அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 9

அன்புள்ள ஜெயமோகன் ,

தினமும் அந்த முகில் இந்த முகில் வாசித்து, குறுநாவலின் முடிவில் மோட்டூரி ராமராவுக்கும் ஸ்ரீபாலாவுக்குமான அமரக்காதலின் உணர்வெழுச்சியில் ஒரு நாள் முழுவதும் இருந்தேன். எத்தனை அபாரமான தருணங்கள் நிறைந்த கதை. சில நாட்களில் அன்றைய அத்தியாயத்தை படித்துவிட்டு அதோடு இணைக்கப்பட்டுள்ள காணொளிகளையும் இசையையும் கேட்டு முடித்தால் தூக்கமே இல்லாமல் இரவின் அமைதி சிறிது நேரம் நெஞ்சை அடைக்கும்.

முதலில் வந்த நான்கு அத்தியாயங்களை தினமும் வாசித்தபோது கொஞ்சம் “போச்சுடா” என்றுதான் உண்மையிலேயே நினைத்தேன். அந்த அத்தியாயங்கள் முழுக்க நீங்கள் செதுக்கி கொண்டுவந்த ஸ்டூடியோ சினிமா உலகமும், மோட்டூரி ராமராவின் ஒருதலைக்காதல் மனஓட்டங்களும் கொஞ்சம் சாதாரணமாக போய்க்கொண்டிருந்தது. அந்த உலகிற்குள் என்னால் இருக்க முடியவில்லை. அது ஒரு கரைந்த நிழல்கள் உணர்வு நிலையிலேயே, ஆன்மா உறிஞ்சி வெளியே எடுக்கப்பட்ட மனிதர்களின் சித்திரமாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால், ஏதோ ஒரு புள்ளியில், சட்டென்று, அது நிகழ்ந்ததே நமக்குத் தெரியாத நொடியில், இந்த கதை பறக்கத் தொடங்கிவிடும் என்று நம்பினேன்.

இப்போது யோசித்துப் பார்த்தால், கதை ஹம்பிக்கு நகர்ந்த உடனே அது நிகழ்ந்துவிட்டது. கதையில் வரும் மனிதர்களைப் போலவே ஹம்பிக்கு போனவுடன் கதையும் முற்றிலும் வேறொன்றாக மாறிவிட்டது. அதற்கு பிறகு எத்தனை தருணங்கள், எத்தனை வரிகள், எத்தனை மன ஓட்டங்கள். அவற்றை எல்லாம் வரிவரியாக எடுத்து எழுதவோ, இது எனக்கு பிடித்திருந்தது என்று ஒரு வரியை மட்டும் மேற்கோளாக சுருக்கவோ எனக்கு விருப்பமில்லை. அந்த தருணங்களில் இருக்கும் கவித்துவத்தை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவே இல்லை. ஆனால் வாசித்து மூன்று நாட்களுக்குப் பிறகு இரண்டு எண்ணங்கள் இப்போது எழுந்து வருகிறது. ஒன்று, அந்த பாடல் வரிகள், இரண்டு, மெல்லி இரானி சீனியர்.

1. “முகில்கள் மறைந்துவிடும், அன்பே வானம் அங்கிருக்கும் அல்லவா?” என்ற வரியில்தான் எத்தனை அழகு. எத்தனை ஆழம். இப்போது கதையை நினைத்தால், இந்த வரியில் இருந்துதான் நீங்கள் மொத்த கதையையும் விரித்திருப்பீர்களோ என்றுதான் தோன்றுகிறது. மோட்டூரி ராமராவும், ஸ்ரீபாலாவும் எத்தனை சாதாரணமானவர்கள். அமரர் அசோகமித்திரனையும், உங்களையும் தவிர இவர்களை வேறு யாரும் சீண்டக்கூட மாட்டார்கள். அவ்வளவு சாதாரணமானவர்கள். ஆனால் அவர்களின் காதல் கதையை இத்தனை அழகாக மாற்றியிருப்பது அந்த வரிகள்தான்.

அந்த வானம் இல்லையென்றால், இந்த முகில்கள் வெறும் நீராவிதானே? பறவைகளின் தடங்களோ, முகில்களின் தடங்களோ, வானத்தில் பதிவதே இல்லை. ஆனால் அவற்றை அந்த வானம் அறியும். அந்த வானம் அங்கிருக்கும்வரை அந்த முகில்கள் கூடிய பொழுது இருக்கும். கதையில், இரண்டு சாதாரண மனிதர்களின் காதலுக்கு சாட்சியென, வானமென மாறுகிறது அந்த வெள்ளித்திரை. ஸ்ரீராஜவிஜயேஸ்வரி உள்ளவரை அந்த முகில்கள் கூடிய பொழுதுக்கான சாட்சி இருக்கும். அதை அந்த இருவர் மட்டுமே அறிவர். ஆனால் அந்த வெள்ளித்திரையில் ஸ்ரீராஜவிஜயேஸ்வரி இருக்கும்வரை, பானுமதிக்கு பின்னால் ராமராவ் தனியாக உள்ளே துணி வைத்து தைத்துக் கொடுத்த  உடைகளை அணிந்த ஸ்ரீபாலா இருப்பாள். அந்த முகில்கள் சந்தித்த தருணத்திற்கான சாட்சியாக. அது போதும் அவர்களை ஒரு அமரக்காதலின் பகுதிகளாக்க. ஒரு சாதாரண காதல் கதையை ஒரு நிமிடத்தில் வேறொன்றாக மாற்றிவிட்டன அந்த வரிகள்.

2. இரண்டாவதாக மனதில் நிற்பது மெல்லி இரானி சீனியர். அவர்மீதான ராமராவின் ஈர்ப்பும், அவரைப் பற்றிய விவரணைகளும் எனக்கு முதலில் பொருள்படவே இல்லை. ஆனால் கதையின் முடிவில் நான் அதை உணர்ந்தேன். Sir, அது நீங்கள்தான். ராமராவும் ஸ்ரீபாலாவும் அந்த இரவில் கண்ட முகில்களும், நிலவும் கரைந்துவிட்டது. அவை மீண்டும் வரப்போவதே இல்லை. அதை அவர்களால் மீட்டெடுக்கவே முடியாது.

ஆனால் மெல்லி இரானி பகலில் உருவாக்கிய அந்த முகில்களும் நிலவும்தான் அவர்களின் அந்த இரவுக்கான ஒரே சாட்சி. அவர் உருவாக்கித்தந்த அந்த கேமரா பில்டர் இரவு வழியேதான் அவர்கள் அந்த ஒரு இரவை மீட்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மெல்லி இரானி வராமல் போயிருந்தால், அவர்களின் அந்த இரவுக்கும் அந்த முகில்களுக்கும் என்ன சாட்சி? காலப்போக்கில் அவர்கள் அந்த இரவை மறந்திருக்க முடியும். அது அவர்களின் நினைவுகளில் ஒரு மங்கிய பழைய நினைவாக மாறியிருக்கும்.

ஆனால் இப்போது மெல்லி இரானியின் அந்த இரவு அவர்களின் இரவாக மாறிவிட்டது. அவர்களின் நினைவின் இரவென்பதே மெல்லி இரானியின் கேமரா இரவுதான். அதை வைத்து அவர்களால் அந்த ஒரு இரவை துல்லியமாக விரித்தெடுக்க முடியும். அந்த ஒரு இரவின் வழியே அந்த முழு வாழ்வையும். கருப்பு வெள்ளையில்தான் எத்தனை சாத்தியங்கள்? மெல்லி இரானி உருவாக்கித்தந்த அந்த ஒரு இரவும் அவர் படம் பிடித்த ஸ்ரீபாலாவுக்கான ஒரு குளோஸ் அப்பும், ஸ்ரீராஜவிஜயேஸ்வரியும் உள்ள வரை ராமராவுக்கும் ஸ்ரீபாலாவுக்கும் அந்த வாழ்வின் அத்தனை சாத்தியங்களும் திறந்தே இருக்கும். அவர்கள் அந்த ஒரு இரவின் வழியே அவர்கள் வாழ்வை எண்ணற்ற விதங்களில் மனதுக்குள் வாழ்ந்து திளைக்கலாம்.

மெல்லி இரானியை போல்தான் நீங்களும். இந்த ஒரு குறுநாவலின் வழியே அவர்களையும் அவர்களைப்போன்ற எண்ணற்ற ராமராவ்களையும் ஸ்ரீபாலாக்களையும் அமரர்களாக்கிவிட்டீர்கள். இந்த ஒரு குறுநாவலின் வழியே அவர்கள் அவர்களின் முகில்கள் கூடிய இரவுகளை துல்லியமாக மீட்டெடுக்க முடியும். அந்த வாழ்வின் சாத்தியங்களை மனதில் வாழ்ந்து திளைக்க முடியும். முகில்கள் கூடிய பொழுதுகளை மீட்டெடுக்க முடியாத ராமராவ்களின்/ஸ்ரீபாலாக்களின் வாழ்வுதான் எத்தனை சூனியமானது.

எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களால், இசை, காணொளிகள், போன்றவற்றோடு இணைத்து இலக்கியங்களை உருவாக்கும் முறைகள் பிறக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள். புனைவுக் களியாட்டின்  சிறுகதைகளிலேயே சில கதைகளில் சில காணொளிகளையும், இசையையும் இணைத்திருந்தீர்கள். இப்போது இந்த குறுநாவலின் வழியே அந்த முறையின் சாத்தியங்களை அற்புதமாக நிகழ்த்திக் காட்டிவிட்டீர்கள். இணைக்கப்பட்ட பாடல்களையும், இசையையும் சேர்த்து அந்த அத்தியாயங்களை வாசித்தபொழுது எழுந்த உணர்வெழுச்சிதான் எத்தனை அலாதியானது.

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

****

அன்புள்ள நண்பரும் ஆசிரியருமான ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம். செயலின்மையின் இனிய மதுக்கோப்பையின் விளிம்பிலிருந்து  திருவேங்கடம். உங்கள் புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்ட பழைய வாசகன். எங்களை மீண்டும் தொடர்கதைகளின் பொற்காலத்தில் வாழ வைத்ததற்கு நன்றி. ஓவ்வொரு நாளும் ஒரு வாரத்தைப் போலவே கடந்தது. மூன்று காதல்கள். ஒன்று திரைப்பட கதையில். இரண்டாவது பானுமதி ராமாராவ் இடையில். மூன்றாவது கதைசொல்லியின் காதல். முதல் காதல் நடிப்பு மட்டுமே. இரண்டாவது காதல் காட்சி அமைப்பினால் ஏற்பட்ட நெருக்கத்தினால் உருவாகி இருக்கலாம். ஆனால் சூழ்நிலை காரணமாக முழுமை அடையவில்லை.

கதைசொல்லியின் காதல் அந்த சிறிய தயக்கத்தை உடைத்திருந்தால் முழுமை அடைந்திருக்க கூடியது தான். ஆனால் வழக்கமான, ஆயிரத்தில் ஒரு  காதல் கதையாக முடிந்திருக்கும். ராஜமந்திரியில் ஸ்ரீபாலா பிரிந்து செல்லும் போது ஆரம்பித்து கடைசியில் படம் பார்த்த பின் பேசிவிட்டு திரும்பி பார்க்காமல் செல்லும் போதும் இருவருக்கும் அதே மனநிலை தான். இரண்டு கட்டத்திலும் ஒரு வார்த்தை அவன் கூப்பிட்டு இருந்தால் இணைத்திருப்பார்கள். முதல் முறை எது தடுத்ததோ அதுவே இப்போதும் அவனை தடுக்கிறது.

இருபத்தேழு வருடத்திற்கு பிறகும் அவன் அந்த மன நிலையில் மாற்றமில்லாமல் உறைந்திருக்கிறான். ஸ்ரீபாலா இப்போதும் அவன் கூப்பிடும் குரலுக்காக காத்திருப்பதாவே படுகிறது. என்னுடைய மற்றுமொரு கதைக்கருவை கலைத்துவிட்டீர்கள். மாரத்தான் ஓட்டத்தையே sprint வேகத்தில் ஓடி கொண்டு இருக்கிறீர்கள். மீண்டும் நன்றி. என்னையும் கடிதம் எழுத வைத்ததற்கு.

அன்புள்ள

திரு

***

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் பற்றிப் பேசும்போது மோட்டூரி ராமராவின் அந்த தயக்கம் பற்றி பேசுகிறார்கள். அந்தத் தயக்கம் மட்டுமில்லை என்றால் அவர் வாழ்க்கை இன்னொன்றாக ஆகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால் நாம் வாழ்க்கையில் அடையும் ஒவ்வொரு தயக்கமும் மிகமிக ஆழமானது. எளிதில் மீற முடியாதது. உதாரணமாக நான் பிராமணன். என்னால் ஒரு அடல்ட்டை கையை ஓங்கி அடிக்கவே முடியாது. இந்த தடை என் பிறப்புச்சூழலில் இருந்து வந்தது. இது எனக்கு நிறைய பாதுகாப்பை அளிக்கிறது. நிறைய வேலிகளை போடுகிறது. உணவுப்பழக்கம், பேசும் முறை, வாழ்க்கைச்சூழல் எல்லாமே இப்படித்தான் உருவாகின்றன. அந்த சூழலில் இருந்தே தயக்கங்கள் உருவாகின்றன. ஒரு கொலை செய்ய நாம் ஏன் தயங்குகிறோம்? அதே தயக்கம்தான் இதுவும். அத்தனை எளிதாக கடந்து செல்ல முடியாது. எல்லா மனிதர்களும் இந்த தயக்கங்களால் ஆன வேலிகளுக்குள் வாழ்பவர்கள்தான்

எம்.சந்தானம்

***

முந்தைய கட்டுரைநவீனத் தமிழிலக்கிய அறிமுகம்- பரிந்துரை
அடுத்த கட்டுரைவாசகன் விமர்சகனாக ஆவது எப்படி?