அறிவியல்,கற்பனை- கடிதங்கள்

அறிவியலுக்கு அப்பாலுள்ள அறிதல்கள் தேவையா?.
தொல்தமிழ் இலக்கியத்தில் பட்டாம்பூச்சி ஏன் இல்லை?
தொல்தமிழ் இலக்கியத்தில் பட்டாம்பூச்சி ஏன் இல்லை?

அன்புள்ள ஜெ,

ஒருவருடம் ஆகிவிட்டது. கடைசியாக புனைவுக்களியாட்டு வாசிப்பு அனுபவங்களை உங்களுக்கு எழுதினேன். இந்தக் கடிதம் வழியாக உள்ளேன் என்று அட்டெண்டன்ஸ் போட்டுக்கொள்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்  உங்களைப் பற்றி பேச்சு வந்தபோது ஐ மிஸ் ஹிம் என்றான் விஷ்வா. நானும்தான் என்றேன். உங்களை நேரில் எப்போது சந்திப்பேன் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் கோடல், எய்ஷர் பாக் நூலை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். டக்ளஸ் ஹாஃப்ஸ்டாட்டரின் surfaces and essences என்ற நூலை ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.  அதுவும் மிக முக்கியமான நூல். ஆனால் கோடல் நூலை இன்னும் வாசிக்கவில்லை. ஆழ்ந்து வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

ஆனந்த் குருவின் கடிதத்தை கண்டேன்.  உங்கள் சிறப்பான பதிலையும்.

அறிவியலில் கற்பனைக்கு இடம் இருப்பது போல தெரியவில்லையே என்று கேட்கிறார்.

விசையுடன் பந்தை எறிகிறோம். திரும்பி வருகிறது. இன்னும் விசையுடன் எறிந்தால் பொருள் பூமியை சுற்றுகிறது. மேலும்  விசையுடன் எறிந்தால் அது வெளியில் விரைகிறது.


ஒவ்வொரு கணமும் சூரியன் ஒளித்துகள்களை ‘எறிகிறது’. அது ஏன் சூரியனுக்கே திரும்பிச் செல்லவில்லை?  எப்படி அந்த ஈர்ப்பை விட்டு ஒளித்துகள்கள்  பூமிக்கு வருகின்றன?

ஒருவேளை ஒளி என்ற துகள் நிறையிலி என்பது காரணமாக இருக்குமா? அல்லது அதன் உச்ச வேகம்தான் காரணமா?  அல்லது அதை செலுத்தும் விசையா?

ஆனால் கருத்துளை உச்சவேகம் கொண்ட ஒளியைக் கூட  விடாமல் பொத்தி வைத்துக்கொள்கிறதே!

பூமியின் ’விருப்பம்’ பொருள்கள் வந்திறங்க வேண்டும் என்றால்… மரங்கள் எப்படி அதற்கு எதிராக ஓங்கி வளர்ந்தன ? வளர்கின்றன? பறவைகள் வானில் எழுந்து பறக்கின்றனவே? அப்போது  இந்த உயிர்விசையின் விருப்பமும் இயல்பும் தோற்றமும் என்ன?

இன்னும் கூட அருவமாக செல்லலாம். திரும்பி வரமுடியாத இடத்திற்கு அகத்தை எறியும் விசை ஒன்று இருக்கிறதா?  அதன் தன்மை எப்படி இருக்கும்?

அறிவியலை வறண்ட அறிவுத்துறையாக கொள்ளவேண்டியதில்லை. கற்பனை வந்து தொடும் புள்ளிகள் ஏராளமாக உள்ளன. முறையாக பயின்றால் அதை  கண்டுகொள்ளலாம்.

மேலும்… செயலை அனுபவித்தல் என்று வரும்போது அறிவியல் சார்ந்த தரவுகள் மட்டும் அல்ல. அனைத்து எண்ணங்களையும் திரும்ப வரமுடியாத புள்ளிக்கு எறிந்துவிட்டு செயலில் மூழ்குங்கள். அனுபவியுங்கள். என்றுதானே நம் மரபு சொல்கிறது.?!

அன்புடன்,
ராஜா

அன்புள்ள ஜெ

அறிவியலுக்கு அப்பாற்பட்டவற்றைக் கற்றுக்கொடுக்கலாமா என்ற கட்டுரை வாசித்தேன். சுவாரசியமான கேள்வி,சரியான பதில்.

அந்தக்கேள்வி எங்கிருந்து வருகிறது? அறிவியலை ஓர் அனுபவமாகக் கற்றுக்கொடுக்காமல் அதை ஒரு தெரிந்துகொள்ளலாக அளிக்கும்போதுதான் ஒரு பெரிய சலிப்பு வருகிறது. அறிவியலை ஒரு பிரபஞ்ச ரகசியத்தின் வெளிப்பாடாகவே கற்றுக்கொடுக்க முடியும்

உதாரணமாக, நான் என் பையனுக்கு நீரின் புற அழுத்தம், சவ்வூடு பரவல் ஆகியவற்றை சேர்த்து கற்றுக்கொடுத்தேன். பல சோதனைகளை செய்து கற்றுக்கொடுத்தேன். நாங்கள் அவன் பாட்டி வீட்டுக்கு போயிருந்தோம். அங்கே சுவரில் இரண்டடி உயரத்தில் பெயிண்ட் சீராக உரிந்திருந்தது. ஃபங்கஸும் வந்திருந்தது.அதைக் காட்டி என்ன என்று சொல் பார்ப்போம் என்றேன்

மழை நனைந்திருக்கிறது என்று சொன்னவன் உடனே தரையிலிருந்து நீர் மேலேறி ஊறியிருக்கிறது என்று சொன்னான். சரி என்று சொன்னதும் அவனால் அந்தப் பரவசத்தை தாளவே முடியவில்லை. அதைச் சொல்லி சொல்லி மிதந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு இடத்திலும் அதைச் சுட்டிக்காட்டினான்

ஏனென்றால் அது ஓரு பிரபஞ்ச உண்மை. அதை அறிவியல் விளக்குகிறது. அறிவியலை கொள்கைகளாக விளக்குவது பிரபஞ்சத்தை புரிந்துகொள்வதுதான். அதற்கு கற்பனையும் இண்டியூஷனும் நிறையவே தேவை.

அதைச் சொல்லிக்கொடுத்து கூடவே அதை கடந்துசெல்லும் கற்பனையையும் சொல்லிக்கொடுக்கலாம். என் பையன் டிரான்ஸ்ஃபர்மர்ஸ் படத்தை பார்த்துவிட்டு ’டென்சிட்டி மாறாதவரை இப்படி ஒரு பொருள் அதைவிட பெரிய பொருளாக மாறமுடியாது’ என்று சொன்னான். அந்த ஞானம் கற்பனையும் கலந்ததுதான்

ஆர்.ராஜ்குமார்

முந்தைய கட்டுரைபழையதொரு மாயம்
அடுத்த கட்டுரைஓஷோ கடிதங்கள்