திரு ஜெயமோகன் அவர்களே
தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க – உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்
இந்த பாடலை எப்படி பொருள்கொள்வது? இணையதளங்களில் என்னை திருப்திப்படுத்தும் உரையை தேடிப்பிடிக்க முடியவில்லை.
இங்கு முப்பால் என்பது என்ன? முப்பால் ஒழுக்கினால் காணிக்கை செயல் முழுமையான ஈடுபாடு அறிவு ஆகியவற்றை எப்படி காப்பது/உய்ப்பது?
இந்த நான்கிற்கும் என்ன தொடர்பு ஏன் இந்த வரிசையில் சொல்லப்பட்டிருக்கிறது?
வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தும், தொடர்ந்து தமிழில் வாசிக்கும் பழக்கம் இருந்தும் (குறிப்பாக உங்கள் அனைத்து நூல்களையும், பதிவுகளையும்). யார் உதவியும் இன்றி ஏன் என்னால் இந்த பாடல்களை புரிந்துகொள்ள முடிவதில்லை?
பாடலுக்கு பொருள்கேட்டு கடிதம் எழுதுவது உங்களை எரிச்சலூட்டக்கூடும், இருந்தும் உங்களுக்கு தான் எழுததோன்றுகிறது.
நன்றி
சதீஷ் பாலசுப்ரமணியன்
***
அன்புள்ள பாலசுப்ரமணியன்,
இத்தகைய வரிகளை பொருள்கொள்ளும்போது அவ்வரிகளை மட்டும் தனியாக எடுத்து உளத்துக்குத் தோன்றும்படி பொருள்கொள்ள முடியாது. அந்நூல் ஒரு தொடர் உரையாடல். அந்த உரையாடலில் இந்த வரி எங்கே வருகிறது என்பது உசாவத்தக்கது. இந்த வரிகளிலுள்ள முப்பால் என்பது எதைக்குறிக்கிறது என்று அவ்வண்ணமே பொருள் கொள்ள முடியும்
அதைப்போல இந்த வரிகளிலுள்ள வைப்புமுறையை கருத்தில்கொள்ளாமல் அவை எதைக்குறிக்கின்றன என்று பொருள் கொள்வதும் பிழையானதாக முடியலாம். பழைய நூல்களை பொருள்கொள்ள வைப்புமுறை தவிர்க்கவே முடியாதது. பழையநூல்களில் சொற்களை பொருளின்றி அடுக்குவதில்லை.
ஆசாரக்கோவையில் இந்த வரிகள் ஒழுக்கநெறி நிற்றலைப் பற்றிச் சொல்லும் இடத்தில் வருகின்றன. முந்தைய பாடல் ஒழுக்கம் பிழையாதவருக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றிச் சொல்கின்றது. இப்பாடலுக்கு பிந்தைய பாடல் காலையில் எழுவது உட்பட்ட அன்றாட நெறிகளைப் பற்றிப் பேசுகிறது.
ஆகவே இப்பாடல் ஒழுக்கநெறிகளைப் பற்றியதே. ஆசாரக்கோவை ஒரு நெறிநூல். பழைய வாழ்க்கையின் ஆசாரங்களை தொகுத்துச் சொல்கிறது. வழிபாட்டு ஆசாரங்கள் முதல் அன்றாட ஆசாரங்கள் வரை. இதில் முப்பால் என்று சொல்லப்படுவது அறம்,பொருள், இன்பம் என்பதைப்பற்றித்தான்.
முப்பாலில் இல்லாத நாலாவது பால் வீடுபேறு. தர்மம் ,அர்த்தம் ,காமம், மோட்சம் என புருஷார்த்தங்கள் நான்கு என்றே சொல்லப்படுகிறது. இங்கே நான்காவது பாலான வீடுபேறு குறிப்பிடப்படவில்லை. அது ஏன் என்ற கேள்வியுடன் அந்த வைப்புமுறையை கவனிக்கலாம்.
ஒருவன் வீடுபேறு அடைவதற்குச் சொல்லப்பட்டுள்ள வழிகள் நான்கு. அவையே முதல் வரியில் உள்ளன.எளிய இல்லறத்தான் என்றால் கொடையே அவனுக்கான வழி. பழைய முறைகளின்படி விண்ணுலகிலுள்ள மூதாதையர், துறவியர், அந்தணர், புலவர், இரவலர் ஆகியோருக்கு அளிக்கும் காணிக்கையே வீடுபேறுக்கு போதுமானது. தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஐந்து பேரை புரத்தல் என்று அதை குறளும் சொல்கிறது.
அடுத்தபடியாக வீடுபேறுக்குரிய வழி வேள்வி. அந்தணர் இயற்ற மற்றவர்கள் இயற்றுவிக்கலாம். கொடை, வேள்வி இரண்டுமே உலகியலுக்குரியவை. ஒன்று எளிய அன்றாடத்திலும், இன்னொன்று சிறப்புநிலையிலும் செய்யப்படவேண்டியவை. எளிய குடிமகன் கொடையும் அரசர்கள் வேள்வியும் செய்யலாம் என்று சொல்லப்படுவதுண்டு. இரண்டுமே நிகரானவைதான் என்ற வரிகளை நாம் நெறிநூல்களில் காணலாம்.
வீடுபேறுக்குரிய எஞ்சிய இரு வழிகள் தவமும் கல்வியும். இங்கே தவத்துக்கு அடுத்த நிலையில் கல்வி சொல்லப்படுகிறது. ஆகவே அது மெய்ஞானக் கல்வியையே சுட்டுகிறது. ஊழ்கமும் தவமும் ஒருசாராருக்குரியது. ஞானமார்க்கம் இன்னொரு இயல்பினருக்குரியது. அவையிரண்டும் வீடுபேறின்பொருட்டு உலகியலை துறந்து செல்பவர்களுக்கானவை.
இந்நான்குமே வீடுபேறுக்கான வழிகள். இந்நான்குமே அவற்றுக்கு முந்தைய நிலைகளான அறம்,பொருள், இன்பம் ஆகியவற்றை முறைப்படி காத்து உய்பவர்களுக்கு உரியவை என்று ஆசாரக்கோவை சொல்கிறது. முப்பாலை காத்து விடுதலை பெறாதவர்களுக்கு மேலே சொன்ன நான்கில் எதுவானாலும் பயனளிக்காது என்கிறது.
அறம்பேணி, அதன்பொருட்டு பொருள்தேடி, அந்த அறத்தையும் பொருளையும் நிலைநிறுத்தும்பொருட்டு இல்லறமும் கொள்பவர்களே முப்பால் ஒழுக்கம் கொண்டவர்கள். அவர்கள் அதை தங்கள் வாழ்க்கையில் காத்துக்கொண்டு, அதன்வழியாக விடுதலைபெற்றபின் ஆற்றவேண்டியவை மேலே சொல்லப்படும் கொடை, வேள்வி, தவம், கல்வி என்னும் நான்கு வீடுபேறுக்கான வழிகளும். முப்பால் ஒழுக்கத்தை பேணாமல் செய்யப்படும் கொடையோ வேள்வியோ தவமோ கல்வியோ பயனளிப்பதில்லை என்று இப்பாடல் வலியுறுத்துகிறது.
ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தாலும் இது காலத்தால் மிகப்பிந்தையதாகவே இருக்கக்கூடும். இதன் நடையும் பேசுபொருட்களும் அவ்வாறாகவே காட்டுகின்றன. இது எட்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கும் பிற்காலத்தைய நூல். பெருவாயின் முள்ளியார் சொல்லும் ஒழுக்கநெறிகள் அன்றைய காலகட்டத்தைச் சேர்ந்தவை.
அது வடக்கத்திச் சமணத்தின் துறவை முன்வைக்கும் பார்வை மெல்ல பின்னடைவு கொண்டு தமிழ்ச்சமணத்தின் இவ்வுலகையும் கருத்தில்கொண்ட பார்வை மேலோங்கி வரும் காலகட்டம். உலகியலில் இருந்தே வீடுபேறை அடையும் வழியை நாடிய பக்தி இயக்கம் கருக்கொண்ட காலகட்டம். இந்தப் பாடலும் அதையே சொல்கிறது.
இப்பாடல் அறம் ,பொருள், இன்பம் மூன்றையும் வீடுபேறுக்கான நிபந்தனையாக வைக்கிறது. குறள் முன்வைக்கும் பார்வையும் ஏறத்தாழ இதுவே. குறள் வீடுபேறு பற்றிப் பேசாமல் முப்பாலையே முன்வைக்கிறது. ’வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார்’ தெய்வமாகும் வழிமுறையைச் சொல்கிறது.
’மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை” என்ற தேவாரப்பாடலின் உளநிலையின் இன்னொரு வடிவம் இப்பாடலில் உள்ளது. அதாவது மண்ணில் முறையாக வாழ்வதுதான் நற்கதிக்கான முன்நெறி.
ஜெ