ஒரு கற்பனாவாதக் கதை என நான் அந்த முகில் இந்த முகில் நாவலை நினைக்கவில்லை. ஏனென்றால் அது ஆழமாக யதார்த்தத்தில் வேரூன்றியிருக்கிறது. குறிப்பாக ஸ்ரீபாலா அவருடைய அம்மாவைப்பற்றிச் சொல்லும் இடம். அம்மா கோதாவரிக்கரையில் வாழ்பவள். மறுகரை தெரியாத ஆற்றின் கரை. மகள் சென்னையில் ஒரு பக்கெட் தண்ணீரில் குளிக்கிறாள். அம்மா அங்கே குடம் குடமாக இறைத்து ஊற்றிக்கொள்கிறாள். ஆனால் இரண்டுமே ஒரே அழுக்கை கழுவிக்கொள்வதற்காகத்தான்.
ஸ்ரீபாலா ஆசைப்படுவதெல்லாம் மீண்டும் கோதாவரிக்கரைக்குச் செல்லத்தான். அங்கே நீந்தி குளிக்கும் இளமைக்குத்தான். அது நிகழவே இல்லை. முனிப்பள்ளிக்குச் சென்ற நாலாம் நாளே அம்மா தண்ணீர் இல்லாத பெல்காமுக்கு அனுப்பிவிட்டாள். அவ்வளவுதான் அவள் வாழ்க்கை. இதுதான் யதார்த்தம். இதைச் சொல்லுவதுதான் இலக்கியம். நிறையச் சொல்லிச் சொல்லி செறிவாக வைத்திருப்பதுதான் நல்ல இலக்கியம்.
செந்தில் முருகேசன்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
அந்த முகில் இந்த முகிலை வாசித்துவிட்டு தினமும் அடுத்து எப்படி கதை தொடரும் என்று பற்பல சாத்தியங்களை மனதில் நிகழ்த்திப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
ராமாராவ் என்பவரை பற்றி நீங்கள் எழுதிய கதை மட்டும் அல்ல இது, நீங்களே அவராக இருந்து தான் அதை எழுதியிருக்கிறீர்கள். ஹம்பியின் இடிபாடுகளுக்குள் விழுந்து நீளும் நிழல்களில் கருப்பு வெள்ளை சினிமாவை பார்க்கும் ராமாராவ் நீங்கள் தான். இந்த 13 நாளும் வேறு எதையும் நினைக்க முடியாமல் அந்த முகில்களிலேயே மிதந்து கொண்டிருந்தது மனம்
சினிமா படபபிடிப்பென்னும் மாபெரும் வலையை, அதன் நுட்பங்களை இந்த கதையில் தெரிந்துகொண்டேன். பேபி வாங்கிக் கொள்ளுதல் பற்றி தெரிந்து கொண்ட பின்னர் அதற்கெனவே சில பழைய படங்கள் பார்த்தேன். மெல்லி இரானியை குறித்து இணையத்தில் தேடி வாசித்தேன்
நீங்கள் சினிமாவில் இருப்பதால் தான் இப்படி படப்பிடிப்பு குறித்த விஷயங்களை விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள் என்றில்லை, ஏனெனில் இதற்கு முன்பும் செல்போன் டவர் அமைப்பதை,தொலைபேசி கேபிள்களை, தென்னை ஓலை பின்னுவதை என்று பலவற்றை குறித்து விளக்கமாக பல கதைகளில் எழுதியிருக்கிறீர்கள். இப்படி கதாபாத்திரங்களாகவே இருந்து வாசிப்பவர்கள் மறக்க முடியாத கதைகளை எழுதுவது, தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பதேல்லாம் அசாத்தியம் உண்மையில் நீங்கள் கதை எழுதுகிறீர்கள் என்று சொல்வதைக் காட்டிலும் கதைகள் உங்கள் மூலமாக தங்களை நிகழ்த்திக் கொள்கின்றன போலும்.
நான்கு காதல்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது, என் டி ஆரை பாவா என்றழைக்கும் பானுமதி– என் டி ஆரின் காதல் (இப்படியான ஒன்றை தமிழில் சிவாஜி பத்மினிக்கும் சொல்ல கேட்டிருக்கிறேன்), மோட்டூரி ராமராவ்- ஸ்ரீபாலாவின் காதல், விஜயேஸ்வரி நல்லமராஜூ காதல், ராமாராவ் மீதான ஜானகியின் காதல்.
ராமராவின் உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது, எந்த பித்தில் அவன் சிக்கி இருக்கிறான் என்பதையெல்லாம் அறிந்துகொள்ள முயலாமல் அவனை அத்தனை வருஷம் பாடுபட்டு மீட்டெடுத்த ஜானகியின் காதலும் எனக்கு இவற்றில் மிக முக்கியமானதாக தெரிந்தது. இக்கதையை ஜானகியின் கோணத்திலிருந்து, ஸ்ரீபாலாவின் கோணத்திலிருந்து, ராமராவின் தாய்மாமா கோணத்திலிருந்து எல்லாம் விரிவாக நானே மனதில் நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.
பல வண்ணங்களில் பெயிண்ட் சிதறிக்கிடந்த, ஆனால் இருளில் வண்ணமே தெரியாத அந்த சைக்கிளில், கருப்பும் வெள்ளையுமாக நிலவின் புலத்தில் ஹம்பியிலிருந்து ராஜமுந்திரி வரை பாட்டு பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் அவர்கள் இருவரும் சென்ற அந்த பயணம், ஒருவரை ஒருவர் சார்ந்து கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு, எச்சில் வழிய மடியில் படுத்து தூங்கி, ,காற்றில் தலைமுடி முகத்தில் பொழிய, அது ஒரு முழு வாழ்நாளுக்கான பயணம்.
ராமராவ் ஸ்ரீ பாலாவுடன் வாழவில்லை என்றாலும் அந்த பயணமே அவர்களின் வாழ்வு, அதைத்தான் இருவரும் அத்தனை முறை கருப்பு வெள்ளை திரைப்படத்தில் மீள மீள பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வாசித்தவர்கள் அவரவர் இறந்த காலத்தை , கடைசி வரை சொல்லாமல் போனவற்றை குறித்த ஏக்கங்களை எண்ணி எண்ணி ஏங்க வைத்து, பலரும் பலவற்றை மனதில் அசைபோட வைத்தகதை இது.
என்னுடன் ஆய்வு மாணவியாக இருந்த தோழி ஒருத்தி கருத்தரங்கிற்கு புது தில்லி செல்கையில் ரயிலில் சந்தித்த ராணுவ வீரரை காதலித்தாள், அவர்களின் கடைசி சந்திப்பில் இருவரும் ஒரு சாலை விபத்தில் சிக்கினர். அப்போது அவர் அவளை கவனித்துக்கொண்டதே அவர்களின் முழுவாழ்வுக்குமான அனுபவம் ஆகிவிட்டிருந்தது. அந்த ஒரே நாள் தான் அவர்களின் காதல் வாழ்வு.
நானும் அவளும் கோவையில் அவர்கள் திருமணம் முடிந்து தங்கவிருந்த ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்கு ஒரு முறை சென்று வீடுகள் எப்படி இருக்கும் என்று கூட பார்த்திருந்தோம்
ஜாதி மொழி என பல காரணங்களால் அந்த காதல் கைகூடாமல் அவளுக்கு வேறு ஒருவருடன் கட்டாயத் திருமணம் நடந்தது, காதலனோ அமிர்தசரஸ் பொற்கோவில் பாதுகாப்பு பணிக்கு விருப்ப மாறுதல் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
இத்தனை வருடங்களாக எந்த தொடர்பும் இல்லை. சென்ற மார்ச் மாதம் நோய் தொற்று குறித்து கவலையுற்ற அந்த காதலர் இவள் தொடர்பு எண்ணை எப்படியோ கண்டுபிடித்து அழைத்தபோது அந்த ஹலோவில் அவர் குரலை இவளால் அடையாளம் காண முடிந்திருக்கிறது.
இவளுக்கோ தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள், அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. ஆனாலும் ஒரு வாரத்துக்கு மேல் அந்த தொடர்பை அவள் தொடர விரும்பவில்லை அப்படியே முறித்துக் கொண்டாள்.
முகிலை வாசித்த பின்னர் இறந்த காலத்தில் உண்டான பள்ளங்களை நிகழ்காலத்தில் நிரப்ப முடியாது, நிரப்ப வேண்டாம் என்றுதான் அவளும் நினைத்திருக்க கூடும் என்று தோன்றுகிறது.
ஜானகியுடன் ராமராவின் புறவாழ்வைபோல இவளின் இப்போதைய குடும்ப வாழ்வு. இவளும் அவருமாக அந்த ராணுவ குடியிருப்பில், அந்த விபத்து நடந்த நாளின் நினைவுகளில் வேறு ஒரு கனவு வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பார்களாயிருக்கும். அந்த விபத்து இந்தியா கேட்டின் முன்பு நிகழ்ந்திருக்கிறது வருடா வருடம் அவர் அதே இடத்தை சென்று பார்த்துக் கொண்டிருக்கிறார்
ராமராவின் பித்தை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. என் தோழியும் அதே நிலையில் இருந்தாள் சாலையில் தனக்குத் தானே பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தவளை பலமுறை உறவினர்கள் பார்த்து வீட்டில் சேர்ந்திருக்கிறார்கள்
அவர்களிருவரும் கண்ட கள்ளமற்ற முதல் பேரின்பம் அது.. முதற்காதலுக்கு பிறகு காதல் இல்லை தான். முதல் காதலின் பொருட்டு ஒருவனோ ஒருத்தியோ அணு அணுவாக அழிவார்கள் என்றால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான், வாழ்க்கையை தூசெனெ உதற செய்யும் ஒன்றை அடைந்தவர்கள் ராமராவும், ஸ்ரீ பாலாவும், என் தோழியும், அந்த ராணுவ வீரரும்.
ஸ்ரீபாலாவுக்கும் அவருக்குமான அந்த கடைசி சந்திப்பு அப்படி முடிந்ததுதான் நல்லதென்று தோன்றியது. கருப்பு வெள்ளை திரைப்படங்களை போல காலத்திற்கும் அழியாத பழைய நினைவுகள் அவை. 13 நாட்களும் கதையுடன் வந்த முகில்களும் அழகு
சில வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 14 அன்று பொள்ளாச்சியில் இருந்து திருச்சூருக்கு சென்றுகொன்டிருந்தோம் அப்போதுதான் இளையவன் தருண் புகைப்பட கலையை கற்றுக் கொண்டிருந்தான். அன்று வானில் இதய வடிவில் ஒரு முகிலை படம் பிடித்தான் அந்த புகைப்படம் அன்று காதலர் தினமாகையால் அவனுக்கு பெரும் மகிழ்வை தந்தது. அந்தப் படம் இப்போதும் இருக்கிறது, ஆனால் அந்த முகில் அப்போதே கலைந்திருக்கும்,அல்லது எங்கோ மழையாக கூட பொழிந்திருக்கலாம் எவரின் தாகத்தையோ தணித்திருக்கலாம், எவரையோ குளிர் வித்திருக்கலாம், சில விதைகளை முளைக்க வைத்திருக்கலாம், ஆனால் அந்த புகைப்படத்தை தவிர வேறெங்கும் அந்த முகில் இல்லை அப்படித்தான் அந்த காதலும் அது அவர்களுக்குள்ளே மட்டும் இருக்கிறது,
125 கதைகளையும் தாண்டி மேலே சென்று மிதந்து கொண்டிருக்கிறது முகில்.
அன்புடன்
லோகமாதேவி
***
அன்புள்ள ஜெ
அந்த முகில் இந்த முகில் எனக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. அதற்கு காரணம் அந்த கறுப்புவெள்ளை உலகம். அப்படி ஓர் உலகம் எனக்கும் இருந்தது. அப்போது கறுப்புவெள்ளை சினிமாக்களாக பார்த்து தள்ளினோம். நான் சென்னையில் வேலைபார்த்த காலம். பிரிவு. அன்றெல்லாம் காதல் என்றாலே 99 சதவீதம் பிரிவுதான். அதன்பின்னர் திருச்சிக்கு வந்துவிட்டேன்.இன்னொரு வாழ்க்கை.
இந்த வாழ்க்கை வந்தபோதே சினிமாவில் கலர் வந்துவிட்டது. கலர்ஃபுல் வாழ்க்கைதான். ஆனால் அந்த கறுப்புவெள்ளை ஒரு நிலாவெளிச்சம் மாதிரி கனவாக இன்னும் இருக்கிறது. இப்போதுதான் இன்னும் அழுத்தமாக இருக்கிறது. இப்போது தனிமையாகிவிட்டேன். பிள்ளைகள் எல்லாம் ஆகிவிட்டார்கள். பேரப்பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். நான் நினைக்கும் யாருமே இப்போது உயிருடன் இல்லை. வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் என்ன என்று பார்க்கும் வயசு. கொரோனா வாசல் வரை வந்துவிட்டது. எல்லாம் முடிந்துபோகும்.
ஆனால் நினைக்கும்போது அந்த நிலவொளிக்காலம் ஒரு பெரிய கொடுப்பினை என்று தோன்றுகிறது. இந்நாவல் வழியாக அந்த கனவுக்காலத்திலே வாழ்ந்தேன். என்னைப்போன்ற ஒரு வயதான பெண்ணுக்கு இந்த கனவு அளிக்கும் ஒரு பெரிய வாழ்க்கை வரம் போல இருக்கிறது. ஏறத்தாழ இந்த வரி கொல்லப்படுவதில்லை நாவலில் வரும். மைத்ரேயி தேவி எழுதிய நாவல். வயதானபின் நினைவில் வரும் காதல்போல அழகான ஒரு கனவு கிடையாது
ஜி.எஸ்