சித்திரை- பதிவுகள்

அன்புள்ள ஆசிரியருக்கு ….

சிவராஜ் அண்ணா Fb பதிவு

கல்லெழும் விதை

கிழக்கில் சூரியன் உதிக்கத் துவங்கும் முதல்நாளான சித்திரை 1ல், நமக்கு மனவலு தருகிற ஓர் ஆசிரியமனதின் நல்லிருப்பில் நண்பர்கள்சூழ நிகழ்வமைய வேண்டுமென நாங்கள் விரும்பினோம். நோயச்சகால மறுஅலை துவங்கியிருப்பதால், இந்நிகழ்வு உறுதிவர நிகழ்வதற்கான சாத்தியவாய்ப்புகளின் நிச்சயத்தன்மை இல்லாமலேயே இருந்தது.

எல்லாவகையிலும் நெருக்கடிகள் சூழ்ந்துவரினும், ஏதோவொருவகையில் உள்ளுணர்வு மட்டும் ‘நம்பு, நடக்கும்’ என்கிற சிற்றொளியைக் கடைசிவரை சுமந்துகொண்டே இருந்தது. நம்மைமீறிய ஆற்றலிடம் நம் அச்சங்களை ஒப்படைத்து நிகழ்வினை நிகழ்த்திடத் துணிந்து சிறுகச்சிறுக அமைந்திட குறுவாய்ப்புகளை சேகரித்தோம்.

நிகழ்விடத்திற்காக நிறைய அலைதலுக்குப்பின் இறுதியில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் ‘கல்லரங்கு’ தேர்வானது. மூன்று நாட்களுக்கு முன்பே, வெவ்வேறு ஊர்களிலுள்ள நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த நிகழ்விடத்தை மெல்லமெல்லத் தூய்மைப்படுத்தி நிகழ்வுக்குத் தக்கவாறு சீரமைத்தார்கள். நல்லுழைப்பு வழங்கிய நட்புக்கரங்களின் விளைவாக நிகழ்வின் வடிவமைப்பு எண்ணியவாறு திரண்டெழுந்து வந்தது.

ஐதராபாத், பெங்களூர், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தோழமைகள் இந்நிகழ்வுக்காக நாளொதுக்கி பயணித்து வந்திருந்தனர். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என பயணத்தின் மெனக்கெடலைத் தாண்டி பலரும் இந்நிகழ்வுக்காகப் புறப்பட்டுவந்தது தன்னறத்திற்கு நிகழ்ந்த நல்லூழ் என்றே கருதுகிறோம்.

ஆசிரியர்கள் ஜெயமோகன், யூமா வாசுகி மற்றும் காந்தியமனிதர் தேவதாஸ் காந்தி ஆகிய மூவரின் முன்னிருப்பில் ‘கல்லெழும் விதை’ நிகழ்வு நன்முறையில் நிகழ்ந்தேறியது. எம்.கோபாலகிருஷ்ணன் தமிழில் மொழிபடுத்திய நாராயணகுருவின் ‘அறிவு’ புத்தகத்தை, எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட, தமிழ் படைப்புச்சூழலில் தற்காலத்திய அறிவுச்செயல்பாடென உருவாகிவரும் மென்புத்தக/ மின்னனுநூல் உருவாக்கம் சார்ந்து இயங்கும் ஸ்ரீனிவாசன் கோபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

யூமா அவர்கள் மொழிபெயர்த்த நித்ய சைதன்ய யதியின் ‘சின்னச் சின்ன ஞானங்கள்’ புத்தகத்தை, மதுரைப்பகுதியில் குழந்தைகள் மற்றும் இளையோர்களின் கல்விநலன் சார்ந்து இயங்கிவரும் சீடு அமைப்பைச் சேர்ந்த கார்த்திக் அண்ணனும் அவருடைய துணைவியும், தர்மபுரி பகுதியில் குழந்தைகளுக்காகத் தீவிரமாகச் செயலாற்றிவரும் கீதா அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

நித்ய சைதன்ய யதியின் ‘தத்துவத்தின் கனிதல்’ புத்தகத்தின் வெளியீட்டுப் பிரதியை, நூற்பு சிவகுருநாதனும் துவம் பொன்மணியும் ஆசிரியர் ஜெயமோகன் கரங்களால் பெற்றடைந்தனர்.

மூன்று நூல்களின் வெளியீடு  குரு நித்ய சைதன்ய யதியின் ஆளுமையிருப்பை கணத்திற்குக் கணம் மனத்திற்குள் நிறைத்தது. யதியை முதன்முதலாக தான் சந்தித்த தருணத்தையும், அந்நற்சூழலில் ஜெயமோகன் அவர்கள் சொன்ன சொற்கள் அளித்த ஒளியும் தன்னை எவ்வாறு வாழ்வெழச் செய்தது என யூமா பகிர்ந்தபொழுது, நிகழ்விலிருந்த எல்லோர் அகமும் ஈரங்கசிந்து நிறைந்திருந்தது. உலகறியா குழந்தையின் கள்ளமின்மையச் சுமந்திருக்கும் யூமாவின் படைப்புமனதை நன்றியோடு நாங்கள் பற்றிக்கொள்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்நிகழ்வின் மணிமகுடமென நின்றொலித்தது ஜெயமோகன் அவர்களின் உரைதான். இவ்வுரை தன்மீட்சியின் நீட்சியுரை என்றே எங்கள் எல்லோர் உள்ளத்திலும் உள்ளொலித்தது. இருண்மைக்குள் இழுத்துப்போகும் வாழ்வுச்சூழலிலிருந்து, எப்படி நம்மை நாமே மீட்டெடுத்து, உயரிய லட்சியவாத நோக்கங்களுக்குள் தத்துவ ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் நம்முடைய செயல்திசையை ஆற்றுப்படுத்திக் கொள்வது என்பதாக அவருடைய நல்லுரை அமைந்தது. சொல்பிடித்து மீள்கையடையும் அனைவருக்கும் நேற்றைய உரை என்பது குன்றாத உளவூக்கத்தை நிச்சயம் தந்திருக்கும்.

ஜெயமோகன் அவர்கள் பேசிய உரை, ஒருகட்டத்தில் அங்கிருக்கும் மனச்செவிகளுக்குள் அலையலையாக சென்றடைவதையும், அர்த்தநுனி தீண்டிவிடும் கணத்தில் அங்கிருப்பவர்கள் எழுப்பிய கைதட்டலும், முகச்சிரிப்பும், கண்ணீர் விழிகளும், அவ்வப்பொழுது எழுந்த உரத்தகுரல்களும் என பாவனைகள் தோற்கிற பேருண்மையை எங்கள் கண்முன் நிறுத்திக்காட்டியது.

யூமா வாசுகி அவர்களுடைய இருப்பென்பது புத்தசிலைக்கு முன்பாக நின்றிருக்கும் ஒரு மனநிலையை நமக்களிக்கக் கூடியது. நன்றிநவிழ்தலால் தன் வாழ்வை நிரப்பிக்கொள்ளும் யூமா அவர்களை, நாம் பின்பற்றி ஏற்கவேண்டிய படைப்பாசானாக இளையோரிடத்தில் முன்னிறுத்துவதை காலச்செயல் என்றே தன்னறம் கருதுகிறது.

நிகழ்வின் முதற்துவக்கத்தில், ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தின் மூலமாகத் தூர்வாரி மீட்டெடுக்கப்பட்ட எல்லா கிணறுகளின் தண்ணீரும் கொண்டுவரப்பட்டு, நித்ய சைதன்ய யதிக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கரங்களால் நீர்ப்படையலாக படைக்கப்பட்டது.

மேலும், தன்மீட்சி வாசிப்பனுபவங்களை பகிர்ந்துகொண்ட வாசகத் தோழமைகளில் தேர்வுசெய்யப்பட்டவர்கள் இந்நிகழ்வுக்கு வந்திருந்ததும், அவர்களுக்கான கெளரவிப்பு ஜெயமோகன் அவர்களின் கரங்களால் நிகழ்ந்ததும் தன்மீட்சி புத்தகத்தை இன்னுமின்னும் உயிர்த்தன்மை உடையதாக மாற்றிவிட்டது.

கல்லெழும் விதை பற்றிய நிகழ்வுக்குறிப்பு எழுத முயலுகையில், ஒன்றடுத்து ஒன்றென நிகழ்வுக்கு வந்திருந்த மனிதமுகங்களும், அங்கு நிகழ்ந்த அனுபவங்களுமென ஏதேதோ நினைவுகள் மனதுக்குள் ததும்பிப் பாய்கிறது. நிகழ்வின் ஒட்டுமொத்த சாரம்சத்தையும் ஒற்றைப்பதிவில் வெளிப்படுத்திவிட இயலாது என்பதை நன்கறிகிறோம்.

எல்லோருக்குள்ளும் ஒரு நல்லதிர்வுக் கதை எனத் தங்கிவிட்டது இந்தக் கல்லெழும் விதை நிகழ்வு. ஒவ்வொன்றாக, அது உரிய காலத்தில் எண்ணத்திலிருந்து முளைத்தெழும். நிகழ்வுபற்றிய முழுப்பதிவை இன்னும் சிலநாட்களில் எழுதுகிறோம். தற்போதைக்கு நிகழ்வின் ஆசித்தருணங்களை ஒளிப்படங்களாக உங்களோடு பகிர்வதில் நன்றிகொள்கிறது தன்னறம்.

முந்தைய கட்டுரைசீன மக்களும் சீனமும்- விவேக் ராஜ்
அடுத்த கட்டுரைசித்திரைப் புத்தாண்டு