அன்புள்ள ஜெ
ஏழாம் உலகம் கதையை இன்று வாசித்து முடித்தேன். ஒரு பாதாளா உலகத்துக்குள் சென்ற அதிர்ச்சியை முதலில் அடைந்தேன். என்ன வாழ்க்கை இது என்ற திகைப்பு. ஆனால் கூடவே இது நான் அன்றாடம் காணும் உலகம்தானே என்ற எண்ணமும் ஏற்பட்டது. பதற்றம் எரிச்சல் என்று வாசித்துச் செல்லும்போது ஒரு நிறைவு வந்துகொண்டே இருப்பதைக் கண்டேன்
அந்த பாதாள உலகம் நாம் வாழும் உலகமேதான் என்ற எண்ணம் ஓர் இடத்தில் உருவானது. நாமும் எங்கோ எவருக்கோ விற்றுக்கொண்ட ‘உருப்படி’கள்தான். எங்கள் கம்பெனி அதன் இரண்டு கிளைகளை அப்படியே இன்னொரு ஃபினான்ஸ் கமபெனிக்கு விற்றுவிட்டது. அமாம், எங்களையும் சேர்த்து விற்றுவிட்டார்கள். நாங்கள் உருப்படிகள்தான். எங்களை கல்விக்கூடத்தில் உற்பத்தி செய்கிறார்கள்.
அந்த ஏழாம் உலகில்கூட பாசம் இருக்கிறது. ஒரு கனிந்த முதியவர் இருக்கிறார். ராமப்பன். ஒரு கள்ளமில்லாத ஆள் இருக்கிறான். குய்யன். ஒரு பத்தினியான குடும்பப்பெண் இருக்கிறாள். ஓர் உண்மையான அறிவுஜீவி இருக்கிறான். ஒரு மெய்ஞானியும் இருக்கிறார். மாங்காண்டிச்சாமி. ஒரு முழுமையான உலகம்.
ரவி குமரேசன்
இந்த விற்பனை உலகத்திலும்
அன்புநிறை குருவிற்கு,
மீட்பில்லா வாழ்க்கை வாழும் உயிர்கள். அங்கே நோக்கும் விழிகளில் அருவெறுப்பு, ஒவ்வாமை, கோவம் நிறைகிறது. அவர்களின் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை துளியும் ரசிக்க இயலவில்லை. இவர்களின் வாழ்க்கை வழியே அடையப்போகும் ஞானம் என்ன? மனதை கொந்தளிக்க வைத்து அடையும் தரிசனம் என்ன?
கழிவுநீர் ஓடும் பாதையில் மலர்களைக் காண்கையில் ஒரு மின்னதிர்ச்சி கணநேரம் உடலில் பரவிச்செல்லும். பெற்ற கல்வியனைத்தையும் கொண்டு மனம் அத்தருணத்தில் தழுவிய பரவசத்தை விளக்கமுற்பட்டு பலமுறை தோற்றிருக்கிறேன். உயிர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வெளி அத்துணை தாக்கத்தை ஏற்படுத்தும்.
மனம் பாதாளத்தில் வாழும் வாழ்க்கை, பிறரிடமிருந்து அம்மலக்குவியலை மறைப்பது, சமூக வலைப்பின்னலால் மட்டும் கரையில்லா புற ஆடை அணியும் பழக்கம் என அனைத்தும் வாழ்பனுவபமாக தரப்படும் போது மொத்த உயிரும் மீட்ச்சிக்காக தவிக்கிறது. பின்பு மெல்ல மெல்ல நிலவின் ஒளி இருளை மோகம் கொள்ள செய்வது போல, மனம் வாழ்வை கொண்ண்டாட பணிக்கிறது.
வேதாளம் தலைகீழாக தொங்குவதன் அவசியம் என்ன? மனிதர்களின் வாழ்விடங்களைச் சுற்றிலும் வவ்வால்கள் இருக்கின்றன. நேர் தலைகீழான உலகம் இவ்விருவுயிர்களுக்கும் இடையே. விழி நோக்கலும், விளக்களும், வியத்தலும், வெறுத்தலும் ஒன்றையொன்று அணுகும்போது நிகழலாம். இருப்பினும் இருளில் கரிய மின்னல் ஒன்றை காணும் பரவசத்தை அவைகள் அளிக்க தவறுவதில்லை.
ஏழாம் உலகத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.
– ஆனந்த் குரு