குயில்களின் தன்மீட்சியில் கல்லெழும் விதை..

அன்புள்ள ஜெ வணக்கம்…

சித்திரை திருநாள் அன்று  யதி  தத்துவத்தில் கனிதல்,சின்ன சின்ன ஞானம், மற்றும் அறிவு என மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவும்  தன்மீட்சி நண்பர்கள் சந்திப்பும்  மனதில் சுகத்தையும் அகத்தில் நிறைவையும்  பெருகச்செய்தது.

செயல் துடிப்பும் நல்லெண்ணமும் கலை மனமும் கொண்ட இத்தனை இளைஞர்களை   ஒருங்கிணைத்ததில் சிவராஜ் அவர்களின் பங்கு மகத்தானது.

சிவராஜ் அவர்களை சற்றேறக்குறைய 20 ஆண்டுகளாக  நான் அறிவேன்.நம்மாழ்வார் ஐயா டாக்டர் ஜீவா போன்ற ஆளுமைகளுடன் இணைந்து நாங்கள் பயணித்திருக்கிறோம்.

மாபெரும் கனவும் அதை செயலாக்கும் அக வல்லமையும் நிறைந்த உங்களைப் போன்ற பேராளுமைகளை அடையாளம் கண்டு கொண்டு  உங்களைப் போன்றவர்களுடன் இணைந்து பயணிப்பதோடு சமுதாயத்தில்  தேவைப்படும்  நண்பர்களுக்கு பரிந்துரைப்பதுடன்  இதை பரப்பும் செயலை தொடர்ந்து முன்னெடுப்பது சிவராஜின் இயல்பு.

இச்செயல்பாட்டில் நீண்ட அனுபவமிருப்பதால் தன்னுடைய தளராத தொடர் செயல்பாட்டினால் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறார்.   தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த மாபெரும் முன்னெடுப்பாக இதை நான் பார்க்கிறேன் .

பொதுவாக தமிழகத்தில் நடக்கும் கூட்டங்களில்  ஒரு பேச்சாளர் இருப்பார்  ஓரிரு முக்கியஸ்தர் இருப்பர் அல்லது ஏதாவது சாதனை புரிந்த, சமூக சேவை செய்கிற , அல்லது துறை சார்ந்த பிரபலங்கள் நிகழ்வில் இருப்பார்கள்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட இருநூறு பேரில் எவ்வளவு குறைத்தாலும்  ஐம்பது பேர் மிக மிக முக்கியமானவர்கள்.

கைத்தறி நெசவினில் தனி முத்திரையை பதித்த சிவகுருநாதன்,அழிந்து போன கருப்பட்டி கடலை மிட்டாயை மீட்டெடுத்த ஸ்டாலின் பாலுசாமி, தூர்ந்து போன கினறுகளை மீட்டெடுத்த நண்பர்கள்(ஏழு கினறுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பிரதமர் வரை பாராட்டு பெற்றுள்ளனர்), நேர்த்தியான அழகிய ஒளி மிகுந்த வடிவமைப்பு மூலம்  தமிழ் புத்தக பதிப்பில் பெரும் பாய்ச்சலை  நிகழ்த்திவரும் தன்னறம் பதிப்பக குழுவினர், பெரும் வருவாய் தரும் வேலைகளை விட்டுவிட்டு பருத்தி துணி பை தயாரிக்கும் தம்பதியர், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் உடைகள்  செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தற்சார்பு வாழ்வியலை முன்னெடுக்கும் யாதும் குழுவினர், இனியா என்னும் சுவையான உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் குமார் சண்முகம், புகைப்பட துறையில் பல்வேறு உச்சங்களை தொட்ட தனித் திறன் வாய்ந்த கலைஞர்கள், இந்த மண்ணில் இருந்து மறைந்துபோன யாழிசையை மீட்டெடுத்தவர், சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கிழைக்கும் பிளக்ஸ் க்கு மாற்றாக துணியில் கைகளால் பதாகைகளை எழுதிய ஓவியர், தன்மீட்ச்சி குறித்து மிக சிறந்த கட்டுரைகளை எழுதிய இரம்யா விக்னேஷ் ஹரிஹரன்  பிரசன்னா உள்ளிட்ட பதிமூவர், இந்த மண்ணின் நீதியின் சுடரை அணையாமல் காக்கும் பெருமதிப்பிற்குரிய நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன்  ஐயா என  இன்னும் நிறைய சாதனைகளை புரிந்தவர்கள்,புரிய இருப்பவர்கள் எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்  பார்வையாளர்களாக இருந்தனர். அரிதினும் அரிதான கூடுகை இது…

நிறைய பேர் தங்கள் மனைவி குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின சராசரி வயது முப்பதுக்கு கீழேதான்… ஒருகணம் திருமண விழா போலவும் மறுகணம் ஒரு கல்லூரியில் இருப்பது போலவும் இருந்தது.

காந்தி மியூசியத்தின் இரும்பு சிமெண்ட் பயன்படுத்தாது கற்களைக் கொண்டு செம்மண் பயன்படுத்தி கட்டப்பட்ட ஓடு வேய்ந்த ஒளியும் காற்றும் நிறைந்த விழா கூடம் இதுபோன்ற விழாக்களுக்கான சரியான தேர்வு. அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் வளாகம் முழுவதும் நிறைய இடங்களில் நித்யாவின் புகைப்படங்களும் ஓவியங்களும் மனதிற்குள் ஒரு பெரும் சமாதானத்தை தந்து கொண்டே இருந்தது.

யூமா அவர்கள் குருவை நீங்கள் அவருக்கு அறிமுகப்படுத்திய கதையையும் இந்த மொழிபெயர்ப்புக்கான விதை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதைப் பற்றியும் உரை நிகழ்த்தி நல்ல துவக்கத்தை தந்தார்கள்.நண்பர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டதும் கண்ணாடி சட்டமிட்ட யதியின் புகைப்படங்கள் தான்.

உங்களுடைய உரை மிக முக்கியமானது. இக்காலகட்டத்தின் சிக்கலான இலட்சிய வாதத்திற்கும் கருத்தியல் சாய்வு களுக்குமான வேறுபாட்டை  வரையரருப்பதாக பெரும் திறப்பாக அமைந்தது.

உங்களுடைய பெரும்பாலான கூட்டஙகளுக்கு தொடர்ந்து வருபவன் என்ற முறையில் ஒன்றை அவதானித்தேன் இத்தனை நூல்களுக்கு நீங்கள் கையெழுத்திட்டது சமீப ஆண்டுகளில் இன்றுதான் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு மேல் கையெழுத்திட்டுக் கொண்டே இருந்தீர்கள்.நானும் நான்கு நூல்களில் பெற்றுக்கொண்டேன் ஒரு எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும்j இதைவிட  ஒரு புத்தாண்டுப் பரிசு வேறு என்னவாக இருந்துவிட முடியும் :)

அனைவருக்கும் மோரும் பாயாசமும்,காகிதப் பையில் பொதிந்த  நாட்டு சர்க்கரையும் மரக்கன்றுகளும் கொடுத்தனர்.

விழாவுக்கு வந்திருந்த தங்களின் முன்இளமையிலேயே உங்களை அடையாளம் கண்டு கொண்ட இளைஞர்களை காண்கையில் எல்லாம் எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது நானும் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் உங்களை சந்தித்து இருக்கலாம் என…

விழாவுக்கு வரும்பொழுது காலையிலேயே நல்ல வெய்யில் இருந்தது மதியம் விழா முடிந்து அரங்கை விட்டு வெளியேறும் பொழுது லேசாக மழை தூறியது கோவையை நோக்கி வர வர  மழை வழுத்து முற்றிலுமாக நனைந்து வீடு வந்து சேர்ந்தேன் …

நன்றியுடன்

மு.கதிர் முருகன்

கோவை

***

முந்தைய கட்டுரைபனிமனிதன், கடிதம்
அடுத்த கட்டுரைஓஷோ, தகவல்பொறுக்கிகள்- கடிதங்கள்