மகோத்ஸ்வம் ஒரு மாயையாக்கும். எல்லாரையும் பைத்தியமா ஆக்கிட்டுது இது. என்னை குரங்கா ஆக்கிட்டுது. நான் வந்து ஆதிகேசவன் முன்னாடி நோன்பிருக்கேன். நான் சொன்னதெல்லாம் பிழைன்னு அவன்கிட்டே சொல்லுறேன்என்றார் திவான்.

நான் ஒன்றும் சொல்லாமல் நடந்தேன். அவர் என் பின்னால் வந்தபடிமகாராஜாவுக்கு வலிப்பு வந்திட்டுது. சுயப்பிரக்ஞையே இல்லை. நாக்கைக் கடிச்சுக்கிட்டார். வைத்தியரை விளிக்க ஆளு போயிருக்கு. நான் என்ன செய்றதுன்னே தெரியல்லியே. மார்த்தாண்டா நீ இல்லாம என்னாலே ஒண்ணுமே செய்யமுடியாது. நான் உன் கையைப்பிடிச்சு மாப்பு கேக்கிறேன். நான் பிராமணன், உன் காலை நான் பிடிக்கப்பிடாது.”

சிவீந்திரம் ஆரியன் நம்பூதிரிப்பாடு என்னை நோக்கி ஓடிவந்தார். “மார்த்தாண்டா ஒரு பெரிய தப்பு நடந்துபோச்சு.. ரொம்பப் பெரிய தப்பு. அதுக்குண்டான விலையைத்தான் இப்ப குடுக்கிறோம்அதனாலேதான் மகாராஜாவுக்கு இந்த ஆபத்துன்னு நினைக்கிறேன். ரெண்டு தடவை வலிப்பு வந்திருக்கு. ஆரியவைத்தியர் கிருஷ்ண மூசதுக்கு ஆள் போயிருக்கு.”

ஆமா, தப்பு நடந்திருக்கு…” என்றேன்.

அவர் நான் சொன்னதை கவனிக்காமல்சிறமடம் பெரிய திருமேனி நேத்து ராத்திரி ஒரு குட்டித்திருமேனியை அவசரமா செய்தி சொல்லி அனுப்பியிருக்கார். அவரு கூட்டத்திலே வழிதவறி பூதப்பாண்டி பக்கமா போயிட்டார். அங்கேருந்து மறுபடி கிருஷ்ணன்கோயில் போயி கோட்டாறு வழியா இப்பதான் வந்தார். திருமேனி ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி அனுப்பியிருக்கார். கல்யாணமாகிப் போற பொண்ணு அவளுடெ உடைமையிலே எதையாவது ஒண்ணு இங்க விட்டுட்டு போகணும். அவளுடே ஒரு நகையோ துணியோ நாம எடுத்து வைச்சுகிடணும். அதுதான் அவளுடே பிரசன்னம்இல்லேன்னா இங்க சூன்யம் நிறைஞ்சிரும். எல்லாரையும் மூதேவி பிடிச்சிரும். மீனாக்ஷிக்க ஒரு நகையை எடுத்து வச்சுக்கிடுங்கன்னு சிறமடம் திருமேனி சொல்லி அனுப்பிச்சிருக்கார்…”

நான் திகைத்துஒண்ணுமே இல்லியா?” என்றேன்.

சிவாச்சாரியார்கிட்டே கேட்டேன். ஒண்ணுமே இல்லை. ஒரு துண்டு துணியோ ஒரு மணி தங்கமோ ஒண்ணும்எல்லாத்தையும் பாத்துப்பாத்து எண்ணி எடுத்து அவளுக்குக் குடுத்து அனுப்பியிருக்காங்க.”

திவான்நான்தான் சொன்னேன், அம்மையுடே ஒரு பொருளும் இங்கே இருக்கக்கூடாதுன்னு .வேணாட்டில் அம்மையுடே பொருளை எடுத்துக்கிட்டாங்கன்னு வரக்கூடாதுன்னு.”

இப்ப போயி ஒரு நகையை கேட்டு வாங்கினா என்ன? இப்ப ஆரல்வாய்மொழி தாண்டியிருக்க மாட்டாங்கஎன்றேன்.

இந்த முற்றத்திலே இருந்து கிளம்பினாலே அவ நம்ம உடைமை இல்லை. அவ இப்ப பாண்டிநாட்டுக்காரி. ஒரு நாடு இன்னொரு நாடுகிட்டே கொடை வாங்கக்கூடாதுஎன்றார் ஆரியன் நம்பூதிரி. “அதோட பொண்ணு குடுத்த வீட்டிலே நாம கைநீட்டக்கூடாது

நான் என் சிந்தனை முழுமையாகவே உறைந்திருக்க வெறித்த விழிகளுடன் நின்றேன்.

பாவி இப்படி தாமசிச்சு வந்துட்டானேஒரு நாழிகை முன்னாடி வந்திருந்தா எல்லாம் மங்களமா முடிஞ்சிருக்குமே

பந்தலுக்கு வெளியில் இருந்து நூற்றுடையோன் கல்லுப்பாறை சுண்டன் நாயர் உள்ளே வந்தான். ”சுவாமிஎன அழைத்தான்.

திவான்போய்க்கோபோய்க்கோ. இங்கே ஒரு முக்கியமான பேச்சு நடந்திட்டிருக்குஎன்றார்.

இல்லை சுவாமி, அம்மை எறங்குறப்ப பல்லக்கு சரிஞ்சதிலே அம்மைக்க ஒரு வைரவளையல் உருவி தரையிலே விழுந்திருக்கு. ஒருத்தன் எடுத்து குடுத்தான். இதோ இதுதான்என்று அவன் ஒரு வளையலை காட்டினான். இளஞ்சிவப்பு வைரங்கள் ஒளிவிட அந்த வளையல் சிறிய கனல் போலிருந்தது.

தேவீ மகாமாயேஎன்று ஆரியன் நம்பூதிரிப்பாடு கைகூப்பி கூச்சலிட்டார். “அம்மே அம்மே அம்மேஎன்று வெறிகொண்டதுபோல நெஞ்சிலறைந்து கண்ணீர்விட்டார்.

திவானும் தளவாயும் கண்ணீருடன் கைகூப்பிதேவீஎன்று வணங்கினர். நான் அப்போதும் பிரமை பிடித்து நின்றேன்.

மார்த்தாண்டா, களவாணிச்சிறுக்கி நம்மகிட்டே விளையாடியிருக்காடாகுறும்பியா இருந்தாலும் கனிவுள்ளவளாக்கும்டேஎன்றார் ஆரியன் நம்பூதிரிப்பாடு.

நான் வெடித்துச் சிரித்தேன். திவானின் தோளிலும் தளவாயின் முதுகிலும் அறைந்து கூவிச்சிரித்தேன். தரையில் அப்படியே அமர்ந்து நிலத்தை ஓங்கி ஓங்கி அறைந்து சிரித்தேன்.

[ 21 ]

வைகாசி மாதம், வளர்பிறை நாலாம் நாளாகிய இன்று, வேணாட்டின் ஸ்ரீவாழும்கோட்டில் இருந்து இரணியசிங்கநல்லூருக்கு ஒற்றைக்குதிரையில் தனியாகச் சென்றுகொண்டிருக்கும் தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமனாகிய நான் இப்போதெல்லாம் தனிமையிலிருக்கையில் எல்லாம் எண்ணி எண்ணிப் புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன். சிற்றாடை கட்டிய எந்தச் சிறுமியைக் கண்டாலும் மெய்ப்பு கொண்டு குதிரையை நிறுத்தி உள்ளத்தால் வணங்குகிறேன். கற்பனையால் முத்தமிட்டு முத்தமிட்டு பித்து கொள்கிறேன். பெண்ணழகென்று அல்லாமல் இங்கே பிரபஞ்ச சாரம் எப்படி வெளிப்பட முடியும் என்று எண்ணி நெஞ்சில் கைவைத்து விம்மி கண்ணீர்விடுகிறேன்.

மீனாக்ஷியன்னை இன்னும் மாமதுரை நகர் சென்று சேரவில்லை. அவள் சென்ற வழியெல்லாம் திருவிழாக்கள் முளைத்தன. ஒன்று பத்து நூறென. அவள் சென்ற அந்நாளில் மாமழை விழுந்து சித்திரையில் வெந்த வேணாட்டு நிலம் குளிர்ந்தது. மழையை தோவாளை அரண்மனையின் முகப்பில் நின்று பார்த்த வேணாடு இருந்தருளும் மகாராஜா ஆதித்ய வரகுணன் சர்வாங்கநாதப் பெருமாள் என்னிடம் “குதிரை வரட்டும் மார்த்தாண்டா. இந்த மழையை நான் திருவாழும்கோடு வரை நனைவேன். என் மண்ணு நனைவதுபோல  நானும் நனைவேன்” என்றார்.

வைத்தியர்கள் அவர் உடல்நிலை உறுதியாக இருப்பதாகச் சொன்னார்கள். அவர் அப்படியே கண்கள் தெளிந்து உடலெல்லாம் பொன் கொண்டுவிட்டிருந்தார். அதை அவரைப் பார்த்தவர்களே கூட சொல்லிவிட முடியும்.

நானும் அவரும் மழையிலேயே திருவாழும்கோடுக்கு வந்தோம். வழியெல்லாம் ஓடைகள் பொங்கிப் பெருகிச் சென்றன. அவை கொண்டுவந்து ஒதுக்கிய வேங்கைமலர்களும் கொன்றை மலர்களும் குவியல்களாக குதிரைக்கால்களால் சிதறடிக்கப்பட்டன. ஏரிகள் வானொளியுடன் நிறைந்திருந்தன. ஆறுகள் சுழித்துப் பெருகின. கிணறுகளில் இருந்து நீர் எழுந்து மறுகால் பாய்ந்தது. பகலெல்லாம் விரைந்தும் குதிரைகளோ நாங்களோ களைப்படையவில்லை.

ஸ்ரீவாழும்கோட்டிலிருந்து கிளம்பும்போது மகாராஜா என்னிடம் சொன்னார் “அம்மையாலே வேணும்னு நினைச்சாலும் அன்பை குறைச்சுக் கொள்ள முடியுமா மார்த்தாண்டா? அன்பு நாம் அவளுக்கு இட்ட அங்குசமும் சங்கிலியும் இல்லையோ?”

இரணியசிங்கநல்லூரின் தாழ்ந்த கூரைகொண்ட வீடுகளும் ஓராளுயர மண்கோட்டையும் தெரியலாயின. நான் சாய்வெயில் விரிந்த மாலையில் என் கோட்டைக்குள் நுழைந்தேன். கோட்டைக்கு வாசலுண்டு, ஆனால் கதவுகள் இல்லை. நூறாண்டுகளுக்கும் மேலாக காவலுமில்லை.

[நிறைவு]

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி [குறுநாவல்] – 5
அடுத்த கட்டுரைஅறுபதும் அன்னையும்